தங்கம்—அதன் வசீகரம்
தங்கம்—இந்த மென்மையான, பளபளக்கும் மஞ்சள்நிற உலோகம், அதன் விசேஷித்த தன்மைகளுக்காக பூர்வ காலங்களிலிருந்தே உயர்வான மதிப்பு பெற்றிருக்கிறது. அதன் நிறம், அழகு, தகட்டச்சு தன்மை, துருப்பிடிப்பதை எதிர்க்கும் திறமை ஆகியவை அதை உலோகங்களிலேயே விசேஷித்ததாக ஆக்குகின்றன. அதைத் தேடியவர்களின் மனதில் அது அவ்வளவு விலையேறப் பெற்றதாக இருந்ததால் மற்ற எந்த உலோகத்திற்கும் இல்லாத ஒரு சரித்திரம் அதற்கு இருக்கிறது.
“தங்கம்! அது தங்கம்தான்! அடிச்சு சொல்றேன் அது தங்கம்தான்!” தங்கத்தின் கண்டுபிடிப்பு இதயத்தைக் குஷியாக்கி, நாடித் துடிப்பை அதிகரித்து, கற்பனைக் குதிரையைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. நிலத்திலும், நீரிலும், ஓடைகளிலும், பூமியின்கீழ் ஆயிரக்கணக்கான மீட்டர் ஆழத்திலும் அதற்காக தேடியிருக்கின்றனர்.
விலையுயர்ந்த ஆபரணமான தங்கம், ராஜாக்களையும் ராணிகளையும் சிங்காரித்திருக்கிறது. சிங்காசனங்களையும் அரண்மனைகளின் சுவர்களையும்கூட அலங்கரித்திருக்கிறது. மீன்கள், பறவைகள், மிருகங்கள், மற்ற பொருட்கள் ஆகியவற்றின் வடிவிலான தங்க சுரூபங்கள் கடவுட்களாக வணங்கப்பட்டு வந்திருக்கின்றன. தங்கத்திற்கான தணியாத தாகம், நாகரிகத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது போலவே அதைத் தேடுவதற்காக எடுத்த முயற்சிகளும் விண்ணை எட்டும்.
தங்கமும் சரித்திரமும்
பூர்வீக எகிப்தின் பார்வோன்கள் தங்கத்தைத் தேடி தங்கள் வியாபாரிகளையும் யுத்த வீரர்களையும் தொலைதூரமான இடங்களுக்கு அனுப்பினர். ஏனென்றால், தங்கம் எகிப்தின் கடவுட்களுக்கும் பார்வோன்களுக்கும் மட்டுமே உரியதாக கருதப்பட்டது. 1922-ல் கண்டுபிடிக்கப்பட்ட தூத்தன்காமென்னுடைய கல்லறை தங்க பொக்கிஷங்களால் நிறைந்திருந்தது. அவருடைய சவப்பெட்டிகூட சொக்கத்தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.
சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறபடி மகா அலெக்சாந்தர், “ஆசியாவிற்கு வரும்படி கவரப்பட்டதற்கு முதல் காரணம் பெர்சியாவின் புகழ்பெற்ற தங்க புதையல்கள்தான்.” அங்கு கைப்பற்றிய புதையலை கிரீஸுக்கு எடுத்துச்செல்ல ஆயிரக்கணக்கான சுமைதூக்கும் மிருகங்களை அவருடைய படையினர் உபயோகித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கிரீஸ் தங்கம் நிறைந்த ஒரு தேசமானது.
ஒரு சரித்திர ஆசிரியர் அறிவிக்கிறார்: ரோமின் “மன்னர்கள், தங்களுடைய அதிகாரிகளின் உண்மைத்தன்மையைப் பெறுவதற்கும் மற்ற நாடுகளிலுள்ள சீமான்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் தங்கத்தைத் தாராளமாக உபயோகித்தனர். பகட்டான தங்க நகைகளை அணிவதன் மூலம் தங்களுடைய செல்வத்தைக் காட்டி தங்கள் குடிமக்கள்மீது ஆதிக்கம் செலுத்தினர்; அநேக சமயங்களில் அவர்களைப் பயமுறுத்தினர்.” ஸ்பெய்ன்மீது வெற்றி கொண்டதாலும் ஸ்பானிய தங்கச் சுரங்கங்களை கைப்பற்றியதாலும் ரோமர்கள் பெருமளவில் தங்கத்தைப் பெற்றனர் என்று ஒரு புத்தகம் கூறுகிறது.
இருந்தாலும், இரத்த வெறிபிடித்த அதன் சரித்திரத்தைத் தோண்டிப் பார்க்காமல் தங்கத்தைப் பற்றிய செய்தி முழுமையடையாது. வெற்றி கொள்ளுதல், மிருகத்தனம், அடிமைப்படுத்துதல், மரணம் ஆகியவை நிறைந்ததே அதன் கதையாகும்.
இரத்தம் சொட்டும் சரித்திரம்
நாகரிகம் வளர வளர, இன்னும் பெரிய அதிக சக்திவாய்ந்த கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புதிய நிலங்களைக் கண்டுபிடிக்கவும் புதிய காலனிகளை நிறுவவும் தங்கத்திற்காக தேடவும் இவை உபயோகிக்கப்பட்டன. முதல் கப்பலோட்டியான கிறிஸ்டோபர் கொலம்பஸ் (1451-1506) உட்பட ஆய்வுப்பயணம் செய்த அநேகர் தங்கம் தேடும் வெறியர்களாக ஆனார்கள்.
கொலம்பஸ், தங்கம் தேடிச்செல்கையில் பழங்குடியினரின் உயிர்களை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கொலம்பஸின் கடற்பயணங்களுக்காக நிதியுதவி அளித்தது ஸ்பெய்ன் நாட்டின் அரசனும் அரசியும்தான். ஒரு தீவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவர்களிடம் விவரிக்கையில் கொலம்பஸ் தன்னுடைய குறிப்புப் புத்தகத்தில் எழுதினார்: “இந்தத் தீவில் ஆட்சி நடத்த நாம் அங்கு குடியேறி, பழங்குடியினர்மீது அதிகாரம் செலுத்தினால் போதும். செய்யும்படி என்ன கட்டளைக் கொடுத்தாலும் அவர்கள் அதைத் தட்டாமல் செய்வர். . . . இங்குள்ள இந்தியர்கள் . . . நிர்வாணிகளாகவும் நிராயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். ஆகவே அவர்கள்மீது அதிகாரம் செலுத்துவதும் அவர்களை வேலைவாங்குவதும் மிகச் சுலபமே.” தனக்கு கடவுளின் ஆசீர்வாதம் இருக்கிறது என கொலம்பஸ் நம்பினார். மேலுமாக, ஸ்பெய்ன் நடத்திவந்த பரிசுத்த போர்களுக்கும் அந்தத் தங்க புதையல்கள் உதவியாக இருக்கும். ஒரு தங்க முகமூடியைப் பரிசாக பெற்ற பிறகு அவர் கூறினார்: ‘நான் தங்கத்தைக் கண்டுபிடிக்க கடவுள் இரக்கத்துடன் எனக்கு உதவுவாராக.’
கொலம்பஸின் வழியைப் பின்பற்றி, தங்கத்தைத் தேடி கடற்பயணம் செய்த ஸ்பானிய வீரர்களிடம் ஸ்பெய்ன் நாட்டின் அரசரான ஃபெர்டினான்டு கூறினார்: “எமக்கு தங்கம் வேண்டும்! முடிந்தால் மனிதாபிமான முறையில் அதைப் பெறுங்கள். இல்லையென்றால் எப்படியாவது அதை எம்மிடம் கொண்டுவந்து சேருங்கள்.” இரக்கமற்ற இந்தக் கடற்பயணிகள், மெக்ஸிகோவிலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும் அவர்கள் எதிர்ப்பட்ட ஆயிரக்கணக்கான பழங்குடியினரைக் கொன்று குவித்தனர். இந்தத் தேசங்களிலிருந்து ஸ்பெய்னுக்கு கொண்டுவரப்பட்ட தங்கத்தில் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது என்றே சொல்லலாம்.
அதுமட்டுமல்ல, மேற்கிந்திய தீவுகளிலும் அமெரிக்க கரையோரங்களிலும் 17-வது மற்றும் 18-வது நூற்றாண்டுகளில் கடற்கொள்ளை மிகவும் பிரபலமாக இருந்தது. எந்த நாட்டையும் சேராத அந்தக் கடற்கொள்ளையர்கள் தங்கமும் விலையுயர்ந்த மற்ற பொருட்களும் நிறைந்திருந்த ஸ்பானிய கப்பல்களை நடுக்கடலில் கொள்ளையிட்டனர். குறைவான ஆள் பலமும் குறைச்சலான வெடிமருந்துகளும் மட்டுமே இருந்த இந்தக் கப்பல்கள் அதிக திறமையான கொள்ளைக்காரர்களிடம் எளிதில் சிக்கிக்கொண்டன.
19-வது நூற்றாண்டின் தங்க வேட்டைகள்
1848-ல் கலிபோர்னியாவிலுள்ள சாக்ரமென்டோ பள்ளத்தாக்கில் அதிகளவான தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சங்கதி காட்டுத்தீயாக பரவியது. சீக்கிரத்தில், தங்கள் பங்கைப் பெறுவதற்காக சாரைசாரையாக ஆட்கள் வந்து குவிந்தனர். அடுத்த வருடத்திற்குள்ளாக கலிபோர்னியாவில் பத்தாயிரக்கணக்கானோர் குழுமிவிட்டனர். பெருஞ்செல்வத்தைத் தேடி 1849-ல் உலகமுழுவதிலுமிருந்து வந்திருந்த இவர்கள் “நாற்பத்தி ஒன்பதுகாரர்கள்” என்றழைக்கப்பட்டனர். 1848-ல் சுமார் 26,000-மாக இருந்த கலிபோர்னியாவின் ஜனத்தொகை 1860-ல் சுமார் 3,80,000-மாக அதிகரித்தது. இந்தத் தங்க வேட்டையில் தங்களால் முடிந்ததைப் பெறுவதற்காக விவசாயிகளும் தங்கள் நிலத்தை மறந்தனர், மாலுமிகளும் தங்கள் வேலையை விட்டனர், ஏன் சிப்பாய்களும்கூட இராணுவத்திலிருந்து தப்பியோடினர். சிலர் “இரத்தவெறி பிடித்த வஞ்சகர்கள்” என விவரிக்கப்படும் அளவு மோசமானவர்களாக இருந்தனர். இவ்வாறு பல பின்னணியிலிருந்து வந்த ஆட்கள் ஒன்று சேர்ந்ததானது குற்றச்செயலுக்கும் வன்முறைக்கும் வழியைத் திறந்தது. தங்கத்தின் வசீகரத்தில் சிக்கிய ஆனால் அதற்காக உழைக்க தயாராயில்லாத ஆட்கள் திருட ஆரம்பித்தனர். குதிரை வண்டிகளையும் இரயில் வண்டிகளையும் வழிப்பறிக்க ஆரம்பித்தனர்.
1851-ல், கலிபோர்னியாவின் தங்க வேட்டையைத் தொடர்ந்து சீக்கிரத்திலேயே ஆஸ்திரேலியாவில் பெருமளவு தங்கம் கிடைப்பதாக செய்தி வந்தது. “எக்கச்சக்கமான அளவில் கிடைக்கிறது” என்ற அறிக்கையும் வந்தது. சிறிது காலத்திற்கு ஆஸ்திரேலியா, உலகிலேயே அதிகளவில் தங்கம் தயாரிக்கும் நாடாக ஆனது. கலிபோர்னியாவிற்கு சென்றிருந்த சிலர் தங்கள் மூட்டைகளைக் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலியாவில் வந்திறங்கினர். அதனால் ஆஸ்திரேலியாவின் ஜனத்தொகை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தது; 1850-ல் 4,00,000 ஆக இருந்தது 1860-ல் 11,00,000 ஆக உயர்ந்தது. அநேகர் தங்க பொக்கிஷங்களைத் தேடிச் சென்றதால் உழவுத் தொழிலும் மற்ற வேலைகளும் ஏறக்குறைய ஸ்தம்பித்துவிட்டன.
19-வது நூற்றாண்டின் முடிவில் யுகான் மற்றும் அலாஸ்கா பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், தங்கத்தைத் தேடி தலைதெறிக்க ஓடியவர்களின் கவனம் அந்த நாடுகளின் பக்கம் திரும்பியது. தங்கம் நிறைந்த நிலத்தின்மீது தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வடக்கிலிருந்த க்ளான்டைக் பகுதிக்கும் அலாஸ்காவிற்கும் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.
ஆழ்கடல் பொக்கிஷம்
20-ம் நூற்றாண்டில், ஆழ்கடலில் மூழ்குவதற்கான வழிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தங்கத்தைத் தேடியவர்கள் தங்கள் கவனத்தை ஆழ்கடலிடம் திருப்பினர். சமுத்திரத்தில் மூழ்கிப்போன பொக்கிஷங்களுக்காக அங்கு தேட ஆரம்பித்தனர். பல நூற்றாண்டிற்கு முன் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களுக்காகவும் தங்க ஆபரணங்களுக்காகவும் கப்பற்சேதங்களில் தேடினர்.
செப்டம்பர் 20, 1638-ல், ஸ்பானிய கப்பலான கான்செப்சியான் கடும் புயல்காற்றில் சிக்கியது; அதன் காரணமாக பசிபிக் கடலிலிருக்கும் செய்பன் கடற்கரையருகில் பாறைகளில் மோதி கடலில் மூழ்கியது. ஏராளமான தங்கத்தையும் மற்ற பொக்கிஷங்களையும் அது சுமந்து சென்றது; இன்று அதன் மதிப்பு கோடிக்கணக்கான டாலராகும். அதில் பயணம் செய்த 400 பேரில் பெரும்பாலானோர் மரித்தனர். அந்தச் சேதத்திலிருந்து, ஒவ்வொன்றும் 1.5 மீட்டர் நீளமும் அநேக பவுண்டுகள் எடையுள்ளதுமான 32 தங்கச் சங்கிலிகளை முக்குளிப்பவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். மொத்தத்தில் 1,300 தங்க ஆபரணங்களை அவர்கள் எடுத்து வந்திருக்கின்றனர். அதில் செயின்கள், சிலுவைகள், வட்டவடிவ சின்னங்கள், நெக்லேஸ்கள், மோதிரங்கள், பக்கில்கள் ஆகியவையும் அடங்கும்.
மற்ற கப்பற்சேதங்களும்கூட கண்டுபிடிக்கப்பட்டன. 1980-ல், ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஃப்ளாரிடாவின் கரைகளில் முக்குளிப்பவர்கள் 17-வது நூற்றாண்டு ஸ்பானிய கப்பலான சான்டா மார்காரிடாவின் சேதத்தைக் கண்டுபிடித்தனர். அடுத்த வருடத்தின் முடிவிற்குள் மற்ற தங்க கைவினைப் பொருட்களோடுகூட 53.5 கிலோ தங்க புதையலையும் அதிலிருந்து மீட்டனர்.
யுத்தகால தங்கம்
1945-ல் ஜெர்மானிய அரசு சரணடைந்த பிறகு, ஜெர்மனியிலுள்ள தூரிங்கியாவில் அமைந்திருக்கும் கைஷரோடா உப்பு சுரங்கத்தில் ஆச்சரியமான ஒன்றை நேச நாடுகளின் துருப்புகள் கண்டுபிடித்தன. தி அட்லாண்டா ஜர்னலின்படி, “அந்தச் சுரங்கங்களில் மலைக்க வைக்கும் அளவான 210 கோடி டாலர் பெறுமானமுள்ள தங்கம், கைவினைப் பொருட்கள், நோட்டுகள், பத்திரங்கள் ஆகியவை கிடைத்தன.” அதுமட்டுமல்ல, நாசிப் படுகொலைக்கு பலியானவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கத்திலும் வெள்ளியிலும் செய்யப்பட்ட பல்செட்டுகள் நிறைந்த அநேக பைகளும்கூட காணப்பட்டன; அவற்றில் சில ஏற்கெனவே உருக்கப்பட்டிருந்தன. பேரளவான இந்தத் தங்க பொக்கிஷம் தொடர்ந்து யுத்தம் செய்ய நாசி இராணுவ தலைவர்களுக்கு உதவியது. முன்பு ஹிட்லரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த சுமார் பத்து நாடுகளிடம் 250 கோடி டாலர் பெறுமானமுள்ள தங்கம் திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதாக ஜர்னல் அறிக்கை செய்கிறது. நாசிகள் ஒளித்துவைத்த எல்லா தங்கமும் இன்னும் கிடைக்கவில்லை என்ற பொதுவான நம்பிக்கையின் காரணமாக தங்கம் தேடும் படலம் இன்னும் தொடர்கிறது.
தங்கத்திற்கு நிச்சயமாகவே மதிப்பு இருக்கிறது. என்றபோதிலும், மற்ற பொருள் செல்வங்களைப் போலவே தங்கமும் அதைத் தேடுபவர்களுக்கு உயிரைக் கொடுக்காது என பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 49:6-8; செப்பனியா 1:18) “பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்!” என்று பைபிள் நீதிமொழி ஒன்று கூறுகிறது. (நீதிமொழிகள் 16:16) உண்மையான ஞானம் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனிடமிருந்து வருகிறது. அவருடைய வார்த்தையாகிய பைபிளில் காணப்படுகிறது. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் அப்படிப்பட்ட ஞானத்தைத் தேடுபவர் கடவுளுடைய சட்டங்களையும், நியமங்களையும், ஆலோசனைகளையும் அறிந்துகொண்டு அவற்றைத் தன் வாழ்க்கையில் பொருத்தலாம். அவ்வாறு பெறப்பட்ட ஞானம், மனிதனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லா தங்கத்தையும்விட அதிகம் விரும்பப்படத்தக்கது. அப்படிப்பட்ட ஞானமானது இப்போது மேன்மையான வாழ்க்கையையும் எதிர்காலத்தில் நித்திய ஜீவனையும் கொடுக்கலாம்.—நீதிமொழிகள் 3:13-18.
[பக்கம் 27-ன் பெட்டி]
தங்கம் பற்றி சில தகவல்கள்
• எல்லா உலோகங்களிலுமே தங்கம்தான் சுலபமாக தகடாகும் தன்மை உள்ளதாகவும் எளிதில் வளைந்துகொடுப்பதாகவும் இருக்கிறது. 0.1 மைக்ரோமீட்டர் கனம் உள்ளதாகவும்கூட அதை மெல்லியதாக அடிக்கலாம். 28 கிராம் தங்கத்தை 17 சதுர மீட்டர் பரப்பளவு பரவும்படி அடிக்கமுடியும். ஒரு அவுன்ஸ் தங்கத்தை 70 கிலோமீட்டர் தூரத்திற்கு இழுக்கமுடியும்.
• சொக்கத்தங்கம் அதிக மிருதுவாக இருப்பதால், ஆபரணங்களையும் மற்ற தங்க சாமான்களையும் செய்வதற்கு அதன் கெட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும். இதன் காரணமாக அது மற்ற உலோகங்களோடு கலவை செய்யப்படுகிறது. தங்க உலோகக் கலவையின் தரம் காரட்டுகளில் அளக்கப்படுகிறது; ஒரு காரட் 24 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. ஆகவே, 12 காரட் தங்கக் கலவை 50 சதவிகித தங்கமாகும்; 18 காரட் தங்கம், 75 சதவிகித தங்கமாகும், 24 காரட் சொக்கத்தங்கமாகும்.
• தென் அமெரிக்காவும் ஐக்கிய மாகாணங்களுமே தங்கம் தயாரிப்பதில் முன்னோடியாக இருக்கும் தேசங்களாகும்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
மகா அலெக்சாந்தர்: The Walters Art Gallery, Baltimore
[பக்கம் 26-ன் படங்கள்]
1492-ல் தங்க பொக்கிஷங்களைத் தேடி கிறிஸ்டோபர் கொலம்பஸ் பஹாமாவிற்கு சென்றதைச் சித்தரிக்கும் ஓவியம்
[படத்திற்கான நன்றி]
Courtesy of the Museo Naval, Madrid (Spain), and with the kind permission of Don Manuel González López