குட்டி குட்டி புத்தகங்களின்—கண்கவர் உலகம்
பிரிட்டனிலிருந்து விழித்தெழு! நிருபர்
வானுயர்ந்த மலை, ஆழமான பெருங்கடல், உயரமான கட்டடம், நீளமான குகை என்று உச்ச அளவின் எல்லையை தொடும்போது ஆர்வம் மேலோங்குகிறது. ஆனால், குட்டி புத்தகத்தைப் பற்றி தெரிந்துகொள்வதில்? இந்தக் குட்டி குட்டி புத்தகங்கள் மனதை கொள்ளைகொள்கின்றன! நினைத்த தலைப்புகளில், குறைந்தது 20 மொழிகளில், லட்சக்கணக்கில் இக்குட்டி புத்தகங்கள் அச்சாகின்றன. குட்டி குட்டி புத்தகங்களின் உலகை நீங்கள் இதுவரை பார்க்கவில்லையென்றால், வாருங்கள் இப்போது ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாம்.
குட்டி புத்தகத்தை எப்படி வரையறுப்பது? புத்தகத்தின் உயரமோ அகலமோ 76 மில்லிமீட்டருக்கு மேல் இருக்கக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட வரம்பு. பைண்டிங்கை சேர்க்காமல் வெறும் புத்தகத்தின் பக்கங்கள் மாத்திரம் இந்த வரம்புக்குள் இருக்க வேண்டும் என்று இவற்றை மிகவும் சிரமம் எடுத்து, சேகரித்து வைக்கும் ஒருசிலர் விரும்புகிறார்கள். ஆனாலும் வரையறுக்கப்பட்ட இந்த அளவுகளுக்குள் புத்தகத்தின் பைண்டிங்கும் அடங்கும். எதற்காக இந்தப் பொடி புத்தக தொகுதிகள் அச்சிடப்பட்டன?
கலையின் கைவண்ணங்கள்
குட்டி புத்தகம் தெளிவற்று இருக்கும் என்று ஒருவர் நினைத்தால், அதுதான் இல்லை. பெரும்பாலான குட்டி புத்தகங்கள் ரொம்ப பளிச்சென்று இருக்கின்றன. குட்டி குட்டி பஞ்சாங்கங்களையும், புகழ்பெற்ற இலக்கிய புத்தகங்களையும், நாவல்களையும், உரைநடை நாடகங்களையும், அகராதிகளையும், புனித நூல்களையும் கஷ்டமே இன்றி தூக்கியும் செல்லலாம், படிக்கவும் செய்யலாம். முக்கியமாக இந்த ஒரு காரணத்திற்காகவே முன்பெல்லாம் இத்தகைய குட்டி புத்தக தொகுதிகளை வைத்திருந்தனர். ஆனால் இன்றோ, இத்தகைய புத்தகங்களை சேகரிப்போர் மற்றொரு அம்சத்தில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். அதுதான்: அச்சாளர்களின், பைண்டர்களின் கைவண்ணம்.
பூதக்கண்ணாடியை வைத்து பார்த்தாலும்சரி பார்க்காவிட்டாலும்சரி, எழுத்துக்கள் பளிச்சென்று தெரியும்படி அச்சு எழுத்துக்களை வடிவமைப்பதிலும், உருவாக்குவதிலும் நிறைய தொழில்நுட்ப பிரச்சினைகள் உட்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் அச்சாளர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களுடைய அயராத உழைப்பே அபார அழகோடு புத்தக வடிவில் வெளிவந்தது. காகிதம், மை தயாரிப்பாளர்களும் தங்கள் திறமைகளையெல்லாம் ஒன்றுதிரட்டி, அச்சடிக்கப்படும் பக்கம் தெள்ளத் தெளிவாக வெளிவரும்படி பார்த்துக்கொண்டனர்.
ஒரு புத்தகம் அச்சானதும் பைண்டிங் செய்யப்படுகிறது. குட்டி குட்டி புத்தகங்களை பைண்டிங் செய்வது நுணுக்கமான ஒரு கலையாகும். கைவேலைப்பாடு செய்யப்பட்ட தோல், பொன் அல்லது வெள்ளி சரிகைகள், ஆமை ஓடு, அலங்கார இனாமல் என இவற்றைக் கொண்டு சின்ன சின்ன கவர்களைத் தயாரித்து, கைவினை கலைஞர்கள் தங்கள் கலைநுட்பத்தை பறைசாற்றுகின்றனர். ஒருசில கவர்கள் பட்டு அல்லது வெல்வெட்டால் ஆனவை. சில கவர்கள் தையல் பூவேலைகளோடு காட்சியளிக்கின்றன. முத்துக்களாலும், தங்க ஜிகினாவாலும் அழகிய வேலைப்பாடுகளோடு செய்யப்பட்ட கவர்களும் இருக்கின்றன. புத்தகங்களை பத்திரமாக வைத்திருக்க உதவும் உறைகளும் (slipcases) ஒருசில புத்தகங்களுக்கு உண்டு.
எழுத்துக்களை செதுக்கி, அலங்கரித்த கலைஞர்கள், நம்ப முடியாதளவுக்கு, நுட்பவிவரங்களோடு படங்களையும் வரைந்தனர். பெரும்பாலும் ஏழு சதுர சென்டிமீட்டருக்கும் குறைவான காகிதத்தில் அவ்வாறு செய்தனர் என்றால் பிரமிப்பூட்டுகிறது அல்லவா! இதற்கு ஓர் உதாரணம் ஆங்கில அகராதியை தொகுத்த டாக்டர் சாமுவேல் ஜான்சன் அவர்களது உருவப்படம். 1890-களில் அச்சிடப்பட்டு வெளியான 368 பக்க, பிரைஸ் தம் இங்கிலீஷ் டிக்ஷ்னரியில் (Bryce’s Thumb English Dictionary) இப்படம் வந்தது. மற்றொரு உதாரணம், ஷேக்ஸ்பியரின் கிங் ரிச்சர்டு III-ன் தலைப்பு பக்கத்திற்கு அடுத்துள்ள சித்திரம். இப்புத்தகம் 1909-ல் ஆங்கில நடிகை ஹெலன் டெரி என்பவருக்காக அர்ப்பணம் செய்யப்பட்டது.
பிபிலியாதெக் போர்டேட்டிவ் டியு வாயாஜோர் பாரிஸில் பிரசுரிக்கப்பட்டது. இது குட்டி குட்டி புத்தகங்களால் ஆன ஒரு மினி நூல்நிலையம். நெப்போலியன் போனபார்ட் படையெடுத்து சென்றபோது தன்னோடு இதையும் கொண்டுபோனதாக நம்பப்படுகிறது. 49 பிரெஞ்சு இலக்கிய தொகுதிகள் ஒரு தோல் பெட்டியில் வைக்கப்பட்டன. தொகுதிகளை வைத்து மூடியப்பின்பு, பெரிய கட்டுரை நோட்டுப்புத்தக வடிவில் இது காட்சியளித்தது.
கட்டைவிரல் பைபிள்கள்
கட்டைவிரல் பைபிள்கள் (Thumb Bibles) என்றாலே முழு பைபிள்கள் என்று நினைத்துவிட வேண்டாம். அவற்றில் சில வெறும் “புதிய ஏற்பாடுகள்.” மற்றவை பைபிள் கதை சுருக்கங்கள் அல்லது முழு பைபிள் வரலாற்றை 7,000 வார்த்தைகளில் சொல்லும் சுருக்கங்கள். குறிப்பாக பிள்ளைகள் படிப்பதற்காக வடிவமைக்கப்பட்டன. அவை பின்வரும் தலைப்புகளோடு திகழ்கின்றன: குட்டி வடிவில் பைபிள் (The Bible in Miniature), புனித பைபிள் வரலாறு (The History of the Holy Bible), குழந்தையின் பைபிள் (The Child’s Bible).
கட்டைவிரல் பைபிள் என்ற பெயர் எப்படி வந்தது? பைபிளின் அளவு மனிதனுடைய கட்டைவிரலின் மேல்பகுதியைவிட சற்றே பெரிதாக இருந்தது என்றால் விளக்கத்தை சொல்லியா தெரியவேண்டும்? ஆனால், இப்பெயருக்கு மற்றொரு விளக்கத்தை த்ரீ சென்சுரிஸ் ஆஃப் தம் பைபிள் (Three Centuries of Thumb Bibles) என்ற புத்தகம் தருகிறது. அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற குள்ள மனிதன் சார்லஸ் ஸ்டார்டான், இவர் தன் மற்றொரு பெயரான ஜெனரல் டாம் தம் (Tom Thumb) என்ற பெயரால் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். இவர் இங்கிலாந்துக்கு போய்வந்த பிறகே தம் பைபிள் (கட்டைவிரல் பைபிள்) என்ற பெயர் வந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தக் கூற்றை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில், 1844-ல் டாம் தம் இங்கிலாந்துக்கு விஜயம் செய்திருக்கிறார்; 1849-ல்தான் முதன்முறையாக லண்டனில் ‘தம் பைபிள்’ என்ற பெயர் பயன்படுத்தியதாக தெரிகிறது.
வியப்பூட்டும் வேதாகம வால்யூம்கள்
வியப்பில் மூழ்கடிக்கும் குட்டி குட்டி பைபிள் உலகில் வந்து சேர்ந்தது, விரல் புதிய ஏற்பாடு (The Finger New Testament) இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் அச்சிடப்பட்டது. மூன்று சென்டிமீட்டர் அகலமும், ஒன்பது சென்டிமீட்டர் நீளமும் கொண்டதால், அதாவது விரலின் நீளமே இருந்ததால் இதற்கு இந்தப் பெயர் வந்தது. ஆனால், 76 மில்லிமீட்டர் நீளமே இருக்கவேண்டும் என்ற வரம்பை இது மீறிவிட்டதால், கொஞ்சம் கறாராக கணக்குப்போட்டால் குட்டி புத்தகம் என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தும், குட்டி பைபிள்கள் வரிசையில்தான் இடம்பெற்றுள்ளது. இந்தக் குட்டி வால்யூம், 4-பாயின்ட் அச்சு எழுத்துக்களால் தயாரிக்கப்பட்டிருப்பதால் துல்லியமாகப் பளிச்சென்று தெரிகிறது. பூதக்கண்ணாடி இல்லாமலே நிறையப் பேர் சுலபமாக படிக்கலாம்.
வியப்பூட்டும் மற்றொரு உதாரணம் இல்லஸ்ட்ரெட்டட் பைபிள் (The Illustrated Bible) என்ற தலைப்பையுடைய குட்டி புத்தகம். இதில் சொர்க்கத்துக்கு இரயில் பாதை (Railway to Heaven) என்ற கவிதைகள் உள்ளன. பிரிட்டன் இரயில்வேயின் ஆரம்ப நாட்களில், தொடர்ந்து 50 வருடங்களுக்கு மேல் இந்த பைபிள் அச்சடிக்கப்பட்டது. ஆசிரியர், இரயில் பாதையில் போகும்போது தனக்கு கிடைத்த நேரத்தை உபயோகித்து, “மற்றொரு பாதையைக் காட்டுதல்” என்ற தலைப்பில் இரண்டு பக்க கவிதையை வடித்தார். அந்த மற்றொரு பாதையை, யெகோவாவின் மைந்தன் இயேசு கிறிஸ்து என்று அடையாளம் காட்டுகிறார். கவிதையின் கடைசி வரிகள்: “மகனே உன் இருதயத்தை எனக்குத்தா என்கிறார் கடவுள். சீக்கிரம் கொடுத்துவிடு, இல்லையென்றால் இரயில் புறப்பட்டுவிடும்.”
வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு வால்யூம் என் காலைநேர ஆலோசகர் (My Morning Counsellor), இது 1900-ம் வருடத்தைச் சேர்ந்தது. தினந்தோறும் படிக்க வேண்டிய பைபிள் வாசகத்தை தாங்கி நிற்கும் இதில், ஒவ்வொரு மாதத்தின் பெயருக்கு முன் கடவுளுடைய பெயர் பல்வேறு விதங்களில் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, பிப்ரவரி மாதத்திற்கு முன், “யெகோவா-ஷைலோம்” என்றிருக்கிறது. இந்தப் புத்தகமும், முன்பு குறிப்பிட்ட இல்லஸ்ட்ரெட்டட் பைபிளும், யெகோவா என்பது கடவுள் பெயர் என்ற உண்மையையும், கடவுளுடைய இப்பெயர் ஒரு நூறு வருடங்களுக்கு முன் பிரிட்டனில் சர்வசாதாரணமாக பயன்படுத்தப்பட்டது என்ற உண்மையையும் எடுத்துரைக்கின்றன.
இதுதான் ரொம்ப குட்டியா?
நூற்றாண்டுகள் செல்ல செல்ல, இருப்பதிலேயே ரொம்ப குட்டி புத்தகம் அச்சாகி, பல சாதனைகள் செய்யப்பட்டன. அவற்றுள் சி. வான் லாங்கே என்பவரது புளூம்-ஹாஃப்யா (Bloem-Hofje) என்ற புத்தகம் பொடி அச்சு எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டு போற்றத்தகுந்த முதல் சாதனையை 1674-ல் படைத்தது. அதை, “விரல் நகம் அளவான” புத்தகம் என்று மினியேச்சர் புக்ஸ் (Miniature Books) விவரிக்கிறது. அந்தச் சாதனை 200 வருடங்களுக்கு மேல் நிலைத்திருந்தது.
டான்டி அவர்களது லா டிவைனா காமெடியா என்ற புகழ்பெற்ற பதிப்பு 2-பாயின்ட் அச்சில் அச்சிடப்பட்டது, இதுவரை உபயோகித்திராத பொடி அச்சு எழுத்துக்கள் இவை. இவற்றை வெறும் கண்களால் பார்க்கவே முடியாது. இப்புத்தகம் இத்தாலியில் உள்ள பாடாவா என்னுமிடத்தில் 1878-ல் தயாரிக்கப்பட்டது. 30 பக்கங்களை அச்சடிக்க ஒரு மாதம் எடுத்தது. ஒவ்வொரு புதிய அச்சுப் பதிப்பு சட்டத்திற்காகவும் புதிய அச்சு எழுத்துக்களை உருவாக்க வேண்டும். அப்படியிருந்தும் 1,000 பிரதிகள் அச்சிடப்பட்டன.
இவ்வாறாக அளவை குறைப்பது தொடர்ந்தது. 1978-ல் ஸ்காட்லாந்தின் பாஸ்லி என்னுமிடத்தில் கிளெனீபர் என்ற பிரஸிலிருந்து, த்ரீ பிளைண்டு மைஸ் என்ற நர்ஸ்சரி ரைம் வெளிவந்து, “உலகத்திலேயே ரொம்ப குட்டி புத்தகமாக” திகழ்ந்தது. இந்தப் பதிப்பு வெறும் ஒருசில எண்ணிக்கையே வெளிவந்தது. ஆனால், இந்த எண்ணிக்கையை 1985-ல் அதே அச்சாளர்கள் ஓல்டு கிங் கோல் என்ற மற்றொரு ரைமின் 85 பிரதிகளைத் தயாரித்து முறியடித்துவிட்டனர்! ஒவ்வொரு பிரதியின் அளவும் சரியாக ஒரு மில்லிமீட்டருக்கு ஒரு மில்லிமீட்டர் இருந்தது. பக்கங்களை ஊசியைக்கொண்டுதான் திருப்ப முடியும்!
இத்தகைய பொடி புத்தகங்கள், “கிட்டத்தட்ட கால்தூசு அளவே உள்ளன” என்றார் லூயிஸ் பான்டி. இவ்வாறாக பயங்கர பொறுமையோடும், நுட்பமான கைத்திறனோடும் இந்தப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டதற்கு ஆதாரம் ஜொலித்தது. ஆனால், குட்டி புத்தகங்கள் தெளிவாக இருக்கவேண்டும், உடனே உபயோகிக்க சுலபமாக இருக்கவேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட வரம்பை இந்தப் பொடி புத்தகங்கள் தகர்த்துவிட்டன.
இத்தகைய கண்கவர் குட்டி குட்டி வால்யூம்கள் மியூஸியம்களில் சேகரித்து வைத்திருப்பதை காணலாம். இவற்றில் பல புத்தகங்கள் தனியாரின் கைகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றன. குட்டி குட்டி புத்தகங்களின் உலகை நீங்கள் எப்போதாவது பார்க்க நேர்ந்தால், அவற்றை பூப்போல பட்டும்படாமல் கையாளவேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். அப்பப்பா! உண்மையில் இவை கலையின் வர்ணஜாலங்களே!
[பக்கம் 14-ன் பெட்டி/படம்]
போட்டோமெக்கானிக்கல் ரிடக்ஷன்
1895-ல், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவைச் சேர்ந்த டேவிட் பிரைஸ் என்பவர் இதுவரையில் தயாரிக்கப்படாத, மிகவும் பொடி அளவில் “புதிய ஏற்பாட்டை” தயாரித்தார். அதன் அளவு 1.9 சென்டிமீட்டருக்கு 1.6 சென்டிமீட்டர். அதன் பருமன் வெறும் 0.8 சென்டிமீட்டர்! எப்படி தயாரிக்க முடிந்தது? “இது போட்டோமெக்கானிக்கல் ரிடக்ஷன் முறையில் நேர்த்தியாகவும், தெளிவாகவும் அச்சடிக்கப்பட்டது” என்பதாக லூயிஸ் பான்டி என்பவர் மினியேச்சர் புக்ஸ்-ல் விளக்கம் தருகிறார். ஒரு நூறு வருடங்களுக்கு முன், போட்டோ கலை அவ்வளவாக வளர்ச்சியடையாத ஆரம்ப காலத்திலேயே இவ்வாறு செய்ய முடிந்தது என்றால், இது சாதாரண சாதனை அல்ல.
டேவிட் பிரைஸும் இதே முறையை கையாண்டு முழுமையான கட்டைவிரல் பைபிள்களை நிறைய அச்சிட்டார். பொடி எழுத்துக்களை படிப்பதில் சிரமம் இருப்போருக்காக, பைண்டிங் கவருக்குள் ஒரு சின்ன பூதக்கண்ணாடியும் சொருகி வைக்கப்பட்டிருந்தது. படித்தே ஆகவேண்டும் என்ற ஆர்வம் மிகுந்தவர்களால் இக்கண்ணாடியின் உதவியால் படிக்க முடிந்தது.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் நாஸிக்களாலும், அதன்பிறகு கம்யூனிஸ்டுக்களாலும் யெகோவாவின் சாட்சிகள் கொடுமைக்கு ஆளானார்கள். அந்தக் காலக்கட்டத்தில் போட்டோகிராஃபிக் மூலம் பிரசுரங்களை சிறிய அளவில் அச்சடிக்கும் முறையை அவர்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பக்கத்தில் நீங்கள் காண்கிற படம், இந்த முறையில் அச்சிடப்பட்ட ஒரு பைபிள் துணை ஏடு. இதைத் தீப்பெட்டிக்குள் மறைத்து, நாஸி சித்திரவதை முகாம்களில் இருந்த சாட்சிகளுக்கு கடத்தினர்.
இதை தீப்பெட்டிக்குள் வைத்து, சித்திரவதை முகாம்களுக்கு கடத்தினர்
[பக்கம் 13-ன் படம்]
குட்டி குட்டி புத்தகங்களின் அளவுகளோ பொடி, எழுத்துக்களோ பளிச்
[பக்கம் 15-ன் படம்]
குட்டி குட்டி புத்தகங்களின் ஒரு நூல்நிலையம்