இளைஞர் கேட்கின்றனர் . . .
கோபக்காரர்களை சமாளிப்பது எப்படி?
“அவனுக்கு ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்தது. நான் பார்க்க சிறியவனாக இருந்ததாலோ என்னமோ, அவனுக்கு என்னை அடித்துவிட ஆசை. நான் பின்னால் நகர்ந்துகொண்டே, ‘கொஞ்சம் பொறு! ஒரு நிமிஷம்! ஒரு நிமிஷம்! என்னை ஏன் அடிக்க நினைக்கிறாய்? நான் உன்னை ஒன்றும் செய்யவில்லையே. நீ எதற்காக இப்படி ஆத்திரப்படுகிறாய் என்றுகூட எனக்கு தெரியாது. நாம் அதைப் பற்றி கொஞ்சம் பேசலாமா?’ என்றேன்.” —16 வயது டேவிட்.
அடாவடித்தனம் செய்கிற ஒருவரின் கோபத்துக்கு எப்போதாவது ஆளாகியிருக்கிறீர்களா? இன்றைய மக்கள் ‘வன்முறையாளராக, நன்மையை விரும்பாதோராக’ இருப்பார்கள் என்று பைபிள் முன்னறிவித்தது. (2 திமொத்தேயு 3:3, பொ.மொ.) ‘கோபக்காரனுக்கு தோழனாகாதிருக்க, உக்கிரமுள்ளவனை’ தவிர்க்க நீங்கள் முடிந்தளவு முயன்றிருக்கிற போதிலும், சில சமயங்களில் கோபக்காரர்களிடமிருந்து தப்பிக்கவே முடியாது. (நீதிமொழிகள் 22:24) அப்படியொரு சூழ்நிலையில் நீங்கள் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?
கோபத்திற்கு பிரதிபலித்தல்
அநேக இளைஞர்கள் பதிலுக்கு தாங்களும் கோபப்படலாம். ஆனால் அவ்வாறு செய்வது அதிக வேதனையையே உண்டாக்கும். மேலுமாக, உங்கள் சொந்த கட்டுப்பாட்டை இழந்தால், நீங்களும் அந்த கோபக்காரருடைய அதே நிலைக்கு இறங்கி வந்தது போலவே ஆகும். நீதிமொழிகள் 26:4 சொல்கிறது: “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப்போலாவாய்.” கடினமான அனுபவத்தின் வாயிலாக இந்த வார்த்தைகளின் உண்மையை தெரிந்துகொண்டான் இளம் ஜெரமி. பள்ளியில் மதிய உணவு மேஜையில் அமர்ந்திருந்த சமயத்தை அவன் நினைத்து பார்க்கிறான்: “எப்போதுமே ஒருவரையொருவர் அல்லது மற்றவர்களை கேலி செய்யும் பையன்களின் கும்பல் ஒன்று இருந்தது. அவர்கள் அடிக்கடி என்னைப் பற்றி பேசுவார்கள். பொதுவாக நான் அவர்கள் பேச்சை பொருட்படுத்துவதே இல்லை. ஆனாலும் ஒரு நாள் என் அம்மாவைப் பற்றி ஒருவன் பேசத் தொடங்கினதால் நான் பொறுமையிழந்து கோபாவேசத்தில் சீறிவிட்டேன்.” விளைவு? “என்னை செமத்தியாக அடித்து போட்டான்” என்கிறான் ஜெரமி.
பைபிள் தரும் ஞானமான அறிவுரை இது: “சாந்தமான பதில் கோபத்தை அகற்றும், கடுஞ்சொல்லோ [“வேதனை தரும் சொல்லோ,” NW] சினத்தை எழுப்பிவிடும்.” (நீதிமொழிகள் 15:1, திருத்திய மொழிபெயர்ப்பு) ஆம், ‘வேதனை தரும் சொல்லால்’ கோபத்துக்கு பதிலளிக்கையில் நிலைமை இன்னும் மோசமடையவே செய்யும். என்றாலும், சாந்தமான பதில் பெரும்பாலும் அமைதியான நிலைமையை ஏற்படுத்தி கடுமையான சூழலை தணித்துவிடும்.
ஆரம்பத்தில் சொல்லப்பட்ட டேவிட்டை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அடாவடித்தனம் செய்தவன் ஏன் கோபப்பட்டான் என்பதை சொல்ல வைத்துவிட்டான். அவனுடைய மதிய உணவை யாரோ திருடியிருக்கிறார்கள்; அதற்குப்பின் அவன் பார்த்த முதல் ஆளிடம் தன் கடுப்பை வெளிக்காட்டியிருக்கிறான். “என்னை அடிப்பதால் உன் உணவு திரும்ப கிடைக்கப் போவதில்லையே” என்று டேவிட் நியாயமாக விளக்கினான். பின் இருவரும் சேர்ந்து கேஃபிடேரியாவுக்கு போகலாம் என்று சொன்னான். “அங்குள்ள க்ளார்க் எனக்கு தெரிந்தவர் என்பதால் அவனுக்கு உணவை திரும்ப வாங்கி கொடுக்க முடிந்தது. அவன் என்னுடன் கைகுலுக்கினான். அதற்குப்பின் எப்போதும் சிநேகபாவத்துடன் நடந்து கொண்டான்” என்பதாக டேவிட் நினைவுகூருகிறான். சாந்தமுள்ள வார்த்தைகள் எவ்வளவு பலம் வாய்ந்தவை என்பதை பார்த்தீர்களா? நீதிமொழி ஒன்று சொல்கிறபடி, “சாந்தமுள்ள நாவு எலும்பையும் நொறுக்கும்.”—நீதிமொழிகள் 25:15, தி.மொ.
சாந்தம்—பலவீனமா பலமா?
‘சாந்தமுள்ள நாவை’ கொண்டிருக்க வேண்டும் என்ற கருத்து அவ்வளவு ஏற்கத்தக்கதாக தோன்றாமல் இருக்கலாம். கோபத்தை கோபத்தால் எதிர்ப்பதே அதிக பலத்தின் அல்லது ஆண்மையின் அடையாளமாக தோன்றலாம். நீங்கள் சாந்தமாக இருந்தால் மற்றவர்கள் உங்களை பலவீனமானவராக எடை போட்டுவிடுவார்கள் என்றும்கூட நீங்கள் அஞ்சலாம். ஆனால் சாந்தமாக இருப்பது என்றால் என்ன? ஒரு மேற்கோள் சொல்கிறபடி, சாந்தமாக இருப்பது என்றால் மென்மையாக இருப்பதாகும். அதே மேற்கோள் இவ்வாறு தொடர்கிறது: “அந்த மென்மைக்குப் பின்னால் இரும்பின் உரம் மறைந்திருக்கிறது.” ஆகவே, சாந்தம் பலவீனத்தின் அடையாளமாக இருப்பதற்கு மாறாக பலத்தின் அடையாளமாக இருக்க முடியும். எப்படி?
ஒரு காரணம், சாந்தமுள்ளவர் கட்டுப்பாட்டோடு செயல்படுகிறார், அவர் எளிதில் நிதானத்தை இழப்பதில்லை. மறுபட்சத்தில், சாந்தகுணத்தில் குறைவுபடுகிறவர் பாதுகாப்பற்றவராக, படபடப்பவராக, அல்லது பதற்றமடைகிறவராகக்கூட தென்படுவார். அவருக்கு சுயகட்டுப்பாடும் இல்லை. தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல், மீண்டும் மீண்டும் மற்றவர்களுடன் சச்சரவுகளில் மாட்டிக்கொள்கிறவராக இருப்பார். ஆம், “தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 25:28) அப்படியானால், சாந்த குணமுள்ளவனே உண்மையில் பலமுள்ளவன்!
சாந்தத்திற்கு பைபிள் உதாரணங்கள்
இயேசு கிறிஸ்துவைப் பற்றி சிந்தியுங்கள். அவர் “சாந்தமும் மனத்தாழ்மையுமாய்” இருப்பதாக தம்மைக் குறித்து விவரிக்கிறார். (மத்தேயு 11:29) அவர் ஒருபோதும் கடுமையாக, நியாயமற்றவராக, தீமைக்கு தீமை செய்பவராக நடந்துகொள்ளவில்லை. உண்மையைச் சொன்னால், இயேசுவின் நண்பராகிய அப்போஸ்தலன் பேதுரு அவரைக் குறித்து இவ்வாறு அறிக்கை செய்தார்: “அவர் [இயேசு] வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.” (1 பேதுரு 2:23) ஆனாலும் இதே இயேசுவே “தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி”னார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (மத்தேயு 21:12) மேலும், எப்போதாவது கடவுளுடைய ஆதரவுக்கான தேவை ஏற்பட்டிருந்தால், ‘பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை’ இயேசு கேட்டிருக்கலாம்! (மத்தேயு 26:53) நிச்சயமாகவே அவர் பலவீனராக இல்லை.
பைபிளில் நியாயாதிபதிகள் 8:1-3-லுள்ள பதிவின்படி, நியாயாதிபதியாகிய கிதியோனின் உதாரணத்தையும் கவனியுங்கள். பெரியதோர் ராணுவ வெற்றிக்குப் பின், எப்பிராயீம் கோத்திரத்தைச் சேர்ந்த சில படைவீரர்கள் அந்த போரின் மகிமையில் பங்கெடுக்க தங்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என புண்பட்டவர்களாய் உணர்ந்தார்கள். “நீ மீதியானியர்மேல் யுத்தம் பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன?” என்று கேட்டு “அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்.” கிதியோன் ஒரு “பராக்கிரமசாலி.” (நியாயாதிபதிகள் 6:12) அவர்கள் கோபமூட்டியபோது அவரும் கடுமையாகவே பதில் கொடுத்திருக்கலாம். அதற்கு பதிலாக அவர் சாந்தமாக பதிலளித்தார்; கோபத்தில் கொதித்த அவர்களை அது முற்றிலுமாக குளிர்வித்துவிட்டது. “நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்?” என்றார் கிதியோன். இவ்வாறு அடக்கத்துடன் பிரதிபலித்ததால் விளைந்த பலன் என்ன? “அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று.”
கடைசியாக, அபிகாயில் என்ற பெண்ணைப் பற்றிய பைபிள் பதிவை கவனியுங்கள். தாவீது தனக்கு சத்துருவாயிருந்த இஸ்ரவேல் ராஜாவாகிய சவுலிடம் அகப்படாமல் தலைமறைவாய் நாடோடியாக வாழ்ந்தார். அவ்வாறு நாட்டைவிட்டு வெளியே இருந்த சமயத்திலும், பெரும்பாலும் தாவீதின் ஆட்கள் உடன் இஸ்ரவேலருக்கு பாதுகாப்பாக இருந்து வந்தனர். அவர்களுடைய உதவியைப் பெற்றவர்களில் ஒருவன் அபிகாயிலின் கணவன் நாபால்; அவன் மிகச் செல்வ செழிப்புள்ளவன். ஆனாலும், நாபால் “முரடனும் துராகிருதனுமாயிருந்தான்.” தாவீதின் ஆட்களுக்கு உணவுக்கான தேவைகள் ஏற்பட்டபோது, அவர்கள் கொஞ்சம் உணவுக்காக நாபாலிடம் கேட்டார்கள். தாவீதின் ஆட்கள் அவனுக்கு கொடுத்த இலவச பாதுகாப்பிற்கு பிரதி உபகாரமாக நன்றியுணர்வுடன் இருப்பதற்கு பதிலாக, தாவீதின் ஆட்களிடம் நாபால் “சீறி” விழுந்து அவர்களை வெறும் கையோடு அனுப்பிவிட்டான்.—1 சாமுவேல் 25:2-11, 14.
இதைக் கேட்டபோது தாவீது கோபமடைந்து, “நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள்” என்று தன் ஆட்களிடம் கட்டளையிட்டார். நாபாலையும் அவன் வீட்டிலுள்ள அப்பாவியான ஆண் மக்கள் அனைவரையுமே கொல்வதற்காக தாவீதும் அவருடைய ஆட்களும் போகும் வழியில் அபிகாயில் குறுக்கிட்டாள். அவள் தாவீதுக்கு வணக்கம் தெரிவித்து மிகுதியான உணவையும் பானத்தையும் வெகுமதியாக அளித்தாள். அவள் கணவனின் மன்னிக்க முடியாத நடத்தைக்கு மன்னிப்பு கேட்டு அப்பாவி மக்களின் உயிர்களை பலியாக்காதபடி கெஞ்சினாள்.—1 சாமுவேல் 25:13, 18-31.
அபிகாயிலின் தாழ்மையான மன்றாட்டுகள் தாவீதின் கோபத்தை அடக்கின. உண்மையில், தன் கோபம் எவ்வளவு ஆபத்தான நிலையை எட்டியிருந்தது என்பதை உணர்ந்து தாவீது இவ்வாறு சொன்னார்: “உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக [“உன் நுண்ணறிவும் ஆசி பெறுவதாக!,” பொ.மொ.]; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக.” (1 சாமுவேல் 25:32-35) ஆம், அநேக சமயங்களில் ‘சாந்தமான பதில்’ மற்றவர்களுடைய கோபத்தை அகற்ற முடியும். ஆனாலும், உங்கள் சாந்தமான பதில் அப்படிப்பட்ட பலனைத் தரவில்லை என்றால் என்ன செய்வது?
‘அங்கிருந்து போய்விடுங்கள்’
அவ்விடத்தைவிட்டு போய்விடுவதன் மூலம் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்கலாம். “விறகில்லாமல் நெருப்பு அவியும்” என்று பைபிள் சொல்கிறது. அது மேலும் இவ்வாறு ஆலோசனை தருகிறது: “சண்டை பெரிதாகுமுன், அங்கிருந்து போய்விடு.” (நீதிமொழிகள் 17:14, NW; 26:20) “பள்ளியில் பிரபலமான ஒரு பையன் என்னிடம் பேச விரும்பினான்” என்றாள் 17 வயது மரிஸ்ஸா. “நான் அழகாக இருப்பதாக அவன் சொன்னான். சொல்லி முடிப்பதற்குள், அவனுடைய காதலி கடுங்கோபத்துடன் என்னிடம் வந்தாள். தன் காதலனுடன் நான் சரசம் பண்ணுவதாக என்னை குற்றம் சாட்டி என்னுடன் சண்டை போட வந்தாள்! என்ன நடந்தது என்பதை விளக்க முயன்றேன். அவளோ கேட்கவே இல்லை. பள்ளி வகுப்புகள் முடிந்ததும் வேறு சில பெண் பிள்ளைகளுடன் என்னை அடிக்க வந்தாள்! விரைவில் நான் ஸெக்யூரிட்டி கார்ட்டை அழைத்தேன். எனக்கு சண்டைபோட விருப்பமில்லை என்றும் அவளுடைய காதலனே என்னை அணுகினான் என்றும் அவளிடம் விளக்கினேன். அதற்குப்பின் அங்கிருந்து போய்விட்டேன்.” மரிஸ்ஸா உணர்ச்சிவசப்படவில்லை. சண்டையிலிருந்து விலகி சென்றது மட்டுமல்லாமல் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளையும் எடுத்தாள். நீதிமொழிகள் 17:27 சொல்கிறபடி, “அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன்.”
ஒருவேளை நீங்கள் யாரையாவது கோபப்படுத்திவிட்டால், அதுவும் தெரியாமல் கோபப்படுத்திவிட்டால் என்ன செய்வது? மன்னிப்பு கேளுங்கள், அதையும் சீக்கிரமாக கேளுங்கள்! மற்றவரின் கோபத்தை தணிக்க இதுவே போதுமானதாக இருக்கும். அழுத்தம் நிறைந்த காலங்களில் நாம் வாழ்கிறோம்; அநேகர் உடனடியாக கோபப்படும் மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் மற்றவர்களுடன் பைபிள் நியமங்களை பின்பற்றி நடந்தால், ஒருவருடைய கோபத்துக்கு ஆளாவதை நீங்கள் பெரும்பாலும் தவிர்த்துவிடலாம்.(g01 11/22)
[பக்கம் 24-ன் படங்கள்]
“சாந்தமான பதில் கோபத்தை அகற்றும்”
[பக்கம் 25-ன் படம்]
சில சமயங்களில் நீங்கள் அங்கிருந்து போய்விட்டாலே போதும்