பாம்புகள் பற்றிய சில கட்டுக்கதைகள்
இந்தியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
அதோ! ஒரு பெண் தலை நிறைய மல்லிகைப் பூ வைத்துக்கொண்டு நடந்துபோகிறாள். அந்தப் பூவின் வாசனைக்கு மயங்கி அவள் பின்னாடியே வழவழப்பான ஒரு நல்லபாம்பு மெல்ல ஊர்ந்து செல்கிறது. நீளமான அதன் உடல் கடல் அலைப் போல வளைந்தும் நெளிந்தும் செல்கிறது. அந்தப் பாம்பு அவளை வசியம் செய்வதைப் போல் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறது. அப்போது அதன் தலையில் ரத்தினக் கல்லைப்போன்ற ஏதோ ஒன்று ஜொலிக்கிறது. அவள் அதைப் பார்த்து மயங்கிய நேரத்தில் திடீரென்று பாம்பு தாவி, வெடுக்கென்று அவள் கையில் தன் நச்சுப்பல்லைப் பதித்தது.
இது உண்மைக் கதையா அல்லது வெறும் கற்பனையா? இதைப் படித்ததும் உங்கள் மனத்திரையில் ஓடும் காட்சிகளெல்லாம் சுத்த பொய். அவை எல்லாம் தவறான கருத்துகள் அடிப்படையிலானவை. அவற்றில் சிலவற்றைக் கவனியுங்கள்.
1. மல்லிகை, சந்தனம், இன்னும் மற்ற வாசனைகள் பாம்புகளைக் கவர்ந்திழுக்கின்றன. தவறு. பூவின் வாசனை பூச்சிகளைக் கவருகிறது, பூச்சிகள் தவளைகளைக் கவருகின்றன, தவளைகள் பாம்புகளைக் கவருகின்றன. பாம்புகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு தவளைகள்தானே!
2. பாம்புகள், தங்கள் உடலை உயர்த்தி மேலும் கீழுமாக அசைத்தே நகருகின்றன. தவறு. அவை பெரிய கற்கள் மீது நகரும்போது பார்வைக்குத்தான் இவ்வாறு தோன்றுகிறது. நிலத்தில் வாழும் நல்லபாம்புகளும் மற்ற பாம்புகளும் பொதுவாக கோடு கிழித்தார்போல் நேராகத்தான் நகருகின்றன. அவை மண்புழுவைப்போல், அதாவது தங்கள் உடலின் முற்பகுதியை நீட்டி அதற்குப்பிறகு பிற்பகுதியை முன்னோக்கி இழுக்கின்றன. அல்லது தரையின் சொரசொரப்பைப் பயன்படுத்தி உடலை ‘S’ வடிவில் வளைத்தும் நெளித்தும் நகர்கின்றன.
3. சில பாம்புகளின் தலையில் விலையுயர்ந்த நாகரத்தினக் கல் இருக்கிறது. தவறு. இது ஒரு கட்டுக்கதை. அதைப்போலவே, இந்தியாவில் பூர்வகாலங்களில் வாழ்ந்த புகழ்பெற்ற மனிதர்களை நல்லபாம்புகள் காப்பாற்றி வந்தன என்பதும் கட்டுக்கதைதான்.
4. நல்லபாம்புகள் இரையை வசியம் செய்கின்றன. தவறு. பொதுவாக, பயந்துபோயிருக்கும் ஒரு பாம்பு வைத்த கண் வாங்காமல் அதன் எதிரியைப் பார்க்கிறது. ஆகவே, பாம்பைப் பார்க்கும் ஒரு நபர் அது வசியம் செய்வதாக நினைக்கலாம். ஆனாலும் இரையைப் பிடிக்க இந்த முறையை அது உபயோகிப்பதில்லை.
5. நல்லபாம்புகள் அப்படியே தாவிவந்து இரையைத் தாக்குகின்றன. தவறு. இரையைத் தாக்கும்போது பாம்பின் முற்பகுதி மட்டுமே இரையை நோக்கிச் செல்கிறது. அதன் உடலில் பெரும்பகுதி தரையில்தான் இருக்கிறது. அப்போதுதான் தரையை உறுதியாக பிடித்துக்கொள்ள முடியும் அல்லவா? அது தாக்குவதற்கு தயாராகும்போது அதிகபட்சமாக அதன் உடலில் மூன்றில் ஒரு பகுதிதான் தரையிலிருந்து மேலெழும்பி நிற்கிறது.
6. நல்லபாம்புகள் உட்பட எல்லா பாம்புகளின் தோலும் வழவழப்பாகவும் எப்போதுமே சில்லென்றும் இருக்கும். தவறு. செதில்கள் நிறைந்த அவற்றின் தோல் காய்ந்தும் தொடுவதற்கு மிருதுவாகவும் இருக்கும். பாம்புகள் குளிர் இரத்த பிராணிகள்; அதாவது வெளியில் இருக்கும் சீதோஷண நிலைக்கு தக்கவாறு அவற்றின் உடல் வெப்பநிலையும் மாறிக்கொள்ளும்.
7. நல்லபாம்புகளுக்கு காது கேட்காது. தவறு. இது அநேகரிடையே நிலவும் ஒரு தவறான கருத்தாகும். தரையில் ஏற்படும் அதிர்வுகளை அவற்றின் உடல் மூலம் கண்டறிவதனால் மட்டுமே பாம்புகள் கேட்கின்றன என அவர்கள் நம்புகின்றனர். ஆனால், சங்கீதம் 58:4, 5, NW-ல் நல்லபாம்புகள் செவிடல்ல என்று பைபிள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை. காற்றில் வரும் சப்தங்களைப் பாம்புகளால் கேட்கமுடியும் என்றும் பாம்பாட்டியின் இசைக்கு ஏற்றவாறு அவை ஆடுகின்றன என்றும் சமீப ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.—நவம்பர் 8, 1993, தேதியிட்ட விழித்தெழு!-வில் பக்கம் 19-ஐயும் காண்க.
[பக்கம் 15-ன் படத்திற்கான நன்றி]
மேலேயுள்ள பாம்பு: Animals/Jim Harter/Dover Publications, Inc.