சிங்கப்பூர்—ஆசியாவின் ஒளியிழந்த இரத்தினம்
ட..ங்! போதாத காலம், சக்தியற்ற 71-வயது கிறிஸ்தவ விதவை ஒருவர் உள்ளே நுழைய, சிங்கப்பூரிலுள்ள சாங்கி பெண்கள் சிறையின் கனமான ஸ்டீல் கதவுகள் மூடுகின்றன. அந்த விதவை, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக, “இந்த அரசாங்கத்திற்கு நான் எந்த விதத்திலும் கெடுதல் செய்யமாட்டேன்” என்று சொல்லி, நீதிபதியிடம் தனது நிலைநிற்கையை விளக்க முயற்சித்தார்.
ட..ங்! இம்முறை சிறையிலடைக்கப்படுவது, 72-வயது பாட்டியம்மா; இவரும் ஒரு கிறிஸ்தவர். இவர் செய்த குற்றம்? உவாட்ச் டவர் சங்கத்தின் நான்கு பைபிள் பிரசுரங்களையும், சொந்தமாக ஒரு பைபிளையும் வைத்திருந்ததுதான்.
மொத்தத்தில், 16-லிருந்து 72 வயதுக்குட்பட்ட 64 சிங்கப்பூர்வாசிகள் கைது செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டனர். அவர்களில் நாற்பத்தேழு பேர் அபராதத் தொகையை செலுத்த மறுத்துவிட்ட காரணத்தால் ஒன்றிலிருந்து நான்கு வாரங்கள்வரை வெவ்வேறு காலப்பகுதிகளுக்கு சிறையில் போடப்பட்டனர். உலகிலேயே, வாழ்வதற்கு தலைசிறந்த இடங்களில் ஒன்று என கருதப்படும் ஒரு சுய ஆட்சி நகரத்தில் எப்படி இது நடந்தது? பொருளாதார ஸ்திரத்திற்காகவும், குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்காகவும், நவீன கட்டிடங்களுக்காகவும், மத சகிப்புத்தன்மை என சொல்லிக்கொள்ளப்படும் ஒன்றிற்காகவும்கூட உலகப் புகழ்பெற்றிருக்கும் ஒரு சுய ஆட்சி நகரத்தில் இது எப்படி நடந்தது?
ஒரு நவீன சுய ஆட்சி நகரம்
முதலில், வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்க்கலாம். பிரிட்டனைச் சேர்ந்த சர் தாமஸ் ஸ்டாம்ஃபர்ட் ராஃபல்ஸ் என்பவரின் வருகையால் 1819-ல் சிங்கப்பூரின் நவீன நாளைய வரலாறு ஆரம்பமானது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஒரு பிரதிநிதியான ராஃபல்ஸ், கிழக்கத்திய உலகில் வாணிகத்தைத் தொடங்குவதற்காக ஒரு இடத்தைத் தேடினார். பின் அவர் அதற்காக சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்தார். இதுவே, இந்நாள் வரைக்கும் கிழக்கு ஆசியாவின் வளர்ச்சியில் பங்குவகித்திருக்கும் ஒரு வாணிக மையம் உருவான வரலாறு.
சுதந்திரத்திற்கு முன்பு சிங்கப்பூர் அசுத்தமான நகரமாக விவரிக்கப்பட்டது. இன்று சிங்கப்பூரை அவ்வாறு எவரும் விவரிக்கமாட்டார்கள். இப்போது அது நேரெதிராக இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக, நகரம் கிட்டத்தட்ட முழுமையாகவே புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பழைய கட்டிடங்களின் முகப்பைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலமாகவோ சரித்திர புகழ்பெற்ற கட்டிடங்களோடு புதிய கட்டிடங்களை இணைத்து நவீனமாக்குவதன் மூலமாகவோ, பழைய நகரத்தின் சாயல் முடிந்தவரை அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிங்கப்பூர் கிழக்கில் கடல்வழிப் போக்குவரத்தின் மைய சந்திப்பிடமாக ஆகியிருக்கிறது; எப்போதுபார்த்தாலும் துறைமுகத்தில் 800 கப்பல்களாவது நின்றுகொண்டிருக்கும். நவீன அதிநுட்ப கருவியைக்கொண்டு சில மணிநேரங்களிலேயே மிகப் பெரிய சரக்குக் கப்பலில் சரக்குகள் ஏற்றியும் இறக்கியும் வைக்கப்படுகின்றன. நகரத்தின் நிலவர விலையின்படி, ஒரு சதுர அடி ரியல் எஸ்டேட்டின் மதிப்பு 5,000 டாலரோ அதற்கும் அதிகமோ ஆகும்; அவ்வளவு பணத்தை அங்குள்ள மக்களும் கொடுக்க தயாராய் இருக்கின்றனர்.
அதன் மக்கள்தொகை கிட்டத்தட்ட 34,00,000 ஆகும்; அங்கு சீனர், மலாய் இனத்தவர், இந்தியர், ஐரோப்பியர் என இன்னும் பல வித்தியாசமான இனத்தவர் வாழ்கின்றனர். அவர்கள் பேசும் மொழிகளில் சில, மான்டரின், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகியவையாகும்.
எண்பத்தி மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள மேற்புற மற்றும் பாதாள அதிவேக போக்குவரத்து, சிங்கப்பூரை உலகிலுள்ள அதிநவீன, திறம்பட்ட போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக திகழச்செய்கிறது. உயரமான நவீன கட்டிடங்களுக்கு இடையிடையே பசும் பூங்காக்கள் நகர் முழுவதும் அதிகப் பரவலாக காணப்படுகின்றன. முதன்முதலில் சிங்கப்பூரை சுற்றிப்பார்க்க செல்வோர் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஓர் இடம், முழுக்க முழுக்க புதுப்பிக்கப்பட்ட ராஃபல்ஸ் ஹோட்டல் ஆகும்; இது 1889-ல் கட்டப்பட்டதன் காரணமாக இப்போது தேசிய நினைவுச் சின்னமாக்கப்பட்டிருக்கிறது. அதற்கடுத்து பார்க்க வேண்டிய இடம், 128 ஏக்கரில் அமைந்துள்ள தாவரவியல் மற்றும் தோட்டக்கலை மையம்; இதில் பத்து ஏக்கர், முன்பு புலிகள் உலாவிய இடமான, பாதுகாக்கப்பட்டுள்ள காடாகும்.
மத சுயாதீனம் வாக்களிக்கப்படுகிறது
ஒப்பிட முடியாத அதன் பொருளாதார வளர்ச்சியைப் பூர்த்திசெய்யும் விதத்தில், சிங்கப்பூர் எல்லா குடிமக்களுக்கும் மத சுயாதீனத்தை வாக்களிக்கிறது. வருத்தம் என்னவென்றால், கொடுத்த வாக்கை சிங்கப்பூர் காப்பாற்றவில்லை. அதுவும் முக்கியமாக யெகோவாவின் சாட்சிகளது சபையோடு கூட்டுறவுகொள்ளும் மக்கள் இதை உண்மையென கண்டிருக்கின்றனர்.
சிங்கப்பூர் குடியரசின் அரசமைப்பு, சட்டப்பிரிவு 15(1)-ல், வணக்க சுயாதீனத்திற்கான அடிப்படை உத்தரவாதத்தை அளிக்கிறது: “ஒவ்வொரு நபருக்கும், தனது மதத்தை பகிரங்கமாக தெரிவிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை இருக்கிறது.”
அரசமைப்பின் சட்டப்பிரிவு 15(3) இவ்வாறு உறுதியளிக்கிறது: “ஒவ்வொரு மத குழுவிற்கும் பின்வருபவற்றைச் செய்ய உரிமை இருக்கிறது
(அ) அதன் சொந்த மத விவகாரங்களைக் கையாளுவதற்கும்;
(ஆ) மத அல்லது தரும ஸ்தாபனங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும்; மற்றும்
(இ) சட்டத்திற்கு இசைய சொத்துக்களை வாங்குவதற்கும், சொந்தமாக வைத்துக்கொள்வதற்கும், பொறுப்பேற்று கவனித்துக்கொள்வதற்கும்.”
1936-ம் வருடத்திலேயே, யெகோவாவின் சாட்சிகள் சிங்கப்பூர் சமுதாயத்தின் பாகமாக இருந்தனர். அநேக வருடங்களாக தங்களது சொந்த ராஜ்ய மன்றத்தில் தவறாமல் சபைக் கூட்டங்களை நடத்திவந்தனர்; நம்பர் 8, எக்ஸடர் சாலையில், சந்தடி நிறைந்த மார்க்கெட்டிற்கு நேரெதிரே அந்த ராஜ்ய மன்றம் அமைந்திருந்தது. சபை, செழித்தோங்கியது மாத்திரமல்லாமல் சமுதாய வாழ்வின் ஸ்திரத்தன்மைக்கும் தனித்தன்மை வாய்ந்த விதத்தில் பங்களித்தது.
யெகோவாவின் சாட்சிகளுக்கு தடை
இவை அனைத்தும் ஜனவரி 12, 1972-ல் மாறிவிட்டன. நாடுகடத்தல் அரசாங்க சட்டத்தின் 109-வது அத்தியாயத்தின்கீழ், 23 வருடங்களாக சிங்கப்பூரில் வசித்துவந்த கிறிஸ்தவ மிஷனரிகளான நார்மன் டேவிட் பலாட்டி, அவரது மனைவி க்ளாடிஸ் ஆகிய இருவரையும் நாட்டைவிட்டு வெளியேறச்சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் விரைவிலேயே யெகோவாவின் சாட்சிகளது சிங்கப்பூர் சபையை அதிகாரப் பதிவேட்டிலிருந்து நீக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில மணிநேரங்களிலேயே, ராஜ்ய மன்றத்தின் முன்கதவு வழியே போலீஸ் நுழைந்து அதைக் கைப்பற்றியது. உடனேயே, உவாட்ச் டவர் சங்கத்தின் எல்லா பிரசுரங்களுக்கும் சட்டப்படி தடைவிதிக்கப்பட்டது. இப்படியாக யெகோவாவின் சாட்சிகள் ஒடுக்கப்படுவது ஆரம்பமானது.
சிங்கப்பூர் அரசாங்கம், சட்டப்படி அல்லாமல் அதன் விருப்பப்படி அந்த ராஜ்ய மன்றத்தை பிற்பாடு விற்றுவிட்டது; ஆனால் இதை எந்த முன்னறிவிப்புமின்றி செய்தது; கேள்விமுறை இல்லை, விசாரணை இல்லை, மறுமொழி கூற வாய்ப்பில்லை.
இந்தத் தடையுத்தரவு நியாயம்தான் என காண்பிக்க, யெகோவாவின் சாட்சிகள் இராணுவத்தில் சேர்ந்துகொள்ளாத காரணத்தையே சிங்கப்பூர் அரசாங்கம் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டியிருக்கிறது. டிசம்பர் 29, 1995-ல், ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாட்டின் நிரந்தர சிங்கப்பூர் பிரதிநிதியான திரு. கே. கேசவபானி, ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாட்டின் மனித உரிமைக்கான பொதுத் துணைச் செயலரான மேதகு இப்ராஹிம் ஃபாலுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருபவற்றை குறிப்பிட்டார்:
“தேசிய பாதுகாப்பைக் கருதியே யெகோவாவின் சாட்சிகளுடைய இயக்கத்தை என் அரசாங்கம் தடை செய்திருக்கிறது. இந்த இயக்கம் தொடர்ந்து செயல்பட்டால் சிங்கப்பூரின் பொது நலனுக்கும் ஒழுங்கிற்கும் கேடு விளையும். யெகோவாவின் சாட்சிகள் அதிகாரப் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டதை பின்தொடர்ந்து, அவர்களது எல்லா பிரசுரங்களுக்கும் தடைவிதிப்பது அவசியம் ஆனது; இவ்வாறு இந்த இயக்கத்தின்மீதான தடை இன்னும் வலுப்படுத்தப்பட்டு, அவர்களது நம்பிக்கைகள் பரப்பப்படுவதையும் பரவலாக அறியப்படுவதையும் அது தடுத்தது.”
சிங்கப்பூரின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தென சொல்லி அரசாங்கம் தெரிவிக்கும் எதிர்ப்பை கருத்தில் எடுத்துக்கொண்டால், வருடத்திற்கு கிட்டத்தட்ட ஐந்து பேர் என்ற கணக்கில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர மறுக்கின்றனர் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். சிங்கப்பூர் ராணுவத்தில் சுமார் 3,00,000 பேர் இருக்கின்றனர். சில நபர்களுக்காக, சிங்கப்பூர் அரசாங்கம் ராணுவம் சாராத தேசிய சேவையைப் பற்றி கலந்தாலோசிக்கக்கூட மறுத்துவிட்டிருக்கிறது.
வெளிப்படையான ஒடுக்குதல்
பல வருடங்களாக தடை அவ்வளவு கண்டிப்புடன் செயல்படுத்தப்படாவிட்டாலும், 1992-ல் மனித உரிமையின் வெளிப்படையான ஒடுக்குதல் என்ற புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது; பிரசுரங்களை வைத்திருந்த குற்றத்திற்காக அந்த வருடத்தில், விரும்பத்தகாத பிரசுர சட்டத்தின்கீழ் அநேகர் கைதானார்கள். 1994-ல், வழக்கறிஞரும் வாழ்க்கை முழுவதும் யெகோவாவின் சாட்சியாக இருந்திருப்பவரும் ராணியின் பாரிஸ்டருமான (queen’s counsel) 75 வயது டபிள்யூ. க்ளென் ஹௌ என்பவரை உவாட்ச் டவர் சங்கம் சிங்கப்பூருக்கு அனுப்பியது. ராணியின் பாரிஸ்டர் என்ற பதவியின் காரணமாக அவரால் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் பிரதிநிதியாக செயல்பட முடிந்தது. மத உரிமையின்பேரில் அரசமைப்பு அளித்திருக்கும் உத்தரவாதத்தை கருத்தில்கொண்டு, சிங்கப்பூரின் உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது; அநேகர் கைதுசெய்யப்பட்டதைப் பற்றியும் 1972-ல் விதிக்கப்பட்ட தடையைப் பற்றியும் சட்டப்படி கேள்வியும் எழுப்பப்பட்டது. ஆகஸ்ட் 8, 1994-ல், சிங்கப்பூர் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான யாங் பங் முறையீட்டை நிராகரித்துவிட்டார். இந்தத் தீர்மானத்திற்கு எதிரான எந்தக் கூடுதலான முறையீடும் பலனளிக்கவில்லை.
1995-ன் ஆரம்பத்தில், சிங்கப்பூர் அரசமைப்பின் அடிப்படையில் எழுப்பப்பட்ட சட்ட எதிர்ப்பு இன்னுமதிக ஒடுக்குதலை தூண்டிவிட்டதாக தோன்றியது. இயங்குமுறை நடவடிக்கை என்ற இராணுவ-பாணி திட்டத்தின்கீழ், குற்றவியல் புலனாய்வுத் துறையின் இரகசிய சங்கத்தின் கிளையைச் (Secret Societies Branch) சேர்ந்த துப்பறியும் அதிகாரிகள், வீடுகளில் நடைபெற்ற அநேக சிறிய கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். கிட்டத்தட்ட 70 அதிகாரிகளும் துணை அதிகாரிகளும் அதிரடி படையினர்போன்று திடீர் தாக்குதல் நடத்தி 69 நபர்களை கைதுசெய்தனர். அவர்கள் அனைவரும் விசாரணை மன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; சிலர் ராத்திரி முழுவதும் விசாரிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருமே யெகோவாவின் சாட்சிகளது கூட்டங்களுக்குச் சென்றதற்காகவும் பைபிள் பிரசுரங்களை வைத்திருந்ததற்காகவும் குற்றம் சாட்டப்பட்டனர். சிலர், தங்களது குடும்பத்தாருக்கு ஃபோன்கூட செய்ய முடியாத நிலையில் 18 மணிநேரங்களுக்கு தனிக்காவலில் வைக்கப்பட்டனர்.
அயல்நாட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விலக்கப்பட்டன. ஆனால் சிங்கப்பூர் குடிமக்களில் 64 பேர் 1995-ன் பிற்பகுதியிலும் 1996-ன் ஆரம்பப் பகுதியிலும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டனர். அந்த 64 பேரும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டனர். 16 முதல் 72 வயதுவரையான நாற்பத்தேழு பேர், ஆயிரக்கணக்கான டாலர் அபராதத்தை கட்ட மறுத்துவிட்டதால் ஒன்றிலிருந்து நான்கு வாரங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறைக்கூடத்தில் போடப்படுவதற்கு முன், ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, அநேகர் முன்பாக சோதனை செய்யப்பட்டனர். சில பெண்கள், தங்களது கைகளை நீட்டி, ஐந்து முறை குந்தி உட்கார்ந்து, வாயைத் திறந்து, நாக்கை உயர்த்தும்படி சொல்லப்பட்டனர். குறைந்தது ஒரு பெண்ணாவது தனது மலவாயை விரல்களால் திறக்குமாறு சொல்லப்பட்டார். சிறையில், சில ஆண்கள், கக்கூஸ் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டியிருந்தது. சில இளம் பெண்கள் ஆபத்தான குற்றவாளிகளைப்போல் நடத்தப்பட்டனர்; அவர்கள் தண்டனைக்காலம் முழுவதும் தனிக்காவலில் வைக்கப்பட்டு, சாதாரண பங்கில் பாதியளவு உணவையே பெற்றனர். சில சிறை வார்டன்கள் சாட்சிகளுக்கு அவர்களது பைபிளைக் கொடுக்கக்கூட மறுத்துவிட்டனர்.
ஆனால் சிறைப்படுத்தப்பட்ட சில பெண்கள் சொன்ன சில குறிப்புகளை நாம் கவனிக்கலாம். அவர்களது நேரடி அறிக்கைகள், இந்த நவீன நகரத்தின் சுத்தமான புறத்தோற்றத்திற்கு நேரெதிராக இருந்தன.
“சிறைக்கூடம் அழுக்காக இருந்தது. வாஷ்பேசினும் கக்கூஸும் பார்க்க முடியாதளவுக்கு மோசமாய் இருந்தன. அவை பிசுபிசுப்பாகவும் அசுத்தமாகவும் இருந்தன. நான் உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு கீழே ஒரே சிலந்திவலையும் தூசியுமாக இருந்தது.”
“துணிகளையெல்லாம் கழற்றுமாறு என்னிடம் சொன்னார்கள், ஒரு செட் சிறை ஆடையும், (சோப்பு இல்லாமல்) ஒரு சோப் டப்பாவும், பல் தேய்க்க பிரஷும் கொடுத்தார்கள். சிறிது காலம் சிறையிலிருப்பவர்களுக்கு டூத்பேஸ்ட்டோ டாய்லட் பேப்பரோ கொடுக்கமாட்டார்கள் என மற்ற சிறைக்கைதிகள் என்னிடம் சொன்னார்கள்.”
“ஒரே அறையில் நாங்கள் 20 பேர் இருந்தோம். அந்தக் கழிப்பிடம், குந்தி உட்காரும் விதமாக இருந்தது; என் இடுப்பளவுக்குத்தான் சுவர் இருந்தது. குளியலறையில் ஒரேவொரு ஷவரும் ஒரு குழாயுடன்கூடிய ஒரு வாஷ்பேஸினும் இருந்தன. நாங்கள் ஆறு ஆறு பேராக குளிக்கவேண்டியிருந்தது—ஒரு அறையிலிருந்த நாங்கள் அனைவருமே காலையில் அரை மணிநேரத்திற்குள் குளித்து முடிக்கவேண்டியிருந்தது.”
சிறையிலடைக்கப்பட்ட வேதனையின் மத்தியிலும், எப்போதிருந்தாலும், எங்கிருந்தாலும், சூழ்நிலைகள் என்னவாயிருந்தாலும் கடவுளை சேவிப்பதை ஒரு சிலாக்கியமாக அனைவரும் கருதினார்கள். ஒரு பருவவயது பெண் சொன்னவற்றைக் கவனியுங்கள்:
“நான் சிறைக்குள் காலடி எடுத்த வைத்த நிமிஷம் முதற்கொண்டு, நான் எதற்காக அங்கே இருந்தேன் என்பதை தொடர்ந்து ஞாபகப்படுத்திக்கொண்டேன். ஒவ்வொரு நாளும் நான் யெகோவாவிடம் என் ஜெபத்தைக் கேட்குமாறும் என்னைக் கைவிடாதமாறும் கேட்டு ஜெபம் செய்தேன். அவர் என் ஜெபத்திற்கு பதிலளித்ததாக உணர்ந்தேன், ஏனென்றால் அவரது பரிசுத்த ஆவியின் உதவியால்தான் என்னால் சகித்திருக்க முடிந்தது. அப்போதுதான் அவரோடு இருந்த நெருக்கத்தை நான் உணர்ந்தேன்; அவர் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்தது என்னைப் பெரிதும் பலப்படுத்தியிருக்கிறது. அவரது பெயருக்காக இந்தச் சோதனைகளை எதிர்ப்படுவதை நான் சிலாக்கியமாக நினைக்கிறேன்.”
உலகம் முழுவதும், செய்தித்தாள்கள் இந்தச் சம்பவத்தை அறிந்துகொண்டன. ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பா, ஹாங் காங், மலேசியா, ஐக்கிய மாகாணங்கள் மற்றும் பிற இடங்களைச் சேர்ந்த செய்தித்துறை, நடந்தவற்றை மறுபடியும் மறுபடியுமாக எதிரொலித்தது. கனடாவின் த டோரன்டோ ஸ்டார், அந்தச் சமயத்தின் சீற்றத்தை இந்தத் தலைப்பில் சுருக்கமாக சொன்னது: “பைபிளை வைத்திருந்ததற்காக பாட்டி குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.” இன்னுமதிக மக்களை உட்படுத்தும் அநேக முக்கியமான பிரச்சினைகள் இவ்வுலகில் இருக்கின்றன என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், ஆனால் இந்தச் சம்பவத்தைப் பொருத்தவரை எங்குமுள்ள மக்கள் திகைத்துப்போய் கேட்கும் ஒரே கேள்வி: “சிங்கப்பூரிலா இப்படி?”
உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் சட்டத்தின் முழு பாதுகாப்போடு பகிரங்கமாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு மதம், ஏன் சிங்கப்பூரில் துன்புறுத்தலுக்கு இலக்காக வேண்டுமென்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. சிங்கப்பூரிலுள்ள மற்ற எந்த மதமும் இந்த அளவுக்கு நியாயமற்றதாகவும் சட்டப்படி அல்லாமலும் நடத்தப்படவில்லை என்பதைக் கருத்தில்கொள்கையில் இது புரிந்துகொள்ள இன்னுமதிக கடினமாகிறது.
உண்மையில், யெகோவாவின் சாட்சிகள்மீது தாக்குதல் நடத்திய கூட்டத்தாரை வழிநடத்திய போலீஸ் துணை சூப்பரின்டென்டண்ட் ஒருவர், ஒரு மத கூட்டத்தை தானும் தனது அதிகாரிகளும் கலைக்கும்படி கட்டளையிடப்பட்டது இதுவே முதன்முறை என நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். பின்வரும் மேற்கோள்கள் ஆவணச் சாட்சியத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன:
கே: (சாட்சியிடம்) உங்களுக்கு தெரிந்தவரை, இரகசிய சங்கத்தின் கிளை, யெகோவாவின் சாட்சிகளைத் தவிர, பதிவு செய்யப்படாத மற்ற எந்த மதத் தொகுதியையாவது புலனாய்வு செய்து அதன்மீது வழக்குத் தொடுத்திருக்கிறதா?
ப: எனக்குத் தெரிந்தவரை இல்லை.
பின் கேள்வி தொடர்ந்தது.
கே: (சாட்சியிடம்) சொஸைட்டி சட்டத்தின்கீழ், வீட்டில் கூடும் சிறிய, பதிவு செய்யப்படாத ஒரு மதத் தொகுதிமீது இதேபோன்ற தாக்குதலை எப்போதாவது நீங்கள் தனிப்பட்ட விதமாக நடத்தியிருக்கிறீர்களா?
ப: இல்லை.
நடவடிக்கை எடுப்பதற்கான அழைப்பு
அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இன்டர்நேஷனல் பார் அசோஸியேஷன் ஆகிய இரண்டுமே, விசாரணைகளின் நாணயத்தைக் கண்காணிக்க அவற்றின் சொந்த விசேஷ பார்வையாளர்களை அனுப்பி வைத்தன. அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் நடுநிலைமை வகித்த பார்வையாளராக, ஹாங் காங் பாரிஸ்டரான ஆன்ட்ரூ ராஃபல் இவ்வாறு சொன்னார்: “ஒரு போலி விசாரணையைப்போல் அது காட்சியளித்தது என எனது அறிக்கையில் எழுதினேன்.” யெகோவாவின் சாட்சிகளது பிரசுரம் ஏன் விரும்பத்தகாதது என்பதை சாட்சிகளாக அழைக்கப்பட்ட அரசாங்க அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு விளக்க முடியவில்லை என அவர் கூடுதலாக சொன்னார். மகிழ்ச்சி
அதைக் கண்டடைவது எப்படி (ஆங்கிலம்), உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் ஆகியவை உட்பட தடைசெய்யப்பட்ட சில பைபிள் பிரசுரங்கள் சிலவற்றை ராஃபல் பட்டியலிட்டார். அவை விரும்பத்தகாதவை என உண்மையிலேயே எந்த விதத்திலும் சொல்ல முடியாது எனவும் அவர் சொன்னார்.
இன்டர்நேஷனல் பார் அசோஸியேஷனைப் பிரதிநிதித்துவம் செய்த பார்வையாளரான ஸெஸில் ராஜேன்த்ரா பின்வருமாறு சொன்னார்:
“இந்த முழு விசாரணையும் வெறுமனே, . . . சிங்கப்பூரில் இன்னமும் மக்கள் ஆட்சி நடக்கிறது என்று உலகில் வறட்டு ஜம்பம் அடித்துக்கொள்ளவே நிகழ்த்தப்பட்டது என்பது எனக்கு ஆரம்பத்திலிருந்தே மனதில் தெளிவாக பட்டது.
“விளைவு எதிர்பார்த்ததுதான்; விசாரணைக்கு முன்போ விசாரணையின்போதோ அதற்குப் பிற்பாடோ எந்தச் சமயத்திலும், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படுவர் என்பதில் துளிகூட சந்தேகம் எழவில்லை.
“விசாரணை, சார்நிலை நீதிமன்றத்தில் நடத்தப்பட்டபோதிலும், குற்றச்சாட்டுகள் சிறு சட்ட விரோத செயல்களாக இருந்தபோதிலும் நீதிமன்றத்தைச் சுற்றி கலக்கமும் பயமும் நிலவின.
“இது ஏனென்றால், சீருடை அணிந்த 10-க்கும் அதிகமான போலீஸ்காரர்கள் அங்கே நின்றுகொண்டிருந்தனர் (6 பேர் நீதிமன்றத்தின் உள்ளேயும் 4 பேர் வெளியேயும்). மேலும், இரகசிய சங்கத்தின் அநேக விசேஷ அலுவலர்கள் சாதாரண உடைகளில் காலரியில் உட்கார்ந்திருந்தனர்.”
விசாரணை நடத்தப்பட்ட விதத்தைப் பற்றி ராஜேன்த்ரா இவ்வாறு தொடர்ந்து சொன்னார்:
“கவனித்த சமயமெல்லாம் (ஆவண சாட்சியம் காண்பிக்கும் விதமாக, முழு விசாரணையின்போதும்கூட) முன்பு குறிப்பிட்ட நீதிபதியின் நடத்தை குறைபாடுள்ளதாய் இருந்தது. . . . ஒரு நியாயமான விசாரணைக்கு மாறாக, நீதிபதி மறுபடியும் மறுபடியுமாக அரசாங்கத்தின் சார்பாக தலையிட்டு, சான்றுப்பொருட்களின்பேரில் எதிர்த்தரப்பினர் அரசாங்க சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வதைத் தடுத்தார். உதாரணத்துக்கு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடைசெய்யப்பட்ட பிரசுரங்களை வைத்திருந்தனர் என்பதைக் காண்பிப்பதற்காக அரசாங்க தரப்பு வக்கீல் அளித்த கிங் ஜேம்ஸ் பைபிள் பதிப்பு!”
மனித உரிமைகளை சிங்கப்பூர் ஒடுக்குவதால் ஏற்பட்டிருக்கும் சர்வதேச அக்கறை அந்தளவுக்கு அதிகமாக இருப்பதால், எல்லைகள் இல்லாத மனித உரிமைகள் (ஆங்கிலம்) என்ற பெல்ஜியப் பத்திரிகை, யெகோவாவின் சாட்சிகள்மீது சிங்கப்பூர் அரசாங்கம் நடத்தும் தாக்குதலைக் குறித்தே 18-பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தப் பத்திரிகையின் தலைமைப் பதிப்பாசிரியரான விலி ஃபோட்ரே, எந்த நாட்டிலும் வழங்கப்படும் மனித உரிமையின் உண்மையான அளவைப் பற்றி தலையங்கத்தில் மிகவும் சுருக்கமாக விளக்கினார்:
“எந்தவொரு சமுதாயத்திலும், மனித உரிமை இருப்பதற்கான சிறந்த அடையாளங்களில் ஒன்று, மத உரிமையாக இருக்கிறபோதிலும், வெகு சில உலகப்பிரகாரமான மனித உரிமை அமைப்புகளே மதத்தின் அல்லது நம்பிக்கையின் அடிப்படையிலான பேதங்களையும் வெறுப்பையும் அகற்றுவதிலோ அல்லது மத உரிமையை பாதுகாத்து முன்னேற்றுவிக்கும் செயற்திட்டங்களை வளர்ப்பதிலோ ஈடுபடுகின்றன.”
எல்லைகள் இல்லாத மனித உரிமைகள் பத்திரிகை அதன் அறிக்கையின் பின்பக்கத்தில் தடித்த எழுத்துக்களில் அதன் பரிந்துரைகளின் பட்டியலை பிரசுரித்தது.
யெகோவாவின் சாட்சிகள் சிங்கப்பூருக்கு நன்மை செய்பவர்கள். அவர்கள் தங்களது அயலாரின் உரிமைகளை மதிக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக எந்த ஒரு குற்றத்தையும் செய்ய மாட்டார்கள். யெகோவாவின் சாட்சி ஒருவரால் தங்களது வீடு கொள்ளையடிக்கப்படுவதையோ, தாங்கள் ஏமாற்றப்படுவதையோ, அடிக்கப்படுவதையோ, கற்பழிக்கப்படுவதையோ நினைத்து எந்த சிங்கப்பூர்வாசியும் கவலைப்பட வேண்டியதில்லை.
அவர்கள் மனமுவந்து செய்யும் பொது ஊழியம், குடும்ப வாழ்க்கையைப் பலப்படுத்தி மேம்படுத்துகிறது; நல்ல குடியுரிமையையும் முன்னேற்றுவிக்கிறது. பைபிளின் தரமான நியமங்களைப் பற்றியும் அவற்றை எப்படி தங்களது வாழ்க்கையில் பொருத்தலாம் என்பதைப் பற்றியும் கற்றுக்கொள்ள விரும்பும் எவருக்கும் அவர்கள் இலவச பைபிள் படிப்பு நடத்துகின்றனர். பைபிள் படிப்பிற்காகவும் ஜெபத்திற்காகவும் அவர்கள் நடத்தும் கூட்டங்கள் அவர்களது கிறிஸ்தவ கல்வியின் ஒரு பாகமாக இருக்கிறது. இது அவர்கள் நல்ல குடிமக்களாக இருப்பதற்கு உதவியிருக்கிறது.
தங்களது குடியரசை மதித்து, அதன் எதிர்காலம் சிறந்ததாய் இருக்க வேண்டுமென விரும்பும் சிங்கப்பூர்வாசிகள், சிங்கப்பூர் சமுதாயத்தில் யெகோவாவின் சாட்சிகள் வகிக்கும் நியாயமான பங்கை வேறு விதமாய் நோக்குமாறு அந்த அரசாங்கத்தை உந்துவிக்க வேண்டும். அவர்களுக்கு எதிரான எந்தத் தீர்ப்புகளும் நீக்கப்பட்டு, ஒவ்வொரு குடிமகனது உரிமையான வணக்க சுயாதீனத்தை இப்போது அவர்களுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும்.
[பக்கம் 26-ன் பெட்டி]
உலகம் கவனித்துக்கொண்டிருக்கிறது
1.“கடந்த பிப்ரவரி மாதம் ஓர் இரவன்று, ஐந்து வீடுகளை சிங்கப்பூர் போலீஸ் இராணுவ-பாணியில் திடீரென தாக்கியபோது, 69 ஆண்களும் பெண்களும் பருவவயதினரும் கைதுசெய்யப்பட்டு, போலீஸ் பணியகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டனர். பைபிள் படிப்பு கூட்டங்கள் இந்த விதத்தில் முடிவடைவதற்கில்லை.”—தி ஒட்டாவா சிட்டிசன், கனடா, டிசம்பர் 28, 1995, பக்கம் A10.
2. “இந்தக் குற்றமற்ற, தீங்கற்ற அமைப்பின் அங்கத்தினர்களின் விஷயத்தில் சிங்கப்பூர் அரசாங்கம் தனது நிலையை மாற்றிக்கொண்டு, அவர்கள் தங்களது விசுவாசத்தை பயமோ தடையோ இல்லாமல் கடைப்பிடிக்கவும் பிரசங்கிக்கவும் அனுமதியளித்தால், மத உரிமையின்பேரிலும் மனச்சாட்சி உரிமையின்பேரிலும் அக்கறையுள்ள அனைவரும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.”—பேராசிரியர் ப்ரயன் ஆர். வில்சன், ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்ஸிட்டி, இங்கிலாந்து.
3. “தொடர்ச்சியான விசாரணைகளில் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் கடந்த நவம்பர் மாதம் முதற்கொண்டு 63 யெகோவாவின் சாட்சிகளை குற்றவாளிகளென தீர்ப்பளித்திருக்கின்றன; இதையொட்டி, சர்வதேச சமுதாய உரிமை குழுக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.”—ஆஸாஹி ஈவினிங் நியூஸ், ஜப்பான், ஜனவரி 19, 1996, பக்கம் 3.
4. “யெகோவாவின் சாட்சிகள், கைதுசெய்யப்படுவதன் அல்லது சிறையில் அடைக்கப்படுவதன் அச்சுறுத்தல் இல்லாமல் ஒன்றுகூடி தங்களது மதத்தை சமாதானமாக கடைப்பிடிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும். மத சுயாதீனம் என்பது சிங்கப்பூர் அரசமைப்பால் வாக்களிக்கப்பட்டிருக்கும் ஓர் அடிப்படை உரிமையாகும்.”—அம்னெஸ்டி இன்டர்நேஷனல், நவம்பர் 22, 1995.
5. பிரதம மந்திரியின் அலுவலகத்தைச் சேர்ந்த முதுநிலை மந்திரியான லீ க்வான் இயுவிற்கு எழுதிய ஜூன் 1, 1995 என்ற தேதியிடப்பட்ட கடிதத்தில், ஹாங் காங் கத்தோலிக்க டையஸிஸின் நீதி மற்றும் சமாதான குழுமத்தின் தலைவரான சன் சியூ-சிங் இவ்வாறு குறிப்பிட்டார்: “முக்கிய வாதம் என்னவென்றால், இராணுவ சேவையை மறுப்பவர்கள் சட்டத்தை மீறுகிறார்கள் எனவும் அவர்கள் குற்றம்சாட்டப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசு நினைத்தாலும், வணக்கத்திற்காக அந்த மத கூட்டத்தில் கலந்துகொள்ளும் மற்ற நபர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. . . .
“ஆகவே நாங்கள் உங்கள் அரசை இவ்வாறு எழுதிக் கேட்டுக்கொள்கிறோம்:
1. யெகோவாவின் சாட்சிகள் வணக்க சுயாதீனத்தையும் மனச்சாட்சியையும் அனுபவிப்பதற்கு ஏற்றவாறு, அவர்களைத் தடைசெய்ய வேண்டாம்;
2. வெறுமனே மத நோக்கத்தோடு கூட்டங்களுக்குச் செல்லும் யெகோவாவின் சாட்சிகளைக் குற்றம்சாட்டாதீர்கள்.
3. வெறுமனே மத சம்பந்தமான நடவடிக்கைகளில் கலந்துகொண்டதற்காக சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட யெகோவாவின் சாட்சிகளை விடுதலையாக்குங்கள்.”
[பக்கம் 23-ன் படம்]
குற்றத்தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு நீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சிகள்
[பக்கம் 23-ன் படம்]
“இந்த அரசாங்கத்திற்கு நான் எந்த விதத்திலும் கெடுதல் செய்யமாட்டேன்” என்று இந்த 71 வயது சாட்சி நீதிபதியிடம் சொன்னார். ஆனாலும் அவர் சிறையிலடைக்கப்பட்டார்