கிறிஸ்தவர்களும் ஜாதியும்
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
“ஜாதி அமைப்புமுறை” என்பதை கேட்டவுடன் உங்கள் மனதிற்கு வருவது என்ன? ஒருவேளை நீங்கள் இந்தியாவைப் பற்றியும் அங்கிருக்கும் லட்சக்கணக்கான ஷெட்யூல்ட் வகுப்பினர் a மற்றும் பழங்குடியினரைப் பற்றியும் நினைக்கலாம். ஜாதி அமைப்புமுறை என்பது இந்து மதத்தின் பாகமாக இருந்தாலும், இதனால் கீழ்ஜாதியினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களிடம் ஏற்பட்ட பாதிப்பை ஒழிக்க இந்து சீர்திருத்தவாதிகள் போராடியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் தங்களைக் கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டும் சர்ச்சுகளில்கூட இந்த ஜாதி வேற்றுமை இருக்கிறது என்று கேள்விப்பட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
இந்தியாவில் ஜாதி வேற்றுமை தோன்றியதற்கான சாத்தியக்கூறுகள்
சமுதாய ஒழுங்கில் ஜனங்களை பிரித்து, அதன் விளைவாக தாங்கள் மேம்பட்டவர்கள் என்று சிலர் எண்ணுவது என்பது இந்தியாவுக்கு மட்டுமே தனித்தன்மை வாய்ந்த ஒன்றல்ல. ஏதாவது ஒரு வகையில் எல்லா கண்டங்களில் உள்ளவர்களும் வகுப்பு வேற்றுமையை எதிர்ப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் உள்ள ஜாதி வேற்றுமை, வித்தியாசமாக இருப்பதற்கு காரணம் 3,000-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட ஒரு சமுதாய அடக்குமுறை மதத்திற்குள் புகுந்ததுதான்.
ஜாதி அமைப்புமுறை எவ்விதம் ஆரம்பித்தது என்பதை துல்லியமாக சொல்லமுடியாவிட்டாலும், இது, நவீன பாகிஸ்தானிலுள்ள சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து தொடங்கியிருக்க வேண்டும் என்று சில வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த இடத்திலிருந்த பூர்வீக ஜனங்களை வடமேற்கிலிருந்து வந்த இனக்குழுக்கள் வெற்றிகொண்டன என்பதுபோல் புதைபொருள் ஆராய்ச்சி காட்டுகிறது; இது “ஆரிய குடியேற்றம்” என்று சாதாரணமாக அழைக்கப்படுகிறது. இதைப்பற்றி த டிஸ்கவரி ஆஃப் இண்டியா என்ற புத்தகத்தில் ஜவஹர்லால் நேரு இவ்விதம் குறிப்பிடுகிறார்: “இதுதான் முதலில் ஏற்பட்ட பெரிய சமுதாய கலப்பு மற்றும் கூட்டிணைவு” இதிலிருந்துதான் “இந்தியாவின் இனங்களும் இந்தியாவின் அடிப்படை நாகரிகமும் தோன்றின.” இந்தக் கலப்பு எல்லா இனமும் சமம் என்ற நிலையை ஏற்படுத்தவில்லை.
த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்விதம் குறிப்பிடுகிறது: “ஏராளமான ஜாதிகள் (ஜாதிஸ், இதன் பொருள் ‘பிறப்புகள்’ ) ஏற்படுவதற்கு முக்கிய காரணம், நான்கு வகுப்புகள் அல்லது வர்ணாக்களுக்குள் கலப்புத் திருமணம் நடைபெறுவதால் (இது இந்து தர்மத்தைக் குறித்த புத்தகங்களில் தடைசெய்யப்படுகிறது) அவற்றை இன்னும் அதிக வகுப்புக்களாக இந்துக்கள் கூர்ந்துநோக்கி பிரித்ததே. நவீன நாளய ஆட்கள் ஊகித்து சொல்வது என்னவென்றால், குடும்ப சடங்குகளை ஆசரிப்பதில் உள்ள வித்தியாசங்கள், இன வித்தியாசம், வேலையில் வித்தியாசம் மற்றும் தனித்தன்மை வாய்ந்த வேலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஜாதிகள் தோன்றின. அநேக நவீன நாளைய அறிஞர்கள், இந்த எளிய வர்ணா முறை என்பது வெறுமனே கொள்கையளவேயான சமுதாய மத குறிக்கோள் மட்டும்தானா என்பதாக சந்தேகிக்கின்றனர்; மேலும் மிகவும் சிக்கலான இந்து சமுதாயம் சுமார் 3,000 ஜாதிகளாகவும் உபஜாதிகளாகவும் பிரிந்திருப்பது பூர்வீக நாட்களிலேயே இருந்திருக்க வேண்டும் என்றும் அடித்துச் சொல்கின்றனர்.”
சில காலங்களுக்கு வகுப்புகளுக்குள்ளே திருமணம் செய்வது அனுமதிக்கப்பட்டது, ஆகவே நிறத்தின் அடிப்படையில் முன்பு இருந்த தப்பெண்ணத்தின் தீவிரம் சற்றே குறைந்தது. ஜாதியைப் பற்றிய கெடுபிடியான சட்டங்களெல்லாம் பின்னால் வந்த மதவளர்ச்சியில் ஏற்பட்டன; இவற்றை வேத எழுத்துக்களிலும் மனு என்ற இந்து சாது ஒருவரின் சட்டத்தொகுப்புகளிலும் (அல்லது மூலக்கோட்பாடுகளிலும்) காணலாம். மேல்ஜாதி ஜனங்களெல்லாம் பிறக்கும்போதே புனிதத்தன்மை உடையவர்களாக கீழ்ஜாதியினரிடமிருந்து வேறுபட்டிருந்ததாக பிராமணர்கள் போதித்தனர். தாழ்த்தப்பட்ட ஜாதியினர் அல்லது சூத்திரர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தின் விளைவாக கடவுள் அவர்களுக்குத் தந்த தண்டனையே இப்படிப்பட்ட கீழான வேலை, என்பதாக போதித்து ஜாதி வேற்றுமையை உடைப்பதற்கு யாராவது முயற்சி செய்தால் அவர்கள் ஜாதி நீக்கம் செய்யப்படுவர் என்று சூத்திரரிடம் அவர்கள் அறிவுறுத்தினர். கலப்பு திருமணம், சமபந்தியிருத்தல், ஒரே தண்ணீர் ஊற்றுமூலத்தை உபயோகித்தல் அல்லது மேல்ஜாதியினர் செல்லும் கோயிலுக்கு ஒரு சூத்திரர் செல்வது போன்றவற்றால் மேல்ஜாதியினர் தங்கள் ஜாதியை இழக்க நேரிடலாம்.
நவீன சமுதாயத்தில் ஜாதி வேற்றுமை
1947-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபின் இந்தியாவின் சமயக்கட்டுப்பாடற்ற அரசாங்கம், ஜாதி பாகுபாடு ஒரு தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் இயற்றியது. பல நூற்றாண்டுகளாக கீழ்ஜாதி இந்துக்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்த அரசாங்கம் ஷெட்யூல்ட் வகுப்பு மற்றும் ஷெட்யூல்ட் பழங்குடியினருக்கு அரசாங்க வேலையிலும் தொகுதிகளிலும் கல்விக்கூடங்களிலும் இட ஒதுக்கீடு செய்தது. இப்படிப்பட்ட இந்து தொகுதியினர்களை “தலித்” என்று அழைக்கின்றனர் அதற்கு “நசுக்கப்பட்டவர் அல்லது மிதிக்கப்பட்டவர்” என்று பொருள். ஆனால் சமீபத்தில் ஒரு செய்தித்தாள் தலைப்பு இவ்விதம் அறிவித்தது, “தலித் கிறிஸ்தவர்கள் இட ஒதுக்கீட்டில் [வேலை மற்றும் கல்லூரிகளில் ஒதுக்கீடு] உரிமை கேட்கிறார்கள்.” இது எவ்வாறு ஏற்பட்டது?
ஜாதி வேற்றுமையால் அநீதி இழைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டதால் இப்படிப்பட்ட கீழ்ஜாதி இந்துக்களுக்கு விரிவான அரசாங்க உதவிகள் வழங்கப்படுகின்றன. ஆகவே ஜாதி வித்தியாசம் பார்க்காத மதங்கள் இப்படிப்பட்ட உதவிகளை எதிர்பார்க்க முடியாது என்று விவாதிக்கப்பட்டது. ஆனாலும் தலித் கிறிஸ்தவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், தாங்கள் கீழ்ஜாதி அல்லது தீண்டத்தகாதவர்களாக இருப்பதாலும், மதம் மாறியதாலும், தாங்களும் இந்துக்களாலும் ‘உடன் கிறிஸ்தவர்களாலும்’ ஒதுக்கப்படுவதாக கூறுகிறார்கள். இது உண்மையா?
கிறிஸ்தவமண்டல மிஷனரிகளும் ஜாதி வேற்றுமையும்
கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் மதத்தைச் சேர்ந்த போர்த்துகல், பிரான்ஸ், பிரிட்டன் மிஷனரிகள் இந்தியாவில் வந்து குடியேறியபோது அநேக இந்துக்களை மதமாற்றினர். எல்லா ஜாதிகளிலிருந்தும் வந்தவர்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களானார்கள்; சில பிரசங்கிகள் பிராமணர்களையும் மற்றவர்கள் தீண்டத்தகாதவர்களையும் கவர்ந்தார்கள். ஆழமாகப் பதிந்துள்ள ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் மீது இந்தக் கிறிஸ்தவமண்டல மிஷனரிகளின் போதகம் மற்றும் நடத்தை ஏற்படுத்திய விளைவு என்ன?
இந்தியாவிலிருந்த ஆங்கிலேயரைப்பற்றி எழுத்தாளர் நெரட் சௌத்திரி இவ்விதம் சொல்கிறார்: சர்ச்சுகளில், “இந்திய சபையினர் ஐரோப்பியருடன் சமமாக அமர முடியாது. மேம்பட்ட இனம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்ததை அவர்களுடைய கிறிஸ்தவம் மறைத்துவிடவில்லை.” இதேவிதமான எண்ணத்தை வெளிப்படுத்துபவராக, ஒரு மிஷனரி 1894-ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய மாகாணங்களின் போர்ட் ஆஃப் ஃபாரின் மிஷன்ஸ்க்கு பின்வருமாறு தெரிவித்தார், கீழ்ஜாதியினரை மதமாற்றம் செய்வதானது, “சர்ச்சுக்குள் குப்பைக்கூளத்தை சேர்த்துக்கொள்வதே.”
ஆகவே பூர்வீகத்தில், மிஷனரிகள் தங்கள் இனத்தை மேன்மையாக எண்ணியது, சர்ச் போதகத்தோடு பிராமண போதகங்களை கலந்தது ஆகியவையே பெயர்-கிறிஸ்தவர்கள் இந்தியாவில் ஜாதி வேறுபாட்டை வெளிப்படையாக பின்பற்ற வழிநடத்தியது.
இன்றுள்ள சர்ச்சுகளில் ஜாதி வேற்றுமை
1991-ஆம் ஆண்டு நடந்த இந்திய கத்தோலிக்க பிஷப்புகளுக்கான மாநாட்டில் கத்தோலிக்க ஆர்ச் பிஷப் ஜியார்ஜ் ஸிர் இவ்விதம் குறிப்பிட்டார்: “ஷெட்யூல்ட் வகுப்பிலிருந்து மதம் மாறியவர்களை மேல்ஜாதி இந்துக்கள் மட்டுமல்ல மேல்ஜாதி கிறிஸ்தவர்களும் தாழ்த்தப்பட்டவர்களாகவே நடத்துகிறார்கள். . . . சர்ச்சுகளிலும் கல்லறைகளிலும் அவர்களுக்கென்று தனிப்பட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கலப்பு திருமணங்கள் வெறுக்கப்படுகின்றன . . . பாதிரியார்கள் மத்தியிலும் ஜாதிவேறுபாடு தலைவிரித்தாடுகிறது.”
ஒரு ஐக்கியப்பட்ட புராட்டஸ்டன்ட் சர்ச்சான தென் இந்திய திருச்சபையின் பிஷப் எம். அசாரியா, தி அன்-கிறிஸ்டியன் சைட் ஆஃப் தி இண்டியன் சர்ச் என்ற புத்தகத்தில் இவ்விதம் சொன்னார்: “ஷெட்யூல்ட் வகுப்பு (தலித்) கிறிஸ்தவர்கள் அவ்விதம் பிறந்த ஒரே காரணத்திற்காக, பல்வேறு சர்ச்சுகளில் தங்களுடைய உடன் கிறிஸ்தவர்களால் ஒதுக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்; அவர்களுடைய 2-வது 3-வது அல்லது 4-வது தலைமுறைக்கு பிறகும் இதே நிலை தொடர்கிறது. சர்ச்சுகளில் இருக்கும் மேல்ஜாதி கிறிஸ்தவர்கள் சிறுபான்மையாக இருந்தாலும், இப்படிப்பட்ட ஜாதிவேற்றுமைகளை எத்தனையோ சந்தததிகளுக்கு கடத்துகிறார்கள், இவர்கள் கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும் செயல்முறையால் மாற்றமடையவில்லை.”
இந்தியாவில் பிற்பட்டோரின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மண்டல் கமிஷன் கவனித்தது என்னவென்றால், கேரளாவில் கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டுவோர், “ஜாதியின் அடிப்படையில் வித்தியாசமான இனத்தொகுதிகளாகப் பிரிந்திருக்கின்றனர். . . . மதமாறிய பிறகும் தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து மதமாறியவர்கள் தொடர்ந்து ஹரிஜன்களாகவேb நடத்தப்படுகிறார்கள் . . . ஒரே சர்ச்சின் அங்கத்தினரான சிரியன் மற்றும் புலையர் வகுப்பினர் தங்களுடைய மத ஆராதனைகளை தனித்தனியே வெவ்வேறுபட்ட கட்டடங்களில் நடத்தினார்கள்.”
ஆகஸ்ட் 1996-ல் இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கை, தலித் கிறிஸ்தவர்களைப்பற்றி இவ்விதம் அறிவித்தது: “தமிழ் நாட்டிலே இவர்கள் தங்கும் இடம் உயர் வகுப்பினரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கிறது. கேரளாவில் இவர்கள் பிரதானமாக நிலமில்லாத் தொழிலாளிகள், சிரியன் கிறிஸ்தவர்களுக்காகவும் மேல்ஜாதி நிலச்சொந்தக்காரர்களுக்காகவும் வேலை செய்கிறார்கள். தலித்துகளும் சிரியன் கிறிஸ்தவர்களும் சமபந்தியிருப்பதோ அல்லது கலப்பு திருமணம் செய்வதோ நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அநேக இடங்களில் தலித்துகள் தங்களுடைய சர்ச்சான, ‘புலையர் சர்ச்’ அல்லது ‘பறையர் சர்ச்சில்’ வணங்குகிறார்கள்.” இவை ஜாதி பிரிவின் பெயர்கள்.
அதிருப்தியின் வெளிக்காட்டுதல்
பொதுவுடைமை கோட்பாட்டை அடிப்படையாக உடைய தொகுதிகளில் ஒன்றான ஃபேஸ் (FACE [த ஃபோரம் அகைன்ஸ்ட் கிறிஸ்டியன் எக்ஸ்ப்ளாய்டேஷன்]), தலித் கிறிஸ்தவர்களுக்காக அரசாங்க உதவிகளை நாடுகிறது. அதன் பிரதான அக்கறை என்னவென்றால் மதமாறிய கிறிஸ்தவர்களுக்கு பொருளாதார உதவி. மற்றவர்கள், சர்ச்சுகளுக்குள் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்பதில் அதிக அக்கறையாக இருக்கிறார்கள். இரண்டாம் போப் ஜான் பாலுக்கு எழுதிய கடிதத்தில் சுமார் 120-பேர் கையெழுத்திட்டு பின்வருமாறு குறிப்பிட்டனர், “ஜாதி வேற்றுமையிலிருந்து விடுதலைபெறவே கிறிஸ்தவத்தை தழுவினோம்,” ஆனால், அவர்கள் கிராம சர்ச்சிற்குள் வருவதற்கோ அல்லது பூசையில் பங்குபெறுவதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் ஒரே தெருவில் வீடுகளைக் கட்டியாகவேண்டும் என்ற கட்டாய நிலை; அதில் எந்த மேல்ஜாதி கிறிஸ்தவனோ அல்லது பங்குத்தந்தையோ கால் வைப்பதுகூட கிடையாது! இதேவிதமாக மனக்கசப்படைந்த ஒரு கத்தோலிக்க பெண் இவ்விதம் கூறுகிறார்: “ஒரு நல்ல கல்லூரியில் என் மகன் படிக்கவேண்டும் என்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயம். ஆனால் அதைவிட முக்கியமானது அவன் தன்னுடைய உடன் [கத்தோலிக்க] சகோதரர்களால் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதே.”
அநேகர் தலித் கிறிஸ்தவர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும்போது மற்றவர்கள் பொறுமையை இழக்கின்றனர். விஷ்வ இந்து பரிஷத் (உலக இந்து அமைப்பு) போன்ற அமைப்புகள் மதம் மாறிய கிறிஸ்தவர்களை மறுபடியும் இந்துக்களாக்குவதற்கு முயற்சி செய்கின்றன. ஒரு சமய சடங்கில் 10,000-பேர் கலந்து கொண்டனர், அதில் 600-க்கும் அதிகமான இப்படிப்பட்ட “கிறிஸ்தவ” குடும்பங்கள் மறுபடியும் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டன என்பதாக இண்டியன் எக்ஸ்பிரஸ் அறிவிக்கிறது.
உண்மை கிறிஸ்தவ மார்க்கம்
சர்ச் அமைப்புகளின் மிஷனரிகள் அன்பின் அடிப்படையிலான கிறிஸ்துவின் போதகங்களை போதித்திருந்தால் இப்பொழுது “பிராமண கிறிஸ்தவர்கள்” அல்லது “தலித் கிறிஸ்தவர்கள்” அல்லது “பறையர் கிறிஸ்தவர்கள்” என இருந்திருக்கமாட்டார்கள். (மத்தேயு 22:37-40) தலித்துகளுக்கென்று தனி சர்ச்சுகளோ அல்லது தனியாக உணவருந்துவதோ இருந்திருக்காது. வகுப்பு வேறுபாடு என்ற எல்லையைக் கடந்து, விடுதலையளிக்கும் இந்த பைபிள் போதகம் என்ன?
“உங்கள் தேவனாகிய யெகோவா தேவாதி தேவனும் . . . , அவர் யாருக்கும் பட்சபாதம் பண்ணுகிறவர் அல்ல, லஞ்சத்தை ஏற்றுக்கொள்பவரும் அல்ல.”—உபாகமம் 10:17, NW.
“சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரேகாரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 1:10.
“நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
எல்லா மனிதரையும் ஒரே மனிதனிலிருந்து தேவன் உருவாக்கினார் என்பதாக பைபிள் போதிக்கிறது. மேலுமாக பைபிள் குறிப்பிடுவது என்னவென்றால் அந்த ஒரே மனிதனிலிருந்து வந்த மனித சந்ததியார் அனைவரும் அவரை, ‘தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.’—அப்போஸ்தலர் 17:26, 27.
வகுப்பு வேறுபாடுகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்குள் புகுந்தபோது தெய்வீக ஏவுதலின் அடிப்படையில் பைபிள் எழுத்தாளர் யாக்கோபு அவர்களை முழுமையாக கண்டனப்படுத்தினார். அவர் சொன்னார்: “உங்களுக்குள்ளே வகுப்பு பிரிவினைகள் இருக்கின்றதே, மேலும் நீங்கள் நீதிபதிகளாகி பொல்லாத முடிவுகளை வழங்குகிறீர்கள் அல்லவா?” (யாக்கோபு 2:1-4, NW) உண்மை கிறிஸ்தவ போதகம் எந்தவிதமான ஜாதிவேறுபாட்டுக்கும் இடமளிக்காது.
புதிய உலகத்திற்கேற்ற சிந்தனையின் அவசியம்
லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், பல மதங்களிலிருந்து கற்றுக்கொண்ட தங்களுடைய முந்தைய நம்பிக்கைகளையும் நடத்தைகளையும் மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாக இருக்கின்றனர். உயர்வு மனப்பான்மையையோ தாழ்வு மனப்பான்மையையோ ஒருவேளை அவை குடியேற்றங்களாக வந்து பெற்ற வெற்றி, இனப்பற்று, நிறவேற்றுமை, அல்லது ஜாதி வேற்றுமை ஆகியவற்றை பைபிளின் போதகம் அவர்களுடைய இருதயத்திலிருந்தும் மனதிலிருந்தும் நீக்கியிருக்கிறது. (ரோமர் 12:1, 2) அவர்கள் பைபிளில் குறிப்பிட்டுள்ள ‘நீதி வாசமாயிருக்கும் புதிய பூமி’ என்ன என்பதைத் தெளிவாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். பூமியில் துன்பப்படுகிற ஏராளமான ஆட்களுக்கு என்னே ஒரு அருமையான எதிர்பார்ப்பு!—2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்புகள்]
a “ஷெட்யுல்ட் வகுப்பினர்” என்பது இந்துக்களில் கீழ்ஜாதியினர் அல்லது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், தீண்டத்தகாதவர்களாக சமுதாயரீதியிலும் பொருளாதாரரீதியிலும் ஒதுக்கப்பட்டவர்கள்.
b தாழ்த்தப்பட்டவர்களைக் குறிப்பதற்காக காந்திஜியால் உருவாக்கப்பட்ட ஒரு பதம். இதன் பொருள், “ஹரியின் ஜனங்கள்,” விஷ்ணு தெய்வத்தின் ஒரு பெயர்.
[பக்கம் 25-ன் குறிப்பு]
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும் எந்த ஜனத்திலாயினும் அவருக்கு பயந்திருந்து நீதியை செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” அப்போஸ்தலர் 10:34, 35
[பக்கம் 23-ன் பெட்டி/படம்]
எப்படிப்பட்ட வேதனை?
கிறிஸ்தவர்களாக உரிமை பாராட்டுபவர்கள், ஒருவரை தாழ்த்தப்பட்டவராக நடத்தினால் அது எப்படிப்பட்ட வேதனையாக இருக்கும்? ஒரு கிறிஸ்தவர், இவருடைய முன்னோர் இந்து மதத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியான சேர்மார் அல்லது புலையர் வகுப்பிலிருந்து மதமாறியவர்கள்; சில வருடங்களுக்கு முன்பு இவருடைய மாநிலமாகிய கேரளாவில் இவருக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை தெரிவிக்கிறார்:
ஒரு திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தேன், அங்கு வந்திருந்த அநேக விருந்தினர் சர்ச்சுக்கு செல்லும் அங்கத்தினர்கள். வரவேற்பில் என்னை அவர்கள் பார்த்தவுடன் அங்கே குழப்பம் ஏற்பட்டது; ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச்சை சேர்ந்தவர்கள், நான் அந்த இடத்தைவிட்டு செல்லவில்லையென்றால் வரவேற்பில் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றார்கள்; ஏனெனில் அவர்கள் ஒரு புலையனோடு சேர்ந்து சமபந்தியிருக்கமாட்டார்கள். மணப்பெண்ணின் தந்தை அவர்களுடைய இறுதி எச்சரிக்கைக்கு செவிகொடுக்காததால் அவர்கள் அனைவரும் வரவேற்பை புறக்கணித்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்ற பிறகு உணவு பரிமாறப்பட்டது. ஆனால் உணவு பரிமாறியவர்கள் நான் சாப்பிட்ட வாழை இலையை டேபிளிலிருந்து எடுக்க முடியாது, டேபிளை சுத்தம் செய்ய முடியாது என்றனர்.
தென் இந்தியாவில் இருக்கும் ஒரு சர்ச், இங்கு தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமே கூடுகிறார்கள்