உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 4/8 பக். 16-17
  • எங்கள் அருகாமையில் டால்பின்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எங்கள் அருகாமையில் டால்பின்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அபூர்வமாக காணப்படுவதன் காரணம்
  • அது டால்பின்தானா?
  • நமக்கு தெரிந்த சில தகவல்கள்
  • இதற்கு எதிர்காலம் இருக்கிறதா?
  • டால்பின்களின் சோனார் திறன்
    யாருடைய கைவண்ணம்?
  • சுறா விரிகுடா கடலுக்குள் ஓர் அற்புத உலகம்
    விழித்தெழு!—2007
  • நம்புவதற்கரிய சந்திப்பு
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 4/8 பக். 16-17

எங்கள் அருகாமையில் டால்பின்

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்

கதகதப்பான, ஆழம் குறைந்த நீர்; அது உப்பு நீரோ நன்னீரோ, தெளிவாக இருக்கலாம் அல்லது கலங்கியிருக்கலாம்—அப்படிப்பட்ட வெப்ப மண்டல நீரை அது விரும்புகிறது. அது வாழும் இருப்பிடத்தின் எல்லை இந்தியாவின் வங்காள விரிகுடாவிலிருந்து மலேய தீவுக்கூட்டங்கள் வழியாக வடக்கு ஆஸ்திரேலியா வரையாக பரவியிருக்கிறது.

இருப்பினும் வெகுசிலரே—குறிப்பாக வடக்கில் வாழும் ஆஸ்திரேலியர்கள் இறாவாடி டால்பின்களை பார்த்தும் அல்லது அதைப்பற்றி கேள்விப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால், இவை உலகிலேயே மிக அதிகமான அளவில் இவர்களுடைய வீட்டிற்கு மிக அருகில்தான் இருக்கின்றன. ஆச்சரியமாக இருக்கின்றதா? இந்தக் கேள்விக்கு ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கிடைக்கும்.

19-வது நூற்றாண்டில் விலங்கியலர் ஜான் ஆன்டர்ஸன், மயன்மாரிலிருக்கும் (அப்போது பர்மா) இறாவாடி ஆற்றில் கூட்டமாக, நீல-சாம்பல் நிறமுள்ள, வட்ட வடிவத்தில், அலகற்ற தலையுடன்கூடிய இந்த டால்பின்களை பார்த்தார். அவர் அதற்கு இறாவாடி டால்பின் என்று பெயரிட்டார்.

அபூர்வமாக காணப்படுவதன் காரணம்

இறாவாடி டால்பின்கள் வெப்பமான, ஈரக்கசிவுள்ள கரையோரப்பகுதிகள், முகத்துவாரங்கள், ஆறுகள் போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. அவை சேறு நிறைந்த தண்ணீரிலும், சதுப்புநில காடுகள் நிறைந்த, கோடிக்கணக்கான கொசுக்களும் முதலைகள்கூட மிகுந்த பகுதிகளில் வசிக்கின்றன; இப்படிப்பட்ட இடங்கள் மனிதர்களை நிச்சயமாகவே கவருவது கிடையாது.

இந்த இடத்திலிருக்கும் தண்ணீரும் கலங்கியிருக்கும், ஆகவே டால்பினை நீங்கள் பார்ப்பதற்கான ஒரே வாய்ப்பு அது சுவாசிப்பதற்காக தண்ணீருக்கு மேல் எழும்பும் அந்த சில நொடிகளே. அப்படிப்பட்ட சமயத்திலும் கொஞ்சமே அதை பார்க்க முடியும். அதனுடைய முதுகின் சிறு பகுதி வெளியே தெரியும், அதன் முதுகிலிருக்கும் துடுப்பு மற்ற டால்பின்களுடையதைவிட சிறியது.

ஆனால் சில இடங்களில் இறாவாடி டால்பின்களைப் பார்ப்பது அப்படியொன்றும் அபூர்வமான காரியமல்ல. மயன்மாரிலுள்ள இறாவாடி ஆற்றிலும் இந்த டால்பின்களின் ஆசிய எல்லைப்புறங்களிலுள்ள மற்ற ஆறுகளிலும், மீனவர்களும் படகோட்டிகளும் இவை உணவிற்காக வேட்டையாடுவதையும் நீரோட்டத்தின் எதிர்த்திசையில் அலைந்து திரிவதையும் அடிக்கடி பார்த்திருக்கிறார்கள்; அவை தண்ணீரை தங்கள் வாய் வழியே பீறிட்டடிப்பது நீர்தாரையைப்போல் அல்லது நீர்தோட்டத்திலுள்ள சிலையிலிருந்து நீர் வருவதைப்போல் இருக்கும்.

ஆஸ்திரேலிய கண்டத்தின் மேற்கு கடற்கரை, வடக்கு பகுதிகள், கீழே கிழக்கு கரையோரப் பகுதிகளில் இறாவாடி டால்பின்கள் காணப்படுகின்றன. வழக்கமாய் ஒரு தொகுதியாக 6-க்கும் குறைவான எண்ணிக்கையிலும் சில சமயங்களில் 15 வரையாகவும் இவை காணப்படும். ஆசியாவிலிருக்கும் டால்பின்களைப்போல் இங்கே இருக்கும் டால்பின்கள் நீர்தாரையைப்போல் நீரை பீறிட்டடிப்பதாகத் தெரியவில்லை.

அது டால்பின்தானா?

இறாவாடி டால்பின்களை அவற்றின் சொந்தக்காரர்களான கடல் நீர் டால்பின்களோடு ஒப்பிடும்போது அவை நிலத்திற்கு அருகாமையில் வாழ்பவையாகவும் மெதுவாக நீந்தும் தன்மையுடையவையாகவும் இருக்கின்றன. ஆயினும் அவற்றை ஆராய்வது விஞ்ஞானிகளுக்கு கடினமாக இருந்திருக்கிறது. அவை வாழக்கூடிய இருப்பிடம் அணுகுவதற்கு கடினமாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம். அப்படியிருந்தும், இந்தோனேஷியாவிலுள்ள ஜகர்த்தாவில் ஜையா ஆஞ்கோல் ஓஷனேரியத்தில் உயிருள்ள இறாவாடி டால்பின்களை ஆராய்ச்சி செய்திருக்கின்றனர்.

இறாவாடிகளைப்பற்றி மிகக்குறைவே தெரிந்திருப்பதால் சமீப காலங்கள் வரை உயிரியல் அறிஞர்கள் அவற்றை திமிங்கில-டால்பின் குடும்பத் தொகுதியில் எங்கே பொருத்துவது என்பதில் தெளிவற்றிருந்தனர். தெளிவாகவே அவை டால்பின்களோடு அதிகம் ஒத்திருக்கின்றன. நிறம் (வெளிர் நீலம் அல்லது கருநீல-சாம்பல்), நீங்கலாக தோற்றத்தில் அவை ஆர்க்டிக் பெல்குவா திமிங்கிலம் அல்லது வெள்ளை திமிங்கிலத்தின் சிறு வடிவத்தைப்போல் காட்சியளிக்கின்றன. அவற்றின் வளையும் தன்மையுள்ள வித்தியாசமான கழுத்துப்பகுதிகூட பெல்குவாவை ஒத்திருக்கிறது. அப்படியென்றால் அவை எங்கே பொருந்தும்? வெப்ப பிரதேச பெல்குவாவிற்கு சமமானவை என்று ஏற்றுக்கொள்ளலாமா அல்லது அவை உண்மையான டால்பின்களா?

அதைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி அவற்றின் பரந்த உருவமைப்பு தகவல்களையும் மரபுக்கூறுகளையும் வரிசைப்படுத்தி அலசினால், அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் அவற்றை தராசிலிட்டு பார்ப்பதைப்போல் கவனித்து எந்தப் பக்கம் எடை சாய்கிறது என்று பார்ப்பதாகும். அத்தாட்சிகளின் எடை டால்பின்களின் பக்கமே சாய்கிறது.

நமக்கு தெரிந்த சில தகவல்கள்

பிறக்கும்போது இறாவாடி கன்றுகள் ஒரு மீட்டருக்கு சற்றே குறைவான நீளத்திலும் 12 கிலோகிராம் எடையுடனும் இருக்கின்றன. ஆண்கள் 2.75 மீட்டர் வரையிலும் பெண் அதைவிட சற்றே குறைவாகவும் வளருகின்றன. அவை 28 வருடங்கள் உயிர் வாழலாம்.

இறந்த இறாவாடிகளின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியில், அவற்றின் உணவு என்ன என்பது தெரியவந்தது, அவையாவன கடமா, இறால், கூனிறால், மீன்—குறிப்பாக நீரின் நிலப்படுகையில் வசிக்கும் மீன்கள். ஆசிய டால்பின்கள், தண்ணீரை வாய் வழியே பீறிட்டடிக்கும் அரிய பழக்கத்தின் மூலம் கலங்கிய தண்ணீரில் மீன்களை வேட்டையாட முடிகிறது என்று சில விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

மற்ற டால்பின்களைப்போல் இறாவாடி டால்பின்களும் ஒருவித கிரீச் ஒலியை எழுப்புகின்றன. டிராப்பிகல் க்வீன்ஸ்லாந்து அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் அர்னால்ட் விழித்தெழு!-விடம் பின்வருமாறு கூறினார்: “இறாவாடி டால்பின் கிரீச் ஒலியைப் பயன்படுத்தி எதிரொலியின் அடிப்படையில் மற்ற டால்பின்களைப்போல் உணவை இடங்குறிக்கலாம் என்று ஜையா ஆஞ்கோல் ஓஷனேரியத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலிருந்து தெரியவருகிறது.”

இதற்கு எதிர்காலம் இருக்கிறதா?

உலகில் எத்தனை இறாவாடி டால்பின்கள் இருக்கின்றன என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியாது. ஆனால், அவை மறைந்துவிடும் அபாயத்தில் இருக்கின்றன என்பதைக் குறித்து கவலையிருக்கிறது. தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது, மற்ற இடங்களில் அவற்றை காணமுடிவதே இல்லை.

ஆற்றின் மூலம் மரங்களை வெட்டி அனுப்புவதால் ஏற்படும் தூய்மைக்கேடும் சேறுபடிவதும் இதற்கான பிரதான காரணம். ஆஸ்திரேலியாவில் இறாவாடியின் பகுதிகள் ஓரளவிற்கு மனிதர்கள் குடியேறாத பகுதிகளே. ஆனால், கவர்ச்சியான கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் நகரமயமாக்கலும் சுற்றுலா ஏற்பாடுகளும் பெருமளவு கேடு விளைத்திருக்கின்றன. சில இறாவாடி டால்பின்கள், மீன்பிடி வலையில் சிக்கி மூச்சுவிடமுடியாமல் இறக்கின்றன; வேறுசில நீச்சலடிப்பவர்களை பாதுகாப்பதற்கென கரையோரங்களில் வைக்கப்பட்டிருக்கும் சுறா மீன் வலைகளில் மாட்டிக்கொள்கின்றன. இறாவாடி டால்பின்களின் உணவான மீன்களை மட்டுக்குமீறி பிடித்துவிடுவதாலும் அவற்றின் எண்ணிக்கை பாதிக்கப்படுகிறது.

ஆனால் மிகப்பெரிய அபாயம், ஆறுகளிலும் முகத்துவாரங்களிலும் பெருமளவு கொட்டப்படும் மாசுப்பொருட்களே. அவற்றில் மிக மோசமானவை செயற்கை கரிமச்சேர்மங்களான பாலிக்ளோரினேட்டட் பைஃபினைல் (PCBs); அவை சுற்றுச்சூழலில் விடாப்பிடியாய் தொடர்ந்திருக்கின்றன. PCBs-க்களை எலக்ட்ரானிக் பொருட்கள், பெயின்ட்கள், உராய்வை தடுக்கிறபொருட்கள், மரத்திற்கும் உலோகங்களுக்கும் அடிக்கப்படும் மேற்பூச்சுகள், மற்ற பொருட்கள் போன்றவற்றில் உபயோகிக்கின்றனர்.

ஆக்கப்பூர்வமாக என்ன நடந்திருக்கிறது என்று கவனித்தால், ஆஸ்திரேலிய இயற்கை பாதுகாப்பு துறை அதன் தி ஆக்‍ஷன் பிளான் ஃபார் ஆஸ்ட்ரேலியன் சீட்டேசியன்ஸ் என்ற ஆவணத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “க்வீன்ஸ்லாந்தில், அவற்றின் [இறாவாடி டால்பினுடைய] எல்லையின் பெரும் பகுதி கிரேட் பாரியர் பவழப்பாறை கடல் பூங்காவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது; ஆகவே க்வீன்ஸ்லாந்தின் தண்ணீரில் அவற்றைப் பாதுகாப்பதற்கான சாத்தியம் மனநிறைவளிப்பதாக உள்ளது.”

நல்லவிதமாக பாதுகாப்பதற்கு இன்னொருபடியாக அந்தத் துறை சிபாரிசு செய்வது என்னவென்றால் கூன் திமிங்கிலம், தென்பகுதியில் இருக்கும் ரைட் திமிங்கிலம், பாட்டில்-நாசி டால்பின் ஆகியவற்றுடன் இறாவாடியையும் பொதுமக்கள் விழிப்புணர்வு திட்டங்களில் முன்னுரிமையளித்து சேர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே. அது இறாவாடி டால்பின்களுக்கும் நல்லது—நமக்கும் நல்லது.

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

படங்கள்: Courtesy Dr. Tony Preen

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்