எய்ட்ஸ்—அதனுடன் மல்லுக்கட்டுதல்
இதுவரை எய்ட்ஸுக்கு நிவாரணம் இல்லை. மருத்துவ விஞ்ஞானம் உடனே கண்டுபிடித்துவிடும் என்பதற்கும் அறிகுறி தென்படவில்லை. புதிய சிகிச்சைமுறைகள் வெறுமனே நோய் முற்றுவதை மட்டும் தடுப்பதால், நோய் வரும் முன் காப்பதே சிறந்த வழி. தடுப்பு முறையைப் பற்றி நாம் கலந்துபேசுவதற்கு முன், எய்ட்ஸ் வைரஸ் (ஹெச்ஐவி) எப்படி ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது; எப்படி பரவுவதில்லை என்று பார்ப்போம்.
நோய் பரவும் முக்கிய நான்கு வழிகள்: (1) ஹெச்ஐவி உள்ள ஒருவருக்கு உபயோகித்த ஊசியை அல்லது சிரஞ்ஜை மற்றவருக்கு உபயோகிக்கும்போது, (2) நோய் தொற்றப்பட்டுள்ள நபரோடு (பெண்ணின் பிறப்புறுப்பு, ஆசனவாய், அல்லது வாய் வழியாக) பாலுறவு கொள்வதால், (3) இரத்தம் செலுத்தும்போதும் இரத்தமடங்கிய பொருட்களாலும். வளர்ந்த நாடுகளில் இரத்தத்தில் ஹெச்ஐவி உள்ளதா என்று பரிசோதிக்கிறார்கள், அதனால் இரத்தத்தின் மூலம் ஹெச்ஐவி பரவும் அபாயம் அங்கு குறைந்திருக்கிறது. (4) ஹெச்ஐவி தொற்றியிருக்கும் தாய் குழந்தையைப் பெற்றெடுத்தாலோ, பாலூட்டினாலோ குழந்தைக்கும் வைரஸ் பரவும்.
எய்ட்ஸ் எப்படியெல்லாம் பரவுவதில்லை என்பதற்கு யூ.எஸ். நோய் கட்டுப்பாடு & தடுப்பு மையங்கள் (U.S. Centers for Disease Control and Prevention [CDC]) பின்வரும் அறிவியல் ஆதாரங்களை முன்வைக்கின்றன: (1) ஜலதோஷம், ஜுரம் போல் பரவாது. (2) எய்ட்ஸ் உள்ள ஒருவரின் பக்கத்தில் உட்கார்ந்தாலோ, தொட்டாலோ, கட்டிப்பிடித்தாலோ பரவாது. (3) நோயுள்ள நபர் தொட்ட, தயாரித்த, பரிமாறின உணவை சாப்பிடுவதன் மூலம் பரவாது. (4) ஹெச்ஐவி உள்ள நபர் பயன்படுத்திய கழிவறை, போன், துணி, சாப்பிட்ட அல்லது குடித்த பாத்திரங்கள் மூலம் பரவாது. அதோடு இந்த வைரஸ், கொசுக்கள் மற்ற பூச்சிகள் மூலம் பரவுவதில்லை என்கிறது CDC.
முக்கிய நோய் தடுப்பு முறைகள்
எய்ட்ஸ் நோயாளியின் இரத்தத்தில் இந்தக் கிருமிகள் நைசாக மறைந்திருக்கும். இந்நோயாளிக்கு போட்ட ஊசி அல்லது சிரஞ்ஜில் கொஞ்சம் இரத்தம் வைரஸோடு ஒட்டிக்கொண்டிருக்கும். அதே ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தும்போது அவரை உடனே வைரஸ் தொற்றிக்கொள்ளும். ஊசியோ, சிரஞ்ஜோ சுத்தமாக இல்லை என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால், டாக்டரிடமோ நர்ஸிடமோ கேட்க பயப்படாதீர்கள். அதைத் தெரிந்துகொள்ள உங்களுக்கு உரிமையும் உண்டு. ஏனென்றால் உங்கள் உயிர் அபாயத்தில் இருக்கிறது.
இந்நோய் தொற்றியுள்ள ஆணின் விந்துவிலும், பெண்ணின் பிறப்புறுப்பு பாதையிலிருந்து வெளிவரும் திரவத்திலும் எய்ட்ஸ் வைரஸ் இருக்கும். இவ்வாறு பரவுவதை தடுக்க CDC செய்யும் பரிந்துரை: “உறவு கொள்ளாமல் இருந்துவிட்டால், ஒரு தொல்லையும் இல்லை. அப்படியே நீங்கள் உடலுறவு கொள்ள நினைத்தால், திருமணம் போன்ற ஆயிரங்காலத்து உறவில், பரஸ்பர நம்பிக்கை இழையோடும் பந்தத்தில், இந்நோய் இல்லாத துணைவரோடு மாத்திரம் உறவுகொள்ளுங்கள்.”
உங்களுக்கு இந்நோயிலிருந்து பாதுகாப்பு வேண்டுமென்றால் ‘பரஸ்பர நம்பிக்கை இழையோடும் பந்தம்’ அவசியம் என்பதை கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் நம்பிக்கை துரோகம் செய்யாமல் இருக்கலாம். ஆனால் உங்களுடைய துணைவர் துரோகம் செய்துவிட்டால் உங்களுக்குத்தான் அபாயம். ஒருசில சமுதாயங்களில் தாம்பத்தியத்திலும், பொருளாதாரத்திலும் ஆண்கள் வைப்பதே சட்டம். இந்தச் சமுதாயங்களில் வாழும் பெண்களின் நிலை பரிதாபகரமானது. ஒருசில நாடுகளில் பெண்கள் செக்ஸை பற்றி ஆண்களிடத்தில் வாயே திறக்கமுடியாது. அப்படியிருக்கும்போது பாதுகாப்பான உடலுறவைப் பற்றி கலந்து பேசுவது முடியாத காரியம்.
ஆனாலும், எல்லாப் பெண்களும் வாயில்லா பூச்சிகள் அல்ல. சுயமாக சம்பாதிக்கும் பெண்கள் நோயுற்ற கணவனிடம் உடலுறவு கொள்ள மறுக்கிறார்கள். இவ்வாறு மறுப்பதால் மற்றவர்களைப்போல் இவர்கள் அடி, உதை வாங்குவதில்லை என்ற விவரத்தை மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வரும் ஒரு சுற்றாய்வு தெரிவிக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸியில், ஆண்கள் ஆணுறையைப் பயன்படுத்தினால்தான் உறவு கொள்வோம் என்றார்களாம் ஒருசில பெண்கள். ஹெச்ஐவியையும், வேறுசில பால்வினை நோய்களையும் ஆணுறைகள் தடுக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும். எப்போதும் பயன்படுத்த வேண்டும்.
எப்போது டெஸ்ட் செய்ய?
முதல் கட்டுரையில் கேரனை பற்றி பார்த்தோம். அவரால் தன்னைப் பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. ஏனென்றால் திருமணம் ஆவதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே அவளுடைய கணவனுக்கு ஹெச்ஐவி தொற்றியிருந்தது. அவர்களுக்குத் திருமணமான சமயத்தில்தான் எய்ட்ஸ் கண்டுபிடிப்பும் ஹெச்ஐவி டெஸ்ட் செய்யும் முறையும் ஆரம்ப நிலையில் இருந்தன. இப்போதோ சில நாடுகளில் வழக்கமாக உடல் பரிசோதனை செய்வதுபோல் ஹெச்ஐவி டெஸ்டும் செய்துகொள்கிறார்கள். ஆகவே ஹெச்ஐவி இருக்குமோ என்று உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், நீங்கள் காதல் சந்திப்புகளை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தயங்காமல் டெஸ்ட் செய்வதுதான் புத்திசாலித்தனம். கேரன் சொல்லும் அறிவுரை: “உங்கள் வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுக்கும்போது புத்திசாலித்தனமா இருங்க. தப்பா தேர்ந்தெடுத்துட்டா காலமெல்லாம் கண்ணீர் சிந்தவேண்டும். உயிரையே இழக்கவேண்டியிருக்கும்.”
டெஸ்ட் செய்வது, ஒரு பாவமும் அறியாத துணைவரை பாதுகாக்க உதவும். ஹெச்ஐவி வைரஸ் தொற்றிய பிறகு டெஸ்ட் செய்தாலும் ஆறு மாதங்கள் வரை வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. எனவே பலமுறை டெஸ்ட்கள் செய்யவேண்டி இருக்கும். துரோகம் செய்த துணையோடு உறவுகொண்டால் (அவரை மன்னித்துவிட்டதாக வைத்துக்கொள்வோம்) ஆணுறை உபயோகிப்பது பாதுகாப்பானது.
கல்வியறிவு எப்படி உதவுகிறது?
எய்ட்ஸ் நோய் வருவதற்கு எத்தனையோ காலங்களுக்கு முன் பைபிள் எழுதி முடிக்கப்பட்டது. சரி, எய்ட்ஸுக்கும் பைபிளுக்கும் என்ன தொடர்பு? பதில்: பைபிள் கொள்கைகளை பின்பற்றினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம். உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் திருமண பந்தத்திற்கு வெளியே ‘பலான’ உறவை வைத்துக்கொள்ளக்கூடாது, ஒருவனுக்கு ஒருத்தி என்று கற்போடு வாழவேண்டும் என்பது ஒரு கொள்கை. இதுபோன்ற பைபிள் கொள்கைகளைப் பின்பற்றுவோரை மாத்திரம் கல்யாணம் செய்ய வேண்டும் என்று பைபிள் வலியுறுத்துகிறது. (1 கொரிந்தியர் 7:39; எபிரெயர் 13:4) இரத்தம் ஏற்றுக்கொள்ளக்கூடாது, உடலை நாசம் செய்யும் பொருட்களை உட்கொள்ளக்கூடாது போன்றவையும் பைபிள் கொள்கைகள். எனவே இத்தகைய கொள்கைகளை கடைப்பிடித்தால் நிச்சயம் எய்ட்ஸ் நம்மை அணுகாது.—அப்போஸ்தலர் 15:20; 2 கொரிந்தியர் 7:1.
ஹெச்ஐவி உள்ள நபர்களோடு பழகும்போது வரக்கூடிய அபாயங்களைத் தெரிந்துகொள்வது நல்லது. எய்ட்ஸ் பற்றிய அறிவு மக்களுக்கு தேவை. அது இருந்தால் நோயை எப்படி தடுக்கவேண்டும் என்பது அவர்களுக்கு தெரியும்.
எய்ட்ஸ் தடுப்பு கூட்டமைப்பு (The AIDS Action League) இவ்வாறு சொல்கிறது: “கூடுமானவரை எய்ட்ஸை தடுக்க முடியும். எய்ட்ஸை குணமாக்கும் மருந்து கண்டுபிடிக்கும்வரை அதைப் பற்றி கல்வி புகட்டுவதே மிக சிறந்ததும் [சமுதாய அளவில்] தற்போது எடுக்க முடிந்த ஒரே தடுப்பு நடவடிக்கையும் ஆகும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இதைப்பற்றி கணவனும் மனைவியும் ஒளிவுமறைவின்றி பேசவேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கும் எய்ட்ஸ் பற்றி சொல்ல வேண்டும்.
தற்போதுள்ள மருத்துவ முறைகள் யாவை?
பொதுவாகவே, ஹெச்ஐவி வைரஸ் தாக்கி, சுமார் ஆறு முதல் பத்து வருடங்கள் வரை நோய் அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. இந்த இடைப்பட்ட வருடங்களில் உடலுக்குள் ஒரு பெரிய மல்யுத்தமே நடந்துகொண்டிருக்கும். இந்த வைரஸ்கள் மளமளவென்று பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியை கொன்றுவிடும். முதலில் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி இந்த வைரஸை எதிர்த்து போராடும். ஆனால், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான புதிய ஹெச்ஐவி வைரஸ்கள் உற்பத்தியானால், அதால் என்னதான் செய்ய முடியும்? கடைசியில் தோல்வியடைந்து, சுருண்டுவிடுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். AZT (azidothymidine), DDI, DDC (dideoxycytidine) போன்ற வாயில் நுழையாத பெயர்களோடு மருந்துகள் வந்துள்ளன. இந்த மருந்துகளால் உடனடி நிவாரணம் கிடைக்கும், ஏன், நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்றெல்லாம் ஒருசிலர் நம்பினர். பாவம் அவர்கள் நம்பிக்கை வீண்போனது. கொஞ்ச நாள் ஆனதும் இந்த மருந்துகளின் வீரியம் குறைந்துவிடுவதோடு, ஒருசிலருக்கு பயங்கர பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. இரத்த அணுக்கள் குறைதல், இரத்தம் உறைவதில் கோளாறுகள், கைகால் நரம்பு பாதிக்கப்படுதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
இப்போது வந்திருக்கும் புதிய வகை மருந்துகள்: புரோட்டீன் நொதி தடுப்பான்கள் (protease inhibitors). இதனுடன் மற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை மூன்றுவிதத்தில் கலந்துகொடுக்கிறார்கள். இந்த மூவகை மருந்து (triple therapy) வைரஸ்களை கொல்வதில்லை. ஆனால் உடலில் அவை பெருகுவதை ஓரளவுக்கு தடுப்பதை, அல்லது பெருகுவதை முற்றிலுமாக நிறுத்திவிடுவதை பரிசோதனைகள் காட்டுகின்றன.
இந்த மூவகை மருந்தால் நோயாளிகள் உடல் நலம் அபாரமாக முன்னேறியுள்ளது. ஆனால், ஹெச்ஐவி பாதித்திருந்தால், அதன் அறிகுறிகள் தெரியும் முன்பே இந்த மருந்தை கொடுத்தால் இன்னும் நல்ல பலன் இருக்கும் என்று நிபுணர்கள் நினைக்கிறார்கள். இவ்வாறு ஆரம்பக்கட்டத்திலேயே மருந்து கொடுத்தால், ஹெச்ஐவி வைரஸ்கள் எக்கச்சக்கமாக பெருகி, முற்றி, எய்ட்ஸாக மாறும் முன்னே நிறுத்திவிடலாம். இப்புதிய சிகிச்சை, கிருமிகள் பரவுவதை எந்தளவுக்கு தடுக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த மூவகை மருத்துவ சிகிச்சைக்கு அதிகம் செலவாகும். இந்த மூன்று வைரஸ் எதிர்ப்பு (antiviral) மருந்துகளுக்கும், லேப் டெஸ்டுகளுக்கும் ஆகும் செலவு வருடத்திற்கு சுமார் ரூ. 4,80,000-ஐ எட்டிவிடும். ஒருபுறம் பணச்செலவு, இன்னொரு புறம் இந்த மருந்தை பிரிட்ஜில் வைத்து, அடிக்கடி எடுத்து சாப்பிட வேண்டிய சிரமம். பொதுவாக, இந்த மருந்தை சாப்பிடும் ஒருவர், சில மாத்திரைகளை ஒரு நாளுக்கு இரண்டு வேளையும், சில மாத்திரைகளை மூன்று வேளையும் சாப்பிடுவார். ஒருசில மருந்துகளை வெறும் வயிற்றிலும், இன்னும் சில மருந்துகளை சாப்பாட்டுக்குப் பின்பும் உட்கொள்ளவேண்டும். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு வேறுசில தொற்றுவியாதிகளும் ஒட்டிக்கொள்வதால் அவற்றிற்காகவும் மருந்துகள் சாப்பிட வேண்டும். அந்த மருந்துகளோடு இந்த மூவகை மருந்தையும் சேர்த்துக்கொடுப்பதால் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆனால் இந்த மூவகை மருந்தை நோயாளி நிறுத்திவிட்டால் வைரஸ்கள் ராக்கெட் வேகத்தில் பெருகிவிடும். ஏனென்றால் மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே ஒருசில வைரஸ்கள் நைஸாக தப்பியிருந்தால், இப்போது அவை மருந்துக்கு பழகிவிட்டிருக்கும். அதேசமயத்தில் மருந்துகளுக்கு கொஞ்சமும் பயப்படாத வீரியம் மிக்க ஹெச்ஐவி வைரஸ்களும் உண்டு. இவற்றிற்கு வைத்தியம் பார்ப்பது மகா கஷ்டம். இந்தச் சூப்பர் வைரஸ்கள் மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும். எனவேதான் இந்த மருந்தை நிறுத்துவதைக் குறித்து டாக்டர்கள் கவலைப்படுகிறார்கள்.
தடுப்பு மருந்துகளாவது ஜெயிக்குமா?
நல்ல பாதுகாப்பான, வீரியமிக்க தடுப்பு மருந்தால் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் எய்ட்ஸ் அரக்கனை ஜெயித்துவிடலாம் என்று ஒருசில எய்ட்ஸ் ஆராய்ச்சியாளர்கள் நினைக்கிறார்கள். மஞ்சள் காமாலை, மணல்வாரி அம்மை, பொன்னுக்கு வீங்கி, ஜெர்மன் தட்டம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்க நல்ல தடுப்பு மருந்துகள் உள்ளன. இத்தகைய தடுப்பு மருந்துகள் பலவீனமான வைரஸ்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. சக்தியற்ற நோஞ்சான் வைரஸ்களை தடுப்பு மருந்தாக உடலில் செலுத்தும்போது, பொதுவாகவே நம் உடம்பின் நோய் எதிர்ப்பு சக்தி அவற்றை அழித்துவிடும். அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் அதிகரிக்கும். அதனால் அத்துமீறி நுழையும் மற்ற வைரஸ்களும் அடிப்பட்டு சாகும்.
சமீபத்தில் குரங்குகளை வைத்து இரண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின்படி, பலவீனமான வைரஸ்கூட அபாயகரமாக மாறலாம் என்பது தெரியவந்திருக்கிறது. வேறுவிதமாக சொன்னால், வேலியே பயிரை மேய்ந்த கதைப்போல், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வேண்டிய மருந்தே அந்த நோயை உண்டாக்கிவிட்டது.
தடுப்பு மருந்து கண்டுபிடிக்க எடுத்த முயற்சி வெறும் ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் தந்துள்ளது. சோதனையின் அடிப்படையில் எத்தனையோ மருந்துகளை எப்படியெல்லாமோ கொடுத்துப்பார்த்தும் இந்த ஹெச்ஐவி கொஞ்சம்கூட மசியவில்லை. ஆனால் அம்மருந்துகள் சாதாரண வைரஸ்களை கண்டிப்பாக அழித்திருக்கும். அதோடு இந்த ஹெச்ஐவி வைரஸ்கள் அடிக்கடி புதிய புதிய அவதாரங்களை எடுக்கின்றன. அதனால் மருந்துகளால் ஒன்றும் செய்யமுடிவதில்லை. (இப்போது உலகம் முழுவதும் குறைந்தது 10 வகையான ஹெச்ஐவி இருக்கின்றன.) போதாக்குறைக்கு தடுப்பு மருந்தால் பலப்படவேண்டிய நோய் எதிர்ப்பு செல்களையே இந்த வைரஸ் நேரடியாக தாக்கிவிடுகிறது.
பணப் பிரச்சினையும் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டையாக உள்ளது. ஆராய்ச்சிக்காக “தனியார் துறையின் முதலீடு மிகவும் குறைவாக உள்ளது” என்று குறிப்பிடுகிறது வாஷிங்டனில் தலைமையகத்தைக் கொண்ட சர்வதேச எய்ட்ஸ் தடுப்பு மருந்து என்டர்பிரைஸ். ஏனென்றால் இலாபம் கிடைக்காது என்று தனியார் துறை அஞ்சுகிறது. இன்றைய நிலவரப்படி தடுப்பு மருந்துகளை தயாரித்தால் அவற்றை பெரும்பாலும் பின்தங்கிய நாடுகளில்தான் விற்கமுடியும். எனவே எதிர்பார்த்த இலாபம் கிடைக்காதே!
இதுபோல் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், வெற்றிகரமான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல வழிகளில் முயன்று வருகிறார்கள். இன்றைய தேதி வரை அப்படிப்பட்ட தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவில்லை. விரைவில் கண்டுபிடிப்பார்களா என்பதும் சந்தேகம். அப்படியே நல்ல தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அதைவிட கஷ்டமான, விலையுயர்ந்த, ஆபத்தாகிவிடக்கூடிய ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதர்களிடத்தில் அதை பரிசோதித்துப் பார்ப்பது.
[பக்கம் 5-ன் பெட்டி]
யாருக்கெல்லாம் ஹெச்ஐவி உள்ளது?
ஒவ்வொருநாளும் உலகம் முழுவதும் சுமார் 16,000 பேருக்கு ஹெச்ஐவி பரவுகிறது. இதில் 90%-க்கும் அதிகமான மக்கள் வளரும் நாடுகளில் உள்ளவர்கள் என சொல்லப்படுகிறது. இதில் பத்தில் ஒன்று, 15 வயதுக்கும் குறைந்த பிள்ளை. பாதிக்கப்படும் மற்றவர்கள் எல்லாரும் வளர்ந்த பெரியவர்கள். இவர்களில் 40%-க்கும் அதிகமானோர் பெண்களே. அதிலும் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களே பாதிக்கும்மேல்.—உலக சுகாதார நிறுவனமும் இணை ஐக்கிய நாடுகளின் ஹெச்ஐவி/எய்ட்ஸ் திட்டம்.
[பக்கம் 7-ன் பெட்டி]
ஒருவருக்கு இந்நோய் உள்ளதென்று எப்படி தெரியும்?
ஒருவரை பார்த்த மாத்திரத்தில் இந்நோய் இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியாது. நோய் அறிகுறிகள் வெளியில் தலைகாட்டாத ஹெச்ஐவி வைரஸ் தொற்றியிருக்கும் நபர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக தெரியலாம். ஆனாலும் அவர்களிடமிருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பிருக்கிறது. ஒருவர் தனக்கு ஹெச்ஐவி இல்லை என்று சொன்னால் நம்பிவிடலாமா? கூடாது. ஹெச்ஐவி தொற்றியிருக்கும் நிறையப்பேருக்கு தங்களுக்கு அப்படி ஒரு நோய் இருப்பதே தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் அதை பரம ரகசியமாக வைத்திருப்பர் அல்லது இல்லை என்று பொய் சொல்வர். அமெரிக்காவில் ஒரு சுற்றாய்வு எடுக்கப்பட்டது. தங்களுக்கு ஹெச்ஐவி இருக்கிறது என்ற உண்மையை 10 பேரில் 4 பேர் தங்கள் துணைவர்களிடம் மறைத்துவிட்டனர் என்பதை அந்தச் சுற்றாய்வு காட்டியது.
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
ஹெச்ஐவிக்கும் எய்ட்ஸுக்கும் உள்ள தொடர்பு
ஹெச்ஐவி என்பதற்கு ஆங்கிலத்தில் “ஹ்யூமன் இம்யூனோடெஃபிஷியன்ஸி வைரஸ்.” அதை தமிழில் சொன்னால் மனித நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும் நுண்ணுயிரி. இது, உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மெதுமெதுவாக அழித்துவிடுகிறது. எய்ட்ஸ் என்பதன் ஆங்கில விரிவாக்கம் “அக்கொயர்டு இம்மினோடெஃபிஷியன்ஸி சின்ட்ரோம்.” அதாவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை செயலற்றதாய் மாற்றும் நோய் அறிகுறிகள். உயிருக்கு உலைவைக்கும் ஹெச்ஐவியின் இறுதிக்கட்டமே இந்த எய்ட்ஸ். இதன் பெயர், ஹெச்ஐவி எவ்வாறு உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பயங்கரமாகச் சீரழித்துவிட்டிருக்கிறது என்பதை விவரிக்கிறது. அதனால்தான் நோயாளியை எல்லாவிதமான தொற்றுநோய்களும் பிடித்து வாட்டுகின்றன.
[படத்திற்கான நன்றி]
CDC, Atlanta, Ga.
[பக்கம் 7-ன் படம்]
கல்யாணத்திற்கு முன்பே ஹெச்ஐவி டெஸ்ட் செய்வது புத்திசாலித்தனம்