அவர்களது விசுவாசத்திற்கு ஓர் அத்தாட்சி
நாசி சித்திரவதை முகாம்களிலிருந்து பெற்ற விடுதலையின் 50-வது நிறைவு விழா 1995-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. ஐரோப்பா முழுவதிலும், ஆஷ்விட்ஸ், பெர்கன்-பெல்ஸன், புக்கென்வால்ட், டாக்காவ், ராவென்ஸ்புரூக், ஸாக்ஸன்ஹாவ்ஸன், மற்றும் பிற முகாம்களில் அரசியல் அதிகாரிகள் பலர் உட்பட ஆஜராகியிருந்த பெரும் கூட்டத்தோடு நாசி பலியாட்கள் இச் சந்தர்ப்பத்தை நினைவுகூர்ந்தனர். திரும்பத்திரும்ப முன்னின்ற ஒரு நினைவானது, “நாம் ஒருபோதும் மறவாதிருப்போம்!”
ஐரோப்பாவில் அந்த நிறைவு விழா ஆண்டின்போது யெகோவாவின் சாட்சிகள் இதற்காக கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர். ஹிட்லரை வணங்கவும் அவரது போர் முயற்சிகளை ஆதரிக்கவும் மறுத்ததற்காக ஹிட்லரது அரசாங்கத்தால் சாட்சிகளில் பலர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். 1933 முதல், அவர்களில் ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர், மேலும் பலர் தாங்கள் நடத்தப்பட்ட விதத்தின் விளைவாக இறந்தனர்.
என்றபோதிலும், அவர்களின் அனுபவங்கள் பொது மக்களால் பொதுவாக அறியப்படாததாய் இருந்தன. இதன் காரணமாக “வரலாற்றின் மறக்கப்பட்ட பலியாட்கள்” என்ற கூற்று உருவானது. உயிர்த்தப்பிய சாட்சிகளின் ஒரு தொகுதியினர் துன்புறுத்தப்பட்ட, சிறைப்படுத்தப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட அல்லது கொல்லப்பட்ட தங்கள் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகளைப் பற்றிய நினைவுகளைப் பாதுகாக்கவும், சித்திரவதை முகாம்களில் பீபெல்ஃபோர்ஷர்கள் என்ற பெயரால் அடையாளம் காணப்பட்ட யெகோவாவின் சாட்சிகளால் காட்டப்பட்ட விசுவாசம் மற்றும் தைரியத்தின் அத்தாட்சியைத் தெரியப்படுத்தவும் தங்களுக்கிருந்த ஆவலை வெளிப்படுத்தினர்.
செப்டம்பர் 29, 1994-ல், வாஷிங்டன் டி.சி.-யில் ஐக்கிய மாகாண படுகொலை நினைவு அருங்காட்சியகம், சித்திரவதை முகாம்களிலிருந்த யெகோவாவின் சாட்சிகளைக் குறித்த ஒரு கருத்தரங்கை நடத்தியது. பெரிதளவான ஞாபகார்த்தப் பிரிந்தவர் கூட்டங்கள் இரண்டு பிரான்ஸில் மார்ச் 28, 1995-ல் ஸ்டிராஸ்பர்க்கிலும், மார்ச் 30-ல் பாரிஸிலும் முகாமிலிருந்து உயிர்த்தப்பியவர்களால் நடத்தப்பட்டன. இப்பொழுது வயதாகியிருக்கும் ஆண்களும் பெண்களும் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளுக்கு இன்னும் உண்மையுள்ளவர்களாய், தங்கள் அனுபவங்களை விவரிப்பதைக் கேட்பது தூண்டுதல் அளிப்பதாய் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளில் பலர் சிரச்சேதம் பண்ணப்படுவதன் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட இடமாகிய பிராண்டன்பர்க், ஜெர்மனியில், பெர்லினுக்கு அருகே அதேபோன்று ஒரு கூட்டம் ஏப்ரல் 27 அன்று நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாள், தப்பிப் பிழைத்தவர்களில் எண்ணற்றோர் பிராண்டன்பர்க் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வெவ்வேறு முகாம்களைச் சென்று பார்வையிட்டனர்.
பிரெஞ்சு கண்காட்சி
இப் பிரிந்தவர் கூட்டங்களில், “மேம்வார் ட டேம்வன்” (சாட்சிகளின் அத்தாட்சி) என்ற தலைப்புடைய ஒரு கண்காட்சி காட்டப்பட்டது. மே 1995 முதல் ஏப்ரல் 1996 வரை, பிரான்ஸில் 42 நகரங்களிலும் பெல்ஜியம் மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் ஸ்விட்ஸர்லாந்தைச் சேர்ந்த பல்வேறு நகரங்களிலும் அது காட்டப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, கண்காட்சியில் இருந்த ஆண்களும் பெண்களும் யெகோவா தேவனின் சாட்சிகள். ஆனால் அவர்கள் தாங்களும் மற்றவர்களும் சித்திரவதை முகாம்களில் சகித்திருந்த துன்பங்களுக்கும் சாட்சிகளாய் உள்ளனர். தங்கள் இனம் அல்லது மதத்தின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் துன்புற்றதற்கும் மரணமடைந்ததற்கும் காரணமாய் இருந்த சகிப்பின்மைக் கொள்கை ஒன்றுக்கு உயிருள்ள அத்தாட்சியாய் உள்ளனர். மேலுமாக, சாட்சிகளின் அத்தாட்சி, கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் இயேசு கிறிஸ்துவுக்குப் பதிலாக போலி மேசியாவான ஹிட்லருக்கு முன்னுரிமை அளித்ததையும் அயலாரை நேசிப்பதற்குப் பதிலாக பகைப்பதற்கு முன்னுரிமை அளித்ததையும் சமாதானத்திற்குப் பதிலாக வன்முறைக்கு முன்னுரிமை அளித்ததையும் வெளிப்படுத்துகிறது.
அந்தக் கண்காட்சியில் சுமார் 70 படங்கள் இருந்தன, நிகழ்ச்சிகளின் அட்டவணையுடன் ஆரம்பிக்கையில்—மார்ச் 1933-ல், டாக்கோவிலும் ஓரான்யென்புர்கிலும் முகாம்கள் ஆரம்பிக்கப்படுதல்; செப்டம்பர் 1935-ல் “ஜெர்மானிய இரத்தத்தைக் காக்க” நூரெம்பர்க் சட்டங்கள்; மார்ச் 1938-ல் ஆன்ஷ்லூஸ் அல்லது ஆஸ்திரியா ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டது; அதே ஆண்டில் நவம்பரில் கிறிஸ்டால்ணாக்ட் (கிறிஸ்டல் நைட்), அச் சமயத்தில் ஆயிரக்கணக்கான யூதர்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டு, 30,000-க்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்; யெகோவாவின் சாட்சிகளுக்கு விதிக்கப்பட்ட படிப்படியான தடையுத்தரவு; ஜூன் 1941-ல் சோவியத் யூனியன் முற்றுகையிடப்பட்டது; 1939 முதல் 1941 வரையில், மனரீதியில் நோயுற்றோரின் வேதனையற்ற மரணம்.
பல்வேறு படங்கள் ஹிட்லர் யூத் ஏற்பாட்டில் இளைஞருக்குக் கற்பிக்கப்பட்டதையும் நூரெம்பர்க்கில் பொது மக்களுக்கென்று நடத்தப்பட்ட பெரிய நாசி கூட்டங்களின் வசீகரத்தையும் உயர்த்திக் காட்டின. யெகோவாவின் சாட்சிகள் தலைவருக்கு பக்தி உறுதிமொழி கோரவும் ஹிட்லருக்கு வணக்கம் செலுத்தவும் மறுத்ததை போட்டோக்கள் நினைப்பூட்டின. பிற படங்கள் யெகோவாவின் சாட்சிகள் பொய்ப்பிரகடனத்துக்கு பலியாட்களாய் இருந்த விதத்தையும், 1935 முதல் நாசியின் அதீதங்களை அம்பலப்படுத்தும் வகையில் பத்திரிகைகளையும் துண்டுப்பிரதிகளையும் விநியோகித்த விதத்தையும் காட்டின.
தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் 40 படங்கள், தாங்கள் காட்டியிருந்த விசுவாசத்தால் துன்புறுத்தப்பட்டு, கொல்லவும்பட்ட ஐரோப்பாவைச் சேர்ந்த அனைத்து சாதாரண ஆண்கள் மற்றும் பெண்களின் அனுபவங்களை விவரித்தன. உயிர்த்தப்பினவர்கள் தங்கள் வருகையின் மூலம் ஆதரவு தெரிவித்தனர், அவர்கள் கூற்றுக்குப் பார்வையாளர்கள் கவனமாக செவிகொடுத்தனர். லூயி ஆர்ஸ்ட் தன் கதையைக் கூறக்கேட்ட பிள்ளைகள் மெய்மறந்துவிட்டனர். அவர் பள்ளியில் “ஹிட்லர் வாழ்க!” என்று கூற மறுத்ததற்காக, முதலில் பிரான்ஸிலுள்ள மல்ஹவுஸில் தன் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டு ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். “நான் ஹிட்லரை வணங்க மறுத்ததற்காக ஓர் எஸ்எஸ் படைவீரன் என்னை அடித்தான். என்னை அவன் 30 அடிகள் அடித்தான். இரு நாட்கள் கழித்து என் தோளின்மேல் கைபோட்டு, என் உணர்ச்சிகளைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்தான். ‘உன் அம்மாவைப் பற்றி நினைத்துப்பார். உன்னைப் பார்த்தால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள். “ஹிட்லர் வாழ்க!” என்று நீ சொல்லிவிட்டால் போதும், நீ ரயிலில் ஏறிவிடலாம்.’ அது 12 வயதுடைய ஒரு பிள்ளைக்கு மிகவும் சிரமமானது” என்று கூறினார். புராட்டஸ்டன்ட் மதப்பிரிவைச் சேர்ந்த உடன் சிறைவாசியின் பைபிளுக்காக தனது ஒரு வாரப் பங்கு ரொட்டியைப் பரிமாற்றம் செய்த ஜோஸஃப் ஹிஸீகரின் அனுபவங்கள் பலரைத் தொட்டன.
முன்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களாய் இருந்தவர்களுடன் நடத்தப்பட்ட, வீடியோவில் பதிவுசெய்யப்பட்ட நேர்காணல்கள் அக் கண்காட்சியின் மற்றொரு அம்சமாய் இருந்தன. சில நேர்காணல்கள் முகாம்களுக்கருகிலேயே—உதாரணமாக, ஆஸ்திரியாவைச் சேர்ந்த எபன்ஸாவில், புக்கென்வால்ட்டில், ஜெர்மனியைச் சேர்ந்த ஸாக்ஸன்ஹாவ்ஸனில் நடத்தப்பட்டவையாய் இருந்தன. பிற நேர்காணல்கள், முகாம் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றிய, அல்லது சாட்சிகள் குழந்தைகளாய் இருந்தபோது முகாம்களுக்கு அனுப்பப்பட்டது பற்றிய நினைவுகளைப் பதிவு செய்தன.
திறப்பு விழா
ஒவ்வொரு கண்காட்சியையும் ஒரு சுருக்கமான தொடக்க நிகழ்ச்சி ஆரம்பித்து வைத்தது. அதில் முன்னாள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டோரின் ஒரு பிரதிநிதி நாசிஸத்துக்கு எதிரான யெகோவாவின் சாட்சிகளின் ஆவிக்குரிய நிலைநிற்கையைப் பற்றி விவரித்தார். முகாம்களுக்கு அனுப்பப்பட்ட சாட்சியல்லாதோர், மேலும் முன்னாள் பிரெஞ்சு அரசைச் சேர்ந்த மந்திரி ஒருவர் உட்பட பல்வேறு வரலாற்று வல்லுநர்கள், அதிகாரிகள் ஆகியோரும் பேசுவதற்கான அழைப்புகளை தயவுடன் ஏற்றுக் கொண்டனர்.
புக்கென்வால்ட்டில் இருந்த யெகோவாவின் சாட்சிகளை அறிந்திருந்த முகாம்களுக்கு அனுப்பப்பட்டவராயிருந்த முன்னாளவர் ஒருவர் அவர்களைப் பற்றிக் கூறினார்: “முகாம்களுக்கு அனுப்பப்பட்டவர்களில் மிக மோசமாய் நடத்தப்பட்டவர்களில்: யூதர்களைத் தவிர அடிக்கப்பட்ட, தரக் குறைவாக நடத்தப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட, படுமோசமான வேலை கொடுக்கப்பட்ட, வேறெந்த பிரிவினரைப் பற்றியும் எனக்குத் தெரியாது. அவர்களது விசுவாசத்தாலன்றி அவர்கள் நிலைத்து நிற்க முடிந்திருக்காது. எனக்கு அவர்கள்மீது அளவுகடந்த மரியாதையும் வியப்பும் உள்ளது.”
பிரதிபலிப்புகள்
1,00,000-க்கும் மேலானோர் அக்கண்காட்சியைப் பார்வையிட்டனர். சில இடங்களில், பலர் இளைஞர்களாயிருந்த நூற்றுக்கணக்கானோர் கண்காட்சி அறைக்குள் செல்வதற்கு முன்பு வரிசையில் நிற்கும்படி செய்யப்பட்டனர். பார்வையாளர்களில் பலர், பார்வையாளர்களுக்கென்று வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தில் ஒருசில வார்த்தைகளை எழுதுவதன் மூலம் தங்கள் உணர்ச்சிகளைத் தெரிவித்தனர். உதாரணமாக, ஓர் இளம் பெண் எழுதினாள்: “என் பெயர் ஸாப்ரினா. எனக்கு வயது பத்து, யெகோவாவை மகிழ்விப்பதற்காக நான் ரூத்தைப் போல தைரியமாய் இருக்க விரும்புகிறேன்.” a
அக் கண்காட்சியைப் பற்றி செய்தி மூலங்களும்கூட கருத்துத் தெரிவித்தன. பொதுவில், ஒவ்வொரு நகரிலும் ஓரிரு கட்டுரைகள் உள்ளூர் செய்தித்தாளில் காணப்பட்டன. அதோடு, உள்ளூர் வானொலி நிலையங்கள் அடிக்கடி அக் கண்காட்சியைப் பிரஸ்தாபப்படுத்தியதுடன், முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்த முன்னாளவருடன் நடத்தப்பட்ட நேர்காணல்களை முக்கியப்படுத்திக் காட்டும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின. உள்ளூர் தொலைக்காட்சி சுருக்கமான அறிக்கைகளை அளித்தது. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒரு செய்தி அறிக்கை அக் கண்காட்சியை, “வெளியில் கூறமுடியாதவற்றைக் கூர்ந்து நோக்கமுடிந்த ஓர் எளிய, ஆனாலும் பயங்கரமான கதை. ஒருபோதும் எடுத்துப்போட முடியாத மேன்மைக்கு மதிப்பு தெரிவிக்கும் ‘சாட்சியின் அத்தாட்சி’ ” என்று கூறியது.
தப்பிப் பிழைத்தவர்களுக்கு விடுதலையின் அந்த 50-வது நிறைவு விழா அவர்களின் மனங்களில் நீடித்து நிலைத்திருக்கும். வேதனை மிகுந்த நினைவுகளை நினைவுக்குக் கொண்டுவருவது எப்போதும் எளிதாய் இராதிருக்கையில், பிறரோடு அதைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும், மறந்த நினைவுகளை வெளிக்கொண்டுவருவதன் மூலமும், சாட்சிகள் மற்றவர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்த முடிந்தவர்களாய் இருந்தனர். இக் கண்காட்சியில் பங்கேற்பதையும், 50 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் நீடித்திருக்கும் தப்பெண்ணம் மற்றும் அறியாமை ஆகியவற்றில் சிலவற்றை ஒழிப்பதையும் ஒரு சிலாக்கியமாக அவர்கள் எண்ணினர். எல்லாவற்றையும்விட, தங்களது அத்தாட்சி தங்கள் கடவுளாகிய, யெகோவாவுக்குக் கனத்தைக் கொண்டுவருகிறது என்பதையும், அவரது சாட்சிகளாக நிலைத்திருந்ததை மற்றவர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் என்று நிச்சயமளிக்கிறது என்பதையும் அறிவதிலிருந்து திருப்தியடைந்தனர்.
[அடிக்குறிப்பு]
a ரூத் டானா ஒன்பதாவது வயதில் தன் பெற்றோருடன் சேர்ந்து முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, ஆறு வித்தியாசமான முகாம்களில் காவலில் வைக்கப்பட்டார். உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூ யார்க்கால் பிரசுரிக்கப்பட்ட 1980 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம், (ஆங்கிலம்) பக்கம் 105-ஐக் காண்க.
[பக்கம் 16-ன் படம்]
“தி கோல்டன் ஏஜ்” பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் நாசிஸத்தின் அதீதங்களைக் கண்டனம் செய்தன
[பக்கம் 16-ன் படம்]
சுமார் 70 படங்கள் தங்கள் விசுவாசத்தை மறுதலிப்பதற்கு மறுத்த ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் அனுபவித்த நாசி துன்புறுத்தல் கதையைக் கூறின
[பக்கம் 16, 17-ன் படம்]
தங்கள் கதையைக் கூறின, ஹிட்லருடைய அரசால் முகாம்களுக்கு அனுப்பப்பட்டிருந்து, காவலில் வைக்கப்பட்டிருந்த சில யெகோவாவின் சாட்சிகள்