மனம் கவரும் இடமாக்கலாம் சமையலறையை
“சமையலறைக்குள் காலை வைக்காதே!” சாப்பாடு ரெடியாவதற்கு முன்பே பசிதாங்காமல் ருசிபார்க்க முயலும் அநேக பிள்ளைகள் இப்படித்தான் திட்டுவாங்குகின்றனர். ஆனாலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சமையலறைக்குள் வரவேண்டாம் என சொல்வதற்கு பதிலாக உள்ளே அழைப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஏன் அப்படி? ஏனென்றால், நடைமுறையில் சமையலறை கவர்ந்திழுக்கும் ஒரு வகுப்பறை ஆகும்.
சமையலறை, கற்பனையால் உருவாக்கும் திறமைகளையும் சிக்கல்களைத் தீர்த்துக்கொள்வதற்கான திறமைகளையும் பிள்ளைகள் வளர்த்துக்கொள்வதற்கான இடம்; மற்றவர்களுக்கு பணிவிடை செய்து ஒரு குழுவாக வேலை செய்வதை கற்றுக்கொள்வதற்கான இடம்; மனதைத் தொடும் அர்த்தமுள்ள பேச்சுகள் தன்னிச்சையாக எழும்பும் இடம்; உயர்ந்த நெறிகள் மனதில் மறைவாக புகுத்தப்பட உதவும் இடம். ஆம், எல்லா சமையலறைகளிலும், சாமான்கள் நிரம்பியுள்ள அலமாரிகள், டிராயர்கள், ஷெல்ஃபுகள் ஆகியவற்றில் மதிப்புமிக்க பாடங்கள் அடங்கியிருக்கின்றன; அவற்றைக் கற்றுக்கொண்டு அடுத்த வேளை உணவு தயாரிக்கையில் பொருத்தலாம்.
தொழில்நுட்பமும் தகவல்தொடர்பும் தலைதூக்கியிருக்கும் இந்தக் காலத்தில், பிள்ளைகளைப் பயிற்றுவிக்க சமையலறையைப்போய் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? பதில் என்ன தெரியுமா, நேரம். பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதற்கு—அதிக நேரம் செலவிடுவதற்கு—ஈடிணையானது வேறெதுவுமில்லை என அநேக பெற்றோர்கள் உணருகிறார்கள்! a நேரத்திற்கு எங்கே போவது என்பதுதான் பிரச்சினை. பெற்றோர், தாங்கள் செய்யும் அன்றாட வேலைகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவற்றை தங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து வேலைகள் செய்வதற்கும் அவர்களுக்கு அறிவு புகட்டுவதற்குமான வாய்ப்புகளாக பயன்படுத்திக்கொள்ளுமாறு சில வல்லுநர்கள் சொல்கின்றனர். இது, பூர்வ இஸ்ரவேல் தேசத்தில் வாழ்ந்த பெற்றோருக்கு கடவுள் கொடுத்த கட்டளைக்கு ஒத்திருக்கிறது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’—உபாகமம் 6:6, 7.
எப்படியிருந்தாலும் நாம் சமையலறையில் வழக்கமாக நேரம் செலவிடவேண்டியிருப்பதால், குடும்பமாக ஒன்றுசேர்ந்து வேலைசெய்ய அது பொருத்தமான இடமாக இருக்கலாம். மற்றபடி உல்லாசமாக வெளியே சென்றுவருவதற்கு, நமக்கு நேரம், சக்தி, காசு போன்றவை கிடைக்கும்வரை காத்திருக்க வேண்டும்; ஆனால் பசியை தள்ளிப்போட முடியாது. அது மாத்திரமல்லாமல், சமையலறையென்றாலே பிள்ளைகளுக்கு ஒரு தனி குஷிதான். என்னயிருந்தாலும், கத்திகளையும் மற்ற பாத்திரங்களையும் உபயோகிப்பதை வேறு எங்கு அவர்கள் கற்றுக்கொள்ளப்போகிறார்கள்? கும்மாளமடிக்கும் பிள்ளைகள் சிலசமயத்தில் எல்லாவற்றையும் குளறுபடியாக்கலாம்! இருந்தாலும், சமையலறை என்ன பாடங்களைக் கற்பிக்கிறது?
சமையலறை “வகுப்பறையில்” கற்றுக்கொள்வது
ஜின்ஜர்பிரெட் லேடி என நான்கு-வயது மாணாக்கர்களால் அறியப்பட்டிருந்த லவிஸ் ஸ்மித், சிறுபிள்ளைகளுக்கு சமையல் கற்றுக்கொடுப்பதில் 17 வருட அனுபவத்துடன் இவ்வாறு சொன்னார்: “சாப்பாட்டைப் பற்றிய காரியங்களை எல்லா பிள்ளைகளும் புரிந்துகொள்வதால் அதைவைத்து சிறந்த விதத்தில் கற்பிக்கலாம். சிறு வயதுகளில் முகர்வது, சுவைப்பது, தொடுவது போன்ற உணர்வுகள் அவ்வளவு கூர்மையாய் இருப்பதன் காரணமாக அவர்கள் அதில் மெய்மறந்துபோகின்றனர். உச்சரிப்பு, கணக்கு, சிக்கல்-தீர்க்கும் திறமைகள் ஆகியவற்றை சாப்பாட்டைவைத்து நீங்கள் கற்றுக்கொடுக்கலாம்.” ஊற்றுவது, அரைப்பது, உரிப்பது, சலிப்பது, கிளறுவது, தேய்ப்பது ஆகியவை பிள்ளைகளின் கைத்திறமையை முன்னேற்றுவித்து, கண்-கை சரியாக இணைந்து வேலைசெய்வதையும் முன்னேற்றுவிக்கின்றன. பிரித்தெடுப்பதும் (திராட்சைகளையும் பருப்புகளையும் தனித்தனியாக பிரித்தெடுத்தல்) அடுக்குவதும் (அளவு கப்புகளை ஒன்றுக்குள் ஒன்று புகுத்துவது) கணக்கு கற்றுக்கொள்வதற்கான ஆரம்ப படிகளைக் கற்றுக்கொடுக்கிறது. சமையற்குறிப்பைப் பார்த்து சமைப்பது, எண்கள், அளவுகள், நேரம், நியாயம், பாஷை ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பயிற்சியளிக்கும். கவனமாக வேலைசெய்வது, பொறுப்பு, தனிப்பட்ட ஒழுங்கமைப்பு, கூட்டுவேலை ஆகியவற்றைப் பற்றி கற்றுக்கொள்ளாமல் இந்தச் சிக்கலான, ஆபத்துநிறைந்த சமையலறை உலகிற்குள் ஒருவர் துணிந்து செல்லமுடியாது.
சமைக்கக் கற்றுக்கொள்வதன் அவசியத்தையும் கவனியாது விடக்கூடாது. ஆரம்பத்தில் சமையலறையில் ஒத்தாசையாக இருந்து பின்பு பருவ வயதை அடைவதற்குள் முழு வேளைச் சாப்பாட்டையே தயாரிக்கும் பிள்ளைகளைப் பார்ப்பது சர்வசாதாரணம். அவ்வப்போது பிள்ளைகள் கையால் சமைத்ததைச் சாப்பிட எந்த அம்மா அப்பாவிற்குத்தான் பிடிக்காது? மேலும், இளைஞர்கள் நம்பிக்கையையும் தன்னிறைவையும் வளர்த்துக்கொள்ள சமையல் உதவும்; பிற்காலத்தில் அவர்களுக்கு திருமணமானாலும்சரி ஆகாவிட்டாலும்சரி, பெரியவர்களுக்கேற்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்கையில் அவர்களுக்கு பயனளிக்கும் குணங்கள் இவை.—1 தீமோத்தேயு 6:6-ஐ ஒப்பிடுக.
30-வயது தொடங்கி சில வருடங்கள்வரை திருமணமாகாமல் இருந்த லீ, இவ்வாறு நினைவுகூருகிறார்: “எனக்கு சுமார் ஆறு வயதாயிருக்கும்போது என் அம்மா அடிப்படை சமையல் வேலைகளை எனக்குக் கற்றுக்கொடுத்தார். முதலில், பிஸ்கட்டுகள், கேக்குகள், மற்ற இனிப்புகள் ஆகியவற்றை செய்வதில்தான் எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் எனக்கு ஒன்பது வயதானபோது, எங்கள் குடும்பத்திற்கு ஆகாரம் முழுவதையும் திட்டமிட்டுத் தயாரிக்க என்னால் முடிந்தது; அதை நான் வழக்கமாக செய்துவந்தேன். அதன்பின், வளர்ந்த ஒரு தனி ஆளாக, சமைப்பது உட்பட வெவ்வேறு வீட்டு வேலைகளை சமாளிப்பதெப்படி என்பதை அறிந்துவைத்திருந்தது வாழ்க்கையை சுலபமாக்கியது என்பதை புரிந்துகொண்டேன். இப்போது சந்தோஷமான ஒரு திருமண வாழ்க்கையை நான் அனுபவிப்பதற்கு அது நிச்சயமாகவே உதவியிருக்கிறது என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்.”
சமைப்பதென்றாலே ஜாலிதான்!
பிள்ளைகளை சமையலறையில் பயிற்றுவிப்பதற்கு ஒரு பெற்றோர் எவ்வாறு நேரத்தை கண்டடையலாம்? கவனச்சிதறல் மிகக் குறைவாக இருக்கும் நேரத்தைத் தெரிந்தெடுப்பது சிறந்ததென ஒரு தாய் சொல்கிறார். உங்களுக்கு அநேக பிள்ளைகள் இருந்தால், முதன்முதலில் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கையில், ஒரு சமயத்தில் ஒரு பிள்ளையோடு வேலை செய்ய நீங்கள் விரும்பலாம். இதைச் செய்வதற்கு, மற்ற பிள்ளைகள் தூங்கும் நேரத்தையோ பள்ளிக்கு சென்றிருக்கும் நேரத்தையோ தேர்ந்தெடுங்கள். நீங்கள் தனியாக சமைக்கும்போது செலவிடும் நேரத்தைவிட அதிகத்தை செலவிட திட்டமிடுங்கள். சமையலறையில் ஜாலியாக வேலைசெய்ய தயாராகுங்கள்!
முதல் தடவை சமைக்கும்போது, உங்கள் பிள்ளைக்கு எது சாப்பிட பிடிக்குமோ அதையே அவனோ அவளோ தேர்ந்தெடுக்கும்படி விட்டுவிடுங்கள். b சீக்கிரத்தில் சமைப்பதற்கு ஏற்ற எளிய பதார்த்தத்தை தேர்ந்தெடுங்கள். அவன் நல்லபடியாக செய்துமுடிக்கத் தகுந்த வேலைகள் அதில் அடங்கியிருக்கின்றனவா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை அமைதியிழந்து போவதையும் அலுத்துப்போவதையும் தவிர்க்க, தேவையான உணவுப் பொருட்களிலும் பாத்திரங்களிலும் சிலவற்றை அவன் முன்கூட்டியே எடுத்துவைக்க செய்யுங்கள். சமைக்கும் நேரம் நீண்டுகொண்டேசெல்வதையும் களைப்பூட்டுவதாய் இருப்பதையும் தவிர்க்க, தேவைப்படும் பொருட்களை ஏற்கெனவே நீங்கள் பகுதியளவு தயாரான நிலையில்கூட வைக்கலாம்.
சமையல் குறிப்பை பிள்ளையோடு சேர்ந்து வாசியுங்கள், ஒவ்வொரு வேலையையும் எவ்வாறு செய்வதென்பதைக் காண்பியுங்கள். சமையலறையில் உங்கள் பிள்ளைக்கு ஒரு தனி இடத்தை ஒதுக்குங்கள்; அங்கே ஒருவேளை ஒரு டிராயரும் அதில் ஒருசில கிண்ணங்களும் சில பாத்திரங்களும் இருக்கட்டும், அவனுக்கு ஒரு ஏப்ரனையும் கொடுங்கள். பெண்களின் ஏப்ரனைக் கொடுப்பதற்கு பதிலாக, பையன்களுக்கான ஏப்ரனை அவனுக்கு வாங்கிக்கொடுங்கள். ஆரம்பத்திலிருந்தே, கவனமாக வேலை செய்வதன் அவசியத்தை அழுத்திக்காண்பித்து, சமையலறையில் கடைபிடிப்பதற்கு நியாயமான சட்டதிட்டங்களை ஏற்படுத்துங்கள்.—பக்கம் 18-ல் உள்ள, “முதல் பாடம்—கவனம்,” என்ற பெட்டியைக் காண்க.
எல்லாவற்றிற்கும் மேலாக, வேலையை விரும்பத்தக்கதாக்க முயலுங்கள். பிள்ளை உங்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும்படி விட்டுவிடாதீர்கள்; அவனது கைகளை கழுவச்சொல்லுங்கள்; அவற்றை சமைக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட வையுங்கள். எல்லாவற்றையும் அலசிப்பார்க்கவும் துருவி ஆராயவும் கேள்விகள் கேட்கவும் அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு பதார்த்தம் சரியாக வரவில்லையென்றால் கவலைப்படாதீர்கள். உங்கள் பிள்ளை தானாகவே அதைச் செய்திருக்கும்போது, எப்படியிருந்தாலும் அவனே அதைச் சாப்பிட்டுவிடுவான்!
குடும்பமாக ஒன்றுசேர்ந்திருத்தல்
சந்தேகமில்லாமல், சமையலறையில் நேரம் செலவிடுவதால் வரும் மிகப் பெரிய நன்மைகள் குடும்ப ஐக்கியத்தையும் நெறிகளையும் உட்படுத்துகின்றன. இன்று சில வீடுகளில், குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் உண்மையில் அவ்வளவு தொடர்பு இல்லாதவர்களாய், அவரவர் வேலைகளை மாத்திரமே பார்த்துக்கொண்டு செல்வதை நீங்கள் ஒருவேளை கவனித்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், வீடு வெறுமனே ஒரு ஓய்வு விடுதியாக, சாப்பாட்டு மையமாக ஆகிவிடலாம். அதற்கு மாறாக, ஒன்றுசேர்ந்து சமைக்கும் ஒரு குடும்பம் ஒன்றுசேர்ந்து சாப்பிடும் ஒரு குடும்பமாகவும் ஒன்றுசேர்ந்து சுத்தம்செய்யும் ஒரு குடும்பமாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவரோடொருவர் பேசுவதற்கும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கும் தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வதற்கும் இந்த வேலைகள் எப்போதுமே வாய்ப்புகள் அளிக்கின்றன. “பாத்திரங்களைக் கழுவிய சமயங்கள், என் பையன்களோடு மிக நன்றாக பேச முடிந்த சமயங்களில் சில,” என்பதாக ஒரு தாய் நினைவுகூருகிறாள். ஹர்மன் என்ற ஒரு கிறிஸ்தவ தகப்பன் இவ்வாறு கூடுதலாக சொல்கிறார்: “பாத்திரங்களை கைகளாலேயே கழுவி துடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் வேண்டுமென்றே பல வருடங்களுக்கு டிஷ்வாஷரை வாங்கவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவன் என மாறிமாறி என் மகன்கள் அவற்றைத் துடைக்க வேண்டியிருந்தது. சாவகாசமாய் பேசுவதற்கு இதைப் போன்ற சிறந்த நேரம் வேறெதுவும் இருந்ததில்லை.”
ஆம், வாரக்கணக்காகவும் வருடக்கணக்காகவும் உங்கள் பிள்ளைகளோடு சமையலறையில் நீங்கள் செலவிடும் நேரம், ஆன்மீக நெறிகளிலும் தெய்வீக குணங்களிலும் வளருவதற்கு ஒரு அடித்தளத்தை அளிக்கிறது. சாவகாசமாய் ஒன்றுசேர்ந்து செலவிடும் இப்படிப்பட்ட சமயங்களின்போதுதான், பெற்றோரும் பிள்ளைகளும் இயல்பாகவே மனதைத் திறந்து பேசுவர். பெற்றோரின் முன்மாதிரியும் பிள்ளையின் மனதில் மெல்லமாக பதியும். அப்படிப்பட்ட பயிற்றுவிப்பு வாழ்நாள் முழுவதற்கும் பிள்ளைக்கு நன்மையளிக்கும். ஏனெனில் நீதிமொழிகள் 22:6 இவ்வாறு சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர் வயதிலும் அதை விடாதிருப்பான்.”
ஆகவே ஒரு பெற்றோராக உங்கள் பிள்ளைகளோடு அதிக நேரத்தைச் செலவிட நீங்கள் வழிகளைத் தேடிக்கொண்டிருந்தால், ஒரு கேக் தயாரிப்பதற்கோ சாப்பாடு முழுவதையும் சமைப்பதற்கோ உங்களுக்கு உதவுமாறு ஏன் அவர்களை அழைக்கக்கூடாது? அவர்களோடு சமையலறையில் வேலைசெய்வது, அவர்களுக்கு உணவளிப்பதற்கு மட்டுமல்லாமல் அவர்களை பேணி பயிற்றுவிப்பதற்கும் உதவும் என்பதை நீங்கள் உணருவீர்கள்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தலைப்பின்பேரிலான கலந்தாலோசிப்புக்கு, செப்டம்பர் 8, 1993, விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 26-27-லிலுள்ள “ ‘தரமான நேரம்’ குறைந்த அளவுகளில் பங்கிடப்படுகிறது,” என்ற கட்டுரையைக் காண்க.
b இது முதற்கொண்டு, சுருக்கிச் சொல்வதற்கு, பிள்ளையை “அவன்” என குறிப்பிடுகிறோம். ஆனாலும், இந்தத் தகவல் பெண் பிள்ளைகளுக்கும் சம அளவில் பொருந்தும்.
[பக்கம் 18-ன் பெட்டி]
முதல் பாடம்—கவனம்
கவனமாக வேலைசெய்ய எச்சரிக்கையாயிருங்கள்
• விளையாட்டாக சொல்லாமலும் அதே சமயத்தில் பயமுறுத்தாமலும், சமையலறையில் வேலைபார்ப்பதன் ஆபத்துக்களை விளக்குங்கள்; போக்குவரத்து நெரிசலுள்ள தெருவில் ஜாக்கிரதையாக செல்ல வேண்டியதைப் பற்றி எவ்வாறு விளக்குவீர்களோ அவ்வாறே இதையும் விளக்குங்கள். நீங்களே ஒரு நல்ல முன்மாதிரியை வையுங்கள்.
• பிள்ளைகள் சமையலறையில் வேலைசெய்யும்போதெல்லாம் பெரியவர் ஒருவர் கண்காணிக்கும்படி ஏற்பாடுசெய்யுங்கள். எந்தப் பாத்திரத்தையோ சாதனத்தையோ, முக்கியமாக மின் சாதனங்களை பிள்ளை கவனமாக பயன்படுத்துவான் என்பது நிச்சயமாகத் தெரிந்தாலொழிய அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்.
• சமையலறையை ஒழுங்காக வையுங்கள். சிந்திக்கிடப்பவற்றை சுத்தம்செய்து, அலங்கோலமாக கிடப்பவற்றை உடனடியாக சரிசெய்யுங்கள். நீங்கள் சமைக்கும்போது செல்லப்பிராணிகளையும் கவனத்தை சிதறடிக்கும் மற்றவற்றையும் சமையலறைக்குள் அனுமதிக்கக்கூடாது.
விரல்களைப் பாதுகாத்திடுங்கள்
• எலக்ட்ரிக் மிக்ஸிகள், ஃபுட் ப்ராஸஸர்கள் ஆகியவை பெரியவர்கள் இருக்கும்போது மாத்திரம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். உணவைக் கிளறுவதற்காக சாதனத்தில் ஒரு கரண்டியை உங்கள் பிள்ளை போடுவதற்குமுன் அது ஆஃப் செய்யப்பட்டு பிளக் எடுக்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
• கத்திகளை கூர்மையாக வைத்துக்கொள்ளுங்கள், ஏனெனில் அது மொன்னையாக இருந்தால் அதிகமாக அழுத்தி வெட்டவேண்டியிருக்கும், அப்போது அது நழுவிவிடுவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
• உங்கள் பிள்ளை கத்தியை பயன்படுத்த கற்றுக்கொள்ளும்போது, இந்தப் படிகளை பின்பற்றும்படி சொல்லுங்கள்: (1) கத்தியை அதன் பிடியைப் பிடித்து எடுக்கவும், (2) கத்தியை உணவுப்பண்டத்தின்மீது வைக்கவும், (3) கத்தியின் மறுமுனையின்மீது இன்னொரு கையை வைக்கவும், (4) அதை வெட்டுவதற்கு கத்தியை அழுத்தவும்.
• வெட்டும் பலகையை பயன்படுத்துங்கள். உங்கள் பிள்ளை வெட்ட முயற்சி செய்கையில் காய்கறிகள் உருண்டுவிடாதபடி தடுக்க, முதலில் அவற்றை பாதியாக வெட்டி, தட்டையான பாகத்தை பலகையின்மீது வையுங்கள்.
தீக்காயங்கள் ஜாக்கிரதை
• ஸ்டவ்வுகளையும் அவன்களையும் பயன்படுத்தாதபோது எப்போதும் ஆஃப் செய்துவையுங்கள். துண்டுகள், சமையல் புத்தகங்கள், சூடான பாத்திரங்களுக்குக்கீழ் போடும் துணிகள் போன்றவற்றை அடுப்பின் பக்கத்தில் வைக்காதீர்கள்.
• வாணலியின் கைப்பிடி ஸ்டவ்வின் நடுவே இருக்குமாறு வையுங்கள், அப்போதுதான் அது சுலபமாக தட்டிவிடப்படாமலும் சிந்தாமலும் இருக்கும்.
• உங்கள் பிள்ளை அடுப்பில் வேலைசெய்யும்போது, அவன் உறுதியான, அசையாத பரப்பில் நிற்கிறானா என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.
• சூடான பாத்திரத்தை எங்கே வைப்பதென்று முடிவுசெய்வதற்கு முன் எடுத்து வராதீர்கள். சமையலறையிலுள்ள மற்றவர்களுக்கு நீங்கள் அந்தச் சூடான பாத்திரத்தை எங்கு எடுத்துச் செல்லுகிறீர்கள் என்பதை சொல்லுங்கள், முக்கியமாக நீங்கள் அவர்கள் பின்னால் கொண்டுசெல்ல வேண்டியிருந்தால் அவ்வாறு சொல்லுங்கள்.