உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 5/22 பக். 14-16
  • ஆலம்—ஒரு மரம் காடாகிறது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆலம்—ஒரு மரம் காடாகிறது
  • விழித்தெழு!—1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மதமும் ஆலமரமும்
  • ஆலமரத்தில் ஏறுவோமாக
  • அவரவர் தங்கள் தங்கள் அத்திமரத்தின் கீழ் உட்காருவார்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ஆப்பிரிக்காவின் வியப்பூட்டும் “ஜீவ விருட்சம்”
    விழித்தெழு!—1995
  • “நான் கடவுளை நேசிக்கிறேன், அவர் இந்த மரத்தைப் படைத்தார்”
    விழித்தெழு!—1989
  • மழைக்காட்டில் சோக மழை
    விழித்தெழு!—1997
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 5/22 பக். 14-16

ஆலம்—ஒரு மரம் காடாகிறது

இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

ஒரு காடு பொதுவாக அநேக மரங்களால் ஆனது. ஆனால் வெறும் ஒரே ஒரு மரத்தினாலான ஒரு காடு இருக்கிறது. ஆலமரம் மிகவும் வித்தியாசமான ஒரு மரம், ஐந்து ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவை உள்ளடக்கும் வரையாக அதனால் பரவமுடியும்! அது எவ்வாறு வளர ஆரம்பிக்கிறது? உண்மையிலேயே ஒரு காடு என்று அழைக்கப்படும் நிலைவரை அது எவ்வாறு விரிவாகிக்கொண்டே போகிறது?

ஆலமரம், அர்டிகேல்ஸ் என்ற பூச்செடி வரிசையையும், அத்தி செடிகளின் கிட்டத்தட்ட 800 வகைகளை உட்படுத்தும் மோரேசி அல்லது மல்பெரி குடும்பத்தையும் சேர்ந்ததாகும். ஆலமரம், அல்லது பெங்கால் அத்தியினுடைய பழத்தைச் சாப்பிட்டிருக்கும் குரங்குகள், பறவைகள் அல்லது வௌவால்களின் எச்சத்தில் இருக்கும் ஒரு விதையிலிருந்து ஆலமரம் அதனுடைய நீண்ட வாழ்க்கையை ஆரம்பிக்கிறது.

ஆதரவுதரும் ஒரு மரத்தின் கிளைகளில், விதைகள் முளைக்கின்றன, வெடிப்புகளில் சேர்ந்திருக்கும் கரிமப்பொருட்களில் வேர்கள் செழிப்பாக வளர்கின்றன. அந்தப் புதிய மரத்தின் வேர்கள் விரைவாக வளர்வதற்கு சற்று ஈரமான சூழ்நிலைகள் உதவி செய்கின்றன; ஆதரவுதரும் மரத்தின் அடிமரத்தைச் சுற்றி அடர்த்தியாக, கீழே நிலத்தை நோக்கி அவை வளர்கின்றன. பெலத்திலும் அளவிலும் அதிகரிக்கும்போது, ஆதரவுதரும் மரத்தை அவை திணறடித்து, இவ்வாறு இந்த வகையான செடிக்கு நெரித்துப்போடும் அத்திகள் என்ற பெயரைக் கொடுத்திருக்கின்றன.

இப்போது ஆலமரம் விரிவடைவதற்கு தயாராயிருக்கிறது. தாய்செடியின் அடிமரத்தினுடைய அடிபாகத்திலிருந்து வேர்கள் பரவுவது மாத்திரம் இல்லாமல், கிளைகள் கிடைமட்டமாக நீளமாகும்போது, அவற்றிலிருந்து விழுதுகள் கீழ்நோக்கி வளர்ந்து நிலத்தை உறுதியாகப் பற்றிக்கொள்கின்றன. காடு உருவாக ஆரம்பிக்கிறது.

பெரிய, தட்டையான இலைகளைக்கொண்டதும், உஷ்ணப் பிரதேசங்களான ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் காணப்படுவதுமான இந்த ஆலமரம், மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நிழல்தரும் ஒரு குடையாக சேவிக்கிறது. இந்தியாவில் உள்ள ஒரு மரம் அவ்வளவு பெரியதாய் இருப்பதன் காரணமாக 20,000-க்கும் அதிகமான ஜனங்கள் ஒதுங்குவதற்கு அதனால் இடமளிக்க முடிகிறது என்பதாக சொல்லப்படுகிறது! அதன் பழம் மனிதர்கள் உண்பதற்கு உகந்ததல்ல, அதன் மரக்கட்டை மிருதுவாகவும் துவாரங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது; எனினும், மரத்திலிருந்து வரும் பர்ட்லைம் (Birdlime) என்று சொல்லப்படும் வெண்மையான பிசுபிசுப்பான ஒரு பொருள், பறவைகளைப் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

ஆலமரம் எவ்வளவு காலம் உயிர்வாழும்? ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மரம் 600-க்கும் அதிகமான வயதானதாக இருப்பதாய் கணக்கிடப்பட்டிருக்கிறது; மற்ற குறிப்பிடத்தக்க, பாதுகாக்கப்பட்ட மரங்கள் 250-க்கும் மிக அதிகமான வயதானதாக இருக்கின்றன. ஆலமரத்தின் வளர்ச்சியும் பரவும் தன்மையும் முடிவில்லா காலத்திற்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

அறியப்படுவதிலேயே மிகப் பெரிய ஆலமரம் என்பதாக சொல்லப்படுவது இலங்கையில் உள்ளது. அது 350 பெரிய அடிமரங்களையும் 3,000-க்கும் அதிகமான சிறிய அடிமரங்களையும் உடையதாய் இருக்கிறது, அவையனைத்தும் ஒரே தாய்மரத்தோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில், 1,100-க்கும் அதிகமான முட்டுவேர்களைக் கொண்டிருப்பதும், ஐந்து ஏக்கருக்கும் அதிகமான மேற்பரப்பை உள்ளடக்குவதுமான ஒரு மரம் சமீபத்தில் அளவிடப்பட்டு, அந்த நாட்டின் மிகப் பெரிய மரமாக கண்டுகொள்ளப்பட்டது. சேதத்திலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு நான்கு ஆயுதம் தரித்த மனிதர்களால் அது தொடர்ந்து காவல் காக்கப்பட்டுவருகிறது. இந்தியாவிலுள்ள புகழ்பெற்ற மற்ற ஆலமரங்களில், பெங்களூரின் அருகே இருப்பதும் உட்படுகிறது. அது மூன்று ஏக்கரை உள்ளடக்குகிறது, நகரவாசிகளுக்கு பிடித்தமான ஒரு பிக்னிக் ஸ்பாட்டாக இருக்கிறது. அதற்கு பிறகு ரான்தம்போர் வனவிலங்கு சரணாலயத்தில் பிரமிக்கத்தக்க ஒரு மரம் இடம்பெற்றுள்ளது. 500 வருடங்களுக்கு முன்பு ஒரு மங்கோலிய அரசரின் எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாய், இந்த மரம், பூங்காவிலுள்ள புலிகளுக்கும், விலங்குகளைக் கொன்று தின்னும் மற்ற மிருகங்களுக்கும் ஒரு விளையாட்டு மைதானமாகவும், வேட்டையாடும் ஓர் இடமாகவும் இருப்பதோடுகூட, பறவைகளுக்கும், வௌவால்களுக்கும், பாம்புகளுக்கும், அணில்களுக்கும், பெருங்கூட்டமான சிறிய மிருகங்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றிற்கும் நிழல் தருகிறது.

எனினும், இந்தியாவிலேயே மிக நன்றாக அறியப்பட்டிருக்கும் ஆலமரம் ஒருவேளை கல்கத்தாவிலுள்ள நேஷனல் பொட்டானிக்கல் கார்டனில் இருக்கும் 240 வயதான மரமாக இருக்கலாம். 24.5-க்கும் அதிகமான மீட்டர் உயரமுள்ள அந்த மரம், மூன்று ஏக்கர் பரப்பளவை உள்ளடக்குகிறது, மேலும் 1,800-க்கும் அதிகமான விழுதுகளையும், 420 மீட்டர் சுற்றளவுள்ள ஒரு மாபெரும் தலைப்பையும் கொண்டிருக்கிறது. ஓர் அசல் காடு!

மதமும் ஆலமரமும்

பூர்வ காலங்களிலிருந்தே ஜனங்கள் மரங்களை வணங்கிவந்திருக்கின்றனர். ஆலமரம் ஒரு விதிவிலக்கல்ல; இன்றும்கூட அது இந்தியாவில் புனிதமாகக் கருதப்படுகிறது. புனிதமான மரங்கள் குறிப்பிட்ட கடவுட்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக எண்ணப்படுகின்றன—ஆலமரத்தைப் பொருத்தவரையில், அது கடவுளாகிய விஷ்ணுவை பிரதிநிதித்துவம் செய்வதாக எண்ணப்படுகிறது. மரம் ஒன்று நடப்பட்டு, நீர்பாய்ச்சப்பட்டு, வாஞ்சையுடன் வளர்க்கப்படும்போது அந்த மரத்தின் கடவுளுக்கு வணக்கம் செலுத்தப்படுவதாக கருதப்படுகிறது.

பூர்வ பாலினீஷிய சமுதாயங்களிலும்கூட, ஆலமரம் புனிதமாக கருதப்பட்டது. மதசம்பந்தமான சடங்குகள் ஒரு நீண்ட-சதுரமான வெளியிடத்தில் அல்லது டோஹூய-வில் நடைபெற்றன, இதைச் சுற்றித்தான் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அந்த வெளியிடத்தின் ஒரு முனையில் ஒரு புனிதமான ஆலமரத்தைக்கொண்ட ஒரு கோவில் பொதுவாக காணப்பட்டது, அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த இறந்துபோயிருந்த பிரதான அங்கத்தினர்களின் எலும்பு மூட்டைகள் இந்த மரத்தின் கிளைகளில் தொங்கவிடப்பட்டிருந்தன.

இந்த வலிமையுள்ள மரத்தின் பெயர் ஐரோப்பியர்களால் முதலில் கொடுக்கப்பட்டது. பெர்சிய வளைகுடாவிலும் இந்தியாவிலும், இந்த மரத்தின் பரந்த, குடையைப்போன்ற மேற்புறம் நிழல் தருவதையும், சூரியனின் தகிக்கும் உஷ்ணத்திலிருந்து தங்கள் சரக்குகளைப் பாதுகாப்பதற்காக வியாபாரிகள் இதன் நிழலில் அவற்றை பரப்பியதையும் பூர்வ ஐரோப்பிய பயணிகள் கண்டனர். இந்து சாதி முறைப்படி, வியாபாரிகள், வைஸ்யா என்ற பெரும் பிரிவிலிருந்து வந்தவர்கள். மேலுமாக பான்யாக்கள் (Banyas) என்ற ஒரு உட்பிரிவு-சாதியினர், தானியங்களுக்கும் மற்ற மளிகைப் பொருட்களுக்கும் பிரசித்தமான விற்பனையாளர்களாக இருந்தனர். மர நிழலில் ஒரு பான்யா தன் சரக்குகளை விற்பான் என்பதை கவனித்ததுதானே இந்த அந்நியர்கள் அந்த மரத்தை பான்யன் (Banyan) என்று அழைப்பதற்கு வழிநடத்தியது.

அந்த நாட்களில் பான்யாக்கள் தங்கள் பணத்தை வைப்பதற்காக மறைவான சட்டைப்பையையுடைய பருத்தி அரையங்கி ஒன்றை பொதுவாக அணிந்துகொண்டனர். குளிர்ச்சியானதாகவும், சலவை செய்வதற்கு சுலபமானதாகவும் இருந்த இந்த அரையங்கி, பான்யா வணிகர்களுக்கிடையே அவ்வளவு சாதாரணமான ஒன்றாக இருந்ததன் காரணமாக அந்த ஆடைக்கு பனியன் (Banyan) என்ற பெயர் கொடுக்கப்பட்டது, பின்பு அந்தப் பெயர் மனிதன் அணியும் எந்தவிதமான அரையங்கிக்கோ அல்லது உட்சட்டைக்கோ பயன்படுத்தப்பட்டது. இந்தப் பெயர் ஆண்களின் உட்சட்டைக்கு இன்னும் இந்தியாவில் பயன்படுத்துப்படுகிறது, மேலும், வேலை செய்யும்போது இந்த வகையான ஆடையை அணிந்துகொள்ளும் பான்யாக்களின் வழக்கம் இன்றும் நீடித்திருக்கிறது.

ஆலமரத்தில் ஏறுவோமாக

ஆலமரத்தின் மையப்பகுதிக்கு ஏற நீங்கள் விரும்புகிறீர்களா? தென் இந்தியாவிலிருக்கும் ஹைதராபாத்துக்கு எப்போதாவது சென்றீர்களென்றால் உங்களால் இதைச் செய்யமுடியும். பேகம்பெட் விமான நிலையத்திற்கு அருகேயும், நகரத்தின் மையப்பகுதிக்கு பக்கத்திலும் அமைந்திருப்பதுதான் மச்சான் என்ற ஒரு ட்ரீடாப் ரெஸ்டாரன்ட். இது ஓர் ஆலமரத்தின் மற்றும் அதன் அருகிலிருக்கும் மற்றொரு அத்தியாகிய அரசமரத்தின் உறுதியான கிளைகளின்மீது கட்டப்பட்டிருக்கிறது. தளமேடைகளை இடையிடையே கொண்டிருக்கும் கெட்டியான கயிற்றேணியில் ஏறுங்கள். நீங்கள் நின்றுகொண்டிருக்கும் அந்தக் கட்டிட அமைப்பு, மூங்கில், தென்னை ஓலைகள், மற்றும் கயிறுகளால் உண்டாக்கப்பட்டது. பிரமிட்-வடிவுள்ள அந்த மூங்கில் கூரை, வித்தியாசமான மட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கும் இரண்டு சாப்பாட்டு அறைகளுள் உயரமாயுள்ள ஒன்றுக்குள் நீங்கள் நுழையும்போது, வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் உங்களைப் பாதுகாக்கிறது. இப்போது நீங்கள் தரையிலிருந்து ஒன்பது மீட்டர் உயரத்தில் இருக்கிறீர்கள். அதிக திருப்தியளிக்கிற பிரம்பு ஃபர்னிச்சர் மற்றும் சுவரில் தொங்கவிடப்படும் குலமரபு சார்ந்த பொருட்கள் ஆகியவை காட்டிலிருப்பதைப் போன்ற உள்ளுணர்வை அதிகப்படுத்துகிறது.

நீங்கள் உட்காரும்போது, மோக்லீ என்றழைக்கப்படும் உணவுவகைப் பட்டியல் ஒன்று உங்களுக்கு கொடுக்கப்படுகிறது, தி ஜங்கில் புக்-ல் உள்ள ருட்யார்ட் கிப்லிங்ஸ்-ன் கதைகளை வாசிப்போர் நன்கு அறிந்திருக்கும் ஒரு பெயர் இது. இதுவும்கூட காட்டிலிருப்பதைப் போன்ற சூழ்நிலையை அதிகரிக்கிறது. இப்போது ஓர் ஆலமரத்தின் மத்தியில் உணவுண்ணும் தனித்தன்மையுடைய அந்த அனுபவத்திற்காக தயாராகுங்கள். ஹைதராபாத் எதற்கு புகழ்பெற்றிருக்கிறதோ அந்தக் காரசாரமான பிரியாணி, கபாப்ஸ், விதவிதமான மற்ற உணவுகள் போன்ற இந்திய ஆகாரங்கள் சிலவற்றை உண்டு அனுபவியுங்கள்.

உங்கள் சாப்பாடு முடிந்துவிட்டது, கயிற்றேணியில் கவனமாக கீழே இறங்குங்கள், சின்ன நீர்வீழ்ச்சியையும் தாமரைக் குளத்தையும் பாருங்கள், ஆலமரத்தின்—ஒரு மரம் காடாகும்வரை தொடர்ந்து விரிவாகும் ஆற்றலுள்ள அந்த மரத்தின்—பரந்த மேற்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தனித்தன்மைவாய்ந்த இந்த ட்ரீ-டாப் ரெஸ்டாரன்டிலிருந்து வெளியே வாருங்கள்.

[பக்கம் 15-ன் படங்கள்]

ஓர் ஆலமரம் காடாகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது

மேலே: கல்கத்தாவிலுள்ள நேஷனல் பொட்டானிக்கல் கார்டனின் உள்ளே இருக்கும் ஓர் ஆலமரத்தின் அருகிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்

[பக்கம் 16-ன் படம்]

கல்கத்தாவிலுள்ள நேஷனல் பொட்டானிக்கல் கார்டனில் இருக்கும் ஆலமரம்

[பக்கம் 16-ன் படம்]

ஹைதராபாத்தில் ஓர் ஆலமரத்தின்மீதுள்ள மச்சான் ரெஸ்டாரன்ட்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்