கருந்துளைகள் விஞ்ஞானிகள் உண்மையில் கண்டுபிடித்துவிட்டார்களா?
ஒரு காலத்தில் பிரகாசமாக கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள், காணமுடியாத ஒரு நிலைக்கு மாறி தங்களுடைய சொந்த ஈர்ப்பு சக்தியாலேயே கசக்கப்பட்டு, ஒளி உட்பட எதுவுமே அவற்றின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் ஆகும்போது அவையே கருந்துளைகள் என அழைக்கப்படுகின்றன. என்ன, ஒரு விஞ்ஞானக் கதை கேட்பது போல் தோன்றுகிறதா? இப்படிப்பட்ட கருந்துளைகள் பிரபஞ்சத்தில் காணப்படுவது சகஜம்தான் என்று அநேக வானவியல் நிபுணர்கள் நம்புகின்றனர். அவற்றைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? வாருங்கள், சைக்னஸ் என்றழைக்கப்படும் வடக்கிலுள்ள விண்மீன் குழுவிற்கு செல்வோம். இதற்கு “அன்னம்” என்று அர்த்தம்.
சைக்னஸ் X-1—இது ஒரு கருந்துளையா?
சைக்னஸ் விண்மீன் குழுவிலுள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பற்றி விஞ்ஞானிகள் 1960-களிலிருந்தே ஆர்வம் காட்டி வருகின்றனர். சைக்னஸ் X-1 என்பதாக அழைக்கப்படும் இவ்விடத்திலிருந்து சக்திவாய்ந்த X-கதிர்கள் வெளிப்படுகின்றன என்பதை பூமியைச் சுற்றி வலம் வரும் வானவியல் ஆராய்ச்சிக் கூடங்கள் கண்டுபிடித்தன.
ஒரு பொருள் எந்தளவுக்கு சூடாக இருக்கின்றதோ அந்தளவுக்கு அதன் சக்தியை இழக்கும்; அதாவது அதிக சக்திவாய்ந்ததும், குறுகிய அலைநீளமும் உடைய மின்காந்தமாக அதன் சக்தியை அது கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் என்ற உண்மையை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்து விட்டனர். ஒரு இரும்புத் துண்டை தகிக்கும் ஒரு உலையில் வைத்து நீங்கள் சூடாக்கினால் முதலாவது அது சிவப்பு நிறமாகவும் பின்னர் மஞ்சளாகவும் அதன்பின் வெள்ளையாகவும் மாறும். நட்சத்திரங்களும் சூடாக்கப்பட்ட இரும்புத் துண்டுகளைப் போலவே செயல்படுகின்றன. சுமார் 3,000 K வெப்பமுள்ள, ஆனால் ஓரளவு குளிர்ச்சியான நட்சத்திரங்கள் சிகப்பாக இருக்கின்றன. சூரியனைப்போன்ற மஞ்சள் நிற நட்சத்திரத்தின் மேற்பரப்பில் வெப்பம் 6,000 K இருக்கும்.a ஆனால், நட்சத்திரத்திலுள்ள வாயுக்களை பல லட்சம் கெல்வினுக்கு சூடாக்கினால்தான் சைக்னஸ் X-1-ல் இருந்து வெளிவருவதைப்போன்ற X-கதிர்களைப் பெறமுடியும். எந்த நட்சத்திரத்திலும் இந்தளவு வெப்பம் இல்லை.
சைக்னஸ் X-1 என்ற பகுதியில், விண்வெளி ஆய்வாளர்கள் மேற்பரப்பில் 30,000 K வெப்பமுள்ள ஒரு நட்சத்திரத்தை கண்டுபிடித்தனர். அது உண்மையில் பயங்கரமான வெப்பம்தான், ஆனாலும் X-கதிர்கள் வெளிப்படும் அளவிற்கு வெப்பம் இல்லை. இந்த நட்சத்திரத்தை HDE 226868 என்பதாக அழைக்கின்றனர். இது சூரியனைவிட 30 மடங்கு பெரியதாகவும் பூமியிலிருந்து 6,000 ஒளியாண்டுகள் தூரத்தில் இருப்பதாகவும் அறிந்திருக்கின்றனர். இந்த ராட்சத நட்சத்திரத்துடன் ஒரு கூட்டாளி நட்சத்திரமும்கூட இருக்கின்றது; அவை இரண்டும் 5.6 நாட்களுக்கு ஒரு முறை ஒன்றையொன்று சுற்றி வருகின்றன. HDE 226868 என்ற நட்சத்திரத்தின் கூட்டாளி நட்சத்திரம், ஒருசில லட்சம் கிலோமீட்டர் தொலைவிலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கின்றனர். இந்தக் கூட்டாளி நட்சத்திரம் சூரியனைவிட பத்து மடங்கு எடை அதிகம் என்று சில ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆனால் இந்தக் கூட்டாளி நட்சத்திரத்தையோ காணமுடியாது என்பதே இதன் வினோதம். பூமிக்கு இவ்வளவு அருகில் இருக்கும் எந்த ஒரு சாதாரண நட்சத்திரமும் கண்ணுக்குப் புலப்படாததாக இருக்காது. X-கதிர்களையே வெளிவிட முடிந்த இவ்வளவு பெரிய ஒன்று, கண்ணால் காண முடிந்த ஒளிக் கதிர்களோடு பிரகாசிக்கவில்லையென்றால் அது கருந்துளையாகத்தான் இருக்க வேண்டும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து.
கருந்துளைக்கு ஓர் பயணம்
சைக்னஸ் X-1-க்கு கற்பனையில் பயணிக்க நீங்கள் தயாரா? அது ஒரு கருந்துளைதான் என்பதாக ஊகித்துக்கொள்ளுங்கள்; அப்போது நீங்கள் காணும் காட்சி பக்கம் 17-ல் உள்ள படத்திலுள்ளதைப்போல் இருக்கும். அந்தப் பெரிய நட்சத்திரம்தான் HDE 226868. இந்த நட்சத்திரத்தின் குறுக்களவு பல லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இருந்தபோதிலும் கருந்துளையோ சுமார் 60 கிலோமீட்டர் குறுக்களவே இருக்கும். பிரகாசிக்கும் வாயுக்களின் மத்தியில் பெரும் நீர்ச்சுழியைப்போன்று காணப்படும் சிறிய கரும் புள்ளிதான் கருந்துளையின் மேற்பரப்பு. இது ஒரு கெட்டியான மேற்பரப்பு அல்ல; இது ஓர் நிழலைப் போன்றது. கருந்துளையில், ஒளிகூட தப்ப முடியாத பயங்கரமான ஈர்ப்பு சக்தி மிகுந்த இடம் அது. கருந்துளையின் மேற்பரப்பிற்கு கீழேயுள்ள மத்திய பாகத்தில் கன அளவு பூஜ்யமாகவும் ஆனால் அடர்த்தியோ வெகு அதிகமாகவும் இருக்கும் என்பதாக அநேக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்; அது சிங்குலாரிட்டி (singularity) என்பதாக அழைக்கப்படுகிறது; அதற்குள்தான் கருந்துளையின் எல்லா சடப்பொருட்களும் மறைந்து சூனியமாகிவிட்டதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
கருந்துளை, தன் கூட்டாளி நட்சத்திரத்தின் வெளி வட்டத்திலுள்ள வாயுக்களை தன்வசம் இழுக்கின்றது. இவ்விதம் இழுக்கப்பட்ட வாயு பிரகாசிக்கும் ஒரு வட்டத் தகட்டைப்போல் மாறி, கருந்துளையை சுற்றி வேகமாக சுழலும்போது அதன் வேகம் அதிகரிக்கையில் ஏற்படும் உராய்வினால் சூடாகிறது. கருந்துளையின் சுண்டியிழுக்கும் ஈர்ப்பு சக்தியால் இந்த வாயு பயங்கரமான வேகத்தில் இழுக்கப்படும்போது, எக்கச்சக்கமாக சூடாக்கப்பட்ட இந்த வாயு X-கதிர்களை வெளிவிடுகின்றது. ஆனால் இந்த வாயு கருந்துளையின் உள்ளே இழுக்கப்பட்டபின் X-கதிர்களோ ஏன் வேறு எதுவுமோகூட அதன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது.
சைக்னஸ் X-1 இப்போது பார்ப்பதற்கு ஜோராக காட்சியளிக்கின்றது; ஆனால் பொறுங்கள்! அருகில் சென்றுவிடாதீர்கள்! அது வெளிவிடும் X-கதிர்கள் மட்டுமல்ல அதன் ஈர்ப்பு சக்தியும்கூட மரணத்தை தழுவச் செய்துவிடும். பூமியில் நீங்கள் நிற்கும்போது புவி ஈர்ப்புச் சக்தியால், உங்கள் தலைக்கும் காலுக்கும் இடையே சிறிதளவு வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் கொஞ்சம் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது, அதை உங்களால் உணர முடியாது. ஆனால் நீங்கள் சைக்னஸ் X-1-ல் இருப்பதாக வைத்துக்கொண்டால் அந்தக் கொஞ்ச ஈர்ப்பே 15,000 கோடி மடங்கு அதிகமாக இருக்கும். அது வெளிப்படுத்தும் ஆற்றல் எந்தளவுக்கு இருக்கும் தெரியுமா? கண்ணால் காணமுடியாத கரங்கள் உங்கள் தலையை ஒரு திசையிலும் கால்களை மறு திசையிலும் ஒரேயடியாக இழுக்கும் அளவுக்கு இருக்கும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
சைக்னஸ் A—இது பிரமாண்டமான எடையுள்ள கருந்துளையா?
சைக்னஸ் விண்மீன் குழுவில் இன்னொரு புரியாப் புதிரான பகுதி இருக்கிறது. இப்பகுதியில், மிகத்தொலைவில் இருக்கும் ஒரு நட்சத்திர மண்டலத்தின் சிறு துகள் மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது; ஆனால் இங்கிருந்துதான் ஆகாயத்தில் வலிமை வாய்ந்த ரேடியோ அலைகள் வெளிப்படுகின்றன. இதைத்தான் சைக்னஸ் A என்று அழைக்கின்றனர்; 50-க்கும் அதிக ஆண்டுகளுக்கு முன்பு அது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதைக் குறித்து விஞ்ஞானிகள் வியந்திருக்கின்றனர்.
சைக்னஸ் A-யின் அளவினை சிந்திக்கும்போது நாம் மலைத்துப் போகிறோம். சைக்னஸ் X-1 என்பது சில ஆயிரம் ஒளியாண்டுகளுக்கப்பால் நம்முடைய நட்சத்திர மண்டலத்திலேயே இருக்கிறது; சைக்னஸ் A-யோ பல கோடி ஒளியாண்டுகள் தூரத்திலிருப்பதாக எண்ணப்படுகிறது. சைக்னஸ் X-1 மற்றும் அதன் காணக்கூடிய கூட்டாளி நட்சத்திரம், சுமார் ஒரு ஒளி நிமிட தூரத்திற்கு அப்பால் அமைந்திருக்கிறபோதும், சைக்னஸ் A-யிலிருந்து வெளிப்படும் இரண்டு ரேடியோ ஜெட் புகை மண்டலங்களை போன்றவை லட்சக்கணக்கான ஒளியாண்டுகள் தள்ளி இருக்கின்றன.b சைக்னஸ் A-யின் மத்தியிலிருக்கும் ஏதோ ஒன்று இப்படிப்பட்ட அபார சக்தியை எதிர் திசைகளில், அதாவது ஒரு காஸ்மிக் துப்பாக்கியிலிருந்து காஸ்மிக் கதிர்கள் புறப்படுவதைப்போல் லட்சக்கணக்கான ஏன் கோடிக்கணக்கான ஆண்டுகளாக பீச்சியடித்து வந்திருக்கின்றது. பீச்சியடிக்கப்பட்ட ரேடியோ ஜெட் அலைகளை, அது புறப்பட்டு வந்த கதிர் துப்பாக்கியுடன் ஒப்பிடும்போது அந்தக் கதிர் துப்பாக்கி மிகவும் சிறியதே; அது வெறுமனே ஒரு ஒளி மாத தூரத்திற்கும் குறைவான தூரமே என்பதாக சைக்னஸ் A-யின் மையத்தைக் குறித்த நுணுக்கமான ரேடியோ வரைபடங்கள் வெளிப்படுத்துகின்றன. இக்கதிர்கள் வெளிப்படுகையில் அது தாறுமாறாக அசைந்திருந்தால் கதிர்கள் வளைந்து வளைந்து வெளிப்பட்டிருக்கும். ஆனால், பீச்சியடிக்கும் அந்தக் கதிர் துப்பாக்கியோ ஒரு பெரிய கைரோஸ்கோப்பால் கட்டுப்படுத்தப்பட்டதைப்போல் தோன்றுகிறது; ஏனெனில் அதிலிருந்து வந்த புரியாப் புதிரான இந்தக் கதிர்களெல்லாம் நேர்கோடுகளாக அமைந்திருக்கின்றன.
இந்நிகழ்ச்சிக்குக் காரணம் என்ன? “சைக்னஸ் A-யின் மத்தியில் ஏற்படும் விளைவுகளை விவரிப்பதற்காக 1980-களின் ஆரம்பத்தில் எத்தனையோ விளக்கங்கள் சொல்லப்பட்டன. ஒரு ஒளி மாதத்திற்கும் குறைந்த தூரத்தில், மிகச்சிறந்த, நீண்ட ஆயுளுடைய, சக்திவாய்ந்த, கதிர்களை பீச்சியடிக்கும் ஒரு கைரோஸ்கோப் அதன் மையத்தில் இருக்கின்றது என்பது அவற்றுள் ஒரு விளக்கம். அதுவே ஒரு ராட்சத, சுழலும் கருந்துளை என்பது தனிச்சிறப்பு வாய்ந்த கருத்து” என்பதாக பேராசிரியர் கிப். எஸ். தார்ன் எழுதுகிறார்.
சந்தேகத்திற்கிடமான கருந்துளைகள்
1994-ஆம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்ட ஹபிள் டெலஸ்கோப் “அருகாமையில்” இருக்கும் M87 என்ற நட்சத்திர மண்டலத்தை படம் பிடித்துக் காட்டியது; இது சுமார் ஐந்து கோடி ஒளியாண்டுகள் தூரத்திற்கு அப்பால் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. M87-ன் மத்தியில், பெரும் நீர்ச்சுழியைப் போன்ற வாயுக்கள் ஒரு பொருளைச் சுற்றி மணிக்கு 20 லட்சம் கிலோமீட்டர் என்ற அசுர வேகத்தில் சுழலுவதை, ஹபிள் டெலஸ்கோப் தன்னுடைய புதுப்பிக்கப்பட்ட இயந்திரத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டியது. இப்படிப்பட்ட பயங்கரமான வேகத்தில் அந்த வாயுக்கள் சுழலுவதற்கு காரணம்? அந்த நீர்ச்சுழியைப்போன்ற அமைப்பின் மத்தியில் இருக்கும் அந்தப் பொருளுக்குள், குறைந்தது 200 கோடி சூரியன்களின் எடை இருக்க வேண்டும் என கணக்கீடு காட்டுகிறது. ஆனால் உண்மையில் அந்தப் பொருள் நம் சூரிய குடும்பத்தின் அளவேயுள்ள மிக “சிறிய” இடத்தைத்தான் எடுத்துக்கொள்கிறது. இப்படிப்பட்ட விவரிப்பிற்கு பிரமாண்டமான எடையுள்ள கருந்துளை ஒன்றே பொருத்தமானது என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர்.
அக்கம்பக்கத்தில் இருக்கும் அநேக நட்சத்திர மண்டலங்களின் மத்தியில் கருந்துளைகள்தானோ என்று சந்தேகிக்கப்படும் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நமது ‘பக்கத்து வீட்டுக்காரர்’ போன்று இருக்கும் வெறும் 20 லட்சம் ஒளியாண்டுகள் தூரத்திற்கு அப்பால் காணப்படும் அன்ட்ரோமெடா நட்சத்திர மண்டலத்தில்கூட கருந்துளைதான் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அன்ட்ரோமெடாவைக் காட்டிலும் ஒரு பெரிய ராட்சத கருந்துளை நமக்கு மிக அருகே இருக்கலாம்! நம்முடைய நட்சத்திர மண்டலமான பால்வீதி மண்டலத்தின் மையத்தில் ஒரு ராட்சத கருந்துளை இருக்கலாம் என்பதாக சமீபத்திய வானிலை காட்சிப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. நம் நட்சத்திர மண்டலத்தின் மையத்திற்கு அருகிலுள்ள நட்சத்திரங்கள் படுவேகமாக சுழல்கின்றன; மையத்தில் இருக்கும் குறுகிய பரப்பளவில் 24 லட்ச சூரியன்களின் எடை உள்ள பொருள் இருப்பதே இதற்குக் காரணம். “1980-களில் படிப்படியாக கிடைத்த அத்தாட்சிகள் சுட்டிக்காட்டுகிறபடி, இப்படிப்பட்ட கருந்துளைகள் குவாசார்களின் மையத்திலும் ரேடியோ நட்சத்திர மண்டலங்களின் மையத்திலும் இருப்பது தெரிகிறது. அதேபோல் கருந்துளைகள் மற்ற சாதாரண பெரிய நட்சத்திர மண்டலங்களான பால்வீதி மண்டலம் மற்றும் அன்ட்ரோமெடாவிலும் இருக்கலாம்” என்பதாக இயற்பியல் நிபுணர் தார்ன் குறிப்பிடுகிறார்.
விஞ்ஞானிகள் உண்மையில் கருந்துளைகளை கண்டுபிடித்து விட்டனரா? அப்படித்தான் தோன்றுகிறது. சைக்னஸ் நட்சத்திர மண்டலத்திலும் மற்ற இடங்களிலும் மிகவும் வினோதமாக தோன்றும் சில பொருட்களை அவர்கள் கண்டுபிடித்திருப்பது என்னவோ உண்மைதான். தற்சமயம் அவற்றை கருந்துளை என்றுதான் சுலபமாக விவரிக்க முடியும். ஆனால் புதிய ஆதாரங்கள் சாதாரண கோட்பாடுகளைக்கூட தவிடுபொடி ஆக்கலாம்.
3,500 ஆண்டுகளுக்கும் முன்பு கடவுள் யோபுவிடம் பின்வருமாறு கேட்டார்: ‘வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?’ (யோபு 38:33, பொது மொழிபெயர்ப்பு) வியக்க வைக்கும் விஞ்ஞான முன்னேற்றங்கள் இருக்கும்போதும், இந்தக் கேள்வி பொருத்தமானதுதான். மனிதன் பிரபஞ்சத்தை அறிந்து கொண்டதாக நினைக்க ஆரம்பிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில எதிர்பாராத வானிலை தோற்றங்கள் தெரிய வந்து இவ்வளவு நாட்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய கோட்பாடுகளை எல்லாம் சின்னாபின்னமாக்கி விடுகிறது. அதே சமயத்தில், இப்போது நாம் கண்ணுக்குப் புலப்படும் நட்சத்திர மண்டலங்களை வியப்பால் விழிகள் அகல கவனித்து அவற்றின் அழகை ரசித்து மகிழலாமே!
[அடிக்குறிப்புகள்]
a கெல்வின் (K) என்பது விஞ்ஞானிகளால் உபயோகிக்கப்படும் ஒரு வெப்ப அளவு. இது ‘முழுமையான 0’ என்பதில் (அதாவது கடும் குளிரான தட்பவெப்பநிலை என கருதப்படுவதில்) ஆரம்பித்து டிகிரி செல்ஷியஸ் என்ற அளவீட்டில் அதிகரிக்கிறது. முழுமையான 0 என்பது -273 டிகிரி செல்ஷியஸாக இருப்பதால் 0 டிகிரி செல்ஷியஸ் என்பது 273 K-யாக இருக்க வேண்டும்.
b ஓர் வெற்றிடத்தில், ஒளி ஒரு வருடம் பிரயாணம் செய்யும் தூரமே ஓர் ஒளி ஆண்டு, அதாவது, சுமார் 9,46,100,00,00,000 கிலோமீட்டர் ஆகும். இதைப்போலவே ஒளி நிமிடம் என்பது ஒரு நிமிடத்தில் ஒளி பிரயாணம் செய்யும் தூரம், ஒளி மாதம் என்பது ஒரு மாதத்தில் ஒளி பிரயாணம் செய்யும் தூரம் ஆகும்.
[பக்கம் 16, 17-ன் பெட்டி]
கருந்துளை எவ்விதம் உருவாகிறது?
ஈர்ப்பு சக்திக்கும் அணு சக்திக்கும் இடையில் நடக்கும் முடிவில்லா போராட்டம்தான் நட்சத்திரங்கள் மின்னுவதற்கான காரணம் என்பதாக தற்போதைய விஞ்ஞான அறிவு உணர்த்துகிறது. வாயுவை நட்சத்திரத்தின் ஆழத்திற்குள் இழுக்க ஈர்ப்பு சக்தி முயற்சிக்கிறது; அந்த ஈர்ப்பு சக்தியில்லையென்றால் அணுச்சேர்க்கை நடைபெற முடியாது. மறுபட்சத்தில் ஈர்ப்பு சக்தியை எதிர்க்கும் அணுச்சேர்க்கை இல்லையென்றால் நட்சத்திரத்திற்கு எதிர்பாராத பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
அளவில் நம்முடைய சூரியனை ஒத்த நட்சத்திரங்கள் தங்களுடைய அணு எரிபொருட்களான ஹைட்ரஜனையும் ஹீலியத்தையும் இழந்தபின் அவற்றில் உள்ள ஈர்ப்பு சக்தி அவற்றை கசக்கி வெப்பமுள்ள பொருளாக்குகிறது; அவை இப்போது பூமியின் அளவுக்கு சிறுத்துவிடுகிறது. அவற்றைத்தான் வெள்ளைக் குள்ளர்கள் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு வெள்ளைக் குள்ளரின் எடையோ சூரியனின் அளவு, ஆனால், அந்த எடை இப்போது பத்து லட்சம் மடங்கு குறுக்கப்பட்ட இடத்தில் இருக்கிறது.
ஒரு சடப்பொருளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோமென்றால் அதன் அணுக்களின் மொத்த எடை நடுவில் உள்ள மிகச் சிறிய நியூக்ளியஸில் அமைந்திருக்கிறது; எலக்ரான்கள் ஒரு படலம்போல் அதை சூழ்ந்துகொண்டுள்ளன; அதற்கு வெளியே இருக்கும் பகுதி வெறுமையாகத்தான் இருக்கின்றது. ஆனால் வெள்ளை குள்ளருக்கு உள்ளே என்ன நடைபெறுகிறதென்றால், ஈர்ப்பு சக்தி, எலக்ட்ரான் படலத்தை கசக்கி முன்பிருந்த பிரமாண்டமான ஒரு நட்சத்திரத்தின் உருவை ஒரு கிரகத்தின் அளவிற்கு சுருக்கிவிடுகிறது. நம் சூரியனின் அளவுள்ள நட்சத்திரங்களுக்குள், ஈர்ப்பு சக்திக்கும் எலக்ட்ரான்களின் சக்திக்கும் இடையே ஒரு சமநிலை இந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்படுவதால் அது இன்னும் அதிகம் சுருங்காதவாறு நிறுத்தப்படுகிறது.
ஒருவேளை நட்சத்திரங்கள் சூரியனைவிட பெரியவையாகவும் அதிக ஈர்ப்பு சக்தி உள்ளவையாகவும் இருந்தால் அப்போது என்ன நடக்கும்? சூரியனைவிட 1.4 மடங்கு அதிக எடையுள்ள நட்சத்திரங்களில் எக்கச்சக்கமாக ஈர்ப்பு சக்தி இருப்பதால் எலக்ட்ரான் படலங்கள் பிழிந்தெடுக்கப்பட்டு அவை மறைந்தே போய்விடுகின்றன. ஆகவே புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் சேர்ந்து நியூட்ரானில் ஐக்கியமாகிவிடுகின்றன. இச்சமயத்தில் ஈர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கவில்லை என்றால் இன்னும் அதிகமாக நசுக்கப்படுவதை நியூட்ரான்கள் எதிர்க்கின்றன. இந்த நிலையில் கிரகத்தின் அளவுள்ள வெள்ளைக் குள்ளராக சுருங்குவதற்கு பதிலாக நுண்கோள் அளவிற்கு சுருங்கி ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறிவிடுகிறது. இந்தப் பிரபஞ்சத்திலேயே மிக அதிக எடையுள்ள ஒன்றாக நியூட்ரான் நட்சத்திரம் இருக்கின்றது.
ஒருவேளை ஈர்ப்பு சக்தி இன்னும் அதிகரித்தால்? சூரியனைவிட மூன்று மடங்கு பெரிய நட்சத்திரங்களில் ஈர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதால் நியூட்ரான்களாலேயே தாக்குப்பிடிக்க முடிவதில்லை. இயற்பியலாளர்களுக்குத் தெரிந்தவரை, படிப்படியாக கூடிவரும் இப்படிப்பட்ட ஈர்ப்பு சக்திகளைத் தாக்குப்பிடிக்கும் திறமை எந்தச் சடப்பொருளுக்கும் இல்லை. நுண்கோள் அளவிற்கு சுருக்கப்பட்ட நியூட்ரான்கள் மேலும் கசக்கப்படும்போது அதைவிட சிறியதாக பந்தளவுக்கு மாறுவதில்லை; அதற்கு பதில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் சூனியமாகிவிடுகிறது; அதை சிங்குலாரிட்டி (singularity) என்பதாக, அல்லது கோட்பாடுகளின்படி இன்னமும் விவரிக்க இயலாத ஒரு வஸ்துவாக மாறிவிடுகிறது. அந்த இடத்தில் நட்சத்திரம் என்னவோ மறைந்துவிட்டது, இருப்பதென்னவோ பயங்கரமான ஈர்ப்பு சக்தியும் ஒரு கருந்துளையும்தான். அந்த நட்சத்திரம் இருந்த இடத்தில் கருந்துளை ஒரு ஈர்ப்பு நிழலை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் பயங்கரமான ஈர்ப்பு சக்தி இருப்பதால் எதுவுமே ஏன், ஒளி உட்பட அதனிடமிருந்து தப்ப முடியாது.
[பக்கம் 16-ன் படம்]
சைக்னஸ் நட்சத்திர மண்டலத்தில் அடங்குபவை: வட அமெரிக்க நெபுலா (1) வெல் நெபுலா (2). சைக்னஸ் X-1 (3) அன்னத்தின் கழுத்தருகே காணப்படுகிறது
சைக்னஸ் (அன்னம்)
[படத்திற்கான நன்றி]
Tony and Daphne Hallas/Astro Photo
Tony and Daphne Hallas/Astro Photo
[பக்கம் 17-ன் படங்கள்]
கோட்பாட்டளவில் சைக்னஸ் X-1
கருந்துளைகள் மற்ற பொருட்களில் ஏற்படுத்தும் விளைவுகளால் அவற்றை கண்டுபிடிக்க முடிகிறது. இந்தப் படத்தில் ஒரு நட்சத்திரத்தின் வாயுக்கள் கருந்துளைக்குள் இழுக்கப்படுவதைக் காண்கிறோம்
(செவ்வகத்திற்குள்) ஓவியரின் கண்ணோட்டத்தில் ஒரு கருந்துளை (கீழே) பெரிதாக்கப்பட்ட படம்
[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றியின் படம்]
ஐன்ஸ்டீன்: U.S. National Archives photo