உலகை கவனித்தல்
இரைச்சலோ இரைச்சல்
இந்தியாவின் மக்கள் தொகை நூறு கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பத்தில் ஒருவர் அல்லது கிட்டத்தட்ட பத்து கோடி மக்கள் ஏதாவதொரு வகை காதுக் கோளாறால் அவதிப்படுகின்றனரென இந்தியாவில் உள்ள சண்டிகர் முதுகலை கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் எஸ். பி. எஸ். மான் குறிப்பிடுகிறார். கார் ஹாரன்கள், இன்ஜின்கள், மிஷின்கள், ஏரோபிளேன்கள் போன்றவற்றால் ஏற்படும் பெரும் இரைச்சலே இந்தப் பிரச்சினைக்கான காரணம் என இந்தியாவின் காது, மூக்கு, தொண்டை மருத்துவர்கள் சங்க மாநாட்டின் துவக்கத்தில், டாக்டர் மான் குறிப்பிட்டார். பண்டிகை காலங்களில் காதைப்பிளக்கும் பட்டாசுகளால் உண்டாகும் சப்தமே இதற்கு முக்கிய காரணம் என டாக்டர் மான் தெரிவிக்கிறார். உதாரணமாக, தசரா பண்டிகையின்போது, சமுதாயத்தில் உள்ள தீய சக்திகளை பிரதிநித்துவம் செய்யும், இந்துப் புராணங்களில் வரும் துஷ்ட கதாபாத்திரங்களின் பெரிய பெரிய உருவங்களை செய்து, அவற்றில் நூற்றுக்கணக்கான பட்டாசுகளை வைக்கின்றனர். இவற்றைக் கொளுத்தும்போது, இவையெல்லாம் சரமாரியாக வெடித்து காதை ஒருவழியாக்கிவிடுகின்றன. நாடு முழுவதும் இப்படி செய்யப்படுகிறது. இந்தப் பண்டிகையை கைகோர்த்துக்கொண்டு வருவது ஐந்து நாள் தீபாவளி பண்டிகை. இந்தப் பண்டிகையின்போது, லட்சக்கணக்கான பட்டாசுகளின் மழையில் காதின் கதி கேட்கவே வேண்டாம்.
மழைக்காடுகளை கூறுபோடுதல்
“மிருகங்கள் சுதந்திரமாக உலாவரவும் தாவரங்கள் தழைத்தோங்கவும் அச்சுறுத்தல்களாக இருப்பவை வேட்டையாடுதல், காடுகளை அழித்தல், காட்டுத்தீ போன்றவை மட்டுமேயல்ல” என பிரேஸிலின் ஸோர்னல் டூ கோமர்ஸியோ பத்திரிகை அறிவிக்கிறது. காடுகளை சிறுசிறு பாகங்களாக துண்டுபோடுவது இந்த உயிரினங்கள் முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. காடுகளை அழிப்பதில் இருந்து தப்பிப் பிழைக்கும் சிறு பகுதிகளே துண்டுத்துண்டாக சிதறிக்கிடக்கின்றன. இந்தத் துண்டுகளில் பல, 25 ஏக்கருக்கும் குறைவாகவே இருக்கின்றனவென பிரேஸில் நாட்டு விவசாயத் துறையைச் சார்ந்த மார்ஸீலூ டாபாரெல்லீ குறிப்பிடுகிறார். “இந்த அளவு துண்டுப் பகுதிகள் பெரிய பாலூட்டி வகைகள் வாழ ஏற்ற இடமில்லை” என டாபாரெல்லீ சொல்கிறார். ஒரு காரியம் உறுதி. இப்படி துண்டு துண்டாக இருப்பது “பிரிதல், இடப்பெயர்ச்சி செய்தல் போன்ற விலங்குகளின் வாழ்க்கை முறைகளில் குறுக்கிடுகிறது.” இது, “[மிருகங்கள், தாவரங்களின்] எண்ணிக்கையை குறைக்கிறது.” உதாரணமாக, டூகான் என்றழைக்கப்படும் காட்டுப் பறவையை எடுத்துக்கொள்ளுங்கள். “இந்தப் பறவைகள் இன்னும் இருக்கின்றன. ஆனால், இவை சொற்ப எண்ணிக்கையில்தான் தொடர்ந்து வாழும் அபாயம் உள்ளது” என டாராரெல்லீ குறிப்பிடுகிறார்.
அப்பாக்களின் பொறுப்பு மகன்களின் பூரிப்பு
தங்கள் பிள்ளைகளுடைய கவலைகளில், ஸ்கூல் பாடங்களில், சமுதாய வாழ்க்கையில் தனிப்பட்ட அக்கறை காண்பிக்கும் அப்பாக்கள் “பொறுப்புள்ள, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கைமிக்க இளைஞர்களை” உருவாக்குகின்றனரென தி டைம்ஸ் ஆஃப் லண்டன் பத்திரிகை அறிவிக்கிறது. நாளைய ஆண்கள் என்ற திட்டம், 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 1,500 பையன்களை சுற்றாய்வு செய்தது. இவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தாங்கள் “அதிக சுயமரியாதையோடும், மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும்” இருப்பதை வெளிக்காட்டினார்கள். இதற்கு அவர்களுடைய அப்பாக்கள் அவர்களோடு நேரம் செலவழித்து, அதிக கவனம் செலுத்தியதே காரணம். ஆனால், இதற்கு எதிர்மாறாக, 72 சதவீதம் பையன்கள், தங்களுடைய அப்பாக்கள் எப்போதாவது அல்லது எப்போதுமே தங்கள்மேல் அக்கறை காண்பிக்கவேயில்லை என்றும், தாங்கள் “தாழ்வு மனப்பான்மையாலும், நம்பிக்கையற்ற மனநிலையாலும், மன உளைச்சலால் அதிகம் பாதிக்கப்படுவதற்கும், ஸ்கூல் பாடங்களில் ஆர்வம் இல்லாமல் இருப்பதற்கும், போலீஸோடு வம்பில் மாட்டிக்கொள்வதற்கும்” இதுவே காரணம் என்றும் சொல்கின்றனர். அப்பாவும் மகனும் சேர்ந்து செலவழிக்கும் நேரம் அதிகம் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால், “தாங்கள் நேசிக்கப்படுகிறோம், குடும்பத்தில் தேவையான ஓர் அங்கத்தினர், நாம் சொல்வதையும் கேட்பார்கள் என்று பிள்ளைகள் உணரும்படி செய்வதே மிக முக்கியம்” என நாளைய ஆண்கள் திட்டத்தில் பணிபுரியும் ஆட்ரீயன் காட்ஸ் குறிப்பிடுகிறார்.
மங்கலான ஒளியில் வாசித்தல்
போர்வைக்குள் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பது பிள்ளைகளுடைய கண்களுக்கு நல்லதல்ல என ஜெர்மனில் வெளிவரும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆபோடேகன் உம்ஷாவ் அறிவிக்கிறது. கோழிக்குஞ்சுகளை வைத்து டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. பார்வை சிறிது சிதறினாலும், வெளிச்சம் மங்கலாக இருந்தாலும் கண் விழி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடுமென அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. பிள்ளைகள் போர்வைக்குள் வாசிக்கும்போது இந்த இரண்டுமே ஏற்படுகிறது: ஒன்று, சிதறிய பார்வை, புத்தகத்தை கண்ணுக்கு மிக அருகில் வைத்துப் படிக்கும்போது, பார்வையை சரியாக ஒருமுகப்படுத்த முடியாது. மற்றொன்று, மிக மங்கலான ஒளி. “டீனேஜர்களின் பல தலைமுறையினர், போர்வைக்குள் டார்ச்லைட்டை வைத்துக்கொண்டு தங்களுக்கு விருப்பமான கதைப்புத்தகங்களை சுவாரஸ்யமாக படித்தனர். இப்படிச் செய்வதால், தங்களுடைய இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டனர் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், அதேசமயம் கிட்டப்பார்வைக் கோளாறையும் வளர்த்துக்கொண்டனர்” என்று அதே பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது.
மறுபடியும் நீராவி இன்ஜின்களா?
ரயில்பாதை விசிறிகள், பிரமாண்டமான நீராவி இன்ஜின்களைப் பற்றிய கடந்த கால நினைவுகளில் திளைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி காண்கின்றனர். ஆற்றல் குறைவும், அதிக அளவிலான தூய்மைக்கேடும் இந்த இன்ஜின்களுக்கு ஒரு முழுக்குப்போட வைத்துவிட்டன. என்றபோதிலும், நீராவியின் சக்தியால் ஓடும் இந்த இன்ஜின்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதென ஸ்விஸ் இன்ஜின் தொழிற்சாலையைச் சேர்ந்த பொறியியலாளர் ரோஸா வேலர் நம்பிக்கை தெரிவிக்கிறார். இந்தக் கம்பெனியின் நீராவியால் இயக்கப்படும் எட்டு பல்சக்கர ரயில் ஆல்ப்ஸ் மலைப்பாதைகளில் ஏற்கெனவே ஓட ஆரம்பித்துவிட்டன என்று பெர்லீனர் ட்ஸைடுங் பத்திரிகை அறிவிக்கிறது. மேலும், வழக்கமாக ரயில்கள் ஓடும் இருப்புப் பாதையில் பயன்படுத்துவதற்காக, பழைய ஒரு நீராவி இன்ஜினை வேலர் சமீபத்தில் புதுப்பித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட இந்த இன்ஜின், நிலக்கரிக்குப் பதிலாக ஆயிலை எரிபொருளாக பயன்படுத்துகிறது. இதனால், தூய்மைக்கேடும் பெருமளவில் குறைக்கப்படுகிறது. சுழலும் உருளைகள் உள்ள பேரிங்குகள் உராய்வைத் தடுக்கின்றன. அதுமட்டுமல்ல, சக்தி இழப்பைத் தவிர்க்கவும் குறைந்த நேரத்திலேயே சூடாக்கவும் நல்ல பாதுகாப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. “எந்த டீஸல் இன்ஜினையும்விட, இது சிக்கனமானது. சுற்றுப்புறத்தின் தோழன்” என வேலர் குறிப்பிடுகிறார்.
சிரிக்கவும் சொல்லித்தர வேண்டும்
வாடிக்கையாளர்களின் மனம் குளிரும்படி சேவைசெய்யும் பெருமை ஜப்பானுக்கே உரியது. அதனால், அங்கேயுள்ள பல கம்பெனிகள் தங்கள் “வேலையாட்களை தோழமையாக இருக்க கற்றுத்தரும் பள்ளிகளுக்கு அனுப்புவதாக” ஆஸாஹீ ஈவ்னிங் நியூஸ் செய்தித்தாள் அறிவிக்கிறது. “புன்முறுவல், சிரிப்பு, நகைச்சுவை போன்றவையே, பொருளாதார சரிவின் மத்தியிலும் விற்பனையை அதிகரிக்கும் சிக்கனமான, பலன்தரும் வழிகளாக கம்பெனிகள் கருதுவதாக” அச்செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஒரு பள்ளியில், மாணவர்கள் கண்ணாடிக்கு முன்பாக உட்கார்ந்துகொண்டு சிரித்து பழகுகின்றனர். “மனதுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் புன்னகைக்க முயற்சிக்கின்றனர்”. அவர்கள் மிக அதிகமாக நேசிக்கும் ஆட்களைப் பற்றி யோசிக்கும்படி சொல்லப்படுகின்றனர். மாணவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, இயற்கையாக சிரிக்க ஆசிரியர்கள் உதவுகின்றனர். இந்தப் பள்ளிகள் மட்டுமல்லாமல், சில கம்பெனிகள் தங்கள் வேலையாட்களை துரித-உணவு ரெஸ்டாரண்டுகளுக்கு உணவை வாங்கிவரும்படி அனுப்புகின்றனர். வேலையாட்கள் எப்போதுமே புன்முறுவலோடு வேலை செய்ய பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கும் இந்த ரெஸ்டாரண்டுகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அப்படியானால், புன்முறுவல் வியாபாரத்தை பெருக்குகிறதா? ஒப்பனைப் பொருட்களை விற்கும் கம்பெனி ஒன்று, தன்னுடைய 3,000-க்கும் அதிகமான ஊழியர்களுக்கு சிரிப்புப் பயிற்சியை அளித்தது. பலன்? அந்த வருடத்தில், அக்கம்பெனியின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்ததாக அச்செய்தித்தாள் குறிப்பிடுகிறது. அவருடைய அலுவலகத்தில் சமாதானமான ஒரு சூழ்நிலையை அது முன்னேற்றுவித்ததாகவும் ஒரு ஊழியர் சுட்டிக்காட்டியுள்ளார். “நன்றாக புன்முறுவல் பூக்கும் இனிமையான பாஸ்களுக்கு வேலை செய்வது உண்மையிலேயே திருப்தியளிக்கிறது” என அவர் சொன்னார்.
ஆரம்பக்கட்டம் —ஆபத்தைக் குறைக்கும்
“கேன்ஸர்களுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதற்கு ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிப்பது முக்கியம்” என டைம்ஸ் ஆஃப் ஜாம்பியா பத்திரிகையில் ஓர் அறிக்கை குறிப்பிடுகிறது. வருத்தத்திற்குரிய விஷயம் என்னவெனில், மருத்துவ வசதி இல்லாததாலும், இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காததாலும், ஆப்பிரிக்காவின் சில பாகங்களில், கணக்கிலடங்கா மக்கள் கேன்ஸரால் சாகின்றனர். கழுத்து, மார்பக புற்றுநோயே பெண்களை அதிகமாக பாதிக்கும் வகைகள். புராஸ்டேட் கிளாண்ட், குடல் புற்றுநோயே ஆண்களை அதிகம் பாதிக்கின்றன. எனவே, புற்றுநோய் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் சோதனைகளுக்காக ஜனங்கள் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும் என ஜாம்பியாவின் சென்ட்ரல் போர்ட் ஆஃப் ஹெல்த் பரிந்துரைக்கிறது. ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது, “நோயாளிக்கும்சரி, அவள்(ன்) குடும்பத்தாருக்கும்சரி வேதனையையும் வலியையும் குறைக்கிறது. மேலும், தகுந்த சிகிச்சையை மேற்கொள்ள இது டாக்டர்களுக்கும் உதவுகிறது.”
ரோபோட் பால்காரி!
“நாளொன்றுக்கு இருமுறை பால்கறப்பது, இயற்கைக்கு மாறாக பசுக்களை இம்சைப்படுத்துவதே” என ஸ்யூ ஸ்பென்ஸர் குறிப்பிடுகிறார். ரோபோட் பால்காரியை உருவாக்கிய குழுவின் அங்கத்தினர் இவர். ஆனால், அதேசமயம், பால்மடி அளவுக்கதிகமாக பால் சுரந்திருப்பது, ஊனத்தையும் மற்ற நோய்களையும் வருவிக்கும். எனவே, பசுவுக்கு பால்காரன் வழக்கமாக கறக்கும் நேரத்தில் இல்லாமல் மற்ற நேரங்களில் பால்கறக்க வேண்டும் என்றால் பண்ணையில் இருக்கும் அந்தப் பசு என்ன செய்யலாம்? இதற்காகவே ரெடியாக காத்திருக்கிறாள் ரோபோட் பால்காரி! ஸ்வீடனிலுள்ள பண்ணைகளில் இது ஏற்கெனவே உபயோகத்தில் இருக்கிறதென நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. இந்தப் பண்ணையில் உள்ள பசுக்கள் எப்போதெல்லாம் பால்கறக்கப்பட வேண்டுமென உணருகின்றனவோ, அப்போதெல்லாம் ரோபோட் பால்காரி இருக்கும் கொட்டிலுக்குள் சென்றால் போதும். இந்த மந்தையில் இருக்கும் 30 பசுக்களையும் இந்த மிஷின் அடையாளம் கண்டுகொள்வதற்கு வசதியாக இப்பசுக்களின் கழுத்தில் எலக்ட்ரானிக் பட்டை ஒன்று கட்டப்பட்டிருக்கும். பால்கறக்கப்பட வேண்டும் என்றால், பால்கறக்கும் கொட்டிலுக்கு சென்றால் கதவு தானாக திறக்கிறது. அந்த மிஷினின் லேசரால் இயக்கப்படும் இயந்திரக் கை, பசுவின் மடியை மெல்ல பிடித்து, பால் கறக்கும் குப்பிகளை காம்புகளோடு பொருத்திவிடுகிறது.
சரியும் ஐரோப்பிய பிறப்பு எண்ணிக்கை
“இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததில் இருந்து, ஐரோப்பிய யூனியனில் (EU) பிறப்பு எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. கடந்த வருடம், இது அடிமட்டத்தைத் தொட்டது” என சூட்டோய்ச் ட்ஸைடுங் அறிவிக்கிறது. ஐரோப்பிய யூனியனில், 1960-களின் மத்திய வருடங்களில், ஆண்டுக்கு 60 லட்சம் பேர் பிறந்தனர். ஆனால், இதோடு ஒப்பிட 1998-ல் 40 லட்சம் பேர் பிறந்தனரென யூரோஸ்டேட் என்றழைக்கப்படும் ஐரோப்பிய யூனியனுக்கான புள்ளிவிவர அலுவலகம் அறிவித்தது. ஐரோப்பிய யூனியன் நாடுகளில், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 1,000 பேருக்கு 10.7 பிறப்புகள் இருந்திருக்கின்றன. இதில் எந்த நாட்டில் மிகக் குறைவான பிறப்பு எண்ணிக்கை இருந்தது? குடும்பக் கட்டுப்பாட்டுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் இருப்பிடமாகிய இத்தாலியில். இங்கு பிறப்பு எண்ணிக்கை 1,000 பேருக்கு 9.2. அதிகபட்ச பிறப்பு எண்ணிக்கையாக 1,000 பேருக்கு 14.1 அயர்லாந்தில் பதிவாகியிருக்கிறது.
ஒன்றுகூடி சாப்பிடுதல்
அநேக நாடுகளில், பிள்ளைகள் தங்களோடு சேர்ந்து சாப்பிடுவதில்லை என்றும் ஃபாஸ்ட்-ஃபுட்டையே விரும்புகின்றனர் என்றும் பெற்றோர் புலம்புகின்றனர். ஆனால், ஃபிரான்ஸ் நாடு இதற்கு ஒரு விதிவிலக்கு. ஃபிரான்ஸில், 84 சதவீதம் குடும்பங்கள் இரவு சாப்பாட்டை ஒன்றுகூடி சாப்பிடுகின்றனரென ஓர் ஆய்வு தெரியப்படுத்தியதாக லா க்ர்வா என்ற ஃபிரெஞ்ச் செய்தித்தாள் சுட்டிக்காட்டுகிறது. குடும்பமாக சாப்பிடுவது நல்ல சூழ்நிலையை உருவாக்குவதாக 12 முதல் 19 வயதுக்குட்பட்டோரில் 95 சதவீதத்தினர் உணருவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. தவறாமல் குடும்பமாக சாப்பிடுவதன் அவசியத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். “சாப்பிடும் நேரம் வெறுமனே ஒன்றுகூடி சாப்பிடுவதற்காக அல்ல, மிக முக்கியமாக சிந்தனைப் பரிமாற்றத்திற்கான நேரமும் இதுவே” என ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட கல்விக்கான ஃப்ரெஞ்ச் மையத்தைச் சேர்ந்த டாக்டர் ஃப்ரான்ஸ்வா போடியா சுட்டிக்காட்டுகிறார்.