சிகரெட்டுகள்—நீங்கள் அவற்றை மறுக்கிறீர்களா?
புகையிலையை உலகுக்கு அறிமுகப்படுத்த உதவிய ஒரு தேசம் அதன் அபாயத்தைப் பற்றி எச்சரிப்பதில் முன்னின்று செயல்படுகிறது.
“அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு புகையிலையைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு இல்லை” என்று ஒரு வரலாற்று வல்லுநர் எழுதினார். கரிபியனைச் சேர்ந்த பூர்வீகக் குடிகள் அதைக் கொலம்பஸுக்கு அளித்தன. அதன் ஏற்றுமதி, வட அமெரிக்காவில் முதலாவதாகச் சென்று நிரந்தரமாய்க் குடியேறிய ஆங்கிலேயர்களின் குடியிருப்பான ஜேம்ஸ்டவுனின் பிழைப்புக்கு நிச்சயமளித்தது. அதன் விற்பனை அமெரிக்கப் புரட்சிக்குப் பொருளாதார உதவியளித்தது. மேலும் முன்னாள் ஐ.மா. ஜனாதிபதிகளாய் இருந்த ஜார்ஜ் வாஷிங்டனும் தாமஸ் ஜெஃபர்சனும் புகையிலை பயிர்செய்வோராய் இருந்தனர்.
மிக சமீப காலங்களில், ஹாலிவுட் நிறுவனம், காதல் கவர்ச்சி, அழகு, ஆண்மை ஆகியவற்றின் ஒரு சின்னமாக புகையிலையைப் பயன்படுத்தியது. தாங்கள் போரிட்ட நாட்டில் சந்திக்கும் மக்களுக்கு அமெரிக்கப் படைவீரர்கள் அவற்றை அளித்தனர். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து, “பாரிஸிலிருந்து பீஜிங் வரையிலும்” சிகரெட்டுகள் பண்டமாற்றுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டன என்று சொல்லப்படுகிறது.
ஆனால் நிலைமை மாறிவிட்டது. ஜனவரி 11, 1964-ல், காற்றேற்றம் (emphysema), நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற தீவிர நோய்களுடன் புகைப்பதை சம்பந்தப்படுத்திய ஒரு 387-பக்க அறிக்கையை ஐ.மா. சர்ஜன் ஜெனரல் வெளியிட்டார். விரைவில், ஐக்கிய மாகாணங்களில் விற்கப்பட்ட எல்லா சிகரெட் பேக்கேஜ்களின்மீதும் “எச்சரிக்கை: சிகரெட் புகைப்பது உங்கள் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கலாம்” என்ற எச்சரிக்கையைக் கூட்டரசுச் சட்டம் தேவைப்படுத்தியது. இப்போது, ஐக்கிய மாகாணங்களில் ஆண்டுக்கு 4,34,000 இறப்புகள் நேரிடுவதற்கு புகைப்பதையே காரணம் காட்டுவதாய் மதிப்பிடப்படுகிறது. அது கடந்த நூற்றாண்டின்போது சண்டைகளில் கொல்லப்பட்ட அனைத்து அமெரிக்கர்களின் எண்ணிக்கையையும்விட அதிகமாய் இருக்கிறது!
தடைகள் விதிக்கப்பட்டன
பத்துக்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, பிரசித்தி பெற்ற குளிர் வாழிடமான கொலராடோவிலுள்ள அஸ்பன் நகரம், அதன் சிற்றுண்டிச்சாலைகளில் புகைப்பதற்குத் தடை விதித்தது. அப்போதிலிருந்து, சிற்றுண்டிச்சாலைகள், வேலை செய்யும் இடங்கள், மற்றும் பிற பொதுவிடங்களில் புகைக்காதோரின் பகுதிகள் மிகவும் பொதுவாகியுள்ளன. பல்லாண்டுகளுக்கு முன்பு, கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒருவர், வர்ஜீனியா மாநிலத்திலுள்ள சிற்றுண்டிச்சாலையொன்றில் புகைக்காதோருக்கான பகுதி எங்கு இருந்தது என்று தன் மகளிடம் கேட்டார். “அப்பா, இது புகையிலை நாடு!” என்று அவள் பதிலுரைத்தாள். என்றபோதிலும், அவருடைய அடுத்த சந்திப்பில், அச் சிற்றுண்டிச்சாலையின் பாதியளவு புகைக்காதோருக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில், அங்கு எவருமே புகைக்காதிருப்பதை அவர் கண்டார்.
ஆனால் புகைப்போருக்கென்று தனி பகுதிகளை வைத்திருப்பது பிரச்சினையைத் தீர்த்துவிடவில்லை. கலிபோர்னியாவின் முக்கிய நெடுஞ்சாலைகள் நெடுக உள்ள, அரசால் ஆதரிக்கப்பட்ட பெரிய அறிவிப்புப் பலகைகள் இவ்வாறு கேட்டன: “புகைப்போரின் பகுதியிலேயே தங்கிவிடவேண்டும் என்பது புகைக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”
நியூ யார்க் நகரம், அதன் பெரிய சிற்றுண்டிச்சாலைகளில் புகைப்பதற்குத் தடை விதித்தபோது, ஐரோப்பாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை இது வர விருப்பமின்றி போகச்செய்யும் என்பதாக அவற்றின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; புகைப்பதன்மீது ஒருசில கட்டுப்பாடுகளே அங்கிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். என்றாலும், 56 சதவீத அமெரிக்கர்கள் புகைக்காதோருக்கான சிற்றுண்டிச்சாலைகளுக்குச் செல்வது மிகவும் சாத்தியமானதாய் இருக்கும் அதே சமயத்தில், 26 சதவீதத்தினர் மட்டுமே அவ்விதம் செய்ய குறைந்த மனச்சாய்வு உள்ளவர்களாய் இருப்பதாக ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட ஒரு சுற்றாய்வு கண்டறிந்திருந்தது.
நியூ யார்க் நகரின் சுரங்கப்பாதை வழியே செல்லும் ரயில்களிலுள்ள ஓர் அறிவிப்புப் பலகை இவ்வாறு கூறுகிறது: “எந்த மொழியிலும் செய்தி ஒன்றுதான்: எப்போதும், எங்கும், எங்கள் ரயில் நிலையங்களிலோ, எங்கள் ரயில்களிலோ புகைத்தல் கூடாது. நன்றி.” இச் செய்தியை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல், மற்ற 15 மொழிகளிலும் அந்த அறிவிப்புப் பலகை குறிப்பிடுகிறது.
இவ் விஷயம் உண்மையிலேயே அவ்வளவு வினைமையானதா? ஆம். ஒரு பேரழிவில், 300 பேர் இறக்க நேரிட்டால், அதைப் பற்றிய செய்தி நாட்கணக்கில் அறிவிக்கப்படும், ஒருவேளை வாரக்கணக்கில்கூட அறிவிக்கப்படும். ஆனால், பிற மக்களுடைய சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதனால் உண்டாகும் நீண்டகால விளைவுகளால் ஒவ்வொரு ஆண்டும் 53,000 அமெரிக்கர்கள் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாய் தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன்-ல் வெளியான ஒரு கட்டுரை கூறினது. அது, பிறர் வாயிலாக அல்லது சுற்றுச்சூழல் வாயிலாக வரும் அப்படிப்பட்ட புகையிலை புகையை சுவாசித்தலை, “புகைப்பது மற்றும் மதுபானம் அருந்துவது ஆகியவற்றால் வரும் இறப்புக்கு அடுத்ததாய், மூன்றாவது முக்கிய தடுக்கவல்ல இறப்புக்குக் காரணமாய் ஆக்குவதாக” கூறினது.
குழந்தைகள்—காப்பற்ற பலியாட்கள்
வீட்டிற்குள் புகைப்பதைப் பற்றியென்ன? “பருவமுதிரா இறப்பு, தேவையற்ற நோய் மற்றும் இயலாமையைக்” குறைப்பதற்கான இலக்குகளை வைத்த ஹெல்த்தி பீப்பில் 2000 என்ற ஐ.மா. அரசு பிரசுரம் இவ்வாறு கூறினது: “ஐக்கிய மாகாணங்களில் ஏற்படும் ஆறில் ஒன்றுக்கும் மேலான இறப்புக்குக் காரணம் புகையிலை உபயோகமே; மேலும், அது நம் சமுதாயத்தில் ஏற்படும் இறப்பு மற்றும் நோயைத் தடுக்கத்தக்க மிக முக்கியமான ஒரேயொரு காரணியாய் இருக்கிறது.”
அது மேலும் இவ்வாறு கூறினது: “கர்ப்பமாயிருக்கும்போது சிகரெட் புகைப்பது, பிறப்பின்போது குறைந்த எடையுள்ள குழந்தைகளில் 20 முதல் 30 சதவீதத்துக்கும், பருவமுதிரா பிறப்புகளில் 14 சதவீதம் வரைக்கும், சிசு இறப்புகள் அனைத்திலும் சுமார் 10 சதவீதத்துக்கும் முக்கியக் காரணியாய் இருக்கிறது.” புகைக்கும் தாய்மார்கள், அக் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவதன் மூலமாக மட்டுமோ, அல்லது அக் குழந்தையின் பக்கத்திலிருந்து புகைப்பதன் மூலமாக மட்டுமோ அன்றி, “சமீபத்தில் புகைக்கப்பட்ட அறையில் அக் குழந்தையைக் கிடத்துவதன்” மூலமாகவும் புகையிலையிலிருந்து வரும் புகையின் ஆக்கப் பொருள்களைக் கடத்த முடியும் என்பதாக அது கூறினது.
தகப்பன்மார்களும் உட்பட்டுள்ளனர். அதே பிரசுரம் இவ்வாறு ஆலோசனை கூறியது: “பிள்ளைகளோடு தொடர்புடைய மக்கள் புகைக்க வேண்டுமென்றால், வீட்டுக்கு வெளியிலோ, அல்லது அப் பிள்ளை இருக்குமிடங்களுக்கு அக் காற்று செல்லாதிருக்கும் பகுதிகளிலோ புகைக்க வேண்டும்.” அதே அறையில் புகைக்கும் வயதுவந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பதோடும், சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடும் பிள்ளைகளுக்கு ஏற்படும் தீங்கும் அதிகரிக்கிறது. எனவே, முன்னாள் ஐ.மா. சர்ஜன் ஜெனரல் ஜாஸ்லின் எல்டர்ஸ் இவ்வாறு கூறினார்: “உங்கள் புகைத்தலின் அடிமைத்தனத்திற்குக் காரணமாக குற்றமற்ற பலியாட்களாய் இருப்பவர்கள் உங்கள் பிள்ளைகளே.”
பிற மக்களும் அபாயத்தில் இருக்கின்றனர். கலிபோர்னியாவைச் சேர்ந்த, அரசால் ஆதரவளிக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரம் ஒன்று, வயதான ஒருவர் தனியே அமர்ந்திருப்பதைக் காட்டியது. புகைப்பதை விட்டுவிடுமாறு தன்னுடைய மனைவி எப்பொழுதும் தன்னைத் துரிதப்படுத்தினதாக அவர் கூறினார். “நான் நிறுத்தாவிட்டால் தான் முத்தமிடுவதை நிறுத்திவிடப் போவதாகவும்கூட அவள் பயமுறுத்தினாள். என்னுடைய நுரையீரல்கள்தானே என்றும், என் உயிர்தானே என்றும் நான் கூறினேன். ஆனால் நான் கூறினது தவறு. நான் புகைப்பதை நிறுத்தவில்லை. நான் இழக்கப்போகும் உயிர் என்னுடையதாய் இல்லை. . . . அது அவளுடையதாய் இருந்தது என்பதை நான் உணரவில்லை.” அவளுடைய படத்தை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டே, அந்த வயதானவர் இவ்வாறு மேலும் கூறினார்: “என் மனைவியே என் உயிராய் இருந்தாள்.”
மாறிய நோக்குநிலை
ஐக்கிய மாகாணங்களில் அத்தகைய எச்சரிக்கைகள் புகைப்பதில் ஒரு பெருமளவு குறைவை ஏற்படுத்தியுள்ளன. ஆச்சரியகரமாக, 4 கோடியே 60 லட்சம் அமெரிக்கர்கள்—காலாகாலமாக புகைப்பவர்களில் 49.6 சதவீதத்தினர்—நிறுத்திவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது!
என்றபோதிலும், புகையிலை நிறுவனங்கள் விளம்பரத்துக்காக பெரிய தொகையைச் செலவிடுவதோடு, புகைப்பதை நிறுத்துவதற்கு எதிராகப் போராடுகின்றன. அதன் காரணமாக புகைப்பவர்களின் எண்ணிக்கை குறைவுபடுவது மெதுவாகிவிட்டது. நியூ யார்க்கின் கொலம்பியா யுனிவர்சிட்டியில், சென்ட்டர் ஆன் அடிக்ஷன் அண்ட் சப்ஸ்டன்ஸ் அப்யூஸ்-ஐச் சேர்ந்த இளைய ஜோஸஃப் ஏ. காலஃபானோ, இவ்வாறு கூறினார்: “புகையிலை நிறுவனத்தினால் பொதுமக்கள் உடல்நலத்திற்கு ஏற்படும் மிகப் பெரிய அச்சுறுத்தல் [யாதெனில்], அதன் சாவுக்கேதுவான பொருட்களுக்கு அடிமையாகுபவர்களின் ஒரு புதிய பயிரை உருவாக்கும் சிறார்கள் மற்றும் பருவ வயதினரையும் குறிவைக்கும் வகையில் விளம்பரத்தையும் விற்பனையையும் அது பயன்படுத்துவதே ஆகும்.”
தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் இவ்வாறு கூறினது: “பெரும்பாலும் சிறார்களும் வயதுவந்தவர்களுமான 3,000 இளைஞர்கள் ஒவ்வொரு நாளும் ஒழுங்கான ரீதியில் புகைப்பவர்களாவதாய் மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புகைப்பதை நிறுத்துபவர்களாகவோ, அல்லது இறப்பவர்களாகவோ இருக்கும் தோராயமான 20 லட்சம் புகைப்போரை ஓரளவு மாற்றீடு செய்யும் சுமார் பத்து லட்சம் புதிய புகைப்போரை இது குறிக்கிறது.”
ஐ.மா.-வைச் சேர்ந்த புகைப்போர் அனைவரிலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 14 வயது வாக்கில் ஆரம்பிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் புகைக்க ஆரம்பிக்கும் 3,000 சிறார்களில், கிட்டத்தட்ட 1,000 பேர், புகையிலை சம்பந்தப்பட்ட உடல்நலக் குறைபாடுகளினால் காலப்போக்கில் இறக்கப்போவதாக யூ.எஸ். ஃபுட் அண்ட் ட்ரக் அட்மினிஸ்ட்ரேஷனின் ஆணையரான டேவட் கெஸ்லர் கூறினார்.
அப்படிப்பட்ட புள்ளி விவரங்கள் உங்களைத் தொல்லைப்படுத்தினால், நம்முடைய சிறார்கள் நம் முன்மாதிரியைப் பின்பற்றுவர் என்பதை நாம் நினைவில் வைப்பது நல்லது. அவர்கள் புகைப்பதை நாம் விரும்பவில்லையென்றால், நாமும் அவ்வாறு புகைக்கக்கூடாது.
கடல் கடந்த விற்பனை
ஐ.மா.-வில் சிகரெட் நுகர்வு குறைந்துவிட்ட போதிலும், அயல்நாட்டு விற்பனை வளருகிறது. “ஏற்றுமதி மும்மடங்குக்கும் மேலாகிவிட்டது, மற்றும் ஐ.மா. புகையிலைத் தொழிற்சாலை உற்பத்திகளின் அயல்நாட்டு விற்பனை மிக அதிகமாகிவிட்டது” என்று லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் அறிக்கை செய்தது. வளர்முக நாடுகளில் “புகைப்பதனால் ஏற்படும் தீங்கு பற்றி மிகக் குறைவாகவே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதால்,” புகையிலை நிறுவனங்கள் “தீவிரமாய் அயல்நாட்டு விற்பனையில் நுழைய” அனுமதிக்கின்றன என்று தி நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின் கூறினது.
ஆனாலும், ஐக்கிய மாகாணங்களில் 5-ல் 1 இறப்பு, புகைப்பதனால் நேரிடுகிறது என்று இளைய ஆர். ஜே. ரெனல்ட்ஸின் மகனும், கேமல் மற்றும் வின்ஸ்டன் பிராண்ட் சிகரெட்டுகளை உற்பத்தி செய்யும் கம்பெனியின் ஸ்தாபகருடைய வம்சாவளியில் வந்தவருமான பாட்ரிக் ரெனல்ட்ஸ் கூறினார். கொகேயின், ஆல்கஹால், ஹெராயின், தீ, தற்கொலை, மனிதக்கொலை, எய்ட்ஸ், வாகன விபத்துகள் ஆகியவை அனைத்தாலும் ஏற்படும் இறப்புகளைக் காட்டிலும் அதிக இறப்புகள் புகைப்பதனால் ஏற்படுகின்றன என்றும் புகைத்தல், நமது சகாப்தத்தில் ஏற்படும் இறப்பு, நோய், அடிமையாதல் ஆகியவற்றைத் தடுக்கத்தக்க மிகவும் சாத்தியமான ஒரேயொரு காரணியாய் இருக்கிறது என்றும் ரெனல்ட்ஸ் கூறியதாக அறிக்கை செய்யப்பட்டது.
புகைப்பதைக் கற்றுக்கொள்வதற்கு உலகுக்கு உதவிய தேசமே புகையிலைக்கு தேசிய அளவில் வளர்ந்துவரும் எதிர்ப்பை அபிவிருத்தி செய்திருக்கிறது என்பது விநோதமாய்த் தோன்றுகிறதா? அப்படியானால், ‘யார் இக் கேள்விக்கு விடையளிக்க வேண்டும்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்வது நலமாயிருக்கலாம்.
மாடர்ன் மெச்சூரிட்டி பத்திரிகை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக புகைத்துவந்திருந்த ஒரு பெண்ணைப் பற்றிக் கூறியது. “நீங்கள் அடிமையானால் அடிமையானதுதான்” என்று அவள் கூறினாள். ஒரு வசீகர வேடிக்கை நடவடிக்கையாக வருணிக்கப்பட்டதால் புகைக்க ஆரம்பித்த அவள், அதை விட்டுவிட்டு, தொடர்ந்து தான் புகைப்பதற்கான காரணத்தைப் பரிசீலித்து, அதன்பிறகு புகைப்பதை நிறுத்திவிட்டாள்.
“புகைப்பதை நிறுத்த முயன்றுபாருங்களேன், அதன் அருமை உங்களுக்குத் தெரியும்” என்று அவள் எழுதினாள்.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
“வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் 1990-களின்போது, 35 முதல் 69 வரையான வயதினர்களிடையே நோரிடும் அனைத்து இறப்புகளிலும் சுமார் 30 சதவீத இறப்புக்கு புகையிலை காரணமாயிருப்பதன் மூலம், வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் ஏற்படும் பருவமுதிரா இறப்புகளுக்கு அது மிகப் பெரிய ஒரே காரணியாய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.”—நியூ இங்லண்ட் ஜர்னல் ஆஃப் மெடிஸின்
[பக்கம் 22-ன் பெட்டி/படம்]
புற்றுநோய் எச்சரிக்கைகள்
பின்வரும் எச்சரிக்கைகள், அமெரிக்கன் கேன்ஸர் சொஸைட்டியின் சிற்றேடுகளான ஃபேக்ட்ஸ் ஆன் லங் கேன்ஸர், கேன்ஸர் ஃபேக்ட்ஸ் & ஃபிகர்ஸ்—1995 ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை:
• “தங்கள் கணவன்மார்கள் புகைத்தால், புகைக்காத மனைவிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான 35% அதிக அபாயம் இருக்கிறது.”
• “ஆண்களில் 90%, மற்றும் பெண்களில் 79% நுரையீரல் புற்றுநோய், சிகரெட் புகைப்பதால் ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.”
• “ஒரு நாளுக்கு 2 பாக்கெட்டு சிகரெட் வீதம் 40-க்கும் மேலான ஆண்டுகள் புகைத்திருந்த ஒருவருக்கு, நுரையீரல் புற்றுநோயால் வரும் இறப்பு வீதம், புகைக்காதவரைவிட சுமார் 22 மடங்கு அதிகமாய் இருக்கிறது.”
• “நுரையீரல் புற்றுநோய்க்கு எதிரான மிகச் சிறந்த பாதுகாப்பானது, ஒருபோதும் புகைக்க ஆரம்பிக்காதிருப்பது, அல்லது உடனடியாக புகைப்பதை நிறுத்துவது.”
• “தீங்கற்ற சிகரெட் என்ற ஒரு பொருள் இல்லவே இல்லை.”
• “சவைக்கும் புகையிலையை அல்லது புகையிலைப் பொடியை உபயோகிப்பது, வாய், குரல்வளை, தொண்டை, உணவுக்குழாய் ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதோடு, அது மிகவும் அடிமையாக்கும் ஒரு பழக்கம்.”
• “கன்னம் மற்றும் ஈறில் புற்றுநோய் ஏற்படும் கூடுதல் அபாயம், நீண்டகாலமாய் பொடியை உபயோகிப்பவர்களின் மத்தியில் கிட்டத்தட்ட ஐம்பது மடங்கை எட்டலாம்.”
• “வயதைப் பொறுத்தல்லாமல், புகைப்பதை நிறுத்துபவர்கள் தொடர்ந்து புகைப்பவர்களைவிட நீண்ட காலம் வாழுகின்றனர். 50 வயதுக்கு முன்பு புகைப்பதை நிறுத்திவிடுபவர்களுக்கு, அடுத்த 15 ஆண்டுகளில் இறக்கும் அபாயம், தொடர்ந்து புகைப்பவர்களைவிட பாதியளவே உள்ளது.”
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
விவசாயியின் இரண்டக நிலை
வேறெந்தப் பயிரை வளர்ப்பதன் மூலமாகவும் வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளை அளிக்கப் போதியளவில்லாத, வெகு சிறிய பண்ணைகளைக் கொண்ட குடும்பங்களை, புகையிலை வளர்ப்பு பல காலமாகப் பராமரித்துள்ளது. இந்த உண்மை பலருக்கு மனச்சாட்சி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையை ஏற்படுத்துவது தெளிவாயுள்ளது. புகையிலைப் பெருந்தொழில் முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு பல்கலைக்கழகமான ட்யூக் யுனிவர்ஸிட்டியில் இறையியல் நெறிமுறைகள் துறைப் பேராசிரியரான ஸ்டான்லி ஹௌர்வஸ் இவ்வாறு கூறினார்: “புகையிலை வளர்க்க ஆரம்பிக்கையில், அது எவரையாவது கொல்லும் என்பதை அறியாதிருந்ததே . . . புகையிலை வளர்க்கும் மக்களின் பெருந்துயரமாயிருப்பதாக நான் எண்ணுகிறேன்.”
[பக்கம் 23-ன் படம்]
புகைக்கும் பகுதியிலேயே புகை தங்கிவிடுவதில்லை
[பக்கம் 23-ன் படம்]
கர்ப்பமாயிருக்கும்போது புகைப்பது சிசு இறப்புகள் அனைத்திலும் சுமார் 10 சதவீதத்துக்கு முக்கியக் காரணியாய் இருக்கிறது