‘அழியா தடம்பதித்த மாற்றம்’
“மனித சரித்திரத்தின் எந்த நூற்றாண்டிலுமே இல்லாத அளவுக்கு பரவலான, அழியா தடம்பதித்த மாற்றத்தை இந்த இருபதாம் நூற்றாண்டு கண்டிருக்கிறது.”—த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி.
இருபதாம் நூற்றாண்டை மறுபரிசீலனை செய்கையில், டைம் பத்திரிகையின் நிர்வாகப் பதிப்பாசிரியர் வால்டர் ஐசக்ஸனின் கருத்தை அநேகர் ஒத்துக்கொள்வர் என்பதில் சிறிதேனும் சந்தேகமில்லை. அவர் சொன்னதாவது: “மற்ற நூற்றாண்டுகளோடு ஒப்பிட, இந்த நூற்றாண்டே மலைப்பூட்டும் ஒன்று: பிரமிப்பூட்டும், சில சமயங்களில் அதிர்ச்சியூட்டும், ஆனால் பொதுவாக அதிசயமூட்டும் ஒரு நூற்றாண்டு.”
இதைப்போலவே, நார்வேயின் முன்னாள் பிரதம மந்திரி க்ரூ ஹார்லம் ப்ரூன்ட்லாண்ட் சொல்வதாவது: “மனிதனின் கேடுகெட்ட நடவடிக்கைகள் ஆழங்காண முடியாத அடிமட்டத்தை தொட்ட . . . உச்சங்களை கண்ட நூற்றாண்டு” என இந்த நூற்றாண்டு அழைக்கப்படுகிறது. “[சில இடங்களில்] ஈடு இணையற்ற பொருளாதார வளர்ச்சியையும் மாபெரும் முன்னேற்றங்களையும் கண்ட நூற்றாண்டு” என அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார். எனினும், அதே சமயம் “ஜனநெரிசலாலும் வறுமை, சுகாதாரமற்ற சுற்றுச்சூழல் காரணமாக பரவலாக காணப்படும் நோய்களாலும்” ஏழ்மையில் தவிக்கும் நகர்ப்புற பகுதிகளின் எதிர்காலமே இருண்டு கிடக்கிறது.
அரசியல் குழப்பங்கள்
இருபதாம் நூற்றாண்டு துவங்கியபோது, சீனாவில் மான்சூ அரசகுலமும், ஒட்டாமன் பேரரசும், அநேக ஐரோப்பிய சாம்ராஜ்யங்களும் உலகின் பெரும்பகுதியை அடக்கி ஆண்டன. பிரிட்டிஷ் பேரரசு மட்டுமே பூமியின் கால்பாகத்தை தன் ஆதிக்கத்திற்குள் வைத்திருந்தது. உலகில், நான்கில் ஒருவர் அதன் ஆட்சியின்கீழ் இருந்தனர். ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே, இந்த எல்லா பேரரசுகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து சரித்திர புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டன. “1945-ல், சக்கரவர்த்தி சகாப்தம் முடிவுற்றது” என த டைம்ஸ் அட்லஸ் ஆஃப் த டுவென்டியத் செஞ்சுரி குறிப்பிடுகிறது.
குடியேற்ற ஆட்சியின் முடிவு, 17-ம் மற்றும் 19-ம் நூற்றாண்டிற்கு இடையே ஐரோப்பா முழுவதிலும் ஆக்கிரமித்திருந்த நாட்டுப்பற்று எனும் பேரலை உலகின் மற்ற பாகங்களிலும் அடிக்க ஆரம்பிப்பதற்கு அடிகோலியது. “அநேக ஐரோப்பிய தேசங்களில், தேசியம் என்னும் தணியா தாகம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு தணிந்தது. எனினும், ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் குடியேற்ற ஆட்சிக்கு எதிராக தேசப்பற்று கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. இதன் விளைவாக, “கட்சி சார்பற்ற நாடுகள் சரித்திர ஏடுகளில் தோன்ற ஆரம்பித்தன. ஐரோப்பிய வளர்ச்சியோடு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் ஆரம்பித்த சகாப்தம் அப்போது முடிவுக்கு வந்தது” என த காலின்ஸ் அட்லஸ் ஆஃப் உவர்ல்ட் ஹிஸ்டரி குறிப்பிடுகிறது.
பேரரசுகள் மடமடவென சரியவே, சுதந்திர நாடுகள் முளைக்க ஆரம்பித்தன. இவற்றில் அநேகம் மக்களாட்சி முறை அரசாங்கங்களாக காட்சிக்கு வர ஆரம்பித்தன. ஆனால், இரண்டாம் உலக யுத்தத்தின்போது, ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் இருந்த செல்வாக்கு நிறைந்த சர்வாதிகார அரசாங்கங்களிடம் இருந்து மக்களாட்சி முறைக்கு கடும் எதிர்ப்பு வந்தது. இந்த சர்வாதிகார அரசுகள், தனிமனித சுதந்திரத்தை கட்டுப்படுத்தின; நாட்டின் பொருளாதாரம், தகவல் சாதனம், படை பலம் போன்றவற்றையும் ஆக்கிரமித்தன. உலகத்தை தன்வசமாக்க வேண்டுமென்கிற அவற்றின் முயற்சிகள், சொல்லொணா மனித உயிர்களின் பலி மற்றும் வீண்செலவுக்குப் பிறகே தடுத்து நிறுத்தப்பட்டன.
யுத்தங்களின் நூற்றாண்டு
முந்தின நூற்றாண்டுகள் எல்லாவற்றிலிருந்தும் இந்த இருபதாம் நூற்றாண்டை தனித்துக்காட்டுவது யுத்தமே. முதல் உலக யுத்தத்தைப் பற்றி ஜெர்மானிய சரித்திராசிரியர் கீடோ க்நாப் இவ்வாறு எழுதுகிறார்: “ஆகஸ்ட் 1, 1914: ஐரோப்பியர்கள் நீண்ட காலமாக அனுபவித்து வந்த 19-ம் நூற்றாண்டின் சமாதானத்திற்கு அந்த நாளில்தான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது என ஒருவரும் சந்தேகிக்கவில்லை. முப்பது ஆண்டுகள் நீடித்த யுத்தத்தோடும், மனிதனுக்கு மனிதன் எந்த வகையிலெல்லாம் தீங்கிழைக்க முடியும் என்பதையும், மெய்ப்பித்துக் காட்டிய அந்த சமயத்தில்தானே இருபதாம் நூற்றாண்டு உண்மையிலேயே ஆரம்பித்தது என்பதையும் ஒருவரும் கவனிக்கவில்லை.”
“அந்த யுத்தத்தின் நாசவிளைவுகள் ஐக்கிய மாகாணங்களை அச்சுறுத்தும் விதத்தில் அளவிட முடியாத அளவு பெரிதும் பாதித்தன என்றும், இன்றும் [1998] அதை உணர முடிகிறதென்றும்” சரித்திரப் பேராசிரியர் ஹ்யூ ப்ரோகன் நினைப்பூட்டுகிறார். ஹார்வர்டு பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியர் ஆகிரா ஈரீ இவ்வாறு எழுதினார்: “முதல் உலக யுத்தம் பல வழிகளில் கிழக்கு ஆசியா மற்றும் ஐக்கிய மாகாணங்களின் சரித்திரத்தில் திருப்புகட்டமாக அமைந்தது.”
முதல் மற்றும் இரண்டாம் உலக யுத்தம், “இருபதாம் நூற்றாண்டின் புவியியல் சார்ந்த அரசியல் சரித்திரத்தில் மாபெரும் திருப்புமுனை” என த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா தனித்து குறிப்பிட்டுள்ளது நியாயமானதே. “முதல் உலக யுத்தம் நான்கு மாபெரும் சாம்ராஜ்யங்களின் சரிவிற்கு அடிகோலியது . . . , ரஷ்யாவின் பொதுவுடைமைக் கொள்கை புரட்சிக்கு வித்திட்டது, மேலும் . . . இரண்டாம் உலக யுத்தத்திற்கும் அடித்தளம் இட்டது” என அது சுட்டிக்காட்டுகிறது. மேலும், “முன்னொருபோதும் ஏற்பட்டிராத அளவு படுகொலையும், இரத்தஞ்சிந்துதலும், அழிவும்” உலக யுத்தங்களால் நேரிட்டது என அது குறிப்பிடுகிறது. கீடோ க்நாப் இதேமாதிரியான கருத்தைத்தான் தெரிவிக்கிறார்: “எதிர்பார்க்காத அளவுக்கு குரூரமும் மனித நேயமற்ற ஈனச் செயலும் உச்சநிலைக்கு சென்றது. பதுங்கு குழிகள் . . . மனிதர்கள் சதையும் இரத்தமுமுள்ள தனிநபர்களாக அல்ல சடப்பொருளாக கருதப்படும் சகாப்தத்திற்கே வித்திட்டது.”
படுநாசங்களை விளைவிக்கும் இப்படிப்பட்ட யுத்தங்கள் இனிமேலும் நேரிடாதபடி தவிர்க்கவே, 1919-ல் சர்வதேச சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால், உலகளாவிய சமாதானத்தை கொண்டுவரும் தன் இலக்கில் அது படுதோல்வியுற்றது. எனவே, ஐக்கிய நாட்டு சங்கமாக அது உருபெற்றது. மூன்றாவது உலக யுத்தத்தை தவிர்ப்பதில் இச்சங்கம் வெற்றி கண்டது. என்றபோதிலும், பல ஆண்டுகளாக அணு ஆயுதப் பேரழிவாக உருவெடுத்திட அச்சுறுத்திய பனிப்போரை இச்சங்கத்தால் தடுத்து நிறுத்த முடியவில்லை. பால்கன் பகுதிகளில் நடந்ததுபோல், உலகம் முழுவதும் ஏற்படுகிற சிறுசிறு சண்டைகளையும்கூட இச்சங்கத்தால் தவிர்க்க முடியவில்லை.
உலக நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அவற்றின் மத்தியில் சமாதானத்தை காப்பதும் கடினமான காரியமே. முதல் உலக யுத்தத்திற்கு முன் புழக்கத்தில் இருந்த வரைபடத்தையும் தற்போது புழக்கத்தில் இருக்கும் வரைபடத்தையும் ஒப்பிட்டால், இப்போது தனிநாடுகளாக இருக்கும் குறைந்தபட்சம் 51 ஆப்பிரிக்க, 44 ஆசிய நாடுகள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கவில்லை. ஐக்கிய நாட்டு சங்கத்தில் 185 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. அவற்றில் 116 நாடுகள் இச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்ட வருடமாகிய 1945-ல் தனிநாடுகளாக இல்லை.
“அதிக திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளுள் ஒன்று”
19-ம் நூற்றாண்டு அதன் முடிவை நெருங்குகையில், உலகிலேயே மிகப் பெரிய பேரரசாக திகழ்ந்தது ரஷ்யாவே. ஆனால், படுவேகமாக அதன் ஆதரவை இழந்துகொண்டு வந்தது. “சீர்திருத்தத்தைவிட புரட்சியே அவசியம்” என அநேக மக்கள் நினைத்ததாக எழுத்தாளர் ஜெஃப்ரீ பான்டன் குறிப்பிடுகிறார். “மாபெரும் யுத்தமாகிய முதல் உலகப் போருக்கும் அதன் விளைவான பெருங்குழப்படிகளுக்கும் பிறகே, உண்மையான புரட்சி ஏற்பட்டது” என அவர் மேலும் குறிப்பிடுகிறார்.
அந்த சமயத்தில் ரஷ்யாவில் பொதுவுடைமைக் கொள்கையினர் அதிகாரத்தைப் பெற்றது புதிய ஒரு பேரரசிற்கு வித்திட்டது. சோவியத் யூனியனால் ஆதரிக்கப்பட்ட உலகளாவிய கம்யூனிஸமே அது. உலகப் போருக்கு மத்தியில் இதன் தோற்றம் இருந்தபோதிலும், சோவியத் பேரரசு போரோடு முடிவடைந்துவிடவில்லை. 1970-களின் பிற்பகுதியில் சோவியத் யூனியன் “மிகப் பெரிய பன்னாட்டு பேரரசாக திகழ்ந்தபோதிலும், ஏற்கெனவே உயிர்த்தெழும்ப முடியாதபடிக்கு அமிழ்ந்துபோக ஆரம்பித்துவிட்டதென” டௌன் வித் பிக் பிரதர் என்ற புத்தகத்தில் எழுத்தாளர் மைக்கல் டாப்ஸ் வலியுறுத்துகிறார்.
இருந்தபோதிலும், அதன் வீழ்ச்சி திடுதிப்பென நிகழ்ந்ததே. ஐரோப்பா—ஒரு சரித்திரம் என்ற ஆங்கில புத்தகத்தில் நார்மன் டேவிஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இதன் வீழ்ச்சியின் வேகம், ஐரோப்பிய சரித்திரத்தில் நிகழ்ந்த வேறெந்த சாம்ராஜ்யங்களின் வீழ்ச்சியையும் மிஞ்சிவிட்டது,” மேலும் “இயற்கை காரணங்களாலேயே இது நிகழ்ந்தது.” பான்டன் மேலும் குறிப்பிடுவதாவது: “சோவியத் யூனியனின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி அனைத்துமே இருபதாம் நூற்றாண்டின் மிக அதிக திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளுள் ஒன்று.”
இருபதாம் நூற்றாண்டில், பேரளவான பின்விளைவுகளைக் கொண்ட, அழியா தடம்பதித்த மாற்றங்களுள் ஒன்றே சோவியத் யூனியனின் வீழ்ச்சி. அரசியல் மாற்றங்கள் ஒன்றும் புதிதல்ல. அவை பல நூற்றாண்டுகளாக ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், அரசாங்கங்களின் அமைப்பில் ஏற்பட்ட ஒரு மாற்றமே, இருபதாம் நூற்றாண்டில் நேரிட்ட மாற்றங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. என்ன மாற்றம் இது, உங்களை இது எப்படி தனிப்பட்ட விதமாக பாதிக்கிறது என்பதை பிறகு சிந்திப்போம்.
அதற்குமுன், இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் அடைந்துள்ள முன்னேற்றங்களில் சிலவற்றை ஆராய்வோம். “இருபதாம் நூற்றாண்டை மனித சரித்திரத்தின் மிகவும் சந்தோஷமான, புதியதோர் சகாப்தமாக வரவேற்பதற்கு மேற்கு ஐரோப்பிய, வட அமெரிக்க மக்களுக்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றனவென” இவற்றைப் பற்றி பேராசிரியர் மைக்கல் ஹோவர்ட் குறிப்பிடுகிறார். இந்த முன்னேற்றங்கள், மேம்பட்டதொரு வாழ்க்கைக்கு வித்திட்டனவா?
[பக்கம் 2- 7-ன் அட்டவணை/படங்கள்]
(For fully formatted text, see publication)
1901
64 வருட ஆட்சிக்கு பிறகு விக்டோரியா ராணி இறந்தார்
உலக மக்கள்தொகை 160 கோடி
1914
இளவரசர் ஃபெர்டினான்ட் கொல்லப்பட்டார். முதல் உலக யுத்தம் ஆரம்பித்தது
கடைசி ருஷ்யப் பேரரசர், இரண்டாம் நிகோலஸும் அவரது குடும்பமும்
1917
ரஷ்யாவை புரட்சிக்கு வழிநடத்திய லெனின்
1919
சர்வதேச சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது
1929
ஐ.மா. பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும்சரிவு பொருளாதார சீர்குலைவில் விளைவடைந்தது
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் காந்தி
1939
அடால்ஃப் ஹிட்லர் போலந்தின்மீது படையெடுக்க, இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பிக்கிறது
1940-ல் கிரேட் பிரிட்டனின் பிரதம மந்திரியாகிறார் வின்ஸ்டன் சர்ச்சில்
பேரழிவு
1941
பேர்ல் ஹார்பரை ஜப்பான் தாக்குதல்
1945
ஹிரோஷிமா, நாகசாகிமீது ஐக்கிய மாகாணங்கள் அணுகுண்டுகளைப் போடுதல். இரண்டாம் உலக யுத்தம் முடிவுறுகிறது
1946
ஐ.நா. பொதுச்சபையின் முதல் கூட்டம்
1949
சீனாவின் மக்கள் குடியரசை மா சே-துங் அறிவிக்கிறார்
1960
பதினேழு புதிய ஆப்பிரிக்க நாடுகள் உருவாக்கப்படுதல்
1975
வியட்நாம் போர் முடிவுறுதல்
1989
கம்யூனிஸம் வலுவிளக்கவே, பெர்லின் சுவர் விழுதல்
1991
சோவியத்யூனியன் பிளவுபடுதல்