ஒரேவித வேலையால் ஒரே வலியா?—படிக்கத் தவறாதீர்கள்
பிரேஸிலிலிருந்து விழித்தெழு! நிருபர்
பிரேஸிலில் வாழும் 24 வயது பெயின்டர் மார்செலூ. வழக்கம்போல் ஒருநாள் வாட்ச்சை கட்ட எடுத்தார். ஆனால் அவரால் ஸ்ட்ராப்பை போடவே முடியவில்லை. மணிக்கட்டு புஸ்ஸென்று வீங்கியிருந்ததை அப்போதுதான் கவனித்தார்.
கொஞ்ச நாளிலிலேயே சீப்பையும் டூத்பிரஷையும்கூட பிடிக்க முடியாதளவு கையில் ஒரே வலி. ஆகவே டாக்டரிடம் சென்றார். இரண்டு வருடங்களாகவே சுவர்களை சுரண்டுவதும், லப்பம் தேய்ப்பதும், பெயின்ட் அடிப்பதுமே அவரது வாழ்க்கையாக இருந்ததை அறிந்த டாக்டர் பரிசோதித்தப்பின் “உங்க வேலையாலதான் இந்த வலி. உங்களுக்கு வந்திருக்கிறது ரெப்படிட்டிவ் ஸ்ட்ரெயின் இன்ஜுரி [RSI]” என்றார்.
இதென்ன புது வியாதி?
மார்செலூவுக்கு வந்த அதே பிரச்சினை ஃபாக்டரிகளிலும் ஆபீஸுகளிலும் வேலைபார்க்கும் அநேகருக்கும் இருக்கிறது. RSI அவ்வளவு வேகமாக பரவிவருவதால், “இந்நூற்றாண்டின் இறுதியில், வேலை சம்பந்தப்பட்ட உடல் கோளாறுகளின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பதாக” ஃபோல்யா டி ச. போலோ என்ற செய்தித்தாள் சொல்கிறது. அதனால்தான் இதுவும் ஒரு புது வியாதி என அநேகர் நினைக்கின்றனர் போலும்! அவர்கள் நினைப்பது சரியா?
ஐரோப்பாவில், 18-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மார்செலூ ஒருவேளை வாழ்ந்திருந்தாலும் டாக்டர் அவருக்கு என்ன கோளாறு என கண்டுபிடித்திருப்பார். இந்நோய்க்கு RSI என்னும் பெயர் அப்போதில்லை என்பதென்னவோ உண்மைதான். இத்தாலிய டாக்டரான பேர்னார்டினோ ராமாட்ஸினி, இந்தப் பிரச்சினையை மணிக்கட்டு டென்னோஸினோவிடிஸ் (தசைநாண்கள் மற்றும் சுற்றியுள்ள உறைகளின் வீக்கம்) என்றார். “நகல் எடுப்பவர்களுக்கும் பத்திரம் எழுதுபவர்களுக்கும்” வரும் கோளாறு என்றும் சொன்னார். இவர்கள் எப்போது பார்த்தாலும் பேனாவும் கையுமாக ஒரேவித வேலை செய்ததால் அந்த 18-ஆம் நூற்றாண்டு RSI-யால் பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே நூற்றாண்டின் இறுதிக்குள் அக்கோளாறால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்தது. எப்படி?
தேய்பிறையான RSI வளர்பிறையாகிறது
டாக்டர் ராமாட்ஸினி காலத்து குமாஸ்தாக்கள் தொழில் யுகத்திற்கு முன்பு வாழ்ந்தவர்கள். அப்போதெல்லாம் ஆட்கள் இயந்திரங்களின்றி தொடர்ந்து அதிக மணிநேரங்கள் வேலைபார்த்தார்கள். ஒரேவித வேலையை மறுபடியும் மறுபடியும் செய்யவேண்டியிருந்தது, இடைவிடாமல் கவனம் செலுத்தவேண்டியும் இருந்தது. இதனால்தான் RSI போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டனர்.
ஆனாலும் 18-ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் ஐரோப்பா தொழில் யுகத்திற்குள் காலடி எடுத்துவைத்தது. மனிதனின் இடத்தை இயந்திரங்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அதுமுதல் மனிதனின் மேற்பார்வையில் இயந்திரங்களே ஒரேவித வேலையை திரும்பத் திரும்ப செய்தன. இந்த மாற்றத்தால் பணியாளர்களிடையே RSI குறைந்திருக்கலாம் என அதை ஆராய்ந்த ஒரு டாக்டர் சொல்கிறார்.
தொழில் யுகத்தின்போது வேலை சம்பந்தமான விபத்துக்களும் வியாதிகளும் அதிகரித்தன என்பதை மறுக்க முடியாதுதான். இருந்தாலும் அச்சமயத்தில் எழுதப்பட்ட மருத்துவ புத்தகங்களின்படி குறிப்பிட்ட தொகுதியினர்தான் RSI-யால் பாதிக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, 19-ஆம் நூற்றாண்டு பியானோ வித்துவான்களுக்கும் வயலின் வித்துவான்களுக்கும் புஜங்களில் தசை நாண் அழற்சி (tendinitis) ஏற்பட்டது. டென்னிஸ் வீரர்களுக்கு டென்னிஸ் எல்போ, அதாவது முழங்கையின் தசை நாண்களில் வீக்கம் ஏற்பட்டது.
என்றாலும் நம் நூற்றாண்டில் உத்தியோகம் சம்பந்தப்பட்ட RSI மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. ஏன்? ஒரு காரணம், மனிதன் என்ன செய்யவேண்டும், எவ்வளவு வேகமாக செய்யவேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிப்பது இன்றுள்ள ஆற்றல்மிக்க நவீன இயந்திரங்களே. இதனால் வேலையாட்களிடையே அதிருப்தியும் உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. அவர்கள் நீண்ட நேரம் இடைவிடாத கவனத்தோடு ஒரேவிதமான வேலை செய்யவேண்டியுள்ளது. அதன் விளைவென்ன? ஐக்கிய மாகாணங்களிலும் பிரேஸிலிலும் வேலைசம்பந்தப்பட்ட உடல்கோளாறுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை RSI-யால் ஏற்படுகின்றன. மற்ற பல இடங்களிலும் இதே நிலைமைதான்.
காரணங்களும் உத்தியோகங்களும்
அநேக உத்தியோகங்களில், ஒரே வேலையை வேகவேகமாக திரும்பத் திரும்ப செய்துகொண்டிருக்க வேண்டும். இதுவே பெரும்பாலும் RSI ஏற்படக் காரணம். வேலை உடல்நிலையை பாதித்தாலும் அதை விட்டுவிட முடியாத நிர்ப்பந்தத்தில் தொழிலாளர்கள் இருப்பது வருந்தத்தக்க விஷயம். பிரேஸிலில் ஆட்டோமொபைல் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்த பெண்மணிக்கு ஒரு நிமிடத்திற்குள் ஒரு ரேடியோவை அசெம்பிள் செய்யும் வேலை. இவரது பரிதாப நிலை அநேக தொழிலாளர்களுக்குப் புரியும். ஃபோல்யா டி ச. போலோ செய்தித்தாளின்படி, இன்னொரு பெண்மணிக்கு ஒருமணிநேரத்தில் 63 சாதனங்களை ரப்பர் சுத்தியலால் அடித்து சோதிக்கும் வேலை. இருவருக்குமே புஜங்களில் வலி ஏற்பட ஆரம்பித்தது. பிறகு என்ன, RSI-யினால் ஏற்பட்ட ஊனத்தால் வேலையைப் பறிகொடுத்தனர்.
(கனமான மூட்டைகளைத் தூக்குவது போன்ற வேலைகளால்) தசைகளையும் மூட்டுகளையும் அளவுக்கதிகமாய் ஸ்ட்ரெயின் செய்வதும், ஒரே நிலையில் நின்றோ, குனிந்தோ, வளைந்தோ சிரமத்தோடு வேலை செய்வதும் (தசைகளை சிரமப்படுத்தி ஒரே நிலையில் வேலை செய்வதும்) RSI வர காரணமாகும். முக்கியமாய் அசௌகரியமான நிலையில் வேலைபார்க்கும்போது பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
முக்கியமாக உலோகவியல் நிபுணர்கள், வங்கி குமாஸ்தாக்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், டெலிபோன் ஆப்ரேட்டர்கள், சூப்பர்மார்க்கெட் காஷியர்கள், வெயிட்டர்கள், பெயின்டர்கள், விளையாட்டு சாமான்களை அசெம்பிள் செய்பவர்கள், பெண் டெய்லர்கள், ஹேர்டிரெஸ்ஸர்கள், பின்னல் வேலை செய்பவர்கள், கரும்பு வெட்டுபவர்கள் ஆகியோரும் உடலை வளைத்து வேலைகளைச் செய்யும் எவரும் RSI-யால் பாதிக்கப்படுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
காரணங்கள் பலவிதம்
RSI-க்கு முக்கிய காரணம், ஒரேவித வேலையைச் செய்யவேண்டிய உத்தியோகங்களால்தான் என பெரும்பாலானவர்கள் நினைத்தாலும் பிரேஸிலின் தலைநகரான பிரேஸிலியாவில் RSI-ன்பேரில் நடைபெற்ற முதல் தேசிய கருத்தரங்கில் பங்குகொண்ட நிபுணர்களின் கருத்து அதுவல்ல, காரணங்கள் பலவிதமாம்.
பிரேஸிலிய பல்கலைக்கழகத்தின் மனநல மற்றும் உத்தியோக ஆலோசகரான டாக்டர் வான்டர்லே கோடூ விளக்குகிறார்: “வேலையை ஒழுங்குபடுத்தும் விதம், அதாவது செய்யவேண்டிய பணிகள், முதலாளி-வேலையாள் உறவுகள், அங்கு நிலவும் சூழல், வேலையாளின் பங்கு, வேலைக் கிரமம் ஆகியவை RSI-யோடு மிக நெருங்கிய தொடர்புடையவை.”
அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மற்ற மருத்துவ நிபுணர்களும் RSI-க்கும் வேலையின் ஒழுங்கமைப்பிற்கும் சம்பந்தமிருப்பதாய் வலியுறுத்தினர். புதிய தொழில்நுட்பங்களில் உள்ள ஒரு குறை, தொழிலாளி தன் வேலை சம்பந்தமாக தானாக எதையும் செய்யவிடாதவாறு வேலை ஒழுங்கமைக்கப்படுகிறது. இதனால் அவர் சுலபமாக RSI-யால் பாதிக்கப்படுகிறார் என அவர்கள் சொன்னார்கள்.
வேலை ஒழுங்கமைக்கப்படுவதற்கும் RSI-க்கும் நெருங்கிய தொடர்பிருப்பதால் கடந்த சில பத்தாண்டுகளில் சில தொழிலாளர்கள் RSI-யின் பாதிப்பில்லாமலேயே ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்யமுடிந்தது. இதுவே சில நிபுணர்களின் முடிவான கருத்து.
RSI-ஐக் கண்டுபிடித்தல்
RSI தனிப்பட்ட ஒரு வியாதி அல்ல, ஆனால் அநேக வியாதிகளின் கலவை என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். RSI-ஐச் சேர்ந்த எல்லா கோளாறுகளும் முக்கியமாய் புஜங்களின் தசைகளையும் தசை நாண்களையும் மூட்டுகளையும் பிணையங்களையும் பாதிக்கின்றன. அநேக வியாதிகள் சேர்ந்ததே RSI என்பதால் வெவ்வேறு அறிகுறிகளும் அடையாளங்களும் தோன்றுகின்றன. ஒருவேளை அவை தெளிவில்லாமலும், என்ன காரணத்தால் தோன்றுகின்றன என்பதை உடனடியாக புரிந்துகொள்ள முடியாமலும் இருக்கலாம். ஆனாலும் பின்வரும் முக்கிய அறிகுறிகளைக் கவனியுங்கள்.
பாதிக்கப்பட்ட உறுப்பு (உதாரணத்திற்கு, தோள்கள் அல்லது கைகள்) கனமாக ஏதோபோல் இருக்கும். கொஞ்ச நாளில் உறுத்தலும் தீராத வலியும் உண்டாகும். மேலும் சிறு கட்டிகளும் சருமத்தில் தோன்றும். RSI முத்திப்போகும்போது வீக்கமும் வலியும் அந்தளவு அதிகமாவதால் தலை வாருவது, பல் துலக்குவது போன்ற சாதாரண வேலைகளைக்கூட செய்யமுடியாமல் போகும். சிகிச்சை அளிக்கவில்லையென்றால் உருச்சிதைவு அல்லது ஊனம் ஏற்படலாம்.
RSI-ஐ சமாளித்தல்
உத்தியோகத்தில் ஒரேவித வேலையைத் திரும்பத் திரும்பச் செய்வதால் உங்களுக்கும் RSI-ன் அறிகுறிகள் தென்பட்டால், ESI மருத்துவ வசதியை நாடலாம். அது முடியாதபோது எலும்பியல் நிபுணரிடம் செல்லலாம். எலும்பியல் மருத்துவர் உங்களைப் பரிசோதித்து தேவையான சிகிச்சை அளிப்பார். ஆரம்பத்திலேயே தேவையான கவனம் செலுத்தினால் RSI குணமாவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
RSI-ஐ சமாளிப்பதற்கு இன்னொரு முக்கிய முறை, எர்கோனோமிக்ஸ் (ergonomics). அது என்ன? “அது ஒரு செயல்முறை விஞ்ஞானம். அதாவது, ஒரு நபர் பொருட்களை மிகத் திறம்படவும் பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் விதத்தில் அவற்றை டிஸைன் செய்து அரேஞ்ச் செய்யும் முறை.”
ஆகவே எர்கோனோமிக்ஸ் என்பது, வேலைசெய்யுமிடத்தை ஆட்களுக்கேற்பவும் ஆட்களை வேலைசெய்யுமிடத்திற்கு ஏற்பவும் அட்ஜஸ்ட் செய்வதைக் குறிக்கிறது. ஆனால் வெறுமனே கீபோர்டை அல்லது சுத்தியலை மட்டும் சரிசெய்தால் போதாது. வேலைசெய்பவரின் மனநிலையையும் உணர்ச்சிப்பூர்வமான தேவைகளையும்கூட சிந்திக்கவேண்டியது அவசியம். இதற்காக எர்கோனோமிக்ஸ் நிபுணரான டாக்டர் இங்கபோர்க் செல் சொல்கிறார்: எர்கோனோமிக்ஸ், “சம்பந்தப்பட்ட வெவ்வேறு துறைகளிலிருந்து செய்திகளையும் தகவல்களையும் பயன்படுத்தி மனிதனையும் அவனது வேலையையும் பற்றிய ஒரு புதிய பரந்த அறிவைப் பெற முயற்சிக்கிறது.”
வேலைசெய்யும் இடத்தின் எர்கோனோமிக்ஸை மாற்றுவது பெரும்பாலும் வேலைசெய்பவரின் கையில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் பிரேஸிலியாவில் நடைபெற்ற RSI கருத்தரங்கில் பங்கேற்ற மருத்துவ நிபுணர்களின்படி, “பார்டிஸிப்பேடிவ் எர்கோனோமிக்ஸ்” வேலைசெய்பவரின் கையிலேயே இருக்கிறது. அப்படியென்றால் என்ன?
முதலாளி, தொழிலாளியின் அபிப்பிராயங்களையும் கருத்தில் எடுத்துக்கொள்வது பார்டிஸிப்பேடிவ் எர்கோனோமிக்ஸ். அதாவது வேலைசெய்யும் இடத்தை இன்னும் சௌகரியமாக்க என்ன செய்யலாம் என தொழிலாளியிடமே கேட்பார். அவர் கம்பெனிக்குள்ளேயே ஒரு RSI கமிட்டியை ஏற்படுத்தவும் விரும்புவார். வேலையாட்களும் மானேஜ்மன்ட்டும் சேர்ந்த அந்த கமிட்டி, வேலை செய்யுமிடம் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் இருக்கும்படி எப்போதும் பார்த்துக்கொள்ளும். மேலும், RSI வரக் காரணமானவற்றை சரிசெய்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து, அதைக் கட்டுப்படுத்த அல்லது முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முதலாளிக்கும் தொழிலாளிக்கும் உள்ள பொறுப்புகளை தெளிவாக எடுத்துச் சொல்லும்.
வீட்டிலும் அலுவலகத்திலும் தடுப்பு நடவடிக்கைகள்
RSI-ஐ தடுப்பதற்கான நடவடிக்கைகள் வீட்டில் துவங்குகின்றன. நீங்கள் என்ன செய்யலாம்? உங்கள் செல்லப்பிராணிகளைப் பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள். நாயும் பூனையும் தூங்கி எழுந்தவுடன் நீட்டி நெளிப்பதைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? அப்படியே நீங்களும் செய்யுங்கள். நாள் முழுவதும் அதேவிதமாய் மறுபடியும் மறுபடியும் நெட்டிமுறியுங்கள். உங்கள் எலும்புகளும் தசைகளும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அது அவசியம். உங்கள் தசைகளை பலமாக்க சில உடல்பயிற்சிகளையும் செய்யுங்கள். இது ரத்தவோட்டத்தை அதிகரித்து, உங்கள் தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜனைத் தரும். இதனால் அவை நன்கு வேலை செய்யமுடியும். அதுவும் முக்கியமாய் குளிர்காலத்திலும், விளையாடப்போவதற்கு முன்பும் இப்படிச் செய்வது மிக மிக அவசியம். நீங்கள் மிக அதிகமாக பயன்படுத்தும் தசைகளை வலுப்படுத்த அதற்குரிய தேகப்பயிற்சிகளைச் செய்யுங்கள். உறுதியான தசைகள் வேலைகளை நன்கு செய்ய உதவும்.
வீட்டில் இப்படி பலவற்றை செய்வதோடு, வேலைசெய்யும் இடத்திலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது அவசியம். முதலாளி, தொழிலாளர்களுக்கு அவ்வப்போது இடைவெளி அளிக்கலாம், மாறுதலுக்காக எதையாவது செய்யச் சொல்லலாம், அல்லது வெவ்வேறு வேலைகளை மாறிமாறி தரலாம். இப்படிச் செய்தால் தொழிலாளர்களுக்கு RSI சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராது.
RSI-ஐத் தடுப்பதற்கான மற்றொரு வழி, வேலையாட்களுக்கு சரியான கருவிகளைக் கொடுப்பது. அதாவது சரியான உயரத்திலுள்ள டெஸ்குகள், சேர்கள், முழங்கைக்கு பேடுகள், கைகளை மிகவும் ஸ்ட்ரெயின் செய்யவேண்டிய அவசியமில்லாத ட்ரில்கள் மற்றும் ப்ளையர்கள், சௌகரியமான கம்ப்யூட்டர் கீபோர்டுகள் அல்லது அளவுக்கதிகமான அதிர்வுகளைத் தடுக்க ஷாக் அப்சார்பரோடுகூடிய கனமான எக்விப்மன்ட்டுகள் போன்றவற்றை கொடுக்கவேண்டி இருக்கலாம்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மார்செலூ இந்த ஆலோசனைகளில் அநேகத்தைக் கடைப்பிடித்தார். இதோடு மருத்துவ சிகிச்சையையும் பெற்றதால், அவருக்கிருந்த RSI அறிகுறிகள் மறைந்துவிட்டன. விரைவில் பூரண சுகமடைவார். RSI-ஐ சமாளிக்க, தனிப்பட்ட முயற்சியும் வேலையின் ஒழுங்கமைப்பில் மாற்றங்களும் கண்டிப்பாக தேவை. ஆனால் அவற்றின் நன்மைகளைச் சிந்திக்கும்போது, எவ்வளவு முயற்சியெடுத்தாலும் தகும். ஏனெனில் வேலைசெய்யுமிடங்களில் RSI நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.
[பக்கம் 17-ன் பெட்டி]
இசைக் கலைஞர்களுக்கும் RSI
இசைக் கலைஞர்களிடையே ரெப்படிட்டிவ் ஸ்ட்ரெயின் இன்ஜுரி (RSI) மிகவும் சர்வசாதாரணம். 1986-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சியின்படி, ஐரோப்பாவில் எட்டு சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராக்களைச் சேர்ந்த இசைக் கலைஞர்களில் 50 சதவீதத்தினர் RSI-யால் பாதிக்கப்பட்டிருந்தனர். 19-ஆம் நூற்றாண்டில் இந்தக் கோளாறு, இசைக்கலைஞர்களின் தசைப்பிடிப்பு என அழைக்கப்பட்டது. முதன்முதலில் அறிக்கைசெய்யப்பட்ட நோயாளி ராபர்ட் ஷூமான். RSI-யால் அவர் பியானோ வாசிப்பதையே விட்டுவிட்டு வெறுமனே கம்போஸ் செய்யவேண்டியதாயிற்று.
[பக்கம் 17-ன் பெட்டி]
RSI-க்கு காரணம்
1. ஒழுங்கற்ற முறையில் உட்காருவது அல்லது நிற்பது
2. வெகுநேரம் வேலைசெய்வது
3. வேலையில் டென்ஷன்
4. தசைகளிலும் தசை நாண்களிலும் முன்னரே ஏற்பட்ட காயங்கள்
5. வேலையில் அதிருப்தி
6. குளுகுளு அறை
[பக்கம் 18-ன் பெட்டி]
RSI-ஐத் தடுத்தல்
என்னென்ன செய்யக்கூடாது
1 வெகுநேரம் தொடர்ந்தாற்போல் மிகக் கனமான பொருட்களை பிடித்துக்கொண்டிருப்பது
2. மூட்டுகளுக்கு மிக அதிக ஸ்ட்ரெயின் தருவது
3. வெகுநேரம் தொடர்ந்தாற்போல் கைகளை உயர்த்தியவாறே வேலைசெய்வது
4. அசௌகரியமான நிலைகளில் வேலைசெய்வது
என்னென்ன செய்யவேண்டும்
1. சின்ன வேலைகளாய் இருந்தாலும் கைகளை மாறிமாறி பயன்படுத்துங்கள்
2. நாள் முழுக்க வெவ்வேறு விதமான வேலைகளை செய்யுங்கள்
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 16 மற்றும் 17: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck