அவொகெடொ—‘சகலகலா’ கனி!
கொலம்பியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
ஸ்பானிய வீரர்கள் அதைப் பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டனர். 16-ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால அந்த வீரர்கள் அப்படியொரு கனியை தங்கள் வாழ்க்கையில் பார்த்ததேயில்லை. அது பேரிக்காயைப்போல அதே அளவில் அதே வடிவில் இருந்தது; ஆனால் பழுத்தப் பிறகும்கூட பச்சையாகத்தான் இருந்தது. அந்தப் பழம் மிருதுவாக இருந்தது, பாதாம், முந்திரி போன்ற வாசனை இருந்தது. இதன் காரணமாக இதனை அவொகெடொ என்று அழைத்தனர்; இந்தப் பெயர் அஸ்டெக் பாஷையில் அவகட்டில் என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
ஐரோப்பியர்கள் 1519-ல்தான் முதன் முதலாக அவொகெடொவை கண்ணால் பார்த்தனர்; இந்த பழத்தை மக்களுக்கு ‘அறிமுகம்’ செய்தவர் மார்டின் ஃபெர்னான்டெஸ் தே அன்சிஸோ. தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவில் சான்டா மார்டா என்று இன்று அழைக்கப்படும் இடத்திற்குப் பக்கத்தில் அன்சிஸோ அந்தப் பழத்தைப் பார்த்தார். ஸ்பானிய வீரர்கள் அந்த காலத்தில்தான் அங்கு முதன்முறையாக ஆய்வுக்கு சென்றனர். அப்படிப்பட்ட ஆய்வுகளின் போதுதான் ஐரோப்பியர்கள் அவொகெடொ தவிர, சாக்லேட், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு போன்ற மற்ற புதிய வித்தியாசமான உணவு வகைகளையும் முதன் முதலாக சுவைத்தனர்.
ஏதோ புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட உணவு வகைகள் இவை என்று யாரும் சொல்லிவிட முடியாது. மேற்கத்திய நாடுகளின் மிதவெப்ப இடங்களில் வசித்த பழங்குடியினர் இந்த உணவு வகைகளை பல நூற்றாண்டுகளாக அனுபவித்து இருக்கின்றனர். சில பழங்குடியினர் மத்தியில் அவொகெடொவிற்கு எக்கச்சக்கமான வரவேற்பு இருந்தது; அதனால்தான் அதை திருமண பரிசாகவும் விருந்தினரை வரவேற்பதற்கும் உபயோகித்தனர்.
அவொகெடொவை வளர்த்தல்
ஆஸ்திரேலியா, இஸ்ரேல், கென்யா, நியூ ஜீலாந்து, வட மற்றும் தென் அமெரிக்கா, பிலிப்பீன்ஸ் போன்ற உஷ்ணப் பிரதேசங்கள் மற்றும் மிதவெப்ப இடங்களில் தற்போது அவொகெடொவை வளர்க்கின்றனர். உஷ்ணப் பிரதேசங்களிலிருந்து வந்து, வியாபார உலகில் உலகளாவிய விதத்தில் பிரசித்தமான சுமார் 20 பழங்களில் அவொகெடொவும் ஒன்று.
வட மற்றும் தென் அமெரிக்க உஷ்ணப் பிரதேசங்களில் அநேக அவொகெடொ வகைகளை காணமுடியும். அவற்றில் சில கோழி முட்டை அளவிலும் சில சிறிய தர்ப்பூசணி பழத்தின் அளவிலும் இருக்கும், இதன் எடை இரண்டு கிலோ வரை இருக்கும். அவற்றின் நிறம் பச்சையிலிருந்து கரும் ஊதாவரை இருக்கிறது. சிலவகைகளின் தோல் சொரசொரப்பாகவும் மொரமொரப்பாகவும் இருக்கும்; வேறு சில வகைகளில் மெல்லியதாகவும் வழவழப்பாகவும் இருக்கும். இவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பழத்தோட்டத்தில் ஒரே விதமான தோற்றமும் தரமும் உடைய அவொகெடொவை வளர்ப்பதும் சாத்தியமே.
அவொகெடொ, பூக்கும் காலங்களில் மரமே தெரியாதபடி ஆயிரக்கணக்கான வெளிர் மஞ்சள் நிற பூக்களால் ஆன, பெரிய பூச்செண்டாக காட்சியளிக்கும். இவ்வளவு பூத்தாலும் 5,000 பூக்களில் ஒன்றுதான் கனியாக மாறும். இந்த பூக்களில் ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. ஒவ்வொரு பூவிலும் மகரந்தத் தூளை உற்பத்தி செய்யும் மகரந்த கேசரமும் இருக்கும், சூல்பையைக் கொண்ட சூலகமும் இருக்கும். இவை இரண்டும் ஒரே மலரில் இருப்பதால் சுய மகரந்தச் சேர்க்கை ஏற்படுமே என்று நீங்கள் கேட்கலாம். அதை தவிர்ப்பதற்கு அவொகெடொ மரத்தில் ஒரு அதிசயம் நிகழ்கிறது. இதன் மூலம் இந்த மகரந்தச் சேர்க்கை உறுப்புகள் வித்தியாசமான நேரத்தில் தங்கள் பணியை செய்யுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
இதன் விளைவாக சில மரங்களின் மலர்கள் காலை கதிரவனை கண்டவுடன் தங்கள் இதழ்களை விரித்து மகரந்தத் தூளை பெற்றுக்கொள்ளும் தன்மையுடன் மட்டும் செயல்படுகின்றன; மதியம் வந்தவுடன் இதழ்கள் மறுபடியும் மூடிக்கொள்கின்றன. இதே மலர்கள் மாலை வந்தவுடன் மறுபடியும் தங்கள் இதழ்களை விரித்து தங்கள் செயல்களை மாற்றி இப்போது மகரந்தத் தூள் உற்பத்தியாளர்களாக செயல்புரிகின்றன. அருகில் இருக்கும் மற்ற மரங்களில் எதிர்மாறாக நிகழ்கிறது. மகரந்தத் தூளை உற்பத்தி செய்யும் மரமும் மகரந்தத் தூளை பெற்றுக்கொள்ளும் மரமும் அருகருகே இருக்கும்போது மகரந்தச் சேர்க்கை ஏற்படுகிறது. தேனீக்களும் மற்ற பூச்சிகளும்கூட மகரந்தத் தூளை எடுத்து செல்வதற்கு உதவுகின்றன. ஆகவே, சூரிய ஒளி, வெப்பம், பூச்சிகள், காற்று, இந்த மரங்கள் இருக்கும் இடம் ஆகிய எல்லாமே ஒன்று சேர்ந்து இணைந்து செயல்படுவதால் இப்படியொரு கனி நமக்கு கிடைக்கிறது.
சத்துள்ளதும் சகலத்திற்கும்
புரதம், ரிபோஃபிளேவின், நையாசின், பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை அவொகெடொவில் நிறைந்திருப்பதால் இதற்கு போஷாக்கு அதிகம். இந்தக் கனியில் 11 வைட்டமின்களும் 14 தாதுப்பொருட்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. சில மத்திய அமெரிக்க நாடுகளில் அவொகெடொவையும் டார்ட்டில்லாஸ் என்றழைக்கப்படும் ஒரு வகை கேக்கையும் பரிமாறுவது முழு வேளை சாப்பாடு என்று கருதப்படுகிறது. அவொகெடொவில் எக்கச்சக்கமான கொழுப்பு சத்து இருக்கிறது, இதன் எண்ணெய்யோ ஆலிவ் எண்ணெய்யைப்போல் மோனோஅன்சாச்சுரேடட் (monounsaturated fats) கொழுப்பைப் பெற்றுள்ளது. இந்த எண்ணெய்யை சோப் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
அவொகெடொ மரத்தில் உபயோகம் இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை. மரம் அடுப்பெரிக்க உபயோகப்படுகிறது. துணிகளில் அழிக்க முடியாத அடையாளம் போடுவதற்காக தென் அமெரிக்காவில் அதன் விதையை பயன்படுத்துகின்றனர். பிலிப்பீன்ஸ் தேசத்தின் சில பகுதிகளில் அதன் இலையில் ஒரு வித டீ தயாரிக்கின்றனர். இந்த மரத்தின் பட்டையை தோல் பதனிடுவதற்கு பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது.
வாங்குவது உண்பது
அவொகெடொ கனியை வாங்குவதற்காக நீங்கள் கடைக்கு செல்வதாக இருந்தால் தோலின் நிறத்தை வைத்து பழுத்தப் பழமா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டாம். ஏனெனில் இது ஒவ்வொரு வகையிலும் வித்தியாசப்படும். அந்தக் கனியை மெதுவாக அழுத்திப் பாருங்கள். அது மிருதுவாக இருக்குமென்றால் பழுத்துவிட்டது என்று அர்த்தம். இந்தப் பழங்களை கதகதப்பான நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில்தான் வைக்க வேண்டும்; அவை சீக்கிரத்தில் பழுப்பதற்கு பேப்பரில் சுற்றி வைக்கலாம். அவற்றை துண்டாக வெட்டிய பிறகும் ஃபிரிஜில் வைக்கலாம். அதின்மேல் எலுமிச்சை சாற்றை தெளிப்பதன் மூலம் அது பழுப்பாவதை தடுக்க முடியும்.
அநேகர் அவொகெடொ கனியை தக்காளி, ஆரஞ்சு பழ வகைகளோடு சேர்த்து உண்பதற்கு விரும்புகின்றனர். அவற்றின் சுவையைக் கூட்ட, உறைப்பான சாஸ் ஊற்றி சாப்பிடுகின்றனர். இதைப் போலவே இறால், நண்டு, சிங்கரால் போன்றவற்றோடு உண்பதற்கு அவொகெடொ ஒரு நல்ல காம்பினேஷன். வித்தியாசமான சாலட்டுகளிலும் சுவையை கூட்டுவதற்கு அவொகெடொவை சேர்க்கின்றனர். சிலர் மற்ற கனிகளோடு இதை சேர்த்து ஒரு அருமையான பழ ரசத்தை தயாரிக்கின்றனர்.
ரொட்டியில் தடவி சாப்பிடுவதற்கு, அவொகெடொவை மற்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து அரைக்கின்றனர். இந்த சமயத்தில் பிரபலமான ‘குவக்கமாவை’ மறக்க முடியுமா? இது அவொகெடொ, தக்காளி, வெங்காயம், பச்சை மிளகு, மசாலாப் பொருட்கள் ஆகியவை கலந்த ஒரு தயாரிப்பு. இந்தக் கனி சமைத்த உணவோடும் சேர்த்து பரிமாறப்படுகிறது. ஆனால் சூடு படாமல் இருப்பதற்காக, பரிமாறுவதற்கு சற்று முன்னர்தான் உணவோடு சேர்க்கப்படுகிறது.
அவொகெடொ உங்கள் உணவின் முக்கிய பாகமாக இருக்கலாம். ஆனால் உலகின் சில பாகங்களைப் பொறுத்தவரை இது அரிதான, காணவே முடியாத பழம். ஒருவேளை அவொகெடொவை சுவைக்கும் வாய்ப்பு உங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றால் அடுத்த முறை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் ஒரு கை பார்க்கலாம் அல்லவா? இந்த ‘சகலகலா’ கனி உண்மையில் நாக்கில் எச்சில் ஊறவைக்கும் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்!