மழை வராத போது
பிரேஸிலில் இருந்து விழித்தெழு! நிருபர்
கடந்த வருடம் ஆதவனின் ஆக்ரோஷப்பார்வை வடகிழக்கு பிரேஸிலின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்க, கைகொடுக்கும் முகிலோ முகவரியின்றி காணாமற் போக வறட்சியின் கோலம் எங்கும் விரிந்திருந்தது. இப்பகுதியில் வாழும் மக்களுக்கு நார்டஸ்டீனூஸ் என்று பெயர். “வானம் பார்த்த பூமியை நம்பியே” வாழும் இந்த லட்சக்கணக்கானோரை மழை ஏமாற்றியதுதான் மிச்சம். இதன் விளைவாக நெல், அவரை, சோளம் போன்ற பயிர்களை வறட்சி தன் வாயில் போட்டுக்கொண்டது. ஆம், கடந்த பதினைந்து வருடங்களில் இதுவே கொடிய வறட்சி. எங்கும் வறட்சி எதிலும் வறட்சி. சில இடங்களில், நாவை நனைக்க தண்ணீர் கிடைப்பதுகூட தட்டுப்பாடாகிபோனது என வேஜா பத்திரிகை குறிப்பிட்டது.
பிரேஸில் நாட்டினருக்கு வறட்சி ஒன்றும் புதிய விஷயமல்ல. 1877-ல், அந்நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சியில் சுமார் 5,00,000 பேர் பட்டினியால் செத்தனர். அப்போது பிரேஸிலின் பேரரசராய் இருந்த இரண்டாம் டோன் பெட்ரூ, வறட்சிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பேன் என சூளுரைத்தார். தன்னுடைய கிரீடத்தில் இருக்கும் மணிக்கற்களை விற்றாவது இந்தப் பிரச்சினையை தீர்ப்பேன் என்றார்! அது நடந்தது 100 வருடங்களுக்கு முன்பு. ஆனால், அந்தப் பிரச்சினை இன்றும் நீடிக்கிறது. போன வருடம் ஏற்பட்ட வறட்சியின்போது, வடகிழக்கு பிரேஸிலில் உள்ள 1,209 நகரங்களில் வாழும் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டனரென கணக்கீடுகள் காண்பிக்கின்றன.
உடன் கிறிஸ்தவர்கள் நீட்டிய உதவிக்கரம்
வறட்சி பற்றிய செய்தி உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரேஸில் கிளை அலுவலகத்தை எட்டிய உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பாஹியா, சியரா, பரைபா, பெர்னாம்புகோ, பியாயூ ஆகிய மாகாணங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த இடங்கள் வறட்சியால் எந்தளவு பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதை மதிப்பிட பிரயாண பிரதிநிதிகள் அங்கு அனுப்பப்பட்டனர். அந்த இடங்களில் இருக்கும் 900 சாட்சிகளுக்கும் பைபிள் மாணாக்கர்களுக்கும் அவசரமாக உதவி தேவை என்பதை பிரயாணக் கண்காணிகள் உணர்ந்தனர். அவர்களில் சிலர் சக்கரைவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு தாக்குப்பிடித்துக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கோ அரிசி மட்டுமே இருந்தது. ஒரு குடும்பத்தாருக்கு பாலைத்தவிர சாப்பிடுவதற்கு ஒன்றுமே இல்லை. காலை, மதியம், இரவு என எல்லா வேளையும் பால்தான் குடித்தனர். கேன்ஸரால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவ சகோதரி, கொஞ்சம் சாப்பாடு வாங்குவதற்காக தன்னுடைய கட்டிலையே விற்கவேண்டியதாயிற்று. ஆறு பேர் கொண்ட ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களுடைய கடைசி சாப்பாடு என்று நினைத்த உணவை அப்போதுதான் சாப்பிட்டு முடித்திருந்தார்கள். அந்த சமயத்தில்தான் கிறிஸ்தவ சகோதரர்களிடம் இருந்து அவர்களுக்கு உதவிப்பொருட்கள் வந்துசேர்ந்தன.
உணவுப் பொருட்களையும் மற்ற உதவிப்பொருட்களையும் விநியோகிக்க உடனடியாக நிவாரணக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ரிஸைஃப் போன்ற அருகிலிருந்த பல நகரங்களில் உள்ள சாட்சிகள், தேவையில் இருந்தவர்களுக்கு நன்கொடைகளை தாராளமாக கொடுத்தார்கள். ஆனால், இன்னும் அதிகம் தேவைப்பட்டபோது, ரியோ டி ஜெனீரோவில் உள்ள சாட்சிகளும் உதவிக்கரம் நீட்டினார்கள். குறுகிய காலப்பகுதியில், சாட்சிகள் 34 டன் உணவுப் பொருட்களை வாரி வழங்கினர். இந்த பொருட்களை 2,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரிஸைஃப்க்கு கொண்டு செல்வதற்குத் தேவையான போக்குவரத்துச் செலவையும் அவர்கள் மனமுவந்து அளித்தனர்.
பியாயூ, பரைபா மாகாணங்களின் தலைநகரில் ஆறு டன் உணவுப் பொருட்கள் விரைவில் திரட்டப்பட்டன. நன்கொடையாக அளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் தற்காலிகமாக ஃபோர்டலெஜா நகரத்தில் உள்ள ஒரு ராஜ்ய மன்றத்தில் சேமித்து வைக்கப்பட்டன. ஆனால், அங்கு ஒரு பிரச்சினை எழும்பியது. அந்த உணவுப் பொருட்களை சேரவேண்டிய இடத்திற்கு சாட்சிகள் எப்படி கொண்டு செல்வர்? தன்னுடைய ட்ரக்கை பயன்படுத்திக்கொள்ளும்படி ஒருவர் தெரிவித்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சியல்ல. மேலும், உணவுப் பொருட்களை சுமந்து சென்ற வண்டிகள் வழிமறிக்கப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டன. நன்கொடையாக அளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போய்சேரவேண்டிய இடத்தை சென்றடையுமா? ஆனால், சாட்சிகளோ தங்கள் முயற்சிகளை கைவிடவில்லை. யெகோவா மேல் முழு விசுவாசத்தோடு உணவுப் பொருட்களை ட்ரக்குகளில் ஏற்றி புறப்பட்டனர். அவைப் பத்திரமாகப் போய்சேர்ந்தன. அவை நன்றியோடு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கொடுப்பதிலும் வாங்குவதிலும் சந்தோஷம்
நிவாரணப்பணியில் ஈடுபட்ட சாட்சிகள் தங்களுடைய சகோதரர்களுக்கு உதவ கிடைத்த சந்தர்ப்பத்திற்காக வெகு மகிழ்ச்சி அடைந்தனர். “போன தடவை வறட்சி வாட்டியபோது, உதவிப்பொருட்கள் நன்கொடையாக அளிக்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால், இந்தத் தடவை அந்த வாய்ப்பு கிட்டியதில் நாங்கள் அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்!” என சாவோ போலோவில் வாழும் ஒரு சபை மூப்பர் சொன்னார். “எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களுக்கு உதவ முடிந்ததில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். மிக முக்கியமாக, யெகோவாவின் இருதயத்தை நாங்கள் களிப்பூட்டியிருக்கிறோம் என்பதில் நிச்சயமாய் இருக்கிறோம். யாக்கோபு 2:15, 16-ல் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை நாங்கள் ஒருபோதும் மறப்பதில்லை” என ஃபோர்டலெஜாவில் இருக்கும் சாட்சிகள் எழுதினர். இதோ! பைபிளின் அந்த வசனங்கள்: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?”
சில சமயங்கள், உணவுப் பொருட்களை நன்கொடை அளித்த சாட்சிகள், அந்த உணவுப் பொட்டலங்களோடு உற்சாகமூட்டும் குறிப்புகளையும் எழுதி அனுப்பினர். “சங்கீதம் 72:16-ல் உள்ள வாக்குறுதியை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில், கடவுளுடைய புதிய உலகில், உணவு ஏராளமாக கிடைக்கும்” என்றது ஒரு குறிப்பு. பஞ்சத்தில் பரிதவித்த சாட்சிகளுக்கு தங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களின் கருணையான செயலைப் போற்ற வார்த்தைகள்தான் கிடைக்கவில்லை. அந்தளவு மிக்க நன்றியுடையவர்களாய் இருந்தனரென்பதில் சிறிதேனும் சந்தேகமே இல்லை. அத்தியாவசியமான இந்த உணவுப் பொருட்களை பெற்றுக்கொண்ட ஒரு சாட்சி குடும்பத்தினர், தங்கள் உள்ளத்தின் உணர்ச்சிகளை பின்வரும் வார்த்தைகளில் வடித்திருக்கின்றனர்: “நானும் என் குடும்பத்தாரும் இந்தச் செயலை, நம்முடைய பரிவிரக்கமுள்ள கடவுளும் தகப்பனுமாகிய யெகோவாவின் அன்பிற்கும் அவருடைய அமைப்பின் மற்றும் அதில் உள்ளவர்களின் அன்பிற்கும் கண்கண்ட நிரூபணமாகவே கருதுகிறோம். இது யெகோவாவோடும் அவருடைய ஜனங்களோடும் நெருக்கமான பந்தத்திற்குள் வர உதவியது.”
நித்திய பரிகாரம்
உண்மையை சொல்லப்போனால், வடகிழக்கு பிரேஸிலில் தண்ணீருக்கு பஞ்சமே இல்லை. நிலத்தடி நீர் தாராளமாகவே இருக்கிறது. அதில் குறைவே இல்லை. நீர்த்தேக்கங்களும் நிறைய இருக்கின்றன. இந்த நீர்வளங்கள் எல்லாருக்கும் கிடைக்கும்படி செய்ய முடிந்தால், மண்வளத்தை அதிகரித்து நிலத்தை விவசாயத்திற்கு ஏற்றதாக்கி, விளைச்சலை பெருக்கமுடியும்.
பேரரசர் இரண்டாம் டோன் பெட்ரூவை வருத்திய பிரச்சினை, ஒரு நாள் நிரந்தரமாக தீர்க்கப்படும். இயேசு கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் கடவுளுடைய ராஜ்யம், பஞ்சம் உட்பட பூமியின் எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும்போது அந்த நாள் வரும். அப்போது, பஞ்சத்தால் பரிதவித்த நிலம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை காணும்: “வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.”—ஏசாயா 35:1, 2, 6, 7.
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
“யாவருக்கும் நன்மை செய்யக்கடவோம்”
“யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” என அப்போஸ்தலனாகிய பவுல் உடன் விசுவாசிகளுக்கு ஆலோசனை கூறினார். (கலாத்தியர் 6:10) பிரேஸிலில் ஏற்பட்ட வறட்சி, இந்த ஆலோசனையை நடைமுறைப்படுத்த அங்கிருக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பை தந்தது. சாட்சிகள் உடன் விசுவாசிகளுக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டினார்கள். அதனால், இதற்கு முன் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைக்கு எதிர்ப்பு காட்டியவர்களில் சிலர், தங்களுடைய அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர்.
தன்னுடைய மனைவி, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படிக்க தீர்மானித்தபோது அந்த மனிதர் முதலில் அதிகமாக கோபமடைந்தார். ஆனால், கொஞ்ச நாட்களில், மனைவி தான் கற்றுக்கொண்ட புதிய நம்பிக்கைகளை மற்றவர்களுக்கும் சொல்ல ஆரம்பித்தாள். பஞ்சம் அதன் உச்சக்கட்டத்தை அடைகையில், உள்ளூர் சாட்சிகள் உணவுப் பொட்டலங்களோடு இந்தத் தம்பதியின் வீட்டிற்கு வந்தனர். இது அந்த மனிதரை வெகுவாக பாதித்தது. ஒருபோதும் செய்யமாட்டேன் என்று உறுதிபூண்டிருந்த ஒரு காரியத்தை இவர் செய்ய தீர்மானித்தார். அது என்ன? உள்ளூர் ராஜ்ய மன்றத்தில் கூட்டத்திற்கு செல்வதே. பைபிள் கடவுளால் ஏவப்பட்டது என்பதில் அவருக்கு இன்னமும் சந்தேகம் இருந்தபோதிலும், இந்த முன்னாள் எதிர்ப்பாளர் ஒரு வீட்டு பைபிள் படிப்புக்கு ஒப்புக்கொண்டார்.
“நிவாரணப் பொருட்கள் இவ்வளவு சீக்கிரம் வந்துசேர்ந்தது எங்கள் எல்லோரையுமே வியப்பில் ஆழ்த்தியது. நாங்கள் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே உணவுப் பொருட்கள் வந்தன. எனவே, நம் சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களுக்கு கொடுத்ததுபோக, பைபிள் மாணாக்கர்களுக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும், அயலகத்தாருக்கும் அவற்றை விநியோகித்தோம்” என வேறொரு இடத்திலுள்ள சாட்சிகள் தெரிவித்தனர்.
ஒரு கிராமத்தைச் சேர்ந்த சாட்சிகள், தங்களுடைய அயலகத்தார்களில் சிலருக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்தனர். “கிறிஸ்து எதைப் போதித்தாரோ அதை நீங்கள் செய்கிறீர்கள். பிரதிபலன் பாராமல் நீங்கள் செய்கிறீர்கள்” என உணவுப் பொட்டலங்களைப் பெற்றுக்கொண்ட ஒரு பெண்மணி நன்றியோடு சொன்னார்.
[பக்கம் 14-ன் படம்]
வறட்சியின் கோலம்
[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]
UN/DPI Photo by Evan Schneider