அதைப் பற்றி ஏன் பேச வேண்டும்
“இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரை கூர்மதியாளராக்கலாம்.”—நீதிமொழிகள் 27:17, பைபிள்.
இரண்டு கத்தியை ஒன்றோடொன்று அடிப்பதால் கூர்மையாக்க முடியாது. கூர்மையாக்குவது என்பது பட்டும்படாமல் மிக மென்மையாக செய்யப்பட வேண்டிய ஒரு செயல். அதைப் போலவே, சம்பாஷணையால் மனதை கூர்மையாக்குவதற்கு சரியான மற்றும் தவறான வழிகள் இருக்கின்றன, முக்கியமாக மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் விஷயங்களில்.
முதலாவதாக, பிறருடைய கண்ணியத்திற்கு மதிப்புக் கொடுத்து, அதை சொல்லிலும் செயலிலும் காட்ட வேண்டும். “உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்று சொல்கிறது பைபிள். (கொலோசெயர் 4:6) பேசுகிறவர் தான் சொல்வதுதான் சரி, மற்றவர் சொல்வது தவறு என்று உறுதியாக நம்புகிறபோதும்கூட, கிருபை பொருந்திய, சாரமேறின பேச்சு கொள்கைப்பிடிப்பு தொனியில் இருக்கக்கூடாது.
பேச்சை நாம் கவனிக்கும் முறையிலும் கிருபை பொருந்திய தன்மை பிரதிபலிக்கப்படுகிறது. பேசிக்கொண்டிருக்கும்போது நாம் இடையில் குறுக்கிட்டால் அல்லது நம்முடைய அடுத்த விவாதத்திற்காக மனதில் யோசனை பண்ணிக்கொண்டிருந்தால், நாம் கிருபைபொருந்திய விதத்தில் கவனிக்க முடியாது. கேட்பவருக்கு தன்னுடைய கருத்தில் அக்கறையில்லை என்பதை பெரும்பாலும் பேசுகிறவரே கண்டுபிடித்து அந்த சம்பாஷணைக்கு அத்தோடு முற்றுப்புள்ளி வைத்துவிடுவார். மேலும், நாம் ஒருபோதும் வற்புறுத்தவோ அல்லது அவருடைய கருத்துக்களை மாற்றிக்கொள்ளும்படி சத்தாய்க்கவோ கூடாது. சொல்லப்போனால், நன்கு செவிகொடுத்துக் கேட்போருடைய இருதயத்தை திறந்து ‘சத்தியத்தின் விதையை விளையச் செய்கிறவர் தேவனே.’—1 கொரிந்தியர் 3:6, NW.
அப்போஸ்தலன் பவுலின் சிறந்த முன்மாதிரி நமக்கு இருக்கிறது, அவர் தன்னுடைய ஊழியத்தில் ‘நியாயங்காட்டி பேசும்’ மற்றும் ‘நம்பும்படி பேசும்’ முறையை பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 17:17, NW; 28:23, 24, பொ.மொ.) மக்களை எங்கெல்லாம் கண்டாரோ அங்கெல்லாம் அவர்களிடம் மதத்தைப் பற்றி பேசினார். உதாரணமாக, சந்தைவெளியிலும் வீடுகளிலும் பேசினார். (அப்போஸ்தலர் 17:2, 3; 20:20) மக்கள் எங்கெல்லாம் கண்ணில் படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று பைபிளிலிருந்து அவர்களிடம் நியாயங்காட்டிப் பேசுவதன் மூலம் யெகோவாவின் சாட்சிகள் இந்த மாதிரியைப் பின்பற்ற முயலுகின்றனர்.
தப்பெண்ணங்களை தகர்த்தல்
இஸ்ரவேல் தேசத்தார் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அப்பொழுதுதான் குடியேறியிருந்தார்கள்; அந்தச் சமயத்தில், பலிபீடத்தைப் பற்றிய தப்பெண்ணம் உள்நாட்டுப் போராக வெடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது. யோர்தான் நதிக்கு கிழக்குப் புறத்தில் குடியேறிய ஜனங்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள், ஆனால் அது பொய் வணக்கத்திற்கான பலிபீடம் என மற்ற கோத்திரத்தார் தவறாக நினைத்துக்கொண்டார்கள். ஆகவே, தங்களுடைய இனத்தாருக்கு பாடம் புகட்டுவதற்காக அவர்களோடு யுத்தம்பண்ண ஆயத்தமானார்கள். ஆனால் விவேகமே வென்றது. அந்தப் பலிபீடம் கட்டியதற்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக, வலியப்போய் தாக்கவிருந்தவர்கள் முதலில் ஒரு பிரதிநிதிக் குழுவை அனுப்பினார்கள். யெகோவாவிற்கு முன்பு தங்களுடைய ஒற்றுமையை எல்லா கோத்திரத்தாரும் நினைவில் வைப்பதற்கு அது வெறுமனே ஒரு நினைவுச்சின்னம்—‘ஒரு சாட்சி’—என்பதை அறிந்துகொண்டபோது, அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். மூளவிருந்த சண்டைக்கு—பறிபோகவிருந்த அநேக உயிர்களுக்கும்தான்—அந்தப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை போட்டது!—யோசுவா 22:9-34.
அதைப் போலவே, இன்று பெரும்பாலும் பகைமைக்கும் தப்பெண்ணத்திற்கும் உரம்போடுவது தப்பபிப்பிராயங்களே. உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகள் இரத்தமேற்ற மறுப்பதைப் பற்றிய அறிக்கைகளைக் கேட்டு அவர்களை மத வெறியர்கள் என சிலர் முத்திரை குத்தியிருக்கின்றனர். ஆனால் இந்த விஷயத்தைப் பற்றி சாட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் கேட்டவர்களோ, அவர்களுடைய நிலைநிற்கைக்கு வேதப்பூர்வ ஆதாரம் இருக்கிறது என்பதையும், பாதுகாப்பான, பலன்தரும் மாற்று சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதையும் அறிந்துகொள்கையில் அவர்களுக்கு சந்தோஷ ஆச்சரியம். (லேவியராகமம் 17:13, 14; அப்போஸ்தலர் 15:28, 29) சொல்லப்போனால், சேமிக்கப்பட்ட இரத்தத்தால் வரும் பிரச்சினைகளால் ஒரு பத்திரிகையாளர் இவ்வாறு எழுதினார்: “இரத்தத்திற்கான மாற்று முறைகளைக் கண்டுபிடிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் முன்னோடிகளாய் திகழ்வதற்காக கடவுளுக்கு நன்றிசெலுத்துங்கள்.”
அதைப் போலவே, யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்துவை நம்புவதில்லை என்ற பொய் பிரச்சாரத்தால் சிலர் அவர்களுடன் பேச மறுத்திருக்கின்றனர். இது, உண்மையிலிருந்து எவ்வளவு வெகுதூரம்! சொல்லப்போனால், நம்முடைய இரட்சிப்பில் இயேசு வகிக்கும் முக்கிய பாகத்தை சாட்சிகள் வலியுறுத்திக் கூறுகின்றனர். பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்களை மீட்பதற்கு கடவுளால் பூமிக்கு அனுப்பப்பட்ட அவருடைய குமாரன் என விளக்குகின்றனர். இந்த விஷயத்தைப் பற்றி சாட்சிகளுடன் பேசுவதன்மூலம், மக்கள் தங்களுடைய தப்பெண்ணத்தை தகர்த்தெறிந்திருக்கின்றனர்.—மத்தேயு 16:16; 20:28; யோவான் 3:16; 14:28; 1 யோவான் 4:15.
சத்தியம்—பிரபலமானதா பிரபலமற்றதா?
பிரபலமான வழியே பொதுவாக தவறான வழியாக இருக்கிறது என்பதுதான் மதத்தைப் பற்றிய விஷயத்திற்கு வருகையில் அநேகருக்கு ஆச்சரியமளிக்கும் விஷயம். இயேசு கிறிஸ்துதாமே இவ்வாறு போதித்தார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.”—மத்தேயு 7:13, 14.
நோவாவின் நாளில் எட்டு பேர் மட்டுமே, அதாவது நோவா, அவருடைய மனைவி, அவருடைய மூன்று மகன்களும், மருமகள்களும் மட்டுமே ஆன்மீக சத்தியத்தைப் பேசினார்கள். அவர்கள் கொடுத்த எச்சரிப்பு செய்திகளும் பேழையைக் கட்டும் அவர்களுடைய வேலையும் அவர்களை கேலிக்குரியவர்களாக்கியது, இழிவும் படுத்தப்பட்டார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பயந்து ஒடுங்கிவிடவில்லை. அவர்கள் தொடர்ந்து பிரசங்க வேலையையும் பேழையை கட்டும் வேலையையும் செய்தார்கள். (ஆதியாகமம் 6:13, 14; 7:21-24; 2 பேதுரு 2:5) அதைப் போலவே, மூன்று நபர்கள் மட்டுமே கடவுளுடைய வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து சோதோம் கொமோராவின் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்தார்கள்.—ஆதியாகமம் 19:12-29; லூக்கா 17:28-30.
நம்முடைய நாளைப் பற்றியென்ன? “கிறிஸ்து மறுபடியும் மனிதனாக வந்தால், மக்கள் ஒருவேளை மறுபடியும் அவரை கொன்றுவிடுவார்கள்” என்று ஒருவர் யெகோவாவின் சாட்சியிடம் சொன்னார். இயேசுவின் போதனைகளும் அவருடைய உயர்ந்த ஒழுக்க தராதரங்களும் 2,000 வருஷங்களுக்கு முன்பு எப்படி இருந்ததோ அதேபோல பிரபலமற்றதாக இருக்கும் என அந்த நபர் கருதினார். இதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?
ஒத்துக்கொள்கிறீர்களென்றால், அது சரியே. ஏனென்றால் இயேசு தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு எச்சரித்தார்: “என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” இது உண்மையென நிரூபணமான ஒரு முன்னறிவிப்பு. (மத்தேயு 24:9) ரோமிலிருந்த யூத தலைவர்கள் கிறிஸ்தவத்தைப் பற்றி அப்போஸ்தலன் பவுலிடம் இவ்வாறு சொன்னார்கள்: ‘எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசப்படுகிறது.’ (அப்போஸ்தலர் 28:22) ஆனால், கிறிஸ்தவம் வரவேற்கப்படாதபோதிலும், கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதை நிறுத்திவிடவில்லை. உண்மை மனமுள்ள ஆட்களும் கிறிஸ்தவர்களிடம் பேசுவதை நிறுத்திவிடவில்லை.—அப்போஸ்தலர் 13:43-49.
முன்னொருபோதையும்விட இன்று இயேசுவின் செய்தி அதிக முக்கியம். ஏன்? நாம் இப்பொழுது இந்த ஒழுங்குமுறையின் கடைசி நாட்களில் வாழ்ந்துவருகிறோம் என்பதையும், இது உச்சக்கட்டத்தை அடைகையில் பூமியிலிருந்து பொல்லாப்பு துடைத்தழிக்கப்படும் என்பதையும் உலக நிலைமைகள் காட்டுகின்றன. இயேசு நம்முடைய நாட்களை நோவாவின் நாட்களுக்கு ஒப்பிட்டுப் பேசினார். (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:37-39) ஆகவே, நம்முடைய நம்பிக்கைகளை ஆராயாமல் ஏனோதானோவென்று எடுத்துக்கொள்வதற்கான காலமல்ல இது. ஏனென்றால் கடவுளை அறிந்தவர்களுக்கும் ‘அவரை ஆவியோடும் உண்மையோடும் [“சத்தியத்தின்படி,” NW] தொழுதுகொள்கிறவர்களுக்கும்’ மட்டுமே நித்திய ஜீவன் வழங்கப்படும்.—யோவான் 4:24; 2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10.
சரியான பாதையை கண்டுகொள்வது எப்படி
“சீர்தூக்கி, சிந்தித்துப் பாருங்கள்” என 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கில தத்துவஞானியும், கட்டுரையாளரும், சட்ட வல்லுநரும், அரசியல் மேதகையுமான பிரான்ஸிஸ் பேக்கன் சத்தியத்தை தேடுவோருக்கு அறிவுரை கொடுத்தார். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் சொன்னார்: “நல்ல விதத்தில் பகுத்தறிவை உபயோகிப்பதும், யாராலும் கட்டுப்படுத்தப்படாத முறையில் தகவல்களை பெறுவதுமே பிழைக்கு எதிரான பலன்தரும் காரணிகள். . . . இவை பிழைக்கு இயற்கை எதிரிகள்.” ஆகவே, நாம் உண்மையிலேயே சத்தியத்திற்காக தேடுவோமாகில், “சீர்தூக்கி, சிந்தித்துப் பார்க்கவும்” “நல்ல விதத்தில் பகுத்தறிவை உபயோகிப்பதையும், யாராலும் கட்டுப்படுத்தப்படாத முறையில் தகவல்களை பெறுவதையுமே“ நாடுவோம்.
இப்படிப்பட்ட அணுகுமுறை ஏன் இன்றியமையாதது என்பதை அடையாளம் கண்டுகொள்ள பிரிட்டிஷ் விஞ்ஞானி சர் ஹெர்மன் பான்டி இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரேவொரு விசுவாசமே உண்மையான விசுவாசமாக இருக்க முடியும். ஆகவே எல்லா ஜனங்களும் தவறான விசுவாசத்தை உறுதியாகவும் நேர்மையாகவும் பிடித்துக்கொள்ளும் வாய்ப்பு மதத்தை பொருத்தவரை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தக் கருத்து உண்மையாக இருப்பதால், ஒருவர் ஓரளவு மனத்தாழ்மை காண்பிக்க வேண்டிய அவசியமிருக்கிறது; ஒருவருடைய விசுவாசம் எவ்வளவுதான் உறுதியாக இருந்தாலும் அது தவறாக இருக்கலாம்.”
ஆகவே, ‘ஜீவனுக்கு வழிநடத்தும் நெருக்கமான பாதையில்’ சென்றுகொண்டிருக்கிறாரா என்பதை உண்மையிலேயே ஒருநபர் எப்படி தீர்மானிக்கலாம்? கடவுளை ‘சத்தியத்தின்படி’ வணங்க வேண்டும் என்று இயேசு கற்பித்தார். இரண்டு போதனைகள் ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருந்தால், இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வர நியாயம் உந்துவிக்கிறது. உதாரணமாக, மரணத்துக்கு பின் வாழும் ஓர் ஆத்துமா மனிதருக்கு இருக்கிறது அல்லது இல்லை. மனித விவகாரங்களில் கடவுள் குறுக்கிடப் போகிறார் அல்லது குறுக்கிடப் போவதில்லை. கடவுள் ஒரு திரித்துவம் அல்லது திரித்துவமல்ல. சத்தியத்தை தேடுவோர் இப்படிப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கு உண்மையான பதிலை கண்டடைய விரும்புகின்றனர். கடவுள் தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் பதில்களைக் கொடுத்திருக்கிறார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர். a
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவனுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.’ எனவே, பைபிளை வைத்து அளவிடுவதே பல்வேறு போதனைகளை பரிசோதனை செய்துபார்ப்பதற்கு சிறந்த வழி. (2 தீமோத்தேயு 3:16, NW) அப்படி செய்தால், ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று ஊர்ஜிதப்படுத்திக்கொள்கிறீர்கள்.’ (ரோமர் 12:2, NW) உங்களுடைய நம்பிக்கைகள் பைபிளில் வேரூன்றப்பட்டுள்ளது என்பதை ‘உங்களுக்கு நீங்களே ஊர்ஜிதப்படுத்த’ முடியுமா? அவ்வாறு செய்வது முக்கியம், ஏனென்றால் ‘உலகமனைத்தோடும்’ நீங்கள் தவறாக வழிநடத்தப்பட கடவுள் விரும்புவதில்லை.—வெளிப்படுத்துதல் 12:9.
போதகர்கள் அவசியமா?
இயேசு தம்முடைய சீஷர்களிடம் சில சுருள்களைக் கொடுத்துவிட்டு. “உங்களுடைய கேள்விகளுக்கெல்லாம் இதில் பதில் இருக்கிறது, வீட்டுக்குப் போய் நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்” என்று சொல்லவில்லை. அதற்கு மாறாக, கடவுளுடைய வார்த்தையை பொறுமையோடும் அன்போடும் அவர்களுக்குப் போதித்தார். அவருடைய போதனைகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவருடைய வழிமுறைகளை பின்பற்றி மற்றவர்களுக்கு போதித்தார்கள். பிலிப்பு என்ற சீஷனுடைய முன்மாதிரியை எடுத்துக்கொள்ளுங்கள். யூதர்களுடன் தொடர்புகொண்டதால் பைபிளைப் பற்றி தெரிந்திருந்த நேர்மையுள்ள எத்தியோப்பிய அதிகாரியிடம் அவர் பேசினார். ஆனால் அந்த மனிதனுக்கு உதவி தேவைப்பட்டது. ஆகவே, பிலிப்பு—கிறிஸ்தவ சபையின் ஒரு பிரதிநிதி—அவருக்கு உதவிசெய்ய அனுப்பப்பட்டார். மதத்தைப் பற்றி பேசுவதற்கு இந்த அதிகாரி விருப்பமற்றவராக இருந்திருந்தால், கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பாகத்தை கற்றிருக்க மாட்டார். சத்தியத்தை தேடும் அனைவருக்கும் இந்த எத்தியோப்பியன் என்னே ஒரு சிறந்த முன்மாதிரி!—அப்போஸ்தலர் 8:26-39.
இந்த எத்தியோப்பியனைப் போல உங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றி பேசவும் கேள்விகள் கேட்கவும் நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி செய்தால், நிச்சயமாகவே அநேக பலன்களை அறுவடை செய்வீர்கள். பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்பும் மக்களிடம் யெகோவாவின் சாட்சிகள் அதைப் பற்றி பேச மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். சாட்சிகள் தங்களுடைய சொந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும்படி அல்ல, பைபிள்தாமே என்ன சொல்கிறது என்பதை மக்களுக்கு காண்பிக்க முயலுகிறார்கள்.
நம்முடைய இரட்சிப்புக்காக இயேசுவை கடவுள் எவ்வாறு பயன்படுத்தப் போகிறார் என்பதைப் பற்றிய அற்புதமான சில விஷயங்களை அந்த எத்தியோப்பிய அதிகாரி கற்றுக்கொண்டார். இன்று, கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றம் அதன் முடிவை நோக்கி நெருங்கி வருகிறது. இங்கே பூமியிலேயே, அச்சமூட்டும், வியத்தகு காரியங்கள் நடைபெறவுள்ளன. பூமியிலுள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள் என்பதை பின்வரும் கட்டுரை காண்பிக்கும். நிச்சயமாகவே, நாம் எவ்விதம் பாதிக்கப்படுவோம் என்பது நம்முடைய மனப்பான்மையிலும் நாம் எடுக்கும் நடவடிக்கையிலுமே சார்ந்திருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதற்கான அத்தாட்சிக்காக, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தை தயவுசெய்து காண்க.
[பக்கம் 7-ன் படம்]
எத்தியோப்பிய அதிகாரி பைபிள் கலந்துரையாடலை வரவேற்றார்