கடவுள் பெயர் தாங்கி அழகோடு மிளிரும் செக் கட்டடக் கலை
செக்குடியரசில்விழித்தெழு! நிருபர்
உலகின் பல பகுதிகளில், யெகோவா என்ற பெயரை கேட்ட மாத்திரத்தில் யெகோவாவின் சாட்சிகளோடு மட்டுமே இணைத்துவிடுவர். ஆனால், யெகோவா என்ற தெய்வீக பெயரின் நான்கு எபிரெய எழுத்துக்களான (יהוה) டெட்ராக்கிராமட்டன் செக் குடியரசின் வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களில் அழகோடு மிளிர்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
சால்ஸ் பாலத்தில் காணப்படும் டெட்ராக்கிராமட்டன் ஒரு பிரசித்திப்பெற்ற உதாரணம் ஆகும். இந்தப் பாலம் பழைய ப்ராக் நகருக்கு பக்கத்தில் இருக்கும் அழகிய உல்டாவா ஆற்றுக்கு குறுக்கே 1357-ல் கட்டப்பட்டது. பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் வரிசையாக சிலைகள் உள்ளன. அவற்றுள் ஒரு சிலை, போவோர் வருவோர் என கிட்டத்தட்ட எல்லோருடைய கவனத்தையும் சுண்டி இழுக்கிறது. இது இயேசு சிலுவையில் இருப்பது போன்ற சிலை; பொன்னாலான தகதகவென மின்னும் எபிரெய எழுத்துக்கள் சிலுவையை சுற்றி வலம் வருகின்றன. அவற்றில் இந்த டெட்ரக்கிராமட்டனும் உள்ளது. இதோ அந்த வாசகம்: “சேனைகளின் யெகோவா பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர்.”
பைபிளில் ஏசாயா 6:3-ல் (NW) காணப்படும் இந்த வாசகம் எப்படி இந்தச் சிலையிடம் வந்தது? 1696-ல் ஒரு யூதன் அவ்வழியாக போனதாகவும், அந்தச் சிலுவையைப் பற்றி அவபக்தியாக பேசியதாகவும் அந்தச் சிலையின் அடியில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர் ராயல் கோர்ட் ஆஃப் அப்பீலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டார். அவர் அபராதமாக, மேலே குறிப்பிட்ட வாசகம் அடங்கிய தங்கமுலாம் பூசப்பட்ட ஒளிவட்டத்தை சிலுவைக்காக கொடுத்தார்.
பக்கத்தில் ஒரு பழைய-புதிய யூத ஜெப ஆலயமும், ஐரோப்பாவிலேயே மிகவும் பழமையான யூதரின் ஒரு கல்லறையும் இருக்கின்றன. இந்த ஜெப ஆலய இசை இயக்குநரின் (cantor) ஸ்டான்டில் வெள்ளி சட்டத்திலும் டெட்ராக்கிராமட்டன் காணப்படுகிறது. ஆனால், யூத கட்டடங்களில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் டெட்ராக்கிராமட்டன் காணப்படுகிறது. ப்ராக்கின் தென்கிழக்கே, பாறை குன்றின் மீது இடைநிலைக்காலத்து கோட்டை செஸ்கி ஷ்டர்ன்பர்க் நின்றுகொண்டிருக்க, அதன் கீழே சாஸவா ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. கோட்டையில் சர்ச் உள்ளது, சர்ச்சில் ஆல்ட்டர் உள்ளது, ஆல்ட்டரில் பொன்னாலான டெட்ராக்கிராமட்டன்—நான்கு எபிரெய எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்கள் கம்பியில் இணைத்து தொங்கவிடப்பட்டுள்ளதால் காற்றில் மிதப்பதுபோல் தெரியும். அவற்றிற்கு பின்னால் மெல்லிய ஒளிக்கதிர்க்கற்றை பாய்ந்துகொண்டிருக்கிறது—ஆனால் விளக்கிலிருந்து பாய்ச்சப்படவில்லை. உள்ளிருந்து பார்க்க முடியாதவாறு மேல்தளச் சாரத்தின் வழியே ரோஜா நிறத்தில் பாய்ந்துவரும் வெளிச்சம், வெள்ளை நிற ஆல்ட்டரில் விழுகிறது, அதன்மீது டெட்ராக்கிராமட்டன் அசைந்தாடிக் கொண்டிருக்கிறது.
செக் நாட்டின் மற்ற கட்டடங்களிலும் டெட்ராக்கிராமட்டன் அழகோடு மிளிர்ந்துகொண்டிருக்கிறது. முன்பெல்லாம், இங்கிருந்த நிறையப் பேருக்கு கடவுளுடைய பெயர் நன்றாக தெரிந்திருந்தது என்பதற்கு இவை கூடுதலான சான்றுகள். இன்று, இந்தத் தெய்வீக பெயரை அறிந்துகொண்டதில் செக் குடியரசிலும், 200-க்கு மேற்பட்ட மற்ற தேசங்களிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு கொள்ளைமகிழ்ச்சி. இப்பெயரை மற்றவர்களுக்கு கற்றுத்தருவதிலோ அவர்களுக்கு பேரானந்தம். (ஏசாயா 43:10-12, NW) மேலும், கடவுளுடைய பெயர், அவரது பண்புகள், நோக்கம், செயல்கள் என இவை அனைத்தும் ‘பூமியெங்கும் அறியப்படும்’ காலம் ஒன்று வருகிறது என்று பைபிள் புத்தகம் ஏசாயா சொல்கிறது.—ஏசாயா 12:4, 5.