உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/8 பக். 5-10
  • சவாலை சமாளித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சவாலை சமாளித்தல்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நற்செல்வாக்காய் இருக்கும் பெற்றோர்
  • இந்தச் சவாலை வெற்றிகரமாக சமாளித்தல்
  • வாழ்வுக்கான யெகோவாவின் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்
  • பைபிளும் பருவ வயது ஒழுக்கமும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • உங்கள் மனோபாவத்தை—எது செல்வாக்கு செலுத்துகிறது?
    விழித்தெழு!—1997
  • மாறிவரும் மனோபாவங்கள்—புதுப்புது கேள்விகளை எழுப்புகின்றன
    விழித்தெழு!—1997
  • திருமணத்திற்குமுன் உடலுறவு
    விழித்தெழு!—2013
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 6/8 பக். 5-10

சவாலை சமாளித்தல்

பாலின ஒழுக்கநெறியின் மீதான தாக்குதல், செக்ஸை முக்கியப்படுத்திக் காட்டும் தொலைக்காட்சி, புத்தகங்கள், பத்திரிகைகள், திரைப்படங்கள், இசை போன்ற பற்பல சாதனங்களால் வாழ்வின் இளம் பருவத்திலேயே ஆரம்பிக்கிறது. உணர்ச்சிப்பூர்வ உறுதித்தன்மையைக் காத்துக்கொள்ளாமல், பெரியவர்களுடைய பாலின நடத்தைக்குரிய முறைகளையே தாங்களும் பின்பற்றும்படி இளைஞர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். இளவயதாய் இருக்கையிலேயே காதலீடுபாடு கொள்வதை அனுமதிப்பதன் மூலம், இளைஞர்கள் மீதான பாலியல் அழுத்தத்தை சில பெற்றோர்கள் கூட்டவும்கூட செய்கின்றனர். ஒத்த வயதினர் அழுத்தம் காதலீடுபாட்டுக்கு உற்சாகமளிக்கிறது; எப்பொழுது பார்த்தாலும் இணைந்தே இருக்கும் இளம் காதல் ஜோடிகளில் பலர், விரைவில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்தவர்களாய், பாலுறவு கொள்ள ஆரம்பிக்கின்றனர். “தன் பெற்றோரால் நேசிக்கப்படாதவளாய் உணரும் ஓர் இளம் டீனேஜ் பெண், . . . அவளுடைய பாய் ஃபிரண்ட் தன்னை அப்படியே அள்ளி அணைக்கையில், அது அன்பையும் நெருக்கத்தையும் காட்டுகிறது என்ற தவறான நம்பிக்கையுடன், அவனுடைய ஆசைக்கு அடிபணிந்துவிடுவதே அடிக்கடி நேரிடுகிறது” என்று குடும்ப ஆய்வுகள் துறைப் பேராசிரியர் ஒருவரான, லூதர் பேக்கர் குறிப்பிட்டார்.

இளைஞர் தங்களுடைய வளரிளம் பருவ ஆண்டுகளை, பிற்கால வாழ்க்கைக்கு தங்களைத் தயார்படுத்திக்கொள்வதாக எண்ணி அதைப் பயன்படுத்திக்கொள்வதற்குப் பதிலாக, தங்களுடைய வாழ்வில் கடைசிகடைசியாக அனுபவிக்கும் இன்பத்தோய்வாக எண்ணி வாழ முற்படுகின்றனர். தங்களுடைய வளரிளம் பருவத்தில், “தாங்கள் புதிதாகப் பெற்ற பாலின திறமையில் மயங்கி, பாலின வீரியமே ஓர் ஆணுக்கு அழகு என்று கூறும் ஒத்த வயதினரால் நம்பவைக்கப்பட்டு, பல இளைஞர்கள் பாலியல் வெறிகொண்டவர்களாக ஆகின்றனர்” என்பதாக பேராசிரியர் பேக்கர் கூறினார். நம் இளமையின்மீது இழைக்கப்படும் இந்தப் பாதகத்தைக் குறித்து சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்று வல்லுநரான ஆர்னால்டு டாய்ன்பீ வருத்தம் தெரிவித்தார். ஏனெனில் வளரிளம் பருவத்தினர், தங்கள் அறிவை வளர்ப்பதற்காக ‘பாலியல் நடவடிக்கையை’ ஒத்திப்போடும் பண்பினால்தான், மேற்கத்திய உலக சிந்தனைத் திறத்தின் ஒரு பகுதி தோன்றியிருப்பதாய் வரலாறு காட்டியிருப்பதாக அவர் நம்பினார்.

நற்செல்வாக்காய் இருக்கும் பெற்றோர்

வளரிளம் பருவத்தினர் பொழுதுபோக்கு நோக்கில் காதலீடுபாடு கொள்வதை அனுமதிக்காத பெற்றோர், தங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால உடல்நலத்திலும் மகிழ்ச்சியிலும் உண்மையான அக்கறை காட்டுகின்றனர். உயர்ந்த ஒழுக்க தராதரங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் நல்ல கருத்துப் பரிமாற்றத்தைக் காத்துக்கொள்வதன் மூலமாகவும், அவர்கள் தங்களுடைய பிள்ளைகளின் வாழ்வில் செல்வாக்கு செலுத்தலாம். “இந்தச் செல்வாக்கு, பிள்ளைகள் பாலியல் நடவடிக்கையை ஒத்திப்போட வழிநடத்தலாம்” என்பதை இளைஞர்களின் பாலியல் நடவடிக்கையைப் பற்றிய ஆய்வு குறிப்பிட்டுக் காட்டுகிறது என்பதாக திருமணமும் குடும்பமும் பற்றிய பத்திரிகை (ஆங்கிலம்) கூறுகிறது.

சுய கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் படிப்படியாக தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்கும் பெற்றோர் நல்ல பலன்களைப் பெறுகின்றனர். “வளரிளம் பருவத்தினரும் அவர்களுடைய பெற்றோரும் பொறுப்பை வலியுறுத்தும் மதிப்பீடுகளின் விஷயத்தில் கெடுபிடியாய் இருக்கும்போது, திருமணத்துக்குப் புறம்பாக பிள்ளைபெறும் சந்தர்ப்பங்கள் வளரிளம் பருவத்தினரிடையே கணிசமாகக் குறைந்துள்ளன” என்று ஓர் ஆய்வு நிரூபிக்கிறது. இது, பிள்ளைகள் எதைப் பற்றியாவது பேசும்போது, அல்லது செய்யும்போது, பெற்றோர் உடனடியாக உதவும் விதத்தில் செயல்பட வேண்டிய அவசியத்தைத் தேவைப்படுத்துகிறது—அவர்களுடைய வீட்டுப்பாடத்தை மேற்பார்வை செய்வது; எங்கே சென்று வருகிறார்கள் என்றும் யாரோடு கூட்டுறவு கொள்கிறார்கள் என்றும் அறிவது; கல்வி சம்பந்தமாக நடைமுறையான குறிக்கோள்களை வைப்பது; ஆவிக்குரிய மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொள்வது. பெற்றோர் செல்வாக்கு செலுத்தும் இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்ந்துவரும் பிள்ளைகள் தங்களைப் பற்றி மேம்பட்ட விதமாக உணருவதோடு, தங்களின் பாலியல் விஷயங்களைப் பற்றி சௌகரியமாயும் உணருவார்கள்.

பெற்றோர், பிள்ளைகள் ஆகிய இரு சாராருக்குமே கொடுக்கப்படும் மிகச் சிறந்த புத்திமதி, பைபிளில் காணப்படும் ஞானமே. இஸ்ரவேலில் இருந்த பெற்றோர், சரியான ஒழுக்க தராதரங்களைப் பற்றி தங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கும்படி கட்டளையிடப்பட்டனர். யெகோவா பின்வருமாறு அவர்களைக் கேட்டார்: ‘இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?’ இந்த ‘நீதியுள்ள கட்டளைகளையே’ அந்தக் குடும்பச் சூழமைவின் கனிவிலும் நெருக்கத்திலும் அவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்குப் போதிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். ‘நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குப் படிப்படியாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசுவாயாக.’ ‘உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே’ என்று பிள்ளைகளுக்குப் புத்திமதி கூறப்பட்டது. அப்படிப்பட்ட கனிவான, நெருக்கமான கருத்துப் பரிமாற்றத்தையும் அறிவுரையையும் தாய்தந்தையாகிய இருவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வது, வாழ்க்கையையும் பாலியலையும் பற்றிய ஒரு சமநிலையான மனநிலையை வளர்த்துக்கொள்ள பிள்ளைகளுக்கு உதவுகின்றன; ஓர் இளைஞனை அவனுடைய வாழ்நாள் முழுவதிலும் ‘அது காப்பாற்றும்.’—உபாகமம் 4:8; 6:7; நீதிமொழிகள் 6:20, 22.

இளைஞர்களே, பாலின தூண்டுதல்களுக்கு இணங்கிவிடுவதன் மூலமாக உங்கள் எதிர்காலத்தை ஏன் கெடுத்துக்கொள்கிறீர்கள்? டீனேஜ் பருவம் ஏழு ஆண்டுகளை உள்ளடக்குகிறது. அந்த ஆண்டுகள், வாழவிருக்கும் அடுத்த 50 அல்லது 60 ஆண்டுகளுக்கு ஒருவரைத் தயார்படுத்திக்கொள்ளும் வகையில், மனரீதியிலும் உணர்ச்சிப்பூர்வமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் வளர்வதற்கும், பாலியலைப் பற்றிய ஒரு சமநிலையான மனநிலையை வளர்ப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். பெற்றோர்களே, கடவுள் கொடுத்துள்ள பொறுப்பை முக்கியமாய் கருத்தில்கொண்டு, பாலுறவால் கடத்தப்படும் நோய்களாலும் வேண்டாத கர்ப்பங்களாலும் சஞ்சலமடைவதிலிருந்து உங்கள் பிள்ளைகளைக் காத்துக்கொள்ளுங்கள். (பிரசங்கி 11:10) பிறருக்காக காட்டப்படும் அன்பினாலும் கரிசனையினாலும் நிலையான உறவுகளை எப்படி வளர்ப்பது என்று உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து உங்கள் பிள்ளைகள் தெரிந்துகொள்ளட்டும்.

இந்தச் சவாலை வெற்றிகரமாக சமாளித்தல்

உங்கள் காலத்தில் நிகழும் செக்ஸ் ஈடுபாடு, வாழ்க்கையின் பேரில் உங்களுக்கிருக்கும் நோக்குநிலையைத் திரித்து, திருப்தியான, மகிழ்ச்சியான எதிர்காலத்துக்கான உங்கள் வாய்ப்பைக் கெடுத்துவிட அனுமதியாதீர்கள். பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஏராளமான மனித உறவுகளின் உதாரணங்களைப் பற்றி தியானியுங்கள். டீனேஜ் பருவத்துக்குப் பின்பும்கூட வெகுநாட்களுக்கு வாழ்வும் அன்பும் பலமாய் நிலைத்திருக்கப்போவது நிச்சயம். இந்த உண்மையை, கிறிஸ்தவ ஆண்களுக்கும் பெண்களுக்குமான தெய்வீக சித்தத்துக்கு இசைவாக கருத்தில் கொள்ளும்போது, இருவருமாய் நெருங்கிய, நிலையான அன்புடையவர்களாய் இருப்பதற்கான அஸ்திவாரம் போடப்படுகிறது.

பைபிளில் கூறப்பட்டிருக்கும் யாக்கோபு-ராகேல், போவாஸ்-ரூத், மேய்ப்பன்-சூலமித்தியப் பெண் போன்ற ஜோடிகளைப் பற்றி நீங்கள் ஆராய்ந்து பார்க்கப் பார்க்க, அவர்களுடைய உறவுகளில் பாலின கவர்ச்சியை ஏற்படுத்திய அம்சத்தை நீங்கள் காண்பீர்கள். என்றபோதிலும், ஆதியாகமம் 28, 29 அதிகாரங்கள், ரூத் புத்தகம், உன்னதப்பாட்டு ஆகிய பகுதியை நீங்கள் கவனமாக வாசிக்க வாசிக்க, அப்படிப்பட்ட உறவுகளைப் பலப்படுத்தும் முக்கியமான மற்ற அம்சங்களும் இருந்தன என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். a

வாழ்வுக்கான யெகோவாவின் ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்

மனித இனத்தின் படைப்பாளரான யெகோவா, மனித பாலியலையும் அதில் உள்ளடங்கியுள்ள உணர்வுகளையும் புரிந்துகொள்கிறார். அன்பான விதத்தில், அவர் தம்முடைய சாயலில் நம்மைப் படைத்திருக்கிறார்; ‘பலருடன் பாலுறவு கொள்ளும் ஆவலை நமக்குள் வைத்துப் படைக்காமல்’ தெய்வீக சித்தத்துக்கு இசைவாக நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் திறமையுடன் படைத்திருக்கிறார். ‘நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, தேவனை அறியாத அஞ்ஞானிகளைப் போல மோக இச்சைக்குட்படாமல், உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்.’—1 தெசலோனிக்கேயர் 4:3-6.

இது, உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் வாழ்வில் தெளிவாகக் காட்டப்படுகிறது. கிறிஸ்தவ ஆண்களுக்கும் பெண்களுக்குமான கடவுளுடைய உயர்ந்த தராதரங்களை அவர்கள் மதிக்கின்றனர். முதிர்வயதுள்ளவர்கள் தகப்பனைப்போல நடத்தப்படுகின்றனர்; ‘பாலிய புருஷர் சகோதரரைப்போலவும், முதிர்வயதுள்ள ஸ்திரீகள் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகள் எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவிக்கப்படுகின்றனர்.’ (1 தீமோத்தேயு 5:1, 2) இளவயதிலேயே காதலீடுபாடு கொண்டு திருமண வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்வதால், அல்லது பாலுறவால் கடத்தப்படும் நோய்களால் வரும் அழுத்தங்களால் பாரமடையாமல், இளம் ஆண்களும் பெண்களும் தங்கள் முழு பலத்தையடைகையில், அது என்னே ஓர் அனுகூலமான சூழலாய் இருக்கிறது! கிறிஸ்தவ சபையால் பலப்படுத்தப்பட்டு, கிறிஸ்தவ நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டுவரும் குடும்பம், செக்ஸ் பைத்தியம்பிடித்த ஓர் உலகில் ஒரு பாதுகாப்பான புகலிடமாய் இருக்கிறது.

தங்களுடைய வாழ்வில் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலமாக, கிறிஸ்தவ இளைஞர்கள் செக்ஸுக்கான ஈடுபாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருக்கும் பின்வரும் புத்திமதிக்குத் தங்கள் கவனத்தைச் செலுத்துவதில் இன்பம் காண்கின்றனர்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.”—பிரசங்கி 11:9, 10.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தில், பக்கம் 247-ஐக் காண்க.

[பக்கம் 9-ன் படம்]

தங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுறுசுறுப்பான நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள் பாலின சகவாசத்தைத் தேடும் சாத்தியம் குறைவு

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

செக்ஸ் ஈடுபாடு, திருப்தியான, மகிழ்ச்சியான எதிர்காலத்துக்கான உங்கள் வாய்ப்பைக் கெடுத்துவிட அனுமதியாதீர்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்