உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 3/22 பக். 24-27
  • கடல்-ஏற்ற நெரிசல் நேரம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடல்-ஏற்ற நெரிசல் நேரம்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கழிமுகங்களின் முக்கியத்துவம்
  • ஓதப்பெருக்கு
  • அதிகரிக்கும் கடல்-ஏற்றம்
  • நெரிசல் ஆரம்பிக்கிறது
  • தங்குமிடம்
  • நீர்ப்பறவைகள் உலகம் சுற்றுவதில் வல்லவர்கள்
    விழித்தெழு!—2006
  • நடக்கும் மீனை எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
    விழித்தெழு!—1999
  • ஆர்மெரோ நிலப்படத்திலிருந்து மறைந்துவிட்டது!
    விழித்தெழு!—1987
  • பறவைகளைப் பார்வையிடுதல்—எல்லாருக்குமே இனியதோர் விருப்பவேலையா?
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 3/22 பக். 24-27

கடல்-ஏற்ற நெரிசல் நேரம்

பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்

சுமார் ஒரு கோடி பறவைகள் வடமேற்கு ஐரோப்பாவுக்கு வந்து ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தை அனுபவிக்கின்றன. அவை ஆர்க்டிக் இனப்பெருக்கப் பகுதியிலிருந்து மட்டும் வருவதில்லை, கனடா, மத்திப சைபீரியா ஆகிய தொலைதூரப் பகுதிகளிலிருந்தும் வருகின்றன. அவை ஆப்பிரிக்காவுக்கு வரும் வழியில், இன்னும் பல பறவைகள், பிரிட்டிஷ் தீவுகளின் இடப்பெயர்ச்சி வழியில் கிழக்கு அட்லான்டிக் தடத்தில் குவிகின்றன.

இரையும் ஓய்வெடுக்க உதவும் புகலிடங்களும், பிரிட்டிஷாருக்குச் சொந்தமான கடல்நீரில் வரிசையாக அமைந்துள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய கழிமுகப்பகுதிகளில் கிடைக்கின்றன. இக் கழிமுகப்பகுதிகள் ஒவ்வொன்றிலும் 20,000-க்கும் மேற்பட்ட பறவைகளின் விருப்பத்திற்கேற்ற இரை கிடைக்கிறது. ஆனால் அவற்றுள் மிக முக்கியமானது எதுவென்றால், இங்கிலாந்தின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் அமைந்துள்ள தி வாஷ் கழிமுகப்பகுதி. இது 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு—குதிரை மலை கோட்டான்கள் (curlews), டன்லின்கள் (dunlins), காட்விட்டுகள் (godwits), நாட்டுகள் (knots), ஆளி பிடிப்பான்கள் (oystercatchers), ஆட்காட்டி குருவியினத்தைச் சேர்ந்த பறவை வகைகள் (plovers), சிகப்பு கால் உள்ளான்கள் (redshanks), கோட்டான்கள் (turnstones) உள்ளிட்ட பறவைகளுக்கு—விருந்தளிக்கிறது. கழிமுகப்பகுதிகள் எவ்வகை இரைகளை உணவாக அளிக்கின்றன, ஏன் அவை அவ்வளவு முக்கியமானவை?

கழிமுகங்களின் முக்கியத்துவம்

கழிமுகங்கள் என்பவை, பகுதியளவு மூடப்பட்ட கடற்கரையோரப் பகுதிகள் ஆகும். இங்கு கடல் நீர் நன்னீருடன் கலக்கிறது. தாது உப்புக்களையும் கரிம சத்துப்பொருட்களையும் அதிகளவாய் உடைய, இங்கிருக்கும் வெதுவெதுப்பான நீர்நிலைகள், உலக பெருங்கடல்களில் வாழும் உயிரினங்களில் பகுதியளவானவை உயிர்வாழத் துணைபுரிகின்றன. இறால்களும் கடற்கரைச் சிறு நண்டு வகைகளும் பிற உயிரினங்களும் மணலில் காணப்படுகின்றன, ஆனால் கழிமுகச் சேறு அதைக்காட்டிலும் அதிகளவான உயிரினங்களுக்குத் துணைபுரிகிறது.

சேற்றின் வகை, அது உண்டாக்கப்பட்ட வண்டல்களின் அளவுக்குத் தகுந்தாற்போல் மாறுபடுகிறது. ஒவ்வொரு வகை சேற்றிலும் அதற்கே உரிய விசேஷித்த கடல்வாழ் உயிரினங்கள் இருக்கின்றன, அவற்றையே நீர்ப் பறவைகள் (waders) உண்ணுகின்றன. a உதாரணமாக, ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள ஒருவகை சேற்றில், மூன்று மில்லிமீட்டர் நீள சிறுசிறு நத்தைகள் லட்சக்கணக்கிலும்கூட இருக்கலாம்! அதோடு, முதுகெலும்பற்ற பிற பிராணிகளோடு சேர்ந்து, மெல்லுடலிகளும் மீனுக்கு உணவாகப் பயன்படும் மீன் புழுக்களும் (lugworms) ரேக் புழுக்களும் (rag worms) இந்தச் சேற்றில் வசிக்கின்றன.

ஓதப்பெருக்கு

ஒரு கழிமுகப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான நீர்ப் பறவைகள் இருந்தாலும், அவற்றை அடையாளம் கண்டுகொள்வது கடினம். ஏனெனில் பொதுவாக அவை பரவலான பகுதிகளில் ஆங்காங்கே சிதறியிருக்கின்றன. என்றாலும், ஓதப்பெருக்கு ஏற்படும்போது, சூழ்நிலை திடீரென்று மாறிவிடுகிறது. சட்டென்று அலையலையாய் மேலெழும்பும் நீர், அந்த மணலையும் சேற்றுப் பரப்பையும் மூடிவிடுகிறது, அப்போது நீர்ப் பறவைகள், நிலப்பகுதிகளுக்கும் பிற மேடான பகுதிகளுக்கும் மாறிச்செல்ல கட்டாயப்படுத்தப்படுகின்றன. b அவை பெருங்கூட்டமாய்க் கூடிவந்து அங்கே தங்கிவிடும்போது, அதற்குப் பிறகு அவற்றைப் எளிதாய்ப் பார்க்க முடிகிறது.

இன்று, சூரிய ஒளி பிரகாசிக்கும் ஏப்ரல் மாத காலை வேளை, ஓதப்பெருக்கு ஏற்படும் நாள். ஆல்ட் நதி இங்கிலாந்தின் ஆட்சியெல்லைக்குட்பட்ட ஸஃபக் நகரின் வழியே வளைந்தோடி, வட கடலில் கலக்கும் ஒரு சிறிய அழகிய கழிமுகப் பகுதிக்கு நாங்கள் வாகனத்தை ஓட்டிச்செல்கையில் வடகிழக்குத் திசையிலிருந்து குளிர்காற்று சில்லென வீசிக்கொண்டிருக்கிறது. இங்கே, குளிர்காலத்தை அனுபவிக்கும் நீர்ப் பறவைகளின் உச்சநிலை எண்ணிக்கை 11,000-ஐயும் தாண்டிச் செல்கிறது; இந்தக் கழிமுகப் பகுதியின் அகலம் 0.8 கிலோமீட்டராகவே இருப்பதால் இந்தப் பறவைகளின் நடமாட்டத்தைப் பார்ப்பது எங்களுக்கு எளிதாயிருக்கும்.

இந்த நதி பாயும் வழியெல்லாம் கடல் நீரைத் தடுத்துக் காக்கும் வகையில் வெவ்வேறு தடைப் பொருட்கள் இருக்கின்றன. கரையோரங்கள் சிலவற்றை நாணல்கள் மூடியிருக்கின்றன, மற்றவற்றை மாரம் புல் (marram grass) மூடியிருக்கிறது. மீதமானவற்றை தேய்ந்துபோன கரிய மரக்கட்டைகளும் கற்களும் நிரப்பியிருக்கின்றன. இந்நதிக்கு எதிர்த்திசையில், விக்டோரியா மகாராணியின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த கட்டடங்களுக்கு இடையில், ஆல்ட்பரா இசைத் திருவிழா நடைபெறும் ஸ்நேப் மால்ட்டிங்ஸ் இசை அரங்கம் உள்ளது. ஆனால் நாங்களோ இந்நதி பாயும் திசையிலேயே நடந்து சென்று, ஒரு பாதுகாப்பான இடத்திற்கு விரைந்துசெல்ல வேண்டும். அந்தக் காற்று இப்போது கடுங்குளிர் காற்றாய் வீசுகிறது, சீக்கிரத்தில் எங்கள் கண்கள் வலிக்கப் போகின்றன.

நதியின் கரைக்கு நாங்கள் போய்ச் சேர்ந்தவுடனே, (படத்தைக் காண்க, இடம் அ) கூனி அரிக்கிச்சான் (Avocet) ஜோடி ஒன்றின் தெளிவான இனிய பாடல் எங்களை வரவேற்கிறது. நாங்கள் நிற்கும் கழிமுகப் பகுதியின் பக்கத்திலிருந்து 40 மீட்டர் தொலைவுக்குள்தான் அவை இருக்கின்றன; அவை இணை சேரும் தருணத்தில் வழக்கமாய்ச் செய்யும் செயலான, இறகை அலகால் கோதிவிடும் பரஸ்பர செயலில் (mutual pair-bond preening) ஈடுபட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் அதன் மார்பின் மேற்புறப் பக்கங்களின் நுனிப்பகுதியை அதன் மெலிந்த, மேல்நோக்கி வளைந்த அலகால் செல்லமாகக் கடிக்கிறது. இது கண்கொள்ளாக் காட்சியாகும், ஆனால் இன்னும் அதிகத்தைப் பார்க்க வேண்டியிருப்பதால், நாங்கள் நிற்காமல் நடக்க வேண்டும்.

அதிகரிக்கும் கடல்-ஏற்றம்

கடல்-ஏற்றம் இப்போது தீவிரமாய் அதிகரித்து வருகிறது, ஆகவே நாங்கள் கண்டுகளிக்கத் தெரிந்தெடுத்திருந்த இடத்துக்கு வேகமாய் மாறிச் செல்கிறோம். (படத்தைக் காண்க, இடம் ஆ.) வழியில் சிகப்பு கால் உள்ளான் பறவையொன்று—அந்தக் கழிமுகத்தின் காவற்காரன் என்ற தன் பெயருக்கு ஏற்றாற்போல் வாழ்வதாய்—கடல் நீர் புகுந்திருந்த இடத்திலிருந்து எழும்பி, “டூஹூஹூ-டூஹூஹூ!” என்ற கிறீச்சென்ற குரலில் எச்சரிப்பு ஒலியை எழுப்புகிறது! அதன் சிகப்பு நிற கால்கள், சூரிய ஒளியில் மினுமினுக்கும் அதன் இறக்கையின் வெள்ளை நிற நுனிப்பகுதிக்கு முரண்பட்ட நிறமாய்த் தெரிகின்றன. நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்தபோது, மணலும் சேறும் கலந்த தரைகள் வேகமாய் மறைந்துவருவதை விரைவாகவும் அதே சமயத்தில் நுட்பமாகவும் பார்க்கிறோம்.

தூரத்தில், அநேக சிகப்பு கால் உள்ளான் பறவைகள் மெதுவாக சேற்றைக் கிளறிப் பார்த்து, நிதானமாய் இரை தேடிக்கொண்டிருக்கின்றன, அதே சமயத்தில் மற்றவை இன்னும் பாதுகாப்பான கூம்புப் பகுதிகளில் இரை தேடுகின்றன. டன்லின்கள், அவற்றின் சிறப்பம்சமான, கீழ்நோக்கி வளைந்த அலகுகளுடன், சிறுசிறு தொகுதிகளாக ஒன்றோடொன்று நெருங்கியிருக்கின்றன. அவை, கரையோரத்தை விட்டு இங்குமங்குமாய்ப் போய்விடாமலிருக்க, அந்தச் சேறு நெடுக இப்படியும் அப்படியுமான வரிசையில், வெகுவேகமாய்த் தங்கள் வயிற்றுப் பாட்டைப் பார்க்கின்றன. சிதறியிருக்கும் குதிரை மலை கோட்டான்கள் மிருதுவான உப்புப் படிவுகளைக் கவனமாய்க் கிளறிப் பார்த்துக்கொண்டே ஆடியசைந்து வந்துசேருகின்றன. நதிக்கு எதிர்த்திசையில், ஒரு ஜோடி கோட்டான்கள், அவற்றின் குட்டையான, இலேசாக மேல்நோக்கி வளைந்த அலகுகளால் இரை தேடிக்கொண்டு இருக்கின்றன. அவற்றின் அலகுகள் அவ்வாறு இருப்பதற்குக் காரணம், இப்போதிருக்கும் கடற்கரைக்கு முந்தினதில் கடல்-ஏற்ற குப்பைக்கூளங்களைக் கிளற வசதியாய் இருக்கவே.

திடீரென்று, சாம்பல்நிற ஆட்காட்டி குருவியினப் பறவை இருப்புக்கொள்ளாமல், ஏக்கத்துடன் அடித்த “ட்லீ-யூ-யீ” என்ற முவ்வசை சீட்டி ஒலி காற்றை நிரப்புகிறது. அந்தப் பறவை மேலே பறக்கையில், அதனுடைய சிறகுகளின் அடிப்புறத்திலுள்ள கறுப்பு நிறம், உடற்பகுதியிலுள்ள மங்கிய நிறத்தை எடுப்பாய் எடுத்துக் காட்டுகிறது. பொன்னிற ஆட்காட்டி குருவியினத்தைச் சேர்ந்த பறவைகளில் நானூறு பறவைகள் ஒரு நீள்வட்ட வடிவில் குழுமியிருக்கின்றன; அவை தம் தலையை சிறகுக்குள் வைத்து ஓய்வெடுக்கின்றன; எல்லா பறவைகளுமே காற்றடிக்கும் திசையைப் பார்த்த வண்ணம் நிற்கின்றன. எந்தப் பறவை மற்றப் பறவையை அதன் செதிலில் கொத்த வேண்டும் என்ற ஒழுங்குமுறையை உறுதி செய்வதில் எப்பொழுதாவது ஜோடிகளுக்குள் போட்டி ஏற்படுகிறது. பெரும்பாலானவை இன்னும் அவற்றின் புள்ளிபுள்ளியான குளிர்கால இறகுகளில்—பொன்னிறமும் அடர்த்தியான நிறமுமுடைய மேற்பகுதிகளுடனும், மங்கிய நிறம் சுற்றியிருக்கும் கண்களுடனும், முகத்துடனும், அடிப்பக்கத்துடனும்; கறுப்பு அலகுடனும்—இருக்கின்றன. எங்கள் தொலைநோக்கியின் தூரத்தைச் சரிசெய்து பார்க்கையில், சின்ன கோட்டான் (ringed plover) பறவைகள் இருப்பதையும் நாங்கள் பார்க்க முடிகிறது.

பரம்பியிருக்கும் கூட்டமாய், சுமார் 1,000 ஆள்காட்டிகள் (lapwings) திடீரென்று எங்கிருந்தோ வந்துசேருகின்றன. அவிழ்த்துவிடப்பட்டவற்றைப் போன்ற மகிழ்ச்சித் திளைப்பில், அவற்றிற்கே உரிய பிரத்தியேக முறையில் வானில் பறந்துவந்து இறங்குகின்றன. ஆள்காட்டிகளும் பொன்னிற ஆட்காட்டி குருவியினங்களும் அவற்றிற்குப் பிடித்தமான இரை கிடைக்கும் பகுதியான, மேற்குத் திசையில் உள்ள விளைநிலத்தில் வந்திறங்கி இருக்கின்றன. அவை, வெறுமனே இரை தேடுவதற்காக மட்டுமல்லாமல் நீராடவும் அவற்றின் இறகுகளைக் கோதிவிடுவதற்குமே கழிமுகப்பகுதிக்கு வருகின்றன.

முக்கியமாய் அங்குக் கேட்கப்படும் பின்னணி ஓசை, குதிரை மலை கோட்டான்கள் எழுப்பும் நீர் பாய்வதையொத்த ஒலியாலும், சிகப்பு கால் உள்ளான் பறவைகள் எழுப்பும் மிகவும் திருப்திகரமான இசை போன்ற சீட்டி அடிப்பதையொத்த ஒலியாலும், கறுப்புத்தலையுடைய கடற்காக்கைகள் எழுப்பும் கிறீச்சொலியாலும் ஏற்படுகிறது. விசிறி-வால் காட்விட் பறவைகள் இரண்டு, சேற்றை ஆழமாய்க் கிளறுகின்றன. ஆளி பிடிப்பான்கள், அவற்றின் கெட்டியான இளஞ்சிகப்பு அலகுகளைக் கொண்டு மீன் புழுக்களை இழுத்துக்கொண்டிருக்கின்றன. தனிமையிலிருக்கும் சாம்பல் நிற ஆட்காட்டி குருவியினப் பறவையொன்று, கம்பீர நடை நடந்து நிற்கிறது, வலது காலை ஆட்டுகிறது, பிறகு அதன் இரைக்குப் பின்னே சென்று விழுங்குகிறது. ஆனால் வந்துகொண்டிருக்கும் ஏற்றம் இவையனைத்தையும் விரைவில் விஞ்சிவிடுகிறது!

நெரிசல் ஆரம்பிக்கிறது

திடீரென்று, அந்தப் பறவைகள் பெரும்பாலும் தங்கள்தங்கள் இனத்துடன் சேர்ந்தே கூட்டம்கூட்டமாக மேலெழுகின்றன. அந்த நீர்ப் பறவைகள் நெருக்கமாய் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட வடிவமைப்பில் பறப்பது, கண்கவர் காட்சியாய் இருக்கிறது. பக்கவாட்டில் அவ்வப்போது இப்படியும் அப்படியுமாக சாயும்போது, சூரிய ஒளி அவற்றின்மேல் வர்ணஜாலம் புரியும்போது, அதற்கேற்றாற்போல் அந்தப் பறவைக் கூட்டத்தின் நிறம்—அடர்ந்த பிரௌன் நிறத்திலிருந்து ஒளிவீசும் வெள்ளியைப் போன்ற வெண்மை நிறத்துக்கு—மாறுகிறது. ஒருகணம் தெள்ளத்தெளிவாய்ப் பார்க்க முடிந்ததாகவும் மறுகணமோ, வந்துகொண்டிருக்கும் சேறு நிறைந்த கடல்-ஏற்றத்தின் பின்னணியோடு ஒன்றிப்போய்விடும் அளவுக்கு ஆகிவிடுவதாகவும் இருக்கின்றன. பிறகு, ஒழுங்கான விதத்தில் மாறிமாறி, கருமை நிறத்திலிருந்து வெள்ளி நிறமாயும், வெள்ளி நிறத்திலிருந்து கருமை நிறமாயும், அதே சமயத்தில், அவை பறக்கும் வடிவமைப்பும் மாறிமாறி அமைகின்றன—ஒன்றுபோல் இல்லாத நீள்வட்ட வடிவிலிருந்து வட்ட வடிவமாகவும், பிறகு சுருள்சுருளாகவும், முடிவாக ஒரு நேர் கோடாகவும் மாறுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை, அந்த ஏற்றத்தால் இன்னும் மூடப்படாதவையாய், சேற்றுத் தரைக்கு மீண்டும் திரும்புகின்றன.

சீக்கிரத்தில், எங்களைச் சுற்றிலும் இருந்த சேறும் மணலும் கலந்த தரைகளை வெள்ளம் மூடவிருப்பதால், அந்த ஆறு பாயும் திசைக்கு எதிர்த்திசையில் வெளியேறுகிறோம். எங்களைப் பின்தொடர்ந்து நீர்ப் பறவைகளும் கூட்டம்கூட்டமாய் வருகின்றன. எங்களை முந்திக்கொண்டு முதலில் செல்வது மிகச் சிறிய டன்லின் பறவைகளின் சிறுசிறு கூட்டமாகும். அவற்றின் சிறகுகளை வேகவேகமாய் அடித்துக்கொண்டும், அவற்றின் சுருக்கமான, கிறீச்சொலியுடைய விசிலை அவ்வப்போது அடித்துக்கொண்டு ஒன்றோடொன்று தொடர்பு வைத்துக்கொண்டும் செல்கின்றன. பிறகு பெரிய, சிவப்பு கால் உள்ளான் பறவைகள் எங்களைக் கடந்து செல்கின்றன; அவற்றின் கூட்டம் விரிந்து பரவலாகவும், கம்பீரமான தோற்றத்துடனும் பறக்கிறது. பெரிய கடற்காக்கை அளவான குதிரை மலை கோட்டான்கள் பறந்துசெல்கின்றன. இனிய, குழலோசையைப் போன்றதாயும் நீர் மென்மையாய்ப் பாய்வது போன்றதாயும் உள்ள ஒலியை எழுப்பிக்கொண்டே அவை பறந்துசெல்கின்றன. அதைத் தொடர்ந்து பறப்பவை, கூனி அரிக்கிச்சான்கள். அவை ஒரு பெருங்கூட்டமாய், நீல வானின் நிறத்துக்கு முரண்பட்ட கறுப்பு வெள்ளை நிறத்தில் இருக்கின்றன. அவை அந்தக் கழிமுகத்தின் மேற்பகுதியில் ஓய்வெடுக்கின்றன, அவற்றின் நீண்ட, சிலேட்டு நிறத்தையொத்த நீல நிறக் கால்கள் நீருக்கு சற்று வெளியே தெரிகின்றன.

தங்குமிடம்

அந்தக் கழிமுகப்பகுதி குறுகும் இடமான ஓர் உயர்வான இடத்தை அடைவதற்காக நாங்கள் வேகவேகமாய் நடந்து செல்கிறோம். (படத்தைக் காண்க, இடம் இ.) எதார்த்தத்தில், பறவை இனங்கள் ஒன்றோடொன்று சேர்ந்தே இருக்க விரும்புகின்றன. கடல்-ஏற்றம் சுழன்று சுழன்று தொடர்ந்து அதிகரித்து வருகையில், அந்தக் கூட்டத்தோடு அதிக பறவைகள் சேர்ந்துகொள்கின்றன. கரைகளில் பிந்தி வந்துசேருபவை தங்குவதற்குத் தேவையான இடத்தைக் கண்டுபிடிப்பது சிரமமாய் இருப்பதால், அவை மாறிமாறி நிற்க வேண்டியதாகிறது.

இப்போது அந்தக் கடல்-ஏற்றம் வந்துவிடப்போகிறது. ஆட்காட்டி குருவியினப் பறவைகளும் கோட்டான்களும் விளைநிலத்திற்குப் பறந்துசென்றிருக்கின்றன. மீந்திருக்கும் அனைத்துப் பறவைகளும் முன்பிருந்த ஆற்றங்கரைகளுக்குப் போய்த் தங்குவதற்காக சேற்றைவிட்டு இடம்மாறிச் செல்ல வற்புறுத்தப்பட்டிருக்கின்றன. ஆளி பிடிப்பான்கள் எழுப்பும் ஓசை அவற்றின் எண்ணிக்கைக்கு மிஞ்சியதாய் தொடர்ந்து அதிகரிக்கின்றன. சிகப்பு கால் உள்ளான் பறவைகளும் குதிரை மலை கோட்டான் பறவைகளும் அந்தப் பின்னணி ஓசையை அதிகரிக்கின்றன. இப்போது அது, மேலே பறந்து செல்லும் ஒரு வானம்பாடியின் பாடலின் ஒலியையும் விஞ்சிச் செல்கிறது—உண்மையிலேயே அதிசயிக்கத்தக்க ஒரு சூழல்.

நீர்ப் பறவைகள் பிற்பகல் நேரத்தில் அவற்றுக்குத் தேவையான ஓய்வை, ஓதப்பெருக்கில் பங்குகொள்ளாமல் அதற்கு வெளியிலிருந்து அனுபவித்துக்கொண்டிருக்கையில், நாங்கள் அந்த இடத்தைவிட்டுக் கிளம்புகிறோம். சில பறவைகள் கடல் தடுப்புச்சுவருக்குப் பின்னால் இருப்பதால் நீரைப் பார்க்க முடியாது என்பது உண்மையானாலும், அவற்றின் சேற்றுத் தரைக்கோ அல்லது மணற்பாங்கான கரைகளுக்கோ எப்போது திரும்பிவருவது என்று அவற்றுக்குத் தெரியும். அந்த ஏற்றங்கள் எப்போது வரும் என்பதைப் பற்றியெல்லாம் திட்டவட்டமான நேரக் கணிப்பாளர்களாகவும் உள்ளுணர்வு ஞானத்தையுடையவையாயும் இருக்கும் அவற்றுக்குத் தெரியும்.

ஆம், கடல்-ஏற்ற நெரிசல் நேரம் பார்ப்பதற்கு, விசேஷமாக முதன்முதலாய்ப் பார்க்கும்போது கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது!

[அடிக்குறிப்புகள்]

a ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் நீரில் நடந்து இரைதேடும் நீர்ப் பறவைகள் (waders), (காரடிரியைஃபார்மஸ் வரிசை [order Charadriiformes]) கரையோரப் பறவைகள் (shorebirds) என்று நன்றாய் அறியப்படுகின்றன.

b  கடல்-ஏற்றங்களால் தவறாமல் வெள்ளப் பெருக்கெடுக்கும் நிலப்பகுதி.

[பக்கம் 26-ன் பெட்டி/படம்]

நெரிசல்நேர காட்சியைக் கண்டு களிப்பீர்

நெரிசல் நேர காட்சியொன்றைக் கண்டுகளிக்க, முதலில் ஒரு சௌகரியமான கழிமுகப் பகுதியைக் கண்டுபிடியுங்கள். பிறகு, நீர்ப் பறவைகள் எங்குப் போகும், அவற்றை எங்கிருந்து பார்க்க வேண்டும் என்பது போன்ற, அந்தப் பகுதியைப் பற்றி ஓரளவு விஷயத்தை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அமாவாசை அல்லது பௌர்ணமியை அடுத்து ஏற்படும் ஓதப்பெருக்கத்தைப் பற்றி விவரிக்கும் கடல்-ஏற்ற அட்டவணைகளைப் பாருங்கள். பறவைகளை திருப்தியாகக் கண்டுகளிப்பதற்கென, பயண நேரத்தோடு சேர்த்து கூடுதலாக மூன்று மணிநேரத்தை ஒதுக்குங்கள். கடல்-ஏற்றம் ஏற்படுவதற்கு இரண்டு மணிநேரத்துக்கு முன்பாகவாவது போய்ச் சேர்ந்துவிடுங்கள்.

உங்களுக்கு எப்படிப்பட்ட சாதனங்களெல்லாம் தேவைப்படும்? நீர்ப் பறவைகளைப் பற்றி உங்களுக்கு விவரம் தெரியாமல் இருந்தால், அவற்றைக் கண்டுகொள்வதற்கு உதவும் ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள். பைனாக்குலர்களை எடுத்துச் செல்வதும்கூட மிகவும் பயனுள்ளது. ஒவ்வொரு இனத்தைச் சேர்ந்த நீர்ப் பறவையும் அதற்கே உரிய தனிப்பண்புகளைக் கொண்டதாய், அவற்றின் அலகுகள் படைக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்திற்கேற்றாற்போல் இரையைக் கொத்தித்தின்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். தொலைநோக்கி அத்தியாவசியமானதல்ல—ஆனால் வெதுவெதுப்பான, நீர் புகா உடை தேவை! ஆபத்துக்களைக் குறித்து கவனமாய் இருங்கள். சேற்றுத் தரைகளைப் பற்றி நீங்கள் நன்றாக அறிந்துவைத்திருந்தால் தவிர அதன்மீது நடக்காதீர்கள். தீவிரமாய் எழும்பிவரும் ஏற்றத்தில் சிக்கிக்கொள்வது எளிது. மேலும், கடற்கரையில் பரவும் மூடுபனியொன்று திடீரென பரவும்போது, நீங்கள் வழிதப்பிப் போய்விடும் சாத்தியம் உள்ளது. காற்றைப் பற்றியும் கவனமாய் இருங்கள். கடுங்காற்றுகள் (gales) மேலே எழும்பி அலைபோல் வீசக் காரணமாய் ஆகலாம், அப்போது ஒரு கழிமுகத்தில் இருப்பது மிகவும் ஆபத்தானதாய் இருக்கலாம்.

[பக்கம் 27-ன் பெட்டி/படம்]

உலகளாவிய முக்கிய கழிமுகங்கள்

நெதர்லாந்திலுள்ள வாடன்ஜே என்ற கழிமுகம், ஐரோப்பாவிலுள்ள மிக முக்கிய கடல்-இறக்கப் பகுதிக்கு மேலே உள்ள கரைப்பகுதியாகும். சில சமயங்களில், ஒருவேளை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட நீர்ப் பறவைகளை அது தாக்குப்பிடிக்கும். இது வடக்கே, ஜட்லாந்துக்குத் தென்மேற்குப் பகுதி வரை செல்கிறது. இப் பரந்த பகுதியில், பின்வரும் மூன்று இடங்கள் போய்ப் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும். அவையாவன, டென்மார்க்கிலுள்ள ரமாவுக்குச் செல்லும் கரைப்பாலம்; கடல்-ஏற்றத்தின்போது பறவைகள் தங்கும் பெரிய பகுதியாய் இருக்கும் இடமான, ஜெர்மனியிலுள்ள வேஸர் ஆற்று கழிமுகப்பகுதி; நெதர்லாந்திலுள்ள குரோனிங்கனுக்கு அருகே இருக்கும் லௌவர்ஸ் ஸே என்ற கழிமுகப்பகுதி. இபெரியன் தீபகற்பத்தில், மிகவும் குறிப்பிடத்தகுந்த கழிமுகப்பகுதி போர்த்துகலின் டேகஸ் ஆறு.

வட, தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களின் பசிபிக் கடற்கரை நெடுக இருக்கும் கழிமுகப்பகுதிகள், இடப்பெயர்ச்சி செய்யும் சுமார் 60 முதல் 80 லட்சம் நீர்ப் பறவைகளுக்கு உணவளிக்கின்றன. அவற்றுள் முக்கிய இடங்களாவன, கலிபோர்னியாவிலுள்ள சான் பிரான்ஸிஸ்கோ, ஹம்போல்ட் வளைகுடாக்கள்; கனடாவில், பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவர் பௌண்டரீ வளைகுடா முதல் ஐயோனா தீவு வரையான 200 சதுர கிலோமீட்டர் பரப்பளவு; அலாஸ்காவின் ஸ்டைக்கீன் கழிமுகப் பகுதியும், காப்பர் ஆற்று கழிமுகப் பகுதியும்.

அ.ஐ.மா.-வில் டெக்ஸஸைச் சேர்ந்த பாலவர் ஃபிளாட்டிலும் கால்வஸ்டன்னிலும்; ஹாங் காங்கில் டைப்போவிலும்; வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் கார்ன்ஸிலும்; கென்யாவில் மாம்பாஸாவுக்கு அருகிலும் நீர்ப் பறவைகளுக்கான மிகச் சிறந்த இடங்கள் காணப்படுகின்றன.

[பக்கம் 24-ன் படம்]

ஐந்து ஆளி பிடிப்பான்கள்

[பக்கம் 25-ன் படம்]

தங்குமிடத்திலிருந்து நெருக்கமாய்ச் செல்லும் நாட்டுகள்

[பக்கம் 25-ன் படம்]

Snape Maltings Riverside Centre

[பக்கம் 25-ன் படம்]

ஆல்ட் கழிமுகம், ஸஃபக்

[பக்கம் 25-ன் படம்]

பார்வையிடும் இடம் ஆ

[பக்கம் 25-ன் படம்]

நோக்கும் இடம் இ

[பக்கம் 25-ன் படம்]

ஆரம்பப் பார்வையிடும் இடம் அ

[பக்கம் 25-ன் படம்]

ஸ்நேப் மால்ட்டிங்ஸ் இசை அரங்கம்

[படத்திற்கான நன்றி]

Snape Maltings Riverside Centre

[பக்கம் 26-ன் படம்]

நாட்

[பக்கம் 26-ன் படம்]

சிகப்பு கால் உள்ளான்

[பக்கம் 26-ன் படம்]

குதிரை மலை கோட்டான்

[பக்கம் 27-ன் படம்]

மேலே: குதிரை மலை கோட்டான்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்