அறிகுறிகளைப் புரிந்துகொண்டு சயற்படுதல்
மாரடைப்புக்கான அறிகுறிகள் தோன்றுகையில், உடனே மருத்துவ உதவியை நாடுவது அவசியம். ஏனெனில் மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் இறந்துவிடும் அபாயம் மிக அதிகம். உடனடி சிகிச்சை, இதயத் தசை சீர்செய்ய முடியாதளவுக்குச் சேதமடைந்துவிடுவதிலிருந்து காக்கலாம். எந்தளவுக்கு இதயத் தசையைப் பழுதடையாமல் காக்கிறோமோ, அந்தளவுக்கு, மாரடைப்பு ஏற்பட்டதற்குப் பிறகு, இதயம் பலனுள்ள விதத்தில் வேலை செய்யும்.
என்றபோதிலும், மாரடைப்பு நோய்களில் சில அறிகுறியற்றவையாய் இருக்கின்றன. அப்படிப்பட்டவற்றில் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. இச் சந்தர்ப்பங்களில் ஒருவர் தனக்கு இதயத்தமனி நோய் (CAD) இருப்பதை அறியாதவராய் இருக்கக்கூடும். விசனகரமாக, சிலருக்கு இதய நோய் இருப்பதற்கான துப்பு முதல் முறையாகத் தெரியவரும்போதே தீவிரமான இயல்புடையதாய் இருக்கக்கூடும். இதய நிறுத்தம் (இதயம் இறைப்பது நின்றுவிடுதல்) ஏற்படுகையில், உடனே காப்பாற்றும் குழு ஒன்றை ஏற்பாடு செய்து, அப்போதே நடமாடும் இதய-நுரையீரல் சார்ந்த மறு உயிர்விப்பு முறையின்படி (CPR [Cardiopulmonary Resuscitation]) சிகிச்சை அளிக்காவிட்டால், பிழைப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
CAD அறிகுறிகளை உடைய பெரும்பான்மையோரில், சுமார் பாதிப்பேர் உடனடியாக மருத்துவ உதவியைத் தேடுவதை ஒத்திப்போடுகின்றனர் என்பதாக ஹார்வர்ட் ஹெல்த் லெட்டர் அறிக்கை செய்கிறது. ஏன் அவ்வாறு செய்கின்றனர்? “பொதுவாக, தங்களுக்கிருக்கும் அறிகுறிகள் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை, அல்லது அவற்றைப் பற்றி கவலையுடன் சிந்திப்பதும் இல்லை.”
மாரடைப்புக்குப் பலியான ஜான் a என்ற யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இவ்வாறு கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறார்: “ஏதோவொன்று சரியாய் இல்லை என்று உங்களுக்குத் தெரியவந்தால், அப் பிரச்சினையைக் குறித்து தேவையில்லாமல் ரொம்ப அலட்டிக்கொள்ள விரும்பாததால் மருத்துவ உதவியைப் பெறுவதில் தாமதிக்காதீர்கள். நான் போதியளவு சீக்கிரமாய்ச் செயல்படாததால் கிட்டத்தட்ட என் உயிரை இழக்கும் அளவுக்கு என் நிலைமை மோசமாகிவிட்டது.”
என்ன நடந்தது
ஜான் இவ்வாறு விளக்குகிறார்: “எனக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, என் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாய் இருப்பதைக் குறித்து ஒரு டாக்டரால் எச்சரிக்கப்பட்டேன். அதுவே CAD-ஐ ஏற்படுத்துவதில் அபாயகரமான ஒரு பெரிய காரணியாய் இருக்கிறது. நான் நல்ல ஆரோக்கியமுடையவனாயும், இளமையாய்—40 வயதுக்கும் கீழானவனாய்—இருந்ததாகவும் உணர்ந்ததால் இந்தப் பிரச்சினையைத் தட்டிக்கழித்துவிட்டேன். அப்போதே நடவடிக்கை எடுக்காததற்காக நான் மிகவும் வருந்துகிறேன். எச்சரிப்பூட்டும் பிற அறிகுறிகளும் எனக்கு இருந்தன. அதாவது, உடல் வேலைக்குப் பிறகு மூச்சுவாங்குதலும், அஜீரணம் என்பதாக நான் நினைத்திருந்த வலிகளும், மாரடைப்புக்கு முந்தி பல மாதங்களுக்கு மிதமிஞ்சிய களைப்பும் இருந்தன. மிகக் குறைந்த தூக்கமும் அதிக வேலைப் பளுவுமே இவற்றுக்கெல்லாம் காரணம் என்று நான் நினைத்துக்கொண்டேன். எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, என் இதயத்தில் ஏற்பட்ட திடீர் வலியைத் தசைப் பிடிப்பு என்று நான் நினைத்தேன். அது, மூன்று நாட்களுக்குப் பிறகு பெரிய மாரடைப்பாய் இருப்பதற்கு முந்தி வந்த சிறிய மாரடைப்பாய் இருந்தது.”
அன்ஜைனா (angina) என்று அழைக்கப்படும் நெஞ்சுவலி அல்லது அழுத்தம், மாரடைப்பால் அவதிப்படுபவர்களில் சுமார் பாதிப்பேருக்கு எச்சரிப்பூட்டுகிறது. மூச்சுவாங்குதலோ, அல்லது களைப்பும் பலவீனமுமோ சிலருக்கு அறிகுறிகளாகக் காணப்படுகின்றன. தமனியில் அடைப்பு ஏற்பட்டிருப்பதனால் இதயத்திற்குப் போதியளவு ஆக்ஸிஜன் செல்லவில்லை என்பதை அவை குறிப்பிட்டுக் காட்டுகின்றன. இந்த எச்சரிப்பூட்டும் அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால், அவர் தன் இதயத்தைப் பரிசோதித்துக்கொள்வதற்காக ஒரு மருத்துவரிடம் செல்லும்படி இவை அவரைத் தூண்ட வேண்டும். “ஒரு தடவை நெஞ்சுவலி (angina) வந்து, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டால், இனிமேலும் மாரடைப்பு வராதபடி தடுக்கப்பட்டுவிடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் உடனடியாய் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியங்களாவது குறைக்கப்படுகின்றன” என்று டாக்டர் பீட்டர் கான் குறிப்பிடுகிறார்.
இந்த மாரடைப்பு
ஜான் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “அன்றைக்கு நாங்கள் மென்பந்து (soft ball) விளையாடுவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். மதிய உணவாக மாட்டிறைச்சி வைக்கப்பட்டிருந்த சாண்ட்விட்ச்-ஐயும் வறுத்த உருளைக்கிழங்கையும் ‘லபக்-லபக்’ என்று விழுங்கியிருந்ததால், அசௌகரியமும், குமட்டலும், உடலின் மேற்பகுதியில் இறுக்கமும் எனக்கு ஏற்பட்டபோது, அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால் பந்து விளையாடுவதற்குரிய பொழுதுபோக்கு அரங்கத்துக்குப் போய்ச் சேர்ந்து, விளையாட ஆரம்பித்தபோது, என் உடலுக்கு என்னவோ ஏற்பட்டுவிட்டது என்று நன்றாகவே தெரிந்தது. அந்தப் பிற்பகலில், என் உடல்நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போனதை உணர்ந்தேன்.”
பல தடவை, “விளையாடுபவர்களுக்கென்று போடப்பட்டிருந்த பெஞ்சுகளின்மேல் முகத்தை மேற்புறமாய் வைத்துக்கொண்டு, என் மார்புத்தசைகளை நீட்டும்படி படுத்துப் பார்த்தேன், ஆனால் அவை மேலும்மேலும் இறுகிக்கொண்டே இருந்தன. நான் விளையாடிக்கொண்டிருந்தபோது, ‘ஒருவேளை எனக்கு ஃபுளு காய்ச்சல் வந்திருக்கலாம்’ என்று எனக்குள்ளேயே சொல்லிக்கொண்டேன். ஏனெனில் எனக்குக் ‘கசகசவென்று’ இருந்தது, சில சமயங்களில் பலவீனமாகவும் இருந்தது. நான் ஓடினபோது, என்னால் மூச்சுவிடவே முடியவில்லை என்பது நன்றாகவே தெரிந்தது. நான் மறுபடியும் ஒரு பெஞ்சின்மேல் படுத்துவிட்டேன். நான் எழுந்து உட்கார்ந்தபோது, எனக்குக் கடும் தொந்தரவு ஏதோ ஏற்பட்டிருந்ததில் சந்தேகமே இல்லை. என் மகன் ஜேம்ஸிடம், ‘இப்பொழுதே என்னை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போகவேண்டும்!’ என்று கத்தினேன். என் நெஞ்சு உள்ளுக்குள்ளேயே உடைந்துவிட்டதுபோல் உணர்ந்தேன். அந்த வலி அவ்வளவு அதிகமாய் இருந்ததால் என்னால் எழுந்திருக்க முடியவில்லை. ‘இது மாரடைப்பாக இருக்க முடியாது, இருக்குமா? எனக்கு 38 வயதுதானே ஆகிறது!’ என்று நினைத்தேன்.”
அந்தச் சமயத்தில் 15 வயதாய் இருந்த ஜானின் மகன் இவ்வாறு சொல்கிறார்: “சில நிமிடங்களுக்குள் என் அப்பா தன் பலத்தை இழந்துவிட்டதால், அவரைத் தூக்கிக்கொண்டுபோய் காருக்குள் வைக்க வேண்டியதாகிவிட்டது. என் நண்பர் காரை ஓட்டிச்சென்றார். அதே சமயம் அப்பாவின் நிலையைக் கண்டறிந்துகொள்ளும் வகையில் அவரிடம் அவ்வப்பொழுது கேள்விகள் கேட்டுக்கொண்டும் வந்தார். முடிவாக, அப்பா பதில் சொல்லவில்லை. ‘ஜான்!’ என்று என் நண்பர் கத்தினார். அதற்கும் என் தந்தை பதில்சொல்லவில்லை. பிறகு அவருடைய ‘சீட்டில்’ அப்பாவுக்கு உதறல் எடுத்தது. அந்த உதறல் வலிப்பாக மாறி, வாந்தி எடுக்கும் வரை சென்றது. நான் திரும்பத் திரும்ப: ‘அப்பா! நீங்க எனக்கு வேணும்ப்பா! என்னை விட்டுட்டுப் போயிடாதீங்கப்பா!’ என்று கதறிக்கொண்டே இருந்தேன். அவருடைய வலிப்புக்குப் பிறகு, அவருடைய முழு உடலும் ‘சீட்டில்’ அப்படியே துவண்டுவிட்டது. அவர் இறந்துபோய்விட்டார் என்று நான் நினைத்தேன்.”
ஆஸ்பத்திரியில்
“நாங்கள் உதவி பெறுவதற்கு ஆஸ்பத்திரிக்குள் ஓடிச்சென்றோம். அப்பா இறந்துபோய்விட்டதாக நான் நினைத்ததிலிருந்து இரண்டு மூன்று நிமிடங்கள் கழிந்துவிட்டது, ஆனாலும் அவரை மறுபடியும் உயிர்ப்பிக்க முடியும் என்று நான் நம்பினேன். அந்தப் பந்து விளையாடும் பொழுதுபோக்கு அரங்கத்திற்கு வந்திருந்த உடன் யெகோவாவின் சாட்சிகள் சுமார் 20 பேர் வெயிட்டிங் ரூமில் இருந்தது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. எனக்கு ஆறுதலளிக்கவும் என்னை நேசிக்கவும் அவர்கள் அங்கு இருந்ததாக என்னை உணரச் செய்தார்கள். அப்படிப்பட்ட ஒரு துக்க நேரத்தில் அது மிகவும் உதவியாய் இருந்தது. சுமார் 15 நிமிடம் கழித்து, ஒரு டாக்டர் வந்து, ‘உங்க அப்பாவை உயிர்ப்பிக்க முடிந்தது, ஆனால் அவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருந்தது. அவர் பிழைத்துக்கொள்வார் என்று நிச்சயமாய் நாங்கள் சொல்ல முடியாது’ என்பதாக விளக்கினார்.
“பிறகு நான் அப்பாவை சிறிது நேரம் மட்டும் பார்ப்பதற்கு அவர் என்னை அனுமதித்தார். எங்கள் குடும்பத்தின்மீது அப்பாவுக்கிருந்த பாசத்தை வெளிப்படுத்தியது என்னைத் திணறடித்தது. ‘மகனே, உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நம்முடைய வாழ்க்கையில் யெகோவாதான் ரொம்ப முக்கியமான நபர் என்பதை எப்பொழுதும் நினைவில் வை. அவருக்குச் சேவை செய்வதை ஒருபோதும் நிறுத்திவிடாதே. உன் அம்மாவும் தம்பிமார்களும் அவரைச் சேவிப்பதை ஒருபோதும் நிறுத்திவிடாதபடி அவர்களுக்கு உதவி செய். உயிர்த்தெழுதலில் நமக்கு திட நம்பிக்கை இருக்கிறது. அப்படியே நான் செத்துப்போயிட்டாலும் நான் திரும்பி வரும்போது உங்கள் எல்லாரையும் நான் பார்க்கணும்’ என்று மிகுந்த வேதனையில் சொன்னார். அன்பு, பயம், நம்பிக்கை இதெல்லாம் ஒன்றுசேர, கண்ணீருடன் நாங்கள் இருவரும் அழுதுகொண்டிருந்தோம்.”
ஜானின் மனைவி மேரி, ஒரு மணிநேரத்துக்குப் பிறகு வந்துசேர்ந்தார்கள். “அவசர சிகிச்சை அறைக்குள் நான் நடந்துசென்றபோது, ‘உங்கள் கணவருக்குத் தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருந்தது’ என்று அந்த டாக்டர் சொன்னார். நான் திகைத்துப்போய்விட்டேன். ஜானின் இதயத்தில் எட்டு தடவை இதய உதறல் நீக்கம் செய்யப்பட்டிருந்தது என்று அவர் விவரித்தார். இந்த அவசர நடவடிக்கை, இதயத்தின் சீரற்ற துடிப்பை நிறுத்தி வழக்கமான துடிப்பைத் திரும்பப் பெறும்படி செய்வதற்காக மின்னழுத்தத்தைப் பயன்படுத்துவதை உட்படுத்துகிறது. CPR, ஆக்ஸிஜன் விநியோகம், சிரையின் வழியாக செலுத்தப்படும் மருந்துகள் ஆகியவற்றுடன், உதறல் நீக்கல் என்பது, உயிரைக் காப்பதற்காக பயன்படுத்தப்படும் முற்போக்கான ஒரு முறை.
“நான் ஜானைப் பார்த்தபொழுது, எனக்குக் கவலையாகவும் பரிதாபமாகவும் இருந்தது. அவர் வெளிறிப்போய் இருந்தார். அவரது உடலைக் கருவிகளோடு இணைக்கும் பல குழாய்களும் கம்பிகளும் இருந்தன. எங்களுடைய மூன்று மகன்களுக்காக இந்தச் சோதனையை சகித்துக்கொள்வதற்கு எனக்கு சக்தியளிக்கும்படி அமைதியாக யெகோவாவிடம் நான் ஜெபித்தேன். மேலும், இனிமேல் என்ன நடக்கப்போகிறதோ, அதைப்பற்றி ஞானமான தீர்மானங்களைச் செய்வதற்கு வேண்டிய வழிநடத்துதலுக்காகவும் நான் ஜெபித்தேன். ஜானின் படுக்கையை நான் நெருங்குகையில், ‘இந்தமாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் உனக்குப் பிரியமானவரிடம் என்ன சொல்லப் போகிறாய்? உயிருக்கு ஆபத்தான அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நாம் உண்மையிலேயே தயார்நிலையில் இருக்கிறோமா?’ என்று நான் நினைத்தேன்.
“ ‘என் செல்லமே, நான் பிழைக்கப்போவது மாதிரி தெரியல. ஆனா, நீயும் நம்ம பையன்களும் யெகோவாவுக்கு உண்மையுள்ளவங்களா நிலைத்திருக்கணும். ஏன்னா, சீக்கிரம் இந்த ஒழுங்குமுறை முடிவடையும். இனிமேலும் வியாதியும் மரணமும் இருக்காது. அந்தப் புது ஒழுங்குமுறையில் நான் கண்விழிக்க விரும்புறேன். அப்போ உன்னையும் நம்ம பையன்களையும் அங்கே பார்க்கணும்’ என்று ஜான் சொன்னார். எங்கள் முகங்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தோடியது.”
அந்த டாக்டர் விளக்குகிறார்
“அந்த டாக்டர் பிறகு என்னைத் தனியே அழைத்து, ஜானுக்கு ஏற்பட்டிருந்த மாரடைப்பு, இடதுபக்க முன்புறத்தில் உள்ள, கீழிறங்கும் தமனியில் 100 சதவீத அடைப்பு ஏற்பட்டதனால் வந்த விளைவு என்று பரிசோதனை காட்டினது என்றும், மற்றொரு தமனியிலும் அடைப்பு இருந்தது என்றும் விளக்கினார். ஜானின் சிகிச்சை சம்பந்தமாக நான் ஒரு தீர்மானம் செய்ய வேண்டும் என்பதாக டாக்டர் என்னிடம் சொன்னார். இருந்தவற்றில் இரண்டு தெரிவுகள், மருந்துகளும் இரத்தக்குழாய் சீரமைப்பும் (angioplasty). இரத்தக்குழாய் சீரமைப்பு நல்லதாய் இருக்கும் என்று அவர் நினைத்ததால் நாங்கள் அதைத் தெரிவுசெய்தோம். ஆனால் டாக்டர்கள் உறுதியாய்ச் சொல்லவில்லை, ஏனெனில், இந்த வகை மாரடைப்பு ஏற்பட்டால் பெரும்பாலானோர் பிழைப்பதில்லை என்பதாக அவர்கள் கூறினர்.”
இரத்தக்குழாய் சீரமைப்பு என்பது ஓர் அறுவை முறை. அதில், பலூன்-நுனி கொண்ட செருகு வடிகுழாய் ஒன்று, இதயத்தமனி ஒன்றில் செருகப்படுகிறது. பிறகு அந்த அடைப்பைத் திறப்பதற்காக விரிவடையும்படி செய்யப்படுகிறது. இந்த முறையில், இரத்த ஓட்டத்தைத் திரும்பப் பெறுவதில் வெற்றியடைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. பல தமனிகள் தீவிரமாய் அடைக்கப்பட்டிருந்தால், மாற்றுப் பாதை அறுவை சிகிச்சை பொதுவாக சிபாரிசு செய்யப்படுகிறது.
இருண்ட முன் கணிப்பு
இரத்தக்குழாய் சீரமைப்பு செய்ததற்குப் பிறகு, ஜானின் உயிர் 72 மணிநேரம் தொடர்ந்து ஊசலாடியது. முடிவில், அந்த அதிர்ச்சியிலிருந்து அவருடைய இதயம் சீரடைய ஆரம்பித்தது. ஆனால் ஜானின் இதயம் முன்பு இறைத்ததில் பாதி திறனுடன் மட்டுமே இறைக்க முடிந்தது. இதயத்தின் பெரும்பகுதி தழும்பை ஏற்படுத்தும் திசுவாக மாறிவிட்டிருந்தது. ஆகவே, ஓர் இதய நோயாளியாய் இருக்கும் எதிர்பார்ப்பைக் கிட்டத்தட்ட தவிர்க்கவே முடியவில்லை.
திரும்பவும் யோசித்துப் பார்க்கையில், ஜான் பின்வருமாறு அறிவுரை கூறுகிறார்: “எச்சரிக்கைகளுக்குச் செவிகொடுப்பதற்கும் நம் உடல்நலத்தைக் கவனிப்பதற்கும்—விசேஷமாக நாம் ஆபத்தில் இருக்கும்போது—நம் படைப்பாளருக்கும், நம் குடும்பங்களுக்கும், நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கும், நமக்கும் நாம் கடன்பட்டிருக்கிறோம். ஒரு கணிசமான அளவுக்கு, சந்தோஷத்துக்கும் வருத்தத்துக்கும் நாமே காரணராய் இருக்கலாம். அது நம்மைப் பொறுத்தது.”
ஜானின் விஷயம் கடுமையானது. அதற்கு உடனடி கவனம் தேவைப்பட்டது. ஆனால் மார்பு எரிச்சல்-போன்ற அசௌகரியமுடையவர் அனைவரும் ஒரு டாக்டரிடம் ஓடவேண்டியதில்லை. ஆனாலும், அவருடைய அனுபவம் ஓர் எச்சரிப்பாய் இருக்கிறது. தங்களுக்கு அறிகுறிகள் தென்படுவதாய் உணருபவர்கள் ஒரு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மாரடைப்பின் அபாயத்தைக் குறைப்பதற்கு என்ன செய்யப்படலாம்? அடுத்த கட்டுரை இதைக் கலந்தாலோசிக்கும்.
[அடிக்குறிப்பு]
a இக் கட்டுரைகளிலுள்ள பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 6-ன் பெட்டி]
மாரடைப்பின் அறிகுறிகள்
• அழுத்துவது மற்றும் பிழிவது போன்ற, அசௌகரியத்தை ஏற்படுத்தும் உணர்வு, அல்லது ஒருசில நிமிடங்களுக்கும் மேலாக தொடர்ந்திருக்கும் நெஞ்சுவலி. தீவிர மார்பு எரிச்சல் என்று தவறாக நினைத்துக்கொள்ளப்படலாம்
• பரவும் தன்மையுடைய அல்லது ஒரே இடத்தில் இருக்கும் வலி—தாடையில், கழுத்தில், தோள்களில், முன்னங்கைகளில், முழங்கைகளில், அல்லது இடது கையில்
• அடிவயிற்றின் மேற்புறத்தில் நீடித்த வலி
• மூச்சுத்திணறல், தலைச்சுற்றல், மயக்கம், வியர்த்தல், அல்லது தொடுகையில் ‘கசகச’வென்று உணர்தல்
• மிதமிஞ்சிய களைப்பு—மாரடைப்பு ஏற்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பு அனுபவிக்கப்படக்கூடும்
• குமட்டல் அல்லது வாந்தி
• உடல் வேலை காரணமல்லாமலே அடிக்கடி நெஞ்சு வலி (angina) தாக்குவது
அறிகுறிகள் இலேசானதிலிருந்து பலமானதுவரை வேறுபடலாம். ஒவ்வொரு முறை மாரடைப்பு வரும்போதும் எல்லாம் ஒரேசமயத்தில் ஏற்படுவதில்லை. ஆனால் இவற்றுள் ஏதாவது ஒன்றுசேர்ந்து தோன்றினால், விரைவாக உதவியை நாடுங்கள். என்றபோதிலும், சில சந்தர்ப்பங்களில் அறிகுறிகளே தென்படுவதில்லை; இவை அறிகுறியற்ற மாரடைப்புகள் என்று குறிப்பிடப்படுகின்றன.
[பக்கம் 7-ன் பெட்டி]
பிழைப்பதற்கான நடவடிக்கைகள்
உங்களுக்கோ, உங்களுக்குத் தெரிந்த ஒருவருக்கோ, மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட்டால்:
• அறிகுறிகளைக் கண்டுகொள்ளுங்கள்.
• நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தாலும் நிறுத்திவிட்டு உட்காருங்கள் அல்லது படுங்கள்.
•அறிகுறிகள் ஒருசில நிமிடங்களுக்கும் மேலாக நீடித்திருந்தால், உள்ளூர் அவசர தொலைபேசி எண் ஒன்றுக்கு அழையுங்கள். செய்தியைத் தெரிவிப்பவரிடம், மாரடைப்பு என்பதாக நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள் என்று கூறுங்கள், நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றித் தேவைப்படும் தகவலை அவருக்குக் கொடுங்கள்.
• மாரடைப்புக்குப் பலியானவரை ஓர் ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை அறைக்கு எடுத்துச்செல்வதற்கு நீங்களே வாகனத்தை அங்கு ஓட்டிச்செல்ல முடிந்தால், அவ்வாறு செய்யுங்கள். உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக நீங்கள் நினைத்தால், அங்கு உங்களைக் கொண்டுசெல்வதற்காக எவரையாவது அழையுங்கள்.
அவசர மருத்துவக் குழு ஒன்றிற்காக நீங்கள் காத்திருந்தால்:
• பெல்ட் அல்லது கழுத்தில் அணியும் டை உட்பட இறுகலான உடையைத் தளர்த்துங்கள். பலியானவர் வசதியாய் இருக்கும்படி உதவுங்கள், அவசியப்பட்டால் தலையணைகளை வைத்து முட்டுக்கொடுங்கள்.
• நீங்கள் பலியானவராய் இருந்தாலோ, அல்லது உதவியாளராய் இருந்தாலோ அமைதியாய் இருங்கள். பரபரப்படைவது உயிருக்கு ஆபத்தான இரத்த ஊட்டக்குறை நோய் (arrhythmia) ஏற்படும் சாத்தியத்தை அதிகரிக்கக்கூடும். அமைதியாய் இருப்பதற்கு ஜெபம் பலப்படுத்தும் ஓர் உதவியாய் இருக்கலாம்
பலியானவரின் மூச்சு நின்றுவிட்டதாகத் தோன்றினால்:
• உரத்த குரலில், “நான் பேசுவதைக் கேட்க முடிகிறதா?” என்று கேளுங்கள். பதில் வராவிட்டாலும் நாடித்துடிப்பு இல்லாவிட்டாலும், பலியானவர் சுவாசிக்காவிட்டாலும், இதய நுரையீரல் சார்ந்த மறு உயிர்விப்பு முறையை (CPR) ஆரம்பியுங்கள்.
• CPR-ன் மூன்று அடிப்படைப் படிகளை நினைவில் வையுங்கள்:
1. நுரையீரல் காற்றுக்குழாயைத் திறப்பதற்காக, பலியானவரின் நாடியை உயர்த்துங்கள்
2. நுரையீரல் காற்றுக்குழாயைத் திறந்து வைத்திருப்பதோடு, பலியானவரின் மூக்கைப் பிடித்துக்கொண்டிருக்கையில், மார்பு எழும்பும்வரையில் மெதுவாக அவருடைய வாய்க்குள் இரண்டு தடவை ஊதுங்கள்
3. காம்புகளுக்கு இடையே மார்பின் மத்தியில் 10 முதல் 15 தடவை அழுத்துங்கள். அப்போது இதயத்திலிருந்தும் மார்பிலிருந்தும் இரத்தம் வெளித்தள்ளப்படுகிறது. ஒவ்வொரு 15 வினாடிகளுக்கும், இரண்டு தடவை ஊதுவதையும் அதைத் தொடர்ந்து 15 தடவை அழுத்துவதையும் மாறிமாறி செய்யுங்கள். நாடித்துடிப்பும் மூச்சும் திரும்பப் பெறப்படும்வரையிலோ அல்லது அவசர சிகிச்சைக் குழு வந்துசேரும்வரையிலோ அவ்வாறு செய்யுங்கள்
CPR சிகிச்சை முறை, அதைச் செய்வதற்கான பயிற்சி பெற்றவர்களால் செய்யப்பட வேண்டும். ஆனால் பயிற்சி பெற்றவர் எவரும் இல்லாதிருக்கையில், “ஒன்றுமில்லாததற்கு ஏதாவது CPR பரவாயில்லை” என்பதாக அவசர இதய சிகிச்சைப் பிரிவில் ஒரு நடத்துநராய் இருக்கும் டாக்டர் ஆர். கமின்ஸ் கூறுகிறார். எவராவது இப் படிகளை ஆரம்பித்து வைக்காவிட்டால், பிழைப்பதற்கான சந்தர்ப்பங்கள் மிகக்குறைவே. CPR சிகிச்சை முறை உதவி வந்துசேரும் வரையில் அந்த நபரை உயிருடன் வைக்கிறது.
[பக்கம் 5-ன் படம்]
மாரடைப்பு ஏற்பட்டதற்குப் பிறகு உடனடி சிகிச்சை ஓர் உயிரைக் காத்து, இதய சேதத்தைக் குறைக்கக்கூடும்