மகளிரின் மாபெரும் பங்கு
யெகோவாவின் சாட்சிகளின் ஜிம்பாப்வி கிளை அலுவலகம், டிசம்பர் 12, 1998-ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சிநிரலின்போது கிறிஸ்தவ மகளிர் வகித்த மிக முக்கியமான பங்கு உயர்த்தி காட்டப்பட்டது. அந்த கிளை அலுவலகத்தின் கட்டுமான பணி நான்கு வருடங்கள் நீடித்தது. பல்வேறு நாடுகளிலிருந்து வாலண்டியர்கள்—மனமுவந்து சம்பளமின்றி வேலை செய்பவர்கள்—தங்களுடைய உதவிக்கரங்களை நீட்டினர். ஜிம்பாப்வியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்களும் இதில் அடக்கம். இவர்கள் அனைவரும் தங்களுடைய நேரம், சக்தி, திறமை மற்றும் வளங்களை இக்கட்டிட வேலைக்காக அர்ப்பணித்தனர். அவர்கள் சிந்தின வேர்வைத் துளிகள் மறுரூபமெடுத்து உருவான கட்டிட வளாக படத்தைத்தான் நீங்கள் இங்கு பார்க்கிறீர்கள்.
பின்பக்கமாக ஒரே அளவிலான 6 குடியிருப்பு கட்டிடங்கள் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இவற்றிற்கு அருகாமையிலுள்ள பெரிய கட்டிடத்தில் டைனிங் ஹால், கிச்சன், லாண்ட்ரி ஆகியவை இருக்கின்றன. குடியிருப்பு கட்டிடங்களில் 61 ரூம்கள் உள்ளன. டைனிங் ஹாலில் சுமார் 200 பேர் அமர்ந்து சாப்பிடுவதற்கு வசதியிருக்கிறது. முன்புறத்தில் இடது புறமாக அலுவலக வளாகம் இருக்கிறது. மத்திபத்தில் வரவேற்பறை அமைந்துள்ளது. இதற்கு வலது புறத்திலுள்ள கட்டிடத்தில் பிரதிஷ்டை நிகழ்ச்சி நடந்தேறியது.
நவம்பர் 1985-ல் யெகோவாவின் சாட்சிகளால் துவக்கப்பட்ட உலகளாவிய கட்டுமான திட்டத்தினால், அநேக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜிம்பாப்வி கிளை அலுவலகத்தின் அருமையான கட்டிட வளாகங்களும் இவற்றில் ஒன்று. விழித்தெழு! செப்டம்பர் 8, 1992, இத்திட்டத்தைப் பற்றி “சர்வதேச கட்டுதலில் புதியதோர் அம்சம்” என்ற கட்டுரையில் விவரித்தது.
இந்த வேலைகளில் மகளிர் வகித்த பங்கை விழித்தெழு! பின்வருமாறு அறிவித்தது: “அநேகர் [பெண்கள்] கான்கிரீட்டை பலப்படுத்தும் கம்பிகளைக் கட்டவும் ஓடுகளுக்கிடையில் சாந்து பூசவும் உப்புத்தாளை உபயோகித்து உலோக பாகங்களை தேய்க்கவும் பெயிண்ட் அடிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கின்றனர். மீதிபேர் வீட்டு வேலைகளை செய்யவும் தங்களை அர்ப்பணித்திருக்கின்றனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உலகம் முழுவதிலும் நடக்கும் கட்டுமான வேலைக்கு சிறந்த முறையில் பங்களிக்கின்றனர்.”
இந்த கட்டிட வேலையை சகோதரர்கள் ஜார்ஜ் ஈவன்ஸும், பால்சன்னும் மேற்பார்வை செய்தனர். ஜிம்பாப்வியில் கிளை அலுவலக பிரதிஷ்டை நிகழ்ச்சியில் இவர்கள் பேசினார்கள். அச்சமயத்தில், ஜிம்பாப்வியில் கிளை அலுவலக கட்டுமான பணியில் பெண்களின் பங்கையும் பூர்வ இஸ்ரவேலர் காலத்தில் கூடாரத்தை கட்டுவதில் அவர்கள் வகித்த பங்கையும் ஒப்பிட்டுப் பேசினார்கள். “பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி”னதோ அவர்கள் எல்லாரும் ‘மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும்’ வந்தார்கள் என்பதாக இஸ்ரவேலர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது.—யாத்திராகமம் 35:21, 22.
பைபிளின் இந்த பதிவைப் பயன்படுத்தி சகோதரர்கள் ஜார்ஜ் ஈவன்ஸும், பால்சன்னும் பெண்களின் பங்கை வலியுறுத்தினார்கள். இவர்கள் பின்வரும் பைபிள் பதிவை மேற்கோள் காட்டினார்கள்: ‘ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்[றார்கள்] . . . எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ [அவர்கள் உதவி செய்தனர்].’ சந்தேகத்திற்கு இடமின்றி இந்தப் பெண்கள் தங்களையே இந்த வேலைக்காக மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள். ‘செய்யப்படும்படி கர்த்தர் [“யெகோவா,” NW] மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள்.’—யாத்திராகமம் 35:25, 26, 29.
ஜிம்பாப்வி கிளை அலுவலக கட்டுமானப் பணியை பற்றி, இந்த வேலையை மேற்பார்வையிட்ட சகோதரர்கள் இவ்விதம் சொன்னார்கள்: ‘ஆண்கள் செய்த எல்லா வேலைகளையும் பெண்கள் செய்தனர்.’ கம்பிகளைக் கட்டுதல் மற்றும் கனரக இயந்திரங்களை இயக்குவது போன்ற வேலைகளும் இதில் அடங்கும். தங்களுடைய கான்கிரீட் கலவை இயந்திரங்களையும் மற்ற கனரக இயந்திரங்களையும் கொஞ்சங்கூட எவ்வித கறையுமின்றி பளபளவென்று சுத்தமாக இவர்கள் வைத்திருந்தனர் என்பதாக சகோதரர் பால்சன் வியப்புடன் சொன்னார். இந்த சுத்தம் செய்யும் வேலைகளுக்கு பொதுவாக ஆண்கள் முகம் சுழிப்பார்கள் என்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே உலகம் முழுவதும் யெகோவாவின் சாட்சிகளுடைய இராஜ்ய மன்றங்களையும் கிளை அலுவலகங்களையும் கட்டுவதில் ஆண்களோடு பல்லாயிரக்கணக்கான பெண்களும் பங்கு வகித்திருக்கின்றனர். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.
[பக்கம் 26-ன் படம்]
ஜிம்பாப்வி கிளை அலுவலகம்