உலகை கவனித்தல்
குழந்தை துர்ப்பிரயோகம்—சர்வசகஜம்
“உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் எட்டு பேரில் ஒருவருக்கும் அதிகமானவர்கள் உடல்ரீதியாகவோ அல்லது பாலியல்ரீதியாகவோ துர்ப்பிரயோகம் செய்யப்பட்டு இருக்கின்றனரென இளம்வயது பையன்களின் சுகாதாரம் பற்றிய ஒரு புதிய ஆய்வு குறிப்பிடுகிறது” என்று த நியூ யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. “பாலியல் ரீதியான துர்ப்பிரயோகத்தைவிட உடல்ரீதியான துர்ப்பிரயோகமே சர்வசாதாரணமாக நடக்கிறது. முக்கால்வாசிக்கும் அதிகமான உடல்ரீதியான துர்ப்பிரயோகம் குடும்ப அங்கத்தினராலே நடந்த சமாச்சாரம்” என அந்த ஆய்வு தெரிவிக்கிறது. பாலியல்ரீதியான துர்ப்பிரயோகம், ஆசிய-அமெரிக்க பையன்களுக்கிடையேதான் அதிக அளவில் நடந்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களில் 9 சதவீதம் பேர் தாங்கள் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒத்துக் கொள்கின்றனர். ஸ்பானிய கலாச்சாரத்திலிருந்து வந்த பையன்களில் 7 சதவிகிதத்தினரும் கறுப்பர்கள், வெள்ளையர்களில் 3 சதவிகிதத்தினரும் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதாக அறிவிக்கின்றனர். ஆனால், துர்ப்பிரயோகத்திற்கு கேள்விப் பட்டியல் விளக்கம் அளிக்கவில்லை. வெறுமனே உடல்ரீதியாகவோ அல்லது பாலியல் ரீதியாகவோ எப்பொழுதாவது துர்ப்பிரயோகம் செய்யப்பட்டனரா என்று மட்டுமே கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
“ஆதி மூதாதையர்”?
ஆசியா முழுவதிலும் இருந்து பிஷப்புகள் சமீபத்தில் வாடிகனில் ஒன்றுகூடினர். ஆசிய நாடுகளில் கத்தோலிக்கத்தை பரப்புவதற்கான வழிகளைப் பற்றி சிந்திப்பதற்கே இந்தக் கூட்டம். “அந்நியர் குடியேற்றத்தினால் வந்த மேற்கத்திய மதமே கிறிஸ்தவம் என்று பெரும்பாலான ஆசிய நாடுகளில் கருதப்படுகிறது” என ஸ்ரீலங்காவின் பெருந்தகை ஆஸ்வால்ட் கோமிஸ் சொல்லுகிறார். எனவே, “இயேசுவை ஆசிய பழக்க வழக்கத்தில் அறிமுகப்படுத்த வேண்டியதே” மாபெரும் சவால் என அஸோசியேடட் பிரஸ் அறிவிக்கிறது. “உள்ளூர் பழக்க வழக்கங்கள், மொழிகளுக்கு ஏற்ப ரோமன் சர்ச்சையும் அதேவிதமாக ரோமன் சர்ச்சுக்கு ஏற்ப உள்ளுர் பழக்க வழக்கங்களையும் மாற்றி அளிப்பதைப் பற்றி பிஷப்புகள் பேசினர்.” அப்போது கொடுக்கப்பட்ட ஓர் உதாரணம் மூதாதையர் வணக்கமே. இந்த பூர்வ பாரம்பரியத்தை கடைபிடிப்பவர்களைக் கவர, “கிறிஸ்தவ” கடவுள்தான் “ஆதி மூதாதையராக” கருதப்படலாம் என்ற கருத்தை கத்தோலிக்கர்கள் மற்றவர்களுக்கு மெல்லமெல்ல அறிமுகப்படுத்தலாம் என ஹாங்காங்கின் பெருந்தகை ஜான் டாங்க் ஹோன் ஆலோசனை கூறினார்.
அறுவை சிகிச்சைக்கும் ரோபட்?
பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் இரண்டு அறுவை சிகிச்சையாளர்கள் கம்ப்யூட்டரால் இயக்கப்படும் ரோபட் உதவியால் முதல் திறந்த-இருதய அறுவையை வெற்றிகரமாக செய்துமுடித்தனரென லா ஃபிகாரோ என்னும் பிரெஞ்ச் செய்தித்தாள் அறிவிக்கிறது. இருதய இரத்தக்குழாய் பைபாஸ் அறுவை உட்பட ஆறு ஆபரேஷன்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. 4 சென்டிமீட்டர் அளவே உள்ள சிறிய துளைமூலம் இந்த முறையில் ஆபரேஷன் செய்யப்படுகிறது. நோயாளியிடம் இருந்து பல மீட்டர் தூரத்தில் இருக்கும் மேடையில் அறுவை சிகிச்சையாளர்கள் அமர்ந்துகொண்டு, ஒரு காமிராவின்மூலம் நோயாளியின் உடலுக்குள் பார்க்கமுடியும். அங்கிருந்தபடியே, இரண்டு லீவர்களின் உதவியோடு ரோபட்டின் கை அசைவுகளை இயக்கமுடியும். கம்ப்யூட்டர், அறுவை சிகிச்சையாளர்களின் அசைவுகளை மூன்று முதல் ஐந்து தடவைகள் குறைப்பதால், ஆபரேஷன் துல்லியமாகவும் உடலுக்குள் அதிகளவு கருவிகள் செலுத்தப்படாமலும் செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்து குணமாகையில் வலியும் குறைவாகவே இருக்கிறது. இந்த முறை ஆபரேஷனில் இது மற்றொரு நன்மை.
சாலைகளா சவக்குழிகளா?!
ஒவ்வொரு ஆண்டும் உலகின் நெடுஞ்சாலைகள் 5,00,000-க்கும் அதிகமானோருக்கு சவக்குழிகளாக மாறியிருக்கின்றன. உலகம் முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துகொண்டே போகின்றனவென ஃப்ளீட் மெய்ன்டனன்ஸ் அண்ட் சேஃப்டி ரிபோர்ட் அறிவிக்கிறது. பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் நீங்கள் மாட்டிக்கொள்ளும் சந்தர்ப்பம் இருக்கிறதா? “ ‘வாகனமயமாக்கப்பட்ட’’ நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 பேரில் ஒருவர், நெடுஞ்சாலை விபத்துக்களில் காயம் அடைந்திருக்கின்றனர், அல்லது கொல்லப்பட்டிருக்கின்றனர். இருவரில் ஒருவர் அவர்களுடைய ஆயுசு நாட்களில் குறைந்த பட்சம் ஒரு தடவையாவது சாலை விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்” என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.
பாக்டீரியாக்களின் உறைவிடம்
உங்களுடைய சமையல் அறையில் இருக்கும் காய்கறி நறுக்கும் பலகையைவிட கழிப்பிடமே சுத்தமாக இருக்கும் என்று சொன்னால், அது ஒருவேளை உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். அரிஜோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், 15 வீடுகளில் காணப்படும் பாக்டீரியாக்களை 30 வாரம் கண்காணித்தப்பின் வெளியிட்ட முடிவு இதுவே. ஒவ்வொரு வீட்டிலும் குழாய் கைப்பிடிகள், பாத்திரங்களைக் கழுவும் தொட்டிகள், காய்கறி நறுக்கும் பலகைகள், பாத்திரம் துடைக்கும் துணி, கழிப்பிடங்கள் போன்ற 14 இடங்களில் இருந்து சாம்பிள்களை இக்குழு சேகரித்தது. அவர்களுடைய கண்டுபிடிப்பு? “கழிப்பிடங்களில் காணப்படுவதைவிட, பாத்திரங்களைத் துடைக்கும் ஈரமான துணியைப் பிழிந்தால் வரும் அழுக்கு நீரில் பத்து லட்சம் மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டிருக்கின்றனரென” நியூ சைன்டிஸ்ட் பத்திரிகை கூறுகிறது. “காய்கறி நறுக்கும் மனையிலும் மூன்று மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.” “பாக்டீரியாக்களின் இனப்பெருக்கத்திற்கு, நன்கு காய்ந்த கழிப்பிடங்கள் ஆதரவு தருவதில்லை. ஏனெனில், இப்பாக்டீரியாக்கள் ஈரப்பதம் நிறைந்த இடங்களில்தான் அதிகமாக இனப்பெருக்கம் அடைகின்றனவென” இந்த ஆய்வின் சார்பாக பேசும் பேட் ரசின் பத்திரிகையில் கருத்து தெரிவிக்கிறார். சுகாதாரத்தை முன்னேற்றுவிக்க, இந்த துணிகளை வாராவாரம் துவைத்து சுத்தமாக வைக்கவேண்டும் என ரசின் சிபாரிசு செய்கிறார். “பாத்திரங்கழுவும் ஒரு தொட்டி நீரில் ஒரு கப் ப்ளீச்சிங் பவுடரை சேர்த்து, அதில் இந்த துணிகளை 10 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு, துவைத்து உலறவையுங்கள்” என்று அவர் கூறுகிறார்.
சிறுநீரக கற்களை உடைத்தல்
1986 முதல் 1994 வரை அமெரிக்காவில் 80,000 நர்ஸ்களுடைய உணவுப்பழக்கங்களை கூர்ந்து கவனித்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். இதன் விளைவு? சில பானங்கள் மற்றவைகளைக் காட்டிலும் பெரிதளவில் சிறுநீரகக் கற்களைக் தவிர்ப்பதற்கு உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென சயின்ஸ் நியூஸ் அறிவிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் 17-வகையான பானங்களை சோதனைக்கு உட்படுத்தினர். டீ குடிப்பது சிறுநீரகக் கற்கள் உருவாவதை 8 சதவிகிதம் குறைத்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காஃபீன் நீக்கப்பட்ட காஃபியை தவறாமல் அருந்துவது இந்த ஆபத்தை 9 சதவிகிதமாக குறைத்தது. மிதமாக ஒயின் சேர்த்துக்கொள்வதும் ஒரு நபருக்கு சிறுநீரகக் கற்கள் உருவாவதை 20 அல்லது அதற்கும் மேற்பட்ட சதவிகிதத்திற்கு குறைக்கும் என்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் “அதிர்ச்சி தரும் விஷயம் என்ன தெரியுமா? தினமும் 8 அவுன்ஸ் திராட்சை ஜூஸ் குடித்தால் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் அபாயம் 44 சதவிகிதம் அதிகமாகிறது” என்பதாக ஆராய்ச்சி காண்பிக்கிறது. “வேறு எந்த பானமும் இவ்வளவு மோசமான எதிர்விளைவுகளைக் கொண்டில்லை” என்பதாக போஸ்டனிலுள்ள சிறுநீரகம் மற்றும் கொள்ளைநோய்களுக்கான வல்லுநர் டாக்டர் கிரே சர்கான் குறிப்பிட்டார். “நாம் அருந்தும் பானங்களில் சிறிது மாற்றங்களை செய்வது ஓரளவு சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதை குறைக்கலாம்.” அதுவும் நீண்டகால பரந்த சிகிச்சைமுறை யுக்திகளை பயன்படுத்தினால்தான் என்பதாகவும் குறிப்பிட்டார்.
ஆஸ்திரேலியாவில் ஈஸ்டரின் புதுப்புது அர்த்தங்கள்
ஈஸ்டர் உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? இந்த கேள்வியை அடிப்படையாக வைத்து ஆஸ்திரேலியாவின் சன்-ஹெரால்டு செய்திப்பத்திரிக்கை ஒரு சுற்றாய்வை நாட்டின் பல இடங்களில் நடத்தியது. வெளியிடப்பட்ட சுற்றாய்வின் முடிவை நீங்களே பாருங்களேன். ஓ! ஈஸ்டர்னா முதல்ல ஞாபகத்துக்கு வர்ரது ஈஸ்டர் சாக்லேட்தான் என்பதாக 54 சதவிகிதத்தினர் கூறினர். நல்லா ஜாலியா வாரகடைசில டூர் போகலாம் என்பதாக 39 சதவிகிதத்தினரும் பகட்டாக ஈஸ்டர் கண்காட்சி பார்க்கலாம் என்பதாக 21 சதவிகிதத்தினரும் சொன்னார்களாம். இது ஒரு மதசம்பந்தப்பட்ட நிகழ்ச்சி என 20 சதவிகிதத்தினர் குறிப்பிட்டனர். சிட்னியில் ஒருசிலரே ஈஸ்டரை மதத்தோடு இணைத்துப் பேசியதைக் குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என்று யுனைட்டெடு சர்ச்சின் ஊழியர் டேவிட் மிலிகன் குறிப்பிட்டார். மேலும் “இன்று சர்ச்சுகள் காலியாகிக்கொண்டிருக்கின்றன. முக்கியமான எல்லா கிறிஸ்தவ பிரிவுகளும் தங்களுடைய உறுப்பினர்களை பேரளவில் இழந்துகொண்டிருக்கின்றன” என்பதாகவும் கூறினார். சிட்னியின் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் பிஷப் “அனேக மக்களுக்கு ஈஸ்டர் மதரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என்ற எண்ணமே சுத்தமாக இல்லை. இவர்கள் நினைப்பதெல்லாம் இது ஏதோ ஒரு அரசாங்க விடுமுறைநாள், அவ்வளவுதான்:” என புலம்புகிறார்.
பெண்களும் சளைத்தவர்கள் அல்ல
“செக்ஸ் சம்பந்தப்பட்ட வெளிப்படையான தகவல்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன. இவைகளைத் தெரிந்துகொள்வதற்கான ஆர்வத்தில் ஆண்களுக்கு சரிநிகராக பெண்களும் போட்டிப்போடுகிறார்கள்” இவ்வாறு தி நியு யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. வெப்ஸைட்டில் பெண்களுக்கு மத்தியில் பிரபலமாகி இருக்கும் செக்ஸ் ‘சைட்கள்’ என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? “ஓரளவு பாலுறவுக் காட்சிகளும் ஷாப்பிங் செய்வதும்தான்” இப்படிப்பட்ட ‘சைட்’களில் உள்ளடங்குகின்றன. பாலுறவுகளில் நாட்டமுடைய பெண்களுக்கென தயாரிக்கப்பட்ட, இப்படிப்பட்ட ‘சைட்’ முதன்முதலாக அறிமுகப்படுத்திய பிறகு, டைம்ஸ் பத்திரிகை குறிப்பிட்டதாவது: “பாலுறவு சம்பந்தப்பட்ட அப்பட்டமான தகவல்கள் நிறைந்த ஆழமான கிணற்றில் ஒரு சொட்டு நீரைப் போலிருக்கிறது. இது, பெரும்பாலும் மறைமுகமாகவே காட்டப்படுகிறது.”
ஷாப்பிங் பைத்தியம்
“பெரும்பாலான ஜெர்மனியர்களுக்கு ஷாப்பிங் செய்யவில்லையென்றால் தலையே வெடித்துவிடும்” என்பதாக க்ராஃப்ஸ்சாப்டர் நச்ரிச்டன் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. வியாபாரத்துறையின் மனோவியல் வல்லுனர் ஆல்ஃப்ரட் ஜெபேர்ட், பொருட்களை வாங்கும்போது ஆஹா, நம்மிடம் எல்லாமே இருக்கிறது என்ற மனநிறைவு இவர்களுக்கு ஏற்படுகிறது. பொருட்களுக்காக பணத்தை செலுத்தியப்பிறகு அவ்வளவுதான். ச்சே, இவ்வளவுதானா என்பதுபோல, மனநிறைவெல்லாம் மண்ணுக்குள் போய்விடுகிறது என்பதாக கூறுகிறார். சிலர் உடல்ரீதியிலும் பாதிக்கப்படுகின்றனர். “இவர்களுக்கு உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பித்து, வியர்த்து விறுவிறுக்கிறது, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளினாலும் இவர்கள் அவதிப்படுகிறார்கள்” என்பதாகவும் இவர் கூறுகிறார். ஆகவே ஏழைகளைக் காட்டிலும் அதிக வருமானமுடைய பணக்காரர்களுக்கு ஆபத்து அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்கள் ‘தனிமை, தன்னம்பிக்கை குறைவு, மனஅழுத்தம், வேலைசெய்யும் இடத்தில் பிரச்சினை’ போன்றவற்றால் பாதிக்கப்படலாம். ஷாப்பிங்கிற்கு கட்டாயமாக செல்ல வேண்டும் என்ற பழக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு ஒரு பொழுதுபோக்கு வேலை செய்வதை பழகிக்கொள்ள வேண்டும் என்பதாக ஜெபேர்ட் சிபாரிசு செய்கிறார். சமுதாயத்தில் தொடர்பு வைத்திருப்பது மிக அவசியம் என்பதாக இவர் கூறுகிறார். “இப்பழக்கத்திற்கு ஒருவர் அடிமையாகி விட்டார் என்பதை மற்றவர்களுடைய உதவியில்லாமல் கண்டுபிடிப்பது கூடாத காரியம். கடன் என்ற பெருங்கடலில் மூழ்கிவிட்டப்பிறகும் கடைசி கிரடிட் கார்டும் காலியானபிறகுதான் இப்பிரச்சினை தெரியவருகிறது” என்பதாக ஜெபேர்ட் சொல்லுகிறார்.
தீவிர கண்காணிப்பில் பிள்ளைகள்?
பள்ளிகளில் அடாவடித்தனம் செய்பவர்களிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க ஏதாவது வழி இருக்கிறதா? அனேக ஜப்பானிய பெற்றோர்கள், தனியார் துப்பறியும் நிறுவனங்களை இந்த வேலைக்கு அமர்த்தியிருக்கின்றனர். த டெய்லி யோமியுரி என்ற செய்தித்தாளின்படி, ஒஸகா சிட்டி யுனிவர்சிட்டியின் போராசிரியர் ஒருவர் 6,000 மாணவர்களிடமாக ஒரு சுற்றாய்வை நடத்தினார். “சாதாரணமாக பள்ளியில் மற்றவர்கள் தங்களிடம் செய்யும் வீம்புச்செயல்களை தங்களுடைய குடும்பத்தினரிடம் எப்படியாவது மறைக்க வேண்டும் என்றே பிள்ளைகள் விரும்புகிறார்கள். இவ்விதமாக அடாவடித்தனம் செய்பவர்களை தடுக்கவோ, அல்லது ‘பதிலுக்கு திருப்பி ரெண்டுபோடு போடுவதற்கு உனக்கு தெம்பில்லையா’ என்றோ சொல்லி வீட்டில் மானத்தை வாங்கிவிடுவார்கள் என்பதாக பயப்படுகிறார்கள்” என இப்பேராசிரியர் குறிப்பிடுகிறார். தங்களுடைய பிள்ளைகள் பள்ளியில் மற்றவர்களால் நச்சரிக்கப்படுகிறார்கள் என்பதாக பெற்றோர் சந்தேகப்பட்டால் அப்பொழுது என்ன? பேசுவதை ஒட்டுக்கேட்கும் கருவியை தங்களுடைய பிள்ளைகளிடம் அவர்களுக்கு தெரியாமலேயே வைத்துவிடுகிறார்கள். தனியார் துப்பறியும் நிறுவனத்தினரை சில பெற்றோர்கள் வாடகைக்கு வைத்துள்ளனர். இத்துப்பறியும் துறையினர் “பிள்ளைகளை விழிப்புடன் சற்று தூரத்திலிருந்து கண்காணித்து, இவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துபவர்களைப் பற்றி ஆதாரம் சேகரிக்கிறார்கள். இதுமட்டும்தானா? பிள்ளையின் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நிமிடமே காவல் தூதனைப் போல பாய்ந்து சென்று பிள்ளையை காப்பாற்றிவிடுவார்கள்.” இப்படியாக “பிள்ளைகளை வேவு பார்ப்பது ஒரு வெறுப்பூட்டும் நடவடிக்கை. இதனால் வயதானவர்களிடம் நம்பிக்கையும் ஆதரவையும் அதிகமாக தேடும் பிள்ளைகள் அவர்களை விட்டு விலகுவதற்கே வழிநடத்தும்” என்பதாக பிள்ளைகளின் சார்பாக வாதாடுபவர்கள் சொல்வதாக இச்செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஆனால் பெற்றோர்களோ வேறுவிதமாக உரிமைபாராட்டுகிறார்கள். வழக்கமாக பிரச்சினையிலுள்ள பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களோடு தொடர்பு கொள்ள முடிவதில்லை. ஆகவே இச்சந்தர்ப்பத்தில் இதைவிட்டால் வேறுவழியில்லை என்பதாக பெற்றோர்கள் சொல்லுகிறார்கள்.