மகத்தான நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்டது
முன்பு குறிப்பிட்டபடி, மக்கள் வானத்தை அண்ணாந்து பார்த்து, ‘இதெல்லாம் ஏன் அங்கே இருக்கிறது?’ என நீண்ட காலமாகவே புருவங்களை உயர்த்தியிருக்கின்றனர். இசை ஞானி ஒருவர் வெகு காலத்திற்கு முன்பாகவே புகழ்ந்து பாடினார்: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.”—சங்கீதம் 19:1.
நம் அழகிய பூமியும் இதேபோன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. உதாரணமாக, விண்கலத்தில் பயணம் செய்த விண்வெளி வீரர் இளைய சார்லஸ் எம். டியூக் இவ்வாறு வியந்து கூறினார்: “நீர், நிலம், ஆகாயம் ஆகியவற்றின் வண்ண கலவையில் பூமியே மிக அழகாக விண்வெளியில் ஜொலிக்கிறது.” அவர் மேலும் கூறினார்: “பூமியை விண்வெளியின் கருமையான பின்னணியில் பார்க்கும்போது கிட்டத்தட்ட இயற்கைக்கு அப்பாற்பட்ட மதம்சார்ந்த அனுபவமே ஏற்படுகிறது.”
மின்மினிப் பூச்சிகளாக ஆங்காங்கே சிதறி கிடக்கும் நட்சத்திர வானை பார்க்கையிலோ அல்லது பூமியின் கண்கவர் இயற்கை அழகை பருகுகையிலோ நீங்கள் எப்படி பிரதிபலிக்கிறீர்கள்? இதெல்லாம் எப்படி வந்தது, ஏன் வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
அவருடைய நோக்கத்தை பறைசாற்றுதல்
யோபுவிடம் யெகோவா இந்தக் கேள்வியைக் கேட்டார்: “நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்?” (யோபு 38:4) யோபுவிற்கு மனத்தாழ்மையை கற்றுக்கொடுப்பதற்காக இந்தக் கேள்வி கேட்கப்பட்டது, ஏனெனில் இவையெல்லாம் படைக்கப்பட்ட சமயத்தில் அவன் இல்லை. ஆனால், யோபுவுக்கு வெகு காலத்திற்கு முன்பே, கடவுள் தம்முடைய சாயலில் குமாரர்களை—ஆவி ஆட்களை, தேவதூதர்களை—படைத்தார். (சங்கீதம் 104:4, 5) ஆகவே, பூமியைப் பற்றி யோபுவிடம் தொடர்ந்து பேசும்போது கடவுள் இவ்வாறு கேட்டார்: “யார் அதன் மூலைக் கல்லை நாட்டியவர்? அப்போது வைகறை விண்மீன்கள் ஒன்றிணைந்து பாடின! . . . [தேவதூதர்] களிப்பால் ஆர்ப்பரித்தனர்!”—யோபு 38:6, 7, பொது மொழிபெயர்ப்பு.
பூமியை ஸ்தாபிக்கையில் தேவதூதர்கள் மத்தியில் ஏன் அவ்வளவு ஆராவார களிப்பு? கடவுளுடைய ஜடப்பொருள் சார்ந்த படைப்பில் பூமியே மிகவும் விசேஷமானது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். பூமி சம்பந்தமாக தம்முடைய மகத்தான நோக்கத்தைப் பற்றிய முற்காட்சியை ஒருவேளை தேவதூதர்களுக்கு கடவுள் கொடுத்திருக்கலாம். பிற்பாடு, ‘பூமியை வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்ததை,’ ஆம் பூமியில் மனிதர்கள் வாழ்ந்து அதை அனுபவிப்பதற்கு, என்றென்றும் அனுபவிப்பதற்கு படைத்ததை மனிதவர்க்கத்தினருக்கு யெகோவா வெளிப்படுத்தினார்.—ஏசாயா 45:18.
மனுஷனையும் மனுஷியையும் படைத்தப் பிறகு, பூமியைக் குறித்ததில் தம்முடைய நோக்கத்தை யெகோவா வெளிப்படுத்தினார். முதல் தம்பதியினரிடம் அவர் இவ்வாறு கட்டளையிட்டார்: “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” (ஆதியாகமம் 1:28) பிள்ளைகளைப் பிறப்பிக்கும் அற்புத வல்லமையோடு மனித ஜோடியை கடவுள் படைத்தார். இந்த முழு பூமியும் தங்கள் படைப்பாளருடைய குணங்களைப் பிரதிபலிக்கும் பரிபூரண மக்களால் நிரப்பப்பட வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.
உண்மைதான், இன்றைக்கு பூமியில் எல்லா இடங்களிலும் மக்கள் வாழ்கிறார்கள், ஆனால் படைப்பாளருக்கு புகழ்சேர்க்கும் வண்ணம் வாழவில்லை. மனிதர்கள் வியாதிப்பட்டு மரிக்கும் நிலையில் இருக்கிறார்கள், பூமியையோ அதிலுள்ள மிருக ஜீவன்களையோ தகுந்த விதத்தில் கவனிக்கவில்லை. மனிதரை யெகோவா பரிபூரணமாக படைத்தார், பூமிக்குரிய பரதீஸில் என்றும் வாழ்ந்துவரும் நீதியுள்ள மனித குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இந்த முழு பூமியையும் கொண்டுவர வேண்டும் என்பதே அவருடைய நோக்கம்.
இந்த நோக்கம் நிறைவேறும் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். ஏன்? யெகோவா வாக்குறுதி கொடுத்திருப்பதால், தம் நோக்கத்தை ‘நிறைவேற்றுவார்.’ (ஏசாயா 46:11; 55:11) அவருடைய வார்த்தை பின்வரும் உறுதிமொழியைத் தருகிறது: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29; வெளிப்படுத்துதல் 21:3, 4) தமது பக்கத்தில் மரித்த மனந்திரும்பிய பாவியிடம் கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து கொடுத்த வாக்குறுதி அநேகருக்கு ஞாபகம் வரலாம்: “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.” (லூக்கா 23:43) அது எப்படி நிறைவேறும்?
எப்படி கடவுளுடைய வார்த்தை நிறைவேறும்
கிறிஸ்து தம்முடைய அரசதிகாரத்தை முழுமையாக இந்தப் பூமியின்மீது செலுத்தும்போது, நாம் நீண்டகாலமாக ஜெபித்துவரும் பரலோக அரசாங்கத்தில் அந்தப் பாவியான ஆள் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவார். (சங்கீதம் 72:1, 5-8; மத்தேயு 6:9, 10; யோவான் 18:36, 37; அப்போஸ்தலர் 24:15) ஆனால், மரித்தோருடைய உயிர்த்தெழுதல் நிகழ்வதற்கு முன்பு, கடவுளை வணங்க மறுக்கும் அனைவரும் பூமியிலிருந்து அழிக்கப்படுவார்கள். பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்.” அது தொடர்ந்து சொல்கிறது: “அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
நற்பண்புகள் நிறைந்த மக்களால் இந்தப் பூமியை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்தை எல்லா ஞானமும் நிறைந்த நமது மகத்தான அண்டத்தின் படைப்பாளரால் நிச்சயமாகவே நிறைவேற்ற முடியும்! (ஆதியாகமம் 1:27) ஆகவே, கடவுள் இதை எவ்வாறு நிறைவேற்றுவார் என்பதை கற்றுக்கொள்ள மனிதருக்கு வாய்ப்பு அளிப்பதற்காகவே எங்குமுள்ள மக்கள் படிப்பதற்கு ஒரு புத்தகத்தை அவர் கொடுத்தார். a அ.ஐ.மா., ஒஹையோவிலுள்ள டெய்ட்டனில் வசிக்கும் ஒருவர் இதை எவ்வாறு விவரித்தார் என்பதை கவனியுங்கள்:
“இந்தப் புத்தகத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருப்பேன். கலகத்தனத்தால் ஓர் அழகிய வீடு அழிக்கப்படுவதோடு அது ஆரம்பமாகிறது. அதன்பின் துயரம், அழிவு, துன்பம், கொலை, மரணம் வந்தது. குடும்பங்கள் பெருகப் பெருக, நம்பிக்கையின்மையும் சோர்வும் அதிகரிக்க ஆரம்பித்தது. நூற்றாண்டுகள் உருண்டோடின, தேசங்கள் எழும்பின, வீழ்ச்சியுற்றன, ஆயிரக்கணக்கான ஆட்கள் வந்துபோயினர். வெறுப்பின் முழு வெளிப்பாடு முதல் கடவுளுடைய சட்டத்திற்காக உயிரையே அளித்த தியாகிகளின் அன்பு வரை எல்லாவித மனித உணர்ச்சிகளையும் பார்த்தாகிவிட்டது. நம்பிக்கை என்பது ஆரம்பத்தில் ஒளிக்கீற்றாக இருந்தாலும், முழு நிச்சயத்திற்கு வளருகிறது. ஒரு பரிபூரண அரசாங்கம் இழந்துபோன அந்த அழகிய வீட்டை மீண்டும் ஸ்தாபிக்கப் போகிறது. அதன் அரசர் கிறிஸ்து இயேசு. கடவுளுடைய ராஜ்யமே அந்த அரசாங்கம். மனித இனமே அந்தக் குடும்பம். பைபிளே அந்தப் புத்தகம்!”
மிக முக்கியமான இந்தப் புத்தகமாகிய பைபிளை நீங்கள் ஆராய்ந்து பார்க்கும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். அதோடு, இந்த அண்டமும் அதிலுள்ள அநேக அம்சங்களும் தானாக வந்துவிடவில்லை என்பதற்கான அத்தாட்சியை அலசி ஆராயும்படி உங்களை அழைக்கிறோம். உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தில் புலமைமிக்க விதத்தில் இந்த விஷயங்கள் ஆராயப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள். ஒரு பிரதியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்ற தகவலை இந்தப் பத்திரிகையின் 32-ம் பக்கத்தில் நீங்கள் காணலாம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டை காண்க.
[பக்கம் 10-ன் படம்]
‘விண்வெளியில் மிக அழகிய காட்சி’
[படத்திற்கான நன்றி]
NASA photo