உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 6/8 பக். 11-14
  • ஒரு குழந்தையின்—காதுகளுக்குள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு குழந்தையின்—காதுகளுக்குள்
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒரு மதத்திற்கான ஏக்கம்
  • திருமணமும் ஒரு குடும்பமும்
  • சர்ச்சிலிருந்து வெளியேறுதல்
  • பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்
  • குடும்பத்தில் எதிர்ப்பு
  • மறக்கமுடியாத ஒரு சந்திப்பு
  • ஜெபத்தைக் கேட்பவரோடு நண்பராகுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2012
  • பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
    காவற்கோபுரம்: பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது
  • உண்மை விசுவாசத்தைத் தேடி என் நீண்ட கடினமான போராட்டம்
    விழித்தெழு!—1995
  • கடவுளுடைய கவனிப்பினால் நான் எப்படி நன்மையடைந்தேன்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 6/8 பக். 11-14

ஒரு குழந்தையின்—காதுகளுக்குள்

நான் ஒரு சிறு பெண்ணாக இருந்தபோது, ஒருநாள் அ.ஐ.மா., வர்ஜீனியா, கோபர்னிலுள்ள எங்கள் வீட்டிற்கு ஒரு மனிதர் வந்திருந்தார். அவர் என் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, நான் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக அவருடைய நண்பர் என்னோடு பேச ஆரம்பித்தார். ஒரு பரதீஸிய பூமியில், என்னை தொந்தரவு செய்யாத காட்டுமிருகங்களுடன் நான் விளையாட முடியும் என்ற அழகான ஒரு படத்தை அவர் வார்த்தைகளால் சித்தரித்துக் கொண்டிருந்தார். (ஏசாயா 11:6-9) நான் மரிக்காமல் இதே பூமியிலேயே என்றென்றுமாக வாழமுடியும் என்றும் அவர் விளக்கினார். எதிர்காலம் சந்தோஷகரமானதாகத் தோன்றியது! பூமியில் வாழ்வதைப் பற்றி அவர் சொன்னது எனக்குள் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.—ஏசாயா 25:8; வெளிப்படுத்துதல் 21:3, 4.

ஒரு மதத்திற்கான ஏக்கம்

அநேக திருமண பிரச்சினைகளை கொண்டிருந்த என் பெற்றோர் ஒருசில வருடங்களில் விவாகரத்து செய்து கொண்டனர்; நான் அம்மாவோடு வாழ்ந்து வந்தேன். அம்மாவுக்கோ மதத்தில் கொஞ்சமும் அக்கறையில்லை. ஆகவே, எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு சர்ச்சில் நடக்கும் சண்டே ஸ்கூலுக்கு நான் தனியாகவே போய் வருவேன். அம்மா மறுமணம் செய்துகொண்டபிறகு, மாற்றான் தகப்பனுடன் நாங்கள் இண்டியானாவுக்குக் குடிபெயர்ந்தோம். என்றபோதிலும், ஒவ்வொரு கோடைகாலமும் என் அப்பாவை பார்ப்பதற்காக வர்ஜீனியா போய்வருவேன்.

விவாகரத்துக்குப் பிறகு அப்பா ஒரு மார்மன்-ஆக மாறியிருந்தார்; ஆகவே தன்னுடைய புதிய மதத்தை எனக்குப் போதிக்க முயற்சித்தார். 1960-ன் கோடைகாலத்தில், நான் எட்டு வயதாயிருக்கும்போது, அவர் என்னை முழுக்காட்டினார். என்றபோதிலும், இண்டியானாவில் இருக்கும்போது வீட்டிற்கு அருகிலுள்ள எந்த சர்ச்சுக்கும் நான் போவேன். நாம் நல்லவர்களாக இருந்தால் பரலோகத்திற்கு போவோம் என்றும் கெட்டவர்களாக இருந்தால் வாதிக்கப்படும் இடமாகிய நரகத்திற்கு போவோம் என்றும் எல்லா சர்ச்சுகளுமே போதித்தன. பரலோகத்திலல்லாமல் பூமியில் வாழவேண்டும் என்ற என்னுடைய எண்ணங்களை ஒருவரும் புரிந்துகொள்ளமாட்டார்கள் என்று நான் நினைத்ததனால், அதை ஒருவரிடமும் சொல்லவில்லை.

எனக்கு பதினோறு வயதாயிருக்கையில், அப்பா ஆரிகானுக்கு இடம்மாறிச் சென்றார். நான் கைவிடப்பட்டவளாகவும் அதிக கோபமாகவும் உணர்ந்தேன். என்னுடைய மாற்றான் தகப்பன் ஒரு நாத்திகவாதியாகவும் குடிகாரராகவும் இருந்தார்; எனவே, என்னுடைய விசுவாசத்தினிமித்தம் வேண்டுமென்றே என்னை கஷ்டப்படுத்தினார். அவர் என்னை சின்னச் சாமியாரம்மா என்று கிண்டலாக கூப்பிடுவார்; நான் அழ ஆரம்பிக்கும்போது, “உனக்கு உதவி செய்ய உன்னுடைய கடவுளை கூப்பிடேன்” என்றும் சொல்லுவார். வீட்டிலுள்ள ஒருவரும் கடவுளை பற்றி அக்கறையுடையவர்களாக இல்லை. எனக்கு அவை நம்பிக்கையற்ற, கடினமான வருடங்களாக இருந்தன. நான் சரீரப்பிரகாரமாகவும் வார்த்தைகளாலும் பாலியல் சம்பந்தமாகவும் துன்புறுத்தப்பட்டேன். ஆனால் நானோ, கடவுளிடம் பேசுவதன் மூலம் ஆறுதலடைந்தேன்; ஏனென்றால், என்னை பற்றி அவர் மட்டுமே அக்கறை உடையவராக இருந்தார் என்று நான் பல சமயங்களில் உணர்ந்திருக்கிறேன்.

என் மாற்றான் தகப்பனை விட்டு அம்மா பிரிந்துசென்ற பிறகுதான் துன்புறுத்தல் நின்றது. ஆனாலும், நாங்கள் ஏழையாக இருந்ததனால் குடும்பத்தேவைகளை கவனிப்பது அம்மாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்கு பதின்மூன்று வயதாயிருக்கையில் வர்ஜீனியாவிலுள்ள என்னுடைய பெரியம்மாவை சந்திக்கச் சென்றோம். அவர்கள் ஒரு இரக்கமுள்ள, நேர்மையான பாப்டிஸ்ட் பெண்மணி. நான் அவர்களை மிகவும் அதிகமாக நேசித்தேன். தன்னோடு சர்ச்சுக்கு வரும்படி அவர்கள் என்னைக் கூப்பிட்டபோது, நான் சென்றேன். அம்மாவும்கூட வந்திருந்தார்கள்; என் குடும்பத்தோடு அங்கிருப்பது எவ்வளவு நன்றாக இருந்தது என்று உணர்ந்தது எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் சந்திப்பு முடிந்து நாங்கள் வீடு திரும்புவதற்கான சமயம் வந்தபோது, திரும்பிச் செல்வதற்கு எனக்கு மிகவும் பயமாக இருந்தது. ஏனென்றால், நான் திரும்பிச்சென்றால், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டு விடுவேனோ என்ற சந்தேகம் எனக்கிருந்தது. ஆகவே, என்னை அங்கேயே தங்க அனுமதிக்கும்படி என் பெரியம்மாவிடம் கெஞ்சினேன்; அம்மாவும் ஒப்புக்கொண்டார்கள்.

என் பெரியம்மா ஒரு கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு பைபிளை எனக்கு வாங்கிக்கொடுத்தார்கள். அதை வைத்திருப்பது எனக்கு அதிக பெருமையாக இருந்தது; ஒவ்வொரு இரவும் அதில் ஒரு பகுதியை வாசிப்பேன். “ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார்” என்று பைபிளின் கடைசி அதிகாரத்தில் வாசித்தேன். (வெளிப்படுத்துதல் 22:18, 19) ஆகவே, ‘மார்மனுடைய புத்தகம் பரிசுத்த வேதாகமத்தின் ஒரு பாகம் என்று நான் எப்படி நம்பமுடியும்?’ என சிந்தித்தேன். எனவே, ஒரு பாப்டிஸ்டாக மாற முடிவு செய்தேன்.

என்னுடைய தீர்மானத்தைப் பற்றி என் அப்பாவுக்கு தெரியப்படுத்தியபோது, அவர் வருத்தப்பட்டிருப்பார் என்றாலும்கூட, அவருடைய ஒரே குறிப்பாக, நான் தொடர்ந்து சர்ச்சுக்குப் போகிறேன் என்பதனால் அவர் சந்தோஷப்பட்டதாக எழுதியிருந்தார். கூடாரங்களில் நடத்தப்படும் எழுப்புதல் கூட்டங்களுக்கு ஜனங்களை அழைப்பதற்காக சென்ற எங்கள் சபையின் பாப்டிஸ்ட் ஊழியரோடு சேர்ந்து நானும் செல்வேன். இயேசு செய்தது போல, ஜனங்களை அவர்களுடைய வீடுகளில் சந்தித்து, பேசுவதன் மூலம் நான் கடவுளுடைய சித்தத்தை செய்துகொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

இருந்தபோதிலும், பரலோகத்திலல்ல ஆனால் ஒரு பூமிக்குரிய பரதீஸில் வாழவேண்டும் என்ற என்னுடைய ஆவல் இன்னமும் தொடர்ந்திருந்தது. அப்போது நான் வாசித்த பின்வரும் பைபிள் பகுதியானது எனக்கு நம்பிக்கையளித்தது: “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்.”—மத்தேயு 7:7, 8.

திருமணமும் ஒரு குடும்பமும்

அதற்கடுத்த வருடம் அம்மாவோடு வசிப்பதற்காக நான் இண்டியானா திரும்பினேன். எனக்குப் பதினைந்து வயதாயிருக்கும்போதே திருமணமாகி, கர்ப்பமாயிருந்தபோது தென் கலிபோர்னியாவிற்கு பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். என் கணவருடைய குடும்பத்தைப் பற்றி அவ்வளவு அதிகமாக எனக்குத் தெரியாது, என்றாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று விரும்பினேன். அவர்கள் பெந்தெகொஸ்தே சபையை சேர்ந்தவர்கள்; என் கணவருடைய அக்கா அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தைப் பற்றி என்னிடம் சொன்னார்கள். ஆகவே, ஒருநாள் இரவு அவர்களுடைய ஜெபக்கூட்டத்துக்குச் சென்றிருந்தபோது எனக்கு அந்நியபாஷைகளில் பேசும் வரம் கிடைக்கும்படி ஜெபம் செய்தேன்.

திடீரென்று, கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே ஒரு வித்தியாசமான உணர்வு எனக்குள் ஏற்பட்டது. என் உடம்பு முழுவதும் ஆட ஆரம்பித்து, என் நாக்கு கட்டுப்பாடில்லாமல் குளற ஆரம்பித்துவிட்டது. ஆவி என் வழியாக வந்து கொண்டிருக்கிறது என்று பிரசங்கியார் சத்தமிட்டுக் கூறி, என் முதுகில் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தார். அதற்குப் பிறகு, எல்லாரும் என்னை கட்டியணைத்துக் கொண்டு கடவுள் என்னை இந்த விதத்தில் பயன்படுத்தியது எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று கூறினார்கள். ஆனால் எனக்கோ குழப்பமாகவும் பயமாகவும் இருந்தது. நான் என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியாது.

சிறிதுகாலம் கழித்து, என்னுடைய முதல் பிரசவத்தின்போது சில சிக்கல்கள் ஏற்பட்டன. அந்தச் சர்ச்சின் பாதிரியார் என் கணவரிடம், அவர் ஒரு கிறிஸ்தவராக இல்லாததனால் தான் கடவுள் என்னுடைய பிரசவத்தின் வேதனையை அதிகரிக்கிறார் என்று சொன்னார். கண்களில் கண்ணீர் ததும்ப என் கணவர் என்னிடம் வந்து, எனக்கு உதவியாக இருக்குமென்றால் தான் முழுக்காட்டப்பட தயாராக இருப்பதாகக் கூறினார். தம்மை சேவிக்கும்படி கடவுள் ஒருவரையும் அச்சுறுத்தமாட்டார் என்று நான் உறுதியாக நம்புதாக அவரிடம் சொன்னேன்.

சர்ச்சிலிருந்து வெளியேறுதல்

ஒரு ஞாயிற்றுகிழமை, தன்னுடைய பிரசங்கத்திற்குப் பிறகு, பாதிரியார் சபையாரிடம் நன்கொடைகளைக் கேட்டார். ஒரு சமீபத்திய பூமியதிர்ச்சியினால் பழுதடைந்திருந்த அந்தச் சர்ச்சை ரிப்பேர் செய்ய வேண்டியிருந்தது. காணிக்கைத் தட்டு என்னிடம் வந்தபோது, நான் என்னிடமிருந்த எல்லாப் பணத்தையும் போட்டுவிட்டேன். பணத்தை எண்ணிப் பார்த்துவிட்டு, அந்த பாதிரி, சபையாருக்கு நன்றி சொல்லுவதற்குப் பதிலாக, இந்த அதிமுக்கியமான வேலைக்காக தங்களுடைய இருதயத்தையும் பணப்பைகளையும் தாராளமாகத் திறந்து கொடுக்கும்படி சபைக்கு ஆலோசனைக் கூறினார். மறுபடியும் அந்த தட்டை அனுப்பினார். என்னிடம் கொஞ்சமும் பணம் இல்லாததால், மிகவும் தர்மசங்கடமாக உணர்ந்து வேகவேகமாக அந்த காணிக்கைத் தட்டை அடுத்தவரிடம் கொடுத்தேன். பாதிரி பணத்தை உடனே எண்ணிப் பார்த்துவிட்டு, மறுபடியும் அவர்களுக்கு நன்றிகூட சொல்லாமல் அந்தப் பணமும் போதாது என்றார். “கடவுளுடைய வேலையை செய்வதற்குத் தேவையான பணம் கிடைக்கும்வரை ஒருவரும் இங்கிருந்து போகமாட்டார்களென நம்புகிறேன்” என்று சொன்னார்.

வெளியில் காத்துக்கொண்டிருந்த என் கணவர் பொறுமையிழந்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியும். அவர் மாத்திரமல்ல, பாதிரியின் நன்றிகெட்ட நடத்தையினால் நானும் பொறுமையிழந்தேன். ஆகவே, கையில் குழந்தையுடனும் கண்களில் கண்ணீருடனும் எல்லாரும் பார்த்துக்கொண்டிருக்க நான் சர்ச்சைவிட்டு வெளியே வந்தேன். இனி ஒருபோதும் எந்தச் சர்ச்சோடும் தொடர்புகொள்வதில்லை என்று அப்போதே தீர்மானித்துவிட்டேன். நான் சர்ச்சுக்குப் போவதை நிறுத்திவிட்டாலும், கடவுளில் என்னுடைய விசுவாசம் குறையவில்லை. நான் என்னுடைய பைபிளைத் தொடர்ந்து வாசித்து, ஒரு நல்ல மனைவியாக இருக்க முயற்சி செய்தேன்.

பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளுதல்

எங்களுடைய இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு, டெக்ஸஸுக்கு மாறிச்சென்ற எங்களுடைய நண்பர்கள் தாங்கள் வசித்த வீட்டை எங்களுக்கு வாடகைக்கு விடும்படி ஹவுஸ் ஓனரிடம் பேசி சம்மதிக்க வைத்தனர். என்னுடைய தோழி பாட் மாறிச்செல்லும்போது, ஒரு பெண்மணி தனக்கு பணம் கொடுக்கவேண்டும் என்றும் பணத்தோடு அவர் வருவார் என்றும் சொன்னாள். தனக்கு அதை தபால் மூலம் டெக்ஸஸுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டாள். ஒருசில நாட்கள் கழித்து, இரண்டு பெண்மணிகள் என் வீட்டுக்கதவை தட்டினர். பாட்-க்கு கொடுக்கவேண்டிய பணத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று நினைத்து, அவர்களை உடனே உள்ளே அழைத்தேன். பாட் இடம் மாறிச்சென்றுவிட்டாள் என்றும் ஆனாலும் அவர்கள் வருவார்கள் என்று சொல்லியிருந்தாள் என்றும் அவர்களிடம் விளக்கினேன். “பாட் அப்படிச் சொன்னது நல்லதாப் போச்சு, அவர்களோடு படிப்பதை நாங்கள் அனுபவித்தோம்” என்று அவர்களுள் ஒருவரான ஷார்லீன் பரன் என்பவர் கூறினார்.

“என்ன? படித்தீர்களா? நீங்கள் தவறான இடத்திற்கு வந்துவிட்டீர்கள் என நினைக்கிறேன்” என்றேன். பாட்-உடன் ஒரு பைபிள் படிப்பை தொடங்கியிருந்ததாக ஷார்லீன் விளக்கினார். பாட் மாறிச்சென்றதை அறிந்தவுடன், நான் பைபிளை படிக்க விரும்பினேனா என்று ஷார்லீன் என்னிடம் கேட்டார். “நிச்சயமாக, நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் எதையும் நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறினேன். நான் செய்திருந்த பைபிள் வாசிப்பைக் குறித்துப் பெருமையுள்ளவளாக, அவர்களை என்னால் உற்சாகப்படுத்த முடியும் என்று நினைத்தேன்.

நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியம் புத்தகத்தை ஷார்லீன் என்னிடம் காண்பித்தார்; மேலும் சங்கீதம் 37:9-ஐ நாங்கள் வாசித்தோம்: “பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.” எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய சொந்த பைபிளிலேயே, ஜனங்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்று இருந்தது. அதற்குப் பிறகு சரமாரியாக கேள்விகள் எழுந்தன. ஷார்லீன் புன்முறுவலுடன் “ஹேய், கொஞ்சம் பொறு! ஒவ்வொரு கேள்வியாக சிந்திப்போம்” என்று கூறினார். ஒரு ஒழுங்கான, படிப்படியான பைபிள் படிப்பின் அவசியத்தை அவர் சுட்டிக்காண்பித்தார். அத்தருணமே, யெகோவாவின் சாட்சிகள் கூடும் இடமாகிய இராஜ்ய மன்றத்திற்கு என்னை அழைத்தார்.

எனக்கு சர்ச்சில் காணிக்கைத் தட்டுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை ஷார்லீனிடம் கூறி, மறுபடியும் சர்ச்சுக்குப் போக விரும்பவில்லை என்று கூறினேன். “இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” என்று சொல்லுகிற மத்தேயு 10:8-ஐ எனக்குக் காண்பித்தார். யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் காணிக்கைத் தட்டு எதுவும் அனுப்பப்படுவது இல்லை எனவும் எல்லா காணிக்கைகளும் மனமுவந்து கொடுக்கப்படுபவை எனவும் விளக்கினார். மேலுமாக, மன்றத்தில் காணிக்கைப் பெட்டி இருக்கும் என்றும் விருப்பமுள்ளவர்கள் தங்கள் காணிக்கைகளை அதில் போடலாம் என்றும் கூறினார். மதத்தை மறுபடியும் முயற்சி செய்துபார்க்கலாம் என்று நினைத்தேன்.

என்னுடைய பைபிள் படிப்பில் நான் முன்னேறுகையில், பெந்தெகொஸ்தே சர்ச்சில் அந்நிய பாஷையில் நான் பேசியபோது ஏன் அசௌகரியமாக உணர்ந்தேன் என்பதைப் புரிந்து கொண்டேன். கடவுளுடைய பரிசுத்த ஆவியைக் கொண்டிருந்ததற்கான அத்தாட்சியாக பூர்வ கிறிஸ்தவர்களுக்கு அந்நிய பாஷைகளில் பேசும் வரம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த அற்புதகரமான வரம், பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளில் வித்தியாசப்பட்ட தேசங்களிலிருந்து வந்திருந்த மக்களுக்கு பைபிள் சத்தியங்களை தெரியப்படுத்துவதற்கான ஒரு நடைமுறையான நோக்கத்தையும் சேவித்தது. (அப்போஸ்தலர் 2:5-11) என்றபோதிலும், அந்நிய பாஷைகளில் பேசும் வரமானது காலப்போக்கில் முடிவடையும் என்று பைபிள் கூறியது; அப்போஸ்தலருடைய மரணத்திற்கு பிறகு அவ்வாறே ஆனது. (1 கொரிந்தியர் 13:8) ஆனால் ஜனங்களுடைய மனதைக் குருடாக்குவதற்காக, சாத்தானும் அவனைச் சேர்ந்த பேய்களும் சிலரை சம்பந்தமில்லாமல் உளறும்படி செய்திருக்கின்றன. இதைப் பார்க்கும் மற்றவர்கள், அவர்களிடம் கடவுளுடைய பரிசுத்த ஆவி இருக்கிறது என்று நம்பும்படி இது செய்திருக்கிறது.—2 கொரிந்தியர் 4:4.

குடும்பத்தில் எதிர்ப்பு

சீக்கிரத்திலேயே, பூமிக்கான கடவுளுடைய நோக்கத்தையும் நான் இந்த பொல்லாத உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டேன். (யோவான் 17:16; 18:36) மேலும், பைபிளில் உலகப் பொய்மதப் பேரரசுக்கு அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் மகா பாபிலோனுடன் எல்லாத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்ளவேண்டும் என்றும் கற்றுக்கொண்டேன். (வெளிப்படுத்துதல் 18:2, 4) இந்தமுறை ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டப்பட போகிறேன் என்று அப்பாவிடம் சொன்னபோது, அவர் துக்கத்தில் ஆழ்ந்துப் போனார். ஒரு சாட்சியாக வேண்டாம் என்று அவர் என்னிடம் கெஞ்சினார். அவர் அழுது நான் பார்த்தது அதுவே முதல் தடவை. நான் உண்மையில் அவரை வருத்தப்படுத்த நினைக்காததால், அவரோடு சேர்ந்து நானும் அழுதேன். ஆனால், நான் சத்தியத்தை கண்டுபிடித்திருந்ததால் இனி யெகோவாவை ஒருபோதும் அசட்டை செய்ய முடியாது என்று அறிந்திருந்தேன்.

நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக ஆவதைக் குறித்து என் முழு குடும்பமும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதனால், கூட்டங்களுக்குப் போவதை கொஞ்சகாலம் நிறுத்தினேன். இது குடும்ப அங்கத்தினரிடமிருந்து வந்த எதிர்ப்பை நீக்கியது; ஆனால் எனக்கு அதிக கஷ்டமாக இருந்தது. நான் யெகோவாவுடைய சித்தத்தை செய்தால் மட்டுமே சமாதானம் அனுபவிக்க முடியும் என்று அறிந்திருந்தேன். ஒருநாள் உணவு இடைவேளையின்போது, ஷார்லீன் வீட்டிற்குச் சென்று நான் முழுக்காட்டுதல் பெற வேண்டும் என்று கூறினேன். “முதலில், நீ கூட்டங்களுக்கு மறுபடியும் வர ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கவில்லையா?” என்று அவர்கள் கேட்டார்கள். இந்த முறை எனக்கும் யெகோவாவுக்கும் இடையில் எதையும் அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று அவர்களிடம் கூறினேன். செப்டம்பர் 19, 1973-ல் நான் முழுக்காட்டப்பட்டேன்.

அது 23 வருடங்களுக்கு முன் நடந்தது. சந்தோஷகரமாக, என்னுடைய குடும்பம் என் தீர்மானத்தை மதிக்க ஆரம்பித்திருக்கிறது. இப்போது சத்தியத்தை விட்டுவிடும்படி ஒருவரும் என்னை வற்புறுத்தாததால் நான் அதை மிகவும் போற்றுகிறேன். இதுவரை, என்னுடைய மூத்த மகள் கிம் மட்டுமே ஒரு சாட்சியாக மாறியிருக்கிறாள். யெகோவாவுக்கான அவளுடைய உத்தமமான சேவையானது வருடங்களினூடே எனக்கு அதிகமான உற்சாகத்தின் ஊற்றுமூலமாக திகழ்ந்திருக்கிறது.

மறக்கமுடியாத ஒரு சந்திப்பு

1990-ல், வர்ஜீனியாவிலுள்ள கோபர்னுக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, ஞாயிற்றுக்கிழமை கூட்டங்கள் எத்தனை மணிக்கு ஆரம்பமாகும் என்று பார்ப்பதற்காக இராஜ்ய மன்றத்தில் சற்று நிறுத்தும்படி அம்மாவிடம் கூறினேன். காரை நிறுத்துவதற்காகச் செல்கையில், மன்றத்திற்குப் பின்னால் இரயில் தண்டவாளங்களுக்கு அப்பால் ஒரு வீட்டில்தான் நாங்கள் முன்பு குடியிருந்தோம் என்று அம்மா சொன்னார்கள். அந்த வீடு பல வருடங்கள் முன்பே எறிந்துவிட்டிருக்கிறது; ஒரே ஒரு செங்கல் புகைப்போக்கி மட்டும் இருந்தது. “அப்போது நீ மூன்று அல்லது நான்கு வயது சிறுமியாகவே இருந்தாய்” என்று அம்மா சொன்னார்கள்.

ஞாயிற்றுக்கிழமை இராஜ்ய மன்றத்தில் நான் அன்போடு வரவேற்கப்பட்டேன். ஸ்டெஃபர்ட் ஜார்டன் என்பவருடன் பேசும்போது, ஒரு சின்னப்பிள்ளையாக இருக்கையில் இராஜ்ய மன்றத்திற்குப் பின்னாலிருந்த வீட்டில் குடியிருந்தோம் என்று பேச்சுவாக்கில் சொன்னேன். அவர் என்னை உன்னிப்பாகப் பார்த்தார். “எனக்கு உன்னை நினைவிருக்கிறது! நீ இவ்வளவு உயரமான [தன் கையால் உயரத்தைக் காட்டினார்], பொன்னிறமான முடியைக் கொண்ட, ஒரு சிறு பெண்ணாக இருந்தாய். நாங்கள் இந்த பிராந்தியத்தில் ஊழியம் செய்தபோது என் நண்பர் உன் அப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தார். நீ அவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்பதற்காக நான் பரதீஸைப் பற்றி உன்னிடம் பேசிக் கொண்டிருந்தேன்” என்று ஆச்சரியம் பொங்கக் கூறினார்.

நான் வாயடைத்துப் போனேன். பைபிள் சத்தியத்தை நான் தேடியதை பற்றி அவரிடம் கூறும்போது என் தொண்டை அடைத்துக் கொண்டது. “நான் ஒரு சிறிய குழந்தையாக இருந்தபோதே, என்னுடைய சின்ன இருதயத்தில் சத்தியத்தின் விதைகளை நீங்கள் விதைத்தீர்கள்!” என்று சொன்னேன். பிறகு, என்னுடைய தாத்தா வழியில் எனக்கு சொந்தக்காரரான ஸ்டீவன் டிங்கஸ் என்ற உண்மையுள்ள ஒரு சாட்சியாக இருந்தவரைப் பற்றி அவர் என்னிடம் சொன்னார். என்னுடைய குடும்பம் அவரை அவ்வளவு அதிகமாக எதிர்த்ததனால், அவரைப் பற்றி பேசினதேயில்லை. “அவர் உன்னை பற்றி அதிகமாக சந்தோஷமடைந்திருப்பார்!” என்று சகோதரர் ஜார்டன் சொன்னார்.

யெகோவாவுடைய அமைப்பில் நானிருந்த இத்தனை வருடங்களை பின்னோக்கிப் பார்க்கும்போது, எனக்குக் காண்பிக்கப்பட்ட அன்பிற்காகவும் தயவிற்காகவும் நான் உண்மையிலேயே நன்றியுடையவளாக இருக்கிறேன். இராஜ்ய மன்றத்தில் குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து யெகோவாவை சேவிப்பதைப் பார்க்கும்போது, எனக்கு கொஞ்சம் கவலையாக தான் இருக்கும்; ஏனென்றால், அநேகமாக நான் தனியாகத் தான் அங்கிருப்பேன். ஆனால், உடனே யெகோவா என்னோடு இருக்கிறார் என்று ஞாபகப்படுத்திக் கொள்வேன். அவர் எப்பொழுதும் என்னை கவனித்துக் கொண்டிருந்தார். ஆகவே தான், பல வருடங்களுக்கு முன்பு ஒரு சிறிய குழந்தையின் காதில் சொல்லப்பட்ட சத்தியத்தை, என் இருதயம் ஏற்றுக்கொள்ளத் தயாரானபோது அது துளிர்த்து, பூக்கும்படி அவர் அனுமதித்தார்.

“ஒரு சுட்டிப்பெண்ணிடம் பரதீஸை பற்றி பேசுவதற்கு நேரம் எடுத்துக் கொண்டதற்காக உங்களுக்கு நன்றி, சகோதரர் ஜார்டன்!” என்று கூறினேன்.—லவிஸ் லாசன் சொன்னபடி.

[பக்கம் 13-ன் படம்]

1990-ல் ஸ்டெஃபர்ட் ஜார்டனை நான் மறுபடியும் சந்தித்தபோது அவருடன்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்