உலகை கவனித்தல்
மாறுவேடத்தில் நிகோடின்
மருந்து கம்பெனிகள் தயாரித்து வெளியிட்டிருக்கும் நிகோடின் கலந்த சூயிங் கம், நிகோடின் கலந்த பேன்டேஜ் போன்றவை மார்க்கெட்டில் உலா வருகின்றன. நமது உடல் இந்த பேன்டேஜில் உள்ள நிகோடினை தோல் வழியாக உரிஞ்சிக்கொள்கிறது. இவை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு முழுக்கு போடுவதற்கு குறுகிய கால நிவாரணியாக இருக்கின்றன. இப்படிப்பட்ட தயாரிப்புகளை பொதுவாக ஆறிலிருந்து பன்னிரெண்டு வாரங்களுக்குமேல் பயன்படுத்தக்கூடாது. இருந்தபோதிலும் அநேக புகை மன்னர்கள் பல வருடங்களாக இதுவே கதியாக இருப்பதாக த உவால் ஸ்டீர்ட் ஜர்னல் அறிவிக்கிறது. தாங்கள் விற்பனை செய்யும் நிகோடின் கலந்த இந்த தயாரிப்புகளை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்; இதற்காக அரசாங்க சட்டங்களில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என இந்த கம்பெனிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளன. இத்தயாரிப்புகளை பயன்படுத்துவோரில் அநேகர் நிகோடினுக்கு அடிமைகளாகி விடுவார்கள் என்பதைக் குறித்து சில கம்பெனிகளுக்கு கொஞ்சங்கூட கவலையே இல்லை. ஆனால் மருந்து கம்பெனிகளின் நிலை, கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை போல்தான். பொதுமக்களை புகைப்பதற்கு அடிமைகளாக்கி லாபம் சம்பாதிக்கின்றன என்ற பெயரை புகையிலைக் கம்பெனிகள் பெற்றிருக்கின்றன. ஆகவே தாங்களும் அதே கெட்ட பெயரையும் பெறுவதற்கு இந்த மருந்து கம்பெனிகளுக்கு விருப்பமில்லை. கலிபோர்னியாவின் பாலோ அல்டோவிலுள்ள நுரையீரல் சார்ந்த நோய்தடுப்பு மையத்தின் இயக்குநர் டேவிட் சாச்ஸ் சொல்லுகிறார்: “சந்தேகமில்லாமல் எல்லா மருந்து கம்பெனிகளும் இந்த வியாபாரத்தில் சக்கைப்போடு போடலாம் என நினைக்கின்றன.”
தரையில் மூழ்கும் நகரம்
“மெக்ஸிகோ நகரம் மூழ்கிக் கொண்டிருக்கிறது” என்கிறது த நியூ யார்க் டைம்ஸ். “தலைநகரில் குவிந்திருக்கும் 1.8 கோடி குடிமக்களின் தாகத்தை தீர்ப்பதற்காக தண்ணீர் அளவுக்கதிகமாக பூமிக்கடியிலிருந்து இறைக்கப்பட்டிருக்கிறது. படுவேகமாக தரையின் கீழ்ப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதே இதன் விளைவு.” இப்பிரச்சினையை மோசமாக்கும் வேறொன்றும் இருக்கிறது. “உலகத்திலேயே அதிகமான ஓட்டை உடைசலான தண்ணீர் பைப்புகளை கொண்டிருக்கும் நகரங்களில் மெக்ஸிகோவும் ஒன்று. இறைக்கப்படும் ஒரு லிட்டர் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு பைப்புகளிலிருந்து கசிந்து வீணாகிவிடுகிறது.” ஆகவே இன்னும் அதிகமான அளவு தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்படுகிறது. இதன் விளைவாக தரைமட்டமும் கீழ்நோக்கி இறங்கிக்கொண்டே இருக்கிறது. ரிப்பேர் மேன்கள் வருடத்திற்கு 40,000 ஓட்டைப் பைப்புகளை ரிப்பேர் செய்கின்றனர். இருப்பினும் பல ஓட்டை உடைசல்கள் புகார் செய்யப்படாமலேயே போகின்றன. மூழ்கிக்கொண்டிருக்கும் நகரம் மெக்ஸிகோ மட்டும்தான் என நினைத்து விடாதீர்கள். இந்த இருபதாம் நூற்றாண்டில் இத்தாலியில் உள்ள வெனிஸும் தனது பங்கிற்கு 23 சென்டிமீட்டர் கீழ்நோக்கி பயணித்திருக்கின்றது. ஆனால் மெக்ஸிகோ நகரமோ 9 மீட்டர் மூழ்கிவிட்டது!
திருந்தாத பிஞ்சுகள்
த நியூ யார்க் டைம்ஸ் அறிவிப்பதை பாருங்கள். 16,262 அமெரிக்க இளசுகளிடம் நடத்தப்பட்ட சுற்றாய்வின் முடிவுகள் இவை: இவர்களில் ஏறக்குறைய ஐந்து பேரில் ஒருவர் ஆயுதத்தை கைவசம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பத்து பேரில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்ததும் தெரிய வந்திருக்கிறது. தேசமுழுவதுமுள்ள 151 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இச்சுற்றாய்வில் உட்படுத்தப்பட்டனர். இம்மாணவர்களின் அன்றாட மற்றும் செக்ஸ் நடவடிக்கைகள் சம்பந்தமாக இரகசிய ஆய்வு நடத்தப்பட்டது, மேலும் போதைப்பொருட்கள், மதுபானங்கள், புகையிலை போன்றவற்றைப் பயன்படுத்துவதில் மாணவச் செல்வங்கள் எந்தளவுக்கு கில்லாடிகளாக இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள இரகசியமாக பாதுகாக்கப்படும் கேள்வித்தாள்கள் பயன்படுத்தப்பட்டன. தீராநோய்த் தடுப்பு மற்றும் மறுவாழ்வு தேசிய மையத்தைச் சேர்ந்த லாரா கான் குறிப்பிடுகிறார்: “தங்களுக்கு இப்பொழுதே காயம் அல்லது மரணத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் எதிர்காலத்தில் தீராநேய்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் அநேக இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதே கற்றுக்கொண்ட பாடம்.”
மிட்ச் சூறாவளியின் சீற்றம்
மத்திய அமெரிக்காவை அக்டோபர் 27, 1998-ல் ஹரிகேன் மிட்ச் என்ற கடும் சூறாவளி பதம் பார்த்தது. இதன் விளைவாக 11,000-க்கும் அதிகமான மனித உயிர்கள் சவக்குழிக்கு அனுப்பப்பட்டன. இன்னும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போய்விட்டதாகவோ அல்லது இறந்துவிட்டதாகவோ அஞ்சப்படுகின்றனர். கிட்டத்தட்ட 23 லட்சம் பேர் வீடுவாசலை இழந்துவிட்டதாக தெரிய வருகிறது. ஹாண்டுராஸ், நிகரகுவா ஆகிய இடங்களில் புயலின் தாக்குதல் கடுமையாக இருந்தது. நாட்டுப்புற பண்ணைகளில் ஒரு மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாயிருந்தது. எனவே கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களில் மகா மோசமான பேரழிவு இதுதான் என்பதாக விவரிக்கப்படுகிறது. பெருக்கெடுத்து ஓடிய சேற்று வெள்ளத்தினாலும் தண்ணீர் வெள்ளத்தினாலும் பல கிராமங்கள் உண்மையிலேயே அடித்துச் செல்லப்பட்டன. ஹாண்டுராஸின் ஜனாதிபதி கார்லஸ் ஃப்லோர்ஸ் பாகுஸ்ஸி புலம்பினார்: “50 வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாக கட்டிய எல்லாம் 72 மணிநேரத்தில் நாசமாக போய்விட்டன.” மரணமும் அழிவும் போட்டிப் போட்டதோடு தனிமைப்படுத்தலும் தேசத்தை ஒரு வழியாக்கின. கடும் சூறாவளியின் பாதையில் இருந்த அநேக கிராமங்களின் மின்சார மற்றும் தொலைபேசி தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சாலைகளும் பாலங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இதன் விளைவாக இக்கோரமான புயலில் தப்பியவர்கள் உணவு, சுத்தமான தண்ணீர், மருந்துகளில்லாமல் தவித்தனர். நிவாரணக் குழுக்கள் போதுமான உணவுப்பண்டங்களை கையிருப்பில் வைத்திருந்தபோதிலும் அவற்றை விநியோகிப்பதற்கு வழியில்லாமல் தத்தளித்தன. பொருட்சேதம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் பெரும்பாலானோர் தங்களது வேலைகளையும் இழந்தனர். வாழை, தர்பூசணி, காபி பீன்ஸ், நெல் போன்ற முக்கியமான தானியங்களில் 70 சதவிகிதம் நாசமாக போய்விட்டன. “இந்த சூறாவளியோடு ஒப்பிடுகையில் 1974-ல் ஏற்பட்ட ஹரிகேன் பிப்பி என்ற சூறாவளி ஒன்றுமேயில்லை. ஏனெனில் இந்த பிப்பியின் பாதிப்பை சரிசெய்வதற்கு 12-லிருந்து 14 வருடங்கள்தான் எடுத்தன. ஆனால் இப்பொழுது கதையே வேறு. நாம் பழைய நிலைக்கு வருவதற்கு 30-லிருந்து 40 வருடங்கள் ஆகும்” என்கிறார் ஹாண்டுராஸின் துணை ஜனாதிபதி வில்லியம் ஹாண்டல்.
கூச்சத்திற்கு டாட்டா
“சுமார் 13 சதவிகித பெரியவர்கள் மிகவும் அதிக கூச்ச சுபாவமுள்ளவர்களாக இருக்கின்றனர்” என்பதாக கனடாவின் டோரன்டோ ஸ்டார் அறிக்கையிடுகிறது. மேலுமாக வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் அனுபவிப்பதிலிருந்து கூச்ச சுபாவம் இவர்களை தடுக்கிறது என்பதாக இச்செய்தித்தாள் குறிப்பிடுகிறது. இந்த சுபாவத்தை உங்களால் தகர்த்தெறிய முடியுமா? நிபுணர்களின் பரிந்துரைகளை கவனியுங்கள்: “அக்கம்பக்கத்தில் நடந்த சம்பவங்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், விருப்ப வேலைகள், திரைப்படங்கள் போன்றவற்றை உரையாடல்களை தொடங்குவதற்கு மூலதனமாக உபயோகிக்கலாம்.” “வார்த்தைகள் மூலமாகவும் வார்த்தைகள் இல்லாமலும் தகவல்களை பரிமாறிக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்; இதில் கண்களினால் தொடர்பு ஏற்படுத்துவதும் மற்றவர்கள் பேசும்போது கவனமாக செவி கொடுப்பதும் அடங்கும்.” “நீங்கள் பயந்து நடுங்கும் செயல்களை செய்வதற்கு உங்களை நீங்களே கட்டாயப்படுத்துங்கள்.” “ஒருவேளை உங்களுடைய பிள்ளைக்கு கூச்ச சுபாவம் இருந்தால் அதை சமாளித்து சமூகத்தோடு ஒத்து வாழ்வதற்கு நீங்கள் ஏராளமான வாய்ப்புகளை உங்கள் பிள்ளைக்கு ஏற்படுத்தித்தர வேண்டும்.” உங்களது முயற்சியில் தளர்ந்து விடாதீர்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறீர்களோ அந்தளவுக்கு போகப்போக எல்லாம் எளிதாகிவிடும் என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.
நாம் இருவர்—நமக்கெதற்கு ஒருவர்?
‘தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது’ என்பதாக பாரீஸின் இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் அறிக்கையிடுகிறது. ஏனெனில் வயதாகிக்கொண்டிருக்கும் தாத்தா பாட்டிமாரை கவனிப்பதற்கு, எதிர் காலத்தில் போதுமான இளைஞர்கள் இருக்க மாட்டார்கள். உதராணமாக சில ஐரோப்பிய நாடுகளை எடுத்துக்கொள்ளுங்களேன். இங்கு 60 வயதையும் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 20-க்கும் குறைவான வயது நிரம்பிய இளைஞர்களைக் காட்டிலும் அதிகம். வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாவதற்கு சொல்லப்படும் காரணங்கள் பின்வருமாறு: அநேக தம்பதிகள் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுகின்றனர். பயணம் செய்வதற்காகவும் வேலையை தொடருவதற்காகவும் படிப்பில் முன்னேறுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். இப்போது நிலவும் பொருளாதார அழுத்தத்தில் இன்னொரு “பாரத்தைப்” பெற்றுக்கொண்டு யார் அவஸ்தைப்படுவது? என்றும் பிள்ளைகளை “தொந்தரவாகவும்” கருத ஆரம்பித்துவிட்டனர். முன்பு இருந்ததைவிட இப்போது ஜனங்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்பதும் இதற்கு காரணம்.
சீட் பெல்ட்—கடவுளுடைய சித்தத்திற்கு விரோதமானதா?
பயணம் செய்யும்போது பாதுகாப்பிற்காக பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என்கிறது நெதர்லாந்தின் பாதுகாப்பு சட்டம். 65 வயதான ஒருவர் தன்னுடைய மதநம்பிக்கைகளின் காரணமாக இந்த சட்டத்திலிருந்து தனக்கு விலக்களிக்க வேண்டும் என்பதாக வழக்கு தொடர்ந்தார். ஃப்ராங்க்பர்டர் அல்ஜெமினா ஷிட்டங் என்ற செய்தித்தாளின் பிரகாரம், இந்த நபர் ரிபார்ம்ட் சர்ச்சின் உறுப்பினராவார். இச்சர்ச்சின் போதனையின்படி விபத்துகளிலிருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொள்ளக்கூடாது; ஏனெனில் விபத்துகளையும் கடவுள் கொடுத்ததாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சர்ச்சின் மற்ற உறுப்பினர்கள் தங்களுடைய கார்களை இன்சூரன்ஸ் செய்வதில்லை. தடுப்பு ஊசிகளை குத்திக்கொள்ளவும் மறுக்கிறார்கள். ஏனெனில் அவை “கடவுளுடைய திட்டங்களுக்கு” இடையூறாய் இருப்பதாக நினைக்கிறார்கள். இந்த வழக்கை நெதர்லாந்தின் உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பயணம் செய்யும்போது பாதுகாப்பிற்காக பெல்ட் அணிவது ஒருவருடைய மதசுதந்திரத்தை பறிப்பதாக இல்லை என்பதாக மனுதாரருக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
கூலியில்லாத தொழிலாளி
மார்ச் 1978-ல் அமோகோ காடிஸ் என்று பெயரிடப்பட்ட கப்பல் விபத்திற்குள்ளானது. அந்தக் கப்பலிலிருந்து 2,30,000 டன் கச்சா எண்ணெய் பிரான்ஸிலுள்ள ஃப்பிரிட்டானியாவின் சுமார் 350 கிலோமீட்டர் தூர கடலோரப் பகுதியை மாசுபடுத்திவிட்டது. இப்போது இந்த பாதிப்பின் வடு ஏதாவது தென்படுகிறதா? 1992-லிருந்து இத்தூய்மைக்கேட்டினால் ஏற்பட்ட அசுத்தம் முழுமையாக மறைந்து விட்டது. கடற்கரை மணல் அடியிலும் இதன் அட்ரஸே இல்லை என்கிறார் மார்செயில்ஸ்ஸில் உள்ள விஞ்ஞான துறையின் பேராசிரியர் கில்பர்ட் மில். இப்பெரும் ‘சுத்தப்படுத்துதலுக்கான’ பேரும் புகழும் யாரைச் சேரும்? இயற்கையாகவே தண்ணீரில் வாழ்ந்து ஹைட்ரோகார்பனை சாப்பிடும் பாக்டீரியாக்களையே. இந்த நுண்ணுயிரிகளுடன் மிக நெருக்கமாக ஒத்துழைக்கும் மெல்லுடலிகளும் புழுக்களும் மணலை மேலும் கீழுமாக புரட்டிக்கொண்டே இருக்கின்றன. இதனால் தரையில் படிந்திருக்கும் எண்ணெய் மேற்பரப்பிற்கு வந்துவிடுகிறது. அங்கே அகோரப் பசியுடன் காத்திருக்கும் பாக்டீரியாக்கள் அவற்றை சாப்பிட்டு ஏப்பம்விட்டுவிடுகின்றன.
தூக்கத்தை தூங்க விடுங்கள்
அமெரிக்கர்கள் “இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் தூங்கியதை விட, இப்பொழுது ஒன்றரை மணிநேரம் குறைவாகவே தூங்குகின்றனர். இந்த பிரச்சினை இன்னும் முற்றப்போகிறது” என்பதாக நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிடுகிறது. விஸ்கான்சின் யுனிவர்சிட்டியினுடைய தடுப்பு மருத்துவத்துறை பேராசிரியர் டெரி யங் சொல்லுகிறார்: “பெரும்பாலானோர் தூக்கத்தை மிகக் குறைவாக எடை போட்டுவிடுகின்றனர். கடுமையாக வேலைசெய்து, ஆனால் குறைந்த நேரமே தூங்குவதுதான் நல்ல உழைப்பாளிக்கு அழகு என்பதாக கருதுகின்றனர்.” ஆனால் தூக்கமில்லாமை அநேக எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். மனச்சோர்விலிருந்து இருதய நோய்கள் வரைக்கும் பல நோய்களால் தாக்கப்படும் ஆபத்து இருக்கிறது. சில எலிகளுக்கு தொடர்ந்து தூக்கம் விலக்கப்பட்டது; அவை இரண்டரை வாரத்தில் இறந்து விட்டன. “இதேபோல நீங்கள் உடனடியாக சாகப்போவதில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் தூக்கமின்மை உங்களுடைய உயிருக்கே மறைமுகமாக உலை வைக்கலாம். மிகவும் சோர்வடைந்த டாக்டர், ஏதாவது ஒரு நினைப்பில் எதையோ ஒன்றை மருந்து மாத்திரையாக எழுதிக்கொடுக்கலாம். அல்லது தூங்கி வழியும் டிரைவர் உங்களது தெருவையே அளந்து கொண்டு கார் ஓட்டிச் செல்லலாம்” என்கிறது நியூஸ்வீக். தூக்கத்தை ஆராய்ந்துவரும் ஆய்வாளர் ஜேம்ஸ் வால்ஷ் பின்வருமாறு சொல்லுகிறார்: “ஜனங்கள் வேலையிலும் வாகனங்களை ஓட்டுவதிலும் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டுமென்றால், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதற்கும் குறிப்பிட்ட சமயத்தில் குட்டித்தூக்கம் போடுவதற்கும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.”
விபத்துகள்—விதியின் சதியா?
பிரேஸிலில் ஒவ்வொரு வருடமும் சுமார் 22,000 பிள்ளைகளும் இளம்பருவத்தினரும் விபத்துகளினால் மரணமடைவதாக பிரேஸிலின் சுகாதார அமைச்சகம் அறிவிக்கிறது. பல உயிர்கள் பலி ஆவதற்கு சாலைகளில் ஏற்படும் விபத்துகளே காரணம். பிரேஸில் குழந்தைகள் நல மருத்துவ சங்கத்தின் தலைவர் லின்கோன் ஃபிராரி அறிவித்தார்: “விபத்துகள் தவிர்க்கப்படலாம். இனிமேல் இவற்றை விதியின் சதி என்று சொல்ல முடியாது.” விபத்துகளை தடுப்பதற்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தெரஸா கோஸ்டா பின்வருமாறு சொல்லுகிறார்: ‘வயிற்றுப்போக்கு, மூச்சுத்திணறல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் தொற்றுநோய்களால் ஏற்படும் மரணம், கடந்த 15 வருடங்களில் குறைந்திருக்கிறது. அரசாங்கத்தின் துரிதமான நடவடிக்கைகளே இதற்கு காரணம்.’ அப்படியென்றால் விபத்துகளை தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளும் உயிர்களை கட்டாயம் காக்கும்.