எமது வாசகரிடமிருந்து
வியாதி “இளைஞர் கேட்கின்றனர் . . . தீராத வியாதியை என்னால் எப்படி சமாளிக்க முடியும்?” (ஜூன் 22, 1997) என்ற கட்டுரை என் மனதை நெகிழச்செய்தது. ஜேஸன், ஆஷ்லி, கார்மென் ஆகியோர் தங்களுக்கு வந்திருந்த தீராத வியாதியை திறமையோடு சமாளித்த விதம், என் கவனத்தைக் கவர்ந்தது.
ஆர். டி., பிரான்ஸ்
நீங்கள் தரும் ஆலோசனை, உண்மையில் நடைமுறைக்கு ஏற்றதாகவும், தூண்டுதல் அளிப்பதாகவும், பலன் தருவதாகவும் உள்ளது. குறிப்பாக ஆஷ்லியின் விஷயம் என்னை உற்சாகப்படுத்தியது. நான் யெகோவாவின் சாட்சிகளது முழுநேர ஊழியன். முழுநேர ஊழியத்தில் கொள்ளை ஆர்வம் உள்ளவர்களுக்கும்கூட, உடல்நலக் குறைபாடு காரணமாக அதில் ஈடுபட முடியாத நிலையைப் பற்றிய விஷயம், என் கஷ்டங்களின் மத்தியிலும் தொடர்ந்து நிலைத்திருக்கும்படி என்னை உற்சாகப்படுத்துகிறது.
டி. ஐ., அல்பேனியா
எனக்கு கிரான்ஸ் நோய் இருப்பது தெரியவந்திருப்பதால், பத்து தடவைக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறேன்; இரண்டு தடவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. என்றாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக, அயல்நாடாகிய இங்குள்ள நியமிக்கப்படாத பிராந்தியத்தில் சேவை செய்திருக்கிறேன். நான் இன்னும் பூரணமாய் குணமடையாவிட்டாலும், முன்பிருந்ததைவிட இப்போது எவ்வளவோ தேவலை. இந்தக் கட்டுரைகள் என்னை மிகவும் உற்சாகப்படுத்தின.
ஜி. எச்., ஈக்வடார்
மறைந்துகொண்டிருக்கும் வனவிலங்குகள் நான் உயிரியல் மாணவன்; “நம்முடைய மிருகங்களை யார் காப்பாற்றுவார்?” (ஜூலை 8, 1997) என்ற தொடர்கட்டுரை என் நெஞ்சை உண்மையிலேயே நெகிழச்செய்துவிட்டது. பேராசையும் கொடூரமும் எவ்வாறு பல இனங்களை பூண்டோடு அழித்திருக்கின்றன என்பதை, இக் கட்டுரைகளை வாசிப்போர் நிச்சயம் புரிந்துகொள்வர்.
ஜி. எச்., ஐக்கிய மாகாணங்கள்
வனவிலங்கு வாழ்க்கையைப் பற்றி ஆய்வுசெய்வதில் கொள்ளை ஆர்வம் கொண்டவளாக, நான் உங்கள் கட்டுரைகளை வாசித்து பெருமகிழ்ச்சியுற்றேன். மறைந்துவரும் இனங்களுக்கு உதவ விலங்ககங்கள் எவ்வளவோ செய்துவருகின்றன. ஆனால் வனவிலங்குகளுக்கு போக்கிடம் விலங்ககங்களே என இருந்தால், அவற்றுக்கு ஆபத்து நிச்சயம். மிருகங்களை அவற்றின் இயற்கைச் சூழலில் இருந்து பிரித்து, கான்கிரீட் காடுகளில் அவற்றை இனவிருத்தி செய்வதே அதற்கான சரியான தீர்வு அல்ல.
எம். டி., கனடா
அப்படிப்பட்ட பாதுகாப்பு முயற்சிகள் போற்றத்தக்கவையாய் இருந்தாலும், ஒரே நிரந்தர தீர்வு, பூமியின் வள ஆதாரங்களை கடவுளுடைய ராஜ்யம் நிர்வகிப்பதன் மூலமாகவே கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். (ஏசாயா 11:9)—ED.
செல்லப்பிராணியிடம் பாதுகாப்பு “உங்கள் நாயிடம் சிறார்கள் பாதுகாப்பாய் இருக்கிறார்களா?” (ஜூலை 8, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். தொழில்முறையில் அனுபவம் பெற்ற நாய் பயிற்சியாளராய் 18 ஆண்டுகளாக வேலை பார்த்திருக்கிறேன்; நாய்க்கு பயிற்சியளிப்பது, தனிப்பட்ட பொறுப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எப்பொழுதுமே வலியுறுத்த முயன்றிருக்கிறேன். தகவல் நிறைந்த இந்தக் கட்டுரையை வாசித்து இன்பத்தில் திளைத்தேன்; பேட்டி காணப்பட்ட பயிற்சியாளரும், நாங்கள் பயன்படுத்தும் பயிற்சி முறையையே பயன்படுத்துவதை வாசித்து அறிந்தும் மகிழ்ந்தேன். இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த ஆலோசனையை நாய் சொந்தக்காரர்கள் எல்லாருமே வாசித்து பின்பற்ற வேண்டும்.
பி. சி., ஐக்கிய மாகாணங்கள்
இன்னொரு குறிப்பைச் சொல்ல விரும்புகிறேன்: நாய்கள் உணவைக் கண்டதும் இயல்பாகவே பறக்கின்றன. மட்டன் பப்ஸ் (hot dog) அல்லது மிட்டாயைக் கையில் வைத்து ஆட்டிக்கொண்டே ஒரு நாயைக் கடந்து செல்லும்போது, அந்த நாய் அதை லபக்கென்று கவ்வ முயலலாம். அந்த நாய் வேண்டுமென்றே கோபப்படுவதில்லை; ஆனால், அந்த உணவுப்பொருளை கையில் இருந்து பறிக்கலாம்; அவ்வாறு பறிக்கும்போது, பிள்ளையின் கையில் கடிபட்டுவிடுகிறது. இந்த விஷயத்தில் பெற்றோர் தங்களது பொறுப்பை சரியான விதத்தில் நிறைவேற்றும்படி நன்றாக ஆலோசனை கொடுக்கப்படுகிறது.
கே. எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
இந்தக் கூடுதலான ஆராய்ச்சிக்கு எங்கள் பாராட்டுக்கள்.—ED.
ஆரோக்கியமற்ற வாழ்க்கைப்பாணிகள் “ஆரோக்கியமற்ற வாழ்க்கைப்பாணிகள்—அவற்றின் செலவு எவ்வளவு அதிகம்?” (ஜூலை 22, 1997) என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஓர் இளம் கிறிஸ்தவப் பெண்ணாக, எனக்கு பல சோதனைகள் நேரிட்டிருக்கின்றன. ஆனால், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், நாம் நோய்களையும் காயங்களையும் தவிர்க்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கட்டுரை உண்மையில் உதவியது.
ஆர். கே., ஐக்கிய மாகாணங்கள்
பேசும் முரசுகள் “ஆப்பிரிக்க முரசுகள் உண்மையில் பேசுகின்றனவா?” (ஜூலை 22, 1997) என்ற அருமையான கட்டுரையைப் படித்ததும், அது எந்தளவுக்கு உண்மையானது என்பதை சரிபார்ப்பதற்காக, நூறு வயதைக் கடந்த என் தாத்தாவிடம் அதைப் பற்றி கேட்டேன். இம்மியும் பிசகாமல் அவரும் அதையே சொன்னாரா, நான் ஸ்தம்பித்து விட்டேன்!
ஜி. எம். ஓ., நைஜீரியா