எண்களின் வசீகரம்
எண்களே இல்லாத ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள். அங்கே பணமே இருக்காது. நேரடி பண்டமாற்றத்தின் மூலமே வணிகம் நடைபெறும். விளையாட்டுக்களின் நிலை? எண்கள் இல்லாமல் எப்படி ஸ்கோரை கணக்கிடுவது? அதுமட்டுமல்ல ஒவ்வொரு டீமிலும் எத்தனை பேர் விளையாடுவது என்பதைக்கூட நிர்ணயிக்க முடியாதே!
எண்கள் நடைமுறையில் பயனுள்ளவை மட்டுமல்ல, மர்மமானவையும்கூட என சிலர் கருதுகின்றனர். ஏனெனில் எண்கள் புலன்களுக்கு அப்பாற்பட்டவை. அவற்றை பார்க்கவோ தொடவோ உணரவோ முடியாது. உதாரணமாக, ஒரு ஆப்பிள் பழத்திற்கு அதற்கே உரிய நிறமும், தன்மையும், அளவும், வடிவமும், மணமும், சுவையும் உண்டு. இவை ஒவ்வொன்றையும் வைத்து, அது ஆப்பிளா, எலுமிச்சையா, பந்தா, வேறெதாவதா என்பதை உறுதி செய்யலாம். எண்களைப் பொறுத்தவரை இவ்வாறு செய்ய முடியாது. ஏழு ஏழாக எடுத்துக்கொள்ளப்படும் எந்த இரு தொகுதிகளிலுள்ள பொருட்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை; ஏழு என்ற எண்ணிக்கை மட்டுமே அந்த இரு தொகுதிகளிலுள்ள பொருட்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையாக இருக்கலாம். ஆகவே எண்களின் அர்த்தத்தை புரிந்துகொள்வது, உதாரணமாக ஆறுக்கும் ஏழுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது, நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றை கிரகிப்பதாக இருக்கும். இதனால்தான் எண்களில் மர்மம் புதைந்திருப்பதாக மக்கள் சிந்திக்க ஆரம்பிக்கின்றனர்.
பித்தகோரஸ் முதல், போலி விஞ்ஞானம் வரை
பூர்வ சமுதாயங்களில் எண்களுக்கு விசேஷ அர்த்தம் கற்பிப்பது சகஜமாக இருந்தது. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானியும் கணித மேதையுமான பித்தகோரஸ், எல்லாவற்றையும் எண்களின் வடிவில் விவரிக்கலாம் என கற்பித்தார். இப்பிரபஞ்சம் முழுவதுமே ஒழுங்கிற்கும் சமவிகிதத்திற்கும் உதாரணமாக விளங்குவதாய் அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் நியாயங்காட்டினர். அப்படியென்றால் எல்லா ஜடப் பொருட்களிலுமே கணித இயல்புகள் புதைந்திருக்கும் அல்லவா?
பித்தகோரஸ் காலம் முதற்கொண்டு, சம்பவங்களை முன்னறிவிப்பதற்கும் கனவுகளை விளக்குவதற்கும் விஷயங்களை ஞாபகம் வைப்பதற்கும் வசதியாக எண்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கிரேக்கராலும் இஸ்லாமியராலும் கிறிஸ்தவமண்டலத்தாராலும் அவை பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. யூத மறைபொருள் கொள்கையினர், ஜமேட்ரியா என்ற ஒருவித எண்சோதிடத்தைப் பயன்படுத்தி எபிரெய அகரவரிசையின் 22 எழுத்துக்களில் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் மதிப்பைக் கொடுத்தனர்; இவ்வாறு எபிரெய வேதாகமத்தில் புதைந்துள்ள ரகசிய செய்திகளைக் கண்டுபிடித்திருப்பதாக சொல்லிக்கொள்கின்றனர்.
இன்றைய எண்சோதிடமும் அதைப் போன்றதுதான். பெரும்பாலும் உங்கள் பெயரையும் பிறந்த தேதியையும் வைத்தே கணிப்பு துவங்குகிறது. உங்கள் பெயரிலுள்ள ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு எண் மதிப்பு கொடுக்கப்படுகிறது. இவற்றையும் நீங்கள் பிறந்த மாதம் மற்றும் தேதியின் எண்களையும் கூட்டி உங்கள் மாஸ்டர் நம்பர்களை எண்சோதிடர் கணிக்கிறார். பிறகு இந்த எண்களுக்கு விசேஷ அர்த்தம் கற்பிக்கிறார்; இவையே உங்களுடைய குணாதிசயம், உள்ளூர மறைந்திருக்கும் ஆசைகள், எதிர்காலம் என அனைத்தையும் பிட்டு பிட்டு வைப்பதாக நம்புகிறார்.
எண்சோதிட கணிப்புகள் துல்லியமாக தோன்றுவதே அதன் வசீகர தன்மைக்கு உண்மையில் காரணமாக இருக்கலாம். “எண் ராசிபலன் அந்தந்த ராசிக்காரர்களுக்கு கச்சிதமாக பொருந்தும் விதத்தைப் பார்த்தே அநேகர் எண்சோதிடத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றனர்” என லட்சக்கணக்கானோருக்கு தீர்க்கதரிசனம் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எட்வர்டு ஆல்பர்ட்ஸன் எழுதுகிறார். இருந்தாலும் எண்சோதிடம் போலி விஞ்ஞானம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. ஏன்? எண்சோதிடம் சொல்வதெல்லாம் நிஜம்தானா என சிந்தித்துப் பார்க்க உங்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றனவா? (g02 9/8)
[பக்கம் 5-ன் பெட்டி/படங்கள்]
பைபிளில் ரகசிய செய்திகளா?
எபிரெய வேதாகமத்தை கம்ப்யூட்டரில் ஆராய்ந்தபோது ரகசிய செய்திகளை கண்டுபிடிக்க முடிந்ததாக மைக்கேல் டிரோஸ்னின் என்ற பத்திரிகையாளர் பைபிளின் ரகசிய மொழி என்ற தன் ஆங்கில புத்தகத்தில் குறிப்பிடுகிறார். யிஷாக் ராபின் என்ற பெயரில் “கொல்லவிருக்கும் கொலையாளி” என்ற செய்தி மறைந்திருந்ததாக டிரோஸ்னின் சொல்கிறார்; இது இஸ்ரேலின் பிரதமர் ராபின் கொல்லப்படுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
பைபிளின் ரகசிய மொழி என்ற அந்தப் புத்தகம், எதிர்பார்த்தபடியே பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. எந்த வாக்கியங்களை கம்ப்யூட்டரில் ஆராய்ந்தாலும் ரகசிய செய்திகளைக் கண்டுபிடிக்க முடியும் என்பதை கணித மேதையும் இயற்பியல் வல்லுநருமான டேப் தாமஸ் மெய்ப்பித்துக் காட்டினார். டிரோஸ்னின் பயன்படுத்திய வாக்கியங்களிலேயே “அடையாள மொழி,” “அபத்தம்,” “தில்லுமுல்லு” போன்ற வார்த்தைகளை தாமஸ் கண்டுபிடித்தார். “ரகசிய செய்திகளை எதிலும் கண்டுபிடிக்க முடியும்; அதைக் கண்டுபிடிக்க ஏராளமான சாத்தியமுண்டு, ஆனால் வேண்டியதெல்லாம் நேரமும் முயற்சியும்தான்” என்கிறார் தாமஸ்.
கம்ப்யூட்டரால் ஏராளமான கணக்குகளைப் போட முடியும்; ஆகவே அவை கண்டுபிடிக்கும் சில எழுத்துக்களின் தொகுதியை வைத்து ஏதோவொன்றை கணிக்கலாம். ஆனால் இது வெறும் தற்செயலே; பைபிளில் ரகசிய செய்திகள் இருப்பதாக இது நிரூபிப்பதில்லை.a
[அடிக்குறிப்பு]
a இன்னுமதிக தகவலுக்கு, காவற்கோபுரம், ஏப்ரல் 1, 2000, பக்கங்கள் 29-31-ஐக் காண்க.
[பக்கம் 4-ன் படம்]
எல்லாவற்றையும் எண்களின் வடிவில் விவரிக்கலாம் என பித்தகோரஸ் கற்பித்தார்
[படத்திற்கான நன்றி]
Courtesy National Library of Medicine