இணங்குதல், ஆனால் தெய்வீக தராதரங்களுக்கு கட்டுப்பட்டிருத்தல்
“சகிப்புத்தன்மையுள்ளவர்கள் முட்டாளாய் இருப்பதேயில்லை, முட்டாளாய் இருப்பவர்கள் சகிப்புத்தன்மையுள்ளவர்களாய் இருப்பதேயில்லை” என்கிறது ஒரு சீனப் பழமொழி. இந்தப் பழமொழியில் வெறும் ஒரு குறிப்பை விட அதிக உண்மை அடங்கியிருக்கிறது. ஏனெனில் சகிப்புத்தன்மையுடன் இருப்பது ஒரு சவாலாகவும், சரியான நடத்தைத் தராதரங்களுக்குக் கட்டுப்பட்டிருப்பதைத் தேவைப்படுத்துவதாகவும் இருக்கிறது. ஆனால் எந்தத் தராதரங்களுக்கு நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டும்? மனிதகுலத்தை உண்டாக்கினவரால் ஏற்படுத்தப்பட்டு, அவருடைய வார்த்தையாகிய பரிசுத்த பைபிளில் விளக்கப்பட்டிருக்கும் தராதரங்களைப் பின்பற்றுவது நியாயமானதாய் இருக்காதா? கடவுளே தம்முடைய தராதரங்களைக் கடைப்பிடிப்பதில் மிகச் சிறந்த முன்மாதிரி வகிக்கிறார்.
படைப்பாளர்—நம் மிகச் சிறந்த முன்மாதிரி
சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா, சகிப்புத்தன்மையைக் காட்டுவதில் பரிபூரண சமநிலையுள்ளவர். அவர் மிக அதிகமாகவோ, மிகக் குறைவாகவோ சகிப்புத்தன்மை காட்டுவதில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, தம் நாமத்தை நிந்தித்திருக்கும், மனிதகுலத்தைக் கெடுத்திருக்கும், பூமியைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கும் ஆட்களை அவர் சகித்திருக்கிறார். ரோமர் 9:23-ல் பதிவாகியிருப்பதைப் போல், ‘அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தார்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். ஏன் கடவுள் இவ்வளவு காலமாய் சகித்துவந்திருக்கிறார்? ஏனெனில் அவருடைய சகிப்புத்தன்மைக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.
‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புவதால்’ மனிதகுலத்தோடு கடவுள் பொறுமையுடன் இருக்கிறார். (2 பேதுரு 3:9) மனிதகுலத்துக்கென்று படைப்பாளர் பைபிளைக் கொடுத்திருக்கிறார். தம்முடைய ஊழியர்கள் நடத்தைக்கான தம்முடைய தராதரங்களை எல்லா இடங்களிலும் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பையும் ஒப்படைத்திருக்கிறார். மெய்க் கிறிஸ்தவர்கள் இந்தத் தராதரங்களுக்குக் கட்டுப்பட்டுள்ளனர். ஆனால் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் பிடிவாதமுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா?
உறுதி, ஆனாலும் இணக்கம்
‘இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கும்படி’ நித்திய ஜீவனை நாடுபவர்களை இயேசு கிறிஸ்து உற்சாகப்படுத்தினார். ஆனால் இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிப்பது குறுகிய மனப்பான்மை உடையவர்களாய் இருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. நாம் பிறரோடு இருக்கையில், வீறாப்பாகவோ ஆணவமாகவோ இருக்கும் மனச்சாய்வுள்ளவர்கள் என்றால், இந்த மனப்போக்கை விட்டுவிடுவது எல்லாருடைய வாழ்க்கையையுமே அதிக இனிதாக்கும். ஆனால் எப்படி?—மத்தேயு 7:13; 1 பேதுரு 4:15.
வெவ்வேறு பின்னணியுள்ளவர்களுடன் நேரத்தைச் செலவிட்டது அவர்களை நன்கு புரிந்துகொள்ள வழிநடத்தியதாக விளக்கின தியாஃபானோ என்ற ஒரு கிரேக்க மாணவர், “நாம் சிந்திக்கும் விதத்தில் அவர்களைச் செய்ய வற்புறுத்துவதற்கு மாறாக, அவர்கள் சிந்திக்கும் விதத்தில் நாம் செய்ய முயலுவது அவசியம்” என்று கூறினார்.
ஆகவே, ஒருவரை நன்கு புரிந்துகொள்வதன் மூலம், உணவில் அவருக்கு இருக்கும் விருப்புவெறுப்புகளும், அவர் பேசும் முறையும்கூட, நாம் நினைத்ததைப் போல் நூதனமானதாய் இல்லாமலிருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம். நாமே அதிகத்தைப் பேசி, நாம் சொல்வதுதான் சரி என்று கடைசிவரை வற்புறுத்துவதற்கு மாறாக, அவருடைய நோக்குநிலைக்கு செவிகொடுத்துக் கேட்பதன் மூலம் பயனுள்ள பலவற்றை நாம் கற்கிறோம். உண்மையில், திறந்த மனமுள்ளவர்கள் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
தனிப்பட்ட விருப்புவெறுப்புகள் எப்பொழுதெல்லாம் உட்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் நாம் இணக்கமாய் இருக்கவும், மற்றவர்கள் தங்கள் சொந்தத் தெரிவுகளை அனுபவிக்க அனுமதிக்கவும் வேண்டும். ஆனால் நடத்தையானது நம் சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிவதைச் சார்ந்திருக்கும் ஒரு விஷயமாய் இருக்கும்போது, நாம் உறுதியுடன் இருக்க வேண்டும். சர்வவல்லமையுள்ள கடவுள் எல்லா வகையான நடத்தையையும் பொறுத்துக்கொள்ளுவதில்லை. கடந்த காலங்களில் தம்முடைய ஊழியர்களுடன் அவர் நடந்துகொண்ட விதங்களிலிருந்து இதை அவர் காட்டினார்.
மிதமிஞ்சி சகிப்புத்தன்மை காட்டுவதாகிய கண்ணி
பண்டைய இஸ்ரவேல் தேசத்தில் ஒரு பிரதான ஆசாரியனாய் சேவித்துவந்த ஏலி, கடவுளுடைய ஓர் ஊழியனாய் இருந்தார். அவர் மிதமிஞ்சி சகிப்புத்தன்மை காட்டுவதாகிய கண்ணியில் சிக்கிக்கொண்டார். இஸ்ரவேலர், கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை ஒப்புக்கொண்டு, அவருடன் ஓர் உடன்படிக்கை உறவுக்குள் இருந்துவந்தனர். ஆனால் ஏலியின் இரண்டு குமாரர்கள் ஓப்னியும் பினெகாஸும் பேராசையுள்ளவர்களாயும் ஒழுக்கங்கெட்டவர்களாயும் இருந்தனர். சர்வவல்லமையுள்ளவருக்கு படுமோசமான விதத்தில் அவமரியாதை காட்டுபவர்களாய் இருந்தனர். கடவுளுடைய சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், ஏலி அவர்களை மென்மையாக மட்டுமே திட்டி, சிட்சை கொடுக்கும் விஷயத்தில் மிகவும் கண்டிப்பற்றவராகவே இருந்தார். கடவுள் பொல்லாங்கைச் சகித்துக்கொள்வார் என்று சிந்திக்கும் தவற்றை அவர் செய்தார். படைப்பாளருக்கு, பலவீனத்துக்கும் பொல்லாங்குக்கும் இடையே இருக்கும் வேறுபாடு நன்கு தெரியும். கடவுளுடைய சட்டத்தை வேண்டுமென்றே நிராகரித்ததால், ஏலியின் பொல்லாத குமாரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்—அந்தத் தண்டனை சரியானதே.—1 சாமுவேல் 2:12-17, 22-25; 3:11-14; 4:17.
நம் குடும்பத்தில், நம் பிள்ளைகளுடைய பங்கில், திரும்பத்திரும்பச் செய்யும் தவற்றைக் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மூலம் நாம் மிதமிஞ்சி சகிப்புத்தன்மையைக் காட்டுவது எவ்வளவு விசனகரமானதாய் இருக்கும்! அவர்களை “கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” வளர்ப்பது எவ்வளவு சிறந்ததாய் இருக்கும்! நடத்தையைக் குறித்த தெய்வீக தராதரங்களுக்கு இசைய நாம் வாழ்வதையும் நம் பிள்ளைகளுக்கும் அவற்றைத் திரும்பத்திரும்ப கற்பிப்பதையும் இது அர்த்தப்படுத்துகிறது.—எபேசியர் 6:4.
அதைப் போலவே, கிறிஸ்தவ சபை பொல்லாங்கை சகிக்க முடியாது. சபையின் ஓர் உறுப்பினர் படுமோசமான தவற்றைச் செய்து, மனந்திரும்ப மறுத்தால், அவர் நீக்கப்பட வேண்டும். (1 கொரிந்தியர் 5:9-13) என்றபோதிலும், குடும்ப வட்டாரம் மற்றும் சபைக்கு வெளியேயும் மெய்க் கிறிஸ்தவர்கள் முழு சமுதாயத்தையும் மாற்ற முயலுவதில்லை.
யெகோவாவுடன் ஒரு பலமான உறவு
சகிப்புத்தன்மையின்மை கவலையான ஒரு சூழலில் உருவாகிறது. என்றபோதிலும், கடவுளுடன் ஒரு நெருக்கமான தனிப்பட்ட உறவை வைத்துக்கொண்டால், சரியான சமநிலையைக் காத்துக்கொள்ள நமக்கு உதவும் பாதுகாப்பு உணர்வை நாம் அனுபவிப்போம். “கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்” என்று நாம் நீதிமொழிகள் 18:10-ல் வாசிக்கிறோம். நிச்சயமாகவே, படைப்பாளர் தக்க சமயத்தில் அக்கறை கொள்ள முடியாதபடி நமக்கோ நமக்குப் பிரியமானவர்களுக்கோ வரக்கூடிய தீங்கு எதுவுமே இல்லை.
கடவுளுடன் ஒரு நெருங்கிய உறவு வைத்திருந்ததால் அதிகளவு நன்மையடைந்த ஒருவர் அப்போஸ்தலனாகிய பவுல். சவுல் என்று அறியப்பட்டிருந்த ஒரு யூதனாக, அவர் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை துன்புறுத்தினார். மேலும் இரத்தப்பழிக்கும் ஆளானார். ஆனால் சவுலே ஒரு கிறிஸ்தவராக ஆனார். அப்போஸ்தலனாகிய பவுலாக, பின்பு முழுநேர ஊழியத்தில் ஈடுபட்டுவந்தார். எல்லாவித ஜனங்களாகிய “கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும்” பிரசங்கிப்பதில் திறந்த மனமுள்ளவராய் இருந்ததைப் பவுல் காட்டினார்.—ரோமர் 1:14, 15; அப்போஸ்தலர் 8:1-3.
அவரால் எப்படி மாற்றிக்கொள்ள முடிந்தது? வேத வசனங்களைப் பற்றி ஒரு திருத்தமான அறிவைப் பெறுவதன் மூலமாகவும், பட்சபாதமில்லாத படைப்பாளருக்கான அன்பில் வளருவதன் மூலமாகவுமே. கடவுள் ஒவ்வொரு தனிநபரையும் நியாயந்தீர்க்கும் விஷயத்தில் பட்சபாதமில்லாமல் இருக்கிறார் என்றும், பண்பாடு அல்லது இனத்தின்படி அவர் நியாயந்தீர்க்காமல், அவன் அல்லது அவள் என்னவாயிருக்கிறார் மற்றும் என்ன செய்கிறார் என்பதன் அடிப்படையில் நியாயந்தீர்க்கிறார் என்றும் பவுல் கற்றுக்கொண்டார். ஆம், கடவுளுக்கு செயல்களே முக்கியமானவை. “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும்” பேதுரு அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 10:34, 35) சர்வவல்லமையுள்ள கடவுளுக்குத் தப்பெண்ணமில்லை. உலகத் தலைவர்களில் சிலர் தங்கள் சொந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக வேண்டுமென்றே சகிப்புத்தன்மையின்மையைப் பயன்படுத்தக்கூடிய விஷயத்திலிருந்து இது வேறுபட்டிருக்கிறது.
காலம் மாறிவருகிறது
இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் கிரே கூறுவதன்படி, சகிப்புத்தன்மை என்பது, “சமீபத்தில் அரிதாகிவிட்டிருக்கும் ஒரு நற்குணம்.” ஆனால் இது மாறும். தெய்வீக ஞானத்தால் சமநிலைப்படுத்தப்பட்ட சகிப்புத்தன்மையே வெற்றிபெறும்.
வரவிருக்கும் கடவுளுடைய புதிய உலகில், சகிப்புத்தன்மையின்மை இல்லாமல் போய்விடும். தப்பெண்ணம், வெறி போன்ற சகிப்புத்தன்மையின்மையின் மிதமிஞ்சிய நிலைகள் இல்லாமல் போய்விடும். குறுகிய மனப்பான்மை இனிமேலும் வாழ்விலிருந்து பெறவிருக்கும் இன்பத்தை நெருக்கிப்போடாது. பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் எக்காலத்திலும் சாத்தியமாய் இருந்திருக்கும் பரதீஸை விட மகத்தான பரதீஸ் அங்கு இருக்கும்.—ஏசாயா 65:17, 21-25.
நீங்கள் அந்தப் புதிய உலகில் வாழ எதிர்நோக்குகிறீர்களா? அது எப்பேர்ப்பட்ட சிலாக்கியமாகவும் கிளர்ச்சியாகவும் இருக்கும்!
[பக்கம் 8-ன் படம்]
அப்போஸ்தலனாகிய பவுல் கடவுளுடன் உறவு வைத்திருந்ததால் சரியான சமநிலையைக் காட்டினார்