வெறுக்க கற்பிக்கப்பட்ட ஓர் உலகம்
மக்கள் இயல்பாகவே தன்னலமுள்ளவர்களாய் இருக்கின்றனர். கட்டுப்படுத்தப்படாவிட்டால், தன்னலம் வெறுப்புணர்வாக மாறலாம். மனிதர் இயல்பாகவே தன்னலமுள்ளவர்களாய் இருப்பதோடுகூட, மனித சமுதாயம் மக்களை தன்னலமுள்ளவர்களாய் இருக்க பழக்குவிக்கிறது!
சந்தேகமின்றி, குறிப்பிட்ட மக்கள் தொகுதிகளுடைய மனப்பான்மைகளைப் பற்றி பொதுவாகக் கூறப்படும் கருத்துக்கள் எப்பொழுதுமே பொருந்தாது; ஆனாலும், குறிப்பிட்ட சில மனப்பான்மைகள் சற்றே வித்தியாசமாய் இருப்பதாக எண்ணி புறக்கணித்துவிட முடியாதளவுக்கு மிகவும் பரவலாகக் காணப்படுகின்றன. அரசியல்வாதிகள் பெரும்பாலும் தங்கள் தொகுதிகளிலுள்ள மக்களுக்கு உதவுவதைக் காட்டிலும் தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே அதிக ஆர்வமுள்ளவர்களாய் இருப்பதில்லையா? தொழிலதிபர்கள் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் பொருள்கள் விற்பனைக்கு சந்தைக்குச் செல்வதைத் தடுப்பதைவிட, தேவைப்பட்டால், கொஞ்சம்கூட பழிபாவங்களுக்கு அஞ்சாமல் பணம் பண்ணுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதில்லையா? மதகுருமார்கள் தங்களுடைய மந்தைகளை ஒழுக்கம் மற்றும் அன்பின் பாதையில் நடத்திச்செல்வதைக் காட்டிலும் பெரும்பாலும் பிரசித்திபெற்றவர்களாய் இருப்பதிலோ பணம் சம்பாதிப்பதிலோ அதிக நாட்டம் செலுத்துவதில்லையா?
இளமையில் ஆரம்பம்
பிள்ளைகள் அவர்கள் இஷ்டம்போல் செயல்பட அனுமதிக்கும் ஒரு சூழலில் வளர்க்கப்படும்பொழுது, உண்மையில் அவர்கள் தன்னலமுள்ளவர்களாய் இருக்கும்படியே பயிற்றுவிக்கப்படுகின்றனர்; ஏனெனில் தங்களுடைய சிறுபிள்ளைத்தனமான விருப்பங்களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக கரிசனை காட்டுவதையும் தன்னலமற்றவர்களாய் இருப்பதையும் புறக்கணித்துவிட நேரிடுகிறது. பள்ளியிலும் கல்லூரியிலும், படிப்பில் மட்டுமின்றி விளையாட்டிலும் முதலில் வர மாணவர்கள் கற்பிக்கப்படுகின்றனர். “நீ இரண்டாவதாய் இருப்பதும் ஒன்றுதான்; கடைசியாய் இருப்பதும் ஒன்றுதான்!” என்பதே கொள்கையாய் இருக்கிறது.
வன்முறை காட்சிகளைச் சித்தரிக்கும் வீடியோ விளையாட்டுகள், சுயநல போக்கில் பிரச்சினைகளைத் தீர்க்க இளைஞருக்குக் கற்பிக்கின்றன; அதாவது, வெறுமனே பகைவனை தீர்த்துக்கட்டிவிடுவது! நிச்சயமாகவே அன்பை வளர்க்கும் ஒரு மனநிலையல்ல! கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வீடியோ விளையாட்டுகள் இளைஞருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் இருந்ததாக ஐ.மா. தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்தார். “பகைவனைத் தீர்த்துக்கட்டுவதைச் சுற்றியே இந்த விளையாட்டு அமைகிறது. ஆக்கப்பூர்வமான எதுவும் இவ்விளையாட்டில் இடம்பெறுவதில்லை” என்று அவர் கூறினார். “வீடியோ விளையாட்டுகள், மனிதனுடைய மிக மட்டமான உணர்வுகளை திருப்திசெய்பவையாய் இருக்கின்றன” என்றும், “இவை மதிகேடான, கெட்ட மனோபாவமுள்ள இளைஞர் சந்ததியொன்றை வளர்க்கின்றன” என்றும் தி நியூ யார்க் டைம்ஸ்-க்கு எழுதியனுப்பப்பட்ட ஒரு கடிதம் குறிப்பிட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த வீடியோ விளையாட்டு ஆர்வலர் ஒருவர், பின்னதாகக் கூறப்பட்ட இந்தக் கூற்றின் உண்மையை ஒத்துக்கொள்ளுமளவுக்கு நேர்மையுள்ளவராய் இருந்தார்; அவர் தெரிவித்தார்: “அவ்வாறு விளையாடுகையில், ஒரு தனி கற்பனை உலகுக்கு நான் செல்கிறேன்; அங்கு ‘சாகடி அல்லது செத்துமடி’ என்ற பழைய சுலோகமே பொருத்தப்படுகிறது”
இனக் கொள்கையுடன் வெறுப்புணர்வும் சேர்ந்து, இன்னும் கூடுதலான தீங்கு விளைவிப்பதாகவே ஆகிறது. ஆகவே ஜெர்மானியர்கள் வலதுசாரி (right-wing) தீவிரவாதிகளின் வீடியோ விளையாட்டுகளைப் பற்றி அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்பது தெளிவாய் இருக்கிறது; இவை அயல்நாட்டினருக்கு எதிரான, குறிப்பாக துருக்கியர்களுக்கு எதிரான வன்முறை காட்சிகளைக் காட்டுவதாய் இருக்கின்றன. அவர்கள் அவ்விதம் அக்கறையுள்ளவர்களாய் இருப்பதற்கும் நியாயமான காரணம் இருக்கிறது; ஏனென்றால், ஜனவரி 1, 1994 தேதியின்படி, துருக்கியர்கள், ஜெர்மனியின் 68,78,100 அயல்நாட்டு குடியிருப்பாளர்களில் 27.9 சதவீதத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
தேசியவாதம் சிறுவர்களுக்கு இளவயதிலிருந்தே எதைக் கற்பிக்கிறதோ அதையே இன உணர்வுகளும் கற்பிக்கின்றன. அதாவது, உன் தேசத்து பகைவர்களை வெறுப்பது தவறல்ல என்பது. டைம் பத்திரிகை கட்டுரையாளர் ஒருவரான ஜார்ஜ் எம். டேபர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதாவது: “சொல்லப்போனால் வரலாற்று அரசியல் சார்ந்த வாதங்கள் அனைத்திலும் மிகவும் பலமானது அநேகமாக தேசியவாதமே.” அவர் தொடர்ந்து விளக்கினதாவது: “மதத்தைத் தவிர மற்றெந்தக் காரணத்தையும்விட அதன் பெயரிலேயே அதிகளவான இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய தொல்லைகளுக்கெல்லாம் ஏதாவதொரு அயல்நாட்டு இனக்குழுவின்மீதாவது பழிசுமத்துவதன் மூலம், கிளர்ச்சித் தலைவர்கள் நூற்றாண்டுகளாக வெறியர் கூட்டங்களை ஏவிவிட்டிருக்கின்றனர்.”
மற்ற இனக்குழுக்கள், இனங்கள், அல்லது தேசத்தவர்களிடம் நெடுங்காலமாய் இருந்துவரும் வெறுப்புணர்வுதான் இன்றைய உலகின் பிரச்சினைகளுக்குக் காரணமாய் இருக்கிறது. மேலும் ஜெனோஃபோபியா எனப்படும் அந்நியர் அல்லது அயல் நாட்டவர்களைக் குறித்த அச்சம் தொடர்ந்து அதிகரிக்கிறது. என்றபோதிலும், அக்கறையூட்டும் வகையில், அந்நியர்கள் அதிகம் வாழாத இடங்களிலும் இது மிகவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இருப்பதை ஜெர்மன் நாட்டு சமூகவியலர்களின் ஒரு தொகுதி கண்டறிந்தது. அயல்நாட்டவர் அச்சம், தனி நபரின் அனுபவத்தால் ஏற்படுத்தப்படுவதைக் காட்டிலும் தப்பெண்ணத்தால் அடிக்கடி ஏற்படுத்தப்படுவதை இது நிரூபிப்பதாகத் தெரிகிறது. “இளைஞர்களின் தப்பெண்ணங்கள் முக்கியமாய் அவர்களுடைய நண்பர்களாலும் குடும்பங்களாலும் வளர்க்கப்படுகின்றன” என்று அந்தச் சமூகவியலர்கள் கண்டுபிடித்தனர். உண்மையில், பேட்டி காணப்பட்ட 77 சதவீதத்தினருக்கு தப்பெண்ணம் இருப்பதாக அவர்கள் ஒப்புக்கொண்டபோதிலும், அந்நியர்களுடன் அவர்களுக்கு எந்தவித நேரடித் தொடர்பும் இல்லாதிருந்தது; அல்லது சிறிதளவு தொடர்பே இருந்தது.
தன்னலத்தைப் பற்றி பாடம் புகட்டுவது கடினமல்ல; ஏனெனில் நாம் அனைவருமே ஓரளவு தன்னலத்தை அபூரண பெற்றோரிடமிருந்து சுதந்தரித்திருக்கிறோம். ஆனால், அன்பு மற்றும் வெறுப்பு இவற்றுக்கிடையிலுள்ள முரண்பாட்டில் மதம் என்ன பாகம் வகிக்கிறது?
மதம் என்ன கற்பிக்கிறது?
மதம் அன்பை வளர்ப்பதாகவே மக்கள் பொதுவாக நினைக்கின்றனர். ஆனால் அப்படியிருந்தால், வட அயர்லாந்து, மத்தியக்கிழக்கு நாடுகள், இந்தியா ஆகிய நாடுகளில், மத வேறுபாடுகள் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாக ஏன் இருக்கின்றன? இவை வெறும் மூன்று உதாரணங்களே. மதம் சம்பந்தமான வேறுபாடுகள் அல்ல, அரசியல் வேறுபாடுகளே தொந்தரவுகளுக்குக் காரணமாய் இருக்கின்றனவென்று சிலர் அடித்துக்கூறுவது மெய்தான். அது விவாதத்திற்குரிய ஒரு குறிப்பு. எப்படியாயினும், ஒழுங்கமைக்கப்பட்ட மதம், அரசியல் மற்றும் இன சம்பந்தமான தப்பெண்ணங்களை மேற்கொள்ளும் அளவுக்குப் போதிய அன்பை மக்களில் கற்பிக்க தவறிவிட்டது. மொத்தத்தில், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் பிரிவினரைச் சேர்ந்த பலரும், வேறு மதத்தினரும், தப்பெண்ணம்கொள்வதைக் கண்டும் காணாததுபோல் விட்டுவிடுகின்றனர்; அதுவே வன்முறைக்கு வழிநடத்துகிறது.
ஒரு மதத்தொகுதியில் சரியல்லாதவையாக தான் கருதும் போதகங்களையும் பழக்கவழக்கங்களையும் தவறென்று நிரூபிக்க ஒரு நபர் முயலுவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதனுடனோ, அல்லது அதன் உறுப்பினர்களுடனோ எதிர்த்துப் போராடுவதில் வன்முறையைப் பயன்படுத்த இது அவருக்கு உரிமையளிக்கிறதா? “கிழக்கத்திய அண்டை நாடுகளின் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் திரும்பத்திரும்ப மதத்தலைவர்கள் மற்ற மதத் தொகுதியினரை வன்முறையாகத் தாக்குவதற்கான ஆணை பிறப்பித்திருக்கின்றனர்” என்று தி என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ரிலிஜன் ஒளிவுமறைவின்றி ஒத்துக்கொள்கிறது.
“சமூகவியல் மற்றும் மனோவியல் சார்ந்த பரிணாம வளர்ச்சி முறைகளில் போராட்டம் இருப்பதை அத்தியாவசியமான ஒன்றாக ஏற்றுக்கொள்வது, டார்வின் கொள்கையை ஆதரிப்போர் மட்டுமே அல்ல. மதமும்கூட வளர்ச்சிக்காக வேண்டி, முரண்பாட்டுக்கும் வன்முறைக்கும் முடிவற்ற ஒரு மூலகாரணமாக இருந்திருக்கிறது” என்று சொல்வதன் மூலம் வன்முறை மதத்தின் ஒரு பாகமாய் இருப்பதை இந்த என்ஸைக்ளோப்பீடியா காட்டுகிறது.
வளர்ச்சிக்கு வன்முறை தேவை என்ற அடிப்படையில் இதை நியாயங்காட்ட முடியாது; ஏனெனில் இது, இயேசுவை அப்போஸ்தலனாகிய பேதுரு காப்பாற்ற முயன்றபோது, இயேசு கிறிஸ்துவால் வழிவகுக்கப்பட்ட பிரசித்திபெற்ற நியமத்துக்கு முரணாகிறது. பேதுரு “கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்” என்றார்.—மத்தேயு 26:51, 52; யோவான் 18:10, 11.
தனிநபர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவது, நன்மைக்கானாலும்சரி தீமைக்கானாலும்சரி, அது அன்பின் வழியல்ல. இவ்வாறு, வன்முறையில் ஈடுபடுபவர்கள், ஓர் அன்பான கடவுளைப் பின்பற்றும் விதத்தில் செயல்படுவதாக தாங்கள் உரிமைபாராட்டுவதை பொய்யாக்குகிறார்கள். ஆசிரியர் ஏமஸ் ஆஸ் சமீபத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்: “தாங்கள் கடவுளிடமிருந்து பெறும் ‘ஆணைகள்’ எப்பொழுதுமே அத்தியாவசியமாய், ‘நீங்கள் கொல்லுங்கள்’ என்ற ஒரே ஆணையாகவே இருப்பது எங்குமுள்ள மத வெறியர்களிடம் பரவலாய் காணப்படுகிறது. . . . பிசாசானவனே எல்லா மத வெறியர்களுக்கும் கடவுள் என்பதைப்போல்தான் தெரிகிறது.”
அதைப் போன்ற ஒன்றையே பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்”—1 யோவான் 3:10, 15; 1 யோவான் 4:20, 21.
உண்மையான மதம், அன்பு என்னும் பண்பைப் பின்பற்ற வேண்டும்; இது, பகைவர்களிடமும் அன்பு காட்டுவதை உட்படுத்துகிறது. யெகோவாவைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.” (மத்தேயு 5:44, 45; 1 யோவான் 4:7-10-ஐயும் காண்க.) பகைமையின் கடவுளாகிய சாத்தானைப் போலில்லாமல் என்னே ஒரு வித்தியாசம்! ஒழுக்கங்கெட்ட, குற்றச்செயல்புரியும், தன்னலமான வாழ்வை நடத்துவதற்கு அவன் ஜனங்களை வசீகரித்து வஞ்சிக்கிறான்; அதன் மூலம் அவர்கள் தங்களுடைய வாழ்வை வேதனையாலும் துன்பத்தாலும் நிறைத்துக்கொள்கிறார்கள். தாறுமாறான இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைப்பாணி முடிவில் அவர்களுடைய அழிவுக்கே வழிநடத்தும் என்று நன்றாக அறிந்திருந்தபோதிலும் அவன் இதைத் தொடர்ந்து செய்துவருகிறான். இப்படிப்பட்ட கடவுளை—தன் சொந்த அடியார்களைக் காப்பாற்ற முடியாத, ஏன் காப்பாற்றக்கூட மனமில்லாத கடவுளை—சேவிப்பது தகுதியானதா?
பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு
இந்த அம்சங்கள் வெறுப்புணர்வைத் தூண்டிவிடுகின்றன என்பது எளிதில் உறுதிப்படுத்தப்படுகிறது. டைம் பத்திரிகையின் ஓர் அறிக்கை இவ்வாறு கூறுகிறது: “கொந்தளிப்பான 1930-களுக்குப் பிறகு, குறிப்பிட்ட தீவிர வலதுசாரி இயக்கங்கள் ஐரோப்பாவில் செழித்தோங்க முடியவில்லை. சமீப காலத்தில், அவை தங்களுடைய ஆதரவை அதிகரிக்கும் முயற்சியில் நிலைமைகளைத் தங்களுக்குச் சாதகமாய் பயன்படுத்தியிருக்கின்றன. . . . தங்களுடைய தொழில்களைக் குறித்து பயந்து, முற்போக்குச் சிந்தனையுடைய அரசாங்கங்களின் நிலைமைக்கு எதிராக இரக்கமற்ற விதத்தில் கொதித்தெழுபவர்களாய் மாறிவருகின்றனர்; இவ்வாறு தங்கள் மத்தியிலிருக்கும் அயல்நாட்டவரை பலிகடாவாக்குகின்றனர்.” யார்க் ஷிண்ட்லர் என்பவர், ரினீஷர் மெர்க்குர்/கிறிஸ்ட் அண்ட் வெல்ட் என்ற செய்தித்தாளில், கடந்த இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ஜெர்மனிக்குள் குவிந்தவண்ணம் இருந்திருக்கும் பத்தாயிரக்கணக்கான அரசியல் அகதிகளைப் பற்றி கவனத்தைத் திருப்பினார். த ஜெர்மன் ட்ரிப்யூன் செய்தித்தாள் இவ்வாறு எச்சரிக்கிறது: “இனக் கொள்கை ஐரோப்பா முழுவதும் அதிகரித்துவருகிறது.” குடியேறிகள் ஏராளமாய் வந்துகுவிவது, பகைமை உணர்வுகளை உருவாக்குகிறது. ‘அவர்களால் எங்களுக்கு பணம்தான் செலவு; அவர்கள் எங்கள் வேலைகளை பறித்துக்கொள்கிறார்கள்; அவர்களால் எங்கள் மகள்களுக்கு ஆபத்து’ என்று மக்கள் புகார் கூறுவது கேட்கப்பட்டிருக்கிறது. மக்கள், “தாங்கள் பயமுறுத்தப்பட்டதாகவோ, இழிவுபடுத்தப்பட்டதாகவோ உணருவதாலேயே வன்முறையில் ஈடுபடுகின்றனர். இவையே அவர்களுடைய கோபத்துக்குக் காரணங்களாயும் கவனம் செலுத்தத் தேவைப்படுவதாயும் இருக்கின்றன” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செயின்ட் ஆன்ட்டனிஸ் கல்லூரியில் ஓர் உறுப்பினராக பணிபுரியும் தியடோர் ஸெல்டன் கூறினார்.
பிரிட்டிஷ் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஜோன் பேக்வெல், நம் உலகை, அதாவது அதன் குடிமக்களுக்குப் பகைக்கக் கற்றுக்கொடுக்கும் ஓர் உலகை விவரிக்கப் பொருத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். அவர் இவ்வாறு எழுதுகிறார்: “நான் ஒன்றும் ஓர் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவள் இல்லை; ஆனால், தீய எண்ணமே, அன்பில்லாமல் போவதற்கான பேரழிவாய் இருக்கிறது என்ற ஓர் ஆழ்ந்த, திட்டவட்டமான உண்மையை இயேசுவின் போதகத்தில் காண்கிறேன். . . . அன்பு என்னும் ஒரு கொள்கையை கொஞ்சமும் நம்பாத ஒரு சமுதாயத்தில் நாம் வாழ்கிறோம் என்று எனக்குத் தெரியும். உண்மையில், பார்ப்பதற்கு மிடுக்காய்த் தோன்றும் இந்தச் சமுதாயம், இது, அப்படிப்பட்ட ஒரு கொள்கையை, பழமையான, உணர்ச்சிகளுக்கு இடம்கொடுக்கிற, நடைமுறைக்கு உதவாத ஒன்று என்று தள்ளிவிடுகிறது; அது லாபத்துக்கும் சுயநலத்துக்கும் மேலாக சுயநலமற்ற தன்மையை வைக்கும் கருத்துக்களைக் கண்டு ஏளனம் செய்கிறது. ‘எதார்த்தமாக இருக்கலாம்’ என்று அது சொல்லிக்கொண்டே புதிய தொழில் விவகாரங்களில் நுழைந்து, தன் கடமையிலிருந்து தவறி, ஏமாற்று வேலையில் ஈடுபடுகிறது; அதனை தவறு என்று எதிராகச் சுட்டிக்காட்டும் சாட்சியங்களையெல்லாம் ஒன்றுமில்லாது செய்துவிடுகிறது. அப்படிப்பட்ட ஓர் உலகம், தோற்றுப்போனவர்களையும் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்பவர்களையும், வெற்றி, சுயமதிப்பு, மகிழ்ச்சியான குடும்பங்கள் ஆகியவற்றில் சமுதாய முன்னுரிமைகளைப் பெறுவதில் இழப்புக்குள்ளான மக்களையுமே உருவாக்குகிறது.”
தெளிவாகவே, இந்த உலகின் கடவுளாகிய சாத்தான், பகைக்கும்படி மனிதகுலத்துக்குக் கற்பிக்கிறான். ஆனால், தனிநபர்களாக, நாம் நேசிக்க கற்றுக்கொள்ளலாம். இவ்வாறு செய்ய முடியும் என்பதை அடுத்தக் கட்டுரை காட்டும்.
[பக்கம் 7-ன் படம்]
வீடியோ விளையாட்டுகள் உங்கள் பிள்ளைகளுக்குப் பகைக்க கற்றுக்கொடுக்குமா?
[பக்கம் 8-ன் படம்]
போரின் வன்முறை, அறியாமைக்கும் வெறுப்புக்கும் ஓர் அறிகுறி
[படத்திற்கான நன்றி]
Pascal Beaudenon/Sipa Press