பீனட் பட்டர்—ஆப்பிரிக்க பாணியில்
மத்திய ஆப்பிரிக்க குடியரசிலிருந்து விழித்தெழு! நிருபர்
மேற்கத்திய நாடுகளில், பீனட் பட்டர், அதாவது வேர்கடலை வெண்ணெய் என்றாலே, பிரெட் மீது தடவும் ஒன்று என சாதாரணமாக நினைக்கின்றனர். ஆனால், சில ஆப்பிரிக்க நாடுகளில், அன்றாட வாழ்க்கையில் இது பெரும்பங்கு வகிக்கிறது. எப்படி?
மத்திய ஆப்பிரிக்காவில், பிரபலமான பல உணவுவகைகள் பீனட் பட்டரைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. மற்ற வளர்ச்சியடையும் பகுதிகளைப் போலவே இங்கும், கோதுமை மாவும் மக்காச்சோள மாவும் கிடைப்பது அரிதாகும். குழம்பு, கூழ் வகைகளை கெட்டியாக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இவற்றிற்கு பதிலாக பீனட் பட்டரே எல்லாராலும் பயன்படுத்தப்படுகிறது.
இருந்தபோதிலும், உள்ளூர் மளிகைக் கடையில் பீனட் பட்டர் ஒரு பாட்டில் வாங்குவது அவ்வளவு சுலபமானதல்ல. கடையில், கிராம் கணக்கில் அல்ல கரண்டியில்தான் விற்கப்படுகிறது. இது அதிக விலைக்கு விற்கப்படுகிறது. எனவே, அநேக ஆப்பிரிக்கப் பெண்கள், தாங்களாகவே வீட்டில் இதைத் தயாரிக்கின்றனர். இந்தச் சிரமமான வேலை எப்படி செய்யப்படுகிறது என்பதே சுவாரஸ்யமானது. ஆப்பிரிக்கப் பெண்கள் பலருடன் பேசியதிலிருந்து திரட்டிய தகவல்களே பின்வருபவை.
நிலக்கடலை பயிரிடுதல்
நிலக்கடலையை பயிரிடுவது அப்படியொன்றும் கடினமான வேலையல்ல. நிலத்தை பண்படுத்துவதே சிரமமான வேலை. நிலம் இன்னும் வறட்சியாகவும் கடினமாகவும் இருக்கும் மழைக்காலத்தின் ஆரம்பத்திலேயே பண்படுத்தும் வேலை செய்யப்படுகிறது. ஏப்ரலில் விதைகள் கைகளால் விதைக்கப்படுகின்றன. மழை சீக்கிரம் வந்துவிட்டால், ஆகஸ்ட் கடைசியிலோ அல்லது செப்டம்பர் ஆரம்பத்திலோ நிலக்கடலையை அறுவடை செய்யலாம்.
நிலக்கடலையை மணிலாக்கொட்டை என்றும் அழைப்பர். உண்மையில் இது கொட்டையல்ல. பருப்பு. பயறு வகையைச் சேர்ந்தது. சிலர் நினைப்பதுபோல, நிலக்கடலை மரத்தில் காய்ப்பதல்ல. சிறிய செடிகளில் பூமிக்கடியில் காய்க்கின்றன. இவை பொதுவாக, வேர்க்கடலை என்று அழைக்கப்படுகின்றன.
மத்திய ஆப்பிரிக்காவில், சராசரியாக சுமார் 300-க்கு 150 அடி பரப்பளவு நிலத்தில்தான் நிலக்கடலைப் பயிரிடப்படுகிறது. ஆனால், சிலர் தங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் சிறிய பகுதியிலும் பயிரிடுவர். சிறிய கைப்பிடி உடைய மண்வெட்டியும் அரிவாளும் பொதுவாக பயன்படுத்தப்படும் கருவிகள். இடுப்பொடியும் வேலை இது! ஆரம்பத்தில், இந்தப் பயிருக்கு கவனமான பராமரிப்புத் தேவை. எலிகளோ, பெருச்சாளிகளோ நிலத்தைத் தோண்டி, பருப்புகளைத் தின்றுவிடாமல் பாதுகாக்க வேண்டும். மண் இறுகாமலும், களைகள் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
விசேஷமாக, அறுவடை நெருங்கும் சமயத்தில் நிலத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவை. அறுவடை நெருங்க நெருங்க, பிள்ளைகள் நிலத்திற்கு காவல் வைக்கப்படுவார்கள். தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் தன் நிலத்தில் இருந்த நிலக்கடலைச் செடிகளை அருகில் இருந்த மரத்தின்மேல் பார்த்ததாக ஒரு பெண் தெரிவித்தாள். அவை அங்கு எப்படி சென்றன? குரங்குகள் அவற்றை அங்கே கொண்டு சென்று, பலமான விருந்தை அனுபவித்தன!
பொதுவாக, அறுவடை குடும்பமாக செய்யப்படும். எல்லாரும் வயலுக்கு போய் உதவியளிப்பர். கைகளால் செடியை வேரோடு பிடுங்கி காய வைப்பர். பிறகு, செடியிலிருந்து நிலக்கடலைகளை பிரித்து, அவற்றை பெரிய பெரிய கூடைகளில் நிரப்பி, அறுவடை செய்தவர்கள் கிராமத்திற்கு தலையில் சுமந்து வருவர்.
பிறகு என்ன செய்யப்படுகிறது? நன்றாக கழுவி சுத்தம் செய்தபிறகு, உப்பு போட்டு வேக வைக்கப்படுகிறது. இவற்றில் சிலவற்றை உடனே குடும்ப அங்கத்தினர்கள் சாப்பிடுகின்றனர். பெரும்பாகம், பிறகு சமையலில் உபயோகப்படுத்துவதற்காக வைக்கப்படுகின்றன. எனவே, வீட்டுக்கருகில் தரையில் பரப்பி நன்றாக காயவைக்கப்படுகின்றன. ஆடுகள் அவற்றை மேய்ந்து விடாதபடி யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும்.
நிலக்கடலைகளை காயவைத்த பிறகு, உயரமான கழிகளின்மேல், புல் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட பண்டக-வீடுகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. இது நிலக்கடலை நல்ல உலர்ந்த நிலையில் இருக்க உதவுகிறது. எலிகளிடமிருந்தும் காக்கிறது. தாய் வயலில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, வீட்டில் பிள்ளைகள் அவற்றை தின்று தீர்த்துவிடாமலிருக்கவும் உதவுகிறது.
கடலையிலிருந்து வெண்ணெய்க்கு
பீனட் பட்டர் செய்வதற்கு முன், பருப்புகளை எடுக்க வேண்டும். பிறகு, அகலமான, தட்டையான வாணலியில் போட்டு, இளஞ்சூட்டில் அவை வறுக்கப்படுகின்றன. இப்படி வறுப்பது, அவற்றை மொருமொருவென ஆக்குகிறது. அதோடு, தோலை நீக்குவதும் சுலபமாகிறது. சூடு ஆறியதும், தரையில் தேய்த்து தோல் நீக்கப்படுகிறது. இந்த வறுத்தக் கடலைகளை மிஷினில் அரைத்து வெண்ணெய் ஆக்கப்படுகிறது. மிஷின் இல்லையென்றால், பெரிய, தட்டையான கல்லில் வைத்து பாட்டிலாலோ அல்லது உருண்டையான கல்லாலோ அரைக்கப்படுகிறது.
குழம்பு வகைகளை கெட்டியாக்க இந்த வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குழம்பு வகைகள் காஸவா (மரவள்ளிக்கிழங்கி இலைகள்), வாழைக்காய் போன்ற பதார்த்தங்களோடு அல்லது சாதத்தோடு பரிமாறப்படுகிறது. பீனட் பட்டர் சேர்த்து செய்யப்பட்ட உணவின் சுவை எப்படியிருக்கும் என தெரிந்துகொள்ள ஆசையா? ஒருமுறை ருசித்துப் பாருங்கள்!
சாதாரண ஒரு சமையல் குறிப்பை வைத்து, இறைச்சி, வெங்காயம், பூண்டு, தக்காளிக்கூழ் கலந்த குழம்பை செய்யலாம். இறைச்சியை முதலில் நன்றாக வேக வைக்க வேண்டும். விருப்பப்பட்டால், நறுக்கிய பசலைக்கீரையை சேர்த்துக்கொள்ளலாம். பீனட் பட்டரோடு சிறிது தண்ணீர் சேர்த்து, அதை குழைத்துக்கொள்ளுங்கள். ஒருகிலோ இறைச்சிக்கு சுமார் ஒரு கப் பீனட் பட்டர் தேவை. இதைக் குழம்பில் போட்டு நன்றாக கலக்குங்கள். பத்து அல்லது அதற்கு அதிகமான நிமிடங்கள் நல்லசூட்டில் வேகவிடுங்கள். அப்போதுதான், பீனட் பட்டர் குழம்போடு நன்றாக கலந்து குழம்பின் சுவையை கூட்டும். உங்கள் விருப்பத்திற்கேற்ப குழம்பு கெட்டியாக இல்லையென்றால், இன்னும் கொஞ்சம் பீனட் பட்டர் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவைக்கேற்ப உப்பும், காரம் சேர்க்க விரும்பினால் சிறிது குறுமிளகும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த அருஞ்சுவை குழம்பை சாதத்தோடு சேர்த்து சாப்பிடவே அநேகர் விரும்புகின்றனர்! நீங்கள் செய்யும் முறை ஒருவேளை ஆப்பிரிக்கர்கள் செய்யும் முறையைப்போல் இல்லாதிருக்கலாம். என்றாலும், வெறுமனே பிரெட் மீது தடவுவதைவிட இன்னொரு வகையை ருசித்துப் பாருங்களேன். அதுவும் ஆப்பிரிக்கப் பாணியில்!
[பக்கம் 26-ன் குறிப்பு]
நிலக்கடலை அறுவடை செய்யப்படுகிறது. வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கே உரித்த பிறகு அரைக்கப்படும்