ஆஹா, கொஞ்சம் சுத்தமான காற்று கிடைத்தால்!
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
நீங்கள் சுவாசிக்கையில், சுத்தமான காற்றை உள்ளிழுக்கிறீர்களா? தற்கால காற்றின் தூய்மைக்கேடானது “புகைத்தலைவிடப் பெரியதோர் எதிரி” என்று லண்டனின் தி டைம்ஸ் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு மருத்துவர் விவாதிக்கிறார். இங்கிலாந்திலும் வேல்ஸிலும், ஒவ்வொரு ஆண்டும் மதிப்பிடப்பட்ட 10,000 மக்களை அசுத்தக் காற்று கொல்லுகிறது. உலகளவில், விசேஷமாக பெரிய நகரங்களில், நிலைமை மோசமாய் உள்ளது.
வளிமண்டலத்தை தூய்மைக்கேடாக்குவதற்காக ஆட்டோமொபைல் நிறுவனங்களைப் பலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அபாயகரமானவற்றை வெளிவிடுவதைக் குறைப்பதற்காக, பல நாடுகளில் தயாரிக்கப்படும் புதிய வாகனங்கள், தூய்மைக்கேட்டைக் குறைக்கும் வினையூக்கியாய்ச் செயல்படும் மாற்றிகள் பொருத்தப்பட்டனவாய் இப்போது வருகின்றன. வெளிவிடப்படும் வாயுக்களிலுள்ள ஹைட்ரோகார்பன்கள் 1970-களிலிருந்த அளவைவிட 12 சதவீதம் குறைந்துவிட்ட அதே சமயத்தில், நைட்ரஜன் ஆக்ஸைடுகள், கார்பன் மோனாக்ஸைடு ஆகியவற்றின் அளவும் குறைந்துள்ளன. கார்கள் புகையைக் கக்கும் மட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதால் தள்ளுவண்டியிலிருக்கும் குழந்தைகள் குறிப்பாக ஆபத்துக்குட்பட்டவையாய் உள்ளன. ஆனால் காற்று தூய்மைக்கேடடைவது, காருக்குள் இருப்பவர்களையும்கூட அச்சுறுத்துகிறது. அறிக்கைகளின்படி, அத்தகைய அசுத்தமாக்குதல் காருக்கு வெளியே இருப்பதைக்காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாய் காருக்குள்ளே இருக்கிறது. உங்கள் காரின் எரிபொருள் கலத்தை நிரப்புகையில் எரிபொருளிலிருந்து வரும் பென்சீன் புகையை உள்ளிழுப்பதிலிருந்தும் மேலுமான அபாயங்கள் ஏற்படுகின்றன.
இப்போது, “மிதக்கும் நுண்துகள் பொருள்களால்” காற்று மிகவும் பரவலானவிதத்தில் தூய்மைக்கேடாகிறது என்பதாக ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சம்பந்தமான 1993-94-க்குரிய ஓர் அறிக்கை கூறுகிறது. தெளிவாகவே, சிறுசிறு கரித்துகள்கள், அல்லது நுண்துகள் பொருள் நுரையீரல்களுக்குள்ளே செல்லும் அளவு ஊடுருவும் திறன் கொண்டது, அது அங்கே சேதமுண்டாக்கும் வேதியியல் பொருட்களைப் படியச் செய்கிறது.
பூகோளத்திற்கு மேலே உள்ள ஓஸோன் அடுக்கில் குறைவு ஏற்பட்டிருப்பது, அதைப்பற்றி குறிப்பிடும்படியாக செய்தி மூலங்களைக் கவர்ந்திருக்கிறது. என்றபோதிலும், தரைமட்டத்தில், நைட்ரஜன் ஆக்ஸைடுகளோடும், காற்றைத் தூய்மைக்கேடாக்கும் ஆவியாகும் தன்மையுள்ள பிற மூலகங்களோடும் சூரிய ஒளி வினைபுரிந்து ஓஸோன் அளவை அதிகரிக்கின்றன. இந்த அளவுகள் பிரிட்டனில் இந்நூற்றாண்டின்போது இரட்டித்திருக்கின்றன. இவ்வாயுக்கள் பெயின்ட்டையும், பிற கட்டுமானப் பொருட்களையும் சேதப்படுத்துவதோடு, மரங்கள், தாவரங்கள், பயிர்கள் ஆகியவற்றில் நோயை உண்டாக்கி, சில மக்களுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகளைத் தூண்டுவிப்பதாய்த் தோன்றுகின்றன. நகர்ப்புறங்களில் ஓஸோனால் ஏற்பட்ட தூய்மைக்கேடு அதிகமாய் இருந்தபோதிலும், ஆச்சரியமூட்டும் வகையில், நாட்டுப்புறங்களே அதன் மோசமான விளைவுகளை அனுபவிக்கின்றன. நகர்ப்புறங்களில், அதிகமாயுள்ள ஓஸோனை நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உறிஞ்சுகின்றன, ஆனால் இந்த ஆக்ஸைடுகள் குறைவாயுள்ள இடங்களில் அந்த ஓஸோன் தடையின்றி இருப்பதால் சேதத்தை விளைவிக்கிறது.
கூடுதலாக, காற்று தூய்மைக்கேடடைவது, “வீட்டுக்கு வெளியில் இருப்பதைவிட வீட்டுக்கு உள்ளே 70 மடங்கு அதிகமாய் உள்ளது” என்பதாக தி டைம்ஸ் அறிக்கை செய்கிறது. இங்கு, காற்றைச் சுத்தப்படுத்தும் பொருட்கள், பாச்சா உருண்டை ஆகியவற்றிலிருந்தும், உலர் சலவை செய்யப்பட்ட துணிகளிலிருந்தும்கூட வரும் புகை காற்றைத் தூய்மைக்கேடாக்குகிறது. சிகரெட் புகை அதேபோன்று வீட்டுக்கு உள்ளே உடல்நல அபாயங்களைக் கூட்டுகிறது.
அப்படியானால், உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்யலாம்? லண்டனின் தி டைம்ஸ் பின்வரும் ஆலோசனைகளை அளித்தது.
• உங்கள் காரை பயன்படுத்துவதைக் குறையுங்கள். கூடுமானால், மற்றவர்களோடு போக்குவரத்து சாதனத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள். மென்மையாக ஓட்டுங்கள். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டால் அல்லது அதேபோன்று இரு நிமிடங்களுக்கும் மேல் நிற்கவேண்டியதாய் இருந்தால் எஞ்ஜினை அமர்த்திவிடுங்கள். கூடுமானால், வெயில் நாட்களில் எரிபொருள் ஆவியாவதன் மூலம் உண்டாக்கப்படும் தூய்மைக்கேட்டைக் குறைப்பதற்காக, உங்கள் காரை நிழலில் நிறுத்துங்கள்.
• வீட்டுக்கு வெளியே ஓஸோன் அளவுகள் குறைவாயுள்ள விடியற்காலையில் உடற்பயிற்சி செய்வதைத் தெரிவு செய்யுங்கள்.
• வீட்டில் புகைபிடிப்பதற்கு எதிராக சட்டமியற்றுங்கள்.
• ஈரப்பதத்தைக் குறைக்கும் பொருட்டும், ஒவ்வாமைக்குக் காரணமான பொருள்களை வெளியே அகற்றும் பொருட்டும் இரவு நேரங்களில் படுக்கையறையின் ஜன்னல்களை இலேசாகத் திறந்து வையுங்கள்.
சந்தேகமின்றி நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள்: ஆஹா, கொஞ்சம் சுத்தமான காற்று கிடைத்தால்!