அவன் சளைக்கவே இல்லை
அந்த நாள் அக்டோபர் 5, 1995. 14 வயது மாட் டாப்பியோவுக்கு மூளைத்தண்டில் வளர்ந்திருந்த கட்டியை நீக்க சர்ஜரி செய்யப்பட்டது. அது புற்றுநோய்க் கட்டி. அன்று நடந்ததோ முதலாவது ஆபரேஷன்தான்; அதன்பின் அடுத்த இரண்டரை வருடங்களில் அவனுக்குப் பல ஆபரேஷன்கள் செய்ய வேண்டும். அந்த சர்ஜரிக்குப் பின்னர் வேதியல் மருந்து சிகிச்சையும் (Chemotherapy) கதிர்வீச்சு சிகிச்சையும் தொடர்ந்தது.
அமெரிக்காவிலுள்ள மிச்சிகனில் மாட் வாழ்ந்து வந்தான். அங்குதான் பள்ளிக்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் சென்றுவந்தான். பள்ளி ஆசிரியர்களிடமும் வகுப்பு மாணவர்களிடமும் தனது நம்பிக்கை பற்றி பல சந்தர்ப்பங்களில் பேசினான். அதைப்போலவே வெளி ஊழியத்தில் மற்றவர்களைச் சந்தித்துப் பேசுவதிலும் பங்கேற்றான். அவனது வாழ்நாளின் கடைசி இரண்டரை வருடத்தில் 18 மாதத்தை ஆஸ்பத்திரியிலேயே கழித்தான்; அந்த சமயத்திலெல்லாம் பலரிடம் பேசி, நூற்றுக்கணக்கான பைபிள் புத்தகங்களை அளித்தான்.
மாட் இனி பிழைக்கவே மாட்டான் என்று தோன்றிய பல கட்டங்கள் வந்தன. ஆனால் ஒவ்வொரு தடவையும் எப்படியோ பிழைத்துக்கொள்வான். ஒரு தடவை, ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில், திடீரென அவனுக்கு வலிப்பு ஏற்பட்டு மூச்சு நின்றுவிட்டது. இதய-நுரையீரல் சார்ந்த மறு உயிர்விப்பு சிகிச்சைமுறை (CPR) அளிக்கப்பட்டதால் பிழைத்துக்கொண்டான். உணர்வு திரும்பியபோது சத்தமாக அழ ஆரம்பித்தான். “நான் ஒரு போராளி! போராடியே தீருவேன்! சளைத்துவிடுபவன் அல்ல!” என்று கத்தினான். மாட்-க்கு கடவுளின்மீது இருந்த நம்பிக்கையால்தான் அவ்வளவு காலம் பிழைத்திருக்க முடிந்தது என்று மக்கள் பேசிக்கொண்டனர்.
மாட் நெடுநாளாக மனதில் வைத்திருந்த தீரா ஆசை ஜனவரி 13, 1996-ல் நிறைவேறியது. அந்த நாளில்தான் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுத்திருந்ததை முழுக்காட்டுதல் மூலம் அவனால் வெளிக்காட்ட முடிந்தது. இன்ஃபெக்ஷன் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அவனை ஒரு தனித் தொட்டியில் முழுக்காட்டினர். சில நாட்கள் கழித்து, இன்னும் பல சர்ஜரிகள் செய்ய வேண்டியிருந்ததால் மறுபடியும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். ஆகஸ்ட் 1997-ல், வாரக்கணக்கில் விடாமல் வாந்தியெடுத்தான். சர்ஜரி செய்த பிறகு அவன் நிலை சற்றே தேறியது.
இவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டபோதிலும், அவனது நகைச்சுவை உணர்வு மாறவே இல்லை. டாக்டர்களிடமும் நர்ஸுகளிடமும் ஜோக் அடித்தான். அவனுடைய நகைச்சுவை உணர்வை பார்த்து அவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். ஒரு டாக்டர் இவ்வாறு கூறினார்: “மாட், நான் மட்டும் உன் நிலையில இருந்திருந்தால், என் பெட் அருகே யாரும் வரமுடியாதபடி கர்ட்டனால் மறைத்து, என் தலையிலிருந்து கால் வரைக்கும் இழுத்து மூடிக்கொண்டு, என்னை யாரும் தொந்தரவு செய்யாதீங்கன்னு சொல்லி எல்லாரையும் இங்கிருந்து துரத்தியிருப்பேன்.”
பிப்ரவரி 1998-ல், ஆஸ்பத்திரியிலிருந்து வீடு திரும்பினான். அது, அவன் கடைசியாக வீட்டிற்கு வந்த டிரிப்புகளில் ஒன்று. அச்சமயத்தில் உயிருடன் இருப்பதே அவனுக்கு பெரிய ஆச்சரியமாய்த் தோன்றியது. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக இவ்வாறு சொன்னான்: “எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு! நாம் ஜெபம் செய்யலாமே.” பிறகு தன் மகிழ்ச்சியை யெகோவாவிடம் ஜெபத்தில் தெரிவித்தான். இரண்டு மாதம் கழித்து ஏப்ரல் 19-ல், புற்றுநோய் அவன் உயிரை பலிவாங்கியது.
முன்பு ஒரு சமயம், அவனிடம் பேட்டி கண்டு அதைப் பதிவு செய்திருந்தார்கள். அதை உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டத்தில் போட்டுக் காட்டினார்கள். அதில் ஒரு பகுதியில் இப்படி ஒரு கேள்வி: “ஓரளவு உடல்நலத்தோடு இருக்கும் எங்களுக்கு, ஊழியத்தைப் பற்றியும் கிறிஸ்தவ கூட்டங்களைப் பற்றியும் என்ன சொல்ல விரும்புகிறாய்?”
அதற்கு மாட் பதிலளித்தான்: “உங்களுக்கு என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. . . . அதனால உங்களால் செய்ய முடிஞ்சத இப்பவே செஞ்சிருங்க. . . . ஆனால் என்ன நடந்தாலும்சரி, யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுக்கிறத மட்டும் ஒருபோதும் நிறுத்திடாதீங்க.”