எமது வாசகரிடமிருந்து
அறுவை சிகிச்சை “கத்தியின்றி அறுவை சிகிச்சை” (பிப்ரவரி 22, 1998) என்ற கட்டுரைக்காக நானும் என் கணவரும் இருதயப்பூர்வமான நன்றியை யெகோவாவுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். எனது கணவருக்கு, தமனி-சிரையில் இயல்பற்ற வளர்ச்சியின் காரணமாக, மூளையில் ஆபரேஷன் செய்வதற்கு திட்டமிடப்பட்டது. இந்தக் கட்டுரை எங்களுடைய ஜெபங்களுக்குக் கிடைத்த பதிலைப் போலவே இருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முறைப்படியே கத்தியின்றி ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது என் கணவர் நன்றாக இருக்கிறார்.
எல். ஜெ., ஐக்கிய மாகாணங்கள்
ரஷ்ய பத்திரிகைகள் “ரஷ்ய பத்திரிகைகள் யெகோவாவின் சாட்சிகளைப் புகழ்கின்றன” (பிப்ரவரி 22, 1998) என்ற கட்டுரைக்காக மிக்க நன்றி. உங்களுடைய கட்டுரைகளை படிக்கும்போது நான் ஆனந்தக்கண்ணீர் விட்டது இது முதல் தடவையல்ல என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்ளுகிறேன். சோல்னக்நொயியில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் புதிய கிளை அலுவலகத்தைப்போல முழு உலகமும் அழகிய பூங்காவனமாக ஒரு நாள் மாறும் என அறிந்துகொள்வது சந்தோஷமாக இருக்கிறது.
ஐ. கே. எஸ். எ., பிரேஸில்
அப்பா மனம் மாறுகிறார் “அவரது உள்ளம் உருகியது” (பிப்ரவரி 22, 1998) என்ற கட்டுரை என்னுடைய சொந்தக் குடும்பத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது. எனது கணவரும்கூட விசுவாசத்தில் இல்லாதவர்தான். என்றைக்காவது ஒருநாள், என் கணவருடைய உள்ளமும் மாறும் என்ற நம்பிக்கையை இக்கட்டுரை எனக்கு கொடுத்தது.
எஸ். எம்., ஐக்கிய மாகாணங்கள்
நாசிக்களை எதிர்க்கும் குடும்பம் “தேவனுக்கு என் குடும்பத்தார் காட்டிய உண்மைத்தன்மையே எனக்கு தூண்டுகோல்” (பிப்ரவரி 22, 1998) என்ற கட்டுரையில் ஹார்ஸ்ட் ஹென்ஷலுடைய அனுபவம் மிகவும் அருமையாயிருந்தது. இப்படிப்பட்ட அனுபவத்தை நான் இதுவரை வாசித்ததேயில்லை. வார்த்தைகளை கண்ணீர் மறைத்ததால் நிறுத்தி நிறுத்தி வாசிக்கவேண்டியதாயிற்று. ஹார்ஸ்டின் அப்பா பிரச்சினைகளின் மத்தியிலும் உண்மையுடன் இருந்தார். அவருடைய முன்மாதிரியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.
எ. கே., ஐக்கிய மாகாணங்கள்
ஹார்ஸ்ட் ஹென்ஷலின் அனுபவம் என் இருதயத்தையே தொட்டுவிட்டது. யெகோவாவுக்கான அவருடைய அன்பும் தைரியமும் என்னை உற்சாகப்படுத்தியது. அவர் ஜெயிலில் இருந்தபோது அவரை பலப்படுத்தின, “உடல் கொல்வோருக்கஞ்சாதே” போன்ற வார்த்தைகளை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
ஜெ. வி. எஸ்., பிரேஸில்
எனக்கு பத்து வயசு. “ஹிட்லர் வாழ்க”ன்னு சொல்லாம இருந்தா கொல்லப்படுவாங்கன்னு யெகோவாவின் சாட்சிகளுக்கு நல்லாவே தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாட்சிகள் எப்படி வாழ்ந்தாங்கன்னு தெரிஞ்சுக்கிறதுல, உற்சாகமா இருக்கு. ஆனா அவுங்க ரொம்ப தைரியமா இருந்து “ஹிட்லர் வாழ்க”ன்னு சொல்லவேயில்ல.
ஆர். பி., ஐக்கிய மாகாணங்கள்
இனக் கர்வம் “இளைஞர் கேட்கின்றனர் . . . இனத்தைப் பற்றி கர்வம் கொள்ளலாமா?” (பிப்ரவரி 22, 1998) என்ற கட்டுரையை வாசித்து பெருமிதமடைந்தேன். “நீ எந்த ஜாதி” என்று பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். எனது குடும்ப வம்சாவளியை கண்டுபிடிக்க முடியாததால் நகைச்சுவையாக “கலப்பினம்” என்று கூறுவேன். ஒரு பயணக் கண்காணி என்னிடம், “நீ யார் என்று யாராவது உன்னை கேட்டால், வெறுமனே, நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என்று சொல்லச்சொன்னார். எல்லா இனங்களையும் சமமாக பாவித்து நடத்தும் ஒரு அமைப்பில் இருப்பதைக்குறித்து நான் பெருமைப்படுகிறேன்.
டி. எச்., ஐக்கிய மாகாணங்கள்
என் வயது 14. உங்களுடைய கட்டுரைக்கு நன்றி. என்னுடைய இனப்பெருமை இனவெறியாக மாறிவிட்டது. யெகோவாவுடைய பார்வையில் எல்லாரும் சமம்தான் என்பதைப் புரிந்துகொள்ள இக்கட்டுரை உதவியது.
ஐ. பி., இத்தாலி
நான் சிறுபெண்ணாக இருந்தபோது, எனது வகுப்புத்தோழிகள் தங்களது இனத்தைக் குறித்தும் நிறத்தைக் குறித்தும் பெருமையடித்துக்கொண்டு, தங்களுடையது ஸ்பானிய இரத்தம் என்பதாகக் கூறிக்கொள்வார்கள். நானோ சிறுபான்மையான இனத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லுவார்கள். இதன் காரணமாக எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு, சுயமரியாதையையும் இழக்க ஆரம்பித்தேன். “சீ, ஏன்தான் நான் இந்த நிறத்தில இருக்கேனோ, எனக்கு சுத்தமா பிடிக்கல!” என்றெல்லாம் சில சமயங்களில் உணர்ந்திருக்கிறேன். இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகள், என் சுயமரியாதையை நான் மீண்டும் பெற உதவின. மேலும் யெகோவா எனக்கு கொடுத்துள்ளவற்றில் மனநிறைவடையவும் உதவின.
எ. ஜி., பிலிப்பீன்ஸ்
பணக்கார நாடுகளில் பிறந்தவர்கள் எல்லாரும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவர்களே என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. ஒன்றே குலம் அது மனித குலம் என்பதைக் கண்டுகொள்ள உங்களுடைய கட்டுரை எனக்கு உதவியது.
எல். ஜி., பிரேஸில்