உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 1/22 பக். 20-23
  • உயிர்காக்கும் விளக்கு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர்காக்கும் விளக்கு
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • முதல் தீபஸ்தம்பங்கள்
  • தீப்பிழம்பிலிருந்து ஸீனான் விளக்குகளுக்கு
  • மிதக்கும் கலங்கரை விளக்கங்கள்
  • புயலும் பனிமூட்டமும் விளக்குகளின் ஒளியைத் தடுக்கையில்
  • ஒரு சகாப்தத்தின் முடிவு
  • அணைந்த தீபமான கலங்கரை விளக்க காவலர் பணி
    விழித்தெழு!—1998
  • ஒளியிடம் வாருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2002
  • போஸ்பொரஸில் ஏகாந்தமாய் நிற்கும் “சீமாட்டி”
    விழித்தெழு!—2003
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 1/22 பக். 20-23

உயிர்காக்கும் விளக்கு

அட்லாண்டிக் பெருங்கடலை கடக்க மேற்கொள்ளப்பட்ட மிகச் சிரமமான பயணம் அது. அதுவும் ஐந்து வார கடற்பிரயாணம். அது 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. பிரயாணிகள் அனைவரும் கரையை காண தவியாய் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில்தான் ஓர் ஒளி தோன்றியது. அடிவானத்தில் ஏகாந்தமான ஒரு நட்சத்திரம். ஆனால் அது நட்சத்திரமல்ல—கலங்கரை விளக்கம். “அந்த ஒளியை கண்டவுடன் நாங்க எல்லாரும் முழங்காற் படியிட்டு, கடவுளுக்கு நன்றி சொன்னோம்” என்று ஒரு பிரயாணி உணர்ச்சி மேலிட கூறினார். அந்த ஒளி, அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பத்திரமாக கொண்டுபோய் சேர்த்தது. ஆனால், இதற்குமுன் மேற்கொண்ட எல்லா கடற்பிரயாணங்களும் இதுபோல் சுபமாய் முடியவில்லை.

டிசம்பர் 22, 1839. வட அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து கடற்கரை. நல்ல பிரகாசமான நாள். வானமும் நிர்மலமாக காட்சியளித்து. மாஸசூஸட்ஸில் உள்ள ப்ளம் தீவில் ஒரு கலங்கரை விளக்கம். அன்று வானம் தெளிவாக இருந்ததால், இருள் கவிந்து வருவதற்குமுன் சின்னஞ்சிறு துடுப்புப் படகில் தன் மனைவியோடு கடைக்கு சென்று பத்திரமாக திரும்பிவிடலாம் என அதன் காவலர் கணக்குப்போட்டார். ஆனால் அவர் போட்ட கணக்கு பூஜ்யமாகிவிட்டது. அவர்கள் போயிருக்கும்போது, காற்று தன் சீற்றத்தை காட்ட தொடங்கியது. சடுதியில் புயல். கண்மூடி திறப்பதற்குள் வானத்தையும் கடலையும் மேகமூட்டம் மறைத்தது. செவிப்பறையை கிழிக்கும் பேரிரைச்சலோடு மழை. நுரையையும் நீர்த்துளிகளையும் வாரியிறைத்தது. அந்தக் கலங்கரைவிளக்கத் தீவிற்கு திரும்ப காவலர் படாதபாடு பட்டார்—அந்தோ பரிதாபம்! அன்று இரவு, கலங்கரை விளக்கம் இருளில் கண் அயர்ந்து கிடந்தது.

துறைமுகம் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நள்ளிரவு நேரம். அதன் விலாசம் தெரியாமல் போகஹாண்ட்டஸ் என்னும் கப்பல் திக்குமுக்காடியது. வழக்கமாக சமிக்கை காட்டும் அந்தக் கலங்கரை விளக்கம் ஒளிவீச தவறியதால் அந்தக் கப்பல் மணல்திட்டை “முத்தமிட” கப்பலின் பின்பகுதி உடைந்தது, அதோடுகூட பிரயாணிகள் அனைவரும் கடலின் ஆழ்பரப்பில் சமாதியானார்கள். விடியலுக்கு சற்றுமுன், அதே துறைமுகத்தை நாடிவந்துகொண்டிருந்த ரிச்மண்ட் பாக்கர் என்னும் கப்பலுக்கும் அதே கதிதான். ஆனால், இதில் உயிர்ச்சேதம் அதிகம் இல்லையென்றாலும், கேப்டன் மனைவி மட்டும் கடலுக்கு இரையானார்.

கலங்கரை விளக்கங்கள் தவிர்த்திருக்க வேண்டிய பெரும்சேதங்களால் நிறைந்ததே கடல்வாழ்க்கை சரித்திரம். “பண்டைய காலங்களில், கப்பல்கள் பாதுகாப்பாய் கடலை கடந்தன. ஆனால், துறைமுகத்தில் நுழைய முயலும்போதோ சேதத்திற்குள்ளாகின” என்று அமெரிக்காவின் மெரிடைம் ஹெரிடேஜ் புத்தகம் கூறுகிறது. “கரை தென்பட்டு, அதை அடையும் முன் இருக்கும் கடைசி சில கிலோ மீட்டரே கடல் பிரயாணத்தின் மிக ஆபத்தான கட்டம்.”

1793 முதல் 1833 வரையிலான காலப்பகுதியில், பிரிட்டிஷ் கடற்கரையோரங்களில் சேதமடைந்த கப்பல்களின் சராசரி எண்ணிக்கை 550-லிருந்து 800-ஆக உயர்ந்துள்ளதென கலங்கரை விளக்க சரித்திராசிரியர் டி. ஆலன் ஸ்டீவன்சன் குறிப்பிடுகிறார். சக்திவாய்ந்த விளக்குகள் எந்தளவுக்கு தேவைப்பட்டனவோ, அந்தளவுக்கு இன்னும் நிறைய கலங்கரை விளக்கங்களும் தேவைப்பட்டன.

அமெரிக்க மாகாணங்கள், இங்கிலாந்து உட்பட சில நாடுகளில், கடல் பிரயாணம் மிக ஆபத்தாகியது. ஏன்? நிலவை சபிப்பவர்கள் என்று அழைக்கப்பட்ட கடற்கொள்ளையர்களாலேயே. கப்பல்களை வழிதவறச் செய்து பாறைகளில் மோதிக்கொள்ளும்படி விளக்குகளை வைப்பதே இவர்களது ஏமாற்று வித்தை. சேதமடைந்த அக்கப்பல்களை கொள்ளையடிப்பதற்காகவே இப்படி செய்தனர். அப்படியே தப்பித்தவறி யாராவது பிழைத்திருந்தாலும், அவர்களை உயிரோடே விட்டுவைக்கமாட்டார்கள். அவர்களுடைய ஈனச் செயலுக்கு சாட்சிகளை விட்டுவைக்க விரும்பவில்லை போலும். ஆனால், நிலவொளி பிரகாசமாக இருந்தால் அவர்களுடைய திட்டம் கைகூடி வராமல் போய்விடும். எனவேதான், நிலவை சபிப்பவர்கள் என்ற பெயர் வந்தது. முடிவாக, அதிக எண்ணிக்கையில், அதிக சக்தி வாய்ந்த கலங்கரை விளக்கங்களின் வருகை, இந்த கொள்ளையர்களின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டியது.

முதல் தீபஸ்தம்பங்கள்

இலியட் என்ற புராணக் காவியமே கலங்கரை விளக்கங்களுக்கு முதல் ஆதாரம். “சூரியன் மறைய மறைய, கலங்கரை விளக்கத்தில் இருந்து ஒளிக்கற்றைகள் சுடர்விட ஆரம்பிக்கும்” என அது சொல்லுகிறது. “மரக்கட்டைகளை எரித்து, வெளிச்சம் உண்டாக்கினர்; சில சமயங்களில், இவை கற்குவியல்மேல் வைக்கப்பட்டன. பிறகு இரும்பு கூண்டிற்குள் வைத்து எரிய விட்டனர். இவ்வாறு, விட்டுவிட்டு எரியவைத்தது விபத்துக்களில் விளைவடைந்தது. இப்படித்தான், ஆரம்பகால கலங்கரை விளக்கங்கள் இயங்கின” என்று விளக்குகளின் காவலர்கள் (ஆங்கிலம்) புத்தகம் விவரிக்கிறது.

அலெக்ஸாண்டிரியா தீபஸ்தம்பமே, உலகின் முதல் கலங்கரை விளக்கம். இது, சுமார் பொ.ச.மு. 300-ல், எகிப்தின் ஃபாரஸ் தீவில், அதாவது இப்போதுள்ள அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தின் முகப்பில் கட்டப்பட்டது. கல்லால் கட்டப்பட்ட இந்தப் பிரமாண்டமான கோபுரம் 100 முதல் 120 மீட்டர் (சுமார் 40 அடுக்குகள்) உயரமானது. இதுவரை கட்டப்பட்டவற்றில் மிக உயரமானது இதுவே. இந்த கலங்கரைவிளக்கம் ஏழு உலக அதிசயங்களில் ஒன்று. அநேகமாக, பூமி அதிர்ச்சியால் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது வரை 1,600 வருடங்கள் நிலைத்தது.

கருங்கடலில் இருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரை, குறைந்தபட்சம் 30 கலங்கரை விளக்கங்களை ரோமர்கள் எழுப்பினர். ஆனால் அந்த சாம்ராஜ்யம் வீழ்ச்சியுற்றபோது வாணிபம் நலிவடைந்து, தீபஸ்தம்பங்களாகிய கலங்கரை விளக்கங்கள் இருளடைந்தன; புழக்கத்தில் இல்லாததால் நாளடைவில் பாழடைந்து போயின. சுமார் 1100-ல், கட்டடம் கட்டும் பணி மறுபடியும் துவங்கியது. ஜெனோவாவில் உள்ள லான்டர்னா, புதிய சகாப்தத்தின் பிரசித்திபெற்ற கலங்கரை விளக்கம். 1449-ல், ஆண்டோனியோ கொலம்போ இதன் காவலராக இருந்தார். கடல் மாலுமி கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் மாமா இவர்.

1699-ல், ஹென்றி வின்ஸ்டான்லி என்பவரால் கட்டப்பட்டதே, கடல் நடுவே கட்டப்பட்ட முதல் கலங்கரை விளக்கம். இது மரத்தாலானது. இங்கிலாந்தின் துறைமுகப் பட்டணமாகிய ப்ளைமௌத்திற்கு சற்றுத்தள்ளி ஆபத்தான எடிஸ்டன் பாறைகள்மேல் இது கட்டப்பட்டது. தன்னுடைய சாதனையைக் குறித்து அவர் பெருமிதம் அடைந்தார். அவருடைய கலங்கரை விளக்கத்தில் இருந்துகொண்டு, மீன்பிடிக்கையில் “ஆர்ப்பரித்துவா கடலே, வந்து என் கைத்திறனை சோதித்துப்பார்” என்று வின்ஸ்டான்லி கடலிடம் சவால் விடுவதுண்டு என இரவின் காவலர்கள் (ஆங்கிலம்) என்ற வீடியோ டாகுமெண்டரி கூறுகிறது. 1703-லே ஒரு நாள், கடல் அவருடைய அழைப்புக்கு கீழ்ப்படிந்தது. வின்ஸ்டான்லியும் அவருடைய கலங்கரை விளக்கமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயினர்.

நியூ யார்க் துறைமுகத்தில் உள்ள 92 மீட்டர் உயர சுதந்திரச் சிலை, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய மாகாணங்களின் மக்களுடைய நட்புறவுக்கு நினைவுச்சின்னம். இது, சிறிது காலத்திற்கு கடற்பயணங்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டது. 16 வருடங்களுக்கு 3 காவலர்கள் மாறி மாறி காவல்காத்தனர். அவள் கையில் இருந்த தீப்பந்தத்தை தொடர்ந்து எரியவிட்டனர். “அவளுடைய கையில் இருக்கும் தீப்பந்தத்தின் மூலம் உலகம் முழுவதற்கும் நல்வரவு கூறுகிறாள்” என்று சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டிருக்கும் ஒரு பாடல் அவளுக்கு புகழாரம் சூட்டுகிறது.

தீப்பிழம்பிலிருந்து ஸீனான் விளக்குகளுக்கு

மரக்கட்டைகளுக்கு பதிலாக நிலக்கரி, மெழுகுவர்த்தி—பல மெழுகுவர்த்திகளைக் கொண்ட பித்தளை விளக்குத்தண்டுகள்—எண்ணெய் ஆகியவை ஒளி கொடுப்பதற்காக கலங்கரை விளக்கங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒளியை குவியச்செய்யும் பிரதிபலிப்பான்களை (reflectors) பயன்படுத்த முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், தீயிலிருந்து வரும் புகையால் அவற்றில் கரிபடிந்தது. இருப்பினும், 1782-ல், எண்ணெயில் எரியும் விளக்கு ஒன்றை ஸ்விஸ் விஞ்ஞானி எமே அர்கான்ட் கண்டுபிடித்தார். நீள் உருளை வடிவ திரியின் நடுவில் இருந்து கண்ணாடி சிம்னியின் வழியாக புகை மேல்நோக்கி செல்லும்படியாக அமைத்திருந்தார். இது, விளக்கு சிம்னிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்க உதவியது. இதனால், கலங்கரை விளக்கங்களில், நீள்வட்ட (கார் ஹெட்லைட்டுகளில் இருக்கும் கண்ணாடி போன்ற வடிவ) பிரதிபலிப்பான்களை பயன்படுத்துவது பிரபலமாகியது. தரமான பிரதிபலிப்பான் ஒளியின் வீரியத்தை சுமார் 350 தடவைகள் பெருக்கியது.

1815-ல், மற்றொரு மாபெரும் சாதனை நிகழ்ந்தது. அது என்ன? அந்த ஆண்டில்தான், ஃப்ரென்ச் இயற்பியல் ஆய்வாளர் அகஸ்டின்-ஸான் பிரஸ்னல், அதிசக்தி வாய்ந்த பிரஸ்னல் லென்சுகளை கண்டுபிடித்தார். அதுமுதற்கொண்டு, கலங்கரை விளக்கங்களில் இவற்றை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர். பிரஸ்னலின் கண்டுபிடிப்பிற்கு முன்னால், ஆர்கண்ட் விளக்குகளில் பயன்படுத்தப்பட்ட கண்ணாடி அமைப்புகளே மிகச் சிறந்தவையாக எண்ணப்பட்டன. இவை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாய் இருந்தன. இவ்விளக்குகள் சுமார் 20,000 திரி திறன் ஒளியை தந்தன. a ஆனால் பிரஸ்னல் லென்சுகளோ இதை 80,000-ஆக உயர்த்தியது. இது, நவீன கார் ஹெட்லைட் கொடுக்கும் ஒளிக்கு ஒத்திருக்கிறது. ஆனால், ஒரே திரி இந்தளவு ஒளி தருகிறது என்றால் அது அரும்பெரும் சாதனையே! 1901-ல், அழுத்தத்தின் மூலம் ஆவியாக்கப்பட்ட மண்ணெண்ணெயால் எரியும் விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதற்குள் பத்து லட்சம் திரி திறன் ஒளி தரும் பிரஸ்னல் விளக்குகள் புழக்கத்தில் வந்தன. அதே காலப்பகுதியில், அசெட்டிலின் வாயுவும் (கால்சியம் கார்பைடு, நீர் ஆகிய இரண்டிலிருந்தும் பெறப்படும் வாயு) பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. இது, கலங்கரை விளக்க இயக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் வெகுவாய் பாதித்தது. இதன் பெருமை ஸ்வீடனைச் சேர்ந்த நில்ஸ் கஸ்டஃப் டாலன் என்பவரையே சாரும். இவரது தானியங்கி சூரிய வால்வு, சூரிய ஒளிக்கேற்ப அசெட்டிலின் வாயுவின் அளவை ஒழுங்குப்படுத்தும். இது, 1912-ல், பௌதிகத்திற்கான நோபல் பரிசை அவருக்கு ஈட்டித் தந்தது. 1920-களில், மின் இழை விளக்குகள் பிரபலமாயின. இன்றுவரை, விளக்குகளில் பிரதானமாக நிலைத்திருப்பவை இவையே. வெறும் 250 வாட்சுகள் மின்சக்தி கொண்ட இப்படிப்பட்ட ஒரு பல்பையும், நவீனமாக்கப்பட்ட பிரஸ்னல் லென்சுகளையும் இணைத்தாலே போதும் பல லட்ச திரி திறன் ஒளியை தந்தது. இன்றைய நாட்களில், அதிக சக்திவாய்ந்த கலங்கரை விளக்கங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில், பிரான்ஸில் இருக்கும் கலங்கரை விளக்கமே மிக அதிக சக்திவாய்ந்தது. இது 50 கோடி திரி திறன் கொண்டது, கண்ணை கூசவைக்கும் ஒளிக்கற்றையால் இரவைப் பகலாக்கும்.

ஸீனான் சுடரொளி குழல்விளக்குகள், சமீபத்திய புது கண்டுபிடிப்பு. இது, 1/10,00,000 வினாடிக்கு ஒருமுறை மிகப் பிரகாசமான ஒளிச்சுடரை அள்ளி வீசுகிறது. இந்த ஒளி இமைப்பொழுதில் வீரியமாக பளிச்சிடும். இதனால், நன்மை என்ன? நிறைய விளக்குகளின் மத்தியிலும் இதன் ஒளி தனித்து, பளிச்சென்று கண்ணுக்குத் தெரியும்.

மிதக்கும் கலங்கரை விளக்கங்கள்

எங்கெல்லாம் ஒரு கோபுரம் கட்டமுடியாதோ, அங்கெல்லாம் மிதக்கும் கலங்கரை விளக்கங்கள் அல்லது விளக்கு-கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. கலங்கரை விளக்கங்களைப் போலவே, விளக்கு-கப்பல்களுக்கு பின்னேயும் நீண்ட சரித்திரம் இருக்கிறது. இம்மாதிரியான கப்பல், ஜூலியஸ் சீசரின் காலத்தில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ரோம போர்க்கப்பலே அது. இரவு நேரத்திலே, பாய்மரத்தின் உச்சியில் உள்ள இரும்புக் கலத்தில் மரக்கரி எரியவிடப்படும். அதிலிருந்து வரும் நெருப்பு பொறி, கீழ்தளத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வியர்வை மழையில் நனைந்து, துடுப்பு வலித்துக்கொண்டிருக்கும் அடிமைகளின் உடம்பில் விழும்.

1732-ல், லண்டனுக்கு அருகே தேம்ஸ் நதி முகத்துவாரத்தில், முதல் விளக்கு-கப்பல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதன்பின், இம்மாதிரி கப்பல்கள் நிறைய வரத்தொடங்கின. நியூ யார்க் துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களுக்கு அம்ப்ரோஸ் விளக்கு-கப்பல் அநேக ஆண்டுகளாக வழிகாட்டியது. இருப்பினும், சமீப ஆண்டுகளில், விளக்கு-கப்பல்களுக்கு பதிலாக தானியங்கி மிதக்கும் விளக்குக் கருவிகளும் விளக்கு கோபுரங்களும் புழக்கத்திற்கு வந்தன. இவை உலோகத்தால் ஆனவை. இவற்றின் அமைப்பு, கடலில் அமைக்கப்பட்டிருக்கும் எண்ணெய்க் கிணறுகளை ஒத்திருக்கின்றன.

புயலும் பனிமூட்டமும் விளக்குகளின் ஒளியைத் தடுக்கையில்

கட்டுக்கடங்காத மழையும் பனிமூட்டமும் இருந்தால், மிக சக்திவாய்ந்த விளக்கும்கூட உதவாக்கரை ஆகிவிடும். ஆனால் இப்படிப்பட்ட சமயங்களில்தான் அவை மிகமிக அவசியமாக தேவைடுகின்றன! இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அச்சமயத்தில் கைகொடுப்பது ஒலி எழுப்புதலே. ஆகவே, மிக சப்தமாக, ஓயாமல் ஒலி எழுப்பப்பட்டது. குறைபாடுகளுள்ள முறை என்றாலும் ஒழுங்காக காலந்தவராமல் ஒலி எழுப்புவதே பிரச்சினைக்கு தீர்வு. இந்த காரணத்திற்காகவே, பல கலங்கரை விளக்கங்களில் மணிகள், மூடுபனி எச்சரிக்கை ஒலிக்கருவிகள், எச்சரிக்கை சங்குகள் போன்ற சக்திமிக்க ஒலி எழுப்பும் உபகரணங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. ஏன் பீரங்கிகளும்கூட, சில சமயங்களில் உபயோகிக்கப்பட்டன! சில கலங்கரை விளக்கங்களில், 1970-வரையாகவும்கூட பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன.

இருப்பினும், காற்று மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களால் ஒலி அலைகள் பாதிக்கப்படுகின்றன. கடல் நீருக்கு மேலேயுள்ள காற்று மண்டலத்தில் இருக்கும் வெப்பநிலையிலும் ஈரப்பதத்திலும் ஏற்படும் மாற்றங்கள், ஒலி அலைகளோடு குறுக்கிடுகின்றன. இது, சில சமயங்களில் ஒலி அலைகளை மேல்நோக்கியும், சில சமயங்களில் கீழ்நோக்கியும் திருப்பி சில்மிஷம் பண்ணுகிறது. மேலும், குளத்தில் ஒரு கூழாங்கல்லை சாய்வான கோணத்தில் வேகமாக வீசி எறிந்தால் எப்படி எம்பி எம்பிச் செல்லுகிறதோ, அதுபோல மிகச்சத்தமான ஒலி அலைகளும் கப்பலுக்கு நேர்மேலே எழும்பிச் செல்லும். ஆனால், அந்த ஒலி உள்ளே இருப்பவர்களின் காதில் விழாமலேகூட போய்விடலாம்! இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும், சாதாரணமாக ஒலி சமிக்கைகளை ஐந்து அல்லது அதற்கும் மேலான கிலோமீட்டருக்கு அப்பாலும் கேட்க முடியும்.

ஒரு சகாப்தத்தின் முடிவு

தானியங்கி கலங்கரை விளக்கங்கள் வர ஆரம்பிக்கவே, காவலர்களின் பணி படுத்துவிட்டது. இன்றோ ரேடார், ரேடியோ, சோனார், செயற்கைக் கோள்கள் போன்ற உபகரணங்கள் மூலம் கடற்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இவை கலங்கரை விளக்கத்தையே தேவையற்றதாக ஆக்கிவிட்டன. எது எப்படி இருந்தாலும்சரி, நாம் கலங்கரை விளக்கங்களை மறக்க முடியுமா? நிச்சயமாகவே முடியாது. இந்த இருண்ட உலகில், கலங்கரை விளக்கங்கள் அநேகருக்கு நம்பிக்கையையும் ஒளியையும் தரும் சின்னமாக திகழ்கின்றன. இன்றும்கூட புகைப்படக்காரர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் போன்றோரை தன்வசப்படுத்துகின்றன. உலகம் முழுவதும் நிறைய கலங்கரை விளக்க சங்கங்கள் முளைத்திருக்கின்றன. இவை, இந்த அழகிய, புராதன கட்டிடங்களை பராமரிக்கும் சேவையில் தங்களை மும்முரமாக ஈடுபடுத்தி இருக்கின்றன.

கலங்கரை விளக்க காவலர் வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்கும் என்று ருசிபார்க்க அநேக பயணிகள் விரும்புகின்றனர். இப்படி வருவோருக்கு இவை சிறப்பான தங்குமிடங்களாக இப்பொழுது மாறியிருக்கின்றன; எனினும் அந்தக் காலத்தில் காவலர்களுக்கு இல்லாத சலுகைகள் இந்தப் பயணிகளுக்கு உண்டு. மற்றும் பலர், தனிமையை நாடி வருகின்றனர். அலைகளின் ஓங்காரத்தையும் கடற்பறவைகளின் ஓசையையும் கேட்பதற்காகவே இங்கு வருகின்றனர். உலகின் சில பாகங்களில் உள்ள இந்த கலங்கரை விளக்கங்கள், திமிங்கலங்களையும் பறவைகளையும் கடல் நாய்களையும் கண்டு ரசிக்க மிகவும் அனுகூலமான இடங்களாக அமைகின்றன. அலெக்ஸாண்டிரியாவின் காவலர்களும் ஜெனோவாவில் வாழ்ந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் மாமாவும் தங்களுடைய பொழுதை இப்படித்தான் போக்கியிருக்க வேண்டும்.

[அடிக்குறிப்புகள்]

a தற்சமயம் காண்டல்லா என்ற சர்வதேச ஒளி அளவால் அளக்கப்படுகிறது. இதற்கு முன், சர்வதேச காண்டல் என்பது திரி திறனால் அளவிடப்பட்டது. திட்ட அளவு காண்டலுடன் ஒப்பிட, இது ஒரு குறிப்பிட்ட திசையில் ஒளிரும் ஒளிச்செறிவைக் குறித்தது.

[பக்கம் 21-ன் பெட்டி]

இரு வீராங்கனைகள்

மெச்சத்தக்க தைரியமும் தன்னையே அர்ப்பணித்து செயல்படும் பண்பு கலங்கரை விளக்கத்தின் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன. இப்படி வீரதீர செயல்புரிவதில் பெண்களும் பெயர்பெற்றவர்கள். க்ரேஸ் டார்லிங் (1815-42) இவ்வாறு செயல்பட்ட வீராங்கனைகளுள் ஒருவர். இவளுடைய தகப்பன் இங்கிலாந்தின் வடகிழக்கு கடற்கரைக்கு சற்று அப்பால் ஃபார்ன் தீவுகளில் கலங்கரை விளக்க காவலராக இருந்தார். அதற்கருகில் ஒரு நீராவிக் கப்பல் சேதத்திற்குள்ளாகியது. அதில் மாட்டிக்கொண்ட ஒன்பது பேரை காப்பாற்ற தன் உயிரையே பணயம் வைக்கவும் தயங்கவில்லை. அவர்களை காப்பாற்றுவதில் மனவுறுதியோடு இருந்தாள். எனவே, அவளும் அவளுடைய தகப்பனும் ஒரு சிறிய துடுப்புப்படகில் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலைக் கடந்து, சேதத்திற்குள்ளான படகை அடைந்தனர். பிழைத்திருந்தவர்களை தங்களுடைய படகில் ஏற்றி, கலங்கரை விளக்கத்திற்கு கொண்டுவந்தனர். உதவி வரும்வரை அவர்களை கவனித்துக் கொண்டனர். இவள் ஞாபகமாக ஒரு நினைவுச் சின்னமும் பின்னர் எழுப்பப்பட்டது.

வட அமெரிக்காவின் மைன் கரைக்கு சற்று தள்ளி இருப்பதுதான் மாடினிகஸ் பாறை. அங்கிருந்த கலங்கரை விளக்க காவலரின் மகள் பெயர் அபிகேல் பர்ஜஸ். இவளுக்கு வயது 17. இவளது செல்லப் பெயர் அபி. 1857-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள், அவளுடைய அப்பா கலங்கரை விளக்கத்தை விட்டு வெளியே போக நேர்ந்தது. சீதோஷ்ண நிலை சரியில்லாததால், நான்கு வாரங்களுக்கு வீடு வந்து சேர முடியவில்லை. அவளுடைய அப்பா இல்லாத சமயத்தில், கலங்கரை விளக்கத்தை இவளே கண்காணித்து வந்தாள். வியாதிப்பட்டிருந்த தன்னுடைய தாயையும், தம்பி தங்கைகள் மூன்று பேரையும் கவனித்துக் கொண்டு, கலங்கரை விளக்க கடமைகளையும் கண்காணித்து வந்தாள். தம்பி, தங்கைகள் மிகச் சிறியவர்களாக இருந்ததால், இவளுக்கு எந்த விதத்திலும் அவர்கள் உதவியாய் இல்லை. “என்னோட வேலை பளுவால் [மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்குமுன் ஒரு கலங்கரைவிளக்கத்தை ஒளிரச் செய்வது என்பது சாமான்யமான வேலையல்ல] நான் ரொம்ப சோர்வடைந்தாலும்,ஒரு தடவைகூட விளக்கு எரியாம போனதில்ல. என்னோட வேலயையும் பாத்துக்கிட்டு, அப்பாவோட கடமைகளையும் நிறைவேத்த முடிஞ்சிதுன்னா அது கடவுளோட உதவியாலதான்” என்று அபி எழுதுகிறாள். அதற்கடுத்த பனிக்காலத்திலும் அபியே கலங்கரை விளக்கத்தை தன்னந்தனியாக கண்காணிக்க வேண்டியதாய் இருந்தது. இந்த முறையோ, அவளுக்கும் அவளுடைய குடும்பத்தாருக்கும் ஒரு நாளைக்கு ஒரு முட்டையும் ஒரு கோப்பை மக்காச்சோள உணவுமே மிஞ்சியது. ஆனால், கலங்கரை விளக்க ஒளியோ மங்காமல் இருந்தது.

[பக்கம் 23-ன் பெட்டி]

பிரஸ்னல் லென்சுகள்

பிரஸ்னல் லென்சுகள் என்பது பல லென்ஸ்கள், அல்லது லென்ஸ் சட்டத்தால் ஆனது. குவிந்த முப்பட்டக கண்ணாடிகளால் சுற்றியமைக்கப்பட்ட மைய லென்சைக் கொண்டது. கண்ணாடி பேரலை அமைப்பதற்கு பிரஸ்னல் லென்ஸ்களை ஒன்றாக இணைக்கலாம்; இந்த கண்ணாடி பேரல் ஒளி மூலத்தை முழுமையாக சுற்றியிருக்கும். ஒவ்வொரு கண்ணாடிச் சட்டமும் கிடைமட்டமான ஒளிக்கற்றையை உருவாக்கும். ஒரு சக்கரத்தின் ஹப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்போக்ஸ்கள் நடுவில் இருந்து விரிந்து செல்வது போல, அதிக சட்டங்கள் அதிக ஒளிக்கற்றையை உண்டுபண்ணும். ஒளி மூலத்தைச் சுற்றி அந்தக் கண்ணாடி பேரல் சுற்றும்போது, ஒளிக்கற்றைகளும் கிடைமட்டமாக ஒளிவீசும். ஒளிக்கற்றைகளின் அளவு, ஒளிக்கற்றைகள் வீசும் நேர இடைவெளி, அவற்றின் நிறம் போன்றவை ஒவ்வொரு கலங்கரை விளக்கத்திற்கும் வித்தியாசமான தனிச்சிறப்புமிக்க ஒளியை கொடுக்கும் சில அம்சங்களாகும். இந்த வித்தியாசமான ஒளியின் பட்டியலை கப்பல்களில் இருப்பவர்கள் வைத்திருப்பர். இது, செல்லும் வழியில் இருக்கும் ஒவ்வொரு கலங்கரை விளக்கத்தையும் அடையாளங்காண உதவும்.

[படத்திற்கான நன்றி]

South Street Seaport Museum

[பக்கம் 23-ன் படம்]

பெகி வளைகுடா, நோவா ஸ்காடியா, கனடா

[பக்கம் 23-ன் படம்]

சுதந்திரச் சிலை, நியூ யார்க்

[பக்கம் 23-ன் படம்]

வேசெர் நதி, ஜெர்மனி

[பக்கம் 23-ன் படம்]

வாஷிங்டன் மாகாணம், அ.ஐ.மா.

[பக்கம் 20-ன் படங்களுக்கான நன்றி]

The Complete Encyclopedia of Illustration/J. G. Heck

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்