விஞ்ஞானிகள் மத்தியில் பிரிவினையா?
“அறிவியல், உலகத்தைப் பற்றிய உண்மைக்கான வேட்கை என்பதை நாம் அசட்டை செய்துவிடக்கூடாது. என்றபோதிலும், இந்த வேட்கையை அடிக்கடி எதிர்க்கும் மனோவியல் மற்றும் சமூக காரணிகளையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.” டோனி மார்டன் என்பவர், “வேறுபடும் கருத்துக்கள்: விஞ்ஞானிகளின் உள்நோக்கங்களும் வழிமுறைகளும்” என்ற ஆங்கில ஆய்வுக்கட்டுரையில் இவ்வாறு எழுதினார். ஆம், புகழ், செல்வம் அல்லது அரசியல் ஆதாயங்களும்கூட விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளில் செல்வாக்கு செலுத்தியிருப்பதாக தோன்றுகிறது.
அப்படிப்பட்ட செல்வாக்குகள் நீதிமன்ற வழக்குகளில் தலையிடுவதைப் பற்றி கவலை தெரிவிப்பவராக 1873-லேயே மதிப்பிற்குரிய ஜெசல் என்பவர் இவ்வாறு கூறினார்: “வல்லுநர்களின் அத்தாட்சிகள் . . . பிழைப்புக்காக வேலைசெய்பவர்களின் அத்தாட்சிகளாக சிலசமயங்களில் இருக்கின்றன. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் அவர்களுடைய அத்தாட்சிக்காக சம்பளம் பெறுகின்றனர். . . . ஆகவே, எவ்வளவுதான் நேர்மையுள்ளவராக இருந்தாலும், அவரை வேலைக்கு அமர்த்தியவரின் சார்பாக அவர் மனம் சாய்வது இயற்கையே. அதனால் அப்படிப்பட்ட ஒருதலைப் பட்சத்தை நம்மால் கவனிக்க முடிகிறது.”
உதாரணத்திற்கு தடைய அறிவியலை கவனியுங்கள். தடைய அறிவியல் நிபுணர்கள் ஒருதலைசாரிகள் ஆகிவிடக்கூடும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று கூறியது. தேடுதல் என்ற ஆங்கில ஆய்விதழ், “தடைய அறிவியல் நிபுணர்களின் உதவியை போலீஸார் நாடுகிறார்கள் என்ற உண்மையே அவர்கள் இருவருக்கும் மத்தியில் ஓர் உறவை ஏற்படுத்தலாம். . . . அரசாங்கத்தால் வேலைக்கு அமர்த்தப்படும் தடைய அறிவியல் நிபுணர்கள், போலீஸாருக்கு உதவுவதே தங்கள் கடமை என்று கருத ஆரம்பித்துவிடலாம்” என கூறுகிறது. ஐஆர்ஏ-ன் (ஐரிஷ் ரிப்பப்ளிக்கன் ஆர்மி) மாக்வைரும் (1989) வார்ட்டும் (1974) சம்பந்தப்பட்ட பிரிட்டனில் நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளின் உதாரணத்தையும் இந்த ஆய்விதழ் கூறுகிறது. அந்த வழக்கு, “அதிக அனுபவமும் நற்பெயரும் எடுத்திருந்த விஞ்ஞானிகள், விஞ்ஞான நடுநிலைமையை கைவிட தயாராக இருந்ததற்கும் வாதிக்கு உதவுவதும் தங்கள் பொறுப்புகள் என கருதுகிறார்கள் என்பதற்குமான பலமான அத்தாட்சியை தருகிறது.”
மற்றொரு மிகச் சிறந்த உதாரணம், கும்மிருட்டில் ஒரு கூக்குரல் என்ற ஆங்கில திரைப்படத்திற்கு அடிப்படையாக அமைந்த ஆஸ்திரேலியாவில் (1981-82) நடந்த லின்டி சேம்பர்லின் வழக்காகும். திருமதி சேம்பர்லின் தன் குழந்தையான அசரையாவை கொன்றதாக தடைய அறிவியல் நிபுணர்கள் சமர்ப்பித்த அத்தாட்சி, தீர்ப்பை அவளுக்கு விரோதமாக திருப்பிவிடுகிறது. ஒரு டிங்கோதான் (காட்டு நாய்) தன் குழந்தையை கொன்றது என அவள் கூறியும் அவள்மீது குற்றம் சுமத்தப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறாள். பல வருடங்கள் கழித்து, அந்தக் குழந்தையின் அழுக்கடைந்த, இரத்தம் தோய்ந்த சட்டை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தீர ஆராய்ந்ததில் முந்தைய அத்தாட்சி செல்லுபடி ஆகவில்லை. அதன் விளைவாக லின்டி ஜெயிலிலிருந்து விடுவிக்கப்பட்டு, குற்றமற்றவளாக தீர்க்கப்பட்டாள்; தவறாக குற்றம் சாட்டப்பட்டதற்காக அவளுக்கு இழப்பீடும் கொடுக்கப்பட்டது.
ஒரு விஞ்ஞானி மற்றொரு விஞ்ஞானிக்கெதிராக சர்ச்சை செய்யும்போது அந்தப் பிரச்சினை அதிக கடுமையாகலாம். சில வருடங்களுக்கு முன், தலிடோமைடு என்ற மருந்தின் தயாரிப்பாளர்களுக்கு டாக்டர் வில்லியம் மக்பரைடு சவால்விட்டது உலகறிந்த செய்தியானது. மசக்கையை குணப்படுத்துவதற்காக விற்கப்பட்ட அந்த மருந்து, பிறவாத குழந்தைகளில் மிகமோசமான குறைபாடுகளை ஏற்படுத்துகிறது என அவர் கூறியபோது ஒரேநாளில் அந்த மருத்துவர் ஹீரோவானார். ஆனாலும் பல வருடங்கள் கழித்து அவர் வேறொரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது பத்திரிகையாளராக பின்னர் மாறிய ஒரு டாக்டர் அவர்மீது சில விவரங்களை (data) மாற்றியதற்காக குற்றஞ்சாட்டினார். விஞ்ஞான மோசடியும் தொழில்ரீதியான குற்றமும் செய்ததாக மக்பரைடு கண்டுபிடிக்கப்பட்டு, ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவ பதிவேட்டிலிருந்து பெயர் நீக்கப்பட்டார்.
அறிவியல் சர்ச்சைகள்
மனித மற்றும் மிருக ஜீவன்களின் ஆரோக்கியத்திற்கு மின்காந்தப் புலம் கேடு உண்டாக்குமா உண்டாக்காதா என்பது தற்போதுள்ள ஒரு சர்ச்சையாகும். ஹை-வோல்டேஜ் கம்பிகள் முதல் உங்கள் வீட்டிலிருக்கும் பர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மைக்ரோவேவ் அடுப்புவரை ஏற்படுத்தும் மின்காந்தத்தால் நம்முடைய சுற்றுச்சூழல் அதிகளவில் மாசுபடுகிறதென சில அத்தாட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. செல்லுலார் ஃபோன்கள்கூட காலப்போக்கில் உங்கள் மூளையை பாதிக்கலாம் என்று சிலர் உரிமைபாராட்டுகின்றனர். மின்காந்த அலைகள் பரவுவது புற்றுநோயையும் மரணத்தையும் ஏற்படுத்தலாம் என கூறும் அறிவியல் ஆராய்ச்சிகளை சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இதற்கொரு உதாரணமாக தி ஆஸ்ட்ரேலியன் என்ற செய்தித்தாள் இவ்வாறு அறிவிக்கிறது: “ஹை-வோல்டேஜ் மின் கம்பிகள் அருகில் தூங்கியதால் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறப்பட்ட ஒரு சிறுவன் இறந்துபோனதற்காக பிரிட்டனைச் சேர்ந்த மின்சார இலாகா ஒன்றின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.” மெல்போர்னிலுள்ள வேலைசார்ந்த வியாதிகளுக்கான மருத்துவ ஆலோசகர் டாக்டர் புரூஸ் ஹாக்கிங், “சிட்னியின் முக்கிய தொலைகாட்சி-ஒளிபரப்பு டவர்களுக்கு ஏறக்குறைய நான்கு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் வசிக்கும் குழந்தைகளுக்கு, இந்தச் சுற்று வட்டாரத்திற்கு வெளியே வசிக்கும் குழந்தைகளைக் காட்டிலும் இரத்த சோகை ஏற்படுவதற்கு இரண்டு மடங்கிற்கும் அதிகமான சாத்தியம் இருக்கிறது” என கண்டுபிடித்தார்.
அப்படிப்பட்ட கூற்றுகளை சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆதரித்துக் கொண்டிருக்க, பெரும் வாணிகமும் வியாபாரிகளும் “ஆதாரமற்ற பயமுறுத்தும் பிரச்சாரங்கள்” என தாங்கள் அழைப்பவற்றால் நூறுகோடிக்கணக்கான டாலரை இழக்க நேரிடும். ஆகவே அவர்கள் எதிர்தாக்குதல் நடத்தி விஞ்ஞான சமுதாயத்தின் மற்ற பிரிவுகளிலிருந்து ஆதரவை பெறுகிறார்கள்.
வேதியியல் தூய்மைக்கேடு பற்றிய சர்ச்சையும் இருக்கிறது. “மனிதனால் உண்டாக்கப்பட்டதிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள்” என டையோசினை சிலர் விவரித்திருக்கின்றனர். “சில களைக்கொல்லிகளின் தயாரிப்பில் தவிர்க்கமுடியாமல் ஏற்படும் ஒரு துணைப்பொருள் (by-product) மட்டுமே” (அறிவியல் முற்றுகையில் [ஆங்கிலம்]) என மைக்கல் ஃபியூமென்டோ என்பவரால் விவரிக்கப்படும் இவ்வேதிப்பொருள், “ஏஜென்ட் ஆரஞ்சின் முக்கிய பொருளாக” சிலரால் அழைக்கப்பட்டது. a வியட்நாம் யுத்தத்தைத் தொடர்ந்து அது உச்ச அளவான பிரசித்தி பெற்றது. யுத்தத்தைத் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் கெமிக்கல் கம்பெனிகளுக்கும் மத்தியில் மிகப்பெரிய சட்ட மோதல்கள் பின்தொடர்ந்தன. முரண்படும் அறிவியல் நிபுணர்களை ஒவ்வொரு தொகுதியும் தனக்கென வைத்திருந்தது.
அதேபோல, உலகளாவிய வெப்பம், கண்ணாடி அறை விளைவு, ஓஸோன் அடுக்கு குறைதல் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அதிகமதிகமாக பொதுமக்கள் கவனத்தை பெற்று வருகின்றன. அன்டார்க்டிக்காவுக்கு ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் அபாயங்களைப் பற்றி த கான்பரா டைம்ஸ் செய்தித்தாள் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “மிதக்கும் நுண்ணுயிரிகள், மெல்லுடலிகள் போன்ற எளிய உயிரினங்களை மிக அதிக புற-ஊதா கதிரியக்கம் பாதித்து, பின்னர் உணவுச் சங்கிலியிலுள்ள மற்ற உயிரினங்களையும்கூட பாதிக்க ஆரம்பித்துவிடலாம் என ஆன்வர் தீவிலுள்ள ஐக்கிய மாகாணங்களின் ஒரு அறிவியல் தளமான பாமர் நிலையத்திலுள்ள விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி காட்டுகிறது.” ஆனால் மற்ற அநேக அறிவியல் ஆராய்ச்சிகள் அப்படிப்பட்ட கருத்தை எதிர்ப்பவையாக, ஓஸோன் குறைவு, உலகளாவிய வெப்பம் போன்றவற்றைப் பற்றிய பயங்களை மறைத்துப்போடுகின்றன.
ஆகவே யார் சொல்வது உண்மை? ஒவ்வொரு கூற்றும் அல்லது தர்க்கமும் அறிவியலாளர்களால் நிரூபிக்கப்பட முடியும் அல்லது தவறாக காட்டப்பட முடியும் என தோன்றுகிறது. “அறிவியல் உண்மைகள், நியாயம் மற்றும் தர்க்கரீதியின் நியமங்களால் மட்டுமே எவ்வளவு அதிகம் தீர்மானிக்கப்படுகின்றனவோ அவ்வளவு அதிகம் அச்சமயத்தில் நிலவும் சமூக சூழ்நிலையாலும் தீர்மானிக்கப்படுகின்றன” என்று மறைந்த முன்மாதிரிகள் (ஆங்கிலம்) புத்தகம் கூறுகிறது. மைக்கல் ஃபியூமென்டோ பின்வருமாறு கூறுவதன் மூலம் டையோசினைப் பற்றிய விஷயத்தை சுருக்கமாய் சொல்கிறார்: “நாம் யாருக்கு செவிகொடுக்கிறோம் என்பதைப் பொருத்து நாம் அனைவருமே, நச்சுத்தன்மையாலோ மிக அதிக தவறான தகவலாலோ பாதிக்கப்படக் கூடியவர்கள்.”
என்றபோதிலும் சில மிகப்பெரிய அறிவியல் பேரழிவுகளை வெறுமனே அசட்டை செய்துவிடமுடியாது. அறிவியல் இவற்றிற்காக பதில் சொல்லியே ஆகவேண்டும்.
“அதிகளவு சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பேரழிவு”
ஆகஸ்ட் 29, 1948-ல் வெளியிடப்பட்ட “அறிவாளிகளுக்கு ஓர் அறிவிப்பு” என்பதில் “நம் சமூக வாழ்வின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தர்க்கரீதியான சிந்தனை போதாது என்பதை வேதனைமிக்க அனுபவத்திலிருந்து நாம் கற்றிருக்கிறோம். ஆழமான ஆராய்ச்சியும் மும்முரமான விஞ்ஞான உழைப்பும் மனிதவர்க்கத்திற்கு அடிக்கடி துயரமான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கின்றன, . . . அவை மனிதனையே முழுமையாக அழிக்கும் வழிமுறைகளை கண்டுபிடித்திருக்கின்றன. இது உண்மையில் அதிகளவு சேதத்தை ஏற்படுத்தும் ஒரு பேரழிவுதான்!” என்று கூறுவதன் மூலம் அறிவியலின் கவர்ச்சியற்ற விஷயங்களைப் பற்றி ஆல்பர்ட் ஐயன்ஸ்டீன் குறிப்பிட்டார்.
ஒரு சமீபத்திய அசோஷியேட்டட் பிரஸ் வெளியீட்டில் வந்த செய்தி இவ்வாறு இருந்தது: “மனிதர்கள்மீது கதிரியக்கத்தை சோதித்ததை பிரிட்டன் ஒப்புக்கொள்கிறது.” அரசாங்கமானது ஏறக்குறைய 40 ஆண்டுகளாக மனிதர்கள்மீது கதிரியக்க பரிசோதனைகளை நடத்தியதாக பிரிட்டனின் பாதுகாப்புத்துறை உறுதி செய்தது. இந்த ஆராய்ச்சிகளில் ஒன்று, 1950-களின் மத்திபத்தில் தென் ஆஸ்திரேலியாவிலுள்ள மாரலிங்காவில் நடத்தப்பட்ட அணுகுண்டு பரிசோதனையை உட்படுத்தியது.
“இடிமுழக்கம்” என அர்த்தப்படும் பூர்வீகக் குடிகளின் வார்த்தையிலிருந்து மாரலிங்கா என்ற பெயர் வந்தது. பிரிட்டன் தன் அறிவியல் பரிசோதனைகளை செய்வதற்கு ஏற்றதாக இந்த ஒதுக்குப்புறமான இடம் இருந்தது. முதல் குண்டு வெடிப்பிற்கு பிறகு, அவர்களின் வெற்றிக் களிப்பு எங்கும் பரவியது. மெல்போர்னின் ஒரு செய்தித்தாள் அறிக்கை இவ்வாறு இருந்தது: “[கதிரியக்க] மேகம் மறைகையில், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூ ஜீலாந்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் டிரக்குகளிலும் ஜீப்புகளிலும் வந்து குவிந்தனர். அவர்கள் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து ஐந்தே மைல் தூரத்திலிருந்த பாதுகாப்பு குழிகளில் பதுங்கியிருந்து அதைப் பார்த்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் புன்முறுவல் பூத்திருந்தது. பார்ப்பதற்கு பிக்னிக்கிலிருந்து திரும்பி வருபவர்களைப்போல் இருந்தனர்.”
பிரிட்டனின் டெய்லி எக்ஸ்பிரஸ் செய்தித்தாளின் அறிவியலாளரான சாப்மன் பின்ஷர், “காளான் வடிவ மேகத்திற்காக ஏங்குதல்” என்ற தலைப்புடைய ஒரு பாடலையும்கூட இயற்றினார். அதுமட்டுமல்ல, அச்சோதனை திட்டமிட்டபடியே நடந்தது எனவும் ஆஸ்திரேலியாவிலுள்ள எவருக்கும் கதிரியக்கத்தைப் பற்றிய எந்தப் பயமும் இல்லை எனவும் மந்திரி உறுதியளித்தார். என்றபோதிலும், சில வருடங்கள் கழித்து, கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துகொண்டிருந்தவர்களின் முகத்தில் எந்தச் சிரிப்பும் இல்லை. அதைத் தொடர்ந்து நஷ்ட ஈடு கோரிக்கைகள் மலைபோல் வந்து குவிந்தன. இப்போது “காளான் வடிவ மேகத்திற்காக ஏங்குதல்” அங்கில்லை. கதிரியக்க தூய்மைக்கேட்டின் காரணமாக மாரலிங்கா இன்னமும் தடைசெய்யப்பட்ட இடமே.
நிவாடாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு பரிசோதனை அனுபவங்களும் இதைப்போன்றே இருப்பதாக தோன்றுகிறது. இதில் உட்பட்டிருப்பது ஓர் அறிவியல் பெருந்தவறு அல்ல மாறாக ஓர் அரசியல் விவகாரமே என சிலர் நினைக்கின்றனர். நியூ மெக்ஸிகோவிலுள்ள லாஸ் அலாமோஸில், முதல் அமெரிக்க அணுகுண்டை தயாரிக்கும் பொறுப்பிலிருந்த ராபர்ட் ஓபன்ஹைமர் இவ்வாறு கூறினார்: “ஹைட்ரஜன் பாம் ஒன்றை உபயோகிக்க வேண்டுமா என தீர்மானிப்பது ஒரு விஞ்ஞானியின் பொறுப்பல்ல. அந்தப் பொறுப்பு அமெரிக்க மக்களையும் மேலும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளையுமே சார்ந்திருக்கிறது.”
மற்றொரு விதமான பேராபத்து
மருத்துவத்தில் இரத்தத்தை உபயோகிப்பது, இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு பிரபலமான பழக்கமாகிவிட்டது. அது ஓர் உயிர்-காப்பாளன், அதன் உபயோகம் பாதுகாப்பானதே என அறிவியல் புகழ்ந்தது. ஆனால் எய்ட்ஸ் நோய் ஆரம்பமான பிறகு மருத்துவ உலகம் அதன் ஆழ்ந்த நித்திரையிலிருந்து வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தது. திடீரென்று, உயிர்-காப்பாளனாக சொல்லப்பட்ட அந்தத் திரவம் சிலருக்கு கொலையாளியாக உருவெடுத்தது. ஆஸ்திரேலியா, சிட்னியிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் நிர்வாகி விழித்தெழு!-விடம் இவ்வாறு கூறினார்: “நமக்கு அதிகம் தெரியாத ஒரு பொருளை பல தசாப்தங்களாக உட்செலுத்தி வந்திருக்கிறோம். அதிலிருந்த சில வியாதிகளைக்கூட நாம் அறியாதிருந்தோம். வேறு எதையும் உட்செலுத்தி வருகிறோம் என்று நமக்கு தெரியாது, ஏனென்றால் நாம் அறியாத ஒன்றிற்காக பரிசோதனை செய்யமுடியாது.”
பரிதாபமான விளைவுக்கு குறிப்பிடத்தக்க ஓர் எடுத்துக்காட்டு, மலட்டுத்தன்மையுள்ள பெண்களின் சிகிச்சையில் வளர்ச்சி இயக்குநீர் உபயோகிக்கப்பட்டதாகும். வாழ்வில் முழுமைபெற ஒரு குழந்தை அவசியம் என நினைத்த இப்பெண்கள் இந்தச் சிகிச்சையை ஒரு வரப்பிரசாதமாக கருதினர். பல வருடங்கள் கழித்து, அவர்களில் சிலர் மூளை சிதைவு க்ராயிஸ்ஃபெல்ட்-யாகோப் நோயால் (Creutzfeldt-Jakob disease [CJD]) மர்மமான முறையில் இறந்தனர். குன்றிய வளர்ச்சிக்காக அதே இயக்குநீரால் சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தைகளும் இறக்க ஆரம்பித்தன. இறந்தவர்களின் கபச்சுரப்பியிலிருந்து அந்த இயக்குநீரை விஞ்ஞானிகள் எடுத்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். சில பிணங்களில் CJD வைரஸ் இருந்திருக்கிறது, அதனால் சேமித்து வைத்திருந்த இயக்குநீர் தொகுதிகள் சில கறைப்பட்டு போயின. அந்த இயக்குநீரால் சிகிச்சை பெற்ற சில பெண்கள், CJD நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே இரத்த தானம் செய்திருந்தது அதைவிட இன்னும் கொடுமையான விஷயம். இரத்த சேமிப்பு வங்கிகளில் அந்த வைரஸ் இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது, ஏனென்றால், அதை பரிசோதிப்பதற்கு வழியே இல்லை.
அறிவியலில் எப்போதுமே கொஞ்சம் ஆபத்து உண்டு. ஆகவே, அறிவியல், “பாராட்டுதலும் பயமும், நம்பிக்கையும் மனக்கசப்பும் கலந்த, நவீன தொழில்மயமான சமுதாயத்தின் அநேக பிரச்சினைகளுக்கு காரணமாகவும் இந்த எல்லா பிரச்சினைகளுக்குமான விடிவுகாலத்தின் ஊற்றுமூலமாகவும் கருதப்படுகிறது” என அறிவியலின் இயற்கைக்கு மாறான இயல்பு என்ற புத்தகம் கூறுவது ஒன்றும் ஆச்சரியமல்லவே.
ஆனால் நமக்கு வரும் ஆபத்தை நாம் எவ்வாறு குறைக்கலாம்? அறிவியலை எவ்வாறு சமநிலையோடு நோக்கலாம்? அடுத்த கட்டுரை உதவியாக இருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ஏஜென்ட் ஆரஞ்சு என்பது வியட்நாம் யுத்தத்தில், காட்டின் சில பகுதிகளை இலைகளறச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு களைக்கொல்லி.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
கதிரியக்கத்தைப் பற்றிய எந்தப் பயமும் இல்லை என்று மந்திரி உறுதியளித்தார்
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
மாரலிங்காவில் பரிசோதனை நடத்தப்பட்ட இடம் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு/படம்]
“ஹைட்ரஜன் பாம் ஒன்றை உபயோகிக்க வேண்டுமா என தீர்மானிப்பது ஒரு விஞ்ஞானியின் பொறுப்பல்ல.”
—ராபர்ட் ஓபன்ஹைமர், அணுவியல் விஞ்ஞானி
[படத்திற்கான நன்றி]
Hulton-Deutsch Collection/Corbis
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு/படம்]
“நம் சமூக வாழ்வின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தர்க்கரீதியான சிந்தனை போதாது என்பதை வேதனைமிக்க அனுபவத்திலிருந்து நாம் கற்றிருக்கிறோம்.”
—ஆல்பர்ட் ஐயன்ஸ்டீன், இயற்பியலாளர்
[படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
Richard T. Nowitz/Corbis
[பக்கம் 8, 9-ன் படத்திற்கான நன்றி]
USAF photo