உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 4/8 பக். 12-14
  • பெண்ணின் எதிர்காலம் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பெண்ணின் எதிர்காலம் என்ன?
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கணவர்களுக்கும் தந்தைகளுக்கும் உணர்த்துதல்
  • பெண்கள்பேரில் கடவுள் காட்டும் அக்கறை
  • மரியாதையைக் கண்டிருக்கும் பெண்கள்
  • ஒரு நிரந்தர தீர்வு
  • கடவுளுடைய பார்வையில் பெண்கள் மதிப்புக்குரியவர்கள்
    காவற்கோபுரம்: பெண்கள்மேல் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
  • கிறிஸ்தவப் பெண்கள் கனமும் மரியாதையும் பெறத் தகுதியுடையவர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • கடவுளின் பூர்வகால ஊழியர்கள் மத்தியில் பெண்களின் மதிப்புவாய்ந்த பங்கு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிற பெண்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 4/8 பக். 12-14

பெண்ணின் எதிர்காலம் என்ன?

“மனித சரித்திர பக்கங்களைப் புரட்ட புரட்ட, பெண்களுக்கு எதிராக ஆண்கள் இழைத்த கொடுமையின் பதிவுகளையும் ஆணாதிக்கத்தின் பதிவுகளையுமே பார்க்க முடிகிறது.” இவ்வாறு, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து 150 வருடங்களுக்கு முன் செனிக்கா ஃபால்ஸ், நியூ யார்க்கில் செய்யப்பட்ட பிரகடனம் (Declaration of Sentiments) தெரிவித்தது.

அதன்பின் முன்னேற்றம் இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லைதான். என்றாலும், ஐக்கிய நாட்டின் பிரசுரமான உலக பெண்கள் 1995-ன்படி இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது. “பெண்களும் ஆண்களும் இரு வெவ்வேறு உலகங்களில் வாழ்வதுபோலவே நடத்தப்படுகிறார்கள்; கல்வி, வேலைவாய்ப்பு, உடல்பராமரிப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு, பொழுதுபோக்கு நேரம் ஆகியவற்றில் இருசாராருக்கும் சமத்துவம் இல்லை” என்று அது அறிவிப்பு செய்கிறது.

இதைக் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால், பெண் உரிமையைப் பாதுகாப்பதற்கென தேசங்கள் சட்டங்களை இயற்றியுள்ளன. ஆனால் சட்டங்களால் இதயங்களை மாற்ற முடியாது; அதுதானே அநீதி மற்றும் தப்பெண்ணத்தின் பிறப்பிடமாய் இருக்கிறது. உதாரணத்திற்கு விபச்சாரம் செய்யும் சிறுமிகளின் கதியை நினைத்துப் பாருங்கள். உலகெங்கும் காணப்படும் இந்த வெட்கக்கேட்டைப் பற்றி நியூஸ்வீக் இப்படிச் சொன்னது: “பிள்ளைகளை காம இச்சைக்காக தவறாக பயன்படுத்துவதை தடுக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் என்னவோ நல்ல நோக்கமுள்ளவைதான், ஆனால் அவை பெரும்பாலும் பிரயோஜனமற்றவையாகவே இருக்கின்றன.” அதேவிதமாய், சட்டங்கள் இருப்பதுதானே வன்முறையைத் தடுப்பதில்லை. “பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறை எங்கும் பரவியுள்ள உலகளாவிய பிரச்சினை என அத்தாட்சி காட்டுகிறது” என்பதாக குறிப்பிடுகிறது மனித மேம்பாட்டு அறிக்கை 1995 (ஆங்கிலம்). “பெரும்பாலான சட்டங்களுக்கு வன்முறையை தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லை—தற்போதைய கலாச்சார மற்றும் சமூக மதிப்பீடுகள் மாறினால்தான் அது முடியும்.”—நேரெழுத்துக்கள் எங்களுடையவை.

“கலாச்சார மற்றும் சமூக மதிப்பீடுகள்,” பொதுவாக ஆழமாய் வேரூன்றியிருக்கும் பாரம்பரியத்தின்மீதே ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன; அசைக்க முடியாத வேரல்லவோ அது. “பாரம்பரியத்தின் காரணமாக ஆண்கள், பெண்களை நேசிப்பதற்கு மாறாக அவர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அக்கறையாய் கவனித்துக்கொள்வதற்கு மாறாக தன்னல நோக்கத்திற்காக பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நினைக்கின்றனர்” என அரபு நாடுகளைச் சேர்ந்த ஒரு பெண் சொல்கிறாள். “அதன் காரணமாக, ஒரு பெண்ணுக்கு செல்வாக்கு இல்லை, உரிமைகள் இல்லை, தன் நிலையை முன்னேற்றுவிக்க எந்த வாய்ப்பும் இல்லை.”

கணவர்களுக்கும் தந்தைகளுக்கும் உணர்த்துதல்

சீனா, பீஜிங்கில் நடைபெற்ற பெண்களுக்கான 1995 உலக கருத்தரங்கில் முன்மொழியப்பட்ட செயல் திட்ட அறிக்கை (Platform for Action) அறிவித்ததாவது: “அனைவரும் உடனடியாகவும் ஒன்றுசேர்ந்தும் நடவடிக்கை எடுத்தால்” மட்டுமே, பெண்களை மதிக்கும் “சமாதானமான, நீதியான, மனிதாபிமானம் நிறைந்த உலகம்” தோன்றும்.

பெண்களது வாழ்க்கையை ‘சமாதானமான, நீதியான, மனிதாபிமானம் நிறைந்த’ ஒன்றாய் மாற்றுவதற்கான முயற்சி முதலில் வீட்டிலிருந்து துவங்கவேண்டும்; அதாவது கணவர்களும் தந்தைகளும் முதலாவதாக செயலில் இறங்க வேண்டும். இந்த விஷயத்தில், வெற்றிக்கு திறவுகோல் பைபிள் கல்வியே என யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் நம்புகின்றனர். ஆண்கள், தங்களது மனைவிகளையும் மகள்களையும் மரியாதையோடும் பரிவோடும் நடத்தும்படி கடவுள் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறார் என்பதை கற்றுக்கொண்டவுடன், அதை மனமார ஏற்றுக்கொண்டு அவ்வாறே செய்கின்றனர் என்பதை அவர்கள் கண்கூடாக பார்த்திருக்கிறார்கள்.

மத்திய ஆப்பிரிக்காவில், திருமணமாகி நான்கு பிள்ளைகளுக்கு தந்தையாய் இருக்கும் பேட்ரோ என்பவர், இப்போது தன் மனைவியின் தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார். பிள்ளைகளை கவனிப்பதில் அவளுக்கு உதவுகிறார்; இன்னும் ஏன், விருந்தினர் குடும்பத்தோடு அமர்ந்து சாப்பிடும்போது அவரும் சேர்ந்து உணவு பரிமாறுகிறார். அப்படிப்பட்ட ஒரு பரிவை அவரது நாட்டில் காண்பது அரிது. அவர் தனது மனைவியை மதித்து, அவளோடு ஒத்துழைப்பதற்கு காரணம் என்ன?

“நான் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, கணவனது கடமையைக் காட்டும் இரண்டு முக்கிய நியமங்களைக் கற்றுக்கொண்டேன். என் மனைவியை பாவிக்கும் விதத்தையே அவை பெருமளவில் மாற்றியிருக்கின்றன” என பேட்ரோ விளக்குகிறார். “அதில் முதலாவதான 1 பேதுரு 3:7, மனைவி ‘பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால்’ கணவன் அவளை கௌரவமாக நடத்தவேண்டும் என விளக்குகிறது. இரண்டாவதான எபேசியர் 5:28, 29, கணவன் தன் மனைவியை ‘சொந்த சரீரமாய்’ பாவிக்கவேண்டும் என சொல்கிறது. அந்த ஆலோசனையை பின்பற்ற ஆரம்பித்ததிலிருந்து எங்களுக்குள் அன்னியோன்னியம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஆகவே ஆண்களான நாங்கள் உள்ளூர் சம்பிரதாயங்களைவிட கடவுளது ஆலோசனைக்கு அதிக மதிப்பு காட்ட வேண்டும்.”

மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக்கேல், தான் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன் தனது மனைவியை மோசமாக நடத்தியதை ஒப்புக்கொள்கிறார். “கோபம் வரும்போது அவளை அடித்தும் இருக்கிறேன். ஆனால் என் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென பைபிள் கற்பித்தது. என் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் மனைவியை சொந்த சரீரம்போல் நேசிக்கவும் இப்போது கடினமாய் முயற்சித்துவருகிறேன். ஆகவே இப்போது நாங்கள் இருவருமே சந்தோஷமாய் இருக்கிறோம்” என அவர் மனம்விட்டு சொல்கிறார். (கொலோசெயர் 3:9, 10, 19) அவரது மனைவி கம்ஃபர்ட், அதை ஆமோதிப்பவராய் இப்படிச் சொல்கிறார்: “எங்க ஊரிலுள்ள கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு வழக்கமாய் காண்பிக்கும் மரியாதையையும் பாசத்தையும்விட அதிகமாய் மைக்கேல் இப்போது எனக்குக் காட்டுகிறார். இப்போது ஒன்றுசேர்ந்து எங்கள் பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக்கொள்கிறோம்.”

பேட்ரோவும் மைக்கேலும் கடவுளது வார்த்தை அளிக்கும் ஆலோசனைகளை மனமார ஏற்றுக்கொண்டதால் தங்கள் மனைவிகளை மதிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டனர்; அவை, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி நமது சிருஷ்டிகரை மிகவும் சங்கடப்படுத்துகிறது என்பதை தெளிவாக்குகின்றன.

பெண்கள்பேரில் கடவுள் காட்டும் அக்கறை

கடவுள் எப்போதுமே பெண்கள் பேரிலும் அவர்களது நலனின் பேரிலும் அக்கறை காண்பித்திருக்கிறார். நமது முதல் பெற்றோர் கலகம் செய்ததன் காரணமாக, அபூரணத்தினால் பெண்கள் ‘ஆதிக்கம் செலுத்தப்படுவார்கள்’ என அவர்களிடம் கடவுள் சொல்லியிருந்தாலும், அது அவரது நோக்கமாக ஒருபோதும் இருக்கவில்லை. (ஆதியாகமம் 3:16, NW) அவர் ஏவாளை ஆதாமுக்கு ‘ஏற்ற துணையாகவும்’ தோழியாகவும் படைத்தார். (ஆதியாகமம் 2:18) பண்டைய இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாண சட்டத்தில், விதவைகளை தவறாக நடத்துவதை யெகோவா குறிப்பாய் கண்டனம் செய்தார்; மேலும் அவர்களை தயவோடு நடத்தி உதவியளிக்கவேண்டுமென இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டார்.—யாத்திராகமம் 22:22; உபாகமம் 14:28, 29; 24:17-22.

இயேசு, தமது பரலோக தகப்பனைப் பின்பற்றுபவராய், பெண்களை இழிவுபடுத்திய அந்நாளைய பாரம்பரியத்தை கடைப்பிடிக்கவில்லை. அவர் பெண்களிடம், ஏன் மோசமான பெயரெடுத்திருந்த பெண்களிடமும் தயவாக பேசினார். (லூக்கா 7:44-50) மேலும், வியாதிப்பட்டிருந்த பெண்களுக்கு இயேசு பிரியத்தோடு உதவிசெய்தார். (லூக்கா 8:43-48) ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு விதவை தன் ஒரே மகன் இறந்ததால் அழுது புலம்புவதைப் பார்த்தபோது, உடனடியாக சவ அடக்க ஊர்வலத்தின் இடையே சென்று அந்த இளைஞனை உயிர்த்தெழுப்பினார்.—லூக்கா 7:11-15.

இயேசுவின் ஆரம்பகால சீஷர்களில் பெண்களும் இருந்தனர்; அவரது உயிர்த்தெழுதலுக்குப்பின் பெண்களே அவரை முதலில் பார்த்தனர். லீதியாள், தொற்காள், பிரிஸ்கில்லாள் போன்ற பெண்களைப் பற்றி பைபிள் மிக உயர்வாய் பேசுகிறது; உபசாரம், பரிவு, தைரியம் போன்றவற்றிற்கு அவர்கள் இலக்கணமாய் திகழ்ந்ததாய் அது சொல்கிறது. (அப்போஸ்தலர் 9:36-41; 16:14, 15; ரோமர் 16:3, 4) பூர்வ கிறிஸ்தவர்கள் பெண்களுக்கு மரியாதை காண்பிக்கும்படி பயிற்றுவிக்கப்பட்டனர். “முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும்” நடத்தும்படி உடன் மிஷனரியான தீமோத்தேயுவிற்கு அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்.—1 தீமோத்தேயு 5:2.

மரியாதையைக் கண்டிருக்கும் பெண்கள்

நீங்கள் ஒரு கிறிஸ்தவராய் இருந்தால், பெண்களுக்கு அதே விதமான மரியாதையைக் காண்பிப்பீர்கள். அவர்களைத் தவறாக நடத்துவதற்கு பாரம்பரியத்தை ஒரு சாக்காக பயன்படுத்தமாட்டீர்கள். மேலும் பெண்களை மரியாதையோடு நடத்துவது, உங்கள் விசுவாசத்திற்கு சிறந்த அத்தாட்சி அளிக்கும். (மத்தேயு 5:16) ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளம் பெண்ணான சலிமா, கிறிஸ்தவ நியமங்கள் கடைப்பிடிக்கப்படுவதை தான் கண்டதால் எவ்வாறு நன்மையடைந்தார் என்பதை விளக்குகிறார்.

“எப்போதும் பெண்களும் சிறுமிகளும் மோசமாக நடத்தப்படுவதைத்தான் பார்த்திருக்கிறேன்; நான் வளர்ந்த சூழல் அப்படி. என் அம்மா ஒவ்வொரு நாளும் 16 மணிநேரம் வேலைசெய்தார்; ஆனால் ஏதாவது ஒன்றை செய்யாவிட்டால் போதும், திட்டுக்கு மேல் திட்டு விழும். அதைவிட கொடுமை என்னவென்றால், அப்பா அளவுக்குமீறி குடித்துவிடும்போது அம்மாவை போட்டு அடிப்பார். அந்தப் பகுதியில் வசித்த மற்ற பெண்களுடைய கதியும் இதேதான். ஆனால் அப்படி நடத்துவது தப்பு என்று எனக்குத் தெரியும்; மிஞ்சியதோ விரக்தியும் வருத்தமும்தான் என்றும் தெரியும். இருந்தாலும், இந்த நிலைமையை மாற்ற வழியே தெரியவில்லை.

“எனினும், டீனேஜ் வயசில், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். பெண்களுக்கு மரியாதை காண்பிக்கவேண்டும் என சொன்ன அப்போஸ்தலனாகிய பேதுருவின் வார்த்தைகள் எனக்கு ரொம்ப பிடித்துப்போய்விட்டன. ஆனால், ‘ஜனங்க எங்கே இந்த ஆலோசனையைப் பின்பற்றப்போறாங்க, அதுவும் சம்பிரதாயத்துல ஊறிப்போயிருக்கும்போது’ என நினைத்தேன்.

“ஆனால், சாட்சிகளின் கூட்டம் நடந்த ராஜ்ய மன்றத்திற்கு நான் சென்றபோது, ஆண்களும்சரி பெண்களும்சரி என்னிடம் அன்போடு நடந்துகொண்டார்கள். அதைவிட ஆச்சரியம் என்னவென்றால், அங்கிருந்த கணவர்கள் தங்கள் மனைவிகளை உண்மையிலேயே கனிவோடு நடத்தினார்கள். அங்கிருந்தவர்களை இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தபோது, எல்லா சாட்சிகளும் இதைத்தான் செய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்பது புரிந்தது. சில ஆண்கள் என்னைப் போன்ற பின்னணியிலிருந்தே வந்திருந்தார்கள் என்றாலும், இப்போது அவர்கள் பெண்களை மரியாதையோடு நடத்துகிறார்கள். இந்தப் பெரிய குடும்பத்தின் பாகமாக இருக்க விரும்பினேன்.”

ஒரு நிரந்தர தீர்வு

சலிமா கவனித்த மரியாதை ஏதோ தற்செயலான ஒன்றல்ல. அது கடவுளது வார்த்தையின் அடிப்படையில் அமைந்த ஒரு போதனை திட்டத்தின் விளைவு; கடவுள் மதிக்கும் பிரகாரமே மக்கள் ஒருவரையொருவர் மதிக்க அது அவர்களுக்குக் கற்றுத்தருகிறது. இது, இப்போதே என்ன செய்யப்படலாம் என்பதையும் கடவுளது ராஜ்யம் பூமி அனைத்தையும் ஆளுகை செய்கையில் எல்லா இடங்களிலும் என்ன செய்யப்படும் என்பதையும் காட்டுகிறது. (தானியேல் 2:44; மத்தேயு 6:10) இந்தப் பரலோக அரசாங்கம் எல்லா அநீதியையும் நீக்கும். பைபிள் இவ்வாறு நமக்கு வாக்குறுதியளிக்கிறது: “உம்முடைய [யெகோவாவுடைய] நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.”—ஏசாயா 26:9.

இப்போதும்கூட, நீதியைக் கற்றுக்கொள்வதால் லட்சக்கணக்கான மக்களின் சிந்தை மாறிவருகிறது. உயிர்வாழும் எல்லா மனிதர்களும் கடவுளது ராஜ்யத்திற்கு கட்டுப்படும்போது, பூமியெங்கும் தொடர்ந்து இந்தக் கல்வி புகட்டப்படும்; ஆதாமின் பாவத்தின் விளைவாக பெண்கள் ஆணாதிக்கத்தில் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு அது ஒரு முடிவைக் கொண்டுவரும். கடவுளது நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்து, பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதி தமது ஆளுகையைக் கறைப்படுத்தும்படி அனுமதிக்கமாட்டார். கிறிஸ்துவின் அந்த ஆளுகையை விளக்குவதாய், பைபிள் சொல்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்.”—சங்கீதம் 72:12-14.

இந்தக் கட்டுரைகள், பெண்ணின் பிரச்சினைகளுக்கே கவனத்தை ஒருமுகப்படுத்தின. ஆனால், அநேக ஆண்களும் மோசமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. சரித்திரம் முழுவதும், வலிமைமிக்க தீய ஆட்கள் ஆண்களுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் சொல்லமுடியாதளவு கொடுமைகளை செய்திருக்கின்றனர். சில பெண்களும் அதையே செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, யேசபேல், அத்தாலியாள், ஏரோதியாள் போன்ற பொல்லாத பெண்கள் களங்கமற்றவர்களை கொன்றதாக பைபிள் குறிப்பிடுகிறது.—1 இராஜாக்கள் 18:4, 13; 2 நாளாகமம் 22:10-12; மத்தேயு 14:1-11.

இவ்வாறு, மனிதவர்க்கத்தினர் அனைவருக்கும் கடவுளது ராஜ்யம் ஆட்சி செய்யவிருக்கும் ஒரு புதிய உலகம் தேவை. விரைவில், அந்நாள் விடிகையில், ஆண் பெண் என்ற பேதம் மறைந்துவிட்டிருக்கும்; இருசார்பினரும் ஒருகாலும் மோசமாய் நடத்தப்பட மாட்டார்கள். அதற்கு மாறாக, எல்லாரும் நாளுக்கு நாள் ‘மனமகிழ்ச்சியாய்’ இருப்பார்கள்.—சங்கீதம் 37:11.

[பக்கம் 13-ன் படம்]

கிறிஸ்தவ கணவர்கள் பைபிள் ஆலோசனைகளைப் பின்பற்றி, தங்கள் மனைவிகளுக்கு மதிப்பும் மரியாதையும் காண்பிக்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்