மத்தியதரைக் கடல்—அடைபட்ட கடலின் ரணங்கள்
கிரீஸிலிருந்து விழித்தெழு! நிருபர்
கிரீஸ் முதல் மொராக்கோ வரை கடற்கரை ஓரங்களில் வந்து குவியும் ஆயிரக்கணக்கான டால்பின் சடலங்கள்; நச்சுத்தன்மையுள்ள நுண் தாவரங்களால் ஈஜியன் கடலின் நீர் செந்நிறமாக மாறுகிறது; ஏட்ரியாடிக் கடலில் பிசின்போன்ற நுரைகள், அவற்றின் அளவோ கோடிக்கணக்கான டன்கள்; அழியும் நிலையில் கடலாமைகளும் கடல் நாய்களும்; அந்தக் கடலின் சில இடங்களில் ஜீவராசிகளே வாழமுடியாத நிலை. மத்தியதரைக் கடலில் என்னதான் நடக்கிறது? மாசுபட்டு அழிந்துபோவதுதான் அதன் எதிர்காலமா?
“உலகிலேயே மனிதன் வாழ தகுந்த இடமாக மாற்றியமைக்கப்பட்ட மிகவும் பழமையான பகுதி இதுதான்.” மத்தியதரைக் கடலையும் அதன் கரைகளையும் பற்றி டேவிட் அடென்பரோ என்ற விலங்கியல் நிபுணரின் கருத்து இது. இந்தக் கடல், மூன்று கண்டங்களுக்கு பாதையாக அமைவதால் எகிப்து, கிரீஸ், ரோம் ஆகிய வல்லரசுகள் உருவாவதற்கும் அவை அழிவதற்கும் முக்கிய காரணமாக இருந்தது. இன்றுள்ள அநேக கலாச்சாரங்களும் நாகரிகங்களும் தோன்றுவதற்கு அதுவே தொட்டிலாகவும் அமைந்தது. ஆனாலும், அளவுக்கு அதிகமான வளர்ச்சி, சுற்றுலா பயணிகளின் திடீர் அதிகரிப்பு, அதிகமாக மீன்பிடித்தல், தூய்மைக்கேடு ஆகியவை மத்தியதரைக் கடலின் ரணங்களுக்கு வித்திட்டிருக்கின்றன. அக்கறைகொண்ட விஞ்ஞானிகளும் பாதிக்கப்பட்ட தேசங்களில் உள்ளோரும் தீர்வுகளைத் தேடி அலைகின்றனர். ஆனால் இதுவரை அறைகுறை வெற்றியே பெற்றிருக்கின்றனர்.
மத்தியதரைக் கடல்தான் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு கடலாகும். அதன் 46,000 கிலோமீட்டர் கடற்கரை 20 தேசங்களுக்கு இயற்கையான எல்லையாக அமைகிறது. இத்தேசங்களில் 16 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்; 2025-க்குள் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லான்டிக் பெருங்கடலைவிட வெதுவெதுப்பாகவும் உப்பாகவும் இருக்கும் மத்தியதரைக் கடலில் அலைகளே இல்லை என்று சொல்லும் அளவு அமைதி நிலவுகிறது. அது அதிகமான தண்ணீரைப் பெறுவதும் அட்லான்டிக் கடலிலிருந்துதான். அதன் தண்ணீர் 80 அல்லது 90 வருடத்திற்கு ஒருமுறைதான் புதுப்பிக்கப்படுகிறது; ஆகவே எளிதில் மாசுபடுகிறது. ஆகவே, “மத்தியதரைக் கடலில் வந்து குவியும் எந்தக் குப்பையும் அதிக காலம் அங்கேயே தங்கிவிடும்” என்று நேஷனல் ஜியோகிராஃபிக் கூறுகிறது.
சுற்றுலா பயணிகளின் படை
சூரிய ஒளியில் திளைக்கும் கடற்கரைகள், எழில்கொஞ்சும் இயற்கை காட்சிகள், மத்தியதரைக் கடல் பகுதிக்கே உரிய விருந்தோம்பல், அதன் புகழ்பெற்ற சரித்திரப் பின்னணி ஆகியவை எல்லாம் ஒருமித்திருப்பதால் இந்த இடம் உல்லாச பயணிகளை கவர்ந்திழுக்கும் கனவுலகமாக அமைகிறது. ஒவ்வொரு வருடமும் 10 கோடி பேர் பீச்சுக்கு செல்லுகின்றனர்; வெளிநாட்டு பயணிகள் மட்டுமே என்று நினைத்தீர்களா? இல்லை, உள்ளூர்காரர்களும் சேர்த்துதான். அடுத்த 25 வருடங்களில் இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கோடை வாசஸ்தலம் சீர்கெடுவதற்கு அலையலையாய் திரண்டுவரும் மனிதர்களும் ஒரு காரணமா? நீங்களே ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது?
திரண்டு வரும் பயணிகளின் இந்தக் கும்பல் திரளான குப்பையையும் தங்களோடு கொண்டுவருகிறது. அதை சமாளிக்க முடியாமல் மத்தியதரைக் கடல் நாடுகள் திக்குமுக்காடுகின்றன. இந்தக் குப்பைக் கூளங்களில் சுமார் 80 சதவிகிதம் சுத்திகரிக்கப்படாமலேயே கடலில் சேர்ந்துவிடுகின்றன; இவை ஒரு வருடத்தில் 50 கோடி டன்னுக்கும் அதிகமானது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! இந்தப் பயணிகளில் அநேகர் வறட்சியான காலத்தில் தான் வருகின்றனர். ஏற்கெனவே குறைவாக இருக்கும் தண்ணீர் சப்ளை இன்னும் அதிகம் மாசுபடுவதற்கு இதுவே காரணம்; இவ்வாறு மாசுபட்ட தண்ணீர் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கிறது. மத்தியதரைக் கடலின் சில பகுதிகளில் நீச்சல் அடிப்பதால் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் தொற்று ஏற்படலாம்; கல்லீரல் அழற்சி, சீதபேதி, சில சமயங்களில் காலரா போன்ற நோய்களும்கூட ஏற்படலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஆனால், அநேக மத்தியதரைக் கடல் தேசங்களின் பொருளாதாரம் சுற்றுலா மீதே பெரிதும் சார்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட தேசங்களைப் பற்றி, “சுற்றுலாதான் அவர்களுடைய ஒரே வருமானம்” என்று மீஷல் பாடீஸ் கூறுகிறார். “ஆனால் உடனடி லாபத்தைத் தேடி கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சி திட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் கடற்கரையை கெடுக்காமல் இருந்தால்தான் அது சாத்தியம்” என்றும் கூறுகிறார். அவர், ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் உதவி செயலராக இருந்தவர்.
அதிக எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து
மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பா செல்வதற்கான முக்கிய வழியாக மத்தியதரைக் கடல் அமைந்திருக்கிறது; ஆகவே எண்ணெய் சுமந்துசெல்லும் கப்பல்களின் போக்குவரத்து மிகவும் அதிகம். உலகில் உற்பத்தியாகும் எண்ணெயில் 20 சதவிகிதத்திற்கும் அதிகம் இந்த வழியாகத்தான் செல்கிறது. ஒவ்வொரு வருடமும் மத்தியதரைக் கடலில் கசியும் கழிவு எண்ணெயின் அளவு, 1989-ல் அலாஸ்காவிற்கு அருகில் எக்ஸன் வால்டீஸ் கசிந்த எண்ணெயின் அளவைவிட 17 மடங்கு அதிகம் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கடலில் 1980-லிருந்து 1995-க்கு இடைப்பட்ட காலத்தில் 14 எண்ணெய்க் கப்பல்களிலிருந்து எண்ணெய்க் கசிந்திருக்கிறது. அதுபோதாதென்று, ஒவ்வொரு வருடமும் கப்பல்களிலிருந்து பத்து லட்சம் டன் கச்சா எண்ணெயும் கடலில் கொட்டப்படுகிறது. கழிவு எண்ணெயை நீக்குவதற்கு அல்லது கப்பலின் டாங்குகளை சுத்தம் செய்வதற்கு துறைமுகத்தில் போதுமான வசதிகள் இல்லாததே இதற்கு காரணமாகும்.
மத்தியதரைக் கடலின் ஆழத்தில் சுத்தமான தண்ணீர் இருக்கிறது, அதன் மேற்பரப்பிலோ எண்ணெய் மிதக்கிறது. சுத்தமான தண்ணீர் மட்டும் ஜிப்ரால்டர் ஜலசந்தி வழியாக அட்லான்டிக் கடலில் சங்கமம் ஆகிவிடுகிறது; அதனால் மேற்பரப்பில் இருக்கும் எண்ணெய் அங்கேயே தேங்கிவிடுகிறது. “மத்தியதரைக் கடலின் உணவு சங்கிலி எண்ணெய் தூய்மைக்கேட்டால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மீன்களின் மற்றும் மெல்லுடலிகளின் திசுக்களில் ஒரு பாகமாகவே அது ஆகிவிட்டிருக்கிறது” என இஸ்ரேல் கடலியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் காலெட் செருயா கூறுகிறார். மத்தியதரைக் கடல் சிப்பிவகை இனங்களில் 93 சதவிகிதத்தில் கழிவு பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன; ஆனால் இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கும் உச்ச வரம்பைவிட அதிகமாகும் என 1990-ல் ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (யு.என்.இ.பி.) அறிவித்தது.
பலவீனமடைந்த சூழலமைப்புகள்
இந்தச் சீர்கேடான மாசுபடுதல் மட்டுமல்ல மத்தியதரைக் கடலின் கரையோரமும் பெருமளவு சேதமடைந்திருக்கிறது; பொ.ச. 15-வது நூற்றாண்டு வரைகூட அங்கு அடர்ந்த காடுகள் இருந்தன. விளைநிலங்களை உருவாக்க, நகரங்களை விஸ்தரிக்க அல்லது வெனிஸிய கப்பல்களை கட்டுவதற்காக காடுகள் அழிக்கப்பட்டதன் விளைவாக படுபயங்கரமான மண் அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கல்லும் மண்ணும் மழைநீரில் அடித்துச் செல்லப்படுகின்றன; அது மட்டுமல்ல டிடர்ஜென்டுகள், பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள் போன்ற மாசுபடுத்தும் பொருட்களும்கூட அடித்துச் செல்லப்பட்டு கடலில் கலக்கின்றன. பிரான்ஸிலுள்ள ரோன், எகிப்திலுள்ள நைல், இத்தாலியிலுள்ள போ, ஸ்பெய்னிலுள்ள எப்ரோ, இன்னும் மற்ற ஆறுகளும் அதிகளவான விவசாய மற்றும் தொழிற்சாலை சார்ந்த கழிவுப்பொருட்களை அடித்துச் செல்கின்றன.
ஏட்ரியாடிக் மற்றும் ஈஜியன் கடல்களை பெரிதும் பாதித்து வரும் செந்நிற அலைகள் இந்தத் தூய்மைக்கேட்டின் ஒரு பின்விளைவே. இதனால் கடற்கரை ஓரங்களில் பிசின்போன்ற, துர்நாற்றம் எடுக்கும் சேறு வந்து குவிகிறது. வளமூட்டப்படுதல் (இயூட்ரோஃபிகேஷன்) என்ற நிகழ்வின் விளைவாக இவ்வாறு ஏற்படுகிறது. அதாவது, கடலிலுள்ள கழிவுப்பொருட்கள் அழுகும்போது தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சுவிடுவதால் அந்தப் பகுதியிலுள்ள தாவரங்களும் மிருகங்களும் மூச்சுத்திணறி இறந்துவிடுகின்றன. லையன்ஸ் வளைகுடா (பிரான்ஸ்), டுனிஸ் ஏரி (டுனீஷியா), இஜ்மிர் வளைகுடா (துருக்கி), வெனிஸ் நீர்த்தேக்கம் (இத்தாலி) ஆகிய இடங்களும் இந்நிகழ்வினால் ஆபத்திற்குள்ளாகி இருக்கின்றன.
மத்தியதரைக் கடல் பகுதிக்கு உரித்தாயிராத சில இனங்கள் உள்ளூர் இனங்களை அழித்து ஆக்கிரமிக்கும் அளவுக்கு கடற்கரை சூழலமைப்பு மிகவும் பலவீனம் அடைந்திருக்கிறது. மற்ற கடல்வாழ் இனங்களை அழித்துவிடும் கௌலர்பா டாக்ஸிஃபோலியா என்ற “கொலைகார” பாசிவகை இதற்கு மிகச்சிறந்த உதாரணம். மொனாகோ கடற்கரையில் தற்செயலாக அறிமுகப்படுத்தப்பட்ட இது கடலடியில் படுவேகமாக பரவி வருகிறது. நச்சுத்தன்மை வாய்ந்த இந்தப் பாசியின் கொட்டத்தை அடக்க இதுவரை எந்த எதிரியும் தோன்றாததால் மிகவும் அதிக பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது. “சூழலமைப்பு சார்ந்த பேரழிவு ஏற்பட இது ஓர் ஆரம்பமாக இருக்கலாம்” என அலெக்ஸான்டர் மெனெஸ் கூறுகிறார். இவர், பிரான்ஸிலுள்ள நைஸ் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக இருக்கிறார்.
இந்தக் கடல் படும் அவஸ்தையில் ஓரளவைத்தான் இதுவரை வாசித்திருக்கிறீர்கள். மத்தியதரைக் கடலைச் சேராத 300-க்கும் அதிகமான இனங்கள் அதற்குள் அத்துமீறி புகுந்திருப்பதாக கடல் உயிரியல் நிபுணர் ஷார்ல்-பிரான்ஸ்வா புதுரெஸ்க் கூறுகிறார். அவற்றில் அநேகம் செங்கடலிலிருந்து சூயஸ் கால்வாய் வழியாக வந்தன. இந்த உயிரியல் தூய்மைக்கேடு சரிசெய்ய முடியாத ஒன்று, சூழலமைப்பு சார்ந்த இந்த மிகப்பெரிய பிரச்சினையோடுதான் நாம் அடுத்த நூற்றாண்டிலும் அடியெடுத்து வைப்போம் போலிருக்கிறது என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
தண்ணீரில் சமாதி
மத்தியதரைக் கடல் தாவரங்களும் அநேக ஆபத்துகளை எதிர்ப்படுகின்றன. அதில் ஒன்று, கடலின் நுரையீரலாகவும் உணவு கிடங்காகவும் நர்சரியாகவும் நூற்றுக்கணக்கான கடல்வாழ் இனங்கள் இனப்பெருக்கம் செய்யும் மறைவிடமாகவும் திகழும் போசிடோனியா கடல் புல்வெளிகள் அழிக்கப்படுவதாகும். தோணித்துறைகளும் செயற்கை துறைமுகங்களும் இந்தப் புல்வெளிகளுக்குள் அத்துமீறும்போது அவற்றை அழித்துவிடலாம். உல்லாச படகுகளும்கூட அவற்றின் நங்கூரங்களால் இந்தத் தாவரங்களை கிழித்து அழித்துவிடலாம்.
அதைப் போலவே அந்தக் கடலில் வாழும் பிராணிகளுக்கும் ஆபத்துதான். அழியும் தறுவாயில் இருக்கும் உலகின் 12 இனங்களுள் ஒன்றான மத்தியதரைக் கடல் மாங்க் சீல் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படுகிறது. 1980-ல், சுமார் 1,000 மாங்க் சீல்கள் இருந்தன. ஆனால், வேட்டைக்காரர்களும் மீனவர்களும் தங்கள் கைவரிசையை காட்டியதால் இப்பொழுது எழுபதோ எண்பதோ தான் மீந்திருக்கின்றன. ஒருவகை கடலாமைகள் இப்போது கிரீஸ் மற்றும் துருக்கி கடற்கரைகளில் மட்டுமே முட்டையிடுகின்றன. அங்கும் அவை, சில சமயங்களில் சுற்றுலா பயணிகளின் கால்களுக்கு பலியாகின்றன. அநேக சமயங்களில் மீன் வலைகளில் சிக்கும் கடலாமைகளின் பயணம் உள்ளூர் ஹோட்டல் மெனுவில் போய் முடிவடைகிறது. மான்டிஸ் இறால், ரஃப் பென் ஷெல், டேட் சிப்பி ஆகியவையும் அழியும் தறுவாயிலுள்ள இனங்களின் பட்டியலில் சேர்ந்திருக்கின்றன.
ஒரு செயல் திட்டம்
அதிர்ச்சியூட்டும் இந்தச் சூழ்நிலையை சமாளிப்பதற்காக 1975-ல் யு.என்.இ.பி. தலைமையில் மத்தியதரைக் கடல் செயல் திட்டம் (மேப், [Mediterranean Action Plan]) துவங்கப்பட்டது. மத்தியதரைக் கடல் தேசங்கள் மீதும் ஐரோப்பிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்ற தேசங்கள்மீதும் கட்டுப்பாட்டை வைக்கவே அது முயற்சிக்கிறது. தூய்மைக்கேட்டிலிருந்து கடலைப் பாதுகாப்பது மட்டுமன்றி கடற்கரை வளர்ச்சி திட்டங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் பார்த்துக்கொள்வதும் இதில் அடங்கும். ஆகவே, மத்தியதரைக் கடல் சுற்றுச்சூழல் தொழில்நுட்ப உதவி திட்டம் (மேடாப், [Mediterranean Environmental Technical Assistance Program]) 1990-ல் துவங்கப்பட்டது; அதைத் தொடர்ந்து 1993-ல் இரண்டாவது மேடாப் திட்டம் அமலுக்கு வந்தது. இவ்வாறு டால்பின்கள், திமிங்கிலங்கள், மாங்க் சீல்கள், கடலாமைகள், ஆபத்திலிருக்கும் மற்ற இனங்களுக்கு புகலிடம் கொடுக்கும் நோக்கத்தோடு இயற்கை ஒதுக்கீட்டு பகுதிகள், சரணாலயங்கள், கடல் தேசிய பூங்காக்கள் ஆகியவை நிறுவப்பட்டன. அவற்றில் சில, நல்ல வெற்றியும் கண்டிருக்கின்றன என்பது உண்மையே.
ஆனாலும், சொல்லுக்கு ஏற்ற செயல் இல்லை. ‘மேப்’பிற்கு பொருளாதார உதவி அளித்துவரும் அநேக தேசங்கள் தாங்கள் செலுத்தவேண்டிய தொகையை செலுத்த தவறியதால் 1990-ன் ஆரம்பத்தில் அது முற்றிலும் அழியும் தறுவாயில் இருந்தது. இத்திட்டத்தின் குறிக்கோள்களில் ஒன்றையும் இதுவரை சாதிக்கவில்லை என அதன் அதிகாரிகளே புலம்புகின்றனரே! முன்னேற்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு மத்தியதரைக் கடல் தேசங்கள் எவ்வளவு ஆர்வமுள்ளவையாய் இருக்கின்றன? அதைப் பற்றி, “ரொம்ப ஓவராக நம்பிக்கை வைக்காதீர்கள்” என்று ‘மேப்’பின் உதவி ஒருங்கிணைப்பாளர் லையும்பாமீர் யெஃப்டிக் எச்சரித்தார். இந்தத் தேசங்கள் அப்படியே நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டாலும் ஏற்கெனவே ஏற்பட்ட ரணங்கள் குணமடைவதற்கு பல பத்தாண்டுகள் ஆகும். “மத்தியதரைக் கடலில் செத்து மிதக்கும் ஜீவராசிகளைப் போலவே இப்போது ‘மேப்’பும் செத்து மிதப்பதாக தோன்றுகிறது” என நியூ சையண்டிஸ்ட் பத்திரிகை அறிவிக்கிறது.
அப்படியென்றால், மரித்துக்கொண்டிருக்கும் மத்தியதரைக் கடல் மீண்டும் உயிர்பெறுமா? அல்லது துர்நாற்றம் வீசும், சேறும் சகதியும் கலந்த கடற்பாசிகள் நிரம்பி வழியும் சவக்கடலாய் ஆகிவிடுமா? அதன் எதிர்காலம் மனிதன் மீதே சார்ந்திருந்தால் அப்படி ஆகலாம். ஆனால், ‘சமுத்திரத்தை உண்டாக்கிய’ இந்தப் பூமியின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் அதன் மீது அக்கறை வைத்திருக்கிறார். (சங்கீதம் 95:5) “பூமியைக் கெடுத்தவர்களை” சீக்கிரத்தில் அழிக்கப்போவதாக அவர் வாக்கு கொடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) சமுத்திரங்களையும் மற்றவற்றையும் மாசுபடுத்தும் பொறுப்பற்ற மனிதர்களை கடவுள் ஒழித்துக்கட்டுவார். அதற்கு பிறகு, இந்தப் பூமியில் இயற்கை சமநிலையையும் வித்தியாசமான உயிர் வகைகளையும் மீண்டும் ஸ்தாபிப்பார். அப்போது, “சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும்” மாசில்லாத, அப்பழுக்கற்ற சுத்தமான நிலையில் “அவரைத் துதி”க்கும்.—சங்கீதம் 69:34.
[பக்கம் 15-ன் வரைப்படம்/படங்கள்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
அட்லான்டிக்
போர்த்துகல்
ஸ்பெய்ன்
மொராக்கோ
பிரான்ஸ்
மொனாகோ
அல்ஜீரியா
டுனீஷியா
ஸ்லோவினியா
இத்தாலி
க்ரோயேஷீயா
யுகோஸ்லாவியா
அல்பேனியா
மால்டா
கிரீஸ்
துருக்கி
லிபியா
எகிப்து
சைப்ரஸ்
சிரியா
லெபனான்
இஸ்ரேல்
[பக்கம் 16-ன் படங்கள்]
அத்துமீறிய வளர்ச்சியால் தூய்மைக்கேடு
ஸ்பெய்ன், பெனீடார்மிலுள்ள ஹோட்டல்கள்
லோரெட்டெ மார், கோஸ்டா பிராவா, ஸ்பெய்ன்
[பக்கம் 16-ன் படங்கள்]
ஸ்பெயினின் தூய்மைக்கெட்ட தண்ணீர் (கீழே) இத்தாலி, ஜினோவாவில் எண்ணெய்க் கசிவு
[படத்திற்கான நன்றி]
V. Sichov/Sipa Press
[பக்கம் 17-ன் படங்கள்]
ஒருவகை கடலாமை ஆபத்திலிருக்கிறது
அழிவின் விழிம்பில் மத்தியதரைக் கடல் மாங்க் சீல்கள்
[பக்கம் 17-ன் படங்கள்]
ஆமை: Tony Arruza/Corbis; சீல்: Panos Dendrinos/HSSPMS