இளைஞர் கேட்கின்றனர்
என்னால் ஏன் கற்க முடியவில்லை?
“வீட்டிற்கு வந்து, என் பெற்றோரை எதிர்ப்பட நான் விரும்பவில்லை. மறுபடியும் எல்லா பாடங்களிலும் நான் தேர்ச்சிப்பெறவில்லை” என்று நினைவுகூருகிறாள் ஜெஸிகா. a 15 வயது ஜெஸிகா அறிவும் அழகும் உள்ளவள். ஆனால், பள்ளி பாடங்களில் தேர்ச்சிப்பெறுவதற்குரிய கிரேடை பெறுவதில் பல இளைஞரைப்போல் அவளும் கடினமான நேரத்தைக் கொண்டிருக்கிறாள்.
பள்ளியில் மட்டமாக படிப்பதானது பெரும்பாலும், படிப்பின் மீதோ ஒருவருடைய ஆசிரியரின் மீதோ உள்ள அக்கறையில்லா மனப்பான்மையின் விளைவே ஆகும். ஆனால் ஜெஸிகா விஷயத்தில் அதுவொன்றும் காரணமல்ல. கோட்பாட்டளவிலுள்ள கருத்துக்களைக் கிரகிப்பதை அவள் உண்மையிலேயே மிகவும் கடினமாகக் காண்கிறாள். இயல்பாகவே, ஜெஸிகா கணிதத்தில் தேர்ச்சிப்பெறுவதை இது கடினமாக்கியது. வாசிப்பதில் இருந்த கஷ்டமானது அவள் மற்றப் பாடங்களிலும் நல்லவிதத்தில் தேர்ச்சிப்பெறுவதைக் கடினமாக்கியது.
மறுபட்சத்தில் மரியாவுக்குச் சரியாக எழுத்துக்கூட்ட வருவதில்லை. தான் செய்யும் எழுத்துப்பிழைகளுக்கு வெட்கப்பட்டு, அவள் கிறிஸ்தவ கூட்டங்களில் எடுக்கும் குறிப்புகளை எப்போதும் மறைத்து வைப்பாள். இருப்பினும், ஜெஸிகாவும் மரியாவும் புத்திக்கூர்மையற்றவர்கள் அல்லர். ஜெஸிகா ஆட்களிடத்தில் பழகுவதில் அவ்வளவு திறம்பட்டவளாக இருப்பதனால், அவளுடைய சக பள்ளி மாணாக்கர்களுக்கு இடையே பிரச்சினை எழும்போது, பள்ளியால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தம் செய்பவளாக அல்லது பிரச்சினைத் தீர்த்துவைப்பவளாகச் செயல்படுகிறாள். பள்ளிக்கல்விக்குரிய தகுதியில் மரியா, தன் வகுப்பில் சிறந்த கிரேடை பெறும் 10 சதவிகித மாணாக்கர்களுள் ஒருத்தியாக இருக்கிறாள்.
பிரச்சினை: ஜெஸிகாவுக்கும் மரியாவுக்கும் கற்பதில் கோளாறுகள் இருக்கின்றன. எல்லா பிள்ளைகளிலும் சுமார் 3-லிருந்து 10 சதவிகித பிள்ளைகள் கற்பதில் இதேபோன்று பிரச்சினைகளைக் கொண்டிருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். தற்போது தன் 20-களில் இருக்கும் டானியா, கவனப் பற்றாக்குறை மிகை இயக்க கோளாறினால் (Attention Deficit Hyperactivity Disorder [ADHD]) அவதிப்படுகிறார். b அவர் கூறுகிறார்: “என்னுடைய கவனம் செலுத்த இயலாமையின் அல்லது அமைதியாக உட்காரக்கூட இயலாமையின் காரணமாக, கிறிஸ்தவக் கூட்டங்களிலும், தனிப்பட்ட படிப்பிலும், ஜெபிப்பதிலும் கடினமான தருணத்தைக் கொண்டிருக்கிறேன். என் ஊழியம் பாதிக்கப்படுகிறது, ஏனென்றால் நான் சொல்வதில் எவரும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாதபடி ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளிடமாக வேகவேகமாக மாறிக்கொண்டே இருப்பேன்.”
மிகை இயக்கம் உடன் இல்லாதிருக்கையில், அந்தக் கோளாறு கவனப் பற்றாக்குறை கோளாறு (Attention Deficit Disorder [ADD]) என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கோளாறுடன் இருக்கும் ஆட்கள் பகல்கனவு காண்பவர்களாக அடிக்கடி விவரிக்கப்படுகிறார்கள். ADD உள்ள ஆட்களைப்பற்றி, நரம்பியல் நிபுணர் டாக்டர் புருஸ் ராஸ்மென் கூறினார்: “அவர்கள் புத்தகத்திற்கு முன் 45 நிமிடங்கள் உட்காருகிறார்கள், அந்தப் புத்தகத்திலிருந்து ஒன்றையும் அவர்கள் கற்பதில்லை.” காரணம் எதுவாயினும் கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் அவர்கள் கடினமான தருணத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினைகளை எது உண்டாக்குகிறது என்பதைத் தாங்கள் சமீபத்தில் புரிந்துகொள்ள துவங்கியிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், அதிகம் இன்னும் அறியப்படாமலே இருக்கிறது. கற்பதுடன் குறுக்கிடும் பல்வேறு கோளாறுகளுக்கும் குறைபாடுகளுக்கும் இடையே இருக்கும் எல்லைகள் எப்போதும் தெளிவாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட கோளாறு—ஒருவேளை வாசிப்பதில், நினைவுகூருவதில், கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் அல்லது மிகை இயக்கத்தோடு இருத்தல் என பிரச்சினை இருக்கலாம்—அதற்கு சரியான காரணம் அல்லது ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருந்தாலும் சரி கொடுக்கப்படாதிருந்தாலும் சரி, அந்தக் கோளாறு ஒரு நபரின் கல்விக்கு இடையூறாக வரலாம், அது அதிகளவான துன்பத்தையும் விளைவிக்கலாம். உங்களுக்குக் கற்பதில் குறைபாடு இருந்தால், அதை எவ்வாறு நீங்கள் மேற்கொள்ளலாம்?
மேற்கொள்வதற்கான சவால்
முன்னுரையில் குறிப்பிடப்பட்ட ஜெஸிகாவை எண்ணிப்பாருங்கள். தன்னுடைய வாசிக்கும் குறைபாட்டை மேற்கொள்ள தீர்மானம் எடுத்து, அவள் வெவ்வேறு புத்தகங்களைப் படிக்க முயன்றுகொண்டே இருந்தாள். அவளை ஈர்க்கும் அளவுக்கு, கவிதைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை அவள் கண்டபோது, அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோன்று மற்றொரு புத்தகத்தை வாங்கினாள், அதையும்கூட வாசித்து மகிழ்ந்தாள். பிறகு, தொடர்வெளியீட்டு கதை புத்தகங்களில் ஆர்வம் கொண்டாள், வாசிப்பதில் இருந்த பிரச்சினை மெல்ல மெல்ல குறைந்தது. விடாமுயற்சி பிரதிபலனைத் தரும் என்பதே கற்கக்கூடிய பாடமாக இருக்கிறது. விடாமுயற்சியின் மூலம் கற்பதில் இருக்கும் குறைபாட்டை உங்களாலும் மேற்கொள்ள முடியும் அல்லது குறைந்தபட்சம் அந்த இலக்கை நோக்கி முன்னேற்றமாவது செய்யமுடியும்.—கலாத்தியர் 6:9-ஐ ஒப்பிடுக.
குறைந்த நேரம் மாத்திரம் ஞாபகமிருக்கும் பிரச்சினையைச் சமாளிப்பதைப்பற்றி என்ன? பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு முக்கிய திறவுகோல் இந்த முதுமொழியில் பொதிந்துள்ளது: “திரும்பத்திரும்பச் சொல்லுதலே நினைவாற்றலின் தாய்.” நிக்கி, தான் கேட்டதையும் வாசித்ததையும் தனக்குத்தானே வாய்விட்டு திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டதானது, காரியங்களை நினைவுகூர அவனுக்கு உதவ கண்டான். இதை முயன்றுபாருங்கள். ஒருவேளை இது உங்களுக்கும்கூட உதவியாக இருக்கலாம். குறிப்பிடத்தக்க வகையில், பைபிள் காலத்து மக்கள் தங்களுக்குத் தாங்களே வாசித்துக்கொண்டிருந்தபோதிலும் வாய்விட்டு உச்சரிப்பதுண்டு. இவ்வாறாக, பைபிள் எழுத்தாளராகிய யோசுவாவுக்கு யெகோவா கட்டளையிட்டார்: “[கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை] இரவும் பகலும் தாழ்ந்த குரலில் நீ வாசிக்க வேண்டும்.” (யோசுவா 1:8, NW; சங்கீதம் 1:2) வாய்விட்டு உச்சரித்தல் ஏன் அவ்வளவு முக்கியமாக இருந்தது? ஏனென்றால், அவ்வாறு செய்தது—கேட்டல், பார்த்தல் ஆகிய—இரண்டு புலன்களையும் செயல்படச்செய்து, வாசிப்பவர் மனதில் ஆழமாக பதிய உதவியது.
கணிதத்தைக் கற்பதும்கூட ஜெஸிகாவுக்கு மிகப் பெரிய வேலையாக இருந்தது. இருப்பினும், கணித விதிகளை திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் அவள் கற்க முயன்றாள், சில நேரங்களில் ஒரு விதியைக் கற்க அரைமணிநேரம்கூட செலவிட்டாள். கடைசியில், அவளுடைய முயற்சிகளெல்லாம் பிரதிபலனை அளித்தன. ஆகவே, திரும்பவும் சொல்க, திரும்பவும் சொல்க, திரும்பவும் சொல்க! வகுப்பில் கேட்டுக்கொண்டிருக்கையில் அல்லது வாசிக்கையில் காகிதத்தையும் ஒரு பென்சிலையும் கைவசம் வைத்திருப்பது ஒரு ஞானமான பழக்கமாகும், அப்போது உங்களால் குறிப்புகளை எழுத முடியும்.
கற்பதில் உங்களையே ஈடுபடுத்துவது மிகவும் முக்கியம். பள்ளி முடிந்தபிறகு, இருந்து உங்களுடைய ஆசிரியர்களிடம் பேசுவதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள். அவர்களை அறிந்துகொள்ளுங்கள். உங்களுக்குக் கற்பதில் பிரச்சினை இருப்பதையும் ஆனால் அதை மேற்கொள்ள நீங்கள் தீர்மானித்திருப்பதையும் அவர்களிடத்தில் சொல்லுங்கள். பெரும்பாலான ஆசிரியர்கள் உதவுவதற்கு ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களுடைய உதவியைப் பயன்படுத்துங்கள். ஜெஸிகா அதையே செய்தாள், பரிதாபப்பட்ட ஓர் ஆசிரியரிடமிருந்து தேவைப்பட்ட ஆதரவை அதிகமாகப் பெற்றாள்.
கவனத்தை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்க
நீங்களாக ஓர் இலக்கையும் பரிசளிக்கும் ஒரு முறையையும் வைப்பதும்கூட உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட இலக்கை—நியமிக்கப்பட்ட வீட்டுப்பாடத்தின் ஒரு பகுதியை முடிப்பதற்கு முன் தொலைக்காட்சியை அல்லது உங்களுக்கு விருப்பமான பாடலை போடக்கூடாது போன்ற ஓர் இலக்கை—வைக்கலாம், அது கவனத்தை ஒருமுகப்படுத்த உங்களை ஊக்குவிக்கும். நீங்கள் வைக்கும் இலக்குகள் அடையத்தக்கவையா என்று நிச்சயமாய் இருங்கள்.—பிலிப்பியர் 4:5, NW-ஐ ஒப்பிடுக.
சில நேரங்களில் உங்களுடைய சுற்றுச்சூழலில் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் மாற்றங்களைச் செய்வதும் உதவலாம். நிக்கி, இன்னும் நன்றாகக் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்காக வகுப்பில் ஆசிரியருக்கு அருகே முன்வரிசையில் உட்கார ஏற்பாடு செய்தான். நன்றாகப் படிக்கும் தோழியுடன் சேர்ந்து வீட்டுப்பாடம் செய்வதைப் பயனுள்ளதாக ஜெஸிகா கண்டாள். வெறுமனே உங்கள் அறையை இதமாகவும் சௌகரியமாகவும் வைத்துக்கொள்வது ஒருவேளை பிரயோஜனமாய் இருக்கக் காண்பீர்கள்.
துருதுருவென்றிருப்பதைக் குறைத்தல்
மிகை இயக்கத்திற்கு ஆளாகும் ஒருவராக நீங்கள் இருந்தால், கற்பது மிகவும் வேதனையான ஒரு சோதனையாக இருக்கும். இருப்பினும், மிகை இயக்கத்தை உடற்பயிற்சியினிடமாகத் திருப்பிவிடலாம் என்று சில நிபுணர்கள் சொல்கிறார்கள். “எரோபிக் (ஆக்ஸிஜனை அதிகளவு உட்கொள்ள செய்யும் பயிற்சி [aerobics]) பயிற்சியின் மூலம் மூளையில் நிகழும் உயிரியல் மாற்றங்களால், ஒவ்வொரு நபரின் புதிய விஷயத்தை திறம்பட்டவிதத்தில் கற்கும் திறமையும் பழைய விஷயத்தை நினைவுகூரும் திறமையும் முன்னேற்றுவிக்கப்பட்டதன் ஆதாரம் அதிகரித்துக்கொண்டிருக்கிறது” என்று ஐ.மா.செய்தி & உலக அறிக்கை (ஆங்கிலம்) குறிப்பிடுகிறது. இவ்வாறாக, மிதமான அளவில்—நீந்துதல், ஓடுதல், பந்து விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் என இதுபோன்ற—உடற்பயிற்சி செய்தல் உடலுக்கும் மனதுக்கும் பயனுடையதாக இருக்கும்.—1 தீமோத்தேயு 4:8.
கற்பதில் உள்ள கோளாறுகளுக்கு வழக்கமாக மருத்துவ சிகிச்சை குறிப்பிடப்படுகிறது. ADHD பாதிக்கப்பட்டுள்ள இளம்பிள்ளைகளில் சுமார் 70 சதவிகிதத்தினருக்குத் தூண்டுதலளிக்கும் (stimulant) மருந்துகள் கொடுக்கப்பட்டபோது சாதகமாக பிரதிபலித்தார்கள் என்பதாக உரிமை பாராட்டப்படுகிறது. பிரச்சினையின் தீவிரத்தையும், ஏற்படும் பக்கவிளைவுகளையும் மற்ற காரணிகளையும் கருத்தில்கொண்டு, மருந்து மூலமான சிகிச்சையை ஏற்பதா ஏற்காமலிருப்பதா என்பது நீங்களும் உங்கள் பெற்றோரும் தீர்மானிக்கவேண்டிய காரியம்.
சுயமரியாதையைக் காத்துக்கொள்ளுங்கள்
கற்பதில் உள்ள பிரச்சினை உணர்ச்சிசம்பந்தமான ஒரு பிரச்சினையாகக் கருதப்படாதபோதிலும், உணர்ச்சிசம்பந்தமான விளைவுகளை அது கொண்டிருக்கலாம். பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் தொடர்ந்து வரும் கண்டனம், குறைகூறுதல், மோசமான அல்லது சுமாரான பள்ளித்தேர்வின் முடிவு, நெருங்கிய நண்பர்கள் இல்லாமை ஆகிய அனைத்தும் சேர்ந்து வெகு எளிதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கக்கூடும். கோபமான விதத்திலும் அச்சுறுத்தும் விதத்திலும் நடந்துகொள்வதன்மூலம் சில இளைஞர்கள் இந்த உணர்வை மறைக்கிறார்கள்.
ஆனால், கற்பதில் பிரச்சினை இருப்பதன் காரணத்திற்காக தன்மதிப்பை நீங்கள் இழக்கத் தேவையில்லை. c கற்பதில் பிரச்சினையைக் கொண்டிருக்கும் இளைஞர்களுடன் செயலாற்றும் ஒரு பேராசிரியர் கூறுகிறார்: “எனது நோக்கமானது, வாழ்க்கையினிடமாக அவர்களுக்குள்ள மனப்பான்மையை—‘நான் முட்டாள், என்னால் எதையும் சரியாக செய்யமுடியாது’ . . . என்ற மனப்பான்மையை, ‘ஒரு பிரச்சினையை மேற்கொண்டுவருகிறேன், நான் எப்போதும் நினைத்ததைக் காட்டிலும் இன்னும் அதிகம் செய்ய என்னால் முடியும்,’ என்று—மாற்றுவதாகும்.”
மற்றவர்களின் மனப்பான்மையைக் குறித்ததில் உங்களால் ஒன்றும் செய்ய இயலாதபோதிலும், உங்களுடையதில் செல்வாக்குச் செலுத்த இயலும். ஜெஸிகா அதைத்தான் செய்தாள். அவள் சொல்கிறாள்: “என் பள்ளியிலுள்ள பிள்ளைகள் சொன்னதன்பேரிலும் வீம்புக்கென்றே பட்டப்பெயர்களால் என்னை அழைத்ததன்பேரிலும் என்னையே நான் மதிப்பிட்டுக்கொண்டபோது, பள்ளியைவிட்டே ஓடிவிடவேண்டுமென்றிருந்தேன். ஆனால் இப்போது அவர்கள் சொல்வதைப் புறக்கணிக்க முயற்சிக்கிறேன், என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவை தொடர்ந்து செய்கிறேன். இது கஷ்டமானதுதான், எனக்கு நானே தொடர்ந்து நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும், ஆனால் இது பலனளிக்கிறது.”
ஜெஸிகா மற்றொரு மெய்ம்மையுடன் போராடவேண்டியிருந்தது. அவளுடைய அண்ணன் அனைத்து பாடங்களிலும் ஏ கிரேடு வாங்கும் ஒரு சிறந்த மாணவனாக இருந்தான். “அவனோடு என்னை ஒப்பிடுவதை நிறுத்தும்வரை என்னுடைய தன்மதிப்பை அது வழக்கமாக அழிக்கக்கூடியதாய் இருந்தது” என்று ஜெஸிகா கூறுகிறாள். ஆகவே, உடன்பிறந்தோருடன் உங்களை ஒப்பிடாதீர்கள்.—கலாத்தியர் 6:4.
நம்பகமான நண்பரிடத்தில் பேசுவதும்கூட காரியங்களைச் சரியான நோக்குநிலையில் வைக்க உங்களுக்கு உதவும். நீங்கள் முன்னேற்றம் செய்ய முயற்சிக்கையில் உண்மையான நண்பர் உண்மைப்பற்றுறுதியுடன் கூடவே இருப்பார். (நீதிமொழிகள் 17:17) மறுபட்சத்தில் ஒரு போலி நண்பர், உங்களை நொந்துபோகும்படி செய்வார் அல்லது உங்களைப்பற்றி தவறாக உயர்ந்த நோக்குநிலையை அளித்திடுவார். எனவே, உங்கள் நண்பர்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுங்கள்.
ஒருவேளை உங்களுக்குக் கற்பதில் பிரச்சினை இருக்கிறதென்றால், மற்ற இளைஞர்களைக் காட்டிலும் அதிகமாக நீங்கள் திருத்தம் செய்யப்படுவீர்கள். ஆனால், அது உங்களைப்பற்றி ஓர் எதிர்மறையான கருத்தை அளிக்க அனுமதிக்காதீர்கள். சிட்சையை கடவுளுக்குரிய வழியில், பெரும் மதிப்புள்ள ஏதோ ஒன்றைப்போல் நோக்குங்கள். உங்கள் பெற்றோரால் கொடுக்கப்படும் சிட்சையானது அவர்கள் உங்களை நேசிக்கிறார்கள், உங்களுக்காகச் சிறந்ததை விரும்புகிறார்கள் என்பதற்கு அத்தாட்சியாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்க.—நீதிமொழிகள் 1:8, 9; 3:11, 12; எபிரெயர் 12:5-9.
கூடாது, உங்களின் கற்கும் பிரச்சினைகள் உங்களை மனந்தளர்ந்துவிடும்படி செய்யவேண்டியதில்லை. அவற்றைக்குறித்து ஏதேனும் உங்களால் செய்யமுடியும், ஆக்கப்பூர்வமான ஒரு வாழ்க்கையை வாழமுடியும். ஆனால், நம்பிக்கைக்கு இன்னும் பெரிய காரணமிருக்கிறது. நீதியான ஒரு புதிய உலகை கொண்டுவருவதாக கடவுள் வாக்களித்திருக்கிறார், அதில் அறிவு திரளாக இருக்கும், மனம் மற்றும் உடல் ரீதியான கோளாறு சரிசெய்யப்பட்டிருக்கும். (ஏசாயா 11:9; வெளிப்படுத்துதல் 21:1-4) ஆகவே, யெகோவா தேவனையும் அவரது நோக்கங்களையும்பற்றி அதிகம் கற்றுக்கொள்ளவும், அந்த அறிவுக்கு இசைவாகச் செயல்படவும் தீர்மானமாக இருங்கள்.—யோவான் 17:3.
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b நவம்பர் 22, 1994, விழித்தெழு! இதழின் “சமாளிக்கமுடியாத பிள்ளைகளைப் புரிந்துகொள்ளுதல்” என்ற தொடர் கட்டுரைகளையும், மே 8, 1983, ஆங்கில விழித்தெழு! இதழின் “உங்கள் பிள்ளை கற்பதில் பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறதா?” என்ற கட்டுரையையும் தயவுசெய்து பார்க்கவும்.
c ஆகஸ்ட் 8, 1984, விழித்தெழு! இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் என் சுயமரியாதையை எவ்வாறு கட்டியெழுப்ப இயலும்?” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 13-ன் படம்]
கற்பதில் ஈடுபாடோடு இருங்கள்