பைபிளின் கருத்து
அன்பான கடவுளுக்கு நீங்கள் எவ்விதம் பயப்பட முடியும்?
“யெகோவாவுக்குப் பயப்படுகிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.”—சங்கீதம் 112:1, NW.
பைபிள் சொல்கிறபடி “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்றால், ஏன் அவருக்கு பயப்பட வேண்டும்? (1 யோவான் 4:16) அன்பும் பயமும் ஒன்றுசேர முடியாது என்பது பொதுவான கருத்து. அப்படியென்றால், கடவுளோடு நாம் கொண்டிருக்கும் உறவில் பயம் வகிக்கும் பங்கென்ன? அன்புள்ள கடவுளுக்கு ஏன் பயப்படவேண்டும்? “பயம்” என்ற வார்த்தை பைபிளில் எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்தால் இதைப் பற்றிய விளக்கத்தை தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.
அநேக மொழிகளில் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு ஒரே வார்த்தை வித்தியாசமான பொருளைத்தரும். உதாரணத்திற்கு சில மொழிகளில் ஒருவர்: “ஐஸ்கிரீம்னா எனக்கு ரொம்ப பிரியம்” என்பதாகவும், “என் பிள்ளைகள் மேல் எனக்கு ரொம்ப பிரியம்” என்பதாகவும் சொல்லக்கூடும். சந்தர்ப்பத்திற்கு தக்கவாறு பிரியத்தைக் காட்டிய விதமும் மாதிரியும் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறது. இதைப்போலவே பைபிள், வித்தியாசமான பயங்களைப் பற்றி பேசுகிறது. கடவுள் வணக்கம் சம்பந்தமாக அந்த வார்த்தையை பைபிள் உபயோகிக்கும் போது, திகில், நடுக்கம், அல்லது உடனடியாக வரவிருக்கும் தண்டனை போன்றவற்றை அர்த்தப்படுத்துவது இல்லை. இதற்கு பதிலாக தேவபயம் என்பது—வியப்பு, கனம், ஆழ்ந்த மரியாதை ஆகிய—ஆரோக்கியமான உணர்ச்சிகளை விவரிக்கிறது. இந்த உன்னதமான பண்புகளோடு அன்பும் தேவனை நோக்கி ஈர்க்கப்படுவதும் கலக்கின்றன; இதற்குமாறாக அவரை விட்டு ஓடிப்போவது அல்லது ஒளிந்து கொள்ளும் உள்ளுணர்வை குறிப்பிடவில்லை.
மனக்கலக்கமான உணர்ச்சிகள், பயத்தால் விலகி இருத்தல் ஆகியவற்றை தேவபயம் நீக்குகிறது. தேவனுக்கு பயப்படும் மனிதனைப்பற்றி சங்கீதக்காரன் எழுதினார்: “துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.” (சங்கீதம் 112:7) யெகோவாவிடம் நமக்கு இருக்கும் ஆழ்ந்த மரியாதையையும் கனத்தையும் தீய மனிதர்களுடைய அல்லது சாத்தானுடைய பயமுறுத்தல் அடக்கி ஆண்டுவிட முடியாது. (லூக்கா 12:4, 5) அதைப்போலவே நாமும் தேவனிடத்தில் ஜெபம் செய்வதற்கு பயப்படக்கூடாது. இந்தச் சூழ்நிலையில், ‘அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.’—1 யோவான் 4:18.
தேவனுடைய மகத்துவத்தை விவரிக்கும் வானங்கள்
முற்காலத்தில் வாழ்ந்த தாவீது ராஜா தேவ பயமுடையவராயிருந்தார். சிருஷ்டிப்பின் அழகையும் நுணுக்கத்தையும் கூர்ந்து கவனித்து பிரமிப்படைந்தார். “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மை துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” என்று அவர் உணர்ச்சி பொங்கக் குறிப்பிட்டார். (சங்கீதம் 139:14) இரவு நேர வானத்தைப் பார்த்து வியந்து: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது” என்று குறிப்பிட்டார். (சங்கீதம் 19:1) இந்த அனுபவத்தால் தாவீது பயத்தை உணர்ந்ததாக நினைப்பீர்களா? இல்லை, இது அவரை யெகோவாவிற்கு துதிகளைப் பாட ஊக்குவித்தது.
இன்று விண்வெளியைப் பற்றிய மேம்பட்ட அறிவு, நாம் திகைப்படைவதற்கான பலத்த காரணத்தை நமக்கு அளிக்கிறது. ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியின் உதவியால், வேறு எந்த மனிதனும் இதற்குமுன் பார்த்திராத வான்வெளியை வானவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கூர்ந்து நோக்கினர். அவர்கள் பூமியிலிருந்து தொலைநோக்கி மூலம் பார்த்தபோது, வானத்தில் வெறுமையாகத் தோன்றிய ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து, இக்கருவியின் உதவியால் கூர்ந்து நோக்கினர். நீட்டப்பட்ட கையில் ஒரு மணல் துகள் அளவே இருந்ததைப் போன்ற அப்பகுதியை ஹபிள் தொலைநோக்கியைக்கொண்டு கவனிக்கையில், அந்தப் படத்தில் தெரிந்தது வெறும் நட்சத்திரங்கள் மட்டும் அல்ல, ஆனால் நட்சத்திரக் கூட்டங்கள்—அவற்றின் ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்புகள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள்—மனிதன் ஒருபோதும் இப்படிப்பட்ட ஒரு காட்சியைக் கண்டதேயில்லை!
பிரபஞ்சத்தினுடைய அளவு, விளங்காப் புதிர்தன்மை, அதிசயத் தன்மை ஆகியவை கூர்ந்து கவனிப்பவரை வியப்படைய வைக்கின்றன. ஆனால், இந்த அதிசயங்கள் சிருஷ்டிகரின் மகிமையையும் வல்லமையையும் சிறிதளவே பிரதிபலிக்கின்றன. பைபிள், யெகோவா தேவனை, ‘சோதிகளின் பிதா’ என்றும் ‘நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்’ என்றும் குறிப்பிடுகிறது.—யாக்கோபு 1:17; சங்கீதம் 147:4.
விண்வெளியில் ஏற்படும் சம்பவங்கள் எடுத்துக்கொள்ளும் காலத்தை கவனிக்கும் போது பிரபஞ்சத்தின் பிரமாண்டமான அளவை உணரமுடிகிறது. ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி புகைப்படம் எடுத்த, நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து புறப்பட்ட ஒளி, கோடிக்கணக்கான ஆண்டுகளாக விண்வெளியில் பயணம் செய்திருந்தது! வானங்களின் நிரந்தரத் தன்மையோடு நம்மை ஒப்பிடும்போது நாம் எவ்வளவு சமீபத்தில் வந்தவர்கள் என்பதையும், சிறுமையானவர்கள் என்பதையும் அறிந்துகொள்வது நட்சத்திரங்களை உண்டாக்கியவர் மேல் வியப்பையும் அதிக கனத்தையும் ஏற்படுத்தவில்லையா? (ஏசாயா 40:22, 26) இப்படி எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர், ‘மனுஷனை நினைப்பதற்கும், விசாரிக்கவும்’ செய்கிறார் என்பது அவர்மீது ஆழ்ந்த மரியாதை கொள்ளவும் அவரைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரைப் பிரியப்படுத்தவும் உதவுகிறது. (சங்கீதம் 8:3, 4) அப்படிப்பட்ட மேன்மையான மரியாதையையும் போற்றுதலையுமே பைபிள் தேவபயம் என்று அழைக்கிறது.
மன்னிக்கும் தேவன்
நாம் அனைவரும் அபூரணரே. சரியானதை செய்வதற்காக முயற்சி செய்கிறபோதிலும் தற்செயலாக பாவம் செய்து விடுகிறோம். அப்படி நடக்கும்போது தேவனுடைய தயவை இழந்து விட்டோம் என்று பயப்பட வேண்டுமா? சங்கீதக்காரன் இவ்விதம் எழுதினார்: “கர்த்தாவே, நீர் அக்கிரமங்களை கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. உமக்கு பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.” (சங்கீதம் 130:3, 4) அப்படிப்பட்ட ‘மகத்தான சிருஷ்டிகர்’ பாசமிக்கவராகவும் மன்னிப்பவராகவும் இருப்பதால் அவருக்கு ஆழ்ந்த போற்றுதலும் மரியாதையும் காட்டவேண்டும் என்ற எழுச்சி அவருடைய சிருஷ்டிகளுக்கு ஏற்படுகிறது.—ஏசாயா 54:5-8, NW.
நல்ல காரியங்களைச் செய்யவும், தேவன் தவறு என்று சொல்வதை செய்யாமல் இருக்கவும், தேவனுக்கு பயப்படும் பயம் நம்மை உந்துவிக்கிறது. நம்முடைய பரலோகத் தகப்பனோடுள்ள நம் உறவை, ஒரு நல்ல தகப்பனுக்கு அவருடைய பிள்ளைகளோடு உள்ள உறவிற்கு ஒப்பிடலாம். சில சமயம், தெருவில் விளையாடக்கூடாது என்று அப்பா ஏன் சொல்கிறார் என்பது பிள்ளைகளுக்குப் புரிவதில்லை. ஆனால் விளையாட்டு சுவாரஸ்யத்தில், பந்தைத் துரத்திக்கொண்டு ரோட்டின் குறுக்கே ஓடவேண்டும் என்ற எண்ணம் வரும்போது, அப்பா செய்யக்கூடாது என்று சொன்னது அவர்களைத் தடுக்கிறது—ஒருவேளை மரணத்தில் இருந்து காப்பாற்றுகிறது. அதைப்போலவே பெரியவர்களையும் யெகோவா தேவனுக்கு பயப்படும் பயம், தன்னுடைய வாழ்க்கையையும் மற்றவர்களின் வாழ்க்கையையும் நாசமாக்கிக் கொள்ளும் ஒரு செயலில் இருந்து தடுக்கிறது.—நீதிமொழிகள் 14:27.
தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பயப்படுதல்
ஒருவனுடைய மனசாட்சி, தேவனுக்கு வேதனை ஏற்படுத்தும் காரியத்தை செய்வதிலிருந்து அவனைத் தடுக்கவில்லையென்றால், அவன் முற்றிலும் வித்தியாசப்பட்ட முறையில் பயப்பட நேரிடும். மனித அரசாங்கங்கள் குற்றவாளிகளை தண்டிப்பது போல, வேண்டுமென்றே மனந்திரும்பாமல் குற்றம் செய்பவரை தண்டிப்பதற்கு தேவனுக்கு உரிமை இருக்கிறது. தேவன் தற்காலிகமாக துன்மார்க்கத்தை அனுமதித்து இருப்பதால் சிலர் தவறான பாதையிலே சென்று கடினப்பட்டு, உணர்ச்சியற்று போயிருக்கிறார்கள். ஆனால் கூடிய விரைவில் தேவன் எல்லா துன்மார்க்கத்தையும், பூமியை விட்டு நீக்குவார் என்பதாக பைபிள் தெரிவிக்கிறது. (சங்கீதம் 37:9, 10; பிரசங்கி 8:11; 1 தீமோத்தேயு 5:24) மனந்திரும்பாத துன்மார்க்கர், தேவனிடத்திலிருந்து தண்டனை வருகிறதே என்று பயப்பட வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட பயத்தை பைபிள் சிபாரிசு செய்வதில்லை.
அதற்கு பதிலாக யெகோவாவிற்கு பயப்படும் பயத்தை வாழ்க்கையின் மிக அழகான காரியங்களான—பாட்டு பாடுதல், சந்தோஷம், நம்பிக்கை, ஞானம், நீண்ட வாழ்நாள், தன்னம்பிக்கை, செழுமை, எதிர்பார்ப்பு, சமாதானம், என்பவற்றோடு பைபிள் தொடர்புபடுத்தி இணைக்கிறது. a நாம் தொடர்ந்து யெகோவா தேவனுக்கு பயந்து வாழ்ந்தால், இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களை என்றென்றுமாக பெற்றுக் கொள்ளலாம்.—உபாகமம் 10:12-14.
[அடிக்குறிப்புகள்]
a யாத்திராகமம் 15:11; சங்கீதம் 34:11, 12; 40:3; 111:10; நீதிமொழிகள் 10:27; 14:26; 22:4; 23:17, 18; அப்போஸ்தலர் 9:31-ஐக் காண்க.
[பக்கம் 26-ன் படங்களுக்கான நன்றி]
Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin