எமது வாசகரிடமிருந்து
தாத்தா பாட்டிமார் “தாத்தா பாட்டிமார்—சுகங்களும் சுமைகளும்” (மார்ச் 22, 1999) என்ற தலைப்பில் வந்த கட்டுரைகளை நீங்கள் நல்ல விதத்தில் எழுதியிருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு நன்றி. தன்னந்தனியாக நான் என்னுடைய இரண்டு பேரன்களை வளர்த்து வருகிறேன். அவர்களுடைய அம்மா போதை வஸ்துக்களுக்கு அடிமையாக வாழ்கிறாள். உங்கள் கட்டுரையில் நீங்கள் சொல்லியிருந்த விதமாக என் பேரன்களின் கோபத்தை நான் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பெற்றோர் இருவராலும் கைவிடப்பட்ட பிள்ளைகளின் உணர்வுகள் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் கடந்த வருடம் என்னுடைய சிறிய பேரன் “எங்களைக் கவனித்துக் கொள்வதற்காக உங்களுக்கு நன்றி பாட்டி” என்று சொன்னான். அப்போது நான் எடுத்துக்கொண்ட பாடுகளும் என் கண்ணீரும் வீண்போகவில்லை என்பதை நினைத்து சந்தோஷமடைந்தேன்.
டி. பி., ஐக்கிய மாகாணங்கள்
எங்கள் பெற்றோரின் அலட்சியம், துஷ்பிரயோகம் இவற்றையெல்லாம் தாண்டி என்னுடைய அண்ணன்களும் நானும் இன்னும் உயிருடன் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எங்கள் அருமை பாட்டியின் பாசமும் அரவணைப்புமே. அவர்கள் எங்கள் மனதில் பதிய வைத்த பைபிள் சத்தியங்களே தொடர்ந்து வாழ எங்களைப் பலப்படுத்தியது. இன்று அவர்களுடைய மூன்று பேர பிள்ளைகளும் ஏழு கொள்ளு பேர பிள்ளைகளும் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள்.
பி. எல். பி., பிரேஸில்
எனக்கு 17 மாத குழந்தை இருக்கிறது, அவனை கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் எனக்கும் என் மாமியாருக்கும் அடிக்கடி தகராறு. எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கும், அதனால் கிறிஸ்தவ கூட்டங்களைக்கூட என்னால் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது. அவர்களுடைய நோக்கம் கெட்டது இல்லை, அவர்கள் அவனை என்னிடமிருந்து எடுத்துக்கொள்ள முயற்சி செய்யமாட்டார்கள் என்பதை நீங்கள் எனக்கு புரிய வைத்துவிட்டீர்கள். எனக்கு மிகவும் தேவையாக இருந்த சமயத்தில் இந்தத் தகவலை நான் பெற்றுக்கொண்டதற்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறேன்.
எம். ஜெட். கே., மெக்ஸிகோ
ஐந்து மகன்கள் “ஐந்து மகன்களை எனக்கு தந்த யெகோவாவுக்கு நன்றி” (மார்ச் 22, 1999) என்ற கட்டுரை வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது, ஏனென்றால் ஹெலன் சால்ஸ்பெரிக்கும் என் அம்மாவுக்கும் நிறைய ஒற்றுமைகள். இரண்டு பேரும் ஒரே ஆண்டில் முழுக்காட்டுதல் பெற்றிருக்கின்றனர். என் அப்பாவின் கம்பெனி திவாலாகிவிட்ட சமயத்தில் எங்களுக்கு பண கஷ்டம் இருந்தபோது ஹெலனைப் போலவே என்னுடைய அம்மா வீட்டிலிருந்து எங்களை கவனித்துக் கொண்டார்கள். அவர்களும்கூட முழுநேரமாக சுவிசேஷ வேலையை செய்யும் ஒரு பயனியராக சேவித்தார்கள். எப்போதும் வெளி ஊழியத்தில் அவர்களுக்குக் கிடைத்த நல்ல அனுபவங்களை எங்களுக்குச் சொல்வார்கள். இதனால் பயனியர் ஊழியம் எனக்கு மிகவும் இஷ்டமாக இருந்தது. இப்பொழுது எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், என் அம்மா எங்களுக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
எம். எஸ்., ஜப்பான்
இந்தக் கட்டுரைக்கு என் விசேஷமான நன்றி. ஒரு தகப்பனாக பைபிளின் ஆலோசனையின்படி நடக்க நான் முயற்சி எடுக்கிறேன், ஆனால் எனக்கு திருப்தியாக இல்லை. சால்ஸ்பெரி குடும்பத்தின் அனுபவம் தொடர்ந்து அதை செய்துகொண்டிருக்க என்னை பலப்படுத்தியிருக்கிறது.
ஆர். எம். ஆர்., பிரேஸில்
விரும்புகிற பொருட்கள் எனக்கு 12 வயதாகிறது. “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் விரும்புவதெல்லாம் எனக்கு ஏன் கிடைப்பதில்லை?” (மார்ச் 22, 1999) என்ற கட்டுரைக்காக நான் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். சைக்கிள், கிதார் இதெல்லாம் எனக்கு கொள்ளைப் பிரியம். ஆனால் என் அப்பாவால் அவற்றை எனக்கு வாங்கித்தர முடியவில்லை. இது எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. ஆனால் உங்கள் கட்டுரையை வாசித்தபோது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. அப்பா ஸ்தானத்திலிருந்து நீங்கள் வழங்கிய உங்கள் அறிவுரைக்கு நன்றி.
சி. யூ., நைஜீரியா
தசைகள் காலை உடற்பயிற்சியை முடித்துக்கொண்ட கையோடு “தசைகள்—தன்னிகரற்ற வடிவமைப்பு” (ஏப்ரல் 8, 1999) கட்டுரையை வாசிக்க உட்கார்ந்தேன். ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் என் கண்களின் தசைகள் நகருவதையும், காப்பியை குடிப்பதற்காக ஒவ்வொரு முறை கப்பை உயர்த்துகையில் என்னுடைய கைகளின் தசைகள் சுருங்கி விரிவடைவதையும், நாற்காலியில் அசைந்து அசைந்து உட்காருகையில் என்னுடைய கால் தசைகள் வேலை செய்வதையும் எண்ணிப்பார்க்க ஆரம்பித்தேன். ஆஹா! என்னே அற்புதமான வடிவமைப்பு!
என். டி., பெலிஸ்
நம்முடைய மகத்தான படைப்பாளர் யெகோவா தேவனுக்கு இருக்கும் பிரமாண்டமான ஞானம், அறிவு ஆகியவற்றில் ஒரு சிறிய பகுதியையே நம்முடைய தசைகள் வெளிப்படுத்துகின்றன. மனித உடலைப் பற்றி வாசிப்பது என்னை எப்போதும் பிரமிப்படையச் செய்திருக்கிறது. ஆனால் வாசித்தவற்றில் இத்தனை அழகாகவும் புரிந்துகொள்வதற்கு எளிமையாகவும் இருந்த முதல் கட்டுரை இதுவே.
பி. ஜே. ஓ. எஸ்., பிரேஸில்