பிரான்ஸில் மதப் போர்கள்
ஞாயிறு, மார்ச் 1, 1562-ல், கீஸின் பிரபுவும் அவருடைய தம்பி, லரேன் கார்டினல் சார்ல்ஸும்—பிரான்ஸ் நாட்டுக் கத்தோலிக்கத்துவத்தின் இரு ஈட்டிமுனைகள்—பாரிஸுக்குக் கிழக்கே இருந்த வாஸி என்ற ஒரு கிராமத்துக்கு, ஆயுதமணிந்த தங்கள் போர்வீரர்களுடன் சவாரி செய்துகொண்டிருந்தனர். பூசையில் கலந்துகொள்வதற்காக வாஸியிலிருக்கும் சர்ச்சில் தங்கள் பயணத்தை நிறுத்திக்கொள்ள அவர்கள் முடிவெடுத்தனர்.
திடீரென, பாடல்களின் ஒலி அவர்களுக்குக் கேட்டது. நூற்றுக்கணக்கான புரொட்டஸ்டண்ட் பிரிவினர் கூடியிருந்த ஓர் எளிய கட்டடத்திலிருந்து பாட்டுக் குரல் வந்தது. அந்தப் போர்வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின்போது, இழிபேச்சுக்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன; அதன் பிறகு கல்மழை சொரிய ஆரம்பித்தது. அந்தப் போர்வீரர்கள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்; புரொட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த டஜன்கணக்கானோர் உயிரிழந்தனர்; சுமார் நூறு பேர் காயமடைந்தனர்.
இந்தப் படுகொலைக்கு வழிநடத்தின நிகழ்ச்சிகள் யாவை? புரொட்டஸ்டண்ட் பிரிவினரால் எப்படிப் பிரதிபலிக்கப்பட்டது?
வரலாற்றுப் பின்னணி
16-வது நூற்றாண்டின் முதற் பாதியின்போது, பிரான்ஸ் நாடு செல்வச்செழிப்பு மிக்கதாயும் ஜனத்தொகை நிறைந்ததாயும் இருந்தது. இந்தப் பொருளாதார செழிப்பு, மக்கட்தொகை வளம் ஆகியவற்றோடு, கத்தோலிக்க மதத்தின் ஆன்மீகத் தன்மையும், சகோதரத் தன்மையும் அதிகரிக்கும்படியான முயற்சிகளும் சேர்ந்திருந்தன. சர்ச்சில் செல்வ வளம் குன்றவும் தெய்வீகம் ஓங்கவுமே மக்கள் விரும்பினர். குருவர்க்கத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களும், கற்றுத்தேர்ந்து வரலாறு-கலைநுணுக்கம் அறிந்த சான்றோர்களும் மத சீர்திருத்தங்களையே வற்புறுத்துபவர்களாய் இருந்தனர்; உயர் பதவியிலிருந்த குருமார்களாலும் கீழ்ப் பதவியிலிருந்த பங்குத் தந்தையர்களாலும் செய்யப்பட்டுவந்த துர்ப்பிரயோகங்களை எதிர்த்து வற்புறுத்துபவர்களாய் இருந்தனர். அப்படிப்பட்ட சீர்திருத்தத்துக்காகக் கடினமாய் உழைத்துவந்த குருமார்களில் ஒருவர், கத்தோலிக்க பிஷப்பாயிருந்த கியோம் பிரீஸான் ஆவார்.
மோ என்ற இடத்திலுள்ள தன்னுடைய திருமண்டலத்தில், வேதாகமத்தை வாசிக்கும்படி அனைவரையும் பிரீஸான் உற்சாகப்படுத்தினார். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் பிரெஞ்சு மொழியில் புதிதாக மொழிபெயர்ப்பதற்கும்கூட அவர் பண முதலீடு செய்தார். விரைவில், கத்தோலிக்க மதத்தின் ஆர்த்தடாக்ஸ் முறைக்குக் காரணராய் இருந்துவந்த, பாரிஸிலிருக்கும் சார்போன் இறையியல் பல்கலைக்கழகம் அவரிடம் கவனத்தைத் திருப்பி, அவருடைய முயற்சிகளைத் தடை செய்தது. ஆனால் அந்த பிஷப்புக்கு, 1515 முதல் 1547 வரை பிரான்ஸ் நாட்டை ஆண்டுவந்த அரசரான முதலாம் ஃபிரான்சஸ்-ன் பாதுகாப்பு இருந்துவந்தது. அந்தச் சமயத்தில், அந்த அரசர் சீரமைப்பதற்குச் சாதகமாய் இருந்தார்.
என்றபோதிலும், பொது ஒழுங்கையும் தேசிய ஒற்றுமையையும் குலைக்காமலிருந்த பட்சத்தில் மட்டுமே முதலாம் ஃபிரான்சஸ் சர்ச்சின் குற்றங்காணும் மனப்பான்மையைப் பொறுத்துவந்தார். 1534-ல், புரொட்டஸ்டண்ட் தீவிரவாதிகள் கத்தோலிக்கப் பூசையை விக்கிரக வணக்கம் என்று பகிரங்கமாக எடுத்துரைக்கும் சுவரொட்டிகளை ஒட்டினர்; அந்த அரசரின் படுக்கையறைக் கதவிலும் ஒரு சுவரொட்டியை ஆணியடித்து மாட்டினர். அதன் விளைவாக, தன் மனோபாவத்தை முதலாம் ஃபிரான்சஸ் மாற்றிக்கொண்டார்; கொதித்தெழும் ராணுவ அடக்குமுறையிலும் இறங்கினார்.
மிருகத்தனமான அடக்குமுறை
சீக்கிரத்தில், புரொட்டஸ்டண்ட் பிரிவினர் மரத்தில் எரிக்கப்பட்டனர். கற்றறிந்த சான்றோரும், அவர்களுக்காகப் பரிதாபப்படுவோரும், புரொட்டஸ்டண்ட் மதத்தைப் புதிதாக பின்பற்றினவர்களும் நாட்டைவிட்டே ஓடிவிட்டனர். அதிகார வர்க்கங்கள் புத்தகங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்தனர், நூலாசிரியர்களையும், பிரசுரிப்போரையும், அச்சிடுவோரையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தனர்.
வால்டென்ஸஸ்கள் முழு அளவில் அதிகாரப்பூர்வ எதிர்ப்பைப் பெற்றனர். அவர்கள் பைபிளுக்கு முதலிடம் கொடுத்த சிறுபான்மையோராய் இருந்தனர்; அவர்கள் நாட்டின் தென்கிழக்கில் இருந்த எளிய கிராமங்களில் வசித்துவந்தனர். சிலர் மரத்தில் எரிக்கப்பட்டனர்; நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்; அவர்கள் வசித்துவந்த சுமார் 20 கிராமங்கள் சூறையாடப்பட்டன.—பக்கம் 6-ல் உள்ள பெட்டியைக் காண்க.
சர்ச்சுக்குள்ளேயே மறுமலர்ச்சி ஏற்படவேண்டிய அவசியத்தை அறிந்திருந்ததாய், கத்தோலிக்க பிஷப்புகள் அடங்கிய ஒரு பேரவை டிசம்பர் 1545-ல் இத்தாலியிலுள்ள டிரென்ட் நகரில் கூடியது. அந்தப் பேரவை 1563-ல் முடிவுற்றபோது, அதன் “பலனாக, . . . புரொட்டஸ்டண்ட் கொள்கையை வேரறுக்கத் தீர்மானமாய் இருந்தவர்களின் கைகளை பலப்படுத்த வேண்டிய ஒன்றாய் இருந்தது” என்று தி கேம்பிரிட்ஜ் மாடர்ன் ஹிஸ்ட்ரி கூறுகிறது.
போர்ப் பீடிகை
மாற்றங்கள் நேரிடுவதற்குக் காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தவர்களாய், கத்தோலிக்க சர்ச்சுக்குள்ளேயே இருந்த, மறுமலர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பலர் புரொட்டஸ்டண்ட் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். 1560 வாக்கில், எண்ணற்றவர்களாய் இருந்த பிரெஞ்சு நாட்டு உயர்குலத்தோரும் அவர்களது ஆதரவாளர்களும் புரொட்டஸ்டண்ட் பிரிவினரோடு சேர்ந்து, அவர்களும் புரொட்டஸ்டண்ட் பிரிவினர் என்று அழைக்கப்படலாயினர். புரொட்டஸ்டண்ட் பிரிவினர் தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகவும் விடாப்பிடியாகவும் தெரிவிப்பவர்களாயினர். சில சமயங்களில், அவர்கள் நடத்திய பொதுக் கூட்டங்கள், கோபத்தைக் கிளறுவதற்கும், பகைமையை வெளிக்காட்டுவதற்கும் வழிவகுத்தன. உதாரணமாக, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் அடுத்தடுத்த நான்கு நாட்களுக்கு சங்கீதங்களைப் பாடுவதற்காகவே 1558-ல் பாரிஸில் கூடினர்.
இவையெல்லாம் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த குருமாரையும் பாமர மக்களையும் கொதித்தெழச் செய்தது. லரேனைச் சேர்ந்த கார்டினல் சார்லஸின் தூண்டுதலால், தன் தந்தை முதலாம் ஃபிரான்சஸ்-ஐ அடுத்து பட்டத்துக்கு வந்த அரசரான முதலாம் ஹென்றி, ஜூன் 1559-ல் ஏக்கூவான் சாசனத்தைப் பிரகடனப்படுத்தினார். அதன் உறுதியான நோக்கம், “இழிவான லூத்தரன் கசடர்கள்” என்றழைக்கப்பட்டவர்களை முற்றிலும் நிர்மூலமாக்க வேண்டும் என்பதே. இது, புரொட்டஸ்டண்ட்டுகளுக்கு எதிரான பயமுறுத்தும் ஒரு ராணுவ அணிவகுப்புக்கு வழிநடத்தினது.
ஒரு போட்டியில் கலந்துகொண்டபோது ஏற்பட்ட காயங்களினால் துன்புற்ற இரண்டாம் ஹென்றி சில வாரங்களுக்குப் பின்பு காலமானார். அவருடைய மைந்தனான அரசர் இரண்டாம் ஃபிரான்சஸ், கீஸ் குடும்பத்தாரால் உந்துவிக்கப்பட்டு, விடாப்பிடியாய் இருந்த புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு மரண தண்டனை விதித்த சாசனத்தைப் புதுப்பித்தார். அதைத் தொடர்ந்த ஆண்டில் இரண்டாம் ஃபிரான்சஸ் காலமானார்; பத்து வயதே ஆகியிருந்த அவரின் தம்பியான ஒன்பதாம் சார்லஸ்-ன் ஸ்தானத்தில் அவருடைய தாயார் காத்ரின் ட மேடிசிஸ் ஆட்சி செய்தார். புரொட்டஸ்டண்ட் பிரிவினருடன் ஒப்புரவாகும் காத்ரினின் கொள்கை, புரொட்டஸ்டண்ட் கொள்கையையே அடியோடு அழிக்கத் தீர்மானமாயிருந்த கீஸ் குடும்பத்தின் விருப்பத்திற்கேற்றவாறு இல்லை.
1561-ல், பாரிஸுக்கு அருகிலுள்ள ப்வாசி நகரில் ஒரு கருத்தரங்கை காத்ரின் ஏற்பாடு செய்தார்; அதில் கத்தோலிக்க, புரொட்டஸ்டண்ட் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த இறையியலர்களும் கூடிவந்தனர். ஜனவரி 1562-ல் பிரகடனப்படுத்தப்பட்ட சாசனத்தில், நகரங்களுக்கு வெளியே வழிபாட்டுக்காக கூடிவருவதற்கான சுதந்திரத்தை புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு காத்ரின் அளித்தார். இதனால் கத்தோலிக்கர் கொதித்தெழுந்தனர்! இது, இரண்டு மாதங்களுக்குப் பின்பு நடந்த நிகழ்ச்சிக்கு வழி வகுத்தது—இதுவே, முன்பு குறிப்பிட்டபடி, வாஸி என்ற கிராமத்தின் எளிய கட்டடத்தில் கூடிவந்திருந்த புரொட்டஸ்டண்ட் பிரிவினரின் படுகொலை.
முதல் மூன்று போர்கள்
வாஸியில் நடந்த கொலை, அதைத் தொடர்ந்து எட்டு மதப் போர்கள் நடப்பதற்குத் தீவிரமான ஆரம்பத்தையுடைய ஒரு வெளிக்காட்டாய் இருந்தது. அந்த எட்டுப் போர்களின் விளைவாக சம்பவித்த பரஸ்பர கொலைகளே, 1562 முதல் மத்திப 1590-கள் வரை பிரான்ஸ் நாட்டைப் பயத்தில் மூழ்கடித்தன. அரசியல் பிரச்சினைகளும் சமூகப் பிரச்சினைகளும் உட்பட்டிருந்தாலும், அந்த இரத்தவெள்ளம் ஏற்பட முக்கியக் காரணமாய் இருந்தது மதத்தின் தூண்டுதலே ஆகும்.
டிசம்பர் 1562-ல் 6,000 உயிர்களைக் காவு கொண்ட டிரர் யுத்தத்துக்குப் பிறகு, அந்த முதல் மதப் போர் முடிவுக்கு வந்தது. மார்ச் 1563-ல் கையொப்பமிடப்பட்ட ஆம்ப்வாஸ் சமாதான ஒப்பந்தம், குறிப்பிட்ட இடங்களில் வரைமுறைக்குட்பட்ட மத சுதந்திரத்தை புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு அளித்தது.
“புரொட்டஸ்டண்ட் பிரிவினரால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாவது போருக்கு, சர்வதேச கத்தோலிக்கரின் சதியைப் பற்றிய பயம் இருக்கிறது” என்று தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. அப்போதெல்லாம், குடிமக்கள் வெறுமனே புரொட்டஸ்டண்ட் பிரிவினராய் இருந்த காரணத்திற்காகவே, அவர்களைக் கத்தோலிக்க மாஜிஸ்திரேட்டுகள் பொதுவாக தூக்கிலிட்டுக் கொலை செய்துவந்தனர். 1567-ல், அரசர் ஒன்பதாம் சார்லஸ்-ஐயும் அவருடைய தாயார் காத்ரினையும் பிடிக்க வேண்டி புரொட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்த ஒருவர் முயன்றபோது, அம் முயற்சி இரண்டாவது போருக்கு வழிவகுத்தது.
பாரிஸுக்கு அப்பால், சான் டனி நகரில், குறிப்பாக நடந்த இரத்தஞ்சிந்துதலை உட்படுத்திய ஒரு போரைப் பற்றிப் பேசிய பிறகு, சரித்திராசிரியர்களான வில் ட்யூரன்ட்டும் ஏரியல் ட்யூரன்ட்டும் பின்வருமாறு எழுதினர்: “இப்படிப்பட்ட கொலைக்கு மனிதரை வழிநடத்திய அந்த மதம்தான் என்ன என்று பிரான்ஸ் மறுபடியும் கேட்டுக்கொண்டது.” அதற்குப் பிறகு வெகுவிரைவில், மார்ச் 1568-ல் ஏற்பட்ட லோஞ்ஜுமோ சமாதான ஒப்பந்தம், முன்பு ஆம்ப்வாஸ் சமாதான ஒப்பந்தத்தின் கீழ் புரொட்டஸ்டண்ட் பிரிவினர் அனுபவித்துவந்திருந்த அதே மிதமான சகிப்புத்தன்மையைக் கொண்டிருக்க உதவியது.
என்றபோதிலும், கத்தோலிக்கர் வன்மம் கொண்டவர்களாய், அந்தச் சமாதான ஒப்பந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட மறுத்தனர். இவ்வாறு, செப்டம்பர் 1568-ல், ஒரு மூன்றாவது மதப் போர் தொடங்கியது. அதைத் தொடர்ந்த சமாதான ஒப்பந்தம் புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு இன்னும் அதிக சலுகைகளை அளித்தது. லாரஷல் துறைமுகம் உள்ளிட்ட அரணிப்பான நகரங்கள் அவர்களுக்கென்று அளிக்கப்பட்டன. மேலும், ஒரு முக்கிய புரொட்டஸ்டண்ட் இளவரசர், அட்மிரல் டி காலின்யி அந்த அரசரின் ஆலோசனைக் குழுவில் நியமனம் செய்யப்பட்டார். மறுபடியும் கத்தோலிக்கர்கள் கொதித்தெழுந்தனர்.
“புனித” பார்த்தாலம்யு தின படுகொலை
சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்பு, ஆகஸ்ட் 22, 1572-ல், பாரிஸில் நடந்த கொலைத் தாக்குதலைத் தப்பினார் காலின்யி. அவர் லூவர் அரண்மனையிலிருந்து தன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது அந்தத் தாக்குதல் நடந்தது. விரைவாக நியாயம் வழங்கப்படாத பட்சத்தில், தாங்கள் பழிவாங்கும் கடும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக புரொட்டஸ்டண்ட் பிரிவினர் பயமுறுத்தினர். தனி ஆலோசனை அவையில், இளம் அரசர் ஒன்பதாம் சார்லஸ், அவரது தாயார் காத்ரின் ட மேடிசிஸ், இன்னும் பல்வேறு இளவரசர்கள் சேர்ந்து, காலின்யியை பதவியிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். எந்தவொரு பழி நடவடிக்கையையும் தவிர்ப்பதற்காக, புரொட்டஸ்டண்ட் பிரிவினராய் இருந்த நவாரைச் சேர்ந்த ஹென்றிக்கும் காத்ரினின் மகளான, வால்வாவைச் சேர்ந்த மார்கரிட்டுக்கும் நடைபெற்ற திருமணத்துக்கென்று பாரிஸுக்கு வந்திருந்த அனைத்து புரொட்டஸ்டண்ட் பிரிவினரையும் கொலை செய்ய ஆணையையும் பிறப்பித்தனர்.
ஆகஸ்ட் 24 அன்று இரவில், அந்தப் படுகொலையை ஆரம்பிக்கும்படி லூவருக்கு எதிரே இருந்த செயின்ட்ஜர்மன்-லாஸர்வா ஆலய மணிகள் ஒலித்தன. கீஸின் பிரபுவும் அவரைச் சேர்ந்தவர்களும் காலின்யி தூங்கிக்கொண்டிருந்த கட்டடத்துக்குள் வேகமாக நுழைந்தனர். காலின்யி அங்குக் கொல்லப்பட்டு ஜன்னலிலிருந்து தூக்கியெறியப்பட்டார்; அவருடைய சடலம் சிதைவுற்றது. அந்தக் கத்தோலிக்கப் பிரபு பரப்பிய கொள்கைக் குரலாவது: “அவர்கள் அனைவரையும் கொல்லுங்கள். இதுவே அரசரின் ஆணை.”
ஆகஸ்ட் 24 முதல் 29 வரை, கோரக் காட்சிகள் பாரிஸின் தெருக்களை நாசப்படுத்தின. ஆயிரக்கணக்கான புரொட்டஸ்டண்ட் பிரிவினர் கொலையுண்டதால், அவர்களின் இரத்த வெள்ளத்தால் சேன் நதி சிகப்பு நிறத்தில் பாய்ந்ததாக சிலர் உறுதியுடன் கூறினர். பிற நகரங்களிலும், ஆங்காங்கே இரத்த வெள்ளங்கள் காணப்பட்டன. சாவு எண்ணிக்கையின் மதிப்பீடுகள், 10,000 முதல் 1,00,000 வரை வேறுபடுகின்றன; என்றபோதிலும், அந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் 30,000 என்று பெரும்பாலானவர்கள் ஒத்துக்கொள்கின்றனர்.
“அந்தப் படுகொலையைப் போலவே கோரமாய் இருந்த ஓர் உண்மையானது, அது அளித்த களிப்புப் பரவசமே” என்று ஒரு வரலாற்றாசிரியர் அறிக்கை செய்தார். அந்தக் கொலையைப் பற்றிக் கேள்விப்படுகையில், போப் பதிமூன்றாம் கிரிகரி ஒரு நன்றி தெரிவிப்பு விழாவைக் கொண்டாட ஆணையிட்டதோடு, காத்ரின் ட மேடிசிஸுக்குத் தன் வாழ்த்துதலையும் தெரிவித்தார். மேலும், அந்தச் புரொட்டஸ்டண்ட் பிரிவினரின் கொலையை நினைவுகூருவதற்காக ஒரு பிரத்தியேகமான பதக்கம் பொறிக்கப்படும்படி ஆணையிட்டார்; “காலின்யியின் கொலைக்கு போப் சம்மதம் தெரிவிக்கிறார்” என்ற வார்த்தைகளைக் கொண்ட, அந்தப் படுகொலையைச் சித்தரிக்கும் ஒரு வண்ணப்படத்தை வரையவும் அதிகாரம் அளித்தார்.
அந்தப் படுகொலைக்குப் பின்பு ஒன்பதாம் சார்லஸ்-க்கு, பலியானவர்களைப் பற்றிய காட்சிகள் வந்ததாகவும், அப்போது தன் நர்ஸைப் பார்த்து, “என்னே தீயதோர் ஆலோசனைக்கு நான் செவிசாய்த்துவிட்டேன்! ஆ என் கடவுளே, என்னை மன்னியும்!” என்று சத்தமிட்டுச் சொன்னதாகவும் அறிக்கை செய்யப்படுகிறது. அவர் 1574-ல் 23-வது வயதில் இறந்தார், அவருக்குப் பின் அவருடைய தம்பி மூன்றாம் ஹென்றி பட்டத்துக்கு வந்தார்.
மதப் போர்கள் தொடர்ந்தன
அதே சமயத்தில், கத்தோலிக்க மக்கள் புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு எதிராகச் செயல்படும்படி அவர்களுடைய தலைவர்களால் முடுக்கிவிடப்பட்டனர். டுலூஸில், கத்தோலிக்கக் குருமார்கள் அவர்களுடைய மதத்தினரைப் பின்வருமாறு உற்சாகப்படுத்தினர்: “அனைவரையும் கொல்லுங்கள், சூறையாடுங்கள்; நாங்கள் உங்கள் ஃபாதர்கள்; நாங்கள் உங்களைக் காப்போம்.” அரசர், நாடாளுமன்றங்கள், ஆளுநர்கள், தலைவர்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்து இந்த வன்முறையான அடக்குமுறைக்கு முன்னோடிகளானார்கள்; அதையே கத்தோலிக்கப் பாமரர்களும் பின்பற்றினர்.
என்றபோதிலும், புரொட்டஸ்டண்ட் பிரிவினர் மீண்டும் எதிர்த்துப் போரிட்டனர். “புனித” பார்த்தாலம்யு தின படுகொலை நடந்து இரண்டே மாதங்களுக்குள், நான்காவது மதப் போரை அவர்கள் துவக்கினர். எங்கெல்லாம் கத்தோலிக்கருடைய எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையில் இருந்தனரோ, அங்கெல்லாம், சிலைகளையும் சிலுவைகளையும் கத்தோலிக்க ஆலயங்களிலிருந்த பீடங்களையும் தகர்த்துப் போட்டனர்; கொலையும் செய்தனர். “நகரங்களானாலும் மக்களானாலும் எவையும் விட்டுவைக்கப்படுவது கடவுளுக்கு விருப்பமில்லை” என்று பிரான்ஸ் நாட்டு புரொட்டஸ்டண்ட் கொள்கைத் தலைவர் ஜான் கால்வின் மெய் விசுவாசத்தைக் காக்கும் பறைசாற்றுதல் (பிரெஞ்சு) என்ற தனது துண்டுப் பிரதியில் பறைசாற்றினார்.
அதைத் தொடர்ந்து இன்னும் நான்கு மதப் போர்கள் தொடுக்கப்பட்டன. ஐந்தாவது போர் 1576-ல், அரசர் மூன்றாம் ஹென்றி ஒரு சமாதான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு, அதன் மூலம் புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு பிரான்ஸ் எங்கும் வழிபடுவதற்கான முழு சுதந்திரம் அளிக்கப்பட்டபோது முடிவுக்கு வந்தது. அந்த மிதமிஞ்சின கத்தோலிக்க நகரமான பாரிஸ், காலப்போக்கில் மூன்றாம் ஹென்றிக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரைத் துரத்திவிட்டது. அவர் புரொட்டஸ்டண்ட் பிரிவினருடன் மிகவும் சிநேகப்பான்மையுடன் இருந்ததாகக் கருதியது. கத்தோலிக்கர்கள் ஓர் எதிர் அரசாங்கத்தை அமைத்தனர்; அதாவது, கீஸைச் சேர்ந்த ஹென்றியால் தலைமைதாங்கப்பட்ட கத்தோலிக்க புனித அமைப்பு.
முடிவில் எட்டாவது போரான, அதாவது மூன்று ஹென்றிகள் சேர்ந்து செய்த போரில், மூன்றாம் ஹென்றி (கத்தோலிக்கர்) அவருக்குப்பின் அரசராகவிருந்த நவாரைச் சேர்ந்த ஹென்றியுடன் (புரொட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவர்) கூட்டுச் சேர்ந்து, கீஸைச் சேர்ந்த ஹென்றிக்கு (கத்தோலிக்கர்) எதிராகப் போரிட்டார். எப்படியாவது கீஸைச் சேர்ந்த ஹென்றியைக் கொன்றுவிட வேண்டும் என முயன்று முடிவில் மூன்றாம் ஹென்றி வெற்றி பெற்றார்; ஆனால், ஆகஸ்ட் 1589-ல், மூன்றாம் ஹென்றி தானே ஒரு டோமினிக்க சாமியாரால் கொல்லப்பட்டார். இவ்வாறு, “புனித” பார்த்தாலம்யு தின படுகொலையின்போது, 17 ஆண்டுகளுக்கு முன்பு, உயிருடன் தப்பவிடப்பட்ட நவாரைச் சேர்ந்த ஹென்றி, நாலாம் ஹென்றி ஆனார்.
நாலாம் ஹென்றி புரொட்டஸ்டண்ட் பிரிவைச் சேர்ந்தவராய் இருந்ததால், பாரிஸ் அவருக்கு அடிபணிய மறுத்தது. கத்தோலிக்க புனித சங்கம் அவரை எதிர்த்து நாடு முழுவதிலும் ஆயுதம் தாங்கிய அணிவகுப்பை ஏற்பாடு செய்தது. ஹென்றி பல யுத்தங்களில் வெற்றிபெற்றார்; ஆனால் ஒரு ஸ்பானிய சேனை கத்தோலிக்கருக்கு ஆதரவாக வந்து சேர்ந்தபோது, முடிவில் அவர் புரொட்டஸ்டண்ட் கொள்கையைத் துறந்துவிட்டு கத்தோலிக்க மதக் கொள்கையை ஏற்றுக்கொண்டார். பிப்ரவரி 27, 1594-ல் முடிசூட்டப்பட்டவராய், ஹென்றி பாரிஸில் காலடி வைத்தார்; அங்கேயிருந்த மக்களோ, அதுவரையிலும் போர்களால் களைப்புற்றவர்களாய், அவரை அரசராக வாழ்த்தி வரவேற்றனர்.
இவ்வாறாக பிரான்ஸ் நாட்டில் நடந்த மதப் போர்கள் 30-க்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தன; அந்த ஆண்டுகளின் போதெல்லாம் கத்தோலிக்கரும் புரொட்டஸ்டண்டினரும் அவ்வப்பொழுது ஒருவரையொருவர் கொன்றுகுவித்தனர். ஏப்ரல் 13, 1598-ல், நாலாம் ஹென்றி வரலாற்றுப் பூர்வ நான்ட்ஸ் நகர் சாஸனத்தை வெளியிட்டார்; அது புரொட்டஸ்டண்ட் பிரிவினருக்கு மனசாட்சி ரீதியிலும் வழிபாட்டு ரீதியிலும் சுதந்திரத்திற்கு அதிகாரமளித்தது. போப் கூறினதன்படி, அந்தச் சாஸனம், “கற்பனை செய்து பார்க்க முடியாதளவுக்கு படுமோசமானதாய் இருந்தது; ஏனெனில் மனசாட்சி ரீதியில் அனைவருக்கும் சுதந்திரம் அளித்தது, அதுவோ, உலகிலேயே மிக பயங்கர மோசமான விஷயம்.”
பிரான்ஸ் முழுவதிலும், ஹென்றி தங்கள் மதக் கொள்கையை ஆதரிக்கப்போவதாக வாக்குக் கொடுத்துவிட்டு பின்னர் ஏமாற்றியதற்கு அடையாளமாக அந்தச் சாஸனம் இருந்ததாய் கத்தோலிக்கர் உணர்ந்தனர். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்பு, நான்ட்ஸ் சாஸனத்தை பதினாலாம் லூயி ரத்து செய்தது வரையில், சர்ச் முனைப்பாய்ச் செயல்பட்டதிலிருந்து ஓயவில்லை; மேலும் புரொட்டஸ்டண்ட் பிரிவினரை இன்னும் படுமோசமாக துன்புறுத்தத் தூண்டுவித்தனர்.
போரின் விளைவுகள்
16-வது நூற்றாண்டின் முடிவு வாக்கில், பிரான்ஸின் செல்வ வளம் மறைந்திருந்தது. பாதியளவான ராஜ்யம் கைப்பற்றப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, பலியாக்கப்பட்டு, அல்லது பாழாக்கப்பட்டு இருந்தது. ராணுவ வீரர்கள் மக்களை மிதமிஞ்சி வற்புறுத்திப் பணம் அல்லது பொருளைப் பெற்றனர்; அதுவோ பாமர மக்கள் கலகம் செய்வதற்கு வழிநடத்தியது. புரொட்டஸ்டண்ட் மக்கள், மரண தண்டனைகளாலும் படுகொலைகளாலும், நாட்டை விட்டுத் துரத்தப்பட்ட கொடுமைகளாலும், மதக் கொள்கைகளைத் துறந்துவிட்ட செயல்களாலும் பெருவாரியாக கொல்லப்பட்ட பிறகு, எண்ணிக்கையில் குறைந்துவிட்டவர்களாய் 17-வது நூற்றாண்டில் நுழைந்தனர்.
கத்தோலிக்கர்கள் பிரான்ஸ் நாட்டு மதப் போர்கள் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்ததாகத்தான் தோன்றுகிறது. ஆனால் அவர்கள் அடைந்த வெற்றியின்மீது கடவுளுடைய ஆசீர்வாதம் இருந்ததா? நிச்சயமாகவே இல்லை என்பது தெளிவாய் இருக்கிறது. கடவுளின் பெயரில் செய்யப்பட்ட இந்த எல்லா கொலைகளாலும் களைப்புற்றவர்களாய், பிரெஞ்சுக்காரர் பலர் மதப் பற்று இல்லாதவர்களானார்கள். அவர்கள், 18-வது நூற்றாண்டு எதிர்க் கிறிஸ்தவ மனோபாவம் என்றழைக்கப்பட்டிருக்கும் சிந்தனைக்கு முன்னோடிகளாய் இருந்தனர்.
[பக்கம் 5-ன் படம்]
வாஸியில் நடந்த படுகொலை மதப் போர்களைத் தொடங்கிவைத்தது
[படத்திற்கான நன்றி]
Bibliothèque Nationale, Paris
[பக்கம் 7-ன் படம்]
ஆயிரக்கணக்கான புரொட்டஸ்டண்ட் பிரிவினர் கத்தோலிக்கரால் கொல்லப்பட்ட “புனித” பார்த்தாலம்யு தின படுகொலை
[படத்திற்கான நன்றி]
போட்டோ Musée cantonal des Beaux-Arts, Lausanne
[பக்கம் 8-ன் படம்]
புரொட்டஸ்டண்ட் பிரிவினர் கத்தோலிக்கரைக் கொன்று, ஆலய உடைமைகளை அழித்தனர் (மேலேயும் கீழேயும்)
[படத்திற்கான நன்றி]
Bibliothèque Nationale, Paris
Bibliothèque Nationale, Paris