சாவே இல்லாத வாழ்க்கை நம்புகிறீர்களா?
“அதிகபட்ச ஆயுட்காலமாகிய 115 முதல் 120 வருடங்களை மனித உடலுக்குள் நிகழும் ஏதோவொன்று நிர்ணயிக்கிறது” என உயிரணுவியல் பேராசிரியர் டாக்டர். ஜேம்ஸ் ஆர். ஸ்மித் குறிப்பிடுகிறார். மேலும், “மனிதனின் வாழ்நாளுக்கு ஓர் எல்லை உண்டு. ஆனால், அதை எது நிர்ணயிக்கிறது என்பதுதான் பெரும்புதிராக இருக்கிறது” என அவர் கூறுகிறார். “மனிதனின் ஆயுட்காலத்தை கூட்டுவதற்கான வழியை இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. அதைப் பற்றி அவர்களில் யாருமே இன்னும் யோசித்துக்கூட பார்க்கவில்லை” என உயிரியல் நிபுணர் ராஜர் காஸ்டன் குறிப்பிடுகிறார். இந்நிலை சீக்கிரத்தில் மாறுமா?
“மிக முக்கியமான கேள்வியை” எதிர்ப்படுதல்
வயோதிபத்தை முறியடிக்க வழி உண்டு என சொல்லும் கருத்துகளுக்கு அளவேயில்லை. இருந்தாலும், “இந்த மந்திர துப்பாக்கி குண்டுகள் எல்லாம் வெற்றுவேட்டாயின” என கூறும் வயோதிபம் பற்றி ஆராயும் அமெரிக்க சங்கத்தின் தலைவர் டாக்டர். ஜீன் கோஹனின் கருத்தை அநேக நிபுணர்களும் ஒத்துக்கொள்கின்றனர். ஏன்? ஏனென்றால், “வயோதிபம் எதனால் ஏற்படுகிறதென்றோ, அதன் விளைவாகிய மரணத்தை ஏன் தவிர்க்க முடியவில்லை என்றோ யாருக்குமே தெரியவில்லை. எதனால் ஏற்பட்டதென காரணம் தெரியாத ஒரு நோய்க்கு மருந்து கொடுத்தால் அதன் விளைவு எப்படி இருக்குமோ அதுபோல்தான் இதுவும் இருக்கிறது” என யு. எஸ். நியூஸ் அண்ட் உவோர்ல்ட் ரிப்போர்ட்டில், அறிவியல் எழுத்தாளர் நான்ஸி ஷூட் குறிப்பிடுகிறார். வயோதிபம் என்பது பெரும் புதிராகவே உள்ளது என டாக்டர். காஸ்டன் சுட்டிக்காட்டுகிறார். “நாம் அனைவருமே இதனை எதிர்ப்படுகிறோம். ஆனால், அதன் காரணம் என்னவோ மர்மாமாகவே இருக்கிறது. அது ஏன் ஏற்படுகிறது என்ற இந்த மிக முக்கியமான கேள்விக்கு” கொஞ்சமும் கவனமே செலுத்தப்படுவதில்லை என அவர் குறிப்பிடுகிறார். a
மனிதர்கள் எவ்வளவு வேகமாக ஓட முடியும் என்பதற்கும், எவ்வளவு உயரம் குதிக்க முடியும் என்பதற்கும், எவ்வளவு ஆழம் மூழ்க முடியும் என்பதற்கும் எப்படி ஒரு வரம்பு இருக்கிறதோ, அதைப்போலவே மனிதனுடைய அறிவும் சிந்தனா சக்தியும் காரியங்களை விளக்குவதற்கும் ஓர் எல்லை இருக்கிறதென்பது நன்கு புலப்படுகிறது. வயோதிபம் ஏன் ஏற்படுகிறது என்ற “இந்த மிக முக்கியமான கேள்விக்கு” பதில் சொல்வதும் அந்த எல்லைக்கு மீறியதே. எனவே, இந்த பதிலை தெரிந்துகொள்ளும் ஒரே வழி, வரம்புக்குட்பட்ட மனித அறிவுக்கு மேலான ஓர் ஊற்றுமூலத்திடம் கவனம் செலுத்துவதே. இதை நீங்கள் ஆய்வு செய்யும்படிதான், பழமையான ஞானப்புத்தகமாகிய பைபிள் சொல்லுகிறது. படைப்பாளரை, “உயிரின் ஊற்றுமூலம்” என பைபிள் சுட்டிக்காட்டுகிறது. “நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்” என உறுதியளிக்கிறார். (சங்கீதம் 36:9; 2 நாளாகமம் 15:2) அப்படியென்றால், மனிதன் ஏன் சாகிறான் என்பதற்கான உண்மையான காரணத்தைப்பற்றி, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் என்ன பதில் தருகிறது?
மரணத்தின் ஆணிவேர்
முதல் மனித தம்பதிகளை கடவுள் படைத்தபோது, “அவர்கள் இருதயங்களில் நித்தியத்தன்மையையும்” கொடுத்தார் என பைபிள் சொல்லுகிறது. (பிரசங்கி 3:11, NW) இருந்தாலும், முதல் பெற்றோருக்கு வெறுமனே நீடூழி வாழ வேண்டும் என்ற ஆசையை மாத்திரம் கடவுள் கொடுக்கவில்லை. அதற்கான வாய்ப்பையும் கொடுத்தார். எந்த விதத்திலும் குறைவற்ற உடலையும் மனதையும் கொடுத்தார். சமாதானமான சூழலையும் அவர்களுக்கு தந்தார். இந்த முதல் மனித தம்பதிகள் நித்தியகாலமாய் வாழ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். காலப்போக்கில், அவர்களுடைய பரிபூரண சந்ததியினர் பூமி முழுவதையுமே நிரப்புவார்கள் என்றும் எதிர்பார்த்தார்.—ஆதியாகமம் 1:28; 2:15.
இருந்தாலும், முடிவே இல்லாத வாழ்க்கை நிபந்தனைக்குட்பட்டதே. கடவுளுக்கு கீழ்ப்படிவதன் பேரிலேயே அது சார்ந்திருந்தது. கடவுளுக்கு கீழ்ப்படியவில்லை என்றால், ஆதாம் ‘சாகவே சாகவேண்டும்.’ (ஆதியாகமம் 2:16, 17) முதல் மனித தம்பதியினர் கீழ்ப்படியாமல் போனது வருத்தத்திற்குரியதே. (ஆதியாகமம் 3:1-6) அதனால் அவர்கள் பாவிகள் ஆனார்கள். ஏனெனில், “சட்டமீறுதலே பாவம்.” (1 யோவான் 3:4, NW) அதன் காரணமாக, நித்திய காலம் வாழ்வதற்கான வாய்ப்பை இழந்தனர். ஏனென்றால், “பாவத்தின் சம்பளம் மரணம்.” (ரோமர் 6:23) எனவே, முதல் தம்பதிக்கு தண்டனை விதிக்கும்போது, “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” என கடவுள் சொன்னார்.—ஆதியாகமம் 3:19.
எனவே, முதல் மானிட ஜோடி பாவம் செய்த பிறகு, முன்னறிவிக்கப்பட்ட பாவத்தின் விளைவுகள் அவர்களுடைய மரபணுக்களில் பதிக்கப்பட்டுவிட்டன. ஆயுட்கால எல்லைக் கோடும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதன் காரணமாக, அவர்கள் வயோதிபத்திற்கும் முடிவில் மரணத்திற்கும் ஆளாகினர். மேலும், ஏதேன் என்று அழைக்கப்பட்ட, அவர்களுடைய முதல் பரதீஸிய வீட்டை விட்டு வெளியே துரத்தப்பட்டனர். அதன் பிறகு, அவர்களுடைய வாழ்க்கையை பெரிதும் பாதித்த மற்றொரு அம்சத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அது என்ன? ஏதேனுக்கு வெளியே இருந்த தடை—சுற்றுச்சூழல். (ஆதியாகமம் 3:16-19, 23, 24) பரம்பரையாக வந்த குறைபாடுகளும், கடுமையான சுற்றுச்சூழலும் முதல் மனித ஜோடியையும் அவர்களுடைய எதிர்கால சந்ததியினரையும் பெரிதும் தாக்கியது.
தண்டனையும் வாக்குறுதியும்
இந்தக் கேடான விளைவுகள், அவர்களுக்கு பிள்ளைகள் பிறப்பதற்கு முன் நேர்ந்ததால், அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளும் அவர்களைப் போலவே இருந்தனர். குறைபாடுள்ள, பாவம் தரித்த, பிள்ளைகளையே பெற்றனர். பின்னர் வயோதிபத்தையும் சுதந்தரித்துக் கொண்டனர். “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” என பைபிள் சொல்லுகிறது. (ரோமர் 5:12; சங்கீதம் 51:5-ஐ ஒப்பிடுக.) “நம் மரணப் பத்திரத்தை நம் உயிரணுக்களில் நாமே சுமக்கிறோம்” என தி பாடி மெஷின்—யுவர் ஹெல்த் இன் பர்ஸ்பெக்டிவ் என்ற புத்தகம் விவரிக்கிறது.
இருந்தாலும், வயோதிபமும் மரணமும் இல்லாத—எல்லைக் கோடே இல்லாத ஜீவன் என்ற பேச்சுக்கே இடமில்லை என இது அர்த்தப்படுத்தாது. முதலாவது, மனித உயிருக்கும் வியக்கத்தக்க மற்றெல்லா உயிரின வகைகளுக்கும் ஊற்றுமூலர் அதிக ஞானமுள்ள படைப்பாளர். அவரால், எந்த மரபணு குறைபாடுகளையும் நீக்கவும் மனிதன் என்றென்றும் வாழ்வதற்கான சக்தியை கொடுக்கவும் முடியும் என நம்புவது நியாயமானதே. இரண்டாவது, இதைத்தான் படைப்பாளர் செய்ய வாக்குக் கொடுத்திருக்கிறார். முதல் தம்பதியினருக்கு மரணத் தீர்ப்பை வழங்கிய பின், மனிதர்கள் என்றென்றும் வாழவேண்டும் என்ற தம்முடைய நோக்கம் மாறவில்லை என்பதை கடவுள் திரும்பத் திரும்ப வெளிப்படுத்தினார். உதாரணமாக, “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என அவர் உறுதியளித்தார். (சங்கீதம் 37:29) இந்த வாக்கு நிறைவேறுவதை கண்கூடாக காண வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் சாவே இல்லாமல் வாழ்வது எப்படி
அறிவியல் எழுத்தாளர் ரானல்ட் கோட்யூலக், 300-க்கும் அதிகமான மருத்துவ ஆராய்ச்சியாளர்களை பேட்டிக் கண்டார். அதன் பிறகு, “மக்களுடைய ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் பெருமளவில் பாதிப்பது வருமானம், உத்தியோகம், கல்வி ஆகியவை என்பது விஞ்ஞானிகள் ஏற்கெனவே அறிந்ததே. . . . ஆனாலும், இவற்றில் வாழ்நாளை நீடிக்கச் செய்வதில் பிரதானமானது கல்வியே என கருதப்படுகிறது.” அவர் மேலும் விளக்குகிறார்: “நாம் சாப்பிடும் உணவு எப்படி மரணத்தை வருவிக்கும் தொற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடத் தேவையான சக்தியை நம் நோய் தடுப்பு முறைமைகளுக்கு கொடுக்கிறதோ, அப்படித்தான் கெட்ட தீர்மானங்களை எடுப்பதில் இருந்து கல்வியும் நம்மைக் காக்கிறது.” ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்: “வாழ்க்கையை எப்படி நடத்தலாம்” என்றும் “வரக்கூடிய தடைகளை எப்படி சமாளிக்கலாம் என்றும் கல்வி உங்களுக்கு கற்றுத்தருகிறது.” எனவே, எழுத்தாளர் கோட்யூலக் விவரிக்கிறபடி, ஒரு விதத்தில், “வளமான, நீடித்த வாழ்க்கையின் ரகசியம்” கல்வியே.
எதிர்காலத்தில் நித்திய வாழ்வைப் பெறுவதற்காக எடுக்கும் முதல் படியும் கல்வியே—பைபிள் கல்வி. “முடிவில்லா வாழ்வு என்பது: உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே” என இயேசு கிறிஸ்து குறிப்பிட்டார். (யோவான் 17:3, தமிழ் கத்தோலிக்க பைபிள்) படைப்பாளராகிய யெகோவா தேவனைப் பற்றியும், இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் கடவுள் ஏற்படுத்திய மீட்கும் பொருள் என்ற ஏற்பாட்டைப் பற்றியும் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். நித்திய வாழ்க்கைப் பாதையில் ஒருவரை கூட்டிச் செல்ல எடுக்கும் ஒரே கல்வி திட்டத்தின் முதல் படி இதுவே.—மத்தேயு 20:28; யோவான் 3.16.
யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் பைபிள் கல்வித் திட்டம், இந்த ஜீவன் அளிக்கும் பைபிள் அறிவைப் பெற உங்களுக்கு உதவும். அவர்களுடைய ராஜ்ய மன்றங்களில் ஒன்றை சென்று பாருங்கள். இந்த இலவச திட்டத்தைப் பற்றி இன்னும் அதிகம் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அல்லது உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் உங்களை வந்து சந்திக்க சொல்லுங்கள். வாழ்க்கைப் பந்தயத்திற்கு, தடைகளும் எல்லைக் கோடும் இனியும் முட்டுக்கட்டைகளாக இல்லாதிருக்கும் அந்த நேரம் வெகு அருகில் இருக்கிறது. அதற்கான உறுதியான சான்றுகள் பைபிளில் இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆம்! பல ஆயிரம் ஆண்டுகளாக மரணமே சக்கரவர்த்தியாக சர்வாதிகாரம் செய்து வருகிறது. ஆனால், சீக்கிரத்தில் அது என்றென்றுமாக இல்லாதபடி அதன் கொட்டம் அடக்கப்படும். இளைஞர்களுக்கும் முதியோருக்கும், ஆ, என்னே சிறந்த எதிர்காலம்!
[அடிக்குறிப்புகள்]
a வயோதிபம் எப்படி வருகிறது என்பதற்கு பல வித்தியாசமான விளக்கங்களை (சொல்லப் போனால், 300-க்கும் அதிகமானவை) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இருந்தாலும், வயோதிபம் ஏன் ஏற்படுகிறது என்பதற்கு பதிலை இந்த விளக்கங்கள் தரவில்லை.
[பக்கம் 13-ன் படம்]
நித்திய ஜீவனைப் பெறுவதற்கு முதல் படி, பைபிள் கல்வியே