பெண் என்ற பேதம்
மேற்கு ஆப்பிரிக்க தொழில் அதிபரால் விலைகொடுத்து வாங்கப்படுகிறது, ஒன்பது வயது பிள்ளை ஒன்று. ஆசியாவின் பாலைவன மணலில் உயிருடன் புதைக்கப்படுகிறது, ஒரு பச்சிளம் குழந்தை. கீழை நாடு ஒன்றின் அனாதை ஆசிரமத்தில் கேட்பாரில்லாமல் நாதியற்று பட்டினியால் சாகிறது, இன்னும் நடை பயிலாத ஒரு குழந்தை. நெஞ்சைப் பிளக்கும் இந்தச் சம்பவங்களில் உள்ள ஓர் ஒற்றுமை என்ன தெரியுமா? பாதிக்கப்பட்ட அம்மூன்றுமே பெண் பிள்ளைகள். பெண்களாய் பிறந்துவிட்ட காரணத்திற்காக வேண்டாமென ஒதுக்கப்பட்டவர்கள்.
இவை அபூர்வ சம்பவங்களே அல்ல. ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான சிறுமிகளும் இளம் பெண்களும் அடிமைகளாய் விற்கப்படுகிறார்கள்; சிலர் வெறும் 15 டாலர் என்ற மட்டரகமான விலைக்கும்கூட விற்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வருடமும், பெரும்பாலும் ஆசியாவில், லட்சக்கணக்கான சிறுமிகள் செக்ஸ் தொழிலுக்கு விற்கப்படுகிறார்கள் அல்லது அத்தொழில் செய்ய வற்புறுத்தப்படுகிறார்கள் என அறிக்கை செய்யப்படுகிறது. போதாத குறைக்கு, 10 கோடி சிறுமிகள் “காணாமல் போகின்றனர்” என அநேக நாடுகளின் ஜனத்தொகை விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் காரணம், கருச்சிதைவு, சிசுக்கொலை, அல்லது பெண்களை ஒரேயடியாக புறக்கணித்தல்.
தொன்றுதொட்டே அநேக நாடுகளில் பெண்களை இப்படித்தான் நடத்திவந்திருக்கிறார்கள். சில இடங்களில் இன்னமும் இப்படித்தான் நடத்துகிறார்கள். ஏன்? ஏனென்றால் இப்படிப்பட்ட நாடுகளில் ஆண் பிள்ளைகளைத்தான் உயர்வாக மதிக்கிறார்கள். ஆண் பிள்ளையால், குடும்ப வம்சத்தைக் காத்து, பரம்பரைச் சொத்தைப் பெற்று, பெற்றோருக்கு வயதாகிவிடும்போது அவர்களை கவனிக்க முடியுமே என்று அங்குள்ளவர்கள் நினைக்கின்றனர்; ஏனென்றால் அந்நாடுகளின் அரசு, வயதானோருக்கு பெரும்பாலும் ஓய்வூதியம் அளிப்பதில்லை. “பெண்ணை வளர்ப்பதும், பக்கத்துவீட்டு செடிக்கு நீர்ப்பாய்ச்சுவதும் ஒன்றுதான்” என ஓர் ஆசிய பழமொழி சொல்கிறது. அவள் வளர்ந்த பிறகு, கல்யாணம் செய்துகொண்டு பிரிந்துசெல்வாள் அல்லது விலைமகளாகக்கூட விற்கப்படுவாள்; இப்படியாக பெற்றோருக்கு வயதாகிவிடுகையில் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்வதற்கு அவள் பிரயோஜனம் ஆவதில்லை.
குறைவான பங்கு
வறுமைமிக்க நாடுகளில், இந்த மனப்பான்மையின் காரணமாக குடும்பத்திலுள்ள பெண்களுக்கு உணவும் உடல் பராமரிப்பும் பள்ளிப் படிப்பும் குறைவாகவே வழங்கப்படுகிறது. சிறுமிகளில் 14 சதவீதத்தினர் ஊட்டச்சத்துக் குறைவினால் அவதிப்பட்ட அதேசமயத்தில் சிறுவர்களில் வெறும் 5 சதவீதத்தினரே அவ்வாறு அவதிப்பட்டனர் என ஓர் ஆசிய நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். சில நாடுகளில், சிறுமிகளைக் காட்டிலும் இருமடங்கு சிறுவர்கள் ஹெல்த் சென்டர்களுக்கு அழைத்துவரப்படுகின்றனர் என ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) வெளியிட்ட ஓர் அறிக்கை விளக்குகிறது. ஆப்பிரிக்காவிலும் தெற்கு மற்றும் மேற்கு ஆசியாவிலுமுள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமான இளம் பெண்கள் படிப்பறிவில்லாதவர்கள். “வளரும் நாடுகளில் ஆண் பெண் என்ற பேதம் பயங்கரமாய் தலைவிரித்தாடுகிறது” என UNICEF-ன் முன்னாள் தூதரான, காலம்சென்ற ஆட்ரி ஹெப்பர்ன் புலம்பினார்.
இந்த ‘ஆண் பெண் என்ற பேதம்,’ சிறுமிகள் வயசுப் பெண்களாகும்போது மறைந்துவிடுவதில்லை. வறுமை, வன்முறை, ஓயாத உழைப்பு, இவைதான் அநேகமாய் ஒரு பெண் படும் பாடு, சரியாகச் சொன்னால் அவள் பெண்ணாய் பிறந்ததால் படும் பாடு. உலக வங்கியின் தலைவர் இவ்வாறு விளக்கினார்: “உலக வேலைகளில் மூன்றில் இரண்டு பகுதியை பெண்களே செய்கின்றனர். . . . ஆனாலும் உலக வருமானத்தில் பத்தில் ஒரு பங்கையே அவர்கள் சம்பாதிக்கிறார்கள்; அவர்களது உடைமை, உலகின் சொத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவே. ஏழைகளில் பரம ஏழைகள் அவர்கள்.”
ஐக்கிய நாட்டு அறிக்கை ஒன்றின்படி, ஏழ்மையின் அடிமட்டத்தில் வாழும் 130 கோடி உலக மக்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் மகளிரே. “இந்நிலைமை இன்னும் மோசமாகிக்கொண்டே போகிறது. ஒரு வேளை சோற்றுக்கே திண்டாடுகிற கிராமத்துப் பெண்களின் எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50% ஆக அதிகரித்திருக்கிறது. வறுமையில் வாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிறது” என அந்த அறிக்கை கூடுதலாக சொன்னது.
அநேக பெண்களின் வாழ்க்கையையே பாழாக்கும் வன்முறை, வறுமையின் கொடுமையைக் காட்டிலும் வேதனைமிக்கது. முக்கியமாய் ஆப்பிரிக்காவில், 10 கோடி சிறுமிகளின் பிறப்புறுப்பு சிதைக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளில் பரவலாய் நிகழும் கற்பழிப்புக்கு சில இடங்களில் அத்தாட்சிப் பதிவுகளே இல்லை. இருந்தாலும், சில நாடுகளில் ஒவ்வொரு 6 பெண்களுக்கு ஒருத்தி என்ற வீதத்தில் கற்பழிப்பு நடந்துவருகிறது என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. போர்கள் ஆண்களையும் பெண்களையும் ஒரேவிதமாய் பாதிக்கின்றன; ஆனால் வீடுகளை விட்டு ஓடும்படி வற்புறுத்தப்படும் பெரும்பாலான அகதிகள் பெண்களும் பிள்ளைகளுமே.
தாயாகவும் சம்பாதிப்பவளாகவும்
குடும்ப பாரத்தை அதிகமாய் சுமப்பது பெரும்பாலும் தாயே. அவள் நீண்ட நேரம் வேலை பார்க்கலாம்; சொல்லப்போனால், அவளது ஒரே சம்பாத்தியத்தில் குடும்பம் நடக்கலாம். ஆப்பிரிக்காவிலுள்ள சில கிராமங்களில் பாதி குடும்பங்களை பெண்கள்தான் தலைமையேற்று நடத்துகிறார்கள். மேற்கத்திய நாடுகளின் சில பகுதிகளில், பெருமளவு குடும்பங்களில் பெண்களே தலைமை வகிக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல், முக்கியமாய் வளரும் நாடுகளில், தண்ணீரையும் விறகுகளையும் கொண்டுவருவது போன்ற மிகக் கடினமான வேலைகளை ஆண்டாண்டு காலமாய் பெண்களே செய்துவருகின்றனர். மரங்களை வெட்டுவதும் மேய்ச்சலுக்காக பெருமளவு காடுகளை அழிப்பதும் இந்த வேலைகளை அதிக கடினமாக்கியுள்ளன. வறட்சி தாக்கியுள்ள சில நாடுகளில், பெண்கள் ஒவ்வொரு நாளும் விறகை எடுத்துவர மூன்று மணிநேரங்களையோ அல்லது அதற்கும் அதிகமாகவோகூட செலவிடுகின்றனர்; தண்ணீர் கொண்டுவர நான்கு மணிநேரங்களை செலவிடுகின்றனர். அலுப்புத்தட்டும் இந்த வேலைகளை முடித்த பிறகுதான், வீட்டிலோ வயலிலோ செய்ய வேண்டிய வேலையை அவர்களால் ஆரம்பிக்க முடியும்.
வறுமை, பசி, அல்லது சச்சரவே அன்றாட காட்சியாய் இருக்கும் நாடுகளில் ஆண்கள் பெண்கள் என அனைவருமே அவதிப்படுகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் பெண்களே ஒப்பிடமுடியாதளவுக்கு அவதிப்படுகிறார்கள். இந்நிலைமை என்றாவது மாறுமா? எல்லா இடங்களிலும் பெண்கள் கண்ணியத்தோடும் தயவோடும் நடத்தப்படும் காலம் வரும் என்பதை உண்மையிலேயே எதிர்பார்க்கலாமா? பெண்கள் தங்கள் நிலைமையை முன்னேற்றுவிக்க இப்போது ஏதாவது செய்ய முடியுமா?
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
சின்னஞ்சிறு விலைமாதர்—யார் பொறுப்பாளி?
ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் பிள்ளைகள், பெரும்பாலும் சிறுமிகள் விபச்சாரத்தில் தள்ளப்படுகின்றனர் அல்லது அதற்காக விற்கப்படுகின்றனர். தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த அராயா, a தனது வகுப்பு மாணவிகளுக்கு என்ன நடந்தது என்பதை நினைவுபடுத்திச் சொல்கிறாள். “குல்வாடி 13 வயசிலேயே விபச்சாரி ஆகிவிட்டாள். அவள் ரொம்ப நல்ல பெண். ஆனால் அவள் அம்மா அடிக்கடி குடிப்பார், சீட்டாடுவார். அதனால் தன் மகளைக் கவனிக்க நேரம் இல்லை. ஆகவே ஆம்பளைங்ககிட்ட போய் காசு சம்பாதித்து வரும்படி அவள் அம்மா அவளை தூண்டினார். சீக்கிரத்திலேயே குல்வாடி விபச்சாரி ஆனாள்.
“என் வகுப்பில் படித்த இன்னொருத்திதான் சிவூன். அவள் வடபிரதேசத்திலிருந்து வந்தவள். வெறும் 12 வயதாயிருக்கும்போதே அவளது அப்பா அம்மா விபச்சாரம் செய்ய அவளை தலைநகருக்கு அனுப்பிவைத்தனர். அவள் பெற்றோர் கையெழுத்திட்டிருந்த ஒப்பந்தத்தின்படி அவள் இரண்டு வருடங்கள் விபச்சாரம் செய்யவேண்டியிருந்தது. சிவூனுக்கும் குல்வாடிக்கும் ஏற்பட்டது அபூர்வம் ஒன்றும் இல்லை; ஏனென்றால் என் வகுப்பிலிருந்த 15 பேரில் 5 பேர் விபச்சாரிகள் ஆனார்கள்.”
வூனைப் போலவும் குல்வாடியைப் போலவும் லட்சக்கணக்கான சின்னஞ்சிறுசுகள் இருக்கிறார்கள். “செக்ஸ் தொழில், வேகமாய் பரவிவரும் ஒரு வியாபார சந்தையாகவே ஆகியிருக்கிறது” என புலம்புகிறார் UNESCO-வின் (ஐ.நா. கல்வி, விஞ்ஞான கலாச்சாரக் கழகம்) அங்கத்தினரான வாஸிலா டாம்சாலி. “14 வயது சிறுமியை விற்பது சர்வசாதாரணமான, புளித்துப்போன சமாச்சாரமாகிவிட்டது.” இந்தச் சிறுமிகள் விபச்சார அடிமைகளாய் விற்கப்பட்ட பின்பு, அந்தப் பணத்தை அடைப்பது அவர்களுக்கு அவ்வளவு சாமானியம் அல்ல. மஞ்சுவை அவள் அப்பா 12 வயதிலேயே விற்றுவிட்டார்; ஏழு ஆண்டுகள் விபச்சாரம் செய்தும் இன்னமும் அவள் கிட்டத்தட்ட 12,000 ரூபாய் கடன்பட்டிருக்கிறாள். “என்னால் எதையுமே செய்ய முடியவில்லை—வசமாக மாட்டிக்கொண்டேன்” என அவள் சொல்கிறாள்.
அச்சிறுமிகளுக்கு, தங்களை அடிமைகளாக்கும் விபச்சாரத் தரகர்களிடமிருந்து தப்பிப்பது கஷ்டமாய் இருப்பதைப் போலவே எய்ட்ஸிலிருந்து தப்பிப்பதும் மிகக் கஷ்டம். தென்கிழக்கு ஆசியாவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, சிறார் விபச்சாரிகளில் 33 சதவீதத்தினர் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். 500 கோடி டாலர் மதிப்புள்ள விபச்சாரத் தொழில் செழித்தோங்கும்வரை, இச்சிறுமிகள் தொடர்ந்து இவ்வாறு அவதிப்படுவர் என எதிர்பார்க்கலாம்.
இந்தக் கொடூரமான பழக்கத்திற்கு யார் பொறுப்பாளி? விபச்சாரத்திற்கு சிறுமிகளை வாங்குபவர்கள் அல்லது விற்பவர்கள் பெருமளவு குற்றத்தை சுமக்கிறார்கள் என்பது தெளிவான விஷயம். அதேசமயத்தில் காம இச்சைகளை தீர்த்துக்கொள்வதற்காக சிறுமிகளைப் பயன்படுத்தும் கேடுகெட்ட ஆண்களும் கண்டனத்திற்கு உரியவர்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்டவர்களே இல்லையென்றால், சிறார் விபச்சாரம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
[அடிக்குறிப்பு]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[படம்]
ஒவ்வொரு வருடமும் சுமார் பத்து லட்சம் இளம் பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்படுகிறார்கள்
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
மத்திய ஆப்பிரிக்காவில் பெண் செய்யும் ஒருநாள் வேலை
குடும்பத் தலைவி காலை ஆறு மணிக்கு எழுந்து, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் டிபன் தயாரிக்கிறாள்; அதை அவர்கள் சுமார் 10 மணிக்கு சாப்பிடுகின்றனர். பக்கத்திலுள்ள ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துவந்த பிறகு, தன் வயலுக்கு செல்கிறாள்; அங்கு செல்ல ஒருமணிநேரம் நடக்க வேண்டி இருக்கலாம்.
பிற்பகல் நான்கு மணிவரைக்கும் அவள் பயிர் செய்து, களை பிடுங்கி, வயலுக்கு நீர்ப்பாய்ச்சுகிறாள்; இடையில் தான் எடுத்துவந்திருக்கும் உணவை அவசரமாய் சாப்பிட்டுவிட்டு பின் மறுபடியும் வேலையில் மூழ்குகிறாள். பகலில் மிஞ்சியிருக்கும் இரண்டு மணிநேரங்களை விறகு வெட்டுவதற்கும் குடும்பத்திற்காக மரவள்ளியையோ மற்ற காய்கறிகளையோ பறிப்பதற்கும் செலவிடுகிறாள்; அவை அனைத்தையும் வீட்டிற்கு சுமந்துசெல்கிறாள்.
பொதுவாக அந்தி மயங்கும் நேரத்தில் வீடு திரும்புகிறாள். இப்போது ராத்திரி உணவு தயாரிக்கவேண்டும், அதற்கு இரண்டு மணிநேரங்களோ அதற்கும் அதிகமாகவோ எடுக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆற்றில் துணிகளைத் துவைத்து, அவை காய்ந்தவுடன் இஸ்திரி போடும் வேலை நடக்கும்.
உயிரைக் கொடுத்து செய்யும் இந்த எல்லா வேலைக்காகவும் அவளது கணவன் பாராட்டுவதே இல்லை, அவள் கொடுக்கும் ஆலோசனையை சட்டைசெய்வதும் இல்லை. மிஞ்சிப்போனால், அவள் பயிர்செய்ய ஆரம்பிப்பதற்கு உதவுபவனாய், மரங்களை வெட்டுவது அல்லது புதர்களை எரிப்பது போன்ற வேலைகளை செய்வான்; ஆனால் அதற்கு மேல் எதிர்பார்க்க முடியாது. குளிப்பதற்காக பிள்ளைகளை எப்போதாவது ஆற்றங்கரைக்கு அழைத்துச்செல்கிறான். அதுபோக கொஞ்சம் வேட்டையாடுவான், மீன்பிடிப்பான். ஆனால் பெரும்பாலும் மற்ற கிராமத்து ஆட்களுடன் வெட்டியாக பேசியே பொழுதைக் கழிக்கிறான்.
முடிந்தால் ஒருசில வருடங்கள் கழித்து, கணவன் ஒரு புதிய, இளம் மனைவியை வீட்டிற்கு அழைத்துவருவான்; பாசத்தையெல்லாம் அவள்மீதே பொழிவான். ஆனாலும் அவனது முதல் மனைவியோ உடல்நலம் குன்றும்வரை அல்லது சாகும்வரை எப்போதும்போல் பம்பரமாய் வேலைசெய்யும்படி எதிர்பார்க்கப்படுவாள்.
ஆப்பிரிக்க பெண்களுக்கு எந்நாளும் ஓயாத வேலை