நெதர்லாந்தில் நாஸி அடாவடிக்கு அஞ்சாத நெஞ்சங்கள்
ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்த படுகொலை நினைவு அருங்காட்சியகம் (USHMM), உலகிலேயே மிக அதிகமான கலைப் படைப்புகளை ஒன்றுதிரட்டி காட்சிக்கு வைத்துள்ளது. அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது நாஸிக்கள் இழைத்த அட்டூழியங்களின் டாக்குமென்ட்ரி படங்களையும் போட்டுக் காட்டுகிறது. இந்த அருங்காட்சியகம் வாஷிங்டன், டி.சி.-யில் அமைந்துள்ளது. இது பொதுமக்களுக்கென 1993-ல் திறந்து வைக்கப்பட்டது. அதுமுதல், சுமார் 1.2 கோடி மக்கள், பிரபலமாகி வரும் இக்கண்காட்சியைக் காண ஆவலுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
நாஸி ஆட்சியில் யெகோவாவின் சாட்சிகள் பட்ட துன்பத்துக்கு அளவே இல்லை. இதற்கு அத்தாட்சி அளிக்கும் ஆவணங்களை இந்த அருங்காட்சியகம் சிறப்பித்துக் காட்டியது. வழக்கமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் லிமிட்டான ஐட்டங்களுடன், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய விசேஷ தொடர் நிகழ்ச்சியையும் தயாரித்து அளித்துள்ளது. யெகோவாவின் சாட்சிகள் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களை எப்படியெல்லாம் உண்மையுடன் சகித்தனர் என்பதற்கான தனிப்பட்ட உதாரணங்களை இந்நிகழ்ச்சி நிரல்கள் பிட்டுப் பிட்டு வைத்திருக்கின்றன. ஏப்ரல் 8, 1999-ல், “நெதர்லாந்து நாஸி முற்றுகையில் யெகோவாவின் சாட்சிகள்” என்ற தலைப்பில் ஒரு விசேஷ நிகழ்ச்சியை இந்த அருங்காட்சியகம் தயாரித்து வழங்கியது. அருங்காட்சியகத்திலுள்ள இரண்டு பெரிய கலையரங்கங்களில் இது நடத்தப்பட்டது.
சாரா ஜேன் புளூம்ஃபீல்ட் என்ற பெண்மணியே இந்த அருங்காட்சியகத்தின் செயல் இயக்குநர். இவரது ஆரம்ப சொற்பொழிவுடன் நிகழ்ச்சிநிரல் தொடங்கியது. யெகோவாவின் சாட்சிகளின் சரிதையில் அத்தனை உள்ளான ஆர்வம் இவருக்கு! விழித்தெழு! நடத்திய நேர்காணல் ஒன்றில், யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டபோது எப்படியெல்லாம் உண்மையுடன் சகித்தார்கள் என்பதை உலகுக்கு உணர்த்த அதிகப்படியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதை அவர் விளக்கினார். “இந்த அருங்காட்சியகத்தில் நடக்கும் மற்ற முக்கியமான நிகழ்ச்சி நிரல்களைப் போலவே, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளும் எங்கும் பறைசாற்றப்படுகின்றன” என்று அவர் கூறினார்.
அநேக சரித்திர வல்லுநர்கள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அன்று மாலை நடந்த நிகழ்ச்சி நிரலிலும் பங்கேற்றனர். டாக்டர் லாரன்ஸ் பேரன் என்பவரும் அவர்களில் ஒருவர். இவர் நவீன ஜெர்மானிய, யூத சரித்திர பேராசிரியராக சான் டயகோ அரசு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். “யெகோவாவின் சாட்சிகள் மூன்றாம் ரெய்ச்சுடன் எவ்விதத்திலும் கூட்டுச் சேராமல் மெச்சத்தகுந்த முறையில் நிமிர்ந்து நின்றனர்” என அவர் தன் சொற்பொழிவில் குறிப்பிட்டார். “கடவுள் மேல் இருக்கும் விசுவாசத்தை, நாஸி அரசின் அதிகாரத்தைவிட உயர்ந்த ஸ்தானத்தில் சாட்சிகள் வைத்திருந்தனர். அவர்கள், ஹிட்லரின் தலைமையைப் பற்றிய அதீதபக்தியை, சமயஞ்சாராத ஒரு வணக்கமாகவே கருதினர். ஆகவே, ஹிட்லரை தெய்வமாக்கும் பழக்கங்களான நாஸி சல்யூட் போடுவதையோ, ‘ஹெயில் ஹிட்லர்’ என்று கோஷம் எழுப்புவதையோ மறுத்தனர். . . . மற்றவர்களைக் கொலை செய்யக்கூடாது என்றும், தன் அயலானை நேசிக்க வேண்டும் என்றும் கடவுள் கொடுத்துள்ள கட்டளைக்கு இணங்க, ராணுவ சேவையில் சேர மறுத்துவிட்டனர். . . . தங்கள் மத ஆராதனையை நிறுத்தும்படி மூன்றாம் ரெய்ச் கட்டளையிட்டபோது, ‘மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியம்’ என்ற வழக்கமான பதிலையே சாட்சிகள் அளித்தனர்.” இதற்காகவே ஐரோப்பிய நாடுகள் பலவற்றைச் சேர்ந்த எண்ணற்ற சாட்சிகள் கான்ஸன்ட்ரேஷன் முகாம்களுக்கு அனுப்பப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டனர். அதுமட்டுமா, அநேகர் கொல்லப்பட்டனர்!
நெதர்லாந்து யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக எப்படியெல்லாம் நாஸி துன்புறுத்தியது என்பதை விளக்கிக் காட்ட இந்த அருங்காட்சியகம் ஓர் ஏற்பாட்டைச் செய்தது. டச்சு ஆராய்ச்சியாளர்களையும் படுகொலைக்குத் தப்பின சிலரையும் நேரில் பேச அழைத்தது. மே 29, 1940-ல், அதாவது, நெதர்லாந்தை நாஸிக்கள் முற்றுகையிட்ட சிறிது காலத்தில், யெகோவாவின் சாட்சிகளுக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. அச்சமயம் சுமார் 500 சாட்சிகள் அங்கு வசித்தனர். தொடர்ந்து வந்த மாதங்களில், நூற்றுக்கணக்கான சாட்சிகள் கைதுசெய்யப்பட்டனர். மற்றவர்களின் பெயர்களையும் பெறும் முயற்சியில், கைது செய்யப்பட்டவர்களை அதிகாரிகள் சித்திரவதை செய்தனர். போர் முடிவதற்குள், 450-க்கும் மேற்பட்ட சாட்சிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் 120-க்கும் மேற்பட்டவர்கள், சித்திரவதை தாங்க முடியாமல் இறந்துவிட்டனர்.
உவாட்ச் டவர் சொஸைட்டியின் நெதர்லாந்து கிளை அலுவலக ஆவணங்களில், “படுகொலையைத் தப்பின நெதர்லாந்து யெகோவாவின் சாட்சிகளது வாழ்க்கை சரிதைகள் 200-ஐயும் வீடியோ எடுக்கப்பட்ட 170-க்கும் மேற்பட்ட பேட்டிகளையும் காணலாம். கடவுள் பேரிலும் அயலான் பேரிலும் சாட்சிகளுக்கிருந்த அன்புதான் இவ்வாறெல்லாம் செய்யும்படி அவர்களைத் தூண்டியது என்பதையே இவையனைத்தும் காட்டுகின்றன” என்று ஒரு டச்சு ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.
நாஸிக்கள் குறிவைத்து தாக்கிய மற்ற தொகுதியினரோடு ஒப்பிட, சாட்சிகள் வித்தியாசமாக நடத்தப்பட்டனர் என்ற உண்மையை அநேக சொற்பொழிவாளர்கள் வலியுறுத்திக் கூறினர். ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் மத நம்பிக்கையை மறுத்துக் கோரியிருந்த அறிக்கையொன்றில் வெறுமனே கையெழுத்து இட்டிருந்தால் போதுமானது; அவர்கள் உடனே விடுவிக்கப்பட்டிருப்பர். ஆனாலும் சாட்சிகளில் மிகப் பெரும்பான்மையோர் இணங்கிச்செல்வதற்கு பதில், நன்றாக சிந்தித்துப் பார்த்து தெரிந்தே துன்புறுத்தலை தேர்ந்தெடுத்தனர் என பேச்சாளர்களும் பேட்டி காணப்பட்டவர்களும் விவரித்தனர். ஒருசிலர் மட்டும், யெகோவாவின் சாட்சிகளோடு இனி எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ள விரும்பாததால் கையெழுத்திட்டனர்.
அப்படிப்பட்ட அறிக்கையில் குழப்பம் காரணமாக சிலர் கையெழுத்து இட்டனர். தங்கள் வணக்க முறையைக் கைவிட்டுவிட வேண்டும் என இவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. வேறு சிலரோ, தங்களைத் துன்புறுத்துபவர்களுக்கு ‘தாஜா’ காட்டி முதலில் சுதந்திரம் பெற்றுவிட்டு, பிறகு தங்களது பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய முடியும் என்று நினைத்தனர். இவ்வாறு செய்வது தார்மீக ரீதியில் சரியென்றே சிலருக்குப் பட்டது. ஆனால் விடுவிக்கப்பட்ட பின்பு ஒரு கட்டத்தில், தங்கள் நோக்கம் என்னவாக இருந்தாலும், கையெழுத்திட்டது தவறே என்று அவர்களுக்குப் புலப்பட்டது.
அவர்கள் தவறாக முடிவெடுத்துவிட்ட காரணத்தால் சாட்சிகள் அவர்களை ஒதுக்கி வைத்துவிடவில்லை. தங்கள் வீடுகளுக்கும் சபைகளுக்கும் திரும்பியதும் அவர்களுக்கு ஆவிக்குரிய உதவி கிடைத்தது. உவாட்ச் டவர் சொஸைட்டியின் நெதர்லாந்து கிளை அலுவலகம், ஜூன் 1942 தேதியிட்ட கடிதம் ஒன்றில், அந்நாட்டைச் சேர்ந்த சாட்சிகளுக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. சிலர் கையெழுத்து இட்டதற்கான சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு அவர்களை தயவாய் நடத்தும்படி அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இன்னும் நாஸி முற்றுகை இருக்கையிலேயே, இந்த முன்னாள் கைதிகள் மீண்டும் பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாய் பங்கேற்றனர். தங்கள் உயிரையும் பணயம் வைத்து இவ்வாறு செய்தனர். சிலர் இரண்டாவது தடவை கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட மறுத்ததால் கொல்லப்பட்டார்.
யெகோவாவின் சாட்சிகள் பட்ட கொடுமைக்கு அளவே இல்லை; ஆண்டுக்கணக்கில் உயிரை பணயம் வைத்து டென்ஷனுடன் ஒளிந்து ஒளிந்து வேலை நடத்தினர். இதன் மத்தியிலும் நெதர்லாந்து நாட்டில் அவர்களது எண்ணிக்கை 1940-ல் சுமார் 500 ஆக இருந்து, நாஸி ஆட்சி முடிவடைந்த வருடமான 1945-ல் 2,000-க்கும் மேலாக அதிகரித்தது. அவர்களது அஞ்சா நெஞ்சமும், கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற மன உறுதியும் இந்நாள்வரை ஒரு பெரும் சாட்சி அளிக்கிறது.
[பக்கம் 25-ன் படம்]
அவையினரிடம் ஆராய்ச்சியாளர்கள் பேசுகிறார்கள்
[பக்கம் 25-ன் படம்]
படுகொலைக்குத் தப்பின டச்சு நாட்டவர்களிடம் ஓர் நேர்காணல்