ஹாபூ—அஞ்சி ஒதுங்கவேண்டிய ஒரு பாம்பு
ஒகினாவாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அது காற்றே வீசாத கசகசப்பாக உணரவைக்கும் ஒரு மாலை வேளை. அப்போதுதான் மழை பெய்து ஓய்ந்திருந்தது; ஒவ்வொருவரும் தங்களைக் குளிர்ச்சியாக உணர வைப்பதற்காக விசிறிக்கொண்டிருந்தனர். திடீரென்று, கூச்சல்கள் கேட்டன: “ஹாபூ!” “ஒரு ஹாபூ வந்திருச்சு!” அந்தக் கூச்சல்கள் கிராமவாசிகளைப் பீதியுறச் செய்தன. பெரியவர்கள் தடிகளை எடுத்துக்கொண்டு ஓடினார்கள்; நடப்பதைப் பார்க்க ஆவலுள்ளவர்களாய் பிள்ளைகளும் அவர்கள் பின்னால் அவசரமாக ஓடிப்போனார்கள். அந்தப் பாம்பு எங்கே? எல்லாரும் கவலையுற்றிருந்தார்கள். சுமார் இரண்டு மீட்டர் நீளமுள்ள இந்தப் பாம்பிடமிருந்து ஒரு கடி வாங்குவதே சாவுக்கேதுவானதாக இருக்கலாம். அந்தப் பாம்பு மயக்கமுறும் வரையில் அதன் தலையை நீளமான தடிகளால் அந்தப் பெரியவர்கள் அடித்தபோது, கிராமவாசிகள் நிம்மதியாக உணர்ந்தனர். பின்னர் அது உயிருடன் விற்கப்படுவதற்காக விரைவில் ஒரு பையினுள் போடப்பட்டது.
கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ள ரியூகியூ தீவுகளில், பிள்ளையிலிருந்து தாத்தாபாட்டி வரையாக அனைவரும் ஹாபூவிடமிருந்து—4மஞ்சள் புள்ளிகளுள்ள, ஈட்டி தலையுடைய, உணர்வு குழிகளுள்ள இந்த விரியனிடமிருந்து—அஞ்சி ஒதுங்கியே நிற்கின்றனர்; இது இந்தத் தீவுகளில் எல்லாவற்றையும் அல்ல, ஆனால் சிலவற்றைச் சேர்ந்தது. மலைக்க வைக்கும் இந்தப் பாம்பைப்பற்றி நாம் இப்போது கவனமாக ஆராய்வோம். ஆனால் அதனிடம் அஞ்சி ஒதுங்கி நிற்கும்படியும் எப்போதும் அதைவிட்டு தள்ளியே நிற்கும்படியும் பார்த்துக்கொள்ளுங்கள்!
மலைக்க வைக்கும் வடிவமைப்பு
வெவ்வேறு வகைகளான ஹாபூக்கள் இருக்கின்றன. ஒரு வகையானது கருமையான, பச்சை-பழுப்பு நிற வண்ணத் திட்டுகளைக் கொண்டிருக்கிறது; புல்லுகளுடனும் அழுகிப்போகும் இலைகளுடனும் உருமறைத்து செல்ல அவை அதற்கு உதவுகின்றன. மற்றும் சில, அதிக கருப்பான தோற்றமளிக்கின்றன; அது ஹாபூவின் இரவுநேர செயல்பாடுகளுக்கும் இருண்ட இடங்களில் மறைந்துகொள்ள நாடும் தன்மைக்கும் பொருந்துகிறது.
சற்று பக்கப்பார்வையுள்ளதாய் இருக்கிறபோதிலும், இந்தப் பிராணிக்கு நம்மிடம் இல்லாத திறமைகள் இருக்கின்றன. குழிவு உறுப்புகள் என்றழைக்கப்பட்டவற்றை, அதன் தலையின் இரு பக்கங்களிலும் ஒவ்வொன்றைக் கொண்டிருக்கின்றன. இவை, மூக்குத்துளைகளுக்கும் கண்களுக்கும் இடையிலுள்ள, வெப்பத்தைக்குறித்து கூருணர்வுடைய குழிவான பகுதிகள். மனிதர்கள் வெப்பமாக உணர்கிற அகச்சிவப்பு கதிர்வீச்சை ‘காண’ இந்த இரு குழிகளும் அதற்கு உதவுகின்றன. இவற்றின் உதவியுடன், முழு இருட்டிலும்கூட, கதகதப்பான ஒரு சிறிய எலியை ஒரு ஹாபூவால் துல்லியமாக குறிவைக்க முடிகிறது.
தன் நாக்கை சுருக்கென உதறி நீட்டுகிற பாம்பை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் நாக்கு அதற்கு ஓர் அசாதாரணமான இரண்டாம் மூக்காக செயல்படுகிறது. அவ்வாறு உதறுவதன் மூலம் அந்த ஹாபூ, காற்றிலுள்ள ரசாயனங்களை தன் நாக்கில் சேகரித்துக்கொண்டு, பின்னர் தன் வாயின் மேற்புறத்திலுள்ள ரசாயன உணர்திறமுள்ள உறுப்பிற்கு எதிராக தன் நாக்கை அழுத்திக்கொள்கிறது. இந்த இரண்டாம் மூக்கு செயல்படுகையில், ஹாபூ காற்றிலிருந்து பெருந்திரளான ரசாயன தகவலைப் பெற்றுக்கொள்கிறது.
“ஒரு தாக்குதலை நடத்திய பிறகு, தொடர்ச்சியான காலப் பகுதிகளுக்கு ஹாபூ, நாக்கு உதறுதலின் உயரளவு வீதத்தைக் காத்துக்கொள்கிறது,” என்பதாக டென்னெஸீ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களாகிய ஆர். எம். வாட்டர்ஸும் ஜி. எம். புர்க்ஹார்ட்டும் குறிப்பிட்டனர். தாக்குதலை நடத்திய பிறகு ஏன் ரசாயன தூண்டுதலுக்காகத் தேடுகிறது? போராட துணிச்சலுள்ள இரைவிலங்கால் எதிர்தாக்கப்படும் அபாயம் எப்போதுமே இருப்பதால், ஹாபூ, தாக்கி, விஷத்தை உள்ளேற்றிய பிறகு பெரும்பாலும் அதன் பலியாளை விடுவிக்கிறது. பின்னர், அந்த விஷம் செயல்படத் தொடங்கும்போது, அந்த விரியன் தன் நாக்கை வைத்து ‘முகர்ந்துகொண்டு’ அந்த இரைவிலங்கைத் தேடுகிறது.
இப்போது உதவியற்றதாக இருக்கும் இரைவிலங்கைத் தேடிக் கண்டுபிடித்த பிறகு, அது எலியாக, பறவைக் குஞ்சாக, அல்லது பறவையாக, எதுவாக இருந்தாலும் சரி, ஹாபூ அதை முழுமையாக—தலை, பாதங்கள், வால், மென்மயிர், இறகுகள், மற்றும் அனைத்தையும்—விழுங்கிவிடுகிறது. பெரிய அளவுள்ள இரையை விழுங்குவதற்கு ஏதுவாக, அதன் கீழ்த்தாடை பின்பக்கத்தில் விரிந்துகொடுத்து, தாடை எலும்பை பிரியும்படி செய்கிறது. ஒகினாவாவிலுள்ள ஹாபூ ஆய்வு மையம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிற ஒரு ஹாபூவின் வயிற்றில் முழு பூனை ஒன்று காணப்பட்டது.
ஒரு ஹாபூ அதன் ஸிரிஞ்சைப்போன்ற நச்சுப்பல்லை ஒரு தாக்குதலில் இழந்துவிட்டால் என்னவாகும்? அதை மாற்றீடு செய்ய புதிய ஒன்று வளர்ந்துவிடும். ஏன், சில ஹாபூக்கள் வாயின் இரு பக்கத்திலும் ஒவ்வொன்று என இரண்டு நச்சுப்பற்களுடன் காணப்பட்டிருக்கின்றன! மட்டுமல்லாமல், ஒரு ஹாபூ அதன் நச்சுப்பற்களை இழந்துவிட்டாலும் அது பட்டினி கிடக்காது. ஒரு ஹாபூ தண்ணீரில் மட்டுமே மூன்று வருடங்களுக்குப் பிழைத்ததாகப் பதிவு சொல்லுகிறது.
அதன் தாக்குதலைத் தவிர்த்தல்
தென்கிழக்கு ஆசியாவின் நாகப்பாம்பும் ஆப்பிரிக்காவின் கருப்பு மேம்பாவும் நரம்பு நச்சை உட்செலுத்துகையில், ஹாபூவோ கடுமையான இரத்தக்கசிவுக்குரிய நச்சை உட்செலுத்துகிறது. இரத்தக்கசிவுக்குரியது என்று அது அழைக்கப்படுகிறது ஏனென்றால், இரத்த நாளங்களை அழிப்பதன்மூலம் அது இரத்தக்கசிவுகளை ஏற்படுத்துகிறது. அந்த நச்சு, எரியும் வேதனையையும் வீக்கத்தையும் ஏற்படுத்துகிறது; அது சாவுக்கேதுவானதாகவும் இருக்கலாம்.
பாம்புகள் பதுங்கியிருந்து, மனிதரைத் துரத்தி தாக்குவதாக சிலர் நினைக்கின்றனர், ஆனால் அவ்வாறு இல்லை. மனிதர், ஹாபூவுக்கு இன்சுவை உணவாக இல்லை. ஒரு ஹாபூவை நீங்கள் தெரியாமல் மிதித்துவிட்டால் அல்லது அதன் பிராந்தியத்திற்குள் குறுக்கிட்டால் மட்டுமே அது ஒருவேளை தாக்கும். பலியானவர்களில் பெரும்பாலானோர், ஹாபூக்கள் இரை தேடிக்கொண்டிருந்த காய்கறி தோட்டங்கள் அல்லது கரும்புத்தோட்டங்கள் போன்ற பகுதிகளிலேயே தாக்கப்பட்டிருக்கின்றனர். காலுக்குத் தகுந்த பாதுகாப்பின்றி தீவிலுள்ளவர்கள் ஒருபோதும் உயரமாக வளர்ந்துள்ள புல்லுக்குள் போவதில்லை; மேலும் இரவில் அவர்கள் ஒரு ஃப்ளாஷ்லைட்டை எடுத்துச் செல்கிறார்கள். இரவுநேரத்தில் ஹாபூ விசேஷமாக சுறுசுறுப்புடன் இருக்கிறது. ஓ, இந்தப் பாம்புகள் திறம்பட்ட மரம் ஏறும் பிராணிகள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது; கோடைகாலத்தில் தங்களை குளுமையாக வைத்துக்கொள்ளவும் சந்தேகப்படாத பறவைகளின் அருகில் இருப்பதற்கும் இது அவற்றை அனுமதிக்கிறது. ஆகவே, அவற்றின் இருப்பிடத்திற்கு அருகில் நீங்கள் இருக்கும்போது உங்கள் தலையையும் நீங்கள் எடுத்துவைக்கும் அடிகளையும் குறித்து கவனமாய் இருங்கள்!
இந்த விரியன்பாம்பைச் சமாளிப்பதற்கான சிறந்த வழி என்னவென்றால் முதலில் அது கட்டடத்திற்குள் வருவதற்கு இடங்கொடாமல் இருப்பதே ஆகும். ஒரு கட்டடத்தின் அஸ்திவாரத்திலும் வெளிச் சுவர்களிலும் உள்ள எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிடுங்கள். உங்கள் கொல்லைப்புறத்தை உயரமாக வளர்ந்த புல்லின்றி வைத்துக்கொள்ளுங்கள். வேறுவார்த்தைகளில் சொன்னால், ஹாபூ பதுங்கி இருப்பதற்கு எவ்வித இடத்தையும் கொடுக்காதீர்கள்.
நீங்கள் கடிக்கப்பட்டால் என்ன செய்வது?
இந்த விஷப் பாம்புகளில் ஒன்றை நீங்கள் எதிர்ப்பட்டால் என்ன நடக்கும்? ஒருவேளை அந்த ஹாபூவின் உடலினுடைய மேல் பாதி S வடிவம் கொண்டதாய் சுருண்டுகொள்ளும். இதோ அது வருகிறது! அதன் உடலின் மூன்றில் இரண்டு பகுதி உங்களிடமாக சீறுகிறது, தாடைகள் விரிவாக திறந்தவையாயும், நச்சுப் பற்கள் முதலாவதாக உங்களை வந்தெட்டுபவையாயும் இருக்கின்றன.
பயந்துவிடாதீர்கள். உங்களைத் தாக்கியது உண்மையில் ஒரு ஹாபூதானா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். நச்சுப் பற்கள் உங்கள் தோலைத் துளைத்த இடத்தில், இரண்டு சென்டிமீட்டர் அகன்றவையாய் இரண்டு சிவப்புநிற புள்ளிகள் இருப்பதை வைத்து ஹாபூ கடியை அடையாளம் காணலாம். சில ஹாபூக்கள் மூன்று அல்லது நான்கு நச்சுப் பற்களைக் கொண்டிருக்கக்கூடும்; அப்போது சிவப்புநிற புள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். யாரோ உங்கள் கையை நெருப்பிலிட்டதுபோல, சீக்கிரத்தில் ஓர் எரியும் உணர்ச்சி அதிகரித்து வருகிறது. நீங்கள் என்ன செய்யலாம்? உதவிக்காகக் கூப்பிடுங்கள். பின்னர், விஷத்தை உறிஞ்சி எடுத்து, நிலத்தில் துப்பிவிடுங்கள். “குறைந்தது பத்து தடவையாவது மீண்டும்மீண்டும் இரத்தத்தை உறிஞ்சி எடுங்கள்,” என்பதாக ஹாபூ, அல்லது ரியூகியூ தீவுகளின் விஷப் பாம்புகள் கட்டுப்பாட்டுக்கான கையேடு (ஆங்கிலம்) சொல்லுகிறது. ஹாபூ விஷ சிகிச்சைக்குரிய ஊனீர் இருக்கும் மருத்துவமனையை நோக்கி செல்லுங்கள். என்றாலும், ஒருபோதும் ஓடிப்போகாதீர்கள். இது உங்கள் உடல் முழுவதிலும் விரைவாக விஷத்தை பரவச்செய்து, சேதத்தை அதிகரித்து, குணமாகுதலை மெதுவாக்கும். உங்களால் 30 நிமிடங்களுக்குள் மருத்துவமனையைச் சென்றடைய முடியாவிட்டால், பாதிக்கப்பட்ட கை அல்லது காலில், கடிபட்ட இடத்தைவிட இருதயத்திற்கு பக்கமாக இருக்கும் ஓர் இடத்தில் இரத்தக்கசிவு தடுக்கிற அழுத்திப்பிடிக்கும் கருவியை வையுங்கள். என்றாலும், நாடித்துடிப்பைக் காத்துக்கொள்வதற்காக, மிக நெருக்கமாக அழுத்திக்கட்டிவிடாதீர்கள். இரத்த ஓட்டத்தை அனுமதிப்பதற்காக பத்து நிமிடத்திற்கு ஒருமுறை அழுத்தத்தை விடுவியுங்கள்.
மனிதர், கடிபட்ட பிறகும்கூட, ஹாபூ விஷத்திற்கான தடுப்பாற்றலை வளர்த்துக்கொள்வதில்லை என்று ஒகினாவா உடல்நல மற்றும் சுற்றுச்சூழல் தலைமை நிறுவனத்தின் (Okinawa Prefectural Institute of Health and Environment) ஹாபூ ஆய்வு பிரிவைச் சேர்ந்த மாஸாடோஷி நோஸாகி மற்றும் ஸேகி காட்ஸூரான் ஆகியோர் விழித்தெழு!-விடம் சொன்னார்கள். கடந்தகாலத்தில், பெரும்பாலும் ஒரு கடியானது அந்த உறுப்பு நீக்கப்படுவதற்கு வழிநடத்தியது, ஆனால் இன்று ஒருசில மக்கள் ஹாபூ கடிகளால் ஒரு கை அல்லது காலை இழக்கிறார்கள், இறந்துபோவதைப் பற்றி சொல்வதற்கே இல்லை. பலனளிக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்குரிய தொழில்நுட்பத்தின் காரணமாக, தற்போது கடிக்கப்படுகிறவர்களில் 95 சதவீதமானோர் குணமடைகிறார்கள். மருத்துவ உதவியை நாடாதவர்கள் அல்லது மருத்துவ சிகிச்சை பெறுமிடத்திலிருந்து அதிக தூரத்தில் இருப்பவர்கள் மட்டுமே கடுமையான இழப்பை அனுபவிக்கிறார்கள்.
ஹாபூக்கள் விற்பனைக்கு
ஹாபூக்கு ஒருசில இயற்கையான பகைவர்கள் உண்டு. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் மற்றும் நாய்களுக்கு அதனுடன் நச்சரித்து விளையாடும் போக்கு இருக்கிறது. ஆகாமாடா எனப்படும் விஷமற்ற பாம்பு, சில மரநாய்கள், காட்டுப் பன்றிகள், பருந்துகள் ஆகியவை, அதைக் கொன்று தின்னும் விலங்குகளின் பட்டியலில் இருக்கின்றன. ஹாபூவின் தொகையைக் கட்டுப்படுத்த உதவுவதற்காக ரியூகியூ தீவுகளுக்குள் கீரிப்பிள்ளை கொண்டுவரப்பட்டபோதிலும், அவற்றை அடியோடு அழிப்பதற்கு அது பயனுள்ளதாக இருக்கவில்லை.
அந்த இயற்கை பகைவர்களில் மிக கொடியவன் மனிதன்தான். “ஹாபூ!” என்ற குரல் கேட்டதும் அவசரமாக வந்த அந்தக் கிராமவாசிகளைப் போலவே, ஒரு ஹாபூ தென்பட்ட அந்தக் கணத்திலேயே அதைப் பிடிக்க ஆவலாய் இருக்கும் அநேகர் இருக்கின்றனர். ஆபத்தானதாக இருந்தாலும், ஒரு ஹாபூவுக்கான நிலவர மதிப்பு $80-லிருந்து $100 (ஐ.மா.) வரையானதாக இருக்கிறது; இது அநேகருக்கு மிகப் பெரிய கவர்ச்சியாகவே இருக்கிறது.
ஹாபூ எப்படி பயன்படுத்தப்படுகிறது? உடல்நல காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஹாபூ சாராயமும் உலர் பாம்பு பொடியும், அதிலிருந்து உண்டாக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக அவற்றில் பல, உயிருடன் பயன்படுத்தப்படுகின்றன. நிச்சயமாக, அதன் தோல், சிறு பைகள் மற்றும் பெல்ட்டுகள் தயாரிக்க பயன்படுகிறது, அதன் விஷமோ எதிர்நச்சு ஊனீர் தயாரிக்க பயன்படுகிறது. அப்படிப்பட்ட பயன்கள் இருந்தாலும் இன்னும் ஆலோசனை என்னவென்றால், ஹாபூவிடமிருந்து விலகி இருங்கள்!
[பக்கம் 10-ன் படம்]
ஸிரிஞ்பாணியிலான நச்சுப் பற்களுடன் ஹாபூ. அதன் கீழ்த்தாடை பெரிய இரையை விழுங்குவதற்கு ஏதுவாக விரிந்து கொடுக்கிறது