பவழப்பாறைகளின் வண்ணமிக்க உலகம்
பாப்புவா நியூ கினீயிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஏறக்குறைய பாப்புவா நியூ கினீயின் கரையோரம் முழுவதிலும் பவழப்பாறைகள் நிறைந்திருக்கின்றன. முற்காலங்களில் மாலுமிகள் இவற்றை ஒரு இடையூறாகவே கருதினர். ஆனால் தங்களைச் சுற்றியிருக்கும் தண்ணீரை ஆராய்ந்திருப்பவர்களுக்கு, பவழப்பாறைகள், பேரழகும் வண்ணமும் தெளிவும் நிறைந்த ஒரு உலகத்தின் வாயிலாக இருக்கின்றன—உண்மையில் நீருக்கடியிலிருக்கும் ஒரு கலைடாஸ்கோப்!
நீருக்கடியிலிருக்கும் இந்த உலகத்தை படம்பிடிக்க முற்படுவது உண்மையில் ஒரு சவாலாகும். அதற்கு ஒரு காரணமானது, தண்ணீருக்கு அடியில் இருக்கும் பொருட்கள் அவையிருக்கும் உண்மையான தூரத்தைவிட சுமார் முக்கால் பங்கு அருகில் இருப்பதாக தோன்றும்; இது ஃபோகஸ் செய்வதை கடினமாக்குகிறது. தண்ணீர் ஒளியை உறிஞ்சி, அதைச் சிதற மேலும் திசைமாற வைக்கிறது. வானிலை, சூரியனின் கோணம், பாசி மற்றும் மிதக்கும் நுண்ணுயிரிகள் இருத்தல், நீரின் ஆழம், கடலடியின் விதம் மற்றும் நிறத்தைச் சார்ந்து நிறங்களும் பெருமளவில் மாறலாம். இவையெல்லாவற்றையும்விட, புகைப்படம் பிடிப்பவரோடு தண்ணீரும் படம் பிடிக்கப்படும் பொருளும் தொடர்ந்து அசைந்துகொண்டே இருக்கின்றன.
அப்படியிருந்தாலும், சில புகைப்படக்காரர்கள் இந்த விஷயத்தில் ஓரளவு வெற்றி கண்டிருக்கின்றனர். நீங்கள் இங்கே பார்க்கும் படங்கள் நீரடி உல்லாசப்பயணங்களின்போது எடுக்கப்பட்டவை. அலைகளுக்குக் கீழே படம்பிடிக்கப்பட்ட நான்கு கண்கவர் பிராணிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
படம் 1, கடலில் தங்கிவாழும் ஒரு அழகிய ஒற்றையோட்டு மெல்லுடலியாகிய புலி கோவ்ரியை (Cypraea tigris) காட்டுகிறது. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட அதன் ஓட்டில் வரிகள் இல்லாமல் புள்ளிகள் இருப்பதனால் இந்தப் பெயர் வழக்கத்துக்கு மாறாக தொனிக்கும். புலி கோவ்ரி இங்குதான் காணப்படுகிறது, ஏனென்றால் அது பவழப்பாறை மற்றும் கடற்பஞ்சை சாப்பிடுகிறது. பூர்வகால சீனர்கள் அதைக் கண்டு அவ்வளவு அதிகமாக கவரப்பட்டதால் அதன் ஓட்டை பணமாக உபயோகித்தனர். பாப்புவா நியூ கினீயில், கோவ்ரி ஓடுகள் சில பூர்வீக சந்தைகளில் இன்னமும் சில்லறையாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், பெரும்பாலும், உள்ளூர்வாசிகள் அதன் மெருகேறிய அழகிற்காகவே அதை சேகரிக்கின்றனர்.
படம் 2, மிகவும் அழகான வண்ணமுள்ள குழாய் புழு ஆகும். (Spirobranchus giganteus). அது இறந்துபோன பவழப்பாறையின் மேல் வாழலாம் அல்லது உயிருள்ள பவழப்பாறைக்குள் குடைந்து வாழலாம். அது ஓய்ந்திருக்கையில், ஒரு பூவைப்போல் காட்சியளிக்கும். ஆனால் பசியாயிருக்கும் போது, அது தன் கொடுக்குகளை வேகமாக சுழற்றி, கடந்துசெல்லும் உணவுத்துண்டுகளை பிடிப்பதற்கு ஒரு ‘வலையை’ உண்டுபண்ணுகிறது. இறகுபோன்ற அதன் கொடுக்குகள் அசையும்போது, வரிசையான சிறிய நடனக்காரர்கள் தங்கள் விசிறிகளை அசைப்பதைப்போல் காட்சியளிக்கிறது. இந்த குறிப்பிட்ட உருமாதிரி பத்து மில்லிமீட்டர் அகலம்தான் இருந்தது. ஆனால் திடீரென்ற எந்த அசைவையும் செய்யாதபடிக்கு புகைப்படம் பிடிப்பவர் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். ஆபத்தின் முதல் அறிகுறி தென்பட்டதும், இந்த சிங்காரமான சிறிய உருவங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில், தங்கள் எலும்புக்கூட்டு வீட்டிற்குள் ஓடி ஒளிந்துகொள்கின்றன.
படம் 3 தான் கடற்பஞ்சு. உங்கள் குளிக்கும் தொட்டியில் மிதக்கும் செயற்கைப் பஞ்சுடன் இது எவ்விதத்திலும் ஒத்தில்லை. கடற்பஞ்சு உண்மையில் ஒரு உயிருள்ள விலங்கு, ஒரு செடியல்ல. அது மிகவும் தனித்தன்மைவாய்ந்த விதத்தில் ஒன்றாக செயல்படும் நுண்துளை செல்களின் கூட்டால் ஆனது. ஆழ்கடல் என்ற ஆங்கில புத்தகமானது கடற்பஞ்சுகளின் செல்களைப்பற்றி இவ்வாறு சொல்கிறது: அவை நெருக்கமாக திட்டமைக்கப்பட்டுமில்லை ஒன்றையொன்று சார்ந்துமில்லை. ஆகவே, உயிருள்ள ஒரு கடற்பஞ்சு பல சிறிய துண்டுகளாக கிழிக்கப்பட்டால், முடிவில் ஒவ்வொரு சிறுதுண்டும் ஒரு புதிய கடற்பஞ்சாக உருவாகும். ஒவ்வொரு செல்லும் தனித்தனியாக பிரிக்கப்பட்டாலும், அவை ஒன்றாகக் கூடிவரும்வரை அமீபாவைப்போல நெளிந்து சென்று, மீண்டும் ஒரு முழு கடற்பஞ்சாக வளர்கின்றன.
தன்னுடைய உணவை தானே தயாரித்துக்கொள்ளும் ஒரு செடியைப் போலில்லாமல், கடற்பஞ்சு தன் உணவை “வேட்டையாடுகிறது.” அது சுற்றியிருக்கும் தண்ணீரை உள்ளே எடுத்து, உயிர்பொருள்களுக்காக அதை வடிகட்டுகிறது. மற்ற எந்த மிருகத்தைப் போல அதுவும் தன் உணவை செரித்து, கழிவுப்பொருட்களை வெளியேற்றுகிறது. கடற்பஞ்சுகள் பாறையுடன் அல்லது கடல்தரையில் இருக்கும் ஓடுகளுடன் இணைந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
கடைசியாக, படம் 4-ல் இருப்பது மந்தமான, இரட்டையோட்டு சிப்பி. அது ஒரே இடத்தில் ஒட்டிவாழும் இயல்புடையது. ஆகையால், அது பவழப்பாறையில் அல்லது வெறுமனே கடல்தரையில் கிடப்பதை எளிதில் பார்க்க முடியும். அவற்றில் அநேகம், தண்ணீரில் மிதக்கும் நுண்ணுயிரிகளை வடிகட்டி சாப்பிடுகின்றன. அதற்கு இரண்டு ஓடுகள் அல்லது மூடிகள் இருப்பதால், அது இரட்டையோட்டு மெல்லுடலி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஓடுகள் ஒரு இணைப்பிழையால் ஒன்றாக இணைக்கப்பட்டு, இரண்டு வலிமையுள்ள தசைகளின் உதவியால் திறந்து மூடப்படுகின்றன. ஒரு சிப்பி நகர வேண்டுமென்றால், அது திறந்துகொண்டு, அதன் மாம்ச பாதம் கொஞ்சம் வெளியே வருகிறது. ஆனால் ஒரு எதிரி வந்தால், அது தன் ஓட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்கிறது!
பவழப்பாறை கடல்களில் காணப்படும் மேன்மைவாய்ந்த காட்சிகளின் ஒரு சிறிய கணநேர தோற்றத்தை மட்டுமே இந்த படங்கள் கொடுக்கின்றன—இது யெகோவாவின் சிருஷ்டிப்பு ஞானம் காணப்படும் மற்றொரு இடமாகும்.—ரோமர் 1:20.
[பக்கம் 21-ன் படம்]
1. புலி கோவ்ரி இன்னமும் பணமாக பயன்படுத்தப்படுகிறது
2. இந்த “பூக்கள்” உண்மையில் குழாய் புழுக்கள்
3. கடற்பஞ்சு ஒரு விலங்கு, ஒரு செடியல்ல
4. இரட்டையோட்டு சிப்பி, மிதக்கும் நுண்ணுயிரிகளை சாப்பிடுகிறது (வாய் காட்டப்பட்டிருக்கிறது)