தலைவிதியா தற்செயலா?
“விதி விளையாடியதால் அநேகர் உயிரிழந்தனர் சிலரே உயிர் பிழைத்தனர்” என்பதாக இன்டர்நேஷனல் ஹெரால்ட் ட்ரிப்யூன் செய்தித்தாள் அறிவித்தது. சென்ற வருடம் கென்யாவிலும் டான்ஜானியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்களை பயங்கரவாதிகள் தாக்கியபோது கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆனாலும் “தூதரகத்தின் மூத்த அதிகாரிகளுக்கு ‘நல்ல நேரம்’ அதனால் தப்பித்தனர்” என்று அந்த செய்தித்தாள் அறிவித்தது.
ஏனென்றால் குண்டு வெடித்தபோது அவர்கள் அந்த கட்டடத்தின் இன்னொரு பகுதியில் ஒரு மீட்டிங்கில் கலந்துகொண்டிருந்ததால் உயிர் தப்பினர். ஆனால், இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய அதிகாரி ஏதோ காரணத்தால் கலந்துகொள்ளவில்லை; அவர் தூதரகத்தில் குண்டு வெடித்த இடத்திற்கு அருகே இருந்ததால் கொல்லப்பட்டார்.
“ஆர்லீன் கர்க்கின் வாழ்க்கையிலும் விதி விளையாடிவிட்டது” என்று அந்த செய்தித்தாள் அறிவித்தது. அவர் விடுமுறை முடிந்து கென்யாவிற்கு திரும்பி வருவதற்காக விமான நிலையத்திற்கு வந்தபோது விமானத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த விமானத்தில் பயணம் செய்வதை ரத்து செய்ய விருப்பம் தெரிவித்தார். அதற்குமுன் மற்ற பயணிகள் பயணத்தை ரத்து செய்ததால் அவருக்கு அந்த விமானத்தில் இடம் கிடைத்தது. இதனால், அவர் தூதரகத்தில் வேலைக்கு வந்தார்; அன்றுதான் குண்டு வெடித்தது, மரணத்தைத் தழுவினார்.
பேராபத்துகள் மனிதனுக்கு புதியவையல்ல. ஆனாலும், நடந்த விபத்தின் காரணங்களை விளக்குவதுதான் மனிதனுக்கு பெரிய சவால். உலகின் எந்த இடத்திலும் விபத்து அல்லது ஆபத்து ஏற்படும்போது சிலர் இறந்துவிடுகின்றனர் மற்றவர்கள் தப்பிவிடுகின்றனர். வாழ்க்கையில் ஏதாவது கெட்டது நடக்கும்போதுதான், ‘எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை?’ என்று மனிதன் புலம்புவான் என்று சொல்ல முடியாது. நல்லது நடக்கும்போதுகூட சிலருக்கு மற்றவர்களைவிட சிறந்த சூழ்நிலைகள் அமைந்துவிடுகின்றன. அநேகருக்கு வாழ்க்கையென்றாலே பொருமி குமையும் போராட்டம்தான், ஆனால், சிலருக்கு எல்லாமே சுலபமாக அமைந்துவிடுவதாகத் தெரிகிறது. அப்படியென்றால் இவை எல்லாம் ஏற்கெனவே திட்டமிட்டு நடந்தனவா? இதனால், ‘விதிதான் என் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கிறதா?’ என்று நீங்கள் கேட்கக்கூடும்.
புதிர்களுக்கு விடை தேடுதல்
கிட்டத்தட்ட 3,000 வருடங்களுக்கு முன்பு ஒரு புத்திசாலி ராஜா அவருடைய நாட்டில் எதிர்பாராத சில நிகழ்ச்சிகள் நடப்பதை கவனித்தார். அந்த நிகழ்ச்சிகள் நடந்ததற்கு பின்வரும் விளக்கத்தையளித்தார்: “நேரமும் எதிர்பாரா சம்பவமும் அனைவருக்கும் ஏற்படும்.” (பிரசங்கி 9:11, NW) சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராதது நடந்துவிடுகிறது. அதை முன்கூட்டியே சொல்ல முடியாது. குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள், நல்லவையாகவும் இருக்கலாம் கெட்டவையாகவும் இருக்கலாம், அந்த நேரத்தில் அங்கே இருந்ததால் அவை நடந்துவிடுகின்றன.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தற்செயலாகத்தான் நடந்தன என்று விளக்கமளிப்பதற்கு பதில் இவையெல்லாம் விதியின் விளையாட்டே என்று நீங்களும் ஒருவேளை நினைக்கலாம். மனிதனுடைய மத நம்பிக்கைகளில் மிகவும் பழமையானதும் பரவலானதும் எதுவென்றால் விதி அல்லது தலையெழுத்து. இதைப்பற்றி, பாரிஸ் பல்கலைக்கழகத்திலுள்ள புராணத்துறை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பிராண்ஸ்வா ஸூயன் இவ்வாறு சொல்கிறார்: “வாழ்க்கையில் விளக்க முடியாதவற்றையெல்லாம் விளக்குவதற்காக . . . தெய்வத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தலையெழுத்து என்ற பேச்சையே மக்கள் எடுக்கின்றனர். இதை நம்பாத சகாப்தமோ அல்லது நாகரிகமோ சரித்திரத்தில் இல்லை.” இதனால்தான் ஜனங்கள், “அவன் தலைவிதி நல்லா இருந்ததால்தான் தப்பிச்சான்” அல்லது “எழுதின விதி அழுதால் தீருமா” என்று சாதாரணமாக பேசுவதை கேட்கிறோம். விதி என்றால் என்ன?
விதியின் விளக்கம்
“விதி” என்று பொருள்படும் ஆங்கில வார்த்தைக்கு, “தீர்க்கதரிசன அறிவிப்பு, அசரீரி வாக்கு, தேவ வாக்கு” என்பதாக விளக்கமளிக்கின்றனர். ஏதோ ஒரு சக்தி தவிர்க்க முடியாத வகையிலும் விளக்க முடியாத முறையிலும் ஒருவருடைய எதிர்காலத்தை முடிவு செய்வதாக சில சமயம் நினைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் இந்த சக்தியே கடவுள் என்பதாகவும் நினைக்கின்றனர்.
மத வரலாற்று ஆசிரியர் ஹெல்மர் ரிங்கரன் இவ்விதம் விளக்குகிறார்: “மத எண்ணங்களைப் பொறுத்தவரை மனித வாழ்க்கையில் விதி என்பது அர்த்தமற்ற ஒன்றோ அல்லது தற்செயலானதோ அல்ல மாறாக இன்றியமையாத ஒன்று என்பதே. ஆகவே இதற்கெல்லாம் ஒரு சக்தியே காரணம், அது தீர்மானம் செய்யும், தான் என்ன செய்ய நினைக்கிறதோ அதை நிறைவேற்றவும் செய்யும்.” விதியின் பாதையை ஓரளவிற்கு மதியால் மாற்றுவதற்கு மனிதனால் முடியும் என்று ஜனங்கள் நினைக்கின்றனர். ஆனால், சதுரங்க விளையாட்டில், எதையும் தன்னால் கட்டுப்படுத்த முடியாத சிப்பாயைப் போல்தான் போல்தான் மனிதர்கள் விதியின் கைப்பாவையாகிவிடுகின்றனர் என்பதே அனைவருடைய எண்ணம். அதனால்தான் ‘வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்து உண்டா’ என்று அவர்கள் விட்டுவிடுகின்றனர்.
நீண்டகாலமாகவே இறையியலாளர்களும் தத்துவஞானிகளும் விதியை விளக்குவதற்கு போராடியிருக்கின்றனர். இதைக்குறித்து மத என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “பொதுவாகவே, எந்த மொழியாக இருந்தாலும் சரி, எவ்வளவு வித்தியாசப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, எந்த விதத்தில் அது விளக்கப்பட்டாலும் சரி, விதியை பற்றி விளக்கும்போது அதன் அடிப்படை அம்சத்தில் ஒரு புரியாப்புதிர் இருக்கின்றது.” இதைப்பற்றி நிலவும் குழப்பமான கருத்துக்களில் ஒரே ஒரு எண்ணம்தான் பொதுவாக இருக்கிறது; மனிதனுடைய நடவடிக்கைகளை அவனுக்கு அப்பாற்பட்ட சக்தி கட்டுப்படுத்தி, மனிதனுடைய பாதையை வகுக்கிறது என்பதே அது. இந்தச் சக்தியே மனிதனுடைய, தேசங்களுடைய எதிர்காலத்தை வெகுகாலத்திற்கு முன்பே நிர்ணயம் செய்து கடந்தகாலத்தைப் போலவே எதிர்காலத்திலும் அதை அவனால் கட்டுப்படுத்த முடியாததாக்கிவிடுகிறது.
தீர்மானிக்கவேண்டிய கருத்து
நீங்கள் விதியை நம்புவதும் நம்பாதிருப்பதும் முக்கியமான ஒரு விஷயமா? “மனிதர்களுடைய வாழ்வில் நிலவும் சூழ்நிலைகள் அவர்களுடைய எண்ணங்களையும் நோக்கங்களையும் தீர்மானிப்பதற்கு காரணமாகின்றன. இதற்கு நேரெதிராக அவர்களுடைய எண்ணங்களும் நோக்கங்களும் அவர்களுடைய சூழ்நிலைகளையும் பாதிக்கின்றன” என்று ஆங்கில தத்துவஞானி பர்ட்ரான்ட் ரஸல் எழுதினார்.
விதி என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அதை நம்புவது நம் வாழ்க்கையை பாதிக்கிறது. இதுதான் தெய்வ சித்தம் என்று நம்புவதால் வாழ்க்கையில் எவ்வளவு அநீதி இழைக்கப்பட்டாலும் கொடுமைகளை அனுபவித்தாலும் அவற்றைக் குறித்து தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் தங்களால் ஒன்றுமே செய்ய முடியாது, தங்களுக்கு வாய்த்தது அவ்வளவுதான் என்ற முடிவுக்கு அநேகர் வந்துவிடுகின்றனர். ஆகவே விதியின் மேலுள்ள நம்பிக்கை, தனிப்பட்டவர்களாக தங்களுக்கு பொறுப்பு இருக்கிறது என்ற உண்மைக்கே உலை வைத்துவிடுகிறது.
மறுபட்சத்தில், தலையெழுத்தை நம்புவோர் எதிர்திசையில் செல்வதற்கு தூண்டிவிடப்பட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு முதலாளித்துவம், தொழில் புரட்சி போன்றவை தோன்றுவதற்கான காரணங்களை சரித்திராசிரியர்கள் பட்டியலிட்டிருக்கின்றனர். அவற்றில் ஒன்று முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதில் நம்பிக்கை. கடவுள் தனிநபர்களை இரட்சிப்பிற்கென்று முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறார் என்பதாக சில புராட்டஸ்டண்டு மதங்கள் கற்பித்தன. இதைக் குறித்து ஜெர்மன் சமூகவியலாளர் மாக்ஸ் வேபா இவ்வாறு சொல்கிறார்: “நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவனா? என்ற கேள்வி விசுவாசிக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு காலகட்டத்தில் கட்டாயம் எழும்பும்.” கடவுளுடைய ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதையும் அதனால் தான் இரட்சிப்படைய முடியுமா என்பதையும் தெரிந்துகொள்ள தனிநபர்கள் முயற்சித்தனர். “தங்களுடைய உலகப்பிரகாரமான வேலைகளில்” ஏற்படும் வெற்றி தோல்வியின் அடிப்படையில் இதை செய்ய முயற்சித்தனர் என்று வேபா அடித்துக்கூறுகிறார். தொழிலில் வெற்றியும் ஏராளமான பொருட்களை சம்பாதித்ததும் கடவுளுடைய ஆதரவின் வெளிப்பாடே என்று நம்பப்பட்டது.
விதியின் மேலுள்ள நம்பிக்கையால் சிலர் மட்டுக்கு மீறிய தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிடுகின்றனர். காமிகாஸ் அல்லது “தெய்வீக காற்றை” ஜப்பானிய தற்கொலைப்படை விமான ஓட்டிகள் நம்பினர். தெய்வங்களுக்கு ஒரு நோக்கமிருக்கிறது, ஆகவே அந்த நோக்கத்திற்கிசைய மனிதர்கள் செயல்பட முடியும் என்ற கருத்து நிலவுவதால் மதத்தின் அடிப்படையில் தீவிரவாதமும் பயங்கரமான கொலைகளும் நிகழ்கின்றன. கடந்த பத்தாண்டுகளில், மத்திய கிழக்கு நாடுகளில் தற்கொலைப் படையினர் பயங்கரமான வெடிகுண்டுகளை வீசி தாக்கியதைப் பற்றிய விவரங்கள் தலைப்பு செய்திகளாக வந்தன. இவ்வாறு “மதத்தின் தூண்டுதலால் மேற்கொள்ளப்படும் தற்கொலை படையினரின் தாக்குதலுக்கு” விதியின் மீதுள்ள நம்பிக்கையே காரணம் என்பதாக ஒரு என்ஸைக்ளோப்பீடியா அறிவிக்கிறது.
விதியைப்பற்றிய நம்பிக்கை ஏன் இந்தளவுக்கு உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது? இது எப்படி ஆரம்பித்தது என்பதை சுருக்கமாக ஆராயும்போது நமக்கு விடை கிடைக்கும்.
[அடிக்குறிப்பு]
இந்த அடிக்குறிப்பு தமிழில் இல்லை